Posted on Leave a comment

படிப்பு (சிறுகதை) | ரெங்கசுப்ரமணி

அசோக் பில்லரில் இறங்கினார்கள் பாபுவும் அவன் மாமாவும். அக்டோபர் மாதம் என்றாலும் சென்னையில் சரியான வெயில். “பரவாயில்லை, நான் பயந்த அளவு வெயில் இல்லை” என்றான் பாபு. மாமா முறைத்தார். அவன் ஊர் கோவில்பட்டி. அவர் ஊர் இலஞ்சி.

அட்ரஸை விசாரித்துக் கொண்டு நடந்தார்கள். சில பல பெரிய வீடுகளுக்கு நடுவே, அந்த குட்டிக் கட்டடம் தென்பட்டது. ‘சுந்தரம் & கோ’ மாடிக்கு வழி காட்டியது பலகை. “ஏன் மாமா, சின்ன கம்பெனி போல?”, முதுகில் இருந்த பையைக் கைக்கு மாற்றிக் கொண்டான். கனத்தது. “அவருக்குப் பல பிஸினஸ், பல ஃபேக்டரி எல்லாம் இருக்கு. இங்கதான் ஆரம்பிச்சாரு, அதனால் இன்னமும் இதுதான் முக்கிய அலுவலகம்.”

*

“ஏன் அத்தே, எதுக்கு மதியச்சாப்பாடு எல்லாம், இன்னைக்கேவா வேலைக்கு சேரச் சொல்வாங்க, சும்மா பாக்கதான போறோம்?

“டேய், அவர் உன் மாமாவுக்கு நல்லா தெரிஞ்சவரு, அதனால நம்பிக்கை இருக்கு.

“எனக்கு வேலை பிடிக்க வேண்டாமா? என்று கூறியவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“எல்லாரும் பிடிச்சிதான் வேலைக்குப் போறாங்களா, கிடைக்கிற வேலையைப் பாரு இப்ப!

*

உள்ளே நுழைந்தவுடன் தெரிந்தது, இரண்டு படுக்கை அறைகள், ஒரு ஹால் கொண்ட வீடு. ஹாலின் அருகிலிருந்த சமையலையறையில் தண்ணீர் பாட்டிலில் நீர் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் திரும்பிப் பார்த்து, அமரும்படி சைகை காட்டினார்.

“ரமேஷ் சார் இல்லையா” என்று மாமா கேட்டதற்கு, இல்லை என தலையாட்டிக்கொண்டே வந்தார். அங்கிருந்த ஒரு கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து எதையோ டைப் செய்ய ஆரம்பித்தார். ஒற்றை விரலால், அதுவும் பாம்பு விரலால் படீர் படீர் என்று டைப் அடித்துக் கொண்டிருந்தார். மாசம் மூணு கீ போர்டு வாங்கனும் போலன்னு பாபு நினைத்துக் கொண்டான். நடுநடுவே கால்குலேட்டரில் ஏதோ கணக்கு போட்டு, அதைப் பார்த்து பார்த்து டைப் அடித்துக் கொண்டிருந்தார்.

பத்து நிமிடம் கழித்து, மாடிப்படியில் யாரோ ஏறிவரும் சப்தம் கேட்டது. நடுத்தர வயதில் ஒருவர் வந்தார். வாங்க வாங்க என்றபடியே மாமாவிற்குக் கை கொடுத்தார். “வாங்க உள்ள போய் பேசலாம்” என்று கூறி அறைக்குள் அழைத்துச் சென்றார். விஷயத்தைக் கேட்டு, “வேலைதானே.. தந்தா போச்சு” என்று கூறினார். “என்ன படிச்சிருக்கான்?”

“B.Sc Computer Sceince, இப்ப கரஸ்ல எம்.சி.ஏ பண்றான்.”

“குட் குட், எந்த பல்கலைக்கழகம்?”

“இக்னோ.”

“என்னது?”

“இந்திரா காந்தி ஒபன் யுனிவர்சிட்டி.”

