Posted on Leave a comment

இந்தியா புத்தகங்கள் – பகுதி 6 | முனைவர் வ.வே.சு.

The Razor’s Edge – Somerset Maugham

வகுப்பறைகளைப் போலவே சிலநேரங்களில் தெருவோரங்களும் நமக்குச் சில விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் என்பதை ஒப்புக்கொள்பவர்கள் உண்டு. ஒப்புக்கொள்ளாதவர்கள் இதைப் படித்துவிட்டு மாறக்கூடும்.

எங்கள் கல்லூரியில் மாணவர்களை எப்போதும் கண்காணிப்பிலேயே வைத்திருப்பார்கள். யாராவது லெக்சரர் வரவில்லை என்றால், கல்லூரி லைப்ரரியில் இருந்து புத்தகங்களை எடுத்து வந்து ஆளுக்கொன்றாகப் படிக்கக் கொடுப்பார்கள். அன்று வந்தவை ஆங்கிலப் புத்தகங்கள். கண்காணிக்க வந்தவர் தமிழ் ப்ரொபஸர்!

கொடுக்கும் போது புத்தகத்தின் தலைப்பு, நூலாசிரியர் பற்றி இரண்டு வார்த்தைகள் விவரித்து, “இவர்களைப் படித்தால் ஆங்கில அறிவு வளரும்” என்று சொல்லி ஒவ்வொருவருக்கும் கொடுத்துக் கொண்டே வந்தார்.

என்முறை வந்த போது “இது ரொம்ப நல்ல புத்தகம். தி ரேஸர்ஸ் எட்ஜ்” (The Razor’s Edge) எழுதியவர் பெரிய எழுத்தாளர்… பேரு “சாமர்செட் மௌகம்” (Somerset Maugham) என்றார். பத்து பக்கம் படிப்பதற்குள் மணி அடித்துவிட்டது. திருப்பிக் கொடுத்துவிட்டேன். ஆனால் சுவையாக இருந்தது.

ஒருமாதம் கழித்து, எங்கள் கல்லூரி அருகிலுள்ள தெருவில் விரிந்திருக்கும் பழைய புத்தகக் கடைக்குச் சென்றேன். வேறு ஏதோ புத்தகம் தேட வந்தவன் கண்ணில் “The Razors Edge” விழுந்தது. கடைக்காரர் தாடி வைத்த ஆழ்வார். அவரிடம் அந்தப் புத்தகம் வேண்டும் என்று கைகாட்டினேன்.

“எது தம்பி! சோமர்செட் மோம் பொஸ்தகமா?” என்றார்.

“மௌகம்” என்ற பேரை “மோம்” என்கிறார். “ம்.. தமிழே வராது இதுல இங்லீஷ் எப்படி?” என்று நினைத்துக் கொண்டே “ஆமாம்” என்று சொல்லி புத்தகத்தை வாங்கினேன். பிறகுதான் தெரிந்தது, கடைக்காரர் உச்சரிப்புதான் சரியாம்!

அவர் பெயரைச் சரியாக உச்சரிக்கத் தெரிந்ததாலோ என்னவோ, எனக்கு “மோம்” உடன் ஒரு நெருக்கம் ஏற்பட்டுவிட்டது. மறுமுறையும் அந்தத் தெருக் கடைக்குச் சென்று நோட்டமிட்டேன். ‘Of Human Bondage’, ‘Moon and Six Pence’, ‘Christmas Holiday’, ‘Summing Up’ போன்ற புத்தகங்கள் தென்பட்டன. கிடைத்த அத்தனை ‘மோம்’ புத்தகங்களையும் அடுத்த ஓராண்டில் படித்து முடித்தேன். பிறகு ‘மோம்’ பற்றியும் படித்து ஆச்சரியப்பட்டேன். ஆம்! பழைய புத்தகங்கள் வாங்கிப் படிக்கும் நல்ல பழக்கத்தை தெருக்கடைதான் எனக்குக் கற்றுக் கொடுத்தது.

