Posted on Leave a comment

சொந்த நாட்டின் அகதிகள் – The Edge (2010) | அருண் பிரபு

இரண்டாம் உலகப் போர் முடிந்த காலகட்டத்தில் ஜெர்மானியர்களின் கைதிகளாக இருந்த சிவப்பு ராணுவத்தினர், சோவியத் அமைப்பின் பொது மக்கள் என்று பலரும் தங்களுக்கு விடுதலை என்று மகிழ்ந்து கொண்டாடினர். ஜெர்மனி தோற்று சோவியத் யூனியன் வென்ற நாடுகளின் கூட்டமைப்பில் இருந்ததால் நாட்டுக்குத் திரும்பி நிம்மதியாக வாழலாம் என்று கனவு கண்டனர். ஜெர்மன் சிறைகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட அவர்கள் அனைவரும் தங்கள் ஊர்களுக்குச் செல்லாமல் சைபீரியச் சிறை முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். ஜெர்மானியச் சிறைகளில் அவர்களுக்கு நாஜி கொள்கை கற்பிக்கப்பட்டிருந்தால் அதிலிருந்து விடுவித்து கம்யூனிசத்தை மீண்டும் கற்பிக்க என்று காரணம் சொல்லப்பட்டது. ஆனால் அது ஒரு கொடுமையான சிறை. போனால் திரும்பி வருவது மிகவும் அரிது.

அப்படி ஒரு வதைமுகாமில் நடப்பதே கதை. ரயில்வண்டிகளைப் பழுதுபார்க்கும் அத்தகைய ஒரு முகாமுக்கு இக்னாத் என்கிற போர்வீரரும் ரயில் இஞ்சின் ஓட்டுநருமான ஆள் வந்து சேருகிறார். போர் வீரர் என்றாலும் தறிகெட்ட வகையில் ரயில் இஞ்சினை ஓட்டி சோவியத் சொத்துக்கு சேதம் விளைவித்த குற்றத்துக்காக அவர் அங்கே அனுப்பப்படுகிறார். ஜெர்மானியர் ஒருவருடன் போட்டி போட்டு ரயில் இஞ்சின் ஓட்டியதன் விளைவு இது. முகாமில் ஒரே ஒரு ரயில் இஞ்சின் உள்ளது. அதை பழுது நீக்கி சரியாக ஓடவைக்க வேண்டும், பராமரிக்க வேண்டும். இதுதான் வேலை. ரயில்பாதை முகாமில் இருந்து பாதி வழியில் ஒரு ஆற்றுப் பாலத்தோடு முடிகிறது. போரில் எதிரிகள் வராமல் இருக்க பாலத்தை செம்படையினரே உடைத்துவிட்டார்கள். இன்னும் கட்டவில்லை. ஆகவே ரயில் வேறு வழியில் போய் வரும்.

மாற்று இஞ்சின் எங்கே என்று இக்னாத் கேட்க, இருப்பதைச் சரி செய்யச் சொல்கிறார் முகாம் தலைவர் (கட்சி நியமித்த கங்காணி). இஞ்சின் இருக்குமிடம் வருகிறான் இக்னாத். அங்கே லாத்வியா, லித்துவேனியா உள்ளிட்ட நாட்டு வேலையாட்கள் இருக்கிறார்கள். அவர்கள் இஞ்சின் முதல் தொடர்வண்டி, ரயில் பாதை என்று எல்லாவற்றையும் பழுது பார்க்கக் கற்றவர்கள். அங்கே வரும் இக்னாத் இஞ்சினைச் சுற்றிப்பார்த்துவிட்டுச் சில கேள்விகள் கேட்கிறான். குழுவின் தலைவர் பதில் சொல்ல “முட்டாளே! இதைச் சரி செய்ய இத்தனை நாட்களா? நான் ஒரு ஆள் சரி செய்வேன் தெரியுமா?” என்று கத்துகிறான். வயதான குழுத்தலைவர் ஏதோ சொல்ல அவரை அடித்து “லித்துவேனிய நாய்கள் ஒரு வேலைக்கு லாயக்கில்லை” என்று திட்டுகிறான்.

