தமிழ்நாட்டில் திராவிட இயக்க அலை அடித்த போது அதனை எதிர்த்து நின்றதோடு, ஹிந்து தர்மத்துக்காகக் குரல் கொடுத்த முக்கியமான ஊடகவியலாளர்கள் உண்டு. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றெல்லாம் இல்லாமல், அவர்கள் தீர்மானமாக ஹிந்து தர்மத்தை ஆதரித்தனர். திராவிட இயக்க போலித்தனங்களைத் தோலுரித்தனர்.
அப்படிப்பட்ட ஒரு ஊடகவியலாளர் தமிழ்வாணன் அவர்கள். தமிழ்த்தென்றல் திரு.வி.க அவர்களால் தமிழ்வாணன் எனப் பெயர் சூட்டப்பட்டவர் அவர். ‘துணிவே துணை’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டவர்.
பழைய கல்கண்டு இதழ்களில் அவர் எழுதிய பல கட்டுரைகள் இவ்வகையில் முக்கியமானவை. ‘கல்கண்டு’ இதழில் அவை அட்டைப்படக் கட்டுரைகளாக வெளிவந்தவை.
1967 மார்ச் 6ம் தேதி திமுக ஆட்சியைப் பிடித்து அதிகாரத்தில் அமர்ந்தது.
ஜூன் 6, தமிழ்வாணன் தமக்கே உரிய பாணியில் அட்டையில் ‘Danger Ahead’ என சி.என்.அண்ணாதுரை படத்தை அட்டையில் போட்டுக் கட்டுரை எழுதினார்.
6-5-1967ல் அண்ணாதுரை, மத்திய அரசு தம் அரசுக்கு இன்னின்ன உதவிகளைத் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்து ஒரு ‘மகத்தான ஊர்வலத்தையும் பொதுக் கூட்டத்தையும் நடத்துவோம்’ எனப் பேசுகிறார். அதற்கு தமிழ்வாணன் எழுதுகிறார்:
‘ரூபாய்க்கு ஒரு படி அரிசி போடுவதில் ஏற்படும் இழப்பை மத்திய சர்க்கார் ஈடுசெய்யவேண்டும். அப்படிச் செய்ய மறுத்தால், தமிழகத்துப் பொதுமக்களை மத்திய அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி நடத்துமாறு நான் தூண்டிவிடுவேன்’ என்பது இந்த அறிவிப்பின் உட்கருத்தா?…
தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளைச் சரிவர நிறைவேற்ற முடியாமல் திணற நேரும்போது, பழியை மத்திய சர்க்கார் மீது போட்டு மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, இப்போதே முன்னேற்பாட்டுடன் பேசத் தொடங்கிவிட்டாரா?…
பேயை ஏவி விடுபவன் அந்தப் பேயினால் அழிவான் என்பது கிராமியப் பழமொழி. அதே போல அராஜகத்தைத் தூண்டிவிடுபவர்கள், யாராக இருந்தாலும் அந்த அராஜகத்தினாலேயே அழிந்துபோய் விடுவார்கள்.
திரு. அண்ணாதுரை மட்டும் இதற்கு எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்!
ஊர்வலம் நடத்துவதும் பொதுக்கூட்டங்கள் போடுவதும் எப்படி அராஜகச் செயல்கள் ஆகும் என்று கேட்கிறீர்களா?
அவை அராஜகச் செயல்கள் அல்ல. ஆனால், இன்றையச் சூழ்நிலையில் அவை தேச விரோத சக்திகளுக்குத் தீ மூட்டுகின்ற தன்மையை அளிக்கக் கூடியவை. இந்த உண்மையை நாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போதே அறிந்திருக்கிறோமே!…
ஆகையால், எக்காரணத்தை முன்னிட்டும் திமுக, இத்தகைய ஊர்வலங்களை நடத்தாமல் இருப்பதே நல்லது. அப்படியே அவர்கள் நடத்தினாலும் பொதுமக்கள், இளைஞர்கள் இந்த ஊர்வலங்களில் கலந்து கொள்ளக் கூடாது!’
