கர்ணனை அணுகுதல்
(செப்டம்பர் 2020 இதழின் தொடர்ச்சி..)
வலம் குழுவினர் தொகுத்து அனுப்பியிருந்த கர்ணனைக் குறித்த சில கேள்விகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம். வில்லி பாரதம், ஜைமினி பாரதம் போன்ற படைப்புகளின் ஆசிரியர்கள் காரணத்தோடோ, காரணமின்றியோ செய்திருக்கும் மாறுதல்கள் உருவாக்கியிருக்கும் கட்டமைப்பே கர்ணனைப் பற்றி இன்று நிலவிவரும் பிம்பத்துக்கு அடிப்படையாக இருப்பதைப் பார்த்தோம். வியாச பாரதத்தில் கர்ணன் தோல்வியைத் தழுவும் தறுவாயில் ‘இவ்வளவு தர்மம் செய்தேனே! தர்மம் என்னைக் கைவிட்டுவிட்டதே’ என்று தர்ம நிந்தனை செய்கிறான். ‘தர்மம் தலை காக்கும்’ என்ற பாரம்பரியமான கருத்து இதில் அடிபட்டுப் போகிறதோ என்ற எண்ணத்தினாலோ என்னவோ (உண்மையில் வியாச பாரதத்தின் இந்தக் கட்டம் தர்மத்தின் மீதான அவநம்பிக்கை எதையும் ஊட்டவில்லை) வில்லிபுத்தூரார், கர்ணன் செய்த தர்மத்தின் பலன்களையெல்லாம் ஒரு பிராமணன் வடிவில் வந்து யாசித்துப் பெற்றதாக ஒரு கற்பனையை உள்ளே நுழைத்தார்.
என்றுகொண்டு அந்த அந்தணன் உரைப்ப
இருசெவிக்கு அமுதுஎனக் கேட்டு
வென்றிகொள் விசயன் வெங்கணையால்
மெய்தளர்ந்து இரதமேல் விழுவோன்
நன்றுஎன நகைத்து, தரத்தகு பொருள்நீ
நவில்கஎன நான்மறை யவனும்
ஒன்றிய படிநின் புண்ணியம் அனைத்தும்
உதவுக என்றலும் உளம் மகிழ்ந்தான்.
(பொருள்: இவ்வாறு அந்த அந்தணன் யாசிக்கவும், வெற்றி நிறைந்த அர்ஜுனன் எய்த அம்புகளால் உடல் தளர்ந்து தேரின்மேல் சாய்ந்த கர்ணன், உயிர் பிரிகின்ற இந்தத் தருணத்திலும் தான் தானம் செய்யக்கூடிய நற்பேறு கிடைத்ததை எண்ணி முறுவலித்து, ‘இந்த நிலையில் நான் தரக்கூடிய பொருள் எதுவோ அதைக் கேளுங்கள்’ என்று சொல்லவும், அந்த அந்தணன் ‘உன்னிடம் ஒன்றி விளங்கும்* புண்ணியம் அனைத்தையும் கொடுப்பாய்’ என்று கேட்டதும் உள்ளம் மகிழ்ந்தான். [*ஒன்றிய நின் புண்ணியம்: உன் ஆத்மாவோடு தோய்ந்துகிடக்கும் புண்ணியம்] (வில்லி பாரதம், கன்ன பருவம், பாடல் 330)
ஆவியோ நிலையில் கலங்கியது யாக்கை
அகத்ததோ புறத்ததோ அறியேன்
பாவியேன் வேண்டும் பொருளெலாம் நல்கும்
பக்குவம் தன்னில் வந்திலையால்
ஓவிலாது யான்செய் புண்ணியம் அனைத்தும்
உதவினேன் கொள்கநீ உனக்குப்
பூவில்வாழ் அயனும் நிகரிலன் என்றால்
புண்ணியம் இதனினும் பெரிதோ
(பொருள்: கர்ணன், ‘என்னுடைய உயிரோ நிலைகலங்கிக் கிடக்கிறது. இப்போது அது உடலுக்கு உள்ளேதான் இருக்கிறதா அல்லது வெளியேறிவிட்டதா என்றே என்னால் உணரமுடியவில்லை. பாவியாகிய நான், வேண்டும் அனைத்தையும் தரக்கூடிய நிலையில் இருந்தபோது நீ வராமல் போனாயே! நான் ஓயாமல் செய்த (தர்மத்தின் பலனான) புண்ணியம் அனைத்தையும் கொடுத்தேன். பெற்றுக் கொள்வாய். தாமரைப் பூவில் வீற்றிருந்து தவம்புரிகின்ற அந்தணனான பிரமன்கூட உனக்கு இணையாக மாட்டான். அப்படிப்பட்ட உனக்கு நான் கொடுக்கின்ற இந்த தானத்தைவிடவும் பெரிய புண்ணியம் ஏதேனும் இருக்க முடியுமோ’ என்றான்.)