அவர்கள் மனம் நொந்தாலும் ஏதும் சொல்லாமல் “ஐயாவே சரி செய்து கொள்வாராம். வாருங்கள் போகலாம்” என்று போய்விடுகிறார்கள். கைதிகள் என்று சைபீரியச் சிறையில் இருந்தாலும் ரஷ்யனை பிறமொழிக்கைதி எதிர்த்தால் தண்டனை தனியாக உண்டு. அது சோவியத் உள் அரசியல். அவர்கள் போகும்போது இக்னாத்துக்கு தாங்கமுடியாத தலைவலி வருகிறது. துடிக்கிறான். கைதிகள் முகாம் தலைவரிடம் சொல்கிறார்கள். அவர் அவனை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார். அங்கே இக்னாத்துக்கு இரு முறைகள் தலையில் அடிபட்டதும் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டதும் கண்டறியப்படுகிறது.

முகாமில் சோஃபியா என்ற பெண்ணுடன் இரவைக் கழிக்கிறான் இக்னாத். அது வரையிலான சோஃபியாவின் காதலனை மற்ற மெக்கானிக்குகள் கேலி செய்கிறார்கள். மறுநாள் ரயிலை மாற்றுப் பாதையில் ஓட்டிச் செல்லச் சொல்கிறான் இக்னாத். மாற்று ரயிலின் ஓட்டுநர் அப்படிச் செய்யக்கூடாது என்ற சட்டம் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். ஆனாலும் போகிறான் இக்னாத். ஒரு கட்டத்தில் அவனது ரயில் இஞ்சினில் நீராவியைக் கட்டுப்படுத்தும் லீவர் பிய்த்துக் கொண்டு போகிறது. நீராவி வண்டிக்குள் அடித்து கரி அள்ளிப்போடும் உதவியாளர் வெளியே தள்ளப்படுகிறான். சாக்கு ஒன்றை வைத்து குழாயில் வரும் நீராவியைக் கட்டுப்படுத்த முயலும் இக்னாத்தும் தூக்கி எறியப்படுகிறான். வண்டி கொஞ்ச தூரம் ஓடி நிற்கிறது. விசாரணையில் அதிகாரி அவனைக் கடிந்து கொள்கிறார். 60 மைல் வேகத்தில் ஓட்டியது தவறு என்கிறார். 70 வரை போகும் என்கிறான் இக்னாத்.

கீழ்ப்படியாமை, பொறுப்பின்மை என்று குற்றங்கள் சுமத்தப்பட்டு இஞ்சின் ஓட்டுநராக இருந்த இக்னாத் கரி அள்ளிப் போடும் உதவியாளராக பணியிறக்கம் செய்யப்படுகிறான். தலைமை அதிகாரி வந்தால் உன்னைத் தொலைத்துவிடுவார் என்று எச்சரித்து அனுப்புகிறார்கள். இக்னாத் வேலை செய்யும் வண்டியில் ஓட்டுநராக சோஃபியாவின் காதலன் வருகிறான். அவன் இக்னாத்தைப் பழி வாங்க கேலி செய்கிறான், சண்டை வருகிறது. ஓட்டுநரை அடித்த இக்னாத்தை தண்டனை ஏதுமின்றிப் பணிமாற்றம் செய்கிறார்கள். காரணம் அவன் ரஷ்யன், ஓட்டுநர் லாத்வியன். இருப்புப் பாதை கண்காணிப்பில் பணிக்குச் சேரும் இக்னாத் அங்கே ஒரு ஆளைச் சந்தித்துப் பேசுகிறான். அவன் சிறைக்குள் பொருட்களைக் கடத்தி வந்து விற்கும் கள்ள வியாபாரி. ஆனால் கட்சி ஆள். அவன் இக்னாத்தின் பதக்கத்தை வாங்கிக் கொண்டு அவனுக்கு வேறொரு ரயில் இஞ்சின் இருக்கும் இடத்தைச் சொல்லி, அது கணக்கில் வரவில்லை, ஆகவே நீயே வைத்துக் கொள் என்கிறான்.