தமிழ்வாணனின் தெளிவான தைரியமான நேர்மையான தேசபக்தி உணர்வும் தொலைநோக்கும் கொண்ட எழுத்துக்கள் ஒரு தமிழனாகப் பெருமை அளிக்கின்றன.
2-11-1967ல் ‘கல்கண்டு’ அட்டைப்படக் கட்டுரை ‘தமிழ் காட்டுமிராண்டி பாஷையா?’ தமிழ்வாணன் வார்த்தைகளைத் தோட்டாக்களெனக் குறிபார்த்து அடிக்கிறார். கிஞ்சித்தும் சமரசமில்லை. ஈவெரா தமிழ் குறித்து தமக்கே உரிய அறிவிலித் திமிருடன் பேசியதை அளித்துவிட்டு தமிழ்வாணன் எழுதுகிறார்:
‘இப்படிப் பேசியவர் யார் தெரியுமா? தமிழ்க்காவலர்கள் என்றும், தமிழ் அறிஞர்கள் என்றும், தமிழுக்காகத் துடித்துக் கொண்டிருப்பவர்கள் என்றும் பொது மக்களிடையே பெயர் எடுத்துள்ள ஒரு கூட்டத்தினரால் தந்தை பெரியார் என்று போற்றப்படுகிற ஈ.வே.ராதான் நம் அருமைத் தமிழ்மொழியைப் பற்றி இவ்வளவு இழிவாகப் பேசியவர்… நமது தமிழ்க்காவலர்களும், தமிழ் அறிஞர்களும், தமிழ்ப் புரவலர்களும், தமிழ்ப் புலவர்களும் ஊமைகளைப் போல் இப்படி வாய் அடைத்துப் போய் உட்கார்ந்திருக்கிறார்களே!… இதை அவர்கள் காதிருந்தும் செவிடர்கள் போல் கேட்டுக் கொண்டு சும்மா இருந்திருக்கிறார்கள்! அவர்களுடைய இரத்தத்திலே ஒரு துளியாவது தமிழ்ப் பற்று இருக்குமானால் அவர்களால் இப்படி இருந்திருக்க முடியுமா? ஈவேராதான் தமிழர்களைத் தட்டி எழுப்பினாராம்! தன்மான இயக்கத்துக்குத் தந்தையாம்! இந்த தன்மான இயக்கம் நம் தமிழர்களை எப்படி ஆக்கிவைத்திருக்கிறது பாருங்கள்!’
ஈவெராவின் கீழ்த்தரமான இனவெறியையும் தமிழ்வாணன் அன்றைக்கு, ஏன் இன்றைக்கும், அரிதான ஒரு மானுட நேயப் பார்வையுடன் கண்டிக்கிறார்:
1960ம் ஆண்டில் இவர் (ஈவேரா) சொல்லியிருக்கிறார்: ‘உலகத்தில் நேற்றுவரை காட்டுமிராண்டிகளாக இருந்த நீக்ரோக்கள் 100க்கு 100 படித்தவர்களாக இருக்கிறார்கள். அவ்வளவு முன்னேறிவிட்டார்கள்.
அதாவது,
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வரையில் நீக்ரோக்கள் காட்டுமிராண்டிகளாக இருந்தார்கள். அவர்கள் அந்த நிலையிலிருந்து மாறி நாகரிக மக்களாக மாறிவிட்டார்கள். ஆனால் தமிழன் இன்னும் காட்டுமிராண்டியாகவே இருக்கிறான்! இதுதான் ஈவேராவின் கருத்து!
நாகரிகம் என்பது ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். நீக்ரோ மக்களுக்கு உரியது நீக்ரோ நாட்டு நாகரிகம். அந்த நாகரிகத்தைதான் அவர்கள் தலையாயது என்று போற்றுவார்கள். அவர்கள் ஆயிரம்தான் ஆங்கிலக் கல்வி பயின்றாலும் அவர்களது சொந்த நாகரிகத்தை இழிவாக எண்ணமாட்டார்கள்.
