Posted on Leave a comment

அரவிந்தன் நீலகண்டனின் சிறப்புக் கட்டுரை – போலிப் பெண் போராளி

முனைவர் தொல்.திருமாவளவன் விடுதலை சிறுத்தகைகள் கட்சியின் தலைவர். 2019 ஜனவரியின் போது சனாதனத்தை ஒழிப்போம் என்கிற போர் அறிவிப்புடன் ஒரு மாநாட்டை நடத்தினார். இம்மாநாட்டில் காங்கிரஸ் கட்சி, திமுக, இடது கம்யூனிஸ்ட் வலது கம்யூனிஸ்ட் ஆகியோருடன் இஸ்லாமிய வகுப்புவாத கட்சிகளும் கலந்து கொண்டன.

பொதுவாகவே இந்து மதத்தைக் குறித்து ஆபாசமான கருத்துகளை பொதுவெளியில் சொல்வதில் ஒரு வக்கிர மனமகிழ்ச்சி அடையும் வியாதி கொண்டவர் முனைவர் திருமாவளவன். இம்மாநாட்டுக்கு பிறகு பாபா சாகேப் அம்பேத்கரின் பெயரை இவர் பயன்படுத்தி செய்யும் பிரசாரம் பாபா சாகேப் அம்பேத்கரின் புகழை கீழ்மைப்படுத்தும் செயல்.

அண்மையில் முனைவர் திருமா திருவாய் மலர்ந்தருளியுள்ள விஷயம் என்னவென்றால் சனாதன தர்மம் பெண்கள் படைப்பிலேயே பரத்தைகள் எனச் சொல்கிறதாம்.

இது இயல்பாகவே மக்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கியது. சமூக ஊடகங்களில் முனைவர் திருமாவின் இப்பேச்சின் காணொளி பரவியது. முந்தைய ‘சரக்கு-முடுக்கு’ பேச்சு போலவே இப்பேச்சும் முனை.திருமாவையும் அவர் சார்ந்த இயக்கத்தையும் வரையறை செய்யும் பேச்சாக அமையும் என்பதில் ஐயமில்லை.

தன் பேச்சு ஏற்படுத்திய எதிர்வினையை எதிர்பார்க்காத முனை.திருமா தன் சொற்களை நியாயப்படுத்த எல்லா இந்து விரோதிகளும் எடுக்கக் கூடிய ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார். மனுஸ்மிருதியிலிருந்து மேற்கோள் காட்டும்  ஆயுதம்தான் அது.

மனு ஸ்மிருதியும் பெண்களும்

முனை.திருமாவை விடுவோம். மனுஸ்மிருதியை எடுத்துக் கொள்வோம். அதில் பெண்களைக் குறித்து கீழாக சொல்லப்பட்டுள்ளதா? இந்த கேள்விக்கு நாம் பதிலை ஆம் இல்லை என சொல்ல முடியாது.

இதற்கு அப்படி இரட்டைப் பதிலை நாம் சொல்லும்போது நம்மை அறியாமல் ஒரு சூழ்ச்சிப் பிரசார வலையில் விழுந்து விடுகிறோம்.  இந்தக் கேள்வியின் பின்னால் இருக்கும் மனநிலையை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதை ஹிந்துத்துவ வரலாற்றறிஞர் சீதாராம் கோயல் தெளிவாக்குகிறார். இம்மனநிலை என்னவென்றால் இன்றைய மதிப்பீடுகளின் அடிப்படையில் ஹிந்துக்களின் பண்டைய சமூக அமைப்புகளையும் சட்ட நூல்களையும் அணுகுவது. ஆனால் அதையே அவர்கள் பிற மதங்களுக்கும் பண்பாடுகளுக்கும் செய்வதில்லை.

இத்தனைக்கும் ஹிந்து சனாதன தர்மம் மட்டுமே ஸ்மிருதி ஸ்ருதி எனும் பகுப்பைக் கொண்டிருக்கிறது. ஸ்மிருதி மாறக் கூடியது என்பதும் எனவே சனாதன தர்மம் அதன் அடிப்படையில் அமையவில்லை என்பதும் அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் வேண்டுமென்றே ஸ்மிருதிகளில் இருக்கும் காலத்துக்கு ஒவ்வாததாக தெரியும் விஷயங்களை மட்டுமே எடுத்து அதுதான் இந்து சனாதன தருமம் எனச் சொல்வதில் முனை.திருமா போன்றவர்களுக்கு இருக்கும் வக்கிரமான மகிழ்ச்சி உண்மையில் மனநல மருத்துவர்களால் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டிய ஒரு விஷயம்.