இள வயதிலேயே என்னை ஆட்கொண்ட ஆங்கிலப் புதின ஆசிரியர் சாமர்செட் மோம்; அவர் சிறுகதை நாடகம், என்று பலவடிவங்களிலும் படைப்பாளியாக விளங்கினார் என்று பிறகுதான் தெரிந்தது. இது பற்றிய ஒரு சுவையான தகவல். அவர் எழுதிய ‘ரெயின்’ என்ற சிறுகதையை (ரொம்ப அருமையான கதை) படித்த ஒருவர் ஒருநாள் மோம் தங்கியிருந்த ஹோட்டலில் அவரைச் சந்தித்து, அந்தக் கதையை ‘நாடகமாக’ வடிவமைத்துத் தரும்படிக் கேட்டார். மனத்துக்குள் சிரித்துக் கொண்டே மோம் ஒரு பெருந்தொகைக்கு அப்பணியை ஏற்றுக்கொண்டார். உண்மையிலே மோம் அந்தக் கதையை முதலில் நாடகமாகத்தான் எழுதியிருந்தார். ஆனால் அதை நாடகமாக்க யாரும் வரவில்லை என்பதால் சிறுகதையாக எழுதி வெளியிட்டார். பிறகு அது ‘சாடி தாம்ப்ஸன்’ என்ற பெயரில் ‘பேசாப் படமாகவும்’ (Silent Movie) வந்தது.

நான் போகுமிடமெல்லாம் ‘மோம்’ கதைகளைப் பற்றி எனக்குத் தெரிந்ததைப் பேசி நண்பர்கள் கூட்டத்தில் பெருமையடித்துக் கொள்வேன். நான் அடிக்கடிச் செல்லும் என் நண்பன் வீட்டில் அவனது பெரியப்பாவிடம் ஒருமுறை பெருமையடித்துக் கொண்டிருந்தேன். திருவிதாங்கூர் அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ‘அந்தக் கால பி.ஏ.’ எனது ஆங்கிலப் புலமைக்கு அவ்வப்போது ‘ஷொட்டும்’ பல நேரங்களில் ‘குட்டும்’ வைப்பவர்.

‘மோம்’ எழுதிப் புத்தகமாக வெளிவந்த நிறைய கதைகளை நான் படித்துள்ளேன், நீங்கள் படித்துள்ளீர்களா?” என்று கேட்டேன்.

“படித்திருக்கிறேன். அதற்கு மேலும் ஒன்று செய்திருக்கிறேன். அதை நீ செய்ய முடியாது.”

“என்ன? ஏன் முடியாது?”

“நான் அவரை நேரில் பார்த்திருக்கிறேன்.”

“ம்..அப்படியா!” ஆச்சரியத்துடன் கண்களை விரித்தேன்.

“எனது தந்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வேலையில் இருந்தார். அப்போது ராஜாவின் விருந்தினராக சாமர்செட் மோம் வந்திருந்தார். The Razor’s edge படித்திருக்கிறாய் அல்லவா.. அதிலே கேரளாவைப் பற்றிய செய்திகள் வரும். அவையெல்லாம் அவர் நேரில் பார்த்தவை” என்று சொன்னார். நான் மௌனமாகிவிட்டேன்.

வீட்டுக்கு வந்து இன்னொருமுறை அதே நாவலைப் படித்தேன். கேரளாவைப் பற்றி அவர் எழுதியிருந்த பகுதி இன்னும் தெளிவானது போல இருந்தது. எழுதிய ஆசிரியனைப் பற்றித் தெரியத் தெரிய அவன் படைப்புகளுக்குள் ஒரு புதிய பார்வையை வாசகன் பெறுகிறான் என்று அன்று புரிந்துகொண்டேன். சாமர்செட் மோம் என்ற எழுத்தாளரின் வாழ்க்கை பற்றி நிறையப் படித்தேன்.

சாமர்செட் மோமின் தந்தையார் பாரிஸ் நகரில் பிரிட்டிஷ் தூதரகத்தில் பணிபுரிந்து வந்தார். அந்த நாட்டுச் சட்டத்தின் படி, பிரஞ்ச் மண்ணில் பிறந்த எவரையும் அந்நாட்டு ராணுவத்தில் சேரக் கட்டாயப்படுத்த முடியும். மாமின் தந்தையார் சாமர்த்தியமாகத் தன் துணைவியாருக்குத் தூதரக வளாகத்தின் உள்ளேயே பிரசவத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டார். பாரிஸில் இருந்தாலும் பிரிட்டிஷ் தூதரகம் உள்ள இடம் பிரெஞ்ச் நாட்டு மண்ணாகக் கருதப்படாது. எனவே அங்கே பிறந்த மோம் வளர்ந்தபின் பிரெஞ்ச் ராணுவத்தில் சேரவேண்டுமென்ற கட்டாயமில்லை. இவ்வாறு மகன் வளர்ச்சி மற்றும் எதிர்கால வாழ்க்கை பற்றித் திட்டமிட்டிருந்த அவர் தந்தை மோமின் பத்தாவது வயதிலேயே இறந்து போனார். இங்கிலாந்தில் பெரிய வக்கீலாக இருந்த அவரது சிற்றப்பாவின் வீட்டுக்கு மோம் அனுப்பி வைக்கப்படுகிறார்.

அவருக்கும் மிகக் கண்டிப்பான அவரது சிற்றப்பாவுக்கும் ஒத்துக் கொள்ளவில்லை. பிற்காலத்தில் ஆங்கிலப் படைப்பிலக்கியத்தில் மிகப் பெரிய இடம் பெற்ற சோமர்செட்டுக்கு ஆங்கிலம் சரியாக வரவில்லை என்று பள்ளி ஆசிரியர்கள் சொன்னார்கள். பள்ளிகளின் அபிப்பிராயங்கள் பல நேரங்களில் பலிப்பதில்லை என்ற உண்மையை இவர் வரலாறு மீண்டும் உறுதிப் படுத்துகின்றது.

குள்ளமான உருவத்தோடும், ‘திக்கிப் பேசும்’ குறையோடும் இருந்த மோம், இளவயதிலே பல இடங்களில் அவமானத்தையும் இழிவையும் சந்தித்து இருக்கிறார். தன்னை வெறுத்தவர்களை மோம் கடுமையான சொற்கள் கொண்டு எதிர்த்திருக்கிறார். அவருடைய பல கதாபாத்திரங்களின் குண அமைப்பிலும் உரையாடல்களிலும் இவை எதிரொலிப்பதைக் காணலாம்.

வழக்குரைஞர்களும் மருத்துவர்களும் நிறைந்த குடும்பத்தில் இவரை மருத்துவம் படிக்க அனுப்பினார்கள். மருத்துவப் படிப்புப் பட்டம் கிடைக்கும்போது இவரது முதல் நாவல் ‘லிஸா ஆஃப் லாம்பெத்’ (Liza of Lambeth) வெளியாகி இவருக்குப் பெரும் புகழ் ஈட்டித் தந்தது. மருத்துவத் துறையிலிருந்து எழுத்துத் துறைக்கு இவர் மாறவும் துணை செய்தது. Of Human Bondage, Moon and Six Pence போன்ற நாவல்கள், படைப்பிலக்கியத் துறையில் இவருக்கு மிக உயர்ந்த இடத்தைத் தந்தன.

சோமர்செட் மோம் முதலாம் உலகப் போரில் தனது நாட்டுக்காகப் போராடியுள்ளார். செஞ்சிலுவைச் சங்கத்தின் ‘ஆம்புலன்ஸ்’ பிரிவிலும், பிறகு பிரிட்டிஷ் நாட்டு போர்க்கால உளவுத் துறைக்காக சுவிட்சர்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளிலும் பணியாற்றியுள்ளார். இந்த அனுபவப் பின்னணியே ‘ஆஷண்டன் கதைகள்’ (Ashenden series) என்ற தொகுப்பை வெளியிட உதவியது. இக்கதைகள் நாடுகளுக்கிடையே உளவறியும் இரகசிய ஏஜெண்ட் ஆஷண்டனைப் பற்றியது.

உலகப்போர் முடிந்த பிறகு மோம் நிறையப் பயணங்கள் மேற்கொண்டார். முழுநேர எழுத்தாளராகவும் மாறிவிட்டார். இந்தியா, தென் மேற்கு ஆசியா மற்றும் பஸிபிக் நாடுகள் என்று பல இடங்களில் பயணங்கள் மேற்கொண்டார். அங்கே கண்ட மனிதர்கள் அவர்கள் பழக்கவழக்கங்கள், வித்தியாசமான வாழ்க்கை மதிப்பீடுகள் ஆகியவற்றைக் கொஞ்சம் கற்பனையோடு கலந்து எழுதத் தொடங்கினார். நாவலாசிரியராகவும், சிறுகதை எழுத்தாளராகவும், நாடக ஆசிரியராகவும், மிக அதிகமாக எழுதி நிறைய சம்பாதித்த எழுத்தாளர் என்ற பெயரையும் பெற்றார். ஒரு காலகட்டத்தில் லண்டனில் ஒரே நேரத்தில் அவருடைய ஆறு நாடகங்கள் ஆறு வெவ்வேறு அரங்குகளில் நடைபெறுமாம். அனைத்திலும் மக்கள் கூட்டமும் இருக்குமாம். அவர்தான் மோம்.

சோமர்செட்டின் எழுத்துக்கு ஒரு தனிப் பொலிவு உண்டு. எளிமையாகவும் இருக்கும் நுட்பமாகவும் இருக்கும். உரையாடல்கள் மிகக் கூர்மையானவை Up at the Villa என்ற கதையில், பார்டியில் சந்திக்கும் பெண்ணிடம்,

அவன் சொல்கிறான் “You are sensual.”

அவள் பதில் உரைக்கிறாள் “You are sensitive.”

இடங்களை, மனிதர்களை வருணிப்பதில் சோமர்செட் மோம் அதிசூரர். கதை நிகழும் களத்துக்கு மிக அருகில் ஒரு பார்வையாளனாக இருப்பது போன்ற உணர்வே நமக்கு வரும்.

(சோமர்செட் மோம்)

The Razor’s Edge என்ற புதினத்தின் கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம். லார்ரி டார்ரெல் (Larry Darrell) ஓர் அமெரிக்க இளைஞன்; அழகானவன்; அறிவாளி; ஆனால் அவ்வளவு வசதி கிடையாது. மாமாவின் தயவிலே படிக்கிறான். அவனுடைய காதலி அவனோடு படிக்கும் இஸபெல் (Isabel) மிகப்பெரும் செல்வந்தரின் மகள். இரண்டாண்டுகள் போரில் பணிசெய்துவிட்டுத் திரும்பிய காதலனிடம் பெரும் மாற்றத்தைக் காண்கிறாள். எந்த வேலையும் செய்ய விரும்பாமல், பணம் சம்பாதிக்க விரும்பாமல், மது, சிகரெட் எதையும் தொடாமல் ஆசைகளே அற்ற நிலையில் இருக்கும் காதலனுடன் தனது நிச்சியதார்த்தத்தை முறித்துக் கொண்டு அவன் போட்ட மோதிரத்தையும் திருப்பிக் கொடுத்துவிடுகிறாள். எனினும் அவர்கள் நண்பர்களாகவே இருக்கின்றனர்.

பெரிய பணக்காரனான கிரே என்பவனை மணக்கிறாள். பாரிஸில் மிக நாகரீகமாகவும், பெருந் தனவந்தர்களின் வட்டத்திலேயே வாழ்க்கை நடத்துபவருமான எலியட் டெம்பிள்டன், இஸபெல்லின் மாமா. அவரும் இக்கதையில் ஒரு முக்கியமான கதாபாத்திரம். அவருடைய நண்பரான சோமர்செட் மோம்தான் கதைசொல்லி. ஆம்! இக்கதையில் தானும் ஒரு கதாபாத்திரமாக இருந்து பிற பாத்திரங்களின் உணர்வுகளையும், கோப தாபங்களையும், எதிர்பார்ப்பு ஏமாற்றங்களையும் அருகே அமர்ந்து பேசி, உறவாடி, பல சேதிகளை நமக்குப் புரியவைக்கிறார் மோம்.

வாழ்க்கையின் அகப் பொருளைத் தேடத் தொடங்குகிறான் லார்ரி. இந்தியா வருகிறான். இமயமலைப் பகுதிகளில் உள்ள யோகிகளை சந்திக்கிறான். தென்னிந்தியாவில் கேரளத்திற்கு வருகிறான். அங்கே ஒரு குருவிடம், அவர் ஆசிரமத்திலேயே இருந்து யோக முறைகளைக் கற்கிறான். மனது பண்பட்ட நிலையில் மீண்டும் பாரிஸுக்கு வந்து பழைய காதலியைச் சந்திக்கிறான். அவர்கள் குடும்பம் செல்வம் எல்லாம் இழந்து வறுமையில் வாடுவது கண்டு சிறிது காலம் அவர்களுக்குத் துணையாக நிற்கிறான்.