இக்னாத் அதைத் தேடி உடைந்த பாலத்தைத் தாண்டிப் போகிறான். அங்கே ரயில் இஞ்சினைப் பார்க்கிறான். யாரோ துப்பாக்கியால் சுடுகிறார்கள். ஆளைக் கண்டுபிடித்து துப்பாக்கியை உடைத்து எறிகிறான். சுட்டது ஒரு பெண். அவள் ஓடுகிறாள். வண்டியைச் சோதிக்கும் இக்னாத் தலைவலி வந்து துடிக்கிறான். அந்தப் பெண் அவனை அடித்துப் போட்டுவிட்டு ஓடி ஒரு மரத்தில் ஏறிக் கொள்கிறாள். முகாமில் இக்னாத்தைத் தேடுகிறார்கள். தலைமை அதிகாரி ‘வரட்டும் அவன்! என்ன ஆகிறான் பாருங்கள்’ என்று மிரட்டிவிட்டுச் செல்கிறார். இங்கே இக்னாத் மரத்தை வெட்டி அந்தப் பெண்ணைத் தண்ணீரில் தள்ளிவிடுகிறான். அவர் ஜெர்மனில் பேச இவன் ரஷ்ய மொழியில் பேச ஒன்றும் புரியாமல் சண்டையிடுகிறார்கள். பிறகு வண்டியைச் சரி செய்ய என்று ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள். அவள் பெயர் எல்சா என்று தெரியவருகிறது. ரஷ்யாவுக்கு வந்த ஜெர்மானிய பொறியாளரின் மகள். ஹிட்லருக்கும் ஸ்டாலினுக்கும் (ரஷ்ய அதிபர்) முட்டிக் கொண்டதும் ஜெர்மானியர்கள் கொல்லப்படுகிறார்கள், சிலர் தப்புகிறார்கள். இந்தப் பெண் தப்ப முடியாமல் கம்யூனிஸ்ட்டு கட்சிக் கொலைகாரர்களுக்குத் தப்பிக் காட்டில் ஒளிந்து வாழ்கிறாள்.

ரயில் இஞ்சினை சரி செய்து ஓட்டுகிறான் இக்னாத். அந்தப் பெண்ணுக்கு இக்னாத் மீது மரியாதை பிறக்கிறது. உடைந்து போன ரயில் பாலத்தைச் செப்பனிட்டு ரயில் இஞ்சினை முகாமுக்குக் கொண்டு வருகிறார்கள். பாலம் உடையத் தொடங்குகிறது. இக்னாத் இஞ்சினைப் பின்னால் கொண்டு சென்று அதிவேகமாக ஓட்டிக் கொண்டு வந்து பாலத்தைக் கடந்து விடுகிறான். பாலம் பளு தாங்காமல் இடிந்து விழுகிறது. ஆனால் ரயில் பத்திரமாக மறுபக்கம் வந்துவிடுகிறது. முகாமில் சோஃபியா தன் காதலனைப் பிரிந்து போகச் சொல்கிறாள். அவளுக்கு இக்னாத்தின் மீது காதல் பிறக்கிறது. ஆனால் இக்னாத் தனது புதிய ரயில் இஞ்சின், ரிப்பேர், மெக்கானிக் வேலை என்று இருக்கிறான். அங்கே உதவியாளன் ஒருவன் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயல இக்னாத் அவனை அடித்துத் துரத்துகிறான். அவளுக்குப் புதுத்துணிகள் தருகிறான். ரயிலைக் கழுவிச் சுத்தம் செய்து லித்துவேனிய மெக்கானிக்கின் உதவி கேட்கிறான். அவர் மறுக்க அவரை அடிக்கிறான். எல்சா ஏன் என்று கேட்க ரஷ்யன் அடித்தால் கேட்கவியலாது என்கிறான். ஆனால் ரயில் சுத்தமானால் மட்டுமே தான் அதில் வேலை செய்யவிருப்பதாக அவர் சொல்கிறார். இக்னாத் தானே ரயில் இஞ்சினை முழுதாகச் செப்பனிட்டுப் பளபளக்க வைக்கிறான்.

முகாம் அதிகாரி கோலிவனோவ் ஒரு கையை போரில் இழந்தவர். அவர் இக்னாத் பற்றி அறிக்கை எழுதுகிறார். இடதுகையால் எழுத வரவில்லை. கண்ணீர் விட்டபடி ஸ்டாலினின் சிறிய மார்பளவுச் சிலை முன்பு நின்று கொண்டு “காம்ரேட்! உங்கள் உத்தரவுப்படி போருக்குப் போனேன். சண்டை போட்டேன். உங்கள் உத்தரவுப்படி அரசியல் ஆபீசர் ஆனேன். உங்கள் உத்தரவை மீறியதில்லை காம்ரேட். ஆனால் எனக்கு இடது கையால் எவ்வளவு பழகினாலும் எழுத வரவில்லை. மன்னித்துவிடுங்கள் காம்ரேட்” என்று பேசுகிறார்.

