ஆல்பெர் காம்யூவும் ஆர்.எஸ்.எஸ்ஸும்
அடையாறு பகுதியின் இளைஞர்கள் அன்றாடம் கூடுமிடம் ஹோட்டல் ரன்ஸ். பலருக்கு அதை வாழுமிடம் என்றுகூடச் சொல்லலாம். எவ்வளவுநேரம் உட்கார்ந்திருந்தாலும் ஏனென்று கேட்கமாட்டார்கள். காபி, டீ, சமோசா என்று பில் மட்டும் கூடிக்கொண்டே போகும். என்னுடைய வாழ்க்கைத் தடத்தில் ஹோட்டல் ரன்ஸுக்கு முக்கியமான இடமுண்டு. பத்தாண்டுகளுக்கு மேலாக நான் ஈடுபட்டுவந்த கடல் தொழில், மீன் தொழில், கருவாடு தொழில், எல்லாவற்றிலிருந்தும் விலகும் கட்டம் அங்கேதான் நிகழ்ந்தது.
அரங்கத்தில் கானாங்கழுத்தி கருவாட்டைத் தயார் செய்து, அதை கேரளத்தில் உள்ள செங்கணாஞ்சேரிக்கு எடுத்துப் போய் சந்தையில் விற்று காசு பார்த்துக் கொண்டிருந்தோம். நான், ராஜேந்திரன், குமார் மூவருக்கும் அதில் கணிசமான வருமானம் இருந்தது. அது அதிகமாகும் வாய்ப்பும் இருந்தது. இத்தனை இருந்தாலும் ராஜேந்திரனுக்கும் குமாருக்கும் இடையே நடக்கும் அன்றாட மோதல் எல்லைமீறிப் போய்க் கொண்டிருந்தது.
ராஜேந்திரன் காலையில் கண் விழித்து, சாராயக்கடை திறக்கும்வரை நிதானமாக இருப்பான். அவ்வளவுதான். அவன் திருந்தி விடுவான் என்ற நம்பிக்கையை நான் இழந்தாலும் என்னால் அவனிடம் கடுமையாக நடந்துகொள்ள முடியவில்லை ஆனால் குமாருக்குப் பொறுமையில்லை. அன்றாடம். ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளாத குறையாக இருவரும் மோதிக் கொண்டார்கள். முதலீடு செய்தது குமார்; உழைப்பது நான்; குடிப்பது, அவ்வப்போது ஐடியா கொடுப்பது, அடிக்கடி தகராறு செய்வது என்பது மட்டுமே ராஜேந்திரனின் பங்காக இருந்தது. ஒரு கட்டத்தில் என்னால் இந்தச் சச்சரவைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனக்குப் பணத்தை விட அமைதி அவசியமாகி விட்டது.
பல வருடப் பழக்கத்தில் பராசக்தி எனக்கு ஒரு வரம் கொடுத்திருந்தாள். முக்கியமான முடிவுகளை எடுக்க நேரிடும்போது நான் ஒதுங்கி விடுவேன், ஒடுங்கி விடுவேன், அமைதியாகி விடுவேன். அப்போது உத்தரவு உள்ளிருந்து வரும். வந்தது.
“நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டே இருந்தால் நான் விலகி விடுவேன்” என்று அவர்களிடம் சொன்னேன். சண்டை மும்முரத்தில் அவர்கள் என்னைக் கவனிக்கவில்லை. மீண்டும் சொன்னேன். அப்போதும் கவனிக்கவில்லை. இந்த முறை குரலை உயர்த்தி அதையே சொன்னேன். சொல்லிவிட்டு, அவர்கள் ஏதும் எதிர்வினை ஆற்றுவதற்கு முன்பாக எழுந்தேன். பக்கத்து டேபிளில் அமர்ந்தேன். இருவரும் அங்கே வந்து என்னைச் சமாதானம் செய்ய முயற்சி செய்தார்கள். நான் உடன்படவில்லை.
வரவு, செலவைப் பொருத்தவரை, ராஜேந்திரன் மீண்டும் சகஜநிலைக்கு வந்து எனக்குத் தரவேண்டியப் பாக்கியைக் கொடுத்துவிடுவான் என்கிற நம்பிக்கையை எப்போதோ இழந்துவிட்டேன். குமாரைப் பொருத்தவரை என்னுடைய பங்கு எப்படியும் வந்துவிடும் என்று தெரியும். அவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் வியாபார விஷயமாக பேச நான் தயாராக இல்லை.
