Posted on Leave a comment

பூனைக் கதைகள் | சுஜாதா தேசிகன்

காலை நடைப் பயிற்சியின் போது பூனை ஒன்று இறந்து கிடந்தது. சில நொடி மௌன அஞ்சலிக்குப் பிறகு கடந்து சென்றேன்.

நாங்கள் வசிக்கும் இருபது மாடிகள் கொண்ட ஃபிளாட்டில் மொத்தம் ஆயிரத்து ஐந்நூறு குடும்பங்கள் இருக்கின்றன. மதிலுக்குள் ஒரு கிராமம் என்று கூறலாம். குடும்பத்துக்கு இரண்டு காரும் ஒரு குழந்தையும்! பெரும்பாலும் அப்பா அம்மா வேலைக்குச் செல்லும் குடும்பங்கள். அழகிய பூந்தோட்டம் அதில் ஆங்காங்கே பூனைகள் ஓடிக்கொண்டு இருக்கும். குழந்தைகள் அதைத் துரத்திக்கொண்டு விளையாடுவார்கள். சில குழந்தைகள் வீட்டிலிருந்து பால் எடுத்துக்கொண்டு வந்து ஒரு தட்டில் அவற்றுக்குக் கொடுப்பார்கள்.

அப்பார்ட்மெண்ட் தகவல்களுக்கு ஓர் ஆன்லைன் குழு இருக்கிறது, அதில் ஒருவர் “இன்று இரண்டு இறந்த பூனைகளைப் பார்த்தேன். யாராவது பூனைகளுக்கு விஷம் வைக்கிறார்களா?” என்று கேட்க, இன்னொருவர் “சில நாட்களுக்கும் முன் மூன்று இறந்த பூனைகளைப் பார்த்தேன், ஆக மொத்தம் ஐந்து பூனைகள் இறந்துள்ளது” என்று பதில் கூற, இந்த விஷயம் சூடு பிடித்தது. அப்பார்ட்மெண்ட் அசோசியேஷன் இதைக் குறித்து ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று இந்தச் சிக்கலைத் தீர்க்க ஒரு ‘ஹெல்ப் டெஸ்க் டிக்கெட்’ சிருஷ்டிக்கப்பட்டது.

வழக்கம் போல பலர் குழுவில் சுகாதாரம், வக்கிரம் பிடித்தவர்கள், ஜீவகாருண்யம் என்று தலைப்புகளில் விடுமுறை நாள் பட்டிமன்றமாக விவாதித்துக்கொண்டு இருந்த சமயம் இன்னொருவர் இப்படி எழுதியிருந்தார்.

“நேற்று என் அபார்ட்மெண்ட்டுக்கு சென்று கொண்டு இருந்தேன். அப்போது மாடியிலிருந்து ‘தொப்’ என்று என் முன் ஒரு பூனை வந்து விழுந்து, உயிரை விட்டது. இது தானாக விழுந்த மாதிரி தெரியவில்லை. யாரோ வேண்டும் என்றே தூக்கிப் போட்டிருக்க வேண்டும். நான் அந்தப் பாவப்பட்ட ஜீவனைப் பார்த்துக்கொண்டு இருந்த சமயம் ஏழு வயது மதிக்கத் தக்க சிறுவன் பள்ளி சீருடையுடன் அதன் அருகில் வந்து வேடிக்கை பார்த்தான். பிறகு அந்த இறந்த பூனையை எடுத்துச் சென்று மறைவான புதரில் போட்டுவிட்டுச் செல்கையில், அவனிடம் நீயாருப்பா எந்த பிளாக் போன்ற விவரங்களைக் கேட்டேன், சொன்னான். அவன் அந்தப் பூனையைக் கையாண்ட விதம் அவன் பூனை இறந்துவிட்டதா என்று சோதித்த விதம், எனக்கு அவன் மீது சந்தேகமாக இருக்கிறது. பொதுவில் அந்தப் பையனைக் குறித்துப் பகிர தயக்கமாக இருக்கிறது. செக்யூரிட்டி இதைக் குறித்து ஆராய வேண்டும்” என்று போது மொத்த ஃபிளாட்டும் அதிர்ந்தது.

நுண்ணறிவுள்ள ஜீவன் பூனை, அது தானாகவே விழுந்திருக்க வாய்ப்பில்லை என்று சிலரும், உடனே அந்தப் பையனுக்கு கவுசலிங் கொடுக்க வேண்டும், போலிஸ் கேஸ் போட வேண்டும் என்று வழக்கம் போலக் குழுவில் பேச ஆரம்பித்தார்கள்.

