Posted on Leave a comment

திருநாராயணநல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

காலம் – பதினொன்றாம் நூற்றாண்டு; இடம் – மதுரை, திருவானைமலை – திருமாலிருஞ் சோலை செல்லும் பாதை.

‘தட தட தட..’ என்று வெண்ணிறப் புரவிகள் அந்த வண்டிப் பாதையில் அதிவேகத்தில் பறந்து கொண்டிருந்தன. உயர்சாதிப் புரவி ஒன்றில் ஆஜானுபாகுவான ஓர் இளைஞன் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்க்க ஒரு மன்மதனைப் போல இருந்தாலும், முகத்தைச் சற்றே மறைத்துத் துகிலொன்று கட்டியிருந்தான். அவனைத் தொடர்ந்து இரண்டு பிரிவுகளில் சிலர் வர, கூப்பிடு தூரத்தில் மேலும் சிலர் வந்து கொண்டிருந்தார்கள். இளைஞன் போய்க் கொண்டிருந்தபோது திடீரென்று வலது திசையில் ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. அதுவோ அடர்ந்த காடு. அந்த வழி திருமாலிருஞ்சோலை மலையிலிருந்து நரசிங்கமங்கலத்தை இணைக்கும் வண்டிப்பாதை.

வேகமாகப் பறந்து கொண்டிருந்த அந்தப் புரவியை இளைஞன் கணுக்கால் அசைவில் நிறுத்தினான். அதைக் கண்டு, பின்னால் வந்த அனைவரும் சற்று அதிர்ச்சியோடு, ‘இவர் இந்த காட்டுப் பகுதிகளில் நிறுத்த வேண்டிய அவசியமில்லையே’ என்று எண்ணியபடி, என்னவென்று அறிய அவனை நோக்கி வேகமாக விரைந்தார்கள்.

சப்தம் வந்த திசையில், அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் நான்கைந்து பேர் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்க்கும்போது ஸ்ரீவைஷ்ணவ இராமானுஜ அடியார்கள் போன்று அந்த இளைஞனுக்குத் தெரிந்தது. அந்த இடத்திலிருந்து மேற்கே சற்று தூரத்தில் ஒரு ஏரி இருந்தது. அங்கிருந்து வரும் இதமான குளிர்க் காற்றில் இவர்கள் மேலாடைகள் பறந்து கொண்டிருந்தன. அவர்கள் அந்த ஏரியை நோக்கிச் செல்வதற்கு முற்பட்டு அதை நோக்கி நடந்து கொண்டிருப்பதையும் அந்த இளைஞன் கவனித்தான். இந்த அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அந்த இளைஞனுக்கும் அறிந்து கொள்ளத் தோன்றியது. அவர்களை நோக்கி விரைந்தான். தங்களை நோக்கி ஒருவர் வருவதைக் கண்டு, சற்றே தயங்கி நின்றார்கள். இதைக் கவனித்த இளைஞனோடு வந்த மற்றவர்களும் அங்கு விரைந்தார்கள்.

“தாங்கள் எல்லாம் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? இந்த அடர்ந்த காட்டுப் பாதையில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் என்னிடம் சொல்லுங்கள்” என்றார் இளைஞன்.

ஏற்கெனவே ஒருவித பயத்தில் இருந்த அந்த அடியார்கள், இந்தக் காட்டுப்பகுதியில் யாரோ ஒருவர் திடீரென்று வந்து கேட்டதால் மேலும் அதிர்ந்தார்கள். அதை இளைஞனும் புரிந்துகொண்டான. அவர்களின் தோற்றம் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர்கள் போல் தெரியவில்லை.

‘தயங்காமல் கூறலாம், நீங்கள் அனைவரும் வேற்று ஊரிலிருந்து வருபவர்கள் போல் தெரிகிறது’ என்ற இளைஞனின் மொழிக்கு, ‘நாங்கள் ஸ்ரீரங்க தேசத்தவர்கள். இங்கு திருமாலிருஞ்சோலை வந்தோம். உச்சியானதால் இந்தப் பொழுதின் கர்மாக்களைச் செய்ய அந்த ஏரியை நோக்கிப் போய் கொண்டிருக்கிறோம்’ என்று அந்த நால்வரில் ஒருவர் பதில் தந்தார். இளைஞனுக்கு அவர்களிடமிருந்து மேலும் சில விஷயங்கள் தெரியக்கூடும், அதனால் அவர்களைப் பின்தொடர்வது நல்லது என எண்ணினான்.

‘சரி, நானும் வருகிறேன். புரவிக்கும் கொஞ்சம் நீர் தேவைப்படுகிறது’ என்று கூறி பின்தொடர்ந்தான்.

‘இப்போது திருவரங்கம், திரிசிராமலை சோழ தேசத்தில் உள்ளது. உங்களுக்கு இந்த ஏரி பற்றி எதுவும் தெரியாதென்று நினைக்கிறேன்’ என்றான் இளைஞன்.

‘இல்லை. நாங்கள் இப்போதுதான் இந்த வழி வருகிறோம். நரசிங்கமங்கலம் சென்றுகொண்டிருக்கிறோம்’ என்றார் ஒருவர்.

