Posted on Leave a comment

தேசியக் கல்விக் கொள்கை: புதிய பாய்ச்சலை நோக்கி.. | கோலாகல ஸ்ரீநிவாஸ்

இந்தியா மீதான உலகின் பார்வையை மாற்றுவதில், தேசியக் கல்விக் கொள்கை 2020 என்ன பங்கு வகிக்கும் என்பது குறித்து அலசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

இந்தியாவின் மீதான உலகின் பார்வை என்பது என்ன? அது எதைச் சார்ந்தது?

உதாரணத்துக்கு, அமெரிக்கா மீதான இந்தியாவின் பார்வை என்பது என்ன? அது, அமெரிக்காவின் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, அங்கு நமக்குள்ள வேலைவாய்ப்பு – இவை அனைத்தையும் சார்ந்தது

அதுபோலவே, இந்தியாவின் மீதான உலகின் பார்வை என்பதும் இந்தியாவின் தொழில் மற்றும் பொருளாதாரம் சார்ந்தே இருக்கும்.

ஒரு காலத்தில் இந்தியாவைப் பற்றிய மேற்குலகின் பார்வை நமது வறுமை சார்ந்ததாக இருந்தது.

இந்தியாவின் கலாசாரம் செழுமையாக இருந்தாலும், அதன் பொருளாதாரம் ஏழ்மையாக இருந்ததுதான் அவர்கள் கண்ணில்பட்டது.

மகுடி ஊதும் பாம்பாட்டிகளும் மந்திரவாதிகளும் திறந்தவெளி கழிப்பிடங்களும் உள்ள தேசமாக இந்தியா விவரிக்கப்பட்டது. இத்தகைய விவரணைகள், வறுமை கோலோச்சும் ஆப்பிரிக்க நாடுகளோடு இந்தியாவை வரிசைப்படுத்தின.

இன்று இத்தகைய மோசமான பார்வையிலிருந்து இந்தியா விடுபட்டிருக்கிறது.

ஒருமுறை பிரபல பத்திரிகையாளர் தாமஸ் ஃப்ரீட்மன், நியூயார்க் டைம்ஸில் இவ்வாறு கூறினார், “நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது, அம்மா சொல்வார் – சாப்பிடும்போது, எந்தக் காய்கறியையும் வீணடிக்காதே. பட்டினியில் வாடும் இந்தியக் குழந்தைகளை நினைத்துப் பார். ஒழுங்காகச் சாப்பிடு என்பார். நான் இப்போது என் குழந்தைகளுக்குச் சொல்கிறேன் – ஒழுங்காக வீட்டுப் பாடங்களை முடியுங்கள். அவ்வாறு முடிக்கவில்லையெனில், இந்தியக் குழந்தைகளை நினைத்துப் பாருங்கள், அவர்கள் உங்களை பட்டினி கிடக்க விட்டுவிடுவார்கள், ஜாக்கிரதை.”

கொஞ்சம் அசந்தாலும், அமெரிக்கக் குழந்தைகளின் வாய்ப்பைப் பறித்துக்கொள்ள இந்தியக் குழந்தைகள் காத்திருக்கின்றன என்பதை இந்தக் கூற்று புலப்படுத்துகிறது.

‘வறிய நாடு’ என்ற நிலையிலிருந்து, ‘போட்டியிடும் நாடு’ என்ற நிலைக்கு இந்தியா வந்து சேர்ந்திருக்கிறது. இதைத்தான் ஃப்ரீட்மன் உறுதிப்படுத்துகிறார்.

சுதந்திரம் பெற்றதிலிருந்து 90கள் வரை வறிய நாடு என்ற பிம்பம் இருந்தது. 90களுக்குப் பிறகு, போட்டியிடும் நாடு என்ற இடத்தை நோக்கி இந்தியா நகர்ந்தது. நடைமுறைக்கு ஒவ்வாத சோஷலிசத்துக்கு விடை கொடுத்ததும்; தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டதும் இதற்குக் காரணம்.

இனி, ‘போட்டியிடும் நாடு’ என்பதிலிருந்து ‘வளர்ந்த நாடு’ என்கிற அடுத்த கட்டத்துக்கு ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்த வேண்டியுள்ளது.