பாரிஸ் நகரில் மிக இழிந்த தொழிலைச் செய்து வயிறு வளர்க்கும் பெண் ஒருத்திக்கு வாழ்வு கொடுக்க நினைக்கிறான். இவனது தூய நடத்தையையும் எதிர்பார்ப்பில்லாத அழகிய அன்பையும் அவளால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இவனது தூய நற்குணத்தைக் கண்டு அவள் அச்சம் கொண்டு ஓடிவிடுகிறாள். ஒருவேளை இவனுக்குத் தன் மீது மீண்டும் அன்பு வருமோ என எதிர்பார்க்கும் இஸபெல் ஏமாற்றமே அடைகிறாள்.

தனியனாகத் தன் தேடுதல் கொடுத்த மன அமைதியோடு அவன் வாழத் தொடங்குகிறான். “மேலும் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவன் எங்கிருந்தாலும் நிச்சலனமான உள்ளத்தோடு, எளியவர்களுக்குத் தானே வலியச் சென்று உதவும் தன்மையோடு, தனக்கென வாழாப் பிறர்க்குரியனாகவே வாழ்ந்துகொண்டிருப்பான்” என்று கதையை முடிக்கிறார் மோம். இந்த ஞானத் தெளிவு இந்துமதத் தத்துவம் தந்ததே என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார் ஆசிரியர்.

போர்க்களத்தில் குண்டு வீழ்த்திய விமானத்தில் இருந்த தன் நண்பனின் மரணம் லார்ரியை வாழ்வின் பொருள் என்ன என்ற தேடலிலே உந்தித் தள்ளுகிறது. காதலியிடம் இது பற்றிப் பேசுகையில் “The dead look so terribly dead when they’re dead” என்கிறான்.

கண நேரத்துச் சாவு இவனுக்கு வாழ்வின் நிலையாமையைச் சொல்கிறது என்பதும், இந்தப் புரிதலோடு அமைதியாக, ஆரவாரமின்றி வாழ்வைச் சந்திக்க விரும்பும் இவனை, உறவுகளும் நட்புகளும் எவ்வாறு எதிர் கொள்கின்றன என்பதும் கதைப் போக்கிலே மிகச் சுவையாக எடுத்தாளப்படுகின்றன.

நீ என்ன தேடுகிறாய் எனக் கேட்ட காதலியிடம் லார்ரி சொல்வது:

“I want to make up my mind whether God is or God is not. I want to find out why evil exists. I want to know whether I have an immortal soul or whether when I die it’s the end.”

“ஞானம் வந்த பிறகு அதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்?” காதலி கேட்கிறாள்.

“If I ever acquire wisdom, I suppose I shall be wise enough to know what to do with it” என்கிறான்.

இந்தியாவிலிருந்து பாரிஸ் திரும்பிய லார்ரி நண்பர்கள் குழுவில் பேசாமல் அமைதியாக அமர்ந்து கொண்டிருகிறான். மோம் இதைக் கவனித்துவிட்டு எழுதுகிறார், “His company was sufficient conversation”.

பம்பாயில் சந்திக்கும் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த ஒரு துறவியிடம் “கடவுளைப் பற்றி முழுதாக அறிய முடியவில்லையே, ஏன்?” என்று கேட்கிறான்.

“A God that can be understood is no God. Who can explain the infinite in words?” என்கிறார் துறவி.

“The edge of the Razor is difficult to pass through; Thus say the wise, the path to salvation” – Katopanishad.”

என்ற உபநிடத வரிகள்தான் நாவல் தலைப்புக்கு அடிப்படை எனக் குறிப்பிட்டுள்ளார் மோம். இந்த நாவலின் பல தழுவல் வடிவங்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன என்பது கூடுதல் தகவல்.

நிறைய முறைகள் நான் படித்த நாவல் இது. பல ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் படிக்கும் போது அதிலுள்ள வரிகளில் ஒரு புதிய உயிர்ப்பு இருப்பது புரிந்தது.

பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பது பாலுக்கு மட்டுமே பொருந்தும். நூலுக்கு அல்ல.

Leave a Reply