நான எழுந்து வந்து உட்கார்ந்த டேபிளில் ரமணி என்ற நண்பன் இருந்தான். ரமணி என்னை விட வயதில் இளையவன். ஆர்.எஸ்.எஸ்ஸில் தீவிரமாக ஈடுபட்டு, அவசர நிலை காலத்தில் சிறைக்குப் போனவன். பிளேஸ் பிரிண்டர்ஸ் என்ற அச்சகத்தை நிறுவி இருந்தான். ஊர் விவகாரம், உலக அரசியல் எல்லாவற்றையும் கொஞ்ச நேரம் பேசி விட்டு அவனிடம் கேட்டேன். “ரமணி எனக்கு பிரஸ்ஸில் வேலை கொடுக்கிறாயா” என்று. ரமணி பதறி விட்டான். “ஏம்பா, இவ்வளவு சம்பாதிக்கிறே. நான் கொடுக்கிற சம்பளத்தில் உன்னால் என்ன செய்ய முடியும்” என்று திருப்பிக் கேட்டான். “சம்பளம் முக்கியமில்லை. உன்னால் முடிந்ததைக் கொடு, என்னால் முடிந்ததைச் செய்கிறேன்” என்று சொல்லிவிட்டேன். ரமணி ஊர்ஜிதமாக ஒரு முறை “மாதம் ரூபாய் நூறு” என்று சொன்னான். நான் தலையசைத்தேன். சில ஆயிரம் ரூபாய்களை மாத வருமானமாக பார்த்துக் கொண்டிருந்த நான், மாதம் நூறு ரூபாய் சம்பளத்திற்கு இறங்கி வந்து விட்டேன், மனப்பூர்வமாக. பொருளாதார ரீதியாக இப்படி இறங்கியது என்னைப் பாதிக்கவில்லை.
ரமணியுடைய அச்சகம் அடையாறு நேருநகரில் இருந்தது. நான் பெசண்ட் நகர் ராகவன் வீட்டிலிருந்து அடையாறு காந்திநகர் பெரியம்மா வீட்டிற்கு ஜாகை மாறிக் கொண்டேன். சம்பளம் நூறு ரூபாய்தான் என்றாலும் பெரிய அளவில் பிரச்சினை இல்லை. பெரியம்மா வீட்டில் சாப்பாடு உண்டு. தங்கிக் கொள்ளலாம். செலவுக்குக் கேட்டாலும் தம்பி விச்சு காசு கொடுப்பான். இருந்தாலும் மனத்தளவில் ஒரு பிரச்சினை இருந்தது. அச்சகத்தில் வேலை செய்யும் போது மத்தியான வேளையில் பெரியம்மா வீட்டுக்குப் போய் சாப்பாட்டை முடித்துக் கொண்டு வரவேண்டும். சமயத்தில் அது அலுப்பாக இருந்தது. சில சமயங்களில் சாப்பிடாமல் இருந்து விடுவேன். அச்சக மேனேஜராக இருந்த இரா.ஜவஹர் இதைக் கண்டுபிடித்து விட்டார். அதுமுதல் தன்னுடைய டிபன்பாக்சில் பாதி பங்கை எனக்குக் கொடுக்க ஆரம்பித்தார். ஜவஹரைப் பற்றிச் சொல்கிறேன்.
சிந்தனை, சொல், செயல் மூன்றும் நேர்க்கோட்டில் இருப்பது ஜவஹரின் வார்ப்பு. முரட்டுத் தோற்றம், உருகும் உள்ளம். “ஏ அப்பு” என்று அழைப்பார். காரணம், ஜவஹருக்குப் பூர்வீகம் மதுரை. வறுமைக் கோட்டுக் குடும்பம். பள்ளியில் படிக்கும்போதே பள்ளிக் கல்வியோடு பொதுவுடைமைக் கோட்பாட்டையும் கற்றுக் கொண்டார். அதோடு வளர்ந்தார். தேர்ச்சி பெற்றார், பியுசி முடித்தவுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராவது என்ற முடிவுடன் சென்னைக்கு வந்தார்.