‘ஓ! நல்லது. நானும் அவ்வழிதான் போகிறேன். நரசிங்கமங்கலம் இதே சோழர்களோடு போரிட்டு வென்ற பின் நெடுஞ்சடையன் பராந்தகப் பாண்டியன் நரசிம்மர் திருக்கோவிலும், சதுர்வேதி மங்கலமும் கட்டமைத்தார். பின்னர் இந்தப் பகுதியும் சிலகாலம் சோழர்களுக்குப் போயிற்று. அப்போது பராந்தகச் சோழன் காலத்தில், சோழநாட்டுப் புறங்கரம்பை நாட்டைச் சேர்ந்த அருணிதிகலியன் என்பார் இந்தக் கோவிலுக்குச் சில தானங்கள் தந்து, ஒரு ஏரியும் ஏற்படுத்தினார். அவர் தானமாய் தந்த வயல்கள் இதன் மூலம் நீர் பெறுகிறது. அதன் வருவாய் இறையிலியாக நரசிம்மர் கோவிலுக்கும், அங்கு கைங்கரியம் செய்யும் அந்தணர்களுக்கும் செல்கிறது. பின்னர் வந்த பாண்டிய மன்னர்கள் இவற்றை முறைப்படுத்தினர்’ என்று அந்த இளைஞன் விளக்கி வரும்போதே அந்த ஏரியும் வந்தது.

‘ஸ்வாமி, அடியேன் ஆரணந் தோழ நின்றான். நீங்கள் சொல்லும் போதே நரசிங்கமங்கலம் பெருமான் கண்முன்னே வருகிறார். இந்த ஏரியின் திருநாமம் என்னவோ?’ என்றார் ஒருவர்

‘கலியனேரி’ என்றான் இளைஞன்.

‘ஆஹா. என்ன புண்ணியம் செய்தோம்’ என்று அவர்கள் அந்த ஏரியை நோக்கி விழுந்து வணங்கினார்கள்.

மிதமான அலைகள் அடித்துக் கொண்டிருந்தன. அந்த அலைகள் அவர்களை அழைப்பது போல் இருந்தது. அவர்களில் ஒரு முதியவர், ‘அன்றாயர் குலமகளுக்கு அரையன் தன்னை அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான் தன்னை..’ என்ற திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகம் ஒன்றைச் சொல்லிக்கொண்டே ஏரி நோக்கி விரைந்தார். அனைவரும் அவரைத் தொடர்ந்தார்கள். அந்த இளைஞன் உட்பட அனைவரும் உச்சிகால கர்மாவை தங்கள் முறைப்படி முடித்தார்கள்.

‘அரசே தாங்களா?’ என்றார் அந்த நால்வரில் ஒருவர், அந்த இளைஞனைப் பார்த்து. ஆம், அந்த இளைஞர் தன் தலைக்கச்சு எல்லாம் களைந்திருந்தார்.

‘ஆம், நான்தான் விசயா’ என்று விடை பகர்ந்த இளைஞனை விசயன் உட்பட அனைவரும் வியந்து பார்த்தனர்.

‘என்ன சொல்கிறாய் விசயா. அரசரா?’ என்றார் முதியவர்.

‘ஆம் ஸ்வாமி. எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீவல்லபப் பாண்டியன்’ என்றான் விசயன்.

‘இப்போதாவது நீங்கள் எல்லாம் யார், இங்கு பாண்டிய நாட்டில் என்ன விஷயமாய் இருக்கிறீர்கள் என்று சற்றே கூறலாம். என்னால் முடிந்த உதவியைச் செய்வேன்’ என்றார் அரசன்.

அங்கு மர நிழலில் அனைவரும் அமர்ந்திருந்தார்கள். அந்த முதியவர் தொடங்கினார். ‘அரசே, சோழ மண்டலத்தில் குழப்பங்கள் அதிகம் இருப்பது தாங்கள் அறிந்ததே. சில வருடங்களுக்கு முன் சோழன் செய்த கொடுமையால் தாயைப் பிரிந்து இருக்கும் சேய் போல் நாங்கள் உள்ளோம். இந்த உலகத்திற்க்கே ஆசாரியரான எங்கள் இராமானுசர் இப்போது வடக்கே இருக்கிறார். சோழன் செய்த கொடுமையால் நாங்கள் அனைவரும் அரங்கமாநகரை விட்டு ஆங்காங்கு இருக்கிறோம்..’ என்று சொல்லும் போதே அவர் அழத் தொடங்கிவிட்டார்.

‘ஆம். யாம் அறிந்தோம். இராமானுஜருக்கும், திருவரங்க வைணவர்களுக்கும் சோழன் செய்த கொடுமைகளைக் கொஞ்சமும் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இன்னும் சில திங்கள்களில் நிலைமை அரங்கன் அருளால் சீராகும்’ என்றார் அரசர். பின் ஏதோ சொல்லத் தொடங்கினார். ‘கூரத்தாழ்வானும், பெரிய நம்பியும் கூட…’ என்றவுடன் விசயன், ‘அரசே, இருவரின் கண்களும் சோழனால் பறிக்கப்பட்டன. அந்தக் கொடுமையால் பெரிய நம்பி ஸ்வாமி வைகுந்தம் அடைந்தார். ஸ்வாமி கூரத்தாழ்வான் திருமாலிருஞ்சோலையில் இருந்தார். அங்கிருந்து தான் நாங்கள் வருகிறோம்.’

‘அது பற்றித்தான் கேட்க வந்தேன். ஸ்வாமி கூரத்தாழ்வானைத் தரிசித்தீர்களா? நலமுடன் இருக்கிறாரா?’ என்றார் அரசர்.

‘அழகன் மடியில் இருக்கும் போது கவலையில்லை. ஆனால் ஸ்வாமி திருவரங்கத்து எம்பெருமானையும், எம்பெருமானாரையும் நினைத்து ‘சேர்வது அடியேன் எந்நாளோ?’ என்று உருகிக் கொண்டிருக்கிறார். இந்தத் தசையிலும் அவரையும் மேலிட்டு ‘சுந்தரபாஹு ஸ்தவம்’ என்று திருமாலிருஞ்சோலை அழகர் மீது கவி புனைந்திருந்தார். அவற்றை இப்போதுதான் அனுபவித்து வந்தோம்.’