அத்தகைய பாய்ச்சலுக்கு இந்தியாவை தயார் செய்யவும் ஆற்றுப்படுத்தவும் ஒரு புரட்சிகரமான கல்வித் திட்டம் தேவை.

அந்தக் கல்வித் திட்டம்தான் ‘தேசியக் கல்வித் திட்டம் 2020’.

தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படை

தேசியக் கல்விக் கொள்கை 2020, இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது.

  1. 21-ம் நூற்றாண்டு முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்ளும் விதத்தில் இந்திய மாணவர்களை தயார் செய்வது1.
  2. இந்திய அடையாளங்களை விட்டுக்கொடுக்காமல் – இந்தியத் தன்மையை இழக்காமல் அதைச் செய்வது.

21-ம் நூற்றாண்டின் முதல் கல்விக் கொள்கையான தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஜூலை 29-ம் தேதி மத்திய கேபினட் ஒப்புதல் தந்தது. உடனே, பாரதப் பிரதமர் மோடி தனது ட்வீட்டில் ‘துடிப்புமிக்க அறிவுக் கேந்திரமாக இந்தியாவை இந்தக் கொள்கை மாற்றும்’ (This will transform India into a vibrant knowledge hub) என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இக்கொள்கையின்படி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கல்வித் துறை அமைச்சகம் என்று அழைக்கப்படும். இனி கல்விக்கு எத்தகைய முக்கியத்துவம் இருக்கும் என்பதை இந்த மாற்றம் சுட்டுகிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 6% அளவுக்கு கல்விக்காகச் செலவிடப்பட வேண்டும் என இந்தக் கொள்கை வலியுறுத்துகிறது2.

இந்தியாவில் 2014 – 15 ஆண்டில் 2.8 சதவீதமும் 2019-2020 ஆண்டில் 3.1 சதவீதமும் (ரூ. 5.6 லட்சம் கோடி) கல்விக்காகச் செலவிடப்பட்டன. கல்வியின் பொருட்டு, தலா ஒரு மாணவருக்கு ஒவ்வொரு நாட்டு அரசும் எவ்வளவு செலவழிக்கிறது என்று பார்த்தால் – அந்தத் தரவரிசையில் 62ம் இடத்தில் இந்தியா இருக்கிறது3.

எதிர்காலத்தில் கல்வித் துறையில் பெருமளவு முதலீடு கொட்டப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை தேசியக் கல்விக் கொள்கை 2020 கொடுக்கிறது.

ஓர் ஒப்பீடு

சர்வதேச தரத்திலான கல்விக் கொள்கை தேவைப்படுவது ஏன்? இதைப் புரிந்துகொள்ள ஓர் ஒப்பீட்டை முன்வைக்கிறேன்.

பிற நாடுகளில் பணி புரியும் மொத்த நபர்களில், முறைப்படி தகுதி பெற்றவர்களின் (skilled workers) எண்ணிக்கை வருமாறு4: அமெரிக்கா – 52%. இங்கிலாந்து – 68%, ஜெர்மனி – 75%. தென் கொரியா – 96%, சீனா – 24%, இந்தியா – 4%.

உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட இந்தியாவில் தகுதிபெற்ற பணியாளர்கள் 4 சதவீதம் பேர்தான் என்பது எவ்வளவு மோசமான விஷயம்! இது எதைக் காட்டுகிறது? கோடானுகோடி இளைஞர்கள் உயர் கல்விக்கும் தொழில் கல்விக்கும் வெளியே வைக்கப்பட்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. இதன் பொருள், இந்தியாவின் இளையோர் சக்தி இன்னமும் பயன்படுத்தப்படவே இல்லை என்பதுதான்.

தற்போது, 19 – 24 வயதுக்குட்பட்டவர்களில் தொழில்கல்வி பெறுவோர் எண்ணிக்கை 5 சதவீதத்துக்கும் குறைவு என்பதை இந்தக் கல்விக் கொள்கை5 சுட்டிக் காட்டுகிறது.

எனவே, சுயசார்பு இந்தியா உருவாக வேண்டுமானால் இரண்டு முன் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டாக வேண்டும்.

  1. உயர் கல்வியும் தொழிற் கல்வியும் பரவலாக்கப்பட வேண்டும். 2. அதேநேரம் அதன் தரம் நீர்த்துப்போகக் கூடாது.

