Posted on Leave a comment

இந்தியா புத்தகம் 7 | முனைவர் வ.வே.சு.

Rambles in Vedanta – B.R.Rajam Iyer (Collection of his contributions to The Prabuddha Bharata, 1896-1898)

அது ஆறாம் வகுப்பு. முதல் நாள். நாங்கள் படிக்கும் காலத்தில் அஞ்சாவது வரை ஒண்ணாங் கிளாஸ் ரெண்டாங் கிளாஸ் என்று சொல்வார்கள்; ஆறாவது என்பது ஃபர்ஸ்ட் ஃபார்ம். எலிமெண்டரி ஸ்கூலில் இருந்து பெரிய ஸ்கூலுக்கு வந்த வேளை. எல்லாம் புதுசு. புது நண்பர்கள்; புது ஆசிரியர்கள்.

“டேய்! நமக்கு இந்த வருஷம் கணக்கு வாத்யார் யார் வரப் போறாங்க?” முன் பெஞ்சில் என்னருகே அமர்ந்திருந்த ராகவனிடம் கேட்டேன்.

“ஒனக்குத் தெரியாதா? ராஜம் அய்யர் வரப் போறார்.”

நான் ‘களுக்’ என்று சிரித்துவிட்டேன். சரியாக அதே மைக்ரோ கணத்தில் வகுப்பினுள்ளே நுழைந்த ராஜம் அய்யர் என் சிரிப்பைப் பார்த்தும் கேட்டும் விட்டார்.

“பையா! என்ன சிரிப்பு? இங்கே வா!” குரல் மென்மையாக இருந்தது. கையிலோ பிரம்பு.

“கையை நீட்டு.”

பிரம்பு வளைந்து நிமிர்ந்தது. அதிக வலி இல்லாமல் சம்பிரதாயமாக ஓர் அடி; சிரிப்பிலிருந்து வெளிவராத நான், என் இடத்திற்கு மீண்டேன். சிரித்த காரணத்தைச் சொன்னால்தானே உங்களுக்குப் புரியும்.

ராஜம் என் அத்தையின் மூத்த பெண்ணின் பெயர். அதுவரை ராஜம் என்பது பெண்களுக்கே உரிய பெயர் என்று நினைத்திருந்த எனக்கு ஓர் ஆண் பெயர் ராஜம் என்றவுடன் சிரிப்பு வந்துவிட்டது. முதலில் இவர் பெயர் தெரிந்திருந்தால் அத்தை பெண்ணின் பெயரைக் கேட்டவுடன் சிரித்திருப்பேனோ என்னவோ? இதெல்லாம் எப்படி கணக்கு வாத்தியாரிடம் விளக்குவது. மேலும் அடி வாங்குவது என்பது, ஏதோ பழக்கப்படாத புதிய விஷயமும் அல்ல.

கர்நாடக இசை கற்றுக் கொள்ளத் தொடங்கிய பிறகு இரண்டு ‘ராஜம்’கள் அறிமுகம் கிடைத்தது. ஒருவர் எஸ்.ராஜம்; ஓவியர் பாடகர்; வீணை எஸ்.பாலசந்தரின் சகோதரர். இன்னொருவர் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் அவர்களின் முதன்மையான மூன்று சீடர்களில் ஒருவரான சங்கீத கலாநிதி பி.ராஜம் ஐயர்.

எட்டு ஆண்டுகள் கழித்து மேலும் ஒரு ‘ராஜம்’ பற்றி அறியும் வாய்ப்பு வந்தது. அது உண்மையிலேயே ஓர் அற்புதமான வாய்ப்பு.

விவேகானந்தா கல்லூரியில் பயிலும் போது சுவாமிஜியின் பல நூல்களைப் படிக்க ஆரம்பித்தேன். சுவாமிஜியின் சீடர்களான சில சென்னை இளைஞர்கள்தான், அவரை சர்வ மத மகா சபையில் கலந்துகொள்ள அமெரிக்கா அனுப்பும் பணியில் உதவி செய்தனர். அவருள் மிக முக்கியமானவர் அளசிங்கப் பெருமாள். அவருக்கு உடன் நின்றவர்கள் டாக்டர் நஞ்சுண்ட ராவ், சிங்காரவேலு முதலியார் (கிடி), பேராசிரியர் எம். ரங்காச்சாரியார், ஆர்.பாலாஜி ராவ், கே.சுந்தரராம ஐயர், பிலிகிரி ஐயங்கார், ஜி.ஜி. நரசிம்மாச்சாரியர், பி.ஆர்.ராஜம் ஐயர். இவருள் மிக இளையவர் ராஜம் ஐயர்.