‘ஆஹா. ஸ்வாமிக்கு ஈடில்லை. இந்தக் கொடிய நேரத்திலும் திடமாய் இருந்து நம் அனைவரையும் அவர்தான் வழிப்படுத்த வேண்டும்’ என்றார் அரசர்.

‘அரசே, அழகனும், பரமஸ்வாமி பெருமானும் ஸாத்சாத் அந்த இராம, கிருஷ்ண அவதாரங்கள்தான். ஆழ்வார்கள், உபநிஷத்துக்கள் அனுபவித்ததை எல்லாம் நம் ஆழ்வான் இந்த ஸ்தவத்தில் காட்டியுள்ளார்.  ‘ஸர்வாபீஷ்டம் மம மத்குருரோச் ச ததஸே நோ கிம் வநாத்ரீச்வர’, எங்களுக்கும், ஆசாரியர் இராமானுஜருக்கும் ப்ரியமானதைத் தந்தருள வேண்டும், முன்பு போல் மீண்டும் திருவரங்கம் வந்து எம்பெருமான் கைங்கர்யம் செய்யவேண்டும்’ என்ற இந்த வரிகளைத்தான் அவர் திரும்பத் திரும்பச் சொல்லிவந்தார். எங்களுக்கும் அவ்வாறேதான் அந்த அரங்கனிடம் வேண்டுதலாய் இருந்தது. எங்கள் இராமானுஜர் மீண்டும் திருவரங்கம் பெரிய கோவில் வரவேண்டும். அந்த மாநிதியைக் காப்பாற்றி இந்த தரிசனத்தை மேலும் வளர்க்கவேண்டும்’ என்றார் அந்தப் பெரியவர்.

‘ஆம், அதோடு இந்தப் பாண்டிய நாடும் இழந்த தன் இராஜ்யங்களைத் திரும்ப அடைய வேண்டும். அந்த சோழன் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது. முன் போல் இப்போது யாருக்கும் தொந்தரவு தரும் நிலையில் சோழ நாடு இல்லை. அரசன் வீழ்ந்த நிலையில் நாடு ஒரு குழப்ப நிலையில்தான் இருக்கிறது. நீங்கள் அனைவரும் இப்போது திருவரங்கம் மீண்டும் செல்லலாம்.’

‘ஆம் மன்னா, இது பற்றி உறங்காவில்லி தாசர் எங்களிடம் சொன்னார்’ என்ற விசயனை இடைமறித்து ‘யார் மல்லர்கள் தலைவன் தனுர்தாசரா?’ என்றார் சீவல்லபன்.

‘ஆம், அவர்தான் அரசே. இப்போது திருமாலிருஞ்சோலையில் எங்களோடு இருந்தார். அவர்தான் இந்த விஷயங்களைச் சொல்லி, கூரத்தாழ்வான் ஸ்வாமியை திருவரங்கம் அழைத்துக் கொண்டு செல்கிறார்.’

‘ஆஹா, நல்ல காரியம். இந்தப் பாண்டியன் செய்ய நினைத்ததைச் செய்திருக்கிறார். அரசாங்கத்தில் இருந்தவருக்கு மதிநுட்பம் சொல்லித்தர வேண்டுமா என்ன? இந்தப் பாண்டிய நாடு மட்டும் இப்போது சோழனுக்கு அடிமைப்பட்டிருக்காவிட்டால், உங்களைப் போன்ற திருமால் அடியார்கள் இப்படி ஒவ்வொரு ஊர்களிலும் தஞ்சம்புகும் நிலை இருக்காது. கூடிய சீக்கிரம் இந்த ஆட்சி முடிவுக்கு வரட்டும்’ என்று பெருமூச்சு விட்டு அரசர் தொடர்ந்தார்,

‘ஒரு விந்தை பார்த்தாயா விசயா, இராமனுசரால் திருவரங்கனின் செந்தாமரைக் கண்களைக் காட்டி திருத்தப்பட்ட தாசர், அதே கண்ணழகை தினமும் தரிசித்த ஆழ்வான் இப்போது தன் கண்களை இழந்து, அந்த அரங்கனை மனக்கண்ணால் தரிசிக்க தாசரோடு திருவரங்கம் செல்கிறார். எல்லாம் அந்த அரங்கன் விளையாட்டா?’ என்று அரசரும் வருந்தினார்.

‘மன்னா, சரியாகச் சொன்னீர்கள். அவை என்ன சாதாரண கண்களா? அரங்கருக்கே அந்த அழகு கண்களில்தானே உள்ளது. நீண்ட அப்பெரியவாய கண்கள் எல்லாரையும் பேதமை செய்யாமலா இருக்கும்.

எழிலுடைய அம்மனைமீர்! என்னரங்கத்து இன்னமுதர்*

குழலழகர் வாயழகர் கண்ணழகர்* கொப்பூழில்

எழுகமலப் பூவழகர் எம்மானார்* என்னுடைய

கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே

எப்படி வேதத்தில் ‘ஜிதந்தே புண்டரீகாக்ஷ’ என்னும்படி ‘என்னை உன்னைக்கேயாக்க வேண்டும்’ என்று அந்த செந்தாமரைக் கண்ணழகிற்குத் தோற்றது பற்றி சொல்லியதோ அது போலே ஆண்டாள் நாச்சியார் எவ்வளவு அற்புதமாய்ச் சொல்கிறார், தாம் அந்த அரங்கனின் கண்ணழகுக்குத் தோற்று, கைவளை கழல்வளையாய்ப் போனது என்று. இவற்றை எல்லாம் இப்போது இழந்து நாம் இருக்கிறோமே?’ என்று வருத்தத்துடன் பகிர்ந்தார் அந்த முதியவர்.