உயர் கல்வி பரவலாக்கம்

மேற்கண்ட இரண்டு முன் நிபந்தனைகளையும் தேசியக் கல்விக் கொள்கை 2020 உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. எனவேதான், உயர் கல்வியில் மொத்தப் பதிவு விகிதத்தை (Gross Enrolment Ratio in higher education) அதிகரிக்கும் விதமாக இலக்கை நிர்ணயிக்கிறது.

தற்போது 51,649 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 3.74 கோடி மாணவர்கள் உயர் கல்வி பெறுகின்றனர். இவர்களின் Enrolment – சேர்க்கை சதவீதம் 26.3%6. தொழிற் கல்வியையும் உள்ளடக்கிய உயர் கல்வி விகிதத்தை 26.3 சதவீதத்திலிருந்து, 2035ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்த வேண்டுமென தேசியக் கல்விக் கொள்கை இலக்கு நிர்ணயிக்கிறது7.

தேசியக் கல்விக் கொள்கை 2020 மீதான தேசிய விவாதம் ஆகஸ்ட் 27ம் தேதி நடைபெற்றது. அப்போது, அதில் பங்கேற்றுப் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், “2035ம் ஆண்டுக்குள் உயர் கல்வி பெறுவோரின் மொத்தப் பதிவு (gross enrollment rate) 50 சதவீதமாக இருக்க வேண்டுமென்பது தேசியக் கல்விக் கொள்கையின் குறிக்கோளாக உள்ளது. இதனை சாத்தியப்படுத்த 2035ம் ஆண்டுக்குள் உயர் கல்வித் துறையில் மூன்றரைக் கோடி கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்”8 என்றார்.

மூன்றரைக் கோடி கூடுதல் கல்வியிடங்களைச் செயற்கையாக உருவாக்கவோ – உற்பத்தி செய்யவோ முடியாது. கூடுதல் இடங்களை உருவாக்குவதற்கேற்ப கூடுதலான கட்டமைப்புகள் உருவாக்க வேண்டும். எனவேதான், 2030ம் ஆண்டுக்குள் மாவட்டம்தோறும் பல்துறைப் பல்கலைக்கழகங்கள் அல்லது அதை நிகர்த்த கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும் என்கிறது புதிய கல்விக் கொள்கை 20209.

அதாவது, 2035க்குள் 50% மாணவர்கள் உயர் கல்வி வலயத்துக்குள் வந்தாக வேண்டும். அதைச் சாத்தியப்படுத்த மூன்றரைக் கோடி கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும். இந்த கூடுதல் இடங்களை உருவாக்க மாவட்டம்தோறும் பல்துறைப் பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் 2030ம் ஆண்டுக்குள் உருவாக்கப்படும் – இதுதான் உயர்கல்வியைப் பரவலாக்கும் சங்கிலித் தொடர் திட்டமாகும். இந்தக் கல்விக் கொள்கையின் பெரும் சிறப்பே, அது ஒரு செயல் திட்டமாகவும் (Action plan) இருப்பதுதான்.

பல்துறைப் பல்கலைக்கழகங்கள்

இன்றைய இந்தியக் கல்வித் துறையில் ஒரு துறைக் கல்வி நிறுவனங்களே பெரும்பாலும் கோலோச்சுகின்றன. பல்துறை பல்கலைக்கழகங்களோ கல்லூரிகளோ மிகக் குறைவு. இவ்விதமான தனித்த அறிவுத் துறைகளை ஒருங்கிணைத்து அறிவுத் தொகுதிகளாக (knowledge clusters) மாற்றுவதன் மூலம் ஒவ்வொரு துறை வளர்ச்சியையும் மற்ற துறைகளுக்கும் பயனுள்ள ஒன்றாக மாற்றிக்கொள்ள முடியும். அறிவார்ந்த கொடுக்கல் – வாங்கல் சுலபமாக சாத்தியமாகும். இத்தகைய முயற்சிகள் இந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளன. ஆனால், பரவலாக இல்லை. உதாரணமாக, சென்னை ஐஐடியில் உள்ள கலைத் துறையை (Humanity Dept.,) கூறலாம். இந்த துறை ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டத்தை (Integrated M.A.) வழங்குகிறது. சர்வதேசத் தரத்தில் அமைந்துள்ள இந்த துறையில் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒரு ஐரோப்பிய மொழியும் போதிக்கப்படுகிறது. இதனுடைய பாடத்திட்டம் வழக்கமான எந்தப் பல்கலைக்கழகத்தின் கலைப்புலத்தை விடவும் மேம்பட்டதாக உள்ளது. இது எப்படிச் சாத்தியமாயிற்று? காரணம், ஐஐடி வளாகத்துக்குள் கலைப்புலம் நுழைகிறபோதே, அதற்கான பாடத்திட்டம் சர்வதேச தரத்திலானதாக மாறுகிறது. கற்பித்தல் முறையிலிருந்து கற்பிப்போர் வரை அனைத்தும் ‘ஐஐடியின் தரம்’ என்பதன் கீழ் வருகிறது. எனவே, அது கலைப்புலமாக இருந்தாலும், தனித்துவத்துடன் திகழ்கிறது. எங்கோ ஓர் ஐஐடியில் நிகழ்ந்திருக்கும் இவ்விதமான மாற்றத்தை இந்தியா முழுதும் பரவலாக்க தேசியக் கல்விக் கொள்கை 2020 முயற்சி செய்கிறது.