*

“என்னப்பா நீ எங்கயும் போகலயா?

“எங்க சார்?

“எல்லாரும் எம்.சி.ஏ என்ட்ரென்ஸ் எழுத போய்ட்டாங்க, நீ எங்கயும் அப்ளை பண்ணலயா?

“இல்ல சார். காலேஜ் போய் படிக்கிறது கொஞ்சம் கஷ்டம். ஏதாவது வேலை பார்த்துட்டே கரஸ்ல எம்.சி.ஏ சேரலாம்ன்னு இருக்கேன்.

“வேலையா?

“ஆமா சார். ஏதாவது சின்ன சாப்ட்வேர் கம்பேனிலே கிடைச்சா கூட போதும். சம்பளம் கம்மியா இருந்தாலும் கத்துக்கலாம்.

“அதுவும் சரிதான்.

“சென்னை போறேன் சார். அங்க ஏதாவது கிடைக்கும்.

*

“எனக்கும் கம்பூட்டர் தெரிஞ்ச ஆள் தேவைதான், இப்பதான் புதுசா ஒரு பிபிஓ ஒண்ணு ஆரம்பிக்கலாம்னு ப்ளான் பண்ணிட்டு இருக்கேன். சிங்கப்பூர்ல இருந்து ஒருத்தர் கோ ஆர்டினேட் பண்றார்” என்றார் ரமேஷ். மாமா பெருமிதமாக பாபுவைப் பார்த்தார். “இன்னைக்கே ஜாயின் பண்ணட்டும், இன்னைக்கு நல்ல நாளா இருக்கு” என்றார் ரமேஷ்.

“இப்ப ஆரம்பம் அதனால 2500 ரூபா தர்றேன், போக போகப் பார்க்கலாம்.” பாபுவிற்கு பக்கென்றது. கொஞ்சம் அழுகை கூட வந்தது.

“சார் சம்பளம் கொஞ்சம் அதிகம் தந்தா நல்லா இருக்கும்.”

“தரலாம் சார், எப்படி வேலை செய்றான்னு பாத்து பண்ணலாம்.”

“சரி சார், நீங்க பாத்துக்கங்க.”

*

“அப்பா சென்னைக்கு போய் ஏதாவது வேலை பாத்துட்டே படிக்க போறேன்.

“அதெல்லாம் எதுக்கு, இங்க நம்ம ஸ்கூல்ல ஒரு டெப்ரவரி வாத்தியார் வேலை வருது, கேட்டா தருவாங்க. எப்படியும் மாசம் ஒரு 5000 தருவான் ஆரம்பத்துல.

“தேவையே இல்ல. சாப்ட்வேர் கம்பேனில ஸ்டார்ட்டிங்கலயே 10,000 தருவான். அத விட்டுட்டு இங்க எதுக்கு?

*

மாமா சந்தோஷம் என்று கூறிவிட்டு, கதவைத் திறந்து வெளியே போனார். ‘பாவி, மனுசன், திரும்பிப் பார்த்தா நாம திட்றது தெரியும்னு பாக்காமா போறார் பாரு’ என்று நினைத்து கொண்டான் பாபு.

மேஜையில் இருந்த ரிமோட்டை அழுத்த, வெளியே மணிச் சத்தம் கேட்டது. வெளியே அமர்ந்திருந்தவர் உள்ளே வந்தார்.

“பாரோ, லிங்கப்பா.. இது பாபு, இனி இங்கதான் வேலை செய்யப் போறான். கம்பூட்டர் சயன்ஸ் படிச்ச பையன்.”

“ஒகே சார்” என்றபடி ஏற இறங்க அவனைப் பார்த்தர்.

“டைப்ரைட்டிங் கொத்தா உனக்கு?”

பாபு முழித்தான். அவர் கேட்டதில் புரிந்த ஒன்று இவனுக்குத் தெரியாது என்பதால் இல்லை என்று தலையாட்டினான்.