‘ஆஹா. அருமை ஸ்வாமி. ஆண்டாள் நாச்சியாரின் அமுத மொழிகளுக்கு ஈடு உண்டா? வேதத்தைத் திரட்டி நம் திராவிட மொழியில் அல்லவா கொடுத்திருக்கிறார். அடியேனுக்கு இந்த இடத்திலும் உங்கள் உபதேசம் கிடைத்தது என் புண்ணியம் ஸ்வாமி’ என்று அரசர் சொல்லும் போதே,

‘மன்னா, வெகு நேரம் கடந்துவிட்டது.’ என்று அமைச்சர் சுந்தர தீரதரன் குரல் கேட்டு திரும்பிய அரசர்,

‘ஆம் அமைச்சரே. நானும் அதைக் கவனிக்கவில்லை. திருமாலடியார்களோடு இருக்கும் போது கிழமை செல்வது கூடத் தெரியாது.’

‘ஸ்வாமி, நான் ஒரு அவசர வேலையாய் சோழ நாடு சென்றுவிட்டு இப்போது மதுரை அரண்மனை சென்று கொண்டிருக்கிறேன். உங்களுக்கும் எதுவும் வேண்டுமானால்..’ என்ற அரசரை முதியவர் வணங்கி,

‘நன்று மன்னா. ’திருவுடை மன்னரைக் காணில்’ என்று ஆழ்வார் சொன்னது போல் இந்த இடத்தில் வந்து எங்களுக்கு ஆறுதலாய் இருந்தீர்கள். நாங்களோ, கானகம் சென்ற இராமனைக் காண கங்கைக் கரையில் பரதன் இருந்தது போல் இந்த ஏரியில் நிற்கிறோம்..’ என்றார் முதியவர்.

‘இராமாநுசரிடம் இந்த விஷயத்தைச் சொல்லி அவரையும் திருவரங்கம் அழைத்து வரச் செய்யலாமா?’ என்றார் அரசர்.

‘அதைத்தான் நாங்களும் பேசிக்கொண்டு வந்தோம். இந்த பாலகன் அம்மங்கி வரதன், தான் செல்வதாய்ச் சொல்கிறான்’ என்றார் முதியவர். அந்த பாலகன் மிகுந்த தேஜஸோடு இருந்தார்.

‘ஓ, நல்லது. நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் சில காலம் இங்கு நரசிங்க மங்கலத்தில் வாசம் செய்ய வேண்டும். நான் ஓரிரு நாட்களில் வந்து பார்க்கிறேன்’ என்ற அரசர், அமைச்சரையும், மற்றை சிலரையும் அழைத்து சிறு ஆலோசனை செய்து, ஏதோ உத்தரவுகள் பிறப்பித்தார். அவர்களிடம் விடை பெற்று மதுரை நோக்கி விரைந்தார்.

அரசர் உத்தரவுப்படி சிலர் அந்த திருமால் அடியார்களுக்கு பாதுகாப்பாய் நரசிங்க மங்கலம் சென்றனர். முதியவருடன் சிலர் அங்கு இருக்க, வரதன் மட்டும் திருவரங்கம் நோக்கிப் பயணமானார்.

அங்கிருந்து கிளம்பிய அரசன் மதுரை செல்லாமல், அமைச்சருடன் வழியில் இருக்கும் இராஜேந்திரச்சோழ சதுர்வேதி மங்கலம் சென்றார். அங்கு ஏற்கெனவே திட்டமிட்டபடி நாட்டுத் தலைவர்கள், அரையர்கள், பிரதானிகள் இருந்தனர். அது ஒரு மந்திராலோசனை போல் இருந்தது. சோழ பாண்டியர்களால் சிதறிக் கிடந்த சில பாண்டிய வாரிசுகளும் இருந்தனர்.

‘அவையோரே, இன்றுதான் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து வருகிறோம். சோழநாடு நல்ல நிலையில் இல்லை. இந்நிலைமை நமக்குச் சாதகமாய்த்தான் இருக்கிறது. நம் மன்னன் வீரகேசரி, வீரராஜேந்திர சோழனோடு நடந்த போரில் வீர சுவர்க்கம் அடைந்தார். அது முதல் இங்கு, ஏற்கெனவே இருந்த சோழபாண்டியன் என்ற சோழ அரசுப்பிரதிநிதி ஆண்டுவருகிறார். இப்போது ஸ்திரமான சோழ மன்னன் இல்லை. இப்போது நாம் சோழ நாட்டைப் பிடிக்க வேண்டாம். அது விவேகமும் இல்லை. நாம் இழந்த பாண்டிய நாட்டில் மீண்டும் யாருக்கும் அடி பணியாத கயல் கொடி பறக்க வேண்டும். அதற்கே நாம் இங்கு கூடியிருப்பது. இப்போது கூட சோழன் பெயரில் இருக்கும் ஊரில்தான் நாம் சந்திக்க வேண்டியுள்ளது. இந்நிலைமை மாறவேண்டும்’ என்று முழங்கினார் ஸ்ரீவல்லபன்.