அப்போது மேலும் ஒருவர் அனுப்பிய செய்தி மிக அதிர்ச்சியாக இருந்தது.

“CK என்று ஒரு வாட்ஸ் ஆப் குருப் உங்கள் மொபைல் போனில் இருக்கிறதா என்று உடனே பாருங்கள். அதில் பூனைக் கொலைகள் பற்றிய பரிமாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த வகையான நடத்தை ஒரு மனநோய். இது பிறருக்குத் தீங்கு விளைவிக்கும். உங்கள் மொபைலில் இந்த குரூப் இருக்கிறதா, அதில் உங்கள் குழந்தை இருக்கிறதா என்று பாருங்கள். CK என்பது Cat Killers கோட் வேர்ட்” என்று கூற எல்லாக் குடும்பங்களும் தங்கள் பிள்ளைகள் குறித்து அதிர்ச்சி அடைந்தார்கள்.

மூத்த குடிமகன்கள், தாய்மார்கள், சட்ட வல்லுநர்கள், கவுன்சலிங் செய்பவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு குழு அமைத்து குழந்தைகள் நலனுக்காக மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று முடிவு செய்ய வேண்டும், பல குழந்தைகள் சம்பந்தப்பட்டிருப்பதால் இனி இது குறித்துப் பொதுவில் விவாதிக்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு சில மாதங்களில் கொரோனா வந்து இப்போது நிறையப் பூனைகள் தங்கள் குட்டிகளுடன் உலாவுகின்றன.

இந்தப் பூனைக் கதையை படித்த நீங்கள், Science of Morality என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும். பலருக்கு தெரியாது என்று நினைக்கிறேன். Morality என்றால் ஒழுக்கம். எது சரி, எது தவறு, எது நல்லது, எது கெட்டது என்ற வேறுபாட்டைப் பற்றிய படிப்பு. குழந்தைகளை டாக்டர், என்ஜினியர் என்று படிக்க வைக்க ஆசைப்படும் நாம் ‘மாரல் சையின்ஸ்’ என்ற ஒன்றை மறந்துவிட்டோம்.

சிறுவயதில் என் பக்கத்து வீட்டில் ஓர் அணிலைப் பிடித்து அதைக் கிழித்த போது அதில் அணில் குஞ்சுகள் இருந்ததைப் பார்த்து என் உள்ளம் பதறியது. பார்க்காதே பார்க்காதே என்று உள்ளம் எச்சரித்தாலும் அதை மீறிப் பார்த்துக்கொண்டு இருந்தேன். இப்படிப் பார்த்துக்கொண்டு இருப்பது மனித இயல்பு. அதனால்தான் டிஸ்கவரி சேனலில் சிங்கம் மானைத் துரத்தி அடித்துத் தின்பதை ஆர்வமாகப் பார்க்கிறோம். சிறுவயதில் பட்டாம்பூச்சியின் இறகைப் பிய்த்து எறிவதிலிருந்து தொடங்கி வயதான பிறகு புல்தரையில் உட்கார்ந்து புல்லைப் பிடுங்குவது எல்லாம் ஒரு வித வன்முறையே. நம் எல்லோரிடமும் இந்த குணம் இருக்கிறது. ஆனால் அதை எழும்ப விடாமல் தடுப்பதற்குத்தான் இத்தனை உபதேசங்களும், புராணங்களும் இருக்கின்றன.

சுஜாதாவின் ‘தோரணத்து மாவிலைகள்’ என்ற கட்டுரையில் அவர் எலிமெண்டரி வகுப்பில் படிக்கும் போது ஒரு கிடாவெட்டைப் பார்த்து, அது அழியாத நினைவாக அவர் மனதில் தங்கியதால், ‘நான் எழுதும் க்ரைம் கதைகளுக்கெல்லாம் ஆதாரம்போல் தோன்றுகிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

‘ஆல்பர்ட் ஹிட்ச்காக்’ சிறுவனாக இருந்த சமயம், அவன் அம்மா ரொம்ப விஷமம் பண்ணினால் தனக்குத் தெரிந்த போலிஸ் கான்ஸ்டபிளிடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விடுவாளாம். அவர் ஹிட்ச்காக்கை ஜெயிலில் போட்டுப் பூட்டி வைக்க, அதுதான் அவர் மனதில் பதிந்து, குற்றமற்றவன் ஜெயிலில் அடைக்கப்படும் காட்சி திரும்பத் திரும்ப அவர் படத்தில் வரும் என்று சொல்லுவார்கள்.