அதுபோல,
தமிழ்மக்களுக்கு உரியது தமிழ்நாட்டு நாகரிகம். அதுதான் நமக்குத் தலையாய நாகரிகம். ஆயிரம் ஆங்கிலக் கல்வி பயின்றாலும் தன்னுடைய சொந்த நாகரிகத்தை இழிவாக எண்ணுபவன் உண்மையான தமிழன் ஆகமாட்டான்!’
அன்றைக்கு – அதாவது 1960களில் – பொதுவாகக் கறுப்பின மக்களைக் குறித்து இந்தியாவில் அவ்வளவு தெளிவான அறிவு கிடையாது. ஏன் 1980களில் கூட தமிழ் சினிமாக்களில் நகைச்சுவை என்கிற பெயரில் கறுப்பின மக்களைக் கிண்டல் செய்வது, ஏன் 2010களில் கூட சிங்கம் போன்ற படங்களில் கறுப்பின மக்களை வில்லன்களாகக் காட்டுவது போன்ற பிறழ்ச்சிகள் மலிந்து கிடக்கின்றன. ஆனால் 1967ல் தமிழ்வாணன் எத்தனை மானுட பொது நேயத்துடன் இவ்விஷயத்தை அணுகி ஈவெராவின் போலி பகுத்தறிவு பம்மாத்தை தோலுரிக்கிறார்.
மானுட நேயத்தில் கொஞ்சம் வழுக்கியிருந்தாலும் ‘எப்படி தமிழ்மக்களை நீக்ரோக்களுடன் ஒப்பிடலாம்’ என்கிற ரீதியில் எழுதியிருக்கக் கூடும். அன்றைய காலகட்டத்தில் கறுப்பின மக்களைக் குறித்த மனப்பதிவு இந்தியர்களுக்கு அப்படித்தானே என்றுதான் நினைக்கத் தோன்றும். இன்றைக்கு காலாதீதமான பகுத்தறிவுக்காரன் என முன்வைக்கப்படும் ஈவெரா தவறான இனரீதியிலான அத்தகைய மனப்பதிவு சார்ந்து பேச, அப்படிப்பட்ட போலிப் பகுத்தறிவு பம்மாத்து ஏதுமற்ற தமிழ்வாணன் எத்தனை அழகாக இன்றைக்கும் வியக்கும் வண்ணம் பொது மானிட நேயம் பேசுகிறார்.
நம் துரதிர்ஷ்டம், தமிழகத்துக்கு வந்த மனப்பெருநோய் பரப்பியாக வந்து சேர்ந்த ஈவெராவை பகுத்தறிவுவாதி எனக் கொண்டாடுகிறோம். ஆனால் உண்மையான மானுடநேயராக தமிழ் மக்களுக்கு அறிவூட்டிய தமிழ்வாணனை மறந்துவிட்டோம்.
அமில நகைச்சுவையும் கைவருகிறது தமிழ்வாணனுக்கு:
‘ஈவேரா சொல்லுவதில் ஒரு கடுகு அளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. அதாவது தமிழ்ப் பெருமக்கள் பேசுகிற தமிழ் தன் இயல்பிலேயே தலைசிறந்த மொழியாக இருப்பினும், ஈவேரா பேசுகிற தமிழ் உண்மையிலேயே ஒரு காட்டுமிராண்டி பாஷைதான்!
இதை ‘பெரியாருக்கே உரிய கொச்சை மொழி’ என்று பூசி மொழுகுகிறார் கருணாநிதி!
கொச்சை மொழி என்பதைக் காட்டிலும், ‘காட்டுமிராண்டி பாஷை’ என்பதுதான் அதற்குப் பொருத்தமான பெயராக அமையும்.’