சென்னை அம்பத்தூரில் சிஐடியூ தொழிற்சங்கத்தை வலுப்படுத்தும் பொறுப்பு அவருக்குத் தரப்பட்டது. அதை வெற்றிகரமாகச் செய்தார். ஒரு கட்டத்தில் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டு கட்சியோடு உரசல் உண்டானது. கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அந்த நேரத்தில் “எந்தப் பாதையில்” என்ற புத்தகத்தை எழுதினார்.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கங்களை ஒவ்வொன்றாக அடையாளப்படுத்தி, அவற்றில் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியுடைய வகிபாகம் பற்றி எழுதப்பட்ட நூல் அது. அந்தப் புத்தகத்தைத் தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது எனக்கும் ஜவஹருக்கும் தொடர்பு ஏற்பட்டது. புத்தகத்தை எழுதும்போதே ஒரு வித்தியாசமான நடைமுறையை ஜவஹர் மேற்கொண்டார். அதை பொதுமக்களுக்குப் படித்துக் காட்டி அவர்களுடைய புரிதலுக்கு ஏற்றவாறு திருத்தம் செய்வதே ஜவஹருடைய வழக்கம். அப்போது அந்த வேலையில் அவருக்கு உதவியாக இருந்தவர்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த முனைவர் வீ.அரசு மற்றும் அவரது துணைவியார் பத்மா (மங்கை).
அரசு தம்பதிகள் எனக்கு வேண்டப்பட்டவர்கள். அரசியல் ரீதியாக நாங்கள் எதிர்முகாமில் இருந்தாலும் தமிழ் இலக்கியத்திலுள்ள ஈடுபாடு எங்களை இணைத்திருந்தது. எனக்கு ஜவஹருடன் அறிமுகம் ஏற்பட்டு நானும் ஜவஹரும் சந்திக்கும்போதெல்லாம் தர்க்கிப்பது வழக்கமாகி விட்டது. இப்படி இடைவெளி விட்டு தர்க்கித்தது போதாது என்று ஜவஹரின் அழைப்பின்பேரில் ஒருநாள் அம்பத்தூருக்குப் போனேன். (மண்ணூர்பேட்டை). அவரோடு தங்கி இருந்து உரையாடலை நடத்துவதாகத் திட்டம்.
முன்னிரவு வேளையில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஒரு வாராவதியில் உட்கார்ந்தபடி எங்களுடைய உரையாடல் ஆரம்பித்தது.
“பிற்காலத்தில் இங்கே ஒரு கல்வெட்டு இருக்கும். அதில் நம் இருவரின் பெயரும் இருக்கும்” என்று தொடங்கினேன். ஜவஹர் ரசிக்கவில்லை. சரியான மண்டனமிஸ்ரரிடம் மாட்டிக்கொண்டோம் என்பது புரிந்து விட்டது.
“எப்போதும் பராசக்தி, பராசக்தினு சொல்றீங்களே. அந்தப் பராசக்தி உங்களை ஏன் வறுமையிலேயே வைத்திருக்கிறார்?” இது ஜவஹரின் முதல் கேள்வி.
“இது மட்டுமில்லை ஜவஹர். இன்னும் சில கேள்விகளும் உண்டு. எல்லாவற்றையும் அவளிடம் கேட்கவேண்டும். அதற்கு அவளைச் சந்திக்க வேண்டும். கேட்கும்போது உங்களுடைய கேள்வியையும் சேர்த்துக் கேட்கிறேன். அவளைப் பார்ப்பது, சந்திப்பது என்பதற்கான தயாரிப்புதான் என்னுடய பக்தி” என்று சொன்னேன்.
உடனே ஜவஹர் அண்டத்திலிருந்து பிண்டத்திற்கு வந்துவிட்டார், அரசியல்ரீதியான கேள்வியைக் கேட்டார்.
பேசினோம், பேசினோம், பேசிக்கொண்டே இருந்தோம். ஜவஹருக்கு இடையிடையே டீயும் பீடியும், எனக்கு டீ மட்டும்.
விடியற்காலையில் எழுந்து அவருடைய அறைக்குப் போனோம். குளித்துத் தயாராகி இருந்தவனை அருகிலிருந்த ஆச்சி மெஸ்ஸிற்கு ஜவஹர் அழைத்துப் போனார். குளித்ததும் குங்குமம் வைத்துக் கொள்வது என் வழக்கம். ஜவஹரின் அறையில் அது இல்லை. எனவே ஆச்சியிடம் நான் கேட்டேன், “கொஞ்சம் குங்குமம் கொடுங்கம்மா” என்று. ஆச்சி சிரித்து விட்டார். “ஜவஹரோட வர்ரவங்கள்ல நீங்கதான் மொதமொறையா குங்குமம் கேக்கிறீங்க” என்றார்.
“இனிமே எல்லாரும் கேப்பாங்க, கொஞ்ச நாள்ல அவரும் கேட்பாரு” என்று சொல்லிவிட்டு அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசி விட்டோம் என்பதை உணர்ந்தேன். ஆனால் ஆச்சியும் ஜவஹரும் அதை ரசித்து சிரித்தார்கள்.
