Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 31 | சுப்பு

கிரேசி மோகன்

ரமணியின் அச்சகத்தில் பணி செய்து கொண்டிருந்த காலத்தில் ஒரு செய்தி என்னைத் தாக்கியது (27.03.1984). ராஷ்டீரிய ஸ்வயம் சேவக சங்கத்தைச் சேர்ந்த, தொடக்கத்தில் என்னைப் பண்படுத்தி வழிநடத்திய பத்துஜி (பத்மநாபன்) கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பதுதான் அந்தச் செய்தி. அது என்னை வெகுவாகப் பாதித்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு சகஜநிலைக்கு வருவதற்கு சில நாட்கள் ஆயின.

*

அச்சக வேலை சில புதிய அனுபவங்களுக்குத் தொடக்கமாக இருந்தது. நான் ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்தவன் என்பதால் அங்கே சங்கத்தைச் சார்ந்தவர்கள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். மேனேஜராக இருந்த இரா.ஜவஹர் மார்க்சிஸ்ட் கட்சிச் சார்புடையவர். எனவே தோழர்களின் வருகையும் உண்டு. சித்தாந்த பரிமாற்றங்களுக்கும், சமயத்தில் மோதல்களுக்கும் அது மேடையாக இருந்தது.

வைகறை வாணன் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். திருவையாறு தமிழ்க் கல்லூரியில் பயின்றவர். கொஞ்சம் பெரியாரிஸ்ட், கொஞ்சம் தனித் தமிழ் என்று கலவையாக இருந்தது அவருடைய அரசியல் கொள்கை. எனக்கும் அவருக்கும் அவ்வப்போது நடக்கும் உரையாடல்கள் எப்போது அரணாக இருக்கும், எப்போது முரணாக இருக்கும் என்பதை வகுத்துச் சொல்லமுடியாது.

ஒருநாள், சென்னையில் நடக்கிற ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்கு நான் போகவில்லையா என்று அவர் கேட்டார்.

என்ன விசேஷம் என்று நான் கேட்டேன்.

“கோபாலய்யர் பேசுகிறார்” என்பது அவருடைய பதில்.

ஏதோ எரிச்சலில் இருந்த நான், அவர் சொல்வதைச் சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல் “பேசறது அய்யர். கேட்கப் போறதும் அய்யர். இதில் உங்களுக்கு என்ன ஆர்வம். நீங்கள்தான் எப்போப் பார்த்தாலும் அய்யர் என்று எதிர்த்துக் கொண்டு இருக்கிறீர்களே” எனப் படபடவென்று சொல்லிவிட்டேன்.

வைகறை நிதானத்தை இழக்காமல் சொன்ன பதில் இதுதான்: “எல்லா அய்யரும் கோபாலய்யர் மாதிரி இருந்துட்டா நாங்க ஏன் அய்யரை எதிர்க்கிறோம்?”

கோபாலய்யர் பணம் என்ற சிந்தனையே இல்லாதவர். காலில் செருப்பு இருக்கிறதா என்ற பிரக்ஞையே இல்லாதவர். அவர் மனம் பூராவும் தமிழ் இலக்கியமே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். அளப்பரிய நினைவாற்றல் அவருடையது. புத்தகங்களின் உதவி இல்லாமல் தமிழ் இலக்கியத்தின் எந்த நூலையும், இலக்கண நூல்களையும், அப்படியே எடுத்துப் பேச அவரால் முடியும். இரவு பகல் எந்நேரமும் திருவையாறு தமிழ்க் கல்லூரி மாணவர்களின் ஐயப்பாடுகளை விளக்குவதற்கு அவர் தயாராக இருந்தார். முகம் சுளிக்க மாட்டார். இன்றைய தமிழ் உலகத்தில் தமிழ் ஆசான்களில் அவருக்கு இணையில்லை.

