Posted on Leave a comment

ஓட்டம் | அருண் பிரபு

As Far As My Feet Will Carry Me (2001)

1945ல் படம் தொடங்குகிறது. க்ளெமென்ஸ் ஃபோரல் என்ற ஜெர்மானிய நாஜிப் படைவீரன் சோவியத் துருப்புக்களால் சிறை பிடிக்கப்படுகிறான்.

லெஃப்டினண்டாக நாஜிப் படையில் இருக்கும் க்ளெமென்ஸ் தன் கருவுற்ற மனைவியையும் 5 வயது மகளையும் கிறிஸ்துமஸுக்கு வருவேன் என்று சொல்லிப் பிரிந்து போர் முனைக்கு வந்தவன். அவனுக்கு சோவியத் கட்சி கோர்ட்டில், புரட்சிக்கு எதிராகப் போர் புரிந்த வகையில் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை தரப்படுகிறது. சைபீரியாவின் கடைக்கோடியில் இருக்கும் தொழிலாளர் முகாமுக்கு (கொடுஞ்சிறைக்கு) அனுப்பப்படுகிறான் க்ளேமென்ஸ். அங்கே காமெனெவ் என்ற லெஃப்டினண்ட் தலைமையில் கொடூரமாக ஒவ்வொரு கைதியும் நடத்தப்படுகிறார்கள். மிக நீண்ட பட்டினிப் பயணத்தின் முடிவில் அந்தச் சிறைக்கு வரும் நூற்றுக்கணக்கான கைதிகளில் பலர் ரயிலிலேயே இறந்து போயிருக்கிறார்கள். இறங்கிய இடத்திலிருந்து முகாமுக்கு நடந்து செல்ல வேண்டும் என்கிறார்கள். அரைவயிற்று உணவுடன் கைதிகள் நடக்க காவல்காரர்கள் அவ்வப்போது வோட்கா உறிஞ்சியபடி வருகிறார்கள். பனியின் தாக்கத்தில் யாராவது சுருண்டு விழுந்தால் “அவன் ஏண்டா சுருண்டு விழுந்தான்” என்று கூட வந்தவர்களுக்கும், “ஏண்டா ஒழுங்கா நடக்க முடியாதா” என்று விழுந்த ஆளுக்கும் அடி விழுகிறது. ஒருவழியாக முகாமுக்குச் சென்றால், நாஜி வதை முகாம் பரவாயில்லை என்ற கதியில் இருக்கிறது அந்தத் தொழிலாளர் முகாம். அங்கே கைதிகள் வரிசையாக நிறுத்தப்படுகிறார்கள். மயங்கி விழுபவர்களைச் சுட்டுக் கொல்கிறார்கள்.

காலை எழுந்தவுடன் கம்யூனிஸப் படிப்பு, பின்பு கைகால் ஓயும் வரை வேலை, மதியம் அரை வயிற்றுக்கு உணவு, மீண்டும் வேலை. மாலை முழுதும் கம்யூனிஸப் படிப்பு, இரவு உறக்கம் என்று போகிறது வாழ்க்கை. இந்த முறைமையும் சிறை அதிகாரியின் விருப்பத்திற்கேற்ப மாறுகிறது. அவ்வப்போது காமெனெவுக்கு போரடித்தால் யாரையாவது போட்டு அடித்து மகிழ்வான். ஏனென்று கேட்டாலோ ஏறெடுத்துப் பார்த்தாலோ சோவியத் விரோதி முத்திரைதான். சாகும் வரை சைபீரியச் சிறைதான். இப்படிப்பட்ட சிறையிலிருந்து ஒரு முறை தப்பிக்க முயன்று க்ளெமென்ஸ் மாட்டிக் கொள்கிறான். அவனைச் சித்திரவதை செய்து இனி சாவு வரை இங்கேதான் இருக்க வேண்டும் என்று தீர்ப்பெழுதுகிறார்கள் சிறை அதிகாரிகள். சிறையில் நோயுற்ற கைதிகளை ஆரோக்கியமானவர்கள் என்று அறிக்கை எழுதி வேலைக்குக் கொண்டு போய் சரியாக வேலை செய்யவில்லை என்று அடித்துச் சித்திரவதை செய்கிறான் சிறை அதிகாரி காமெனெவ்.