“ஏனு கலசா கொடு பேக்கு இவனுகே” என்றார் லிங்கப்பா.

“லாஸ்ட் மன்ந்த் பர்ச்சேஸ் பில் இதியல்லா, எல்லா டேட் பிரகார அரேஞ்ச் மாடக் கேளு” என்று கூறிவிட்டு. யாரையோ போனில் அழைத்துப் பேச ஆரம்பித்தார்.

பாபுவும் லிங்கப்பாவும் வெளியே வந்தார்கள். காலியாக இருந்த ஒரு டேபிள் சேரை காட்டி, “இங்க உட்காந்துக்கோப்பா நீவு” என்று கூறிவிட்டு, கத்தையான பேப்பர்களைக் கொடுத்து, இதை எல்லாம் “டேட் வைஸ் அரேஞ்ச் பண்ணப்பா” என்று கூறிவிட்டு மறுபடியும் எதையோ தட்ட ஆரம்பித்தார்.

*

“எதுக்குடா வேலைக்கு போகணும், இன்னொரு மூணு வருஷம் ஜாலியா காலேஜ்  லைஃப எஞ்சாய் பண்றத விட்டுட்டு..

“மூணு வருஷம் வேலை பார்த்தா மூணுவருஷ எக்ஸ்பீரியன்ஸ், எம்.சி.ஏ முடிக்கும் போது டிகிரியோட கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸும் இருக்கும்.

“பெரிய கம்பெனி டிஸ்டன்ஸ் கோர்ஸ் கன்சிடர் பண்ண மாட்டாங்களே..

“அது மாதிரி கம்பெனி ஒரு பத்து இருக்குமா? அதவிட்டா ஆயிரம் கம்பேனி இருக்கு. சம்பளம் கொஞ்சம் கம்மியா இருக்கும் அவ்வளவுதான். ஆனா மூணு வருஷ அனுபவம் கிடைக்காது இல்ல?

*

ஐந்து மணிக்கு லிங்கப்பா தன்னுடைய பையை எடுத்துக்கொண்டு இவனைப் பார்த்தார். சைகையால் கிளம்பு என்று கை காட்டிவிட்டு, உள்ளே சென்று சொல்லிவிட்டு வந்தார். பாபு, வந்த வழியை அடையாளம் கண்டு, பஸ்ஸைப் பிடித்து, அடுத்து ட்ரெயினைப் பிடித்து வீடு போய் சேர்ந்தான்.

“மாமா, இந்த வேலை வேண்டாம்.”

“ஏண்டா?”

“நான் படிச்சது கம்ப்யூட்டர் சைன்ஸ், அங்க உக்காந்து பில் அடுக்கி வைக்கவா நான் படிச்சேன்?”

“என்னவாம்?” என்றாள் அத்தை.

“அவனுக்கு டை கட்டிட்டு போற வேலைதான் வேணுமாம்” என்றவர் என்னிடம், “வேற வேலை கிடைக்குற வரை பாரேன்.”

“முடியாது. என் படிப்புக்கு ஏத்த வேலைதான் பாப்பேன். நாளைக்கு போய் சொல்லிட்டு வந்துடுவேன்.”

“டேய்..”

“முடியாது..”

*

“பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சைன்ஸா? ரெஸ்யூம கொடுத்துட்டு போங்க, பார்க்கலாம்.

“வெறும் பிஎஸ்சிக்கு கிடைக்குறது கஷ்டமாச்சேப்பா..

‘அவன் கம்பெனில கேட்கலாம்னு போனா, அவனையே கம்பெனில இருந்து அனுப்பிட்டாங்கலாம்..

“சரி அங்கிள், எங்க கம்பெனில கொடுத்து பாக்குறேன்..

“பிஎஸ்சி எல்லாம் எங்க கம்பெனில எடுக்க மாட்டாங்க, இருந்தாலும் நான் சொல்றதால எடுப்பாங்களோ என்னமோ..

“C++ தெரியுமா, VB, Oracle தெரியுமா. சரி பாக்கலாம்..