அதீத பண்புகள் கொண்ட அவரை வழிபடும் நிலையில் இருந்தோம். மதிய வேளையில் வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போதே அவர் நிறுத்திவிட்டு “நான் மாத்யாநீகம் பண்றேன்டா, கொஞ்சம் இருங்கோ” என்று சொல்வார். அவர் என்ன செய்கிறார் என்று எங்களுக்குத் தெரியாது. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு குந்தி உட்கார்ந்து கொள்வார். எங்கள் சத்தத்தால் அவருடைய சடங்குக்கு இடைஞ்சல் இல்லாமல், அவர் முடிக்கும்வரை நாங்கள் அமைதி காப்போம்.

“இப்படி பணத்தை, பதவியைச் சீண்டாத அய்யர்களோடு எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து விடுகிறோம். பதவி, அதிகாரம் பண்ணுவது என்று வரும்போதுதான் பிராமணர்களுக்கு இருக்கும் மேலாதிக்க உணர்வை எதிர்க்கிறோம்” என்று சொல்லி முடித்தார்.

வைகறைக்கு நான் பதில் சொல்லவில்லை. காரணம் கோபாலய்யரை நான் அறிந்தவன்.

*

இன்று பெரியார் திராவிடக் கழகத்தை நடத்திச் செல்லும் விடுதலை ராசேந்திரன் அப்போது சென்னை அடையாறு காந்தி நகரில் குடியிருந்தார். அவரும் அவர் மனைவி பேராசிரியை சரஸ்வதியும் குடித்தனம்.

சரஸ்வதியின் அண்ணன் ஜகந்நாதன் என்பவரும் அந்த வீட்டிற்கு வந்து போவார். அவர் ஓய்வு பெற்ற கணிதவியல் பேராசிரியர். கணவன், மனைவி இருவருமே பகுத்தறிவுக்காரர்கள். ராசேந்திரன் ஒரு பெரியாரிஸ்டு. சரஸ்வதி பெண்ணுரிமைக்காரர்.

எப்படியோ நானும் சித்தார்த்தனும், நண்பர்கள் சிலரும் ஜகந்நாதனுடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் ஒட்டிக்கொண்டு விட்டோம். அவர் ஒரு நடமாடும் நூலகம். இலக்கியம், தத்துவம், அறிவியல் பற்றிய வினாக்களுக்கு அவரிடம் விடை உண்டு. ஆனால் எங்களுக்கு அவரிடம் இருந்த ஈர்ப்புக்குக் காரணம் அதுவல்ல. அவர் பகவான் ரமணரின் வழி நடப்பவர். ரமணரைப் பற்றிய அபூர்வமான விஷயங்களை எடுத்துச் சொல்வார். நாங்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருப்போம்.

சரஸ்வதிக்கு இதெல்லாம் ஒட்டாது. ஒவ்வாது. அண்ணன் மேலுள்ள பாசத்தாலும் பண்பு குறையாத பெண்மணி என்ற முறையிலும் “இந்த ஆன்ம விடுதலை தேவையா?” என்று சொல்லிக் கொண்டே சுவையான டீ போட்டுக் கொடுப்பார். நாங்கள் ஒருமாதிரி புலன்கடந்த நிலையில் இருப்பதால் இதெல்லாம் எங்களைப் பாதிக்காது. குறிப்பாக ஜகந்நாதனிடமிருந்த அண்மையில் எனக்குச் சில பரவச நேரங்கள் பிடிபட்டன.

மற்றபடி இதே வீட்டில்தான் ராசேந்திரன் இருக்கிறார் என்பதுகூட எங்களுக்கு உறைக்காது. சரஸ்வதியாவது உரிமையோடு கடிந்துகொள்வார். ராசேந்திரனால் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை.