இறுதியாக ஈவெராவின் கூச்சமற்ற அறியாமையைக் கேள்விக் கணைகளால் துளைக்கிறார் தமிழ்வாணன்:
‘உமக்கு ஆங்கிலத்தில் பேசவோ எழுதவோ தெரியாதே ஐயா! உமக்கு ஆங்கிலமும் தெரியாது தமிழும் தெரியாது, இந்த நிலையில் நீர் ஆங்கிலத்தையும் தமிழையும் ஒப்புநோக்கி திறனாய்வு செய்ய கிளம்பிவிட்டீரே ஐயா!’
தமிழ்வாணனின் துணிவு சாதாரணமானது அன்று. இன்றும் தமிழ்நாட்டில் தமிழ் தெய்வீகத்தமிழாக ஞானத்தமிழாக திகழ்கிறது என்றால் தமிழ்வாணன் போன்ற துணிவையே துணையாகக் கொண்ட நன்மக்கள் திராவிட நச்சியக்கத்தை எதிர்த்து நின்றதே காரணம்!
மற்றொரு அட்டைப்படக் கட்டுரை ‘ஆங்கில மோகம் பிடித்து அலைகிறார்கள்’ (14-12-1967). திராவிட இயக்கக் கும்பலை மிகக் கடுமையாக விமர்சிக்கிறார் தமிழ்வாணன் இக்கட்டுரையில்:
‘உடம்பில் ஆங்கில ரத்தம் ஓடுகிற இந்தியர்களுக்கு ஆங்கிலோ இந்தியர்கள் என்று பெயர். உள்ளத்தில் ஆங்கில ரத்தம் ஓடுகிற இந்தியர்களுக்கு இந்தோ-ஆங்கிலேயர்கள் என்று பெயர். இந்தப் பெயர் என்னால் கொடுக்கப்பட்டது அல்ல. ஜேம்ஸ் கஸின்ஸ் என்ற ஒரு ஆங்கிலேயரே கொடுத்த பெயர் இது… ஒரு மதத்தில் பிறந்து இன்னொரு மதத்தில் மோகம் கொண்டு மதம் மாறுகிறவர்களைப் போல, இவர்கள் தமிழர்களாய்ப் பிறந்திருந்தாலும், தங்கள் தாய்மொழியாகிய தமிழினிடத்திலே சிறிதும் பற்று இல்லாமல், ஆங்கிலத்தின் மீது மோகம் பிடித்து அலைபவர்கள்! ஆங்கிலத்தையே தங்கள் குலதெய்வமாகக் கொண்டாடுகிறவர்கள்! ஆங்கிலம் போய்விட்டால் இந்த உலகமே அஸ்தமித்து விடும் என்று வாதாடுகிறவர்கள்! இவர்களுக்கு ஜேம்ஸ் கஸின்ஸ் கொடுத்த பெயர் மிகவும் சரியான பெயரே!’
இனி இந்தப் பிறவிகளின் வாதங்களை தமிழ்வாணன் நம்முன் வைத்து அவை எவ்வளவு அபத்தமானவை என நிரூபிக்கிறார்:
‘ஐயா! ரயிலையும், தந்தியையும், கோட்டையும், தொப்பியையும் உலகத்துக்கே ஆங்கிலேயன்தானா சப்ளை செய்தான்? இவையெல்லாம் ஜப்பானிலும், சைனாவிலும், பிரான்ஸிலும், ரஷ்யாவிலும் அல்பேனியாவிலும் அபிசீனியாவிலும் கூட இருக்கின்றனவே! அந்த நாடுகளுக்கு அவை ஆங்கிலேயனால் கிடைத்தவை அல்லவே! அதே போல அவை நமக்கும் ஆங்கிலேயன் இல்லாமலே கிடைத்திருக்கக் கூடியவைதானே!’ என்று நாம் திருப்பிக் கேட்டோமானால் அதற்கு அவர்கள் பதில் சொல்லுவதே கிடையாது…
ஆங்கிலேய மொழியினால்தான் நாடு ஒன்று பட்டது. அந்த ஆங்கில மொழியை அகற்றிவிட்டால் நாடு மறுபடியும் பல துண்டுகளாகச் சிதறிவிடுமே என்று இரவு பகலாய்க் கவலைப்பட்டு நாளுக்கு நாள் அவர்கள் மெலிந்து வருவதாக நான் கேள்விப்படுகிறேன்!