இந்நிலையில் ஜெர்மனியில் க்ளெமென்ஸ் வீட்டுக்கு செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து கடிதம் போகிறது. க்ளெமென்ஸ் ஃபோரல் என்பவர் பற்றி தகவல் ஏதும் இல்லை, ரஷ்யக் கைதிகள் பற்றிய விவரத்திலும் அவர் பற்றி ஏதுமில்லை என்கிறது கடிதம். குளிர்காலம் முடிந்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை தொடரும், அப்போது விவரம் தெரியவரலாம், பொறுமையாகக் காத்திருங்கள் என்கிறார்கள் ஜெர்மன் அரசு அதிகாரிகள். ஐந்து ஆண்டுகள் ஓடிவிடுகின்றன.

சிறையில் உள்ள ஜெர்மன் கைதி மருத்துவர் ஸ்ட்ராஃப்மன் உதவியுடன் தப்பிச் செல்கிறான் க்ளெமென்ஸ். அவன் வடதிசையில் போகிறான். ஆனால் ரஷ்யப்படை அவனை மேற்கே தேடுகிறது. டாக்டரை விசாரிக்கச் செல்லும் போது அவர் இறந்து போயிருக்கிறார். அவருக்குப் பல மாதங்களாகப் புற்றுநோய். அதனால் தப்பிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்த நிலையில் திட்டத்தைக் கைவிட்டு வேறு யாரும் தப்பிக்க எண்ணினால் உதவலாம் என்று இருக்கிறார். க்ளெமென்ஸ் தப்பிச் செல்ல உதவி செய்துவிட்டு இறக்கிறார். க்ளெமென்ஸைத் தேடிச் சென்ற ரோந்துப் படை திரும்பி வந்து மேற்குப் பகுதி மலையடிவாரம் வரை தேடிவிட்டதாகவும் க்ளெமென்ஸ் அவ்வளவு தூரம் போயிருக்க வாய்ப்பில்லை என்றும் பனிப்புயலில் சிக்கி புதைந்து போயிருக்கக் கூடும் என்றும் சொல்கிறது. ஆனால் காமெனெவ் அதை மறுத்து மீண்டும் தேடச் சொல்கிறான்.

பனிப்புயலில் சிக்கிய க்ளெமென்ஸை அங்கே சைபீரியாவில் தங்கம் தேடும் இருவர் காப்பாற்றுகிறார்கள். அவர்களில் ஒருவன் தண்ணீரில் விழுந்துவிட க்ளெமென்ஸ் அவனைக் காப்பாற்றுகிறான். அவர்களிடம் தன் பெயரை பெட்யா என்று சொல்லி வைக்கிறான். இரு தங்க வேட்டைக்காரர்களும் சண்டையிட ஒருவன் கொல்லப்படுகிறான். க்ளெமென்ஸும் மற்றொரு வேட்டைக்காரனும் நடக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தங்க வேட்டைக்காரன் நடக்க முடியாமல் திணற அவனது மூட்டையைத் தூக்கி வருவதாகச் சொல்கிறான் க்ளெமென்ஸ். “பெட்யா! என் தங்கத்தைத் திருடப் பார்க்கிறாயா?” என்று சண்டை வலித்து க்ளெமென்ஸை அடிக்கிறான் அவன். ஒரு மலைப்பள்ளத்தில் க்ளெமென்ஸைத் தள்ளிவிட்டுப் போகிறான்.