இதற்கு அடுத்த பாடலில் கண்ணன், ‘புண்ணியத்தின் பலனை தாரைவார்த்துக்கொடு’ என்று கேட்க, அங்கே நீரில்லாத நிலையில் கர்ணன் தன் இதயத்தைத் துளைத்திருக்கும் அம்பைப் பிடுங்கி, தன் ரத்தத்தால் தாரை வார்த்துக் கொடுத்ததாக வில்லிபுத்தூராரின் கற்பனை விரிகிறது.
அப்படியானால், ‘இப்படி உயிர்பிரியும் நிலையில் இருக்கும் ஒருவனிடம் இறைவனே ஆனாலும் வந்து யாசகம் பெறுவது இரக்கமற்றதாகப் போகாதா’ என்ற கேள்வி எழும். ‘அதற்குத்தான் அவனுக்கு அடுத்தபிறவி இல்லை என்ற பலன் கிடைக்கப் போகிறதே’ என்று உரையாசிரியர்கள் சமாதானம் சொல்கிறார்கள். சரி, இருக்கட்டும். 333ம் பாடலில் அந்த பிராமணன் கர்ணனுக்கு வரம்கொடுக்கும்போது, கர்ணன், ‘என்னுடைய வினையின் பயனாக எனக்கு அடுத்த பிறவி நேருமானால், அப்போதும் என்னிடம் யாசிப்பவர்களுக்கு ‘இல்லை’ என்று சொல்லாமல் கொடுக்கின்ற நல்ல இதயத்தைக் கொடு’ என்று கேட்கிறானே, ‘உனக்கு அடுத்த பிறவியே இல்லை’ என்ற வரத்தைத் தருகிறேன் என்றல்லவா இந்தக் கண்ண வேதியன் சொல்லியிருக்கவேண்டும்? அதற்கு பதிலாக 334ம் பாடலில் “எத்தனைப் பிறவி எடுக்கினும் அவற்றுள் ஈகையும் செல்வமும் எய்தி முத்தியும் பெறுதி முடிவில்’ என்றல்லவா சொல்கிறான் என அதற்கும் மறுப்புச் சொல்லவேண்டிய நிலைமை ஏற்படத்தான் செய்கிறது. மாற்றங்களைச் செய்யும்போது, கம்பனைப்போல பிசிறில்லாமல் செய்யமுடியவில்லை என்பதை மறுக்க முடியவில்லையல்லவா!
ஆனால், வியாசருடைய மூலத்தில் கண்ணன் இப்படியெல்லாமா பேசினான்? கர்ணனுடைய தேர்ச்சக்கரம் பூமியில் புதையுண்டு போனபோது, அர்ஜுனனைப் பார்த்து, ‘அர்ஜுனா! பூமி விழுங்கிக்கொண்டிருக்கும் இந்தத் தேரை நான் தூக்கி நிறுத்தும் வரையில் என்மீது அம்பெய்யாமல் இருக்கும்படி உன்னை தர்மத்தின் பேரால் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கர்ணன் சொன்னபோது, அவனுக்குக் கண்ணன் சொன்ன மறுமொழியைப் பார்ப்போம். (வியாச பாரதத்திலேயேகூட, யுத்தத்துக்குக் கிளம்பும்போது நூற்றுக்கணக்கான சேமத்தேர்களை (Spare chariots) கொண்டு வந்திருந்த கர்ணன், பேசாமல் வேறொரு தேருக்கு மாறிக்கொள்ளாமல், பூமியில் அகப்பட்டுக்கொண்ட தேரைத் தூக்குவதில் ஏன் கவனத்தைச் செலுத்தினான் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.)
இது மிக முக்கியமான கட்டம் என்பதால் நாம் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புகளைப் பார்த்தாக வேண்டியிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் சொல்லியிருப்பதையும், கிஸாரி மோஹன் கங்கூலியின் மொழிபெயர்ப்பை அருள்செல்வப் பேரரசன் தமிழில் பெயர்த்திருக்கும் பகுதியில் இருப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டு அல்ல, (அருள்செல்லவப் பேரரசனுடைய தமிழ் மொழிபெயர்ப்பையும் சேர்த்து) மூன்று மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கின்ற வாய்ப்புக் கிடைக்கிறது. (இன்னொன்று. மஹாபாரதத்தின் Critical Edition ஆன BORI பதிப்பிலும் இந்த இரு மொழிபெயர்ப்புகளின் கருத்தே அமைந்திருக்கிறது. மாறுதலில்லை என்பதை இடப் பற்றாக்குறை காரணமாகச் சொல்ல நேர்கிறது.)