ஜவஹர் அனாவசியத்திற்கு நேர்மையாக இருப்பார், பொய் சொல்லமாட்டார் என்கிற செய்தி தோழர்களிடையே பிரசித்தம். ஆனால், அதற்கும் ஒரு சோதனை வந்தது.
ஒருநாள் சத்யா ஸ்டுடீயோ பஸ்ஸ்டாப்பில் நானும் ஜவஹரும். ரோட்டுக்கு மறுபுறத்தில் ஆந்திரமகிளாசபா. அங்கிருந்து ஊனமுற்ற குழந்தைகளை அழைத்துவந்து காம்பௌண்டின் ஒரு ஓரமாக வரிசையாக நிற்க வைத்திருந்தார்கள். ராஜிவ்காந்தி வரும்போது அவர்கள் கையசைக்க வேண்டுமென்பதற்காக. அங்கே இருந்த நாற்காலிகளில் குழந்தைகளை ஏன் உட்கார வைக்கவில்லை என்று ஆசிரியையிடம் நான் ஏற்கெனவே கேட்டுவிட்டேன். விஜபி வரும்போது அவர்களை அவசரமாக எழுப்ப முடியாது என்கிற பதில் எனக்கு சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அரைமணி நேரமாக அந்த பாழாய்ப்போன விஜபி வரவில்லை. குழந்தைகளும் உட்கார வைக்கப்படவில்லை. எனக்கு சூடு ஏறிக்கொண்டே போனது. வெயில் அதை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது.
ரோட்டைக் கடந்துபோய் தகராறு செய்யப்போகிறேன் என்பதை ஜவஹர் ஊகித்துவிட்டார். என்னைத் தடுத்துவிட்டு அவர் அங்கே போனார். ஆசிரியையிடம் பேசினார். குழந்தைகள் உட்கார வைக்கப்பட்டார்கள். ஜவஹர் திருப்பி வந்தார். எனக்கு பொறுமையில்லை. “என்ன சொன்னீங்க” என்று கேட்டேன். “நாங்க காங்கிரஸ்தான். ராஜிவ் வருவதற்கு இன்னும் அரை மணிநேரமாகும் என்று சொல்லிவிட்டேன்” என்றார்.
ஜவஹர் பொய் சொன்ன சம்பவம் இதுதான்.
ஜவஹருடைய முயற்சியின் காரணமாக இசைக்கவி ரமணனின் ‘கோடுகள் இல்லா உலகம்’ என்ற கவிதைநூல் வெளியிடப்பட்டது. இளவேனில் (கார்க்கி இதழின் ஆசிரியர்) தலைமை, கோமல் சுவாமிநாதன், ஞானக் கூத்தன் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். முதல் படியைப் பெற்றுக்கொண்டது ஷோபனா ரவி. புத்தக வெளியீட்டுச் செலவு சித்தார்த்துடையது.
ஞாயிற்றுக்கிழமைகளில் நான் அரசு, பத்மா வீட்டுக்குப் போவது வழக்கம். அரசு தஞ்சாவூர்க்காரர், தேவர் ஜாதி, பத்மா அய்யர், காதல், கல்யாணம், பிறகு பெற்றோரின் மிரட்டல் என்று தப்பித்து, அப்போதுதான் அடையாரில் வந்து குடியேறி இருந்தார்கள். வீடு நிறைய புத்தகங்கள். மிஞ்சிய இடத்தில் புத்தகங்களைப் பற்றிய வாதங்கள். மார்க்சியம், பொருள் முதல்வாதம் தொடர்பான சந்தேகங்களை நானும் அங்கே கேட்டுத் தெரிந்து கொள்வேன்.
வீ. அரசு பின்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக இருந்தார். ஏகப்பட்டப் படிப்பாளிகளை முற்போக்காக மாற்றிய பெருமை அவருக்குண்டு. பத்மா பேர்மாற்றம் செய்து கொண்டு ‘மங்கை’ ஆகி ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாக இருந்தார். பத்மாவும் தன்பங்குக்கு படிப்பாளிகளை முற்போக்காக்கினார்.
பத்மாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. தோழர்கள் மட்டுமே அழைக்கப் பட்டிருந்த பெயர் சூட்டும் நிகழ்ச்சியில் இரண்டு பேர் மட்டும் விதிவிலக்கு. ஒன்று புகழ்பெற்ற கிராமிய இசைக்கலைஞர் கொல்லங்குடி கருப்பாயி, இன்னொருவர் புகழ்பெறாத சுப்பு.