இணையவழிக் கல்வி

உயர் கல்விப் பரவலாக்கத்தின் ஒரு பகுதியாக இணையவழிக் கல்வி முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு 230 பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்படவுள்ளன. தரத்தில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக இரண்டு முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

  • இணையவழிக் கல்வி வழங்க அனுமதிக்கப்படும் நிறுவனங்கள், NAAC 3.01 (National Assessment and Accreditation Council) அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
  • தரவரிசையில் (National Institutional Ranking Framework – NIRF) தேசிய அளவில் முதல் 100 இடங்களுக்குள் இருக்க வேண்டும். இந்தக் கல்வி நிறுவனங்கள் மட்டுமே இணையவழிக் கல்வி தர அனுமதிக்கப்படும்10.

ஆய்வுகளுக்கான முக்கியத்துவம்

இந்தியாவில் ஆய்வுகள் மற்றும் புத்தாக்கத்துக்கான முதலீடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.69 சதவீதம் என்ற அளவுக்கே உள்ளது. இது அமெரிக்காவில் 2.8%, தென் கொரியாவில் 4.2%, இஸ்ரேலில் 4.3% என்ற அளவில் உள்ளன11.

எனவே, ஆராய்ச்சிகளை பரவலாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் தேசியக் கல்விக் கொள்கை 2020 முன்னுரிமை கொடுக்கிறது. ஆராய்ச்சிகளக்கென்றே தனி தேசிய ஆய்வு நிறுவனம் (National Research Foundation – NRF) அமைக்கப்படும் என்று உத்தரவாதம் தருகிறது.12

முன்னுரிமை தரப்பட வேண்டிய ஆய்வுத் துறைகளையும் ஆய்வுக்கான கருப்பொருளையும் (theme) கண்டறிவது – அவற்றை ஆய்வு நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பது ஆகியவை இந்த நிறுவனத்தின் நோக்கமாக இருக்கும். இதன் மூலம் இரண்டு ஆய்வு நிறுவனங்கள் ஒரே விதமான ஆய்வுப் பணியை மேற்கொள்வது தடுக்கப்படும். நாட்டில் உள்ள ஆய்வு நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு அமைப்பாக (Nodal agent) தேசிய ஆய்வு நிறுவனம் செயல்படும்.

படித்த காலத்துக்கு முழு மரியாதை

ஒரு மாணவர் படிப்புக்காகச் செலவிட்ட ஒவ்வோர் ஆண்டும் அந்த மாணவரின் வாழ்க்கையில் வரவு வைக்கப்படுகிறது. இது தேசியக் கல்விக் கொள்கை 2020ன் புரட்சிகர அம்சமாகும்13.