இப்போது இந்தக் கட்டத்தில் (வில்லி பாரதத்தில் கர்ணனிடம் ரத்தத்தால் தாரைவார்த்துத் தரப்பட்ட புண்ணியத்தைப் பெற்றுக்கொண்ட) கண்ணன் வியாச மூலத்தில் என்ன சொன்னான் என்பதைக் கும்பகோணம் பதிப்பின்படிக் காண்போம்:
“பிறகு மகாத்மாவான வாசுதேவர் (ராதேயனைப் பார்த்து) ‘ஏ! ராதா புத்திர! பாக்கியத்தினாலே இப்பொழுது தர்மத்தை நினைக்கிறாய். எப்பொழுதுமே பாண்டவர்கள் தர்மத்தில் கட்டுப்பட்டவர்கள். ஆதலால் இவர்களுக்கு அந்தத் தர்மர் விருத்தியைக் கொடுக்கிறது. (இவர்களுக்கு) விரோதிகளான அந்தக் கௌரவர்கள் தர் விநாசத்தை அடைந்தார்கள். நீசர்கள் பெரும்பான்மையாக வியசனத்தில் மூழ்கித் தெய்வத்தை நிந்திக்கின்றார்கள். தங்களுடைய பாவத்தை நிந்திக்கிறதில்லை. {இது கர்ணனுடைய தர்ம நிந்தனைக்குச் சொல்லப்படும் பதிலாக எடுத்துக்கொள்ளப்படலாம்.} கர்ண! நீயும் துரியோதனனும் துச்சாஸனனும் சுபலனுடைய குமாரனான சகுனியும் சேர்ந்து, ஒற்றை ஆடையை உடுத்தியிருந்த திரெளபதியைச் சபையின்கண் (பலாத்காரமாகக்) கொண்டு வந்தீர்களே, அப்பொழுது உனக்குத் தர்மமானது யாது காரணத்தால் ருசிக்கவில்லை? எப்பொழுது சூதாட்டத்தை அறியாதவரான யுதிஷ்டிர ராஜரை சபையில் அழைத்துவந்து அவரைத் தோல்வியடையச் செய்தீர்களோ, அப்பொழுது உனக்குத் தர்மம் எங்கே சென்றிருந்தது? கர்ணா! வனவாஸம் தீர்ந்து பதின்மூன்றாவது வருஷமும் சென்ற பின்னும், ராஜ்ஜியத்தைத் கொடுக்க மறுத்தபொழுது உனக்குத் தர்மம் எங்கே போய்விட்டது? அரசனான துரியோதனன் உன்னுடைய சம்மதத்தின்மேல் பீமசேனனை ஸர்ப்பங்களாலும் விஷங்கலந்த போஜனங்களாலும் கொல்ல முயன்றானன்றோ? அப்பொழுது உனக்குத் தர்மம் எங்கே போய்விட்டது? வாரணாவதத்தில் அரக்கு மாளிகையில் தூங்கிக்கொண்டிருந்த பொழுது பார்த்தர்களை (பாண்டவர்களை) நீங்கள் கொல்வதற்கு எண்ணங்கொண்டீர்களே; அப்பொழுது உனக்குத் தர்மம் எங்கே போய்விட்டது? கர்ண! ரஜஸ்வலையும் துச்சாஸனனுடைய வசத்தில் இருப்பவளுமான கிருஷ்ணையைப் (பாஞ்சாலியைப்) பார்த்து சபையில் உரக்கச் சிரித்தாயன்றோ, அப்பொழுது உன்னுடைய தர்மமமானது எங்கே சென்றது? ராதாநந்தன! முற்காலத்தில் அயோக்யர்களால் பீடிக்கப்பட்டவளும் குற்றமற்றவளுமான திரெளபதியை நீயும் பக்கத்தில் நின்று பார்த்தாயே, அப்பொழுது உன்னுடைய தர்மம் எங்கே சென்றுவிட்டது? ராதேய! யானைபோலச் செல்பவளான கிருஷ்ணையைப் பார்த்து, ‘கிருஷ்ணையே! பாண்டவர்கள் நாசமடைந்துவிட்டார்கள்; சாசுவதமான நரகத்தை அடைந்தார்கள். பேறு பர்த்தாவை வரித்துக்கொள்’ என்று நீ சொல்லிக்கொண்டு பக்கத்திலிருந்து பார்த்தாயே, அப்பொழுது உன்னுடைய தர்மமானது எங்கே சென்றுவிட்டது? கர்ணா! எப்பொழுது நீ ராஜ்யத்தில் பேராசையுள்ளவனாகச் சகுனியை அடுத்துப் பாண்டவர்களைச் சூதாடுவதற்காக மீண்டும் அழைத்தாயோ அப்பொழுது உனக்குத் தர்மம் எங்கே போய்விட்டது? அநேக மகாரதர்கள் யுத்தத்தில், பாலனான