காம்ரேடுக்கு உண்மையானவன் என்று எங்கும் எப்போதும் தெரிவித்துக் கொண்டே இருக்கவேண்டும் இல்லாவிட்டால் துரோகிப் பட்டம் கட்டிவிடுவார்கள் என்ற கம்யூனிஸ்ட் ஆட்சி முறையை இது காட்டுகிறது. யாராவது பார்த்து காம்ரேடின் சிலைக்கு முன் நின்று காம்ரேடிடம் பேசுகிறார் என்று உயரதிகாரிகளிடம் சொன்னால் உண்மையானவன் என்பதற்கு அது கூடுதல் அத்தாட்சி.

பழுது நீக்கிய ரயில் இஞ்சினை ஓட்டிப் பார்க்கிறார்கள். அதற்கு குஸ்டாவ் என்று பெயர் வைக்கிறார்கள். அப்போது குடித்துவிட்டு ‘என் மக்களே என்னோடு பழகுவதில்லை’ என்று புலம்புகிறான் இக்னாத். சோஃபியாவின் மகன் எல்சாவுடன் நன்றாக விளையாடுகிறான். சோஃபியா பழைய நினைவுகளில் மூழ்குகிறாள். 1945ல் ஜெர்மன் சிறையில் இருந்து தப்பி வரும் போது இறந்து போன ஒருவரின் குழந்தையை எடுத்துக் கொண்டு தன் காதலன் ஸ்டிஃபானுடன் வருகிறாள். இர்குக் நகரில் ஒரு தெரிந்த இடம் இருக்கிறது, அங்கே போய் பாஸ்போர்ட் வாங்கிக் கொள்வோம், புதிய வாழ்க்கை தொடங்குவோம் என்கிறான் ஸ்டிஃபான். அப்போது சோஃபியா தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று சொல்கிறாள். 16 வயதில் நோய்வாய்ப்பட்டு கருப்பை பலமிழந்து போனதைச் சொல்கிறாள். பாஷ்கா (அவளது குழந்தை) யார் என்று கேட்க அவன் ஒரு பரிசு என்கிறாள். வழியில் ஒரு பனிக்கரடி ரயிலில் அடிபட்டு இறந்து போகிறது. ரயிலை ரிப்பேர் செய்ய முகாமுக்கு வருகிறார்கள். அங்கே சிறைப்படுத்தப்படுகிறார்கள். கரடியை ஒரு வாரத்துக்கு வைத்துத் தின்கிறார்கள் அங்குள்ள மக்கள்.

மூத்த காமிசார் ஒரு ரயிலில் வருகிறார். வந்தவுடன் வியாபாரியாக இருக்கும் கட்சி ஆளிடம் பேசி இக்னாத்தின் பதக்கங்களைத் திருப்பித் தரச் சொல்கிறார். ஒரு ஜெர்மானியப் பிரஜையை நான்கு ஆண்டுகள் இங்கே வைத்துள்ளீர்கள், தகவல் சொல்லவில்லை. ஏன் என்று கேட்கிறார். வியாபாரி அவளைத் தன் கையாலேயே கொல்ல முயன்றதாகவும், இக்னாத் அவளைக் காப்பாற்றுவதாகவும் சொல்கிறார். மற்றொரு ஜெர்மானியப் பெண் பற்றிக் கேட்க பதில் இல்லை. திட்டியபடி எழுந்து அலுவலகத்துக்குப் போகிறார் காமிசார். முகாம் அதிகாரியை அழைத்து அடித்துத் துவைக்கிறார். அங்குள்ளவர்களிடம் “உங்களுக்கெல்லாம் திமிர் அதிகரித்துவிட்டது, குடித்துக் கூத்தடிக்கிறீர்கள். ஜெர்மானியர்களை சோறு போட்டு வளர்க்கிறீர்கள். உங்களை யாரும் தண்டிப்பதில்லை என்று திமிரா? காம்ரேட் ஸ்டாலின் உங்களை இங்கே வைத்துப் பராமரிப்பது மக்களின் கோபத்தில் சிக்கி நீங்கள் கொல்லப்படக் கூடாது என்ற நல்ல மனதின் அடிப்படையில். ஆனால் அதை நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது உங்களுக்குத் தண்டனை நேரம் என்பதைக் காட்டுகிறது” என்று சொல்லியபடி எல்சாவைப் பிடித்து ஒரு ரயில் பெட்டியில் தள்ளிப் பூட்டி சுடத் தொடங்குகிறார். அவளைக் கொல்லாதீர்கள் என்று அங்குள்ள மக்கள் சொல்ல, சோஃபியாவின் குழந்தையை உள்ளே தூக்கிப் போட்டுவிட்டு யாராவது நெருங்கி வந்தால் சுடுவேன் என்று சொல்லிவிட்டு ரயில் இஞ்சினை நோக்கிப் போகிறார்.