உதாரணமாக ஒரு மாணவர் 4 ஆண்டு பொறியியல் கல்வி பயில்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர், குடும்பச் சூழல் காரணமாக ஓராண்டு முடித்த நிலையில் கல்லூரியை விட்டு வெளியேறினால், அவருக்கு அடிப்படை சான்றிதழ் (basic certificate) வழங்கப்படும். இரண்டாம் ஆண்டில் விலகினால், பட்டயப் படிப்புக்கான (Diploma) சான்றிதழ் வழங்கப்படும். மூன்றாண்டு முடித்திருந்தால் அது பட்டப்படிப்பாகவும் – முழுமையாக முடித்தால் அது ஹானர்ஸ் பட்டப் படிப்பாகவும் கருதப்படும். இதனை தற்போதுள்ள கல்வி முறையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். ஏதேனும் ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால், ஒரு மாணவர் மூன்றாமாண்டில் விலகுகிறார் என்றால், அவரது கல்வித் தகுதி பிளஸ் 2 என்றாகி விடும். படித்த 3 ஆண்டுகளும் வீணாகிவிடும். இந்த அவல நிலைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. இதன்மூலம், கல்விக்காக ஒரு மாணவர் செலவழித்த எந்தக் காலப் பகுதியும் வீணாவதில்லை. மாணவரும் – அவர் கல்விக்காக செலவழித்த காலமும் முரணின்றி இணைக்கப்படுகிறது.

பாடத் தேர்வில் சுதந்திரம்

இன்ன படிப்பைப் படிக்கும் மாணவர்கள் இன்ன படிப்புகளைப் படிக்க முடியாது என்கிற வரையறைக்கு விடை கொடுக்கப்படுகிறது. இயற்பியல் படிக்கும் மாணவர் ஒருவர் விருப்பப் பாடமாக இசையைக் கூட தேர்வு செய்யலாம் என்கிறது தேசியக் கல்விக் கொள்கை 2020.

உலகக் கல்வி நிறுவனங்களின் வருகை

உலகத் தர வரிசையில் முதல் 100 இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள், இந்தியாவில் கல்வி சேவையைத் தொடங்க இந்தக் கல்விக் கொள்கை அனுமதி அளிக்கிறது14.

எதிர்காலத்தில், அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகம் இந்தியாவில் தன் கல்வி சேவையைத் தொடங்கலாம். இதனால் இரண்டு பயன்கள் ஏற்படும்.

  1. இத்தகைய பல்கலைக்கழங்களில் சேருவதற்காக மாணவர்கள் வெளிநாடு செல்லத் தேவையில்லை. எனவே, பெற்றோர்களுக்கு செலவு குறையும்.
  2. உள்நாட்டுக் கல்வி நிறுவனங்களிடையே பெரும் போட்டியை இவை தொடங்கிவைப்பதால், இங்குள்ள கல்வி நிறுவனங்கள் தங்கள் தரத்தை மேம்படுத்தியாக வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படும்..

மாற்றத்தை நோக்கி பள்ளிக் கல்வி

இந்தியாவின் மீதான உலகின் பார்வையை மாற்றவல்ல கல்வியை திடீரென நடுவிலிருந்து ஆரம்பிக்க முடியாது. மிகத் தரமான உயர் கல்விக்குத் திட்டமிட்டால், அதை தொடக்கக் கல்வியிலிருந்தே தொடங்க வேண்டும்.

இதன் முதல்படியாக 100 சதவீத பள்ளிக் கல்வி சேர்க்கையை கட்டாயமாக்குகிறது இந்தக் கொள்கை. பள்ளிக்கு முந்தைய பருவத்திலிருந்து பள்ளி இறுதி வகுப்புக்குள் 100 சதவீத சேர்க்கையை 2030-க்குள் உறுதிப்படுத்த வேண்டும் என்கிறது இக்கொள்கை. (100 percent Gross Enrolment Ratio in preschool to secondary level by 2030)15.

தொழிற் கல்விக்கான அறிமுகத்தை பள்ளிக் கல்வியிலிருந்தே ஆற்றுப்படுத்துகிறது இக்கொள்கை16. ஆறாம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரை தொழிற் கல்வி கற்பிக்கப்படும். பல்வேறு தொழில்களின் அடிப்படைக் கருத்தமைவுகள் (concepts) பயிற்றுவிக்கப்படும். படிக்கும் காலத்திலேயே உழைப்பின் மேன்மை குழந்தைகளுக்குப் பிடிபடும். மேலும், சிறு வயதிலேயே குழந்தையின் ஆர்வம் எந்த திசையில் உள்ளது என்பதை மாணவர்களும் பெற்றோர்களும் அனுமானிக்க முடியும்.