அவிமன்யுவைச் சூழ்ந்துகொண்டு ரணகளத்தில் கொன்றார்களே, அப்பொழுது உன்னுடைய தர்மம் எங்கே போயிற்று? இந்தத் தர்மமானது அந்த விஷயங்களில் இல்லாமற் போமாகில் எல்லா விதத்தினாலும் வீணே வாய் வறட்சியை உண்டு பண்ணுகிற பேச்சினால் என்ன பயன்? ஸூத! இப்பொழுது இந்த யுத்தரங்கத்தில் தர்மத்தை விட்டுவிலகாத காரியங்களையே செய். அப்படியிருந்தாலும், உயிரோடு நீ விடுபட மாட்டாய். நளன், புஷ்கரனால் பாச்சிகைகளால் ஜயிக்கப்பட்டான்; மீண்டும் வீர்யத்தினால் கீர்த்தியையும் ராஜ்யத்தையும் அடைந்தான். அவ்வாறே, பேராசை இல்லாதவர்களான பாண்டவர்கள் எல்லாருடனும் ஒன்று சேர்ந்தவர்களாகிக் கைவன்மையினால் (ராஜ்யத்தை) அடைய வந்துவிட்டார்கள். அவர்கள் சோமகர்களோடு கூடி, யுத்த்தில் அதிக விருத்தி அடைந்திருக்கின்ற பகைவர்களைக் கொன்று, ராஜ்ஜியத்தை அடையப் போகிறார்கள். எப்பொழுதும் தர்மத்தினால் நான்கு பக்கக்கத்திலும் பாதுகாக்கப்பட்டிருகிற புருஷசிரேஷ்டர்களான பாண்டவர்களால் தார்த்ராஷ்டிரர்கள் அவ்வாறு விநாசத்தை அடைவார்கள்’ என்று கூறினார்.”
வில்லி பாரதத்தில் ரத்தத்தால் தர்மத்தின் பலனை தாரை வார்த்துக்கொடுத்த கர்ணன் இதற்கு என்ன சொன்னான்? வியாச பாரதம் சொல்கிறது: “பாரதரே! வாசுதேவரால் அப்பொழுது இவ்வாறு சொல்லப்பட்ட கர்ணன், வெட்கத்தினால் தலைகுனிந்தவனாகி யாதொரு மறுமொழியையும் உரைக்கவில்லை. பாரதரே! மிக்க வேகமுள்ள பராக்கிரமத்துடன் கூடின கர்ணன், கோபத்தினான் உதடுகள் நன்கு துடிக்க, வில்லைக் கையில் எடுத்துப் பார்த்தனை எதிர்த்துப் போர்புரிந்தான்.” (“Sanjaya continued, ‘Thus addressed, O Bharata, by Vasudeva, Karna hung down his head in shame and gave no answer. With lips quivering in rage, he raised his bow, O Bharata, and, being endued with great energy and prowess, he continued to fight with Partha. என்பது கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு). (கும்பகோணம் பதிப்பு, கர்ண பர்வம், அத்தியாயம் 98, பக்கம் 442)
இப்போது அருட்செல்வப் பேரரசன், கிஸாரி மோகன் கங்கூலியைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பதோடு ஒப்பிடுவோம். இவர் தமிழில் தரும்போது ஸ்லோக எண்களையும் சேர்த்துத் தந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஓரிரு வரிகளில் மற்ற பதிப்புகளையும் ஒப்பிட்டுச் சொல்கிறார்.
நாம் இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பை எடுத்துக்கொள்வோம். கண்ணன் சொல்லும் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் எண்வரிசை கொடுத்து, இவையெல்லாம் கண்ணன் ஏதோ சகட்டுமேனிக்கு அடித்துவிடும் பேச்சுகளா, அல்லது பாரதத்தின் அந்தந்த பர்வத்தில் இந்தப் பேச்சுக்கு அகச்சான்று இருக்கிறதா என்று ஒப்பிட்டுப் பார்ப்போம். அது அடுத்த இதழில்.