‘மன்னா, உங்கள் கட்டளைக்குக் காத்திருக்கிறோம். படைகள் எல்லாம் மறைவிடங்களில் தயார் நிலையில் இருக்கிறார்கள். ஆபத்துதவிகள், நாட்டுத் தலைமை அனைவரும் ஆங்காங்கு செய்தி அனுப்பிவிட்டார்கள். இன்னும் ஒரு இரவில் நாம் மதுரையம்பதி கோட்டையை முற்றுகையிட்டு, சோழபாண்டியர்களையும் வெளியேற்றி, நம் சுதந்திர மீன் கொடியைப் பறக்க விடலாம்’ என்றார் அமைச்சர் தீரதரன்.

‘சரி, இதுதான் நல்ல சந்தர்ப்பம். இப்போது அவர்களை வெளியேற்றினால் சோழப் படைகளும் இங்கு வராது. இவர்களை நிரந்தரமாய் மதுரைவிட்டே வெளியேற்றி, இனி திரை செலுத்தாத பழைய பாண்டிய மண்டலமாய் இருக்கலாம்’ என்ற மன்னன், மேலும் சில ஆலோசனைகளைச் சொல்லி, ஆங்காங்கு இருக்கும் சோழ பிரதிநிதி, படைகளை வெளியேற்ற வியூகம் வகுத்தார்.

மறுநாள் அந்தந்த நாட்டுத் தலைவர்கள் தங்களின் சிறுபடையுடன், சோழ படையை எதிர்கொண்டனர். சோழப் படைகள் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்குக் கட்டளையிட சோழபாண்டிய பிரதிநிதிகள் அப்போது பாண்டிய நாட்டில் இல்லாதது ஸ்ரீவல்லபனுக்குக் கை கொடுத்தது. இரண்டு நாட்களில் சோழ நாட்டிலிருந்தும் உதவி கிடைக்காததால், சோழப்படைகள், மற்றை பிரதானிகள் எல்லாம் சோழ தேசம் திரும்பினர். அங்கும் உள்நாட்டுக் குழப்பம் இருந்தது. ஏற்கெனவே இருந்த பாண்டியர்களின் தாயாதி பிரச்சினை இருந்தது. ஆனாலும், ஸ்ரீவல்லபன் மதுரையின் பிரதான அரண்மையில் அமர்ந்தான்.

அன்றைய பொழுது பாண்டிய நாட்டில் நற்பொழுதாய்ப் புலர்ந்தது. ஆலவாயண்ணல் திருக்கோவிலில் யாழ் கொண்டு மருதம் இசைத்துக் கொண்டிருந்தனர் பாணர்கள். வீதியெங்கும் விழாக்கோலம். மிக நீண்ட ஆண்டுகளுக்குப் பின் பாண்டியநாடு தன்னாட்சி அடைந்திருந்தது. வீரப்போர் செய்து ஈட்டிய வெற்றி இல்லாததால், ஸ்ரீவல்லபன் இந்த வெற்றியைப் பெரிதாய்க் கொண்டாட இசையவில்லை. எந்த நேரமும் சோழர்கள் மீண்டும் போர் தொடுப்பார்கள் என்று எண்ணியிருந்தார். சில நாட்களில் அந்த திருமாலடியார் விசயன் அரசரைக் காண சோழ நாட்டிலிருந்து வந்தான்.

‘மன்னா, சோழ மன்னன் இப்போது இல்லை. சோழ நாட்டில் இன்னும் குழப்பம் தீரவில்லை. அடுத்த அரசனாய் குலோத்துங்கன் விரைவில் பட்டமேற்பார் என்ற பேச்சு வருகிறது’ என்றான் விசயன்

‘ஆம் விசயா, இப்போதுதான் அது பற்றி அமைச்சருடன் பேசிக் கொண்டிருந்தேன். நாம் இன்னும் முன்னேற்பாடாய் இருக்க வேண்டும். நீ காவிரிக் கரையில் கண்காணித்து வா. நாங்கள் இங்கு தயாராய் இருக்கிறோம். அப்புறம் வரதன், இராமானுஜரை சந்தித்தானா? ஸ்வாமியும் ஸ்ரீரங்கம் வந்துவிட்டாரா?’ என்று மிகுந்த ஆவலாய்க் கேட்டார் அரசர்.

‘அதைப் பற்றிச் சொல்லத்தான் வந்தேன். சோழ நாட்டிலுள்ள நிலையை அறிய மாருதி சிறியாண்டான் என்பாரை இராமானுசர் திருநாராயணபுரத்திலிருந்து அனுப்பியிருந்தார். கூரத்தாழ்வான், திருமாலிஞ்சோலையிலிருந்து திருவரங்கம் செல்வதற்கும், சிறியாண்டான் அங்கு வருவதற்கும் சரியாய் இருந்தது. இராமானுசர் எக்காலமும் அறிந்தவராயிற்றே. வரதனை தாங்கள் சொன்னபடி திருவரங்கப் பெருமான் பிரசாதங்களுடன் மேலும் ஒருவர் துணையோடு அனுப்பி வைத்தேன். அவரிடமிருந்து தகவல் வந்தது. இராமானுஜரை திருநாராயணபுரத்தில் சந்தித்ததாகவும், இங்குள்ள நிலை பற்றிச் சொன்னதாய் இருந்தது. இராமானுஜர் இவர்களைக் கண்டவுடன் மிக சந்தோஷித்து, இன்னும் சில திங்கள்களில் திருவரங்கம் திரும்புவதாய்ச் சொன்னதாகவும் இருந்தது. அதையும் நரசிங்க மங்கலத்தில் இருக்கும் ஸ்வாமியிடம் சொல்லலாம் என்று வந்தேன்’ என்றான் விசயன்.