இவர்களையெல்லாம் சுவாமி விவேகானந்தர் ‘எனது நண்பர்கள்’ என்று அன்போடு அழைப்பார். ‘சென்னை இளைஞர்களே! நீங்கள்தான் உண்மையில் அனைத்தையும் செய்து முடித்தவர்கள்; நான் முன்னணியில் இருந்தேன், அவ்வளவுதான்’ என்று அமெரிக்காவிலிருந்து எழுதிய கடிதத்தில் சுவாமிஜி குறிப்பிடுகிறார்.

ராஜம் ஐயர் 1872ல் மதுரையில் பிறந்தவர். உயர்கல்வி பயில்வதற்காக 1887ல் சென்னைக்கு வந்தார். கிறிஸ்தவக் கல்லூரியில் படிக்கும்போது ஆங்கில இலக்கியத்தில் பெரும் ஈடுபாடு கொண்டார். அருமையான ஆங்கில நடையில் எழுதும் வல்லமை பெற்றார். தான் ரசித்த படைப்பாளிகளைப் பற்றி அவர் எழுதிய கட்டுரையின் ஒரு சிறு பகுதி.

“Byron is an ocean-spirit so grand and powerful, Keats is a moon-spirit so sweet and sensuous, Shelly is an angel fluttering in the mid-air between earth and heaven, Wordsworth a spirit of the lonely star standing aloof, self-luminous and witnessing all things with unruffled peace and ease; Tennyson is a sweet bard”

தமிழ் இலக்கியத்திலும் அளவற்ற ஆர்வம் கொண்டு கம்பனையும், தாயுமானவ சுவாமிகளையும் விரும்பிப் படித்தார்.

கமலாம்பாள் சரித்திரம் தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதையாகவும் தமிழில் வெளிவந்த இரண்டாவது நாவலாகவும் (புதினம்) கருதப்படுகிறது. இதனை பி.ஆர்.இராஜமையர் விவேக சிந்தாமணி இதழில் 1893 பிப்ரவரியில் இருந்து எழுதத் தொடங்கினார்.

விவேக சிந்தாமணியின் முதல் இரண்டு இதழ்களில் இப்புதினம் ‘அநியாய அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம்’ என்ற தலைப்பிலும், மூன்றாவது இதழில் இருந்து ‘ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம்’ என்னும் தலைப்பிலும் தொடர்ந்து வந்து, 1895 ஜனவரியில் நிறைவுற்றது. விவேக சிந்தாமணியில் இக்கதை வெளிவந்தபோது பி.ஆர்.சிவசுப்பிரமணிய ஐயர் என்ற பெயரிலேயே எழுதினார்.

ராஜமய்யர் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அழ்ந்த அறிவும், புலமையும் பெற்றிருந்தார். வில்லியம் தாக்கரே, கோல்ட் ஸ்மித் போன்ற ஆங்கில நாவலசிரியர்களை படித்திருந்தார். ஆயினும் கமலாம்பாள் சரித்திரம் எழுதியதன் மூலம், எந்த ஆங்கில நடையின் தாக்கமும் இல்லாமல், தன்னுடைய கலைத்திறன் மற்றும் வாழ்க்கையினை நோக்கும் பாதை ஆகியவற்றைக் கொண்டு இவர் ஒரு புதிய இலக்கிய மரபைத் தொடங்கிவைத்தார்.

சிறுகுளம் என்ற கிராமத்தில் வாழும், முத்துசாமி அய்யர் – கமலாம்பாள் என்ற தம்பதியினரை கதைமாந்தர்களாகக் கொண்டது இந்த நாவல். சிறுகுளத்திலிருந்து பனராஸ் வரை இந்நாவலின் களம் விரிந்திருக்கிறது. நிறைவாக வாழ்ந்த இத்தம்பதிகளின் வாழ்க்கை, சுற்றம் மற்றும் பந்துமித்திரர்களின் அபவாதங்களால் சீரழிவதைப் பற்றிய கதைக் களனைக் கொண்டது.