சோஃபியா ஓடிப்போய் பெட்டியைத் திறக்க முயல்கிறாள். அதிகாரி ஃபிஷ்மேன் அவளைச் சுட்டுக் கொல்கிறார். ‘காம்ரேட் ஸ்டாலின் அளவுக்கு என்னிடம் கருணை கிடையாது. நான் தவறுக்கு தண்டனை கொடுக்கத்தான் செய்வேன்’ என்று சொல்லிவிட்டு இஞ்சினில் ஏறுகிறார். அதிலிருந்த வயதான ஓட்டுநர் ‘அந்தப் பெண்ணைக் கொன்றது தவறு. நீயே வண்டியை ஓட்டிக் கொள்’ என்று சொல்லி இறங்குகிறார். அவரைத்திட்டி ‘உன்னைப் பற்றி அறிக்கை தருகிறேன்’ என்றபடி வண்டியை ஓட்டுகிறார் காமிசார் ஃபிஷ்மேன். தன் குஸ்டாவ் வண்டியில் வரும் விவரம் அறிந்து காமிசாரைத் துரத்திச் செல்கிறான் இக்னோத். மக்கள் வேறொரு வண்டியில் அவரைத் துரத்துகிறார்கள். கூட்டம் சேர்ந்ததும் கோலிவனோவ் ஃபிஷ்மேனின் அறிக்கைகளுக்கு உடன்பட மறுக்கிறார். வேறு வழியின்றி ஃபிஷ்மேன் ‘என் மகளைப் பார்க்கப் போகிறேன்’ என்று சைக்கிளில் போகிறார். போகும் வழியில் தடுக்கி விழுந்து மீண்டும் எழுந்து போகிறார். அவருக்கு அவ்வப்போது நினைவு தப்பிவிடுகிறது என்கிறார் முகாம் மருத்துவர்.

சோஃபியாவின் மகன் பாஷ்காவுடன் எல்சாவும் இக்னாத்தும் தப்பிச் செல்கிறார்கள். ஓராண்டு சைபீரியாவில் சுற்றித் திரிந்து பிறகு ஒரு ரயில் டிப்போவில் தெரிந்த ஒருவர் மூலம் இக்னாத்துக்கு வேலையும் வேறு பெயரில் ஆவணங்களும் கிடைக்கின்றன. குடும்பத்தோடு அங்கே இருக்கிறார்கள். மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. மகிழ்வாக எல்சா பாடுவது போல படம் முடிகிறது.

இந்தப் படம் 2010ல் வெளிவந்தது. அகாடமி விருதுக்கு (ஆஸ்கர்) சிறந்த வெளிநாட்டு மொழிப்படம் என்று பரிந்துரை செய்யப்பட்டது. விருது கிடைக்கவில்லை. சிறந்த ரஷ்ய மொழிப்படமாக தேர்தெடுக்கப்பட்டது.

இந்தப் படத்தின் மூலம் சைபீரியச் சிறைகளில் மக்கள் பட்ட கொடுமைகளை விவரிக்க எண்ணியதாக இயக்குநர் அலெக்சி உசிடெல் தெரிவித்துள்ளார். ரஷ்யர்கள் மற்ற மொழி, வட்டார சோவியத் மக்களை அடிமைகள் போல நடத்தியதையும் குறிப்பிட்டுள்ளார் அவர். உலகமே வியக்கும் உன்னத கம்யூனிசம் என்று பேசும் இவர்கள் சொந்த நாட்டு மக்களையே அடிமைப்படுத்தி சிறைவைத்த கொடுமைக்காரர்கள். இதை அவர்களே ஒவ்வொன்றாக வெளியே சொல்வது கம்யூனிஸ்ட்டுகளின் உண்மை முகத்தை உலகுக்குக் காட்டுகிறது.

Leave a Reply