இவர்கள் கவலைப்படுவது என்னவோ உண்மைதான். ஆனால் அந்த கவலையின் அடிப்படைக் காரணம் வேறு. தேசீய ஒருமைப்பாட்டுக்கும் இந்தக் கவலைக்கும் எள்ளத்தனை தொடர்பும் இல்லை! தேசீய ஒருமைப்பாட்டில் அவர்கள் அவ்வளவாக அக்கறை கொண்டவர்களும் இல்லை!’
பாரம்பரியமாகவே பாரதம் ஒரே நாடு என்பதை தமிழ்வாணன் இந்த திராவிடக் கும்பலுக்கு நிரூபிக்கிறார்:
பண்டைத் தமிழகத்தில் சேரன், சோழன், பாண்டியன் என்னும் மூவேந்தர்கள் ஆண்டிருந்தார்கள். அதற்காகத் தமிழ் மக்கள் தங்களை வேறு வேறான மூன்று இனத்தவர்களாகவா எண்ணிக் கொண்டிருந்தார்கள்?…
மூன்று மன்னர்கள் ஆண்டிருந்த போதிலும் தமிழர்கள் எவ்வாறு ஒருமைப்பாட்டு உணர்ச்சி உடையவர்களாக இருந்தார்களோ அவ்வாறே 56 மன்னர்கள் ஆண்டிருந்த போதிலும் இந்தியர்கள் என்றும் ஒருமைப்பாட்டு உணர்ச்சி உடையவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். அப்படி இருந்திராவிட்டால் நம் பழைய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் 56 நாடுகளின் பெயர்தான் இடம் பெற்றிருக்குமே தவிர, அந்த 56 நாடுகளையும் தன்னகத்தே கொண்ட ‘பாரதம்’ என்ற ஒரு தேசத்தின் பெயரே இடம் பெற்று இருக்க மாட்டாது.’
பாரதத்தை ஒரே நாடாக ஆக்கியவர்கள் ஆங்கிலேயர்கள் என்கிற திராவிட இனவாதக் கும்பலின் வாதத்தை பிரமாதமாகத் தவிடுபொடியாக்குகிறார் தமிழ்வாணன்:
‘உண்மையில் ஆங்கிலேயன் வந்த பிறகுதான் பாரதம் ஒரே தேசமாக உருவாயிற்றா?
…
நமது இந்தோ-ஆங்கிலேயர்களின் இலக்கணப்படி எவன் ஒருவன் நம்மீது படை எடுத்து வந்து நம்மை அடிமைப்படுத்துகிறானோ அவனே நமது ஒருமைப்பாட்டை உருவாக்குபவன்!
அதன்படி பார்த்தால்,
முகமதுகோரிதான் இந்த நாட்டில் முதன்முதலாக ஒருமைப்பாட்டை உருவாக்கியவன்!
ஹிட்லர்தான் ஐரோப்பிய மக்களிடையே ஒருமைப்பாட்டை உருவாக்கியவன்!
…
இந்தியர்கள் எப்போதுமே சிறப்பான ஒருமைப்பாட்டு உணர்ச்சி உள்ளவர்கள்தாம். பிரித்து ஆளும் சூழ்ச்சியில் கைதேர்ந்தவர்களான ஆங்கிலேயர்கள் வந்து அந்த ஒருமைப்பாட்டைக் குலைத்தார்கள்… ஆங்கிலேயனால் அழிக்கப்பட்ட நமது ஒருமைபாட்டு உணர்ச்சி மக்களது விடுதலை வேட்கையின் வாயிலாகத்தான் புத்துயிர் பெற்றது. ஓங்கியது.’
தெளிவான சிந்தனை தீர்க்கமான பார்வை துணிவான எழுத்துகள் – தமிழ்வாணன் தமிழ்ப் பத்திரிகை உலகின் ஒரு மிக முக்கிய சகாப்தம்.