எல்லோரும் சுஜாதாவாகவோ அல்லது ஹிட்ச்காக்காக ஆகப் போவதில்லை, மாறாக சைக்கோவாக மாற நிறைய வாய்ப்பு இருக்கிறது. சிறுவயதில் எனக்கு நிகழ்ந்த இன்னொரு சம்பவத்தைச் சொல்கிறேன். பள்ளியில் என்னுடன் படிக்கும் மாணவன் ஒருவனுடன் ஏதோ சண்டை. கோவத்தில் கெட்ட வார்த்தை ஒன்றைச் சொல்லிவிட்டேன். அடித்திருந்தால் கூட அவன் கோபப்பட்டிருக்க மாட்டான். அந்த வார்த்தையைக் கேட்டு அவன் முகம் வாடி அதற்குப் பிறகு அவன் என்னுடன் பேசவே இல்லை. பிறகு காலேஜ் படிக்கும் போதுதான் அவனுடன் மீண்டும் பேச முடிந்தது.

ஏன் அந்த கெட்ட வார்த்தை என் வாயில் அப்போது வந்தது என்று பல முறை யோசித்திருக்கிறேன். சகவாசம்தான் காரணம். கூட இருக்கும் நண்பர்கள் அந்த வார்த்தையை அடிக்கடி உபயோகித்தால் உங்கள் மனதில் அது பதிந்து பிறகு என்றாவது ஒருநாள் அது வெளிப்பட்டுவிடுகிறது. கெட்ட வார்த்தை, கெட்ட செயல்கள் எல்லாம் இப்படித்தான் ஆரம்பிக்கின்றன.

உங்களைப் போலப் பலர் உருவாக, ஒரு சமூக மாற்றம் உண்டாகிறது. இந்தப் பூனைக் கதையை எடுத்துக்கொண்டாலே, ஒரு சிறுவன் ஆரம்பித்த இந்த விளையாட்டு பல சிறுவர்களை அதில் சேர்ந்துகொண்டு ஒரு சமூகமே கெட்டுவிடுகிறது.

இந்த வன்முறையை மழுங்கச் செய்வதற்குத்தான் நம் ஞானிகள் தர்மங்களை உபதேசித்தார்கள். பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன் வன்முறையை எப்போதாவதுதான் பார்க்க முடியும், ஆனால் இன்று நம் பிள்ளைகளின் நிலைமை வேறு. அவர்கள் தினமும் ஒரு வன்முறையையாவது பார்க்கிறார்கள் என்று தோன்றுகிறது. அவர்கள் பார்க்கும் படங்கள், விளையாடும் வீடியோ விளையாட்டுகள் எல்லாவற்றிலும் வன்முறையும், ஆபாசங்களும் மறைந்திருக்கின்றன. நமக்கு அது பழகிவிடுகிறது. அதன் விளைவு அவர்களிடம் செயல்களிலும் பேச்சிலும் வன்முறை மெதுவாக வந்துவிடுகிறது. அடுத்த முறை உங்கள் குழந்தையை உன்னிப்பாக கவனித்தால் அவர்கள் செயல், பேச்சு, நடத்தை எல்லாம் அவர்கள் பார்க்கும் படங்களின் சாயலில் இருக்கும்.

இன்றி அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற OTT தளங்களில் ‘வெப்-சீரிஸ்’ வருகிறது. மிர்சாப்பூர், சேக்ரட் கேம்ஸ், வெள்ள ராஜா போன்றவற்றில் இருக்கும் ரத்தமும், பாலியல் காட்சிகளும், இந்து மதம், பிராமண சமூகத்தைக் கொச்சைப் படுத்தும் காட்சிகளும், அதில் பேசும் கெட்ட வார்த்தைகள் எல்லாம் ஆபாசத்தின் உச்சம். தொடர்ந்து இது போன்றவற்றைப் பார்த்தால் நம் உள்ளத்தில் இருக்கும் வன்முறையும் ஆபாசங்களும் தூண்டப்படும் அபாயம் இருக்கிறது.