மயங்கிவிழும் க்ளேமென்ஸ் கண் விழிக்கும் போது நரிகள் கொஞ்ச தூரத்தில் வருவது கண்டு ஓடுகிறான். ஆனால் நரிகள் துரத்தி அவனைத் தாக்குகின்றன. கீழே விழும் க்ளெமென்ஸ் நரிகளில் ஒன்று அருகில் இறந்து கிடப்பது கண்டு சுற்றிப் பார்க்கிறான். மற்ற நரிகள் ஓடிவிட அங்கே இருக்கும் நாடோடிகள் அவனைத் தங்கள் இருப்பிடம் கொண்டு போகிறார்கள். அங்கே வயதான வைத்தியர் ஒருவர் அவனுக்கு வைத்தியம் பார்க்கிறார். அவன் பெயரைக் கேட்கிறார்கள். க்ளெமென்ஸ் என்கிறான். அங்கே வைத்தியரின் பேத்தி இரினா க்ளெமென்ஸ் மீது காதல் கொள்கிறாள். அவர்கள் யாகுட்ஸ்க் என்ற பகுதியில் இருக்கிறார்கள். அங்கே க்ளெமென்ஸைத் தேடி வரும் காமெனெவ் உள்ளூர் அதிகாரிகளிடம் விசாரிக்கிறான். தங்க வேட்டைக்காரன் ஒருவனைப் பிடித்து வைத்திருக்கிறோம் என்று அழைத்துப் போகிறார்கள். அங்கே க்ளெமென்ஸை பள்ளத்தில் தள்ளிவிட்டுச் சென்றவன் இறந்து கிடக்கிறான். விசாரணைக்கு ஒத்துழைக்காது இறந்து போனான் என்று அறிக்கை எழுதிக்கொண்டு ஊருக்குள் ‘பியோட்டர்’ என்ற ஜெர்மானிய உளவாளி பற்றித் தகவல் தர வேண்டும் என்று உத்தரவு போடுகிறார்கள்.

இந்த நாடோடிகள் கூடாரத்துக்குத் தகவல் வந்ததும் க்ளெமென்ஸை அங்கிருந்து போகச் சொல்கிறார்கள். இரினா கண்ணீர் வடிக்கிறாள். ஆனால் தப்பிக்க வேறு வழியில்லை என்று நாடோடிகள் அவனை அனுப்புகிறார்கள். துணைக்கு அவனோடு பழகிய ஒரு நாயை அனுப்பி வைக்கிறார்கள். இரினா ஒரு தாயத்தை அணிவித்து ஷமன் என்ற தேவதை துணை வரும் என்று சொல்கிறாள். பனிப்பிரதேசத்தைக் கடந்து வனப்பகுதிக்கு வந்த போது அங்கே ஒரு தொழிலாளர் முகாமுக்கு வருகிறான். அங்கே இருக்கும் ஆய்வாளர் அவனது அடையாள அட்டை, அனுமதிச்சீட்டு இவற்றைக் கேட்கிறார். இல்லை என்று சொல்லும் அவன், அனுமதி அடுத்த சிறைக்குத் தபாலில் வரும் என்றும், அடையாள அட்டை அனுமதி இருந்தால் தப்பிக்க வாய்ப்புள்ளதால் தன்னிடம் தரப்படவில்லை என்றும் சொல்கிறான். அவனை ஒரு சரக்கு ரயிலில் ப்ரேக் மேனாக அனுப்பிவிட்டு காம்ரேட் காமெனெவுக்கு தகவல் சொல்கிறார்கள் அந்த முகாம் அதிகாரிகள்.

வழியில் ஒரு ரயில் நிலையத்தில் சோதனை நடக்கிறது. கட்சி ஆபீசர்கள், ராணுவ அதிகாரிகள் என்று பார்த்தவுடன் மறுபக்கம் இறங்கி ஓடுகிறான். அங்கே காமெனெவ் நிற்கிறான். அவன் எதிரி என்று புரிந்து கொண்ட நாய் காமெனெவைத் தாக்கி அவன் முகத்தி பிறாண்டிக் கடிக்கிறது. காமெனெவ் நாயைச் சுட்டுக் கொல்கிறான். தப்பி ஓடும் க்ளெமென்ஸ் ஓடும் ரயிலில் தப்புகிறான். முகத்தில் காயத்துடன் காமெனெவைப் படையினர் அழைத்துச் செல்கின்றனர். தப்பிய க்ளெமென்ஸ் ஒவ்வொரு ஊராகச் சுற்றிக் கொண்டு சோவியத் யூனியனின் மத்திய ஆசியப் பகுதிக்கு வருகிறான். அங்கே ஒரு சந்தையில் அவன் காசு இல்லாமல் பசியோடு சுற்றி வர ஒரு வியாபாரி ரொட்டித்துண்டு தருகிறார். அதைத் தின்று கொஞ்சம் பசியாறும் க்ளெமென்ஸ் அங்கிருக்கும் ஒரு தேவாலயத்தில் சென்று பிரார்த்திக்கிறான். அது 1952 என்று தெரியவருகிறது. தப்பித்து இரண்டாண்டுகள் ஓடிவிட்டன. அவனது ஓட்டம் நிற்கவில்லை.