தமிழ்வாணனின் ஆழ்ந்த பார்வையையும் அறப்பிடிப்பையும் துணிவையும் காட்டும் மற்றொரு கட்டுரை 21-12-1967 தேதியிட்ட கல்கண்டு அட்டைப்படக் கட்டுரை: ‘இனிமேல் இந்து மதமே இந்துக்களுக்கு கதி!’’ தமிழக இந்துத்துவ வரலாற்றில் இக்கட்டுரை ஒரு முக்கிய ஆவணமாகவே கருதப்பட வேண்டும். அக்கட்டுரையிலிருந்து:
‘இந்து மதத்தின் அடிப்படை அறங்களே நம் பாரத நாட்டு மக்களின் இயல்பான பண்பாட்டுகளாக உருப்பெற்று விளங்குகின்றன. இதை எவருக்காவது மறுக்க துணிவு உண்டா?
உள்ளத் தூய்மை, நிதானம், மனநிறைவு, உண்மை, வன்முறை இன்மை.
இவைதாம்
இந்து மதத்தின் அடிப்படை அறங்கள்.
இவைதாம்
இந்திய மக்களின் இயல்பான பண்பாடுகள்!
…
இன்றைக்கும் உலகநாடுகள் சபையில் நம் பாரத நாட்டுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது என்றால் அது நம் படைபலத்தாலோ பண பலத்தாலோ ஏற்பட்டது அல்ல. நமது பண்பின் பலம் ஒன்றினாலேயே அது ஏற்பட்டது. அந்த பண்பின் பலத்தை நம்மிடம் உருவாக்கித் தந்து இருப்பது நமது இந்து மதம் ஒன்றே!
இந்து மதம் ஒன்றே!
இந்து மதம் ஒன்றே!
எனவே,
எதிர்காலத்தில் நாம் உலகநாடுகளின் நடுவில் ஒரு தனிப்பெரும் செல்வாக்கு உள்ள நாடாகத் திகழ வேண்டுமானால் நாம் நமது இந்துமதப் பண்பாடுகளை இன்னும் சிறப்பாக வளர்த்து வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். நம் பாரத நாட்டின் எதிர்கால மேம்பாட்டுக்கு இந்து மதத்தை விட்டால் வேறு கதியே கிடையாது என்பது என் உறுதியான உரை.’
எம்மதத்தையும் வெறுக்காது இருப்பது என்பது இந்து மத அறத்தின் அடிப்படையில் அமைய வேண்டுமென்பதைச் சொல்லுகிறார் தமிழ்வாணன். மொண்ணையான ‘எம்மதமும் சம்மதம்’ என்கிற செக்யூலர் பம்மாத்து அவரிடம் இல்லை:
‘நம் பாரத நாட்டில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. அத்தனை மதங்களின் சிறப்பான அம்சங்களையும் இந்து மதம் தன் அகத்தே கொண்டுள்ளது. இதனால்தான் ஓர் இந்துவால் பிற மதங்களின் மீது வெறுப்புக் கொள்ள முடியவில்லை!
எல்லா மதங்களையும் தனக்குச் சம்மதமாக கருதுவதுதான் ஓர் இந்துவின் இயல்பான மனநிலையாக இருக்கவேண்டும். ஆனால் அதேவேளையில் அவன் தன்னுடைய மதத்தின் சாரமான உட்பொருள்களை உணர்ந்து இருக்கவும் வேண்டும். அப்படி உணராவிட்டால், ஒரு இந்துவாகப் பிறந்த பயனை அவனால் அடைய முடியாது போய்விடும்!’
சரி, அது என்ன இந்துவாகப் பிறந்த பயன்? தமிழ்வாணன் அதற்கு தரும் பதில் அட்சரம் கோடி பெறும். ஒவ்வொரு இந்துப் பெற்றோரும் தம் குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டிய பதில் அது:
‘தான் பிறந்த நாட்டுக்குப் பெருமைத் தேடித் தரும் வண்ணம் தன் வாழ்க்கையை எவன் அமைத்துக் கொள்கிறானோ அவனேதான் ஓர் இந்துவாகப் பிறந்ததன் பயனை அடைந்தவன். இந்திய நாட்டின் பெருமையே இந்து மதத்தின் வளர்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது என்றால் அந்த இந்து மதத்தின் வளர்ச்சி ஒவ்வொரு தனிப்பட்ட இந்துவின் சிந்தனையிலேயும் அடங்கியிருக்கிறது.’
