Posted on Leave a comment

பள்ளிக் கல்வியில் ஆங்கிலமும் தாய்மொழியும் | ஜெயராமன் ரகுநாதன்

அந்தப் பிரசித்தி பெற்ற ஆகஸ்டு 15, 1947ன் நள்ளிரவு, மௌண்ட்பேட்டன் கப்பலேறும்போது மறதியாக விட்டுச்சென்ற ஆங்கிலம் என்னும் மொழி இந்தியாவைப் படாத பாடு படுத்திக்கொண்டிருக்கிறது. அன்றிலிருந்து ஆங்கிலத்துக்கான இடம் எது என்பதில் நமது சண்டையும் சச்சரவும் ஓய்ந்தபாடில்லை. முக்கியமாகச் சொல்ல வேண்டுமானால் எந்த மொழியில் நம் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதில் இன்னும் குடுமிப்பிடி தொடருகிறது. சமீபத்தைய தேசிய கல்விக் கொள்கை இன்னொரு பரிமாணத்தைச் சொல்லியிருப்பது சிக்கலைத் தீர்க்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் ஒன்றைச் சொல்ல வேண்டும். புதிய கல்விக்கொள்கை புத்திசாலித்தனமாக வெட்டி அரசியலைத் தவிர்த்து விட்டிருக்கிறது. எதுவாக இருந்தாலும் திருப்தி அடையமாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பவர்களைத் தவிர மற்ற எல்லோருக்குமே தேசியக் கல்விக் கொள்கை விஷயத்தில் திருப்தி என்றுதான் சொல்ல வேண்டும்!

இந்த மொழி சமாசாரத்தில் இரண்டு அடிப்படை விஷயங்கள் இருப்பதைப் பார்க்கலாம்.

ஒன்று, தாய் மொழியில் கற்பிப்பதுதான் சிறந்தது என்னும் வாதம். இரண்டு, ஆங்கில மொழியில் சரளம் இல்லையென்றால் இந்தியாவில் தினப்படி பொருளாதார வாழ்க்கை சிரமம்தான், ஆம் வேலை கிடைப்பது, அதில் முன்னேறுவது எல்லாவற்றிற்கும் ஆங்கிலம் வேண்டியிருக்கிறதே! இந்த இரண்டிலுமே உண்மை இருக்கிறது. மொழிப்பற்றாளர்களும் ஓட்டு அரசியல்வாதிகளும் முதலாவதைப் பிடித்துக்கொண்டுவிட, சராசரிப் பெற்றோர்கள் இரண்டாவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

எனக்கென்னமோ பதில் சுலபமாகத் தோன்றுகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் தாய் மொழியில்தான் கற்பிக்க வேண்டும். ஆனால் கூடவே ஆங்கிலத்துக்கான அடித்தளத்தை அமைத்திட வேண்டும். பத்து வயது வரும்போது எந்தக் குழந்தையும் ஆங்கிலத்தில் சரளமாக இருக்க வேண்டும். இது நடக்கக்கூடியதுதான். ஏனென்றால், இயற்கையாகவே மனிதனுக்கு இரு மொழி என்பது சுலபம் என்கின்றன ஆராய்ச்சிகள். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அறிவியல் பாடத்தை ஆங்கிலத்திலும் மற்ற பாடங்களைத் தாய் மொழியிலும் கற்பிக்கலாம் என்பது என் யோசனை.

ஆனால் இதில் பிரச்சினை இருப்பது மாணவர்களுக்கு அல்ல. அவர்களால் சீக்கிரம் புரிந்துகொண்டுவிட முடியும். உண்மையான சோதனை ஆசிரியர்களுக்குத்தான்! சராசரி இந்திய ஆசிரியராலேயே மாணவர்களின் தேவைக்கேற்றபடி ஆங்கிலம் மட்டுமில்ல, தாய்மொழிப் பாடங்களைக் கூடச் சொல்லித்தர முடிவதில்லை.

நான் சொல்லவில்லை. 2012ல் நடந்த ஆய்வு ஒன்றில் 730,000 ஆசிரியர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 91% அடிப்படைத் தகுதிகளையே பெற்றிருக்கவில்லை என்பதுதான் வருத்தமான முடிவு! இது கல்விக்கொள்கையின் தவறல்ல. அரசாங்கத்தின், ஆட்சியின் தவறு.