தற்போதுள்ள கல்வித் திட்டத்தில் இருக்கக் கூடிய பாடத்திட்டம் சார்ந்த – பாடத்திட்டம் சாராத அத்தனைவிதமான வேறுபாடுகளையும் இந்தக் கல்விக் கொள்கை களைகிறது. There will be no hard separation among ‘curricular’, ‘extra-curricular’, or ‘co-curricular’ areas, among ‘arts’, ‘humanities’, and ‘sciences’, or between ‘vocational’ or ‘academic’ streams என்கிறது இந்தக் கல்விக்கொள்கை17. அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான கல்வியை முன்வைக்கிறது.

பள்ளி இறுதித் தேர்வு இரண்டு முறை நடத்தப்படும். மாணவர்கள் இரண்டு தேர்வுகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ அதுவே அவரது மதிப்பெண்ணாக எடுத்துக் கொள்ளப்படும். மாணவர்களுக்கு அதிக சுதந்திரத்தையும் அதிக வாய்ப்புகளையும் வழங்குவதால், “இந்தக் கொள்கை மிகவும் முக்கியமானது. ஏனெனில், இது மாணவர்களை மையமாகக் கொண்டிருக்கிறது” என்கிறார் சிம்பயோசிஸ் முதன்மை இயக்குநர் வித்யா யெரவ்டேகர்18.

ஆசிரியர்கள் பற்றி

கல்விக் கொள்கையின் வெற்றி ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது. எனவே, ஆசிரியர்கள் தொடர்பான பல்வேறு சீர்திருத்தங்களை அது முன்வைக்கிறது.

நீதியரசர் ஜே.எஸ். வர்மா கமிஷன் (2012) கூறியதன்படி, “பெரும்பாலான ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் – கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை – பட்டங்களை விற்றுக் கொண்டிருக்கின்றன”19. எனவே, தனியாக செயல்படும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளை இழுத்து மூடிவிட்டு, அவற்றை 2030ம் ஆண்டுக்குள் பல்துறைக் கல்லூரிகள் அல்லது பல்துறைப் பல்கலைக்கழகங்களின் ஒரு பகுதியாக கொண்டுவர வகை செய்கிறது இந்தக் கல்விக் கொள்கை20. 2030க்குள் ஆசிரியர்களின் குறைந்தபட்ச கல்வித் தகுதியே பிஎட் என்று இருக்கும்21. முப்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற விகிதம் (30:1) நாடு முழுதும் கடைப்பிடிக்கப்படும். பழங்குடியினர், சிறுபான்மையினர் உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தும் பொருட்டு, மாணவர் – ஆசிரியர் விகிதம் 25:1 ஆக இருக்கும். இதன்மூலம், மந்தைபோல் வகுப்புகளை நடத்தும் தனியார்ப் பள்ளிகள் ஒரு கட்டுக்குள் கொண்டுவரப்படும். மேலும், ஆசியர்களுக்கான வேலைவாய்ப்பு பெருகும்22.

மும்மொழித் திட்டம் நாடு முழுதும் கடைப்பிடிக்கப்படுவதால், ஒரு மாநில மொழியில் ஆசிரியர் பயிற்சி பெற்ற ஒருவருக்கு நாடு முழுதும் வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது. உதாரணமாக, பிகாரிலோ உத்தரப்பிரதேசத்திலோ தமிழாசிரியர் தேவைப்படுவார். தெலுங்கு ஆசிரியருக்கான தேவை தமிழகத்தில் இருக்கலாம்.

தொகுத்துப் பார்த்தால்..

பள்ளியில் தொடங்கி உயர் கல்வி வரை தேசியக் கல்விக் கொள்கை 2020 முன்வைக்கும் கீழ்க்கண்ட அம்சங்களைத் தொகுத்துப் பார்த்தால், கல்விப் பரவலாக்கத்தின் திசை புலப்படும்.