காலம் கடந்துவிட்டது. இப்போது ராசேந்திரன் கட்சிக்காரர்கள் பன்றிக்குப் பூணூல் போடும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள், சரஸ்வதி மாற்றுக் கருத்துடையவர்களுக்கு டீ போட்டுக் கொண்டிருப்பார் என்று நம்புகிறேன்

*

அடையாறு வீட்டில் மூத்த அண்ணன் ஏகாம்பரத்தின் மனைவி ஜகதாம்பாள். ஜகதாம்பாளுடைய தம்பி முகுந்தா. முகுந்தா இந்தக் காலக்கட்டத்தில் அடையாறு வீட்டில் தங்கி இருந்தான். ஏதோ ஒரு மும்பாய் கம்பெனியுடைய விற்பனைப் பிரதிநிதியாக தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தான். முகுந்தாவுக்கென்று சில சிறப்புகள் உண்டு. கம்பெனியில் கொடுக்கப்படும் பரிசுப் பொருட்களை வியாபாரத்தில் பயன்படுத்துகிறானோ இல்லையோ பஸ்ஸில் கண்டக்டருக்கு, மாநகராட்சி ஊழியருக்கு என்று தாராளமாக வழங்கி எல்லா மட்டங்களிலும் தன்னுடைய ஆளுமையை அதிகப்படுத்திக் கொள்வான். முகுந்தாவோடு போனால் பஸ்ஸில் எவ்வளவு கூட்டமிருந்தாலும் கண்டக்டர் நம்மை மட்டும் முன்னே போ என்று சொல்லமாட்டார். காரணம் காம்ப்ளிமெண்ட்ஸ். முகுந்தாவோடு போனால் சலூனில் மசாஜுக்கு தனிக் கட்டணம் கிடையாது. காரணம் காம்ப்ளிமெண்ட்ஸ்.

பெரும்பாலான விஷயங்களில் எங்களுக்குள் ஒற்றுமை கிடையாது என்பதால் நாங்கள் அடிக்கடி மோதிக் கொள்வோம். மோதிக் கொண்ட காரணத்தினாலேயே அதிகப்படியாக ஒட்டிக் கொள்வோம். அடையாறு வீட்டு மாடி முழுவதும் எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. பூட்டும் சாவியும் எங்களிடம். எப்போது வேண்டுமானாலும் வெளியே போகலாம், வரலாம் என்கிற சௌகரியம். சாப்பிட்டு முடித்து மாடிக்குப் போய் படுக்கையைப் போடும்போது முகுந்தா மெதுவாக ஆரம்பிப்பான் ‘நைட் ஷோ போகலாமா’ என்று. எல்லாச் செலவையும் அவன்தான் செய்வான் என்றாலும் அதற்காக நான் விட்டுக் கொடுப்பதில்லை. “எந்தத் தியேட்டர்” என்று கேட்பேன். இதுதான் முதல் பிரச்சினை. என்னைப் பொருத்தவரை படம் முக்கியமில்லை. வசதியான தியேட்டராக இருக்கவேண்டும். பாத்ரூம் நாற்றமடிக்காமல் இருக்கவேண்டும். முகுந்தாவுக்கு அப்படி இல்லை. அவனுக்கு இன்னார் படத்தைத்தான் பார்க்கவேண்டும் என்பதில் சிரத்தையோடு இருப்பான். இதிலேயே சண்டை ஆரம்பமாகிவிடும்.

ஒருவழியாய் என்னைச் சரிசெய்து மெயின் ரோட்டுக்கு அழைத்து வந்துவிடுவான். “படம் போகணும்னு முடிவு பண்ணிட்டே. சாயங்காலமே எந்த தியேட்டரில் எந்த படம் ஓடுது என்று பார்த்து வைத்துக் கொள்ள வேண்டியதுதானே” என்று நான் திட்டுவேன். அந்த இருட்டில், அந்த அவசரத்தில் ஒரு போஸ்டரும் கண்ணில் படாது. நான் திட்டுவதையெல்லாம் பொருட்படுத்தாமல் முகுந்தா ரோடில் வருகின்ற பஸ்ஸில் ஏறுவான். திருவான்மியூரில் இருந்து பாரிமுனைக்கு போகும் பஸ் சர்வீஸ் அது. கூட்டத்தில் அடித்துப்பிடித்துக் கொண்டு முன்னேறும் முகுந்தா கண்டக்டரைப் பார்த்துக் கேட்பான். “சார், திருவான்மியூர் ஜெயந்தியில் என்ன படம் ஓடுது” என்று. ஒரு நாளும் இந்தக் கேள்விக்கு கண்டக்டரிடமிருந்து ஒழுங்கான பதில் வராது. ஆனால் அந்தக் கூட்டத்தில் யாரோ ஒருவன் சொல்லி விடுவான். “ரஜினி படம், நான் மகான் அல்ல” என்று.