கல்விக் கொள்கையானது மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகத்தான் கருதுகிறேன். என்னை முக்கியமாகக் கவர்ந்த அம்சம் இந்த கல்விக் கொள்கை தாய்மொழிவழிக் கல்வியை முதன்மையாகச் சொல்லியிருக்கிறது என்பதோடு ஆங்கிலத்தை அகற்றச் சொல்லவில்லை. சில மாநிலங்களின் அழுத்தத்திற்குப் பணிந்து அப்படிச் செய்திருந்தால் நமக்கு கதி மோட்சமே கிடையாது. நல்லவேளை அப்படி ஏதும் செய்யப்படவில்லை. மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்கள் முன்பு பள்ளியிலிருந்து ஆங்கிலத்தை நீக்கியதால் எத்தனை இழந்தார்கள் என்பதைக் கல்விக்கொள்கையை வடிவமைத்தவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். இந்த மாநிலங்கள் ஆங்கிலம் இல்லாததால் தகவல் தொழில் நுட்பத்துறையில், ஒரு கர்நாடகா போலவோ அல்லது தமிழ்நாடு போலவோ நன்மைகளை அடையத் தவறிவிட்டார்கள். மம்தா பானர்ஜி இந்த ஒரு காரணத்தை வைத்தே கம்யூனிஸ்டுகளை விரட்டினார். யோகி ஆதித்யனாத்துமே இப்போது உத்தரப் பிரதேசத்தில் ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வியை கொண்டு வந்துவிட்டார்.

தமிழ்நாட்டில் கேட்கவே வேண்டாம். ஹிந்திக்குப் பயந்து ஆங்கிலமே மேல் என்ற நிலைமை போய், ஆங்கிலம்தான் வேண்டும் என்று பெரும்பாலானோர், கவனிக்க, பெரும்பாலானோர்தான், ஏனென்றால் தமிழ் மீது அதீதப் பற்றுள்ளதாக சொல்லிக் கொள்ளும் தனித்தமிழ் அன்பர்கள் கூட்டம் இன்னும் கொட்டை வடிநீர் குழம்பியகம் என்று காபி கடைகளை விளித்துக்கொண்டிருக்க, பெரும்பாலானோர் ஆங்கிலம் அவசியம் என்று உணர்ந்து சமத்தாக தத்தம் குழந்தைகளை அறிஞர் அண்ணா, ஆற்காடு வீராசாமி, இளங்கோவன் என்று அரிச்சுவடி படிக்க வைப்பதோடு, ஆப்பிள், பால், காரட் என்றும் ஆல்ஃபபெட் படிக்க வைக்கத் தொடங்கிவிட்டனர்.

ஓரளவுக்கு பிஜேபி – ஆர் எஸ் எஸும் கூட ஹிந்தித் திணிப்பின் பாதகங்களை உணர்ந்துகொண்டு விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ் இந்தியாவில் ஆங்கிலத்தை ஒழித்து ஹிந்தியையே முதன்மை மொழியாக்கும் கொள்கையைக் கொண்டிருந்தனர். ஆனால் நிதரிசனத்தில் சங்பரிவார் குடும்பங்களிலேயே, யதார்த்தமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஆங்கிலம் படிக்கவில்லையானால் எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியாது என்பதைப் புரிந்துகொண்டு வழிக்கு வந்துவிட்டனர். ஹிந்தித் திணிப்பு என்பது நடுநிலை ஓட்டுக்களை இழக்கச்செய்யும் என்பதை பா.ஜ.கவும் புரிந்து கொண்டுவிட்டது.

1991க்குப் பிறகு சாதாரண இந்தியனும் ஆங்கிலத்தின் அவசியத்தைப் புரிந்துகொண்டு விட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். மத்திய, கீழ் மத்திய வகுப்பினருமே தங்கள் குழந்தைகளை ஆங்கிலம் சொல்லித் தராத அரசுப் பள்ளிகளிலிருந்து ஆங்கிலப் பள்ளிக்கு மாற்றத் தொடங்கியது நடந்தது. தாராளமயமாக்கல், தகவல் தொழில் புரட்சியின் வளங்களை அவர்களின் குழந்தைகளும் பெற ஆரம்பித்த கதை நமக்குத்தெரியும்.

ஒரு சுவாரஸ்யமான தகவல் என்ன தெரியுமா?

இன்று இந்தியாவின் மாணவர்களில் 47.5% அளவுக்கு ஆங்கிலம் கற்றுத் தரும் தனியார்ப் பள்ளிகளில் படிக்கிறார்கள். இதனாலேயே இந்தியாவின் தனியார்ப் பள்ளி என்பது உலகத்திலேயே மூன்றாவது மிகப்பெரிய பள்ளிக்குழுவாக விளங்குகிறது. இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் இதில் 70% பெற்றோர்கள் மாதம் ரூ 1000க்கும் குறைவான கட்டணமும் 45% