Posted on Leave a comment

ஜி.ஏ.நடேசன் (1873-1949): மறக்கப்பட்ட தேசியத் தலைவர் | பா.சந்திரசேகரன்

(அமர்ந்திருப்பவர்கள்: காந்தி, கஸ்தூர்பா.
நின்றிருப்பவர்களில் வெள்ளை தலைப்பாகை அணிந்திருப்பவர்: ஜி.ஏ.நடேசன்)

இந்த கொரானா பெருந்தொற்று நோய்க் காலத்தில் பல்வேறு தொழில் துறைகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. பாதிப்புக்குள்ளான துறைகள் எந்தளவுக்கு தங்களது நிறுவனத்தைத் திறமையாக நிர்வகித்தார்கள்,  நவீன தொழில்நுட்பத்தை எந்தளவுக்கு உள்வாங்கியுள்ளார்கள் என்பதைப் பொருத்து பாதிப்பு மாறுபடுகிறது.

கொரானாவால் அனைத்துத் தரப்பையும் போலவே பதிப்பகம் மற்றும் அச்சு ஊடகம் சம்பந்தப்பட்ட துறைகளும் மிகவும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இதனால் வருவாய் இழப்பு, வேலை இழப்பு, புதிய வேலைவாய்ப்பு குறைவு என இக்கட்டான சூழ்நிலை எழுந்துள்ளது. இதற்கு முன்பு இத்துறை சிறப்பாக இருந்ததா என்பது வேறு ஒரு விவாதம். முன்பு இருந்த அளவுக்குக் கூட இன்றைய நிலையில் இல்லை என்பதே முக்கியமானது.

பெரும் இக்கட்டான சூழ்நிலையில் எதாவது ஒரு புதிய வெளிச்சம் அல்லது புதிய வாய்ப்பு உருவாகும் என்பது இயற்கையே. அந்தப் புதிய வாய்ப்பு என்னவென்றால் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் டிஜிட்டல் வாசிப்பு அதிகமானதுதான்.

ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் எப்படிச் சமாளித்தார்கள்? இந்த அச்சு, ஊடக, பதிப்பு, நூல் வெளியீட்டுத் துறையின் மூலம் நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய நம் தலைவர்கள் இச்சூழலை எப்படி எதிர்கொண்டார்கள் என்பது புதிராகத்தான் உள்ளது. தேசப்பற்றாளர்களின் தன்னலமற்ற பெரும் உழைப்பும் அர்ப்பணிப்பும் நாட்டுமக்களை ஊக்குவிக்க எடுத்த முயற்சிகளும் அபாரமானவை. தேசப்பற்றை மறந்துவிட்டு ஓடும் இந்தக் காலத்தில் அதை எல்லாம் நினைத்துப் பார்க்கக் கூட நாம் மறந்துவிட்டோம்.

இன்றைய ஊடகச் செயல்பாடுகள் மற்றும் அரசியல் நீரோட்டத்தில், தமிழகத்தில் கணபதி அக்ரகாரம் அண்ணாதுரை ஐயர் நடேசன் என்ற ஜி.ஏ.நடேசன் அவர்களின் பங்களிப்புப் பற்றியெல்லாம் படிக்கவோ எழுதவோ ஒருவருமில்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டு அரசியலில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரலாற்றில் ஜி.ஏ.நடேசன் அவர்களின் பங்களிப்பு அபாரமானது என்பதை வரலாறு எடுத்துரைக்கிறது.

அத்திப்பூ போல 2012ம் ஆண்டு எழுத்தாளர் பெ.சு.மணி எழுதிய ‘ஜி.ஏ.நடேசன் -பதிப்பாளர் – இதழாளர் – தேசபக்தர்’ என்ற நூல் வெளியானது. அந்த நூலை வெளியிட்டு மறைந்த தொழிலதிபர் நா.மகாலிங்கம் கூறினார்:

“நடேசன் போன்று தேசத்துக்காகப் பாடுபட்ட பல பெரியவர்கள் நினைவுகூரப்படாமலே உள்ளனர். எனவே, தேசத்துக்காகப் பாடுபட்ட அனைவர் குறித்தும் நூல்கள் வெளிவர வேண்டும். இல்லையெனில், இளைஞர்கள் மத்தியில் தவறான சரித்திரம் நிலைபெற்றுவிடும்.”

ஜி.ஏ.நடேசன் தான் ஈடுபட்ட அனைத்துத் துறைகளிலும் தனக்கென்று ஒரு முத்திரை பதித்தவர். ஜி.ஏ.நடேசன்தான் மகாத்மா காந்தியை தென்னிந்தியாவுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர். நடேசன் அவர்களின் வீட்டில்தான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி அவர்கள் முதன்முதலில் காந்தியை சந்தித்தார்.

ஜி.ஏ.நடேசன் அவர்கள் நிறுவிய ஜி.ஏ.நடேசன் & கோ என்ற பதிப்பகம் இந்திய தேசிய விடுதலை உணர்வுகளை வளர்ப்பதற்கான நூல்களை வெளியிடுவதில் முக்கியப் பங்காற்றியது. மேலும் அவர் ‘தி இந்தியன் ரெவ்யூ (The Indian Review)’ என்ற மாதாந்திரப் பத்திரிகையை நிறுவி கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் ஆசிரியராக இருந்து அதில் தலையங்கமும் எழுதினார். 1909ம் ஆண்டு எச்.எஸ்.எல்.போலக் எழுதிய ‘மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு’ என்ற நூலை முதன்முதலில் ஆங்கிலத்தில் வெளியிட்டவர் ஜி.ஏ.நடேசன்தான்.

சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான தலைவர்கள் தேச ஒற்றுமையை மக்களிடம் கொண்டுசெல்ல நாடெங்கிலும் பல்வேறு காலகட்டங்களில் மிகச்சிறந்த உரைகளை நிகழ்த்தினார்கள். அதன் மூலம் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்து ஆட்சி, அதிகார மற்றும் அடக்குமுறையை மாற்றியமைக்க முயன்றார்கள்.

இந்த சுதந்திரப் போராட்ட நீரோட்டத்தை இந்திய மக்களிடம் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள மக்களுக்குக் கொண்டுசெல்ல ஜி.ஏ.நடேசன் அரும்பாடுபட்டார். பல்வேறு சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் உரை மற்றும் எழுத்துக்கள் அனைத்தையும் தொகுத்து நூல்களாக மலிவு விலையில் வெளியிட்டார். இன்று அப்படியொரு பதிப்பகம் இல்லை என்றே சொல்லலாம்.

இன்றைய தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் திருவையாற்றுக்கு மிக அருகில் உள்ள கணபதி அக்ரகாரம் எனும் கிராமத்தில் ஜி.ஏ.நடேசன், அண்ணாதுரை ஐயர் அவர்களுக்கு மகனாக ஆகஸ்டு 24, 1873ம் ஆண்டு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் மூத்த சகோதரர் ஜி.ஏ.வைத்தியராமன். நடேசன் இரண்டு வயது இருக்கும்போதே அவரின் தந்தை இறந்துவிட்டார். பிறகு மூத்த சகோதரர்தான் இவருக்கு எல்லாமும்.

ஜி.ஏ.நடேசன் தனது பள்ளிப்படிப்பை கும்பகோணத்திலும் திருச்சிராப்பள்ளியிலும் முடித்தார். பிறகு மெட்ராஸ் மாநில கல்லூரியில் பி.ஏ பட்டப்படிப்பை 1897ல் முடித்தார். அயர்லாந்தில் பிறந்த கிளைன் பார்லோ (Glyn Barlow) ‘தி மெட்ராஸ் டைம்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது, அவரிடம் பயிற்சிபெற சிறிது காலம் அந்தப் பத்திரிகையில் பணியாற்றினார்.

1897ம் ஆண்டு ஜி.ஏ.நடேசன் & கோ என்ற நூல் வெளியீட்டு நிறுவனத்தைச் சொந்தமாகத் துவக்கினார். இந்த நிறுவனம் மிகவும் குறுகிய காலத்தில் பிரபலமடைந்தது. மேலும் அதே ஆண்டு ‘தி இந்தியன் பாலிடிக்ஸ் (The Indian Politics)’ என்ற ஆங்கில இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராகவும் இருந்தார். அதன் முக்கிய நோக்கம் மக்களின் குரலையும் கருத்துக்களையும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கொண்டுசேர்ப்பது மற்றும் சுதந்திரப் போராட்டத்திற்கு வலுசேர்ப்பது போன்றவை. ஆனால் சிறிது காலம்தான் இந்த இதழ் வெளிவந்தது.

1900ம் ஆண்டு, தி இந்தியன் ரெவ்யூ (The Indian Review) என்ற ஆங்கில மாத இதழை நிறுவி வெளியிட்டார் ஜி.ஏ.நடேசன். இந்த இதழின் ஆசிரியராக அவர் ஐம்பது ஆண்டுகள் இருந்தார். இந்த இதழின் பிரதிகளைப் படித்தால், பாரத நாட்டின் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை அணுஅணுவாக அப்படியே பிரதிபலித்திருப்பது புரியும். இந்த இதழின் முக்கிய நோக்கம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்கு தேசிய அளவில் ஒரு விவாதத் தளம் அமைத்து, பொருளாதாரம், வேளாண்மை, இலக்கிய விமர்சனங்கள், விளக்கப் படங்கள் போன்றவை பற்றி ஆக்கப்பூர்வமாக விளக்கமளித்தல்; மக்களின் கோரிக்கையை அரசுக்குத் தெரிவித்து தகுந்த கொள்கைகளில் மாற்றம் கொண்டுவருதல் போன்றவை.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறினார்:

“அன்னிபெசன்ட் மொழிபெயர்த்த கீதை தொடங்கி நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை ஜி.ஏ.நடேசன் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். அவர் நடத்திய இந்தியன் ரெவ்யூ பத்திரிகையில் வெளிவரும் கட்டுரைகளை ஆங்கிலேய கவர்னர் ஜெனரல்கள் வரை அனைவரும் படிப்பார்கள். நடேசன் நடத்திய இந்தியன் ரெவ்யூவில் மகாத்மா காந்தி 60க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.”

ஆரம்பம் முதல் பல வருடங்களாக தி இந்தியன் ரெவ்யூ பத்திரிகையில் பிரதானமாகக் கட்டுரைகள் எழுதியர்வகள் மகாத்மா காந்தி, கோபாலகிருஷ்ண கோகலே, திலக், நேரு, ஜான் மாத்தாய், நாராயண் சந்தாவர்கர், சுரேந்திரநாத் பானர்ஜீ, சப்ரு, அகா கான், வி.கிருஷ்ணசுவாமி ஐயர், மதன் மோகன் மாளவியா, சி.பி.ராமசுவாமி ஐயர், தாதாபாய் நவ்ரோஜி, ஆர்.சி.தத், சி.எஃப்.ஆன்ட்ரோஸ், பி.எஸ்.சிவசாமி ஐயர், வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி, அன்னிபெசன்ட் போன்றோர். மேலும் பல பிரிட்டிஷ் எழுத்தளார்களும் இந்த மாத இதழில் கட்டுரைகள் எழுதித் தடம் பதித்துள்ளனர்.

பல கைகள் மாறி 1970ல் டி.டி.கிருஷ்ணமாசாரி அவர்கள் ‘இந்தியன் ரெவ்யூபத்திரிகைக்கு உயிர் கொடுத்தார். 1974ல் அவர் நோய்வாய்ப்படும் வரையில் அதில் தலையங்கம் எழுதிக் கொண்டிருந்தார். பிறகு 1980ல் இந்தப் பத்திரிகை முற்றிலும் கைவிடப்பட்டது.

மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜி.ஏ.நடேசன், பின்னர் காந்திஜியின் சில கொள்கைகளில் மாறுபட்டார். இருப்பினும் கடைசிவரை காந்தி நடேசனுடன் நட்பு பாராட்டினார். காந்தியின் சத்தியாகிரகம் மற்றும் ஒத்துழையாமை இயக்கம் போன்ற போராட்ட முறைகளில் நடேசனுக்கு சற்றும் ஈடுபாடு இல்லை. ஏனென்றால் அவர் அடிப்படையில் கோகலேவின் தீவிரவாதக் கொள்கையைப் பின்பற்றினார்.

காந்தி தென்னாப்பிரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டபோதிருந்தே, ஜி.ஏ.நடேசன் காந்தியுடன் தொடர்பில் இருந்தார். கல்லூரியில் படிக்கும்போது 1896ல் இருந்தே கடிதம் மூலம் காந்தியைத் தொடர்பு கொண்டார். காந்தியின் தென்னாப்பிரிக்கப் போராட்டத்திற்கு நிதி உதவி அனுப்பியவர்களில் ஜி.ஏ.நடேசனும் அடங்குவார். 1915ம் ஆண்டு மகாத்மா காந்தி முதன்முதலாக மெட்ராஸுக்கு வரும்போது ஜி.ஏ.நடேசன் வீட்டில் தங்கினார். அவர் அப்போது ஜார்ஜ் டவுனில் உள்ள தம்பு செட்டித் தெருவில் குடியிருந்தார். காந்தி ஏப்ரல் 17 முதல் மே 8 வரை நடேசனின் வீட்டில் தங்கி இருந்தார். இங்குதான் ராஜாஜி காந்தியை முதன்முதலில் நேரில் சந்தித்தார். அதுவரையில் அவரும் காந்தியுடன் கடிதம் மூலமே தொடர்பில் இருந்தார்.

காந்தியை அழைத்துவர மெட்ராஸ் சென்ட்ரல் இரயில் நிலையம் சென்றிருந்த ஜி.ஏ.நடேசன், இரயில் வந்தபிறகு காந்தியை முதல் மற்றும் இரண்டாம் வகுப்பில் தேடினார். காந்தியைக் காணவில்லை. சென்று இருந்தவர்களுக்கு எல்லாருக்கும் ஆச்சரியம். பிறகுதான் தெரிந்தது காந்தி மற்றும் அவரது மனைவி கஸ்தூர்பா காந்தி இருவரும் மூன்றாம் வகுப்பில் பயணம்செய்து வந்துள்ளார்கள் என்பது.

ஜி.ஏ.நடேசனுக்கு காந்திஜி ஒருமுறை முழுக்க முழுக்க தமிழிலேயே கடிதம் எழுதியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட தமிழர்களை மெட்ராஸுக்கு காந்தி அனுப்பியபோது ஜி.ஏ.நடேசன்தான் அவர்களுக்கு உதவி புரிந்தார் என்பதை காந்தியே பல இடங்களில் தெரிவித்துள்ளார்.

ஜி.ஏ.நடேசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி துவங்கிய இந்திய லிபரல் கட்சியில் இணைந்தார். இந்திய லிபரல் கட்சியின் முதல் தேசிய இணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1922 முதல் 1947 வரை லிபரல் கட்சியின் மெட்ராஸ் செயலாளராக ஜி.ஏ.நடேசன் இருந்தார்.

1923ல் மற்றும் 1931ல் என இரண்டு முறை மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தின் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1933ல் இந்திய சுங்கவரி வாரியத்தின் முழுநேர உறுப்பினராக இருந்தார். அப்போது மெட்ராஸில் உருவான மில் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தார். ஜி.ஏ.நடேசன் கனடா நாட்டில் நடைபெற்ற பிரிட்டிஷ் சாம்ராஜ்ய பார்லிமெண்டரி குழுவின் (Empire Parliamentary Association) கூட்டத்தில் கலந்து கொண்டார். 1938ல் மெட்ராஸ் நகரத்தின் ஷெரீப்பாக நியமிக்கப்பட்டார்.

ஜி.ஏ.நடேசன் கிட்டதட்ட கால் நூற்றான்று காலம் மெட்ராஸ் நகராட்சியின் உறுப்பினராகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். நிர்வாகம் மற்றும் அரசுத் துறை சார்ந்த விஷயங்களில் சீர்திருத்தங்கள் மற்றும் வெளிப்படைத்தன்மையைச் செயல்படுத்துவதில் பெரும் பங்களித்தார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் கால் நூற்றாண்டுகள் பல்வேறு பொறுப்புகள் ஏற்றுப் பணியாற்றிப் பல நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் தரமான கல்வியை உருவாக்க அரும்பாடுபட்டார். பிறகு தானாக முன்வந்து பல்கலைக்கழகப் பணியில் இருந்து விலகினார்.

ஜி.ஏ.நடேசன் பல வரலாற்றுச் சிறப்பு வாய்த்த நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பல நூல்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். 1917ம் ஆண்டு ‘இந்தியாவுக்கு என்ன தேவை: பேரரசுவில் சுய ஆட்சி’ என்ற நூலில் அரசியலமைப்புச் சீர்திருத்தம், சுதந்திரம், சுயாட்சி, தனிமனித சுதந்திரம் போன்ற பல முக்கிய விஷயங்களில் தெளிவாக வரலாற்று ரீதியாகத் தனது கருத்துக்களை ஆழமாக எழுதி உள்ளார்.

சுதந்திரப் போராட்டம் என்பது அறவழியில் இருத்தல் வேண்டும். வன்முறையைத் தூண்டி விடக்கூடாது. அரசியல் சாசன முறையில் நாட்டுமக்கள் குரலை ஓங்கி ஒலிக்கவேண்டும். சிறிய அல்லது பெரிய வன்முறை என்று ஒன்று கிடையாது. ஆகையால் வன்முறையைத் தூண்டி மக்களைத் திசைதிருப்பி நாட்டின் வளர்ச்சியை நீண்டகாலத்துக்குக் கொண்டு செல்ல இயலாது என்பதையெல்லாம் தெள்ளத்தெளிவாகக் கூறினார்.

முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு ஜி.ஏ.நடேசன் உலக நன்மைக்கும் நமது பாரத நாட்டின் வளர்ச்சிக்கும் அரசு என்னென்ன செய்யவேண்டும் என்பதை எடுத்துரைக்க, பல முன்னணித் தலைவர்களிடம் கட்டுரைகளைப் பெற்று நூல்களாக வெளியிட்டார். நாட்டின் பிரச்சினைகளுக்கு சுதந்திரம் மட்டுமே தீர்வு என்பதைத் தன் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டவர் அவர்.

சீர்திருத்தச் சிந்தனையாளர், எழுத்தாளர், பதிப்பாளர், இதழாளர் போன்ற பல பரிணாமங்களில் தன் வாழக்கையை நாட்டுக்காக அர்ப்பணித்த ஜி.ஏ.நடேசன், ஜனவரி 10, 1949ம் ஆண்டு தனது 76ம் வயதில் மதராஸில் காலமானார்.

இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் ஜி.ஏ.நடேசனிடம் தொடர்பில் இல்லாத தேசிய தலைவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, தமிழகம் மற்றும் தேசிய அளவில் அனைத்து முக்கியத் தலைவர்களுடனும் தொடர்பில் இருந்தார். குறிப்பாக சுவாமி விவேகானந்தர், பாரதியார், காந்தி, ஜின்னா போன்ற பல தேசியத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, தேச நலனே தன் நலன் என்று அரும்பாடுபட்டு உழைத்த உத்தமர் ஜி.ஏ.நடேசன்.

Leave a Reply