மனு ஸ்மிருதி கூறுவதாக முனை. திருமா சொல்லும் அதே போன்ற விஷயங்களை பௌத்த மத நூல்களில் காட்ட முடியும். கிறிஸ்தவ இறையியலிலும் காட்ட முடியும்.

எடுத்துக் காட்டாக அங்குத்தர நிகாயத்தில் ஒரு விஷயம் வருகிறது. புத்தரிடம் ஆனந்தன் கேட்கிறார்,  ‘ஏன் பெண்கள் உயர் பதவிகளில் இல்லை. பெரும் வணிகம் செய்வதில்லை. நீதி பரிபாலனத்தில் இல்லை?’ புத்தர் பதிலளிக்கிறார்: ‘ஏனெனில் பெண்கள் அறிவுக் குறை உடையவர்கள். கட்டுப்பாடற்ற நடத்தை கொண்டவர்கள். பொறாமைத்தன்மை கொண்டவர்கள். பேராசையுடையவர்கள்.’

புத்த ஜாதகக் கதைகளிலும் பெண்கள் குறித்து இழிவான பல பார்வைப் பதிவுகள் உள்ளன. போதிசத்வபூமி எனும் பௌத்த நூலில் அனைத்துப் பெண்களும் இயற்கையிலேயே அசுத்தத்தன்மை கொண்டவர்களென்றும் புத்திக் குறைப்பாடுடையவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டு தேரவாத பௌத்த பேராசான் புத்தகோசர் ஒரு பெண் ஆணாகப் பிறப்பதும் ஒரு ஆண் பெண்ணாகப் பிறப்பதும் ஏன் என விளக்குகிறார். ஒரு பெண் அறவழியில் நடப்பதால் அடுத்த ஜென்மத்தில் ஆணாகப் பிறக்கிறாளாம். ஆனால் ஒரு ஆண் புலனடக்கம் தவறுவதால் பெண்ணாகப் பிறக்கிறானாம்.

பொதுவாக நாமனைவரும் ஸென் பௌத்தத்தை மிகவும் உயரிய பெரும் தாராள அணுகுமுறையும் அழகுணர்ச்சியும் கொண்ட ஆன்மிகப் பாதையாகக் காண்கிறோம். ஆனால் மரபுசார்ந்த ஸென் பார்வையில் பெண்கள் தன்னியல்பில் இரத்தம் தேங்கிய நரக உலகங்களை நோக்கிச் செல்லும் தன்மை கொண்டவர்கள். ஒரு பெண் அப்படி செல்லாமலிருக்க ஸென் துறவியர் சடங்கு ரீதியாக பிராயசித்தங்களைச் செய்தாகவேண்டுமாம்.

கிறிஸ்தவம் ஹீப்ரூ விவிலியத்திலிருந்து சிருஷ்டி குறித்த புனைவைக் கடன்வாங்கியது. ஆனால் கிறிஸ்தவ இறையியல் ஆதிபாவத்தை தன் அடிப்படையாகக் கொண்டது. இப்பாவத்துக்கு காரணமாக அது பெண்ணையே சொல்கிறது. கிறிஸ்தவ இறையியலின் பிதாமகர் தாமஸ் அக்வினாஸ். இவர் பெண்கள் உயிரியல் நிலையில் பிறழ்ந்த ஆண்கள் என்றும் பெண் இயற்கையிலேயே தாழ்ந்தவள் என்றும் இறையியல் அடிப்படையில் வாதிட்டு எழுதியவர்.

இஸ்லாம் குறித்து சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் இதையெல்லாம் வைத்து எவரும் புத்தர் பெண்களை இழிவாக சொன்னதாகக் காட்டும் பௌத்த நூல்களை எரிக்கவோ தடை செய்யவோ கேட்பதில்லை. தாமஸ் அக்வினாஸின் நூல்களை தடை செய்ய வேண்டுமென்று எந்த கிறிஸ்தவ இறையியல் கல்லூரி முன்னும் எவரும் கொடிபிடிப்பதில்லை. ஏனென்றால் இவை அந்தந்த காலச்சூழல்களிலிருந்து உருவாகக் கூடிய கருத்துக்கள் இவற்றுக்கும் மதத்தின் சாரத்துக்கும் தொடர்பில்லை என முன்னகர முடியும்.