தேவாலயத்துக்கு வரும் ஒரு மனிதர் அவனை வீட்டுக்கு அழைக்கிறார். நீ ஜெர்மானியன் என்று தெளிவாகத் தெரிகிறது, மாட்டிக் கொள்வாய் என்று சொல்லி அழைத்துச் செல்கிறார். வீட்டில் அவர் ஒரு யூதர் என்று அறிந்து கொள்கிறான் க்ளெமென்ஸ். ஆனாலும் அவனுக்கு உதவுகிறார். ஏன் என்று கேட்ட போது “நீங்கள் எங்கள் சகோதரர்களைக் கொன்ற போதும் ஏன் உதவுகிறேன் என்று கேட்கிறாயா? என் சொந்த அண்ணன் தம்பிகள் வதை முகாம்களில் இறந்து போனார்கள்” என்கிறார். எல்லா ஜெர்மானியர்களுக்கும் வதை முகாம் கொடுமைகள் தெரியாது என்கிறான் க்ளெமென்ஸ். “ஆமாமாம். தெரிந்திருந்தால் எதிர்த்துப் போராடி பெண்கள், குழந்தைகள் வயதானவர்கள் எல்லோரையும் காப்பாற்றி இருப்பீர்களே! பாவம் ஹிட்லர், எல்லாவற்றையும் சர்வ ரகசியமாகச் செய்துவிட்டான்” என்று நக்கலாகப் பதில் சொல்கிறார் அந்த யூதர்.

பின்னர் க்ளெமென்ஸைக் குளித்து முடிவெட்டச் செய்து அவனுக்கு ஒரு பாஸ்போர்ட்டும் பயண அனுமதிச்சீட்டும் பெற்றுத் தருகிறார். அதற்குள் உளவாளிகள் சிலர் யூதர் வீட்டில் ஜெர்மானியரை வைத்துள்ளார் என்று தகவல் சொல்கிறார்கள். காமெனெவ் பக்கத்து ஊரிலிருந்து வருகிறான். விவரம் கேட்டுக் கொண்டு யூதரின் வீட்டுக்கு வருகிறான். அவர் முதலில் மறுக்கிறார். ஆனால் காமெனெவ் மிரட்டியதில் இதய நோய் உள்ள அவர் நெஞ்சடைத்துச் சாய்கிறார். அப்படித்தான் உதவுவேன் போ என்று சொல்கிறார். அவரை அப்படியே போட்டுவிட்டு காமெனெவ் க்ளெமென்ஸைத் தேடி விரைகிறான். க்ளெமென்ஸ் ஒரு வண்டியில் ஏறி ஈரான் போக முயல்கிறான். ஆனால் வண்டி பாதி வழியில் பழுதாகிறது. நடந்தே ஈரானிய எல்லைக்கு வருகிறான். அங்கே சோவியத் எல்லைக் காவல் அலுவலகத்தில் அவனை எல்லை கடந்து போக அனுமதிக்கிறார்கள். ஆனால் ஏதோ ரகசியமாகப் பேசிக் கொள்கிறார்கள்.