ஒவ்வொரு இந்துவும் தன் ஒவ்வொரு செயலிலும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு அடிப்படைச் சூத்திரத்தை தமிழ்வாணன் இங்கு கொடுத்திருக்கிறார். இந்து மதத்தின் வளர்ச்சி என்பது இந்து மக்களின் மக்கள் தொகை வளர்ச்சி அல்ல என்பதையும் அவர் சொல்கிறார். மாறாக ஒவ்வொரு இந்துவும் உறுதியான மதப்பற்றுடன் செயல்பட வேண்டும் என்கிறார். அத்தகைய ஒரு தலைமுறையை உருவாக்க வேண்டும் எனச் சொல்கிறார்:
‘…காந்தியடிகளைப் போல், விவேகானந்தரைப் போல், அரவிந்தரைப் போல், ஒரு சில வீரர்களை நம் தாயர்கள் ஈன்று எடுத்தால் போதும். அப்புறம் நம் பாரத நாடுதான் உலகத்துக்கே வழிகாட்டக் கூடிய ஒரு தலையாய நாடாக இருக்கும்!
துரதிர்ஷ்டவசமாக, இப்போது நமது தாயர்கள் தெய்வப்பக்தி இல்லாதவர்களையும், நாட்டுப்பற்று இல்லாதவர்களையும், மொழிப்பற்று இல்லாதவர்களையும், மதப்பற்று இல்லாதவர்களையும், கட்சிகளின் பெயரால் காலித்தனங்கள் செய்கிறவர்களையுமே பெற்றுத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.’
மிக முக்கியமான விஷயம் இது. அண்மையில் நரேந்திர மோதி அரசு பெண்களுக்கான குறைந்த பட்ச சட்ட ரீதியான திருமண வயதை அதிகரிக்க ஆலோசிப்பதாகக் கூறியது. அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சில இந்துத்துவர்கள் கூறியது இதனால் இந்து மக்கள் தொகை குறைந்துவிடும். குழந்தை பெறும் வேகம் ஹிந்துக்களிடம் மட்டும் இஸ்லாமிய கிறிஸ்தவ சமுதாயங்களோடு ஒப்பிடக் குறைந்துவிடும் என்பது. இங்கு பெண்ணின் தாய்மை என்பது ஒருவித உயிரியல் உற்பத்தி என்பதைத் தாண்டி பார்க்கப்படாத ஒரு தொனி வருகிறது.
நிலைய பெண்ணியவாதிகள் உடனடியாக ஒரு பெண்ணின் வேலை பிள்ளை பெறுவதுதானா எனக் கொடி பிடிக்க வேண்டியதில்லை. இங்கு ஈன்று தருவதென்பது உயிரியல் உற்பத்தி அல்ல, மாறாக குழந்தைகளுக்கு நல்ல மதிப்பீடுகளை அளிப்பது. ஒருவன் காலித்தனமான கட்சியில் தேசப்பற்றும் தெய்வீக பக்தியும் இல்லாமல் போவதும் உலகுக்கே அறத்தை கடைப்பிடிப்பதன் மூலம் அண்ணலாகத் திகழ்வதும் தாயின் நல்மதிப்புகளைப் புகட்டுவதால் ஏற்படுவது. சத்ரபதி சிவாஜிக்கு ஜீஜாபாயும் சுவாமி விவேகானந்தருக்கு புவனேஸ்வரி தேவியும் காந்தியடிகளுக்கு புத்லிபாயும் போல ஒவ்வொரு இந்துக் குழந்தைக்கும் அன்னையர் அமைய வேண்டும். வேறுசில சொல்லத்தகாத வாழ்க்கைகள் வாழவும் அன்னையரின் வளர்ப்பு சரியாக அமையாததே காரணம் என்பது தமிழ்வாணன் கருத்தாக அமைகிறது.