கமலாம்பாள் சரித்திரத்தின் முற்பகுதியானது ராஜமய்யரின் இலக்கியக் கலைத்திறனாலும், அனுபவச் செழுமையாலும் நிறைந்துகிடக்கிறது. இயல்பான பேச்சும், பல வண்ணங்கள் கொண்ட நகைச்சுவையும், யதார்த்தமான நடையும், நடமாடும் கதைமாந்தரின் குணச்சித்திரமும் பிரமிக்க வைக்கும் நேர்த்தியோடு அமைந்திருக்கிறது.

பி.ஆர்.ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம், உலகக் கலாசார வரிசையில் வெளியிடுவதற்காக ஐக்கிய நாட்டு ஸ்தாபனம், சுமார் ஐம்பதாண்டுகளுக்கு (1950ல்) முன்பே தேர்ந்தெடுத்தது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் தயாராகியது. என்ன காரணமோ அந்தத் திட்டமே கைவிடப்பட்டது. மொழிபெயர்ப்பும் தொலைந்துவிட்டது.

பின்னர் இந்த நாவல் The Fatal Rumour என்று ஆங்கிலத்தில் ஸ்டூவர்ட் ப்ளாக்பர்ன் (Stuart Blackburn) என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. பல ஆண்டுகள் அந்த நாவலை ஆராய்ந்து, அடிக்குறிப்புகளும் சிறப்பு அகராதியும் இணைத்து அந்த நாவலை ஆங்கில மொழியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக அச்சகத்தால் 1999ல் வெளியிடச் செய்தார் ஸ்டூவர்ட் ப்ளாக்பர்ன். இந்த மொழிபெயர்ப்பு, 2000ம் ஆண்டின் ஏ.கே.ராமானுஜன் மொழிமாற்றப் படைப்புக்கான விருதினைப் பெற்றது.

தன்னுடைய முதல் நாவல் வெற்றி பெற்றாலும் அதில் தொடர்ந்து ஈடுபடாமல் ராஜம் ஐயர் சுவாமி விவேகானந்தரின் ஆன்மிகப் பணிக்குத் தன்னையே கொடுத்தார். தளர்வே இன்றி ஆன்மிகச் சாதனைகளைச் செய்தார். பிறகு இவர் எழுத்துகள் எல்லாம் வேதாந்தத் தொடர்புடையதாகவே இருந்தன.

நமது வேத உபநிடதங்களைப் பற்றி அறிஞர்கள் அறிந்து பயன் பெற சுவாமிஜியால் ஆரம்பிக்கப்பட்ட இலட்சியப் பத்திரிகை ‘பிரம்மவாதின்’ (Brahmavadin). அதன் ஆசிரியர் டாக்டர் நஞ்சுண்ட ராவ், சுவாமிஜியின் கருத்துகளால் பலரும் பயனடைய வேண்டும் என்பதற்காக ‘பிரபுத்த பாரதம்’ (Prabuddha Bharata) என்னும் இதழைக் கொண்டுவர விரும்பினார். அதன் ஆசிரியராக சுவாமிஜியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜம் ஐயர்.

சுவாமிஜி அமெரிக்காவில் இருந்தபோது பிரபுத்த பாரத இதழ்கள் அவரை அடைந்தன. தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சுவாமிஜி ஒரு கடிதம் எழுதினார். “பிரபுத்த பாரதம் இதழ்கள் வந்து சேர்ந்தன. வகுப்பில் அவற்றை வினியோகமும் செய்துவிட்டோம். அது திருப்திகரமாக உள்ளது. சென்னையில் இருந்துதான் புதிய ஒளி இந்தியா எங்கும் பரவியாகவேண்டும்.”

பத்திரிகைப் பணியே ஓர் ஆன்மிக சாதனை என நம்பிய ராஜம் ஐயருக்கு சுவாமிஜியின் பாராட்டு மிகப் பெரும் ஆசியாக அமைந்தது. 1896 முதல் 1898 வரை அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார். இவர் பணிபுரிந்த காலத்தில் பத்திரிகை சந்தாதாரர்கள் எண்ணிக்கை 1500லிருந்து 4,500 வரை உயர்ந்தது. ஏதெனத் தெரியாத ஒரு நோயினால் எதிர்பாராத விதமாக 1898 மே 13ம் நாள் தமது 26வது வயதில் திடீரெனக் காலமானார்.