திரைப்படங்களுக்குத் தணிக்கைச் சான்றிதழ் உண்டு, ஆனால் இந்த வெப் சீரீஸுக்கு எதுவும் இல்லை. நீங்கள் வைத்திருக்கும் சாதாரண மொபைல் போனில் இதைப் பார்க்கலாம். பார்ப்பது உங்கள் பொறுப்பு என்று வாதம் செய்தாலும், இது நம் கலாசார சீரழிவுக்கு வழிவகுத்து, அமெரிக்காவிலிருந்து பீட்சா பர்கர் போன்று, துப்பாகி கலாசாரம் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன் எல்லாப் பாலியல் தளங்களையும் தடை செய்தது. ஆனால் ஆன்லைன் ஸ்டிரீமிங்கிற்கு எந்தத் தடையும் இல்லை.

ஸ்மார்ட் ஃபோன் வாங்குவது, ஒரு நாளைக்கு ஒரு ஜிபி டேட்டா என்பது எல்லாம் இன்று கிட்டத்தட்ட இலவசம். ஏதாவது தெரியவில்லை என்றால் மகனோ மகளோ உடனே போன், ஐபேட் போன்ற வஸ்துக்களை உபயோகித்துத் தேடிவிடுவார்கள். இதில் பெருமைப் பட ஒன்றும் இல்லை. அவர்கள் தேடும் போது ஓர் ஓரத்தில் ஏதாவது ஒரு விளம்பரம் வந்தே தீரும். அதில் சில விளம்பரங்கள் வில்லங்கமானவை, பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டுபவை. ஒரு முறை கிளிக் செய்து பார்க்கலாம் என்று ஆரம்பித்தால், உடனே நம்மைப் போதைப் பொருள் போல அடிமையாக்கிவிடும் அபாயம் இருக்கிறது. இன்றைய இணைய உலகில் பாலியல் விஷயங்களை மிகச் சுலபமாகப் பார்த்துவிடலாம். உங்களால் தடை செய்ய முடியாது. இன்று நடக்கும் பல பாலியல் சார்ந்த குற்றங்களுக்கு இந்த ஸ்மார்ட்ஃபோனுடன் கூடிய இணையம் ஒரு முக்கியக் காரணம்.

சர்க்கரை சாப்பிடாதீர்கள் என்று சர்க்கரை நோய் உள்ளவர்களிடம் சொன்னாலும் அவர்கள் சர்க்கரையைத் திருட்டுத்தனமாகச் சாப்பிடுவது மாதிரிதான் இந்தப் பாலியல் படங்களைப் பார்ப்பதும். அதனால் தூண்டப்பட்டு நடக்கும் குற்றங்களே செய்தியாக வருகின்றன. இன்னும் சில வருடங்களில் இந்த இந்த மாதிரி செய்திகள் எல்லாம் பழகிவிடும் (இப்பொழுதே பழகிவிட்டது).

காலா படத்தைப் பார்த்துவிட்டு வரும்போது, என் மகன் “ராமரை வணங்கும் ஒருவர் எப்படி வில்லனாக இருக்க முடியும்? ராமர் goodதானே? இதில ஏன் bad? its confusing” என்றான். இதுதான் மனங்களில் நச்சைக் கலப்பது. இது போலப் படங்களைப் பார்த்தால், நாளை ராமாயணம் படிக்கும் குழந்தைகளின் மனதில் ராமர் பற்றிய தப்பான விஷயம் எங்கோ ஒளிந்துகொண்டு அவர்களைக் குழப்பும்.

நாம் வசிக்கும் அடுக்குமாடிகளைக் குடியிருப்பு என்கிறோம். ‘குடி’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு ஆங்கிலத்தில் ‘கம்யூனிட்டி’ என்று கொள்ளலாம். இந்த கம்யூனிட்டி நம் குடும்பமோ, நாம் வசிக்கும் குடியிருப்போ, நம் இனத்தவரோ இல்லை, நம் பாரத சமுதாயம் என்று கொள்ள வேண்டும்.

முதலில் பார்த்த பூனைக் கதை – ஏதோ ஒரு சிறுவன் ஆரம்பித்த இந்த விபரீத விளையாட்டு பல சிறுவர்களை அதில் சேர்ந்துகொண்டு… நம்மைச் சுற்றிப் பல பூனைக் கதைகள் உருவாக நிறைய வாய்ப்பு இருக்கிறது.

Human being – The only animal that thinks, but he is not what he thinks he is.

Leave a Reply