‘இந்து வளர்ச்சி வேகம்’ என்று நேருவிய சோஷலிஸ வளர்ச்சி மந்தத்துக்குப் பெயர் சூடி சுய சாட்டையடிகளால் இந்திய ஊடகங்கள் வக்கிர மகிழ்ச்சி அடைந்த காலத்தில் தமிழ்வாணன் இந்து மத நெறிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே இந்தியா அனைத்துத் துறைகளிலும் மேலோங்க முடியும் என பிரகடனம் செய்கிறார்:
‘இந்து மத அறநெறிகளை ஆர்வத்தோடு கடைப்பிடிப்பதன் மூலம், நமது நாட்டின் ஆன்மீகபலத்தை நாம் மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள முடியும். அப்படி வளர்த்துக் கொண்டால், அரசியல் துறையில் மட்டுமன்றி, பொருளாதாரத் துறையிலும், சமூகத் துறையிலும், கல்வித்துறையிலும், கலைத் துறையிலும், ஆக்கநெறி விஞ்ஞானத் துறையிலும், இன்னும் இவை போன்ற பிற துறைகளிலும் நம் பாரத நாடே உலகு அனைத்துக்கும் வழிகாட்டியாக விளங்கும்.’
இறுதியாக சில புல்லுருவிகளால் வரும் ஆபத்தை எச்சரிக்கவும் அவர் மறக்கவில்லை:
‘இந்து மதத்திலேயே பிறந்து இந்துவாக வளர்ந்து, அந்த இந்து மதத்தையே அழிக்க ஆசைப்படுகிற சில ‘ஐயாக்கள்’ இருக்கிறார்கள்! இவர்கள்தாம் இந்து மதத்துக்கு ஆபத்து விளைவிப்பவர்கள்! இவர்களிடத்தில் நாம் விழிப்போடு நடந்து கொள்ள வேண்டும்!
…
இந்து மதத்தில் குறை காண்பவர்கள் எல்லாம் உமியை அரிசி எனக் கருதி உண்ணுகிறவர்களே! உமியை நீக்கி அரிசியை உண்ணத் தெரிந்தவர்களே இன்று உண்மையான இந்துக்கள்!’
தமிழ்வாணனின் எழுத்துக்களில் இருக்கும் இந்தத் தெளிவு தமிழ் பத்திரிகைத் துறையில் இன்றைக்கும் மிக அரிதாகவே இருக்கிறது. நேர்மை, எளிமை, ஆனால் தீர்க்கமான அறிவு சார்ந்த பார்வை ஹிந்து தருமம் குறித்த தமிழ்வாணன் எழுத்துக்களில் ஒளிவிட்டு மிளிர்கிறது.
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளும், அருட்திரு சுவாமி சித்பவானந்த சுவாமிகளும், அருட்பெருவள்ளல் மதுரானந்த சுவாமிகளும் தம் இயல்பான ஆன்மிகப் பணியின் மூலம் ஏற்படுத்திய ஆன்மிக ஆரோக்கிய சூழலால் திராவிட இயக்க விஷகிருமிகளின் வளர்ச்சியை மட்டுப்படுத்தினர். சினிமா துறையில் தேவர், கோபாலகிருஷ்ணன், ஏ.பி.நாகராஜன் ஆகியோர் திராவிடப் பிரசாரத்தைத் தங்களுக்கே உரிய முறையில் எதிர்கொண்டனர். பத்திரிகைத் துறையில் திராவிட இயக்கத்தை வெகு தைரியமாக துளியளவு சமரசமும் இல்லாமல் எதிர்த்தவர் தமிழ்வாணன்.
தமிழ்நாட்டில் இந்துத்துவ இயக்கங்கள் வளர இப்பெருமக்களின் நினைவுகள் போற்றப்பட்டு பொது மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும்.