இவர் மறைவுக்குப் பிறகு 1925ம் ஆண்டில் Rambles in Vedanta (வேதாந்தக் கருத்துகள்) என்ற நூல் பதிப்பிக்கப்பட்டது. 1896லிருந்து 1898 வரை ‘பிரபுத்த பாரத’ இதழில் இவர் எழுதியவற்றினுடைய தொகுப்பு இது. அத்வைத வேதாந்தம் பற்றிய ஒரு சிறந்த நூலாக இன்றும் படிக்கப்பட்டு வருகின்றது.

இந்நூலின் பொருளடக்கமே வாசகரை அசரவைத்துவிடும். வேதாந்தத்தின் இலக்கணம், இந்துமதமும் மதங்களின் பரிணாம வளர்ச்சியும், பக்தி வகைகள், கர்ம யோகம், மனிதனின் பெருமையும் சிறுமையும், ரிஷிகளின் பண்பு, உலகம் உண்மையா பொய்யா, ஆத்ம ஞானம், பகவத் கீதை சாரங்கள், ஆன்மிகத்தில் குறியீடுகள், நடராஜ தத்துவம், பாற்கடல் தத்துவம், கடவுள் தத்துவம், மனம், மௌனம், அறிவியலும் ஆன்மீகமும், கடமையின் இலக்கணம், ஞான யோகம், துறவென்றால் என்ன, வேதாந்தத்தில் உள்ள சறுக்கல் பகுதிகள் (Pitfalls in Vedanta) என்பவை போன்ற ஆழ்பார்வை கொண்ட தலைப்புகள். ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவான விளக்கங்கள்.

மேலும் நந்தன், ஸ்ரீ ஆளவந்தார், பகவான் புத்தர், வாயிலார் நாயனார், ஸ்ரீ தத்வராய சுவாமிகள், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்ரீ ஜயதேவ சுவாமிகள் ஆகியோர் பற்றிய சுருக்கமான, சுவையான வரலாறுகளையும் அளித்துள்ளார். வேதாந்தக் கருத்துகளோடு இவர்கள் வாழ்க்கை இணைந்துள்ள இடங்களைச் சுட்டிக்காட்டி எழுதியுள்ள பகுதிகள் வாசகரை நிச்சயம் சிந்திக்கத் தூண்டும்.

இந்நூலில் வாசுதேவ சாஸ்திரி என்ற நெடுங் கதையும் சில சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றிலுள்ள இயல்பான நகைச்சுவையும், கதைக் கருவும் படிப்போரை சிந்திக்க வைக்கும். இவை அனைத்திலும் வேதாந்தக் கருத்துகள் விரவிக் கிடக்கின்றன. ராஜம் ஐயரின் ஆங்கில நடையின் அழகு இந்தப் பக்கங்களுக்கு மேலும் இனிமை சேர்க்கின்றது. மொத்தத்தில் தலைசிறந்த ஒரு நாவல் அல்லது சிறுகதையில் இருக்கும் விறுவிறுப்பை இந்த வேதாந்தப் புத்தகம் அளிப்பது ஒரு சுவையான உண்மை.

இந்நூல் திருநெல்வேலி அல்வா போல் சுவைக்கிறது என்று சொல்லிவிட்டுச் சென்றால் அது தகுமோ? முறையோ? தருமம்தானோ? இதோ கொஞ்சம் கொடுக்கிறேன்.

எல்லாவற்றையும் காரண காரியங்களோடு (Rational) ஆராயவேண்டும் என்பதில்லை; இதயம் மூளை இரண்டும் இணைந்தே செயல்பட வேண்டும் என்கிறது வேதாந்தம். இல்லையென்றால் என்னாகும்? பிரெஞ்சு எழுத்தாளரும் நாடக ஆசிரியருமான பால்ஸாக் (Balzac) எழுதிய ஒரு கதையில் வரும் வேதியியல் விஞ்ஞானி, அழுகின்ற தன் மனைவியிடம் சொல்வதைக் குறிப்பிடுகிறார் ராஜம்.

“Do not cry dear! I have decomposed tears; tears contain a little phosphate of lime, some chloride of soda, some mucus and some water.”

அழுவது கண்கள் அல்ல; அது இதயம் என்று அறியாதவன், வேதாந்தத்தை எவ்வாறு அறிந்து கொள்வான் என்று கேட்கிறார் ராஜம்.