*

அடுத்த நாள் அலுவலகம் உள்ளே நுழைந்த போது ரமேஷ் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து கொண்டிருந்தார். ‘முதல்ல வேலை விட்டு நிக்க போறத சொல்லணும்’ என்று நினைத்தவனை முந்திக்கொண்டு இவனை கண்டவுடன் அவர், “வா, வா. லிங்கப்பா இன்னமும் வரல, அதான் நானே கம்பூட்டர்ல உக்காந்தேன். நீ வந்துட்ட. இந்த ஸ்டேட்மென்ட லெட்டர் ஹெட்ல பிரிண்ட் பண்ணி கொண்டு வா பாக்கலாம்” என்று கூறிவிட்டுச் சென்றார்.

“சார் எந்த ஸ்டேட்மென்ட்?”

“அதுல ஓபன் பண்ணி இருக்கு பாரு..”

எக்ஸலில் ஏதோ பேலன்ஸ் ஷீட். எப்படி பிரிண்ட் எடுப்பது என்று தெரியவில்லை. இதை எல்லாம் அவன் படித்ததே இல்லை. கல்லூரியில் பார்த்த கம்ப்யூட்டர் தாத்தா காலத்தது, யுனிக்ஸ் ஷெல்தான் தெரியும். கடைசி வருஷம்தான் விண்டோஸே வந்தது. இது விண்டோஸ் எத்தனையாவது என்று கூடத் தெரியாது.

தடவி தடவி பிரின்ட் ஆப்ஷனைக் கண்டு பிடித்தான். எக்ஸலில் இருந்த ஸ்டேட்மெண்டை பிரிண்ட் எடுக்க ஒரு மணி நேரம் ஆனது. பத்து லெட்டர் ஹெட் வீணானது. அப்போதுதான் லிங்கப்பா வேக வேகமாக வந்தார். வந்தவுடன் இவன் அமர்ந்திருந்த மேஜையைப் பார்த்துவிட்டுக் கொஞ்சம் கடுப்பானார். புருவத்தை உயர்த்தி என்ன என்றார், “இல்ல சார் இந்த ஸ்டேட்மென்ட் பிரிண்ட் பண்ண சொன்னார், அதான்” என்றான் பாபு.

மேஜை மேல் விதவிதமாமான பிரிண்ட் அவுட் கிடந்தது. கம்பெனி பெயர் மீது பிரின்ட் ஆனது, பாதியில் ஆரம்பித்துக் கீழ்ப் பகுதியில் இருந்த முகவரியில் பிரிண்ட் ஆனது என்று.

“ஏனப்பா இது இஷ்டு லெட்டர் ஹெட்னே வேஸ்ட் மாடிதே நீவூ” என்று ஆரம்பித்தார்.

அதே சமயம் “என்னப்பா ஒரு ஸ்டேட்மென்ட் எடுக்க இவ்வளவு நேரமா” என்று கேட்டபடி ரமேஷ் வெளியே வந்தார்.

“ஏம்பா கம்பூட்டர் சைன்ஸ்ன்னு சொன்னியே.. இதுக்கு இவ்வளவு நேரமா?” என்றார் ரமேஷ்.

“இல்ல சார், இதுக்கு முன்னாடி பண்ணினது இல்ல, எப்படின்னு தெரியல, தேடி தேடி பிரிண்ட் எடுக்க நேரமாகிடுச்சி.”

“பின்ன என்னாதான் படிச்ச காலேஜ்ல?”

“சார், இதெல்லாம் எங்களுக்கு சிலபஸ்லயே கிடையாது சார். பேசிக், சி அதுதான் தெரியும்.” பாபுவின் குரல் கிட்டதிட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டது.

“என்ன அது எல்லாம்?”

“ப்ரோக்ராமிங் லாங்குவேஜ்.”

லிங்கப்பா “கம்ப்யூட்டர் சைன்ஸ், பிரிண்ட் எடுக்க கொத்தில்லா, ஏனு கேளு கொடுத்தாரோ அல்லி.”