உண்மையான பகுத்தறிவாளர்கள் அதைத்தான் செய்வார்கள்.

இதில் மற்றொரு விஷமமான விஷயம் டாக்டர் அம்பேத்கரை இவர்கள் துணைக்கழைப்பது.

ராசலீலைக்கு ஆசைப்பட்டால் கோவர்த்தனகிரியைத் தூக்கு

ஒரு சொல்வழக்கு உண்டு: கிருஷ்ணன் கோபியருடன் இருந்ததைப் போல நானும் உல்லாசமாக இருப்பதில் என்ன தவறு என்று கேட்டானாம் ஒருவன். அதற்கு ஒரு அறிஞன் பதில் சொன்னானாம். ஆமப்பா நீ கோவர்த்தனகிரியை உன் சுண்டு விரலில் தூக்கவும் முடியுமென்றால் ராசலீலையையும் செய்யலாம்.

டாக்டர் அம்பேத்கர் 1927 இல் மனுஸ்மிருதியை எரித்தார் என்பதை இவர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதே பாபா சாகேப் இந்து சிவில் சட்ட வரையறை குறித்த பாராளுமன்ற விவாதத்தில் எப்படி ஸ்மிருதிகள், மனு உட்பட, பெண்களுக்கு சொத்துரிமை அளிக்கின்றன என்பதையும், ‘நம் ரிஷிகளும் நம் ஸ்மிருதிகாரர்களும்’ செய்த  சட்டங்களைச் சரியாக அவதானித்து முன்னெடுக்க முடியாமல் பிரிட்டிஷ் பிரைவி கவுன்ஸில் செய்துவிட்டது எனக் கூறியிருப்பதையும் ஏனோ விட்டுவிடுகிறார்கள். அதற்கு மீண்டும் ம.வெங்கடேசன் அவர்கள் வந்து இந்துத்துவ அம்பேத்கர் இரண்டாம் பாகம்தான் எழுத வேண்டும்.

அதே போல மனு பெண்ணடிமைக்குத் துணை போகிவிட்டார் என்று பாபா சாகேப் அம்பேத்கர் சொல்லும் போது கூட மிகக் கவனமாக வேத காலங்களில் பெண்ணுக்கு இருந்த உயரிய நிலையைச் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை. வேதம், பாணினி, பதஞ்சலி ஆகிய ஆதாரங்களின் அடிப்படையில் பெண்ணின் உயரிய நிலையைச் சுட்டிக்காட்டி பாபாசாகேப் அம்பேத்கர் ஸனாதன வைதீக தர்மம் நிலவிய பண்டைய பாரத சமுதாயத்தில் பெண்ணுக்குக் காட்டப்பட்ட மதிப்பு ’அன்றைய உலகில் வேறெங்கு காட்டப்பட்டதைவிட அதிகமானது’ என்கிறார்.

ஆனால் அம்பேத்கரை சுவரொட்டிகளில் (தன் படத்தைவிட சின்னதாகத்தான்) போட்டு அரசியல் நடத்தவும், பாபா சாகேப் அம்பேத்கர் ஹிந்து மதத்தைக் குறித்துக் கடுமையாகப் பேசியவற்றை மட்டுமே சொல்லி சொல்லி ஒரு வக்கிர போகமடையவுமான ரோக மனநிலை கொண்டவர்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் போல அறிவு மலையை சுண்டு விரலால் தூக்கி மக்களைப் பாதுகாக்கும் சக்தி இருப்பதில்லை.

பெண்கள் படைப்பும் சனாதன தருமமும்

பெண்கள் படைப்பு குறித்து சனாதன தர்மம் சொல்வது என்ன?

கிறிஸ்தவத்தில் பெண் என்பவள் ஆணின் விலாவிலிருந்து உருவாவதாக கதை உள்ளது. எனவே அவள் ஆணுக்குச் சமமானவள் அல்ல எனப் பல நூற்றாண்டுகளாக கருதப்பட்டாள். மேலும் ஆதி பாவத்துக்கும் அவளே காரணமாக அமைந்தாள் என்பதாலும் அவள் கீழானவளாகக் கருதப்பட்டாள். அப்படி கருதக் கூடிய கிறிஸ்தவ அடிப்படைவாதிகளை இன்றும் பார்க்கலாம்.