  • பள்ளி வளாகத்துக்கு வெளியே இதுவரை வைக்கப்பட்டிருந்த 3 – 6 வயதுக் குழந்தைகள் முழுமையாகப் பள்ளிக் கல்விக்குள் கொண்டுவரப்படுகிறார்கள். ஏனெனில், தேசியக் கல்விக் கொள்கை 2020ன் படி பள்ளிக் கல்வி என்பது மூன்று வயதிலேயே ஆரம்பமாகி விடுகிறது.
  • 2030க்குள் பள்ளிக்கு முந்தைய பருவத்திலிருந்து பள்ளி இறுதி வகுப்புக்குள் 100 சதவீத சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும் என்கிறது தேசியக் கல்விக் கொள்கை.
  • உயர்கல்வியில் 2035க்குள் மொத்த சேர்க்கை விகிதம் 50%க்கு குறையக் கூடாது என்கிறது கல்விக் கொள்கை.

இவையனைத்தும் முழுமையாக நடக்கும்பட்சத்தில், 2030-35க்குள் இந்தியாவில் பள்ளிக் கல்வி பெற்றவர்கள் எண்ணிக்கை 100 சதவீதமாகவும் – உயர் கல்வி பெற்றவர்கள் எண்ணிக்கை குறைந்தது 50 சதவீதமாகவும் இருக்கும். அத்தகைய ஒரு சூழலில் அறிவாற்றலின் வல்லரசாக (Knowledge superpower) இந்தியா விளங்கும். எனவேதான், “தேசியக் கல்விக் கொள்கை 2020, இந்தியாவை உலகின் அறிவாற்றல் வல்லரசாக மாற்றும்” என்று ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலை துணைவேந்தர் நஜ்மா அக்தர் குறிப்பிட்டார். (குடியுரிமை சட்டத் திருத்த மசோதா எதிர்ப்புப் போராட்டத்தின்போது, இவர் சர்ச்சைக்குரிய விதத்தில் நடந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது)

அறிவாற்றல் வல்லரசாக இந்தியா மாறும்போது, வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை நோக்கி இந்தியா தானாகவே நகர்ந்திருக்கும்.

‘வல்லரசு’ என்ற பதத்தை ராணுவ வலிமை சார்ந்தே அனைவரும் புரிந்துகொள்ளும்போது, ‘அறிவாற்றல்’ சார்ந்து புரிந்துகொண்டிருப்பது முற்போக்கான ஒன்றாகும்.

*

உதவிய குறிப்புகள்:

1. National Education Policy 2020 – 9.1.1 (page 33)
2. National Education Policy 2020 – 26.2 (page 61)
3. NEP 2020: Public investment in education to rise to 6 per cent of the GDP in the next few years / Parvathi Benu / edexlive.com/July 29, 2020.
4. Explained: Gap between Skill India goals and current status / Financialexpress.com / March 19, 2019).
5. National Education Policy 2020 – 16.1 (page 43)
6. All India Survey on Higher Education (AISHE) by MHRD.
7. National Education Policy 2020 – 10.8 (page 35).
8. 3.5 crore seats will be added in higher education institutions by 2035: Union minister (Hindustan Times / Aug. 27 / 2020)
9. National Education Policy 2020 – 9.3 (page 34)
10. “Soon, online degree courses at 230 universities” – Manash Pratim Gohain / timesofindia.indiatimes.com / Jun 21, 2020.
11. National Education Policy 2020 – 17.3 (page 45)
12. National Education Policy 2020 – 9.3 (f) – page 34)
13. National Education Policy 2020 – 11.9 (page 37).
14. National Education Policy 2020 – 12.8 (page 39)
15. National Education Policy 2020 – 3.1 (page 10)
16. National Education Policy 2020 – 4.26 (page 16)
17. National Education Policy 2020 – 4.9 (page 13)
18 & 23. Reviewadda.com / Aug. 28, 2020.
19 & 20& 21 National Education Policy 2020 – 15.2, 15.3, 15.5 (p. 42)
22. National Education Policy 2020 – 2.3 (page 9)

குறிப்பு: Centre for South Indian Studies, Chennai எனும் அமைப்பு, ‘தேசியக் கல்விக் கொள்கை 2020’ குறித்து இணையவழிக் கருத்தரங்கை 2020 அக்டோபர் 5 முதல் 9ம் தேதி வரை நடத்தியது. அதில், 9ம் தேதி கருத்தரங்கில் பங்கேற்று ‘தேசியக் கல்விக் கொள்கையால் ஏற்படும் உலக நாடுகளின் பார்வை’ எனும் தலைப்பில் நான் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்.

Leave a Reply