ரமேஷ் “லிங்கப்பா காலெஜ்ல படிக்கிறது எல்லாம் எக்ஸாமுக்குதான், வெளியிலதான கத்துக்கனும், பிடு. நீவே கேளு கொடு பேக்கு” என்று கூறிவிட்டு ஸ்டேட்மெண்ட்டை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார்.

பாபு சிறிது நேரம் பார்த்துவிட்டு லிங்கப்பா ஒன்றும் சொல்லாததால், நேற்றைய இடத்தில் விட்ட பர்ச்சேஸ் பில்லை அடுக்க ஆரம்பித்தான். ஒரு மணி ஆனது. சாப்பாடு கொண்டு வராததால் லிங்கப்பாவிடம் சொல்லிவிட்டு வெளியே சென்று சாப்பிட்டுவிட்டு இரண்டு மணிக்கு உள்ளே நுழைந்த போது, லிங்கப்பா கம்ப்யூட்டரை வெறித்து பார்த்து கொண்டு உட்கார்ந்திருந்தார். ரமேஷும் அருகில் முறைத்துப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார். அவன் அருகில் வரவும், “இது ஆன் ஆக மாட்டேங்குது, சர்வீஸ் பண்றவன் போன் எடுக்க மாட்டேன்கிறான்” என்றார் ரமேஷ். பாபு, “நான் பாக்கவா” என்றான். லிங்கப்பா “சிலபஸ்ஸில் உண்ட்டா” என்றார்.

ஒன்றும் பேசாமல், ஆன் செய்தால் உள்ளே இருந்து சத்தம் வந்தது, ஆனால் ஸ்கீரினில் ஒன்றும் வரவில்லை. அவனுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. இதுதான் சிபியூ என்பது வரை நன்றாகத் தெரியும். சிபியூவை முன்னால் இழுத்து, அதன் பின் பக்க இணைப்புகளை ஒவ்வொன்றாகப் பார்த்து கொண்டிருந்தான். ஒன்றும் தெரியவில்லை, எல்லாம் சரியாக இருந்தது. ஒவ்வொரு வயர் இணைப்பையும் கழற்றி மாட்டினான். “என்னப்பா இது, இந்த கம்ப்யூட்டரோட ரோதனை. நான் வேற இன்னமும் எட்டு வாங்கி போட்டு கொஞ்சம் பெரிய அளவுல போகலாம்னு, லோன் எல்லாம் ஏற்பாடு பண்ணினா, இந்த ஒண்ண மேய்க்கவே ஆள் இல்லை” என்று புலம்பிக் கொண்டிருந்தார் ரமேஷ்.

படித்ததை எல்லாம் நினைவில் கொண்டுவந்து பார்த்தான். “சார் ஸ்க்ரூ ட்ரைவர் இருக்கா” என்றான் பாபு. லிங்கப்பா டூல் கிட்டை எடுத்துத் தந்தார். அதை வைத்து சிபியூவை ஓபன் செய்தான். ஒரே தூசி, ஒரு சிறிய வயர் அதன் சாக்கெட்டில் இருந்து லேசாக விடுபட்டிருந்தது. மானிட்டருக்குச் செல்லும் வயர் என்று தெரிந்தது. அதைச் சரியாகப் பொருத்தி, தூசியைக் கவனமாக ஊதித் தள்ளி விட்டு, மீண்டும் சிபியூவை மூடி, சிஸ்டத்தை ஆன் செய்ய, திரையில் விண்டோஸ் ஐகான் வந்தது. “நோடு லிங்கப்பா, இதுக்குதான் கம்பூட்டர் படிச்சவன் வேணும்கிறது.”

*

“என்னடா வேலையை விட்டதுக்கு என்ன சொன்னார் ரமேஷ்”

“யாரு வேலைய விட்டது” என்றபடி டிபன்பாக்ஸை தேய்க்கப் போட்டான் பாபு.

Leave a Reply