‘ஆஹா. நன்னாளில் நல்ல செய்தியோடுதான் வந்தாய். இராமானுஜர் விரைவில் திருவரங்கம் திரும்ப வேண்டும். இப்போது நரசிங்க மங்கலம் நானும் வருகிறேன். நரசிம்மரைத் தரிசிக்க வேண்டும்’ என்ற அரசனும், விசயனும் அன்று மாலையே சென்றனர்.

அவர்கள் அதே இராஜேந்திரச்சோழ சதுர்வேதி மங்கலத்தைத் தாண்டித்தான் போனார்கள். சில நாட்கள் முன் மந்திர ஆலோசனை நடந்த அந்த மண்டபம் இருந்தது. மன்னனை அது ஏனோ ஈர்த்தது. அன்று திருமால் அடியார்களுடன் கலியனேரியில் பேசிக்கொண்டிருந்தது, திருவரங்கன் கண்ணழகு பற்றி அந்த ஸ்வாமி சொன்னது, ஆண்டாள் பாசுரம் எல்லாம் அவர் கண் முன் வந்து போனது. திருவரங்கன் கண்கள் ஏதோ சொல்வது போல் இருந்தது.

ஒரு முடிவுக்கு வந்தவராய் மேலும் பயணத்தைத் தொடந்தார். நரசிம்மரைத் தரிசித்துவிட்டு அங்கேயே இருக்கும் அந்த முதியவரைக் காணச் சென்றார். அவர், அடியார்களுக்கு திருவாய்மொழியின் ஒரு பாடலுக்கு பொருள் விளக்கிக்கொண்டிருந்தார். அது திருவேங்கடம் பற்றியது.

அண்ணல் மாயன் அணிகொள் செந்தாமரைக்

கண்ணன் செங்கனிவாய்க் கருமாணிக்கம்

தெண்ணிறை சுனைநீர்த் திருவேங்கடத்து

எண்ணில் தொல்புகழ் வானவர் ஈசனே.

செந்தாமரைக் கண்ணன்’ என்ற இடம் பற்றி விளக்கினார் அவர். அங்கு அமர்ந்து கேட்ட மன்னன், ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தான். பின்னர் அந்த ஸ்வாமியிடம் தனியே சந்தித்து விசயன் சொன்ன விஷயங்களை எல்லாம் சொன்னார். பின் தன் முடிவையும் சொன்னார்.

‘ஸ்வாமி, தாங்கள் இன்னும் சில காலம் இந்த பாண்டிய மண்டலத்தில் இருந்து நல்லுரைகளை வழங்க வேண்டும். இங்குள்ள ஜனங்களை அறவழியில் செலுத்த, மீண்டும் பாண்டிய தேசம் பழைய பொலிவு பெற அருளவேண்டும். இங்கிருந்து சில காத தூரம் இருக்கும் கிராமத்தில் ஒரு கோவில் நிர்மாணிக்க வேண்டும் என்று, வரும்போதுதான் எண்ணிக்கொண்டு வந்தேன். வந்த போதே, நீங்கள் சொன்ன பாடலும் அது போலவே அமைந்தது. எம்பெருமான் திருக்கண் கடாக்ஷம் எப்போதும் நமக்கும் வேண்டும். ஆகவே, ‘செந்தாமரைக்கண் ஆழ்வார் கோவில்’ என்று ஒரு கோவிலை விரைவில் நிர்மாணிக்கப் போகிறேன். தாங்கள் அங்கிருந்து கைங்கர்யங்கள் செய்ய வேண்டும். எம்பெருமானார் திருநாராயணபுரத்தில் இருப்பதால், புதிதாய் நிர்மாணிக்கும் கோவில் மற்றை பிடாகை நிலங்களையும் சேர்த்து ‘திருநாராயண நல்லூர்’ என்று பெயர் பெறட்டும். அதற்கான வேலைகளைத் தாங்கள் சம்மதித்தால் இப்போதே தொடங்குகிறேன்’ என்று அரசன் ஒரே மூச்சாய்ச் சொன்னதைக் கேட்டு அவர் திகைத்து நின்றார்.

‘அரசே, நான் சொல்ல என்ன இருக்கிறது. அரங்கனும், அழகனும் அதைத்தான் விரும்புகிறார்கள் போல் இருக்கிறது. எம்பெருமானார் திருவரங்கம் திரும்பியவுடன் நான் சிலகாலம் அங்கு சென்று வர வேண்டும். அதற்க்கு மட்டும் தாங்கள் அனுமதிக்க வேண்டும்’ என்றார் முதியவர்.

‘நல்லது. நிலைமை சீரானவுடன், அதற்கும் நானே ஏற்பாடு செய்கிறேன். நான் இப்போதே கோவில் திருப்பணிகளைத் தொடங்குகிறேன்’ என்று விடை பெற்றுச் சென்றார். அரண்மனை சென்றவுடன், அருகிருந்த பிடாகையிலிருந்து நிலங்கள் சேர்க்கப்பட்டு, ‘திருநாராயண நல்லூர்’ தனியாய் உருவாகி, மருதூர் என்ற கிராமத்தில் கண்ணாழ்வார் கோவிலுக்கு நிலம், வயல்கள், தீர்த்தக் குளம் என்று எல்லாம் வரையறுக்கப்பட்டு அதற்கான திருமுகம் எழுதப்பட்டு, நாட்டுத் தலைவர்கள் மூலம் பணிகள் நடந்தன.

பாண்டிய மண்டலத்தின் சிறந்த சிற்பிகள் பணி செய்தார்கள். அருகிலிருந்த மலையிலிருந்து தேவையான கற்பாறைகள் கொண்டுவரப்பட்டன. அரசன் அவ்வப்போது வந்து திருப்பணிகளைக் கண்காணித்துப் போனார். அர்த்த மண்டபம், மகாமண்டபம், சதுர கர்ப்பகிரகம் மற்றும் சிறந்த சிற்பவேலைகளோடு மிகவும் பிரமாண்டமாய் திருக்கோவில் நிர்மாணிக்கப்பட்டது. பாண்டியக் கட்டடக் கலையான யாளிகள் பிரம்மாண்டமாய்த் தூண்களில் அலங்கரித்தன. தனிக்கோவில் நாச்சியாருடன் கோவில் இருந்தது. கோவில் கர்ப்பகிரகம் சுற்றி மூடிய திருச்சுற்று, பிரதட்சனபாதம் கொண்டு சாந்தார வகைக் கோவிலாய், வேதத்தின் ஆறு அங்கங்கள் போல், கோவிலும் ஆறு அங்கங்களைக் கொண்டு, மூன்று வேதங்களைக் குறிக்க மூன்று தளங்களுடன், த்ரி-தள விமானத்துடன் முழுதும் கற்களால் உருவானது. கோவிலின் வெளியில் சந்திர புஷ்கரணி கட்டப்பட்டு, அது, ஸம்ப்ரோக்ஷணம் செய்யும் இரண்டு நாள்களுக்கு முன் பெய்த மழையில் நிரம்பியிருந்தது. உற்ஸவர், மூலமூர்த்தி நேர்த்தியான திருக்கண்களோடு, எம்பெருமான் திருமேனிகள் அமைந்தன. மங்கள தினத்தன்று, யாரும் எதிர்பாராது போல், உதயத்தில் சூரிய ஒளி, மண்டபங்கள் தாண்டி கர்ப்பகிரஹம் வரை வந்த போது, எம்பெருமான் கண்கள் மேலும் பிரகாசமாய்த் தெரிந்தது. அன்று உறங்காவில்லி தாசர் கண்ட கண்கள் போல், இன்று ஸ்ரீவல்லபன் எம்பெருமானைக் கண்ணாரத் தரிசித்து மகிழ்ந்தார். அருகில் அந்த பெரியவர் ஆழ்வார் பாசுரங்களை ஓதிக் கொண்டிருந்தார்.

*

காலம் இருபதாம் நூற்றாண்டு

‘ஆஹா, என்ன உன்னதமான கனவு இன்று. ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தது அப்படியே கண்முன் வந்தது போல் இருந்தது. நான் இன்னும் எத்தனை தவம் செய்தாலும் இது போல் அனுபவம் கிடைக்காது. இதைச் சொல்லத்தான் இந்த அதிகாலையில் இங்கு வந்தேன்’ என்று தன் கனவின் அனுபவத்தை உணர்ச்சியாய் சுந்தரராம பட்டர் இராகவ தீக்ஷிதரிடம் சொன்னார். இருவரின் கண்களிலும் கண்ணீர் ததும்பியது.

‘அருமை பட்டரே என்னையும் அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டீர். நான் இன்று இரண்டாம் காலம் பூஜைக்குத்தான் சொக்கலிங்கபுரம் கோவில் செல்கிறேன். இப்போது உங்களோடு மருதூர் வருகிறேன். நீங்கள் சொன்னதிலிருந்து பெருமானை தரிசிக்கவேண்டும் போல் இருக்கிறது’ என்று தீக்ஷிதர் சொல்ல இருவரும் மருதூர் கண்ணாழ்வார் கோவில் வந்தனர். அது மார்கழி மாதம். திருப்பள்ளியெழுச்சி பூஜைகளைச் செய்யத் தொடங்கினார் சுந்தரராம பட்டர். சிறிது நேரத்தில் தீக்ஷிதர், பட்டரை அழைத்துக் கொண்டு, கோபுரத்தடியில் இருக்கும் விரிவான கல்வெட்டைக் காட்டினார். அவர் அன்று கண்ட கனவின் ஒருபகுதி கண்களின் முன்னால் கல்லில் எழுத்துக்களாய் இருந்தது. அதை அவரால் தொடர்ப்புபடுத்திக் கொள்ள முடிந்தது.

‘ஸ்வஸ்திஸ்ரீ திருமடந்தையுஞ் செயமடந்தையும் திருப்புயங்களில் இனித்திருப்ப இருநிலமும் பெருமை எய்த…

இராஜேந்திரச்சோழ சதுர்வேதிமங்கலத்து மேல்பிடாகை திரவிய நண்ண ஈமருதூர் கண்ணாழ்வார்…

தேவர் மொழிந்தருளினபடி இவ்வாழ்வாற்கு தேவதான இறையிலியாக திருமாற்றுளரு…

கோவிலும் திருமுற்றமும் திருநந்தவனமும் தீர்த்தக்குளமும் திருவீதியும் உட்பட.. போகும் கேசவனேரி குளம் இரண்டும்..

முதலாக்கி இருபத்திரண்டாவது முதல் திருநாராயண நால்லூரென்னும்… ‘

‘அடியேன் இதுவரை இந்தக் கல்வெட்டை விரிவாய்ப் படித்ததில்லை. அடியேன் முன்னோர்கள்தான் சொல்லி இருக்கிறார்கள். நாங்கள் மதுரை நகரத்திலிருந்து இங்கு கைங்கர்யம் செய்ய வந்ததாகவும், எம்பெருமான் திருமஞ்சனத்தின் போது அவரின் திருமார்பில் இருக்கும் லக்ஷ்மி விக்ரஹம் களையப்பட்டிருக்கும். அப்போது பிரிவாற்றாமை இல்லாமல் இருக்க நாச்சியார் திருமொழி சேவிக்க வேண்டும் என்பது எங்களுக்கு முதலில் தரப்பட்ட கைங்கர்யம். இது இராமானுசர் திருமலையில் ஏற்படுத்தியது. அதை பாண்டியன் இங்கும் கொண்டுவந்தார் போலும். பின்னாளில் கோவிலில் அர்ச்சக கைங்கர்யமும் சேர்த்தே கிடைத்தது’ என்று பட்டர் தீக்ஷிதரிடம் சொன்னார்.

பட்டர் மேலும் அன்றைய திருமஞ்சனம், அலங்காரம் எல்லாம் விரைவாய், மிகவும் ஆதுரத்தோடு செய்தார். தீக்ஷிதர் அன்று அந்தக் கோவிலிலேயே வேதங்கள் சொல்லிக்கொண்டிருந்தார். அலங்காரம் நிறைவுற்று, உற்ஸவர் மூர்த்திகளைத் தரிசிக்கும் போது முன்பு எப்போது இல்லாதபடி மிகப் பிரகாசமாய் இருந்தார். அவர் கண்களிலிருந்து பேசுவது போல் இருந்தது. அன்று இருவருக்கும் கண்ணாழ்வார், கண்ணழகராகவே இருந்தார். இருவருமே கோவிலைவிட்டு அகல மனம் இல்லாதவராகவே இருந்தனர்.

பட்டர் வீடு வந்தவுடன், மனைவியிடம் அனைத்தையும் சொன்னார். அவரின் பிள்ளை ஸ்ரீதரன் வெளியூரில் குடும்பத்தோடு தங்கி, அரசாங்க உத்யோகம் பார்த்து வருகிறார். பட்டர் அவருக்கு நடந்த அனைத்தையும் கடிதத்தில் அனுப்பினார். இதுபோல் அவ்வப்போது அங்கு நடக்கும் விஷயங்கள் அனைத்தையும் கடிதத்தில் அனுப்பிவிடுவார், வீட்டில் கன்று போட்டாலும் கூட.

இவ்வாறாக நாட்கள் சென்றன. பட்டரும் மிகவும் உவப்போடு கைங்கர்யம் செய்துவந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காதது அன்று நடந்திருந்தது.

சிலநாட்களில், மீண்டும் ஒரு கடிதம் ஸ்ரீதருக்கு வந்தது. இம்முறை அவன் அம்மா கடிதம் எழுதியிருந்தார். கடிதத்தைப் படித்ததும் ‘ஆ.. ‘ என்ற பெருங்குரலோடு கீழே சரிந்தான். கடிதத்தின் சாராம்சம் இதுதான். ‘தை மாதம் பிறந்து சில நாட்கள் சென்றிருந்தன. பட்டரும் தீக்ஷிதரும் கோவில் சென்றிருந்தனர். கோவில் கருவறைக் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. உற்ஸவர் வழக்கமான இடத்தில் இல்லை. கடந்த மூன்று நாட்களாய் பட்டரும் தீக்ஷிதரும் எதுவும் உண்ணவில்லை. ஊரே உற்ஸவர்க்காய்க் காத்திருக்கோம்’ என்று உருக்கமாக இருந்தது சில வரிகள் மட்டுமே இருந்த கடிதம்.

ஸ்ரீதரின் மற்றொரு கையில் இருந்த சுதேசமித்திரன் நாளிதழ் தலைப்புச் செய்தியில் ‘மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்’ என்றிருந்தது.

அடிக்குறிப்பு:

  1. நரசிங்கமங்கலம் – இன்று நரசிங்கம் என்று வழங்கப்படுகிறது. மதுரை யானைமலை அடிவாரத்தில், ஒத்தக்கடை – திருமோகூர் வழியில் உள்ளது. திருமாலிருஞ்சோலை – அழகர் கோவில்.
  2. ஒரு சோழ மன்னன் ‘சிவனே முழுமுதற் தெய்வம்’ என்று வைணவர்கள் ஒத்துக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டதால், இராமானுஜர் சோழ மண்டலம் விட்டே சென்று, பல ஆண்டுகள் மேல்கோட்டையில் (திருநாராயணபுரம்) இருந்தார். கூரத்தாழ்வானுக்கும், பெரிய நம்பிக்கும் அரசனால் கண்கள் பறிக்கப்பட்டன. பின்னர் சில காலத்தில் அந்த அரசன் இறந்துபட்டான். அந்த மன்னனை ‘கிருமி கண்ட சோழன்’ என்றே வைணவ நூல்கள் சொல்கின்றன.
  3. சோழ நாட்டில் நடந்த விஷயங்களையும், திருவரங்க பெருமாள் பிரசாதங்களையும், திருநாராயணபுரம் கொண்டு சென்றார் அம்மங்கி அம்மாள். அங்கு இராமானுசர் அவரை வாரி அணைத்துக்கொண்டு, மந்த்ர உபதேசம் செய்தார் என்று குருபரம்பரா பிரபாவம், வார்த்தாமாலை போன்ற வைணவ நூல்கள் சொல்கின்றன. மாருதி சிறியாண்டான் பற்றிய குறிப்பும் குருபரம்பரா பிரபாவம் நூலில் வருகிறது.
  4. அரசு தொல்லியல்துறையின் இந்தக் கோவில் கல்வெட்டு பற்றிய குறிப்பில் ‘ஸ்வஸ்திஸ்ரீ’ என்ற பதம் கிரந்த எழுத்தில் இருக்கிறது. இன்றும் இந்தக் கோவில் பாழடைந்து கவனிப்பார் இன்றி இருப்பதாகவே தெரிகிறது.
Leave a Reply