பொன்னி அச்சகம் வைகறைவாணன், விடியல் வேணுகோபால் இருந்த சபையில் ந.அரணமுறுவலும் (செம்மொழி அலுவலகம்) இருந்ததாக ஞாபகம். “சிறிய பெயராக இருக்கவேண்டும். தமிழ்ப் பெயராக இருக்கவேண்டும்” என்று தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார் பத்மா. அறிவுஜீவிகளும், தமிழ்ப் போராளிகளும் இருந்த அந்த அவையில் நான் சொன்ன பெயர் தம்பதிகளால் தேர்வு செய்யப்பட்டது – பொன்னி.
ஒருமுறை சினிமா சம்பந்தமான கேள்வி என்னைத் தூங்கவிடவில்லை. சார்லி சாப்ளின் நடித்த படம். ஆங்கிலப்படம் என்று சொல்லமுடியாது, ஏனென்றால் மௌனப்படம். படத்தின் பெயர் ‘தி மார்டன் டைம்ஸ்’. தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் கொடுமைகளை சார்லி சாப்ளின் காட்சிப்படுத்தி இருப்பார். சாப்பிடுவதற்காக என்று நேரம் ஒதுக்க விரும்பாத முதலாளி ஒரு இயந்திரத்தை வரவழைப்பார். அந்த இயந்திரத்தில் தொழிலாளியைப் பொருத்திவிடுவார்கள். இடைவிடாமல் அந்த இயந்திரம் உணவுப்பொருளை சாப்ளினுடைய வாயில் திணித்துக்கொண்டே இருக்கும். ஒருகட்டத்தில் இயந்திரத்தின் வேகம் அதிகமாகி வாயில் உணவுப்பொருள் திணிக்கப்பட்டு, சார்லிசாப்ளின் திணறுவார். இயந்திரத்தில் வைத்து அவர் பூட்டப்பட்டு விட்டதால் தப்பிக்கவும் முடியாது.
தியேட்டர் முழுவதும் அலைஅலையாகச் சிரிப்பு. எனக்கு மட்டும் கோபம். ஒருவர் அவஸ்தைப்படுவதைப் பார்த்து இத்தனை பேர் சிரிக்கிறார்களே என்பதில் கோபம் அதிகமானது. கோபமும் யோசனையும் தொடர்ந்து கொண்டேயிருந்தது. ஒருவேளை, காட்சி அமைப்போ கதையோ நமக்குப் புரியவில்லையோ என்ற சந்தேகமும் இருந்தது. இந்த மாதிரி சித்தாந்த முடிச்சுகளை அவிழ்த்துத் தெளிவு படுத்தக்கூடிய அறிவுஜீவிகள் இருக்குமிடம் அரசு வீடுதான். அங்கே போனேன்.
பத்மாவிடம் கேட்டேன்.
“நீங்க கோபப்பட்டதுதான் சரி. முதலாளித்துவ சமூகத்தில் பாட்டாளிகள் எப்படி அந்நியப்படுத்தப் படுகிறார்கள், உற்பத்திக் கருவிகளுக்கும் அவர்களுக்கும் உறவு இல்லாமல் போகிறது என்பதை சாப்ளின் படம் பிடித்திருக்கிறார்” என்று சொல்லிக் கொண்டே போன பத்மாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது. “அந்நியமாதல்னா தெரியுமா?” என்று கேட்டார்.
வர்க்கப் போராட்டம் புரட்சியாக மாறுவதற்கான முன்னேற்பாடு தொழில்மயமாதல். தொழில்மயமாக்கப்பட்ட உலகில்தான் பாட்டாளிகளுக்கு புரட்சிக்கான அவசியமும் உணர்வும் ஏற்படும். இதெல்லாம் மார்க்ஸ் சொன்னது. இலக்கியத்தைப் பொருத்தவரை நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பெர் காம்யூவின் நாவல் அந்நியன். அதை ஶ்ரீராம் தமிழில் மொழிபெயர்த்தார். அந்தப் புத்தகத்திற்கு ஹிந்து பத்திரிக்கையில் மதிப்புரை எழுதி இருக்கிறேன்” என்று சொன்னேன். பத்மா இதை எதிர்பார்க்கவில்லை.
“இவ்வளவு படிச்சிருக்கிற நீங்க ஏன் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்கிறீங்க” என்று கேட்டார்.
“இவ்வளவு படிச்சதாலதான் அங்கே இருக்கிறேன்” என்றேன் நான்.
தொடரும்.