சட்டை கசங்கிய நிலையில் முகுந்தா கீழே நின்று கொண்டிருக்கும் என்னிடம் வந்து “திருவான்மியூர் ஜெயந்தியில் நான் மகான் அல்ல, ரஜினி படம், போகலாம்” என்பான். அவன் இருக்கும் நிலையைப் பார்த்தவுடன் சண்டை போட எனக்கு மனம் வராது. உடன்படுவேன்.

ஆட்டோவைப் பிடித்து திருவான்மியூர் ஜெயந்திக்குப் பயணம். ஆட்டோக்காரரோடு பேச்சுவார்த்தை, அதற்கான செலவு, ஜெயந்திக்குப் போனவுடன் மீண்டும் ஆட்டோக்காரரோடு பேச்சுவார்த்தை, தகராறு எல்லாம் நடக்கும். நான் தலையிடமாட்டேன். அவன் ஒண்டியாகவே சமாளிப்பான். இந்தக் களேபரத்தில், ‘நான் மகான் அல்ல’ சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை என்பது தனிக்கதை.

முகுந்தாவுக்கு தெரிந்த பல கலைகளில் ஒன்று ஜோசியம், அதிலும் குறிப்பாகக் கைரேகை ஜோசியம். “எல்லா மாமிங்களும் என்கிட்டயே பெண் ஜாதகத்தைக் கொடுத்து நல்ல பையனாகப் பாருடா என்கிறாங்க. என்னைப் பார்த்தால் பையனாகத் தெரியவில்லையா” என்று குறைபட்டுக் கொள்வான். “நீ முதலில் ஜோசியம் பார்ப்பதை நிறுத்து. ஜோசியக்காரனுக்கு யாரும் பொண்ணு கொடுக்க மாட்டாங்க” என்பேன். இத்தனைக்கும் முகுந்தாவின் ஜோசியத்துக்கு கட்டணம் கிடையாது. இலவச சர்வீஸ்தான். இருந்தாலும் அவன் ராசி அப்படி.

அடையாறு வீட்டின் சின்ன அண்ணா தியாகு, மன்னி சாந்தி. ஒரு நாள் காலையில் மன்னியின் கையைப் பார்த்துவிட்டு “உங்களுக்கு இன்னிலேந்து ராஜயோகம் ஆரம்பம்” என்று சொல்லி விட்டான். அன்று மாலை டூவீலரை எடுத்து ஓட்டுவதற்காக முயற்சி செய்த சாந்தி கீழே விழுந்து முட்டியில் இரத்தக் காயம். டாக்டரைப் பார்த்து எக்ஸ்ரே எடுத்ததில், பத்து நாட்கள் படுக்கையை விட்டு அசையக்கூடாது என்று உத்தரவு. விவரம் புரியாமல் வசமாக வந்து சிக்கினான் முகுந்தா. “என்னடா ராஜயோகம் என்று சொன்னாயே, இதுதான் ராஜயோகமா” என்று கேட்டாள் மன்னி. படுக்கையை விட்டு அசையக் கூடாது என்ற காரணத்தால் அப்போது சாதத்தைப் பிசைந்து பிளேட்டில் வைத்து ஸ்பூன் போட்டு மன்னியிடம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். முகுந்தா அசரவில்லை. ‘‘இதான் ராஜயோகம். உட்காந்த இடத்துல எல்லாம் நடக்குதுல்ல’’ என்றான்.

அரங்கம் என்ற தீவில் இருந்த நாட்களில் ஊர் உலகத்துச் செய்திகள் எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. எட்டு நாட்களோ பத்து நாட்களோ எனக்காக செய்திதாள்களை முகுந்தா பத்திரப்படுத்தி வைப்பான். வீட்டுக்கு வந்தபிறகு எல்லாவற்றையும் சேர்த்து வைத்துப் படிப்பேன். அப்படிப் படித்ததில் சுமன் என்ற நடிகர் தமிழக போலீசில் சிக்கிவிட்டதாகவும் பல பெரிய மனிதர்கள் முயற்சி செய்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருந்தன. எதற்காக சுமன் கைது செய்யப் பட்டார் என்ற விபரம் எந்த செய்தித்தாளிலும் இல்லை. இந்தக் கேள்வி என்னிடம் இருந்தது. அன்றிரவு எல்லோரும் சாப்பிடும் போது நான் கேட்டேன், “முகுந்தா நடிகர் சுமனை ஏண்டா கைது பண்ணாங்க, என்ன பண்ணிட்டான்” என்று.

முகுந்தாவிடம் இருந்து பீறிட்டு வந்தது பதில். “காலேஜ் பொண்ணுங்களை காதல் பண்ணி கடத்திண்டு போயிட்டான், வாழ்ந்திட்டான்” என்றான். ஏகாம்பரத்துக்கு முகம் சிவந்து விட்டது. “நாளையிலிருந்து இந்த காட்டுமிராண்டிப் பசங்களுக்கு தனியாகத் தட்டு போடு” என்று சொல்லிவிட்டான். அண்ணனுடைய உத்தரவு நடைமுறையில் சாத்தியமாக்கப் படவில்லை.

*

அடையாறு பஸ் வருவதற்காக மந்தைவெளி பஸ் ஸ்டாண்டில் நான் நிற்கிறேன். அப்போது என்னுடைய நண்பன் சு.ரவி ஸ்கூட்டரில் வந்து அங்கே இறங்கினான். ஸ்கூட்டரை ஒருவர் ஓட்டி வந்தார்.

அன்றைய நாளிதழில் நடிகர் கிரேசி மோகனின் பேட்டி வெளியாகியிருந்தது. அந்தப் பேட்டி சு.ரவியை சிலாகித்திருந்தது. அந்த ஞாபகத்தில் நான் சு.ரவியிடம் கேட்டேன்.

“என்னடா. உன் பிரண்டு லூசு மோகன் உன்னைப் பத்தி நல்லபடியா சொல்லி இருக்கானே. நடிகனா இருந்தாலும் உண்மையைப் பேசறானே” என்று சொல்லும்போதே இரண்டு குறுக்கீடுகள்.

ஒன்று, சு.ரவி என் கையைப் பிடித்து இழுத்தான். சற்று தள்ளி நின்று கொண்டிருந்தவர், அவர்தான் சு.ரவியை ஸ்கூட்டரில் அழைத்து வந்தவர், “சார்” என்று அழைத்தார். அழைத்து “சார், லூசு மோகன் இல்லை, கிரேசி மோகன்” என்றார்.

எனக்கு, ஏதோ தப்பு செய்து விட்டோம் என்று புரிந்துவிட்டது. இருந்தாலும் வீம்புக்காக “ஏதோ கொஞ்சம் முன்ன பின்ன, இதுல எப்படி இருந்தா என்ன” என்று சொல்லி முடித்தேன்.

அந்த நபர் “நான்தான் அந்த கிரேசி மோகன்” என்று சொல்லிக் கையை நீட்டினார்.

“இல்லீங்க, நான் சொன்னது…” என்று இழுத்தேன்.

அவர் அசரவில்லை. சிரித்துக் கொண்டே “அதான் சொல்லிட்டீங்களே அப்புறம் என்ன, வேற என்ன சொல்லணும்” என்று வம்புக்கிழுத்தார்.

எனக்குப் பேச வாய் வரவில்லை. தவிர, எந்த நேரமும் சு.ரவியால் தாக்கப்படலாம் என்ற அபாயம் தென்பட்டதால் பஸ்ஸில் ஏறி தப்பித்து விட்டேன்.

தொடரும்…

Leave a Reply