அறிவைப் பெறுவது நவீன யுகத்தில் எளிது, ஆனால் ஞானம் பெறுவது அப்படியல்ல என்பதற்கு ‘knowledge comes but wisdom lingers’ என்ற லார்ட் டென்னிஸன் (Lord Tennyson) வரிகளை மேற்கோள் காட்டுகிறார்.

துறவு என்றால் என்ன என்று விளக்கிவிட்டு, முத்தாய்ப்பாக சுவாமி விவேகானந்தரை மேற்கோள் காட்டுகிறார்.

“The Vedanta teaches that the world should be renounced, but not on that account abandoned”

வேதாந்தம் என்றால் என்ன என்ற கேள்விக்கு அது, உபநிடதங்கள், பிரம்மசூத்திரங்கள், பகவத் கீதை ஆகிய மூன்று கால்களில் நிற்கின்ற தத்துவம் (Prasthanatrayas) என்கிறார். பிறிதோரிடத்தில் “தாயுமானவ சுவாமிகளின் பாடல்கள் தமிழில் எழுதப்பட்ட உபநிடதங்கள்” என்கிறார்.

அனைத்திலும் உறையும் தெய்வத்தன்மையை நாம் உண்ராமல் இருக்கக் காரணம் பெயரும் வடிவமும்தான்; அதற்கோர் எளிய உதாரணம் சொல்கிறார் சுவாமிஜி. “அலை என்ற பெயரையும் வடிவத்தையும் மறந்துவிட்டுப் பாருங்கள்; கடலும் அலையும் ஒன்றாகத்தானே தெரியும்!”

இந்து மதத்திலுள்ள தெய்வ உருவச் சிலை வழிபாட்டை (Idolatry) கேலி பேசும் பிற மதத்தினரும், வேறு பல விதங்களில் அதையேதான் செய்கிறார்கள். தங்கத்திலும், இரும்பிலும், மண்ணிலும் இறைவன் இல்லையென்றால் அவன் வெற்றிடத்தில் மட்டும் எப்படி இருப்பான் எனக் கேட்டுவிட்டு ஓர் அருமையான விளக்கத்தைக் கொடுக்கிறார் ராஜம் ஐயர்.

“If a man worships his God with skulls and beads (மண்டையோடு, உருத்திராட்சரம்) he is told that his fancy representation signifies the highest, the mightiest, and the most beneficent Being and that the skulls and beads have an inner and beautiful signification, and thus gradually God gets better of the Idol.”

ஞானிகளாலும் ரிஷிகளாலும் வழிநடத்தப்பட்டது நமது பாரத தேசம். இங்கே எல்லாச் செல்வங்களும் கொழிக்கும் அரசர்களை விட, அனைத்தையும் துறந்த ஞானியர்க்கே மதிப்பு அதிகம். அதை அழகாகச் சொல்கிறார் ராஜம் ஐயர்.

“A sage is, indeed, the surest guarantee for a nation’s life and strength. A nation may lie dormant and apparently dead, but the noose of Yama will never fall upon it so long as there is left in it one sage, one perfect man alive.”

இந்தியப் பண்பாட்டைச் சிதைப்பதற்காகவே உருவாக்கப்பட்ட ‘மெக்காலே கல்வி முறை’ நிபந்தனை இன்றித் தோற்ற இடம் ராஜம் ஐயர். ஆம்! ஆங்கிலமொழியையும் இலக்கியத்தையும் கரைத்துக் குடித்த ராஜம், அதன் மீது ஏறி நின்று உரக்கக் கூவி உலகுக்கு உணர்த்தியது, இந்துமதத்தின் அடிப்படையான வேதாந்தத் தத்துவத்தைத்தானே!

இறக்கின்ற வயதா இருபத்தாறு? எனினும் இந்த வயதுக்குள் இவர் படைத்தது வரலாறு. எண்ணூற்று அறுபது பக்கங்கள் கொண்ட இந்நூலைப் படிக்கும்போது புரட்டிச் செல்லும் ஒவ்வொரு பக்கத்திலும், இவர் ஆன்மா மீண்டும் உயிர் பெற்று நம்மோடு உரையாடுகின்றது. வேதாந்த தீபத்தின் ஒப்பில்லா ஒளிக் கற்றையை நம் மீது பாய்ச்சி, ஒரு புதிய காற்றை சுவாசிக்கச் செய்கிறது.

இது படித்து முடிக்க வேண்டிய புத்தகமல்ல; படித்துக் கொண்டே இருக்க வேண்டிய புத்தகம்.

Leave a Reply