ஆனால் ஹிந்து மதம் பெண்ணின் சிருஷ்டி குறித்து என்ன சொல்கிறது? திருமாவளவன் சொல்வது போல பெண்கள் படைப்பிலேயே பரத்தைகளாக இருக்கும்படி கடவுள் படைத்தார் என சொல்கிறதா?

பதிணெண் புராணங்களில் முக்கியமான புரணம் சிவமஹா புராணம். அதில் வாயுசம்ஹிதையில் பெண்களின் படைப்பு குறித்து சொல்லப்படுகிறது.

பிரம்மாவின் படைப்பில் முதலில் பாலினப் பாகுபாடு இல்லை. பின்னர் பிரம்மா பாலினப்பாகுபாடு வேணுமென கருதுகிறார். ஆனால் அவரால் பெண்ணை மனதில் உரு கொடுத்து சிருஷ்டிக்க முடியவில்லை. எனவே அவர் பரமேசுவரனை தியானித்து தோத்திரம் செய்கிறார். தவம் செய்கிறார். இத்தவத்தால் மகிழ்ந்த பரமேஸ்வரன் அர்த்த நாரீஸ்வரராக தோன்றுகிறார். அத்தோற்றத்தை பிரம்ம தேவன் அர்த்த நாரீஸ்வர தோத்திரம் செய்கிறார்.

இதனால் மகாதேவன் மகிழ்ந்து தம் இடப்பாக சக்தியிலிருந்து பிரிகிறார். அந்த சக்தியை சிவமகா புராணம் ‘திவ்யகுணமுடைய பராபரை சக்தி, ஜன்மமிருத்யுஜராதிகளற்ற லோகமாதா, மனோவாக்கு காயங்களுக்கு எட்டாதவளாகிய பார்ப்பதி’ அன்னையிடம் பிரம்மன் மீண்டும் வேண்ட அவள் தன் புருவமத்தியிலிருந்து தனக்கே சரிசமமான சக்தியை உருவாக்கினாள்.

இப்படித்தான் பெண்களின் சிருஷ்டி சொல்லப்படுகிறது.  இங்கு பெண்களின் சிருஷ்டி தேவியின் அம்சம் என்பது தெளிவாகவே சொல்லப்படுகிறது. இவ்வளவு தெளிவாக விஷயங்கள் இருந்த போதிலும் முனை. திருமா சனாதன தர்மத்தின்படி பெண்கள் கடவுளால் பரத்தைகளாகப் படைக்கப்பட்டார்கள் என்று சொல்வது எவ்வளவு பெரிய மோசடி. எவ்வளவு பெரிய வக்கிரமான வெறுப்புப் பிரசாரம்.

பெண்கள் விடுதலை என்பது நிச்சயமாக முக்கியமான விடயம்தான். ஐயமில்லை. எனவேதான் அதை முனை. திருமா போன்ற போலிப் போராளிகள் வெறுப்பு வியாபாரிகள் தங்கள் அரசியல் லாபத்துக்காகவும் வக்கிர மன போகங்களுக்காகவும் பயன்படுத்த அனுமதிக்கலாகாது. ஏனெனில் அதுவே பெண் விடுதலைக்குப் பெரும் தடை.

பாரதத்தில் பெண்விடுதலையை முன்னெடுத்த சகோதரி நிவேதிதை, சிஸ்டர் சுப்பு லட்சுமி, டாக்டர் முத்து லட்சுமி, பாரதி, ஹரிவிலாஸ் சரதா, சுவாமி சகஜானந்தர், சுவாமி சிரத்தானந்தர் என அனைவருமே சனாதன இந்து தருமத்தால் உந்துதல் பெற்றவர்கள். ஆனால் ஈவெரா போன்றவர்கள் சமூக அவலங்களைத் தங்கள் வெறுப்பு அரசியல் பிழைப்புக்கு முதலாக்கிக் கொண்டவர்கள். இந்த வெறுப்பு வியாபாரிகளயும் மனவக்கிர ஊனர்களையும் அடையாளம் கண்டு ஒதுக்க அவர்களே வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது ஒருவிதத்தில் நல்லதுதான்.

Leave a Reply