அனுமதி வந்ததும் எல்லை கடந்து ஈரானிய எல்லை நோக்கி ஆற்றுப் பாலத்தில் செல்கிறான் க்ளெமென்ஸ். அங்கே எதிரில் காமெனெவ் வருகிறான். ஆற்றில் குதித்துத் தப்பலாமா என்று க்ளெமென்ஸ் யோசிக்க, அவனைப் போகச் சொல்கிறான் காமெனெவ். இதுவும் தனக்கு வெற்றிதான் என்று சொல்கிறான். க்ளெமென்ஸ் ஈரானிய எல்லைக்குப் போய் பாஸ்போர்ட்டைக் காட்டி உள்ளே போனதும் கைது செய்யப்படுகிறான். அவன் சோவியத் உளவாளி என்று சிறையில் அடைக்கிறார்கள். அவன் தன்னைப் பற்றி முழுவதும் சொல்கிறான். ஜெர்மானிய ராணுவத்தில் இருந்ததும், கைது செய்யப்பட்டு சைபீரியச் சிறையில் வாடியதும், தப்பியதும் என்று முழு வரலாறு சொல்கிறான். முதலில் நம்ப மறுக்கிறார்கள் ஈரானியர்கள். அவன் பெயர் க்ளெமென்ஸ் ஃபொரல் என்று கேட்டதும் ஈரானிய அதிகாரி துருக்கி பொருளாதாரத் துறையில் வேலை செய்யும் ஜெர்மானியர் ஒருவருக்குத் தகவல் சொல்கிறார். அவர் இவனது தாய்வழி உறவினர். அவர் வந்ததும் க்ளெமென்ஸை முதலில் சில கேள்விகள் கேட்கிறார். குடும்பப் புகைப்படத் தொகுப்பில் தன் தாயாருக்குப் பரிசளித்த படத்தை நினைவு கூர்கிறான் க்ளெமென்ஸ். அவன் தன் மருமகன் என்று உறுதி கூறி அவனை அழைத்துப் போகிறார்.

1952 கிறிஸ்துமஸ் தினத்தில் மேற்கு ஜெர்மனியில் தன் ஊருக்குப் போய்ச் சேருகிறான் க்ளெமென்ஸ். அங்கே குடும்பத்தினர் தேவாலயம் செல்ல அவர்களைத் தொடர்ந்து தேவாலயம் சென்று குடும்பத்துடன் சேர்ந்து கொள்கிறான்.

கார்னீலியஸ் ராஸ்ட் என்ற ஜெர்மானியரின் வாழ்க்கைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் இது. 2001ல் வெளிவந்த ஜெர்மன் மொழிப்படம். ஆனால் ரஷ்யன், சுக்சி, பாரசீக மொழிகளில் வசனங்கள் வருகின்றன. சில இடங்களில் மொழிபெயர்ப்பு இல்லாமலேயே விட்டிருப்பார்கள். காரணம் ஜெர்மன் மொழியும் ஒரு சில சொற்கள் ரஷ்ய மொழியும் தெரிந்த கதாநாயகன் படும் துயரத்தைப் பார்வையாளர்களுக்குப் புரிய வைப்பதற்கு என்கிறார் இயக்குநர் ஹார்டி மார்டின்ஸ்.

சில கொடுமைகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று So weit die Füße tragen என்ற புத்தகத்தை எழுதிய கார்னீலியஸ் ராஸ்ட் என்ற ஜெர்மானியரின் புத்தகத்தைப் படமாக்கியிருக்கிறார்கள். நாஜி வதை முகாம்களுக்குச் சற்றும் குறைவில்லாத கொடூரங்களைக் கொண்டதே சோவியத் சைபீரியச் சிறை என்று பல புத்தகங்கள், கட்டுரைகள் வந்துள்ள போதும், திரைப்படம் தான் சொல்ல வந்த கருத்தை மனதில் ஆழப் பதியச் செய்கிறது. வென்ற ரஷ்யர்களும், தோற்ற ஜெர்மானியர்களும் கொடூரத்தில் குறைவேதும் இல்லாத மனதுக்குச் சொந்தக்காரர்கள் என்ற போதும், ஜெர்மானியக் கொடூரம் பேசப்பட்ட அளவுக்கு ரஷ்யக் கொடூரம் பேசப்படவில்லை. இந்தப் படம் ஸ்டாலினிய சோவியத் கொடூரத்தில் குறைவற்றது என்று நிறுவியிருக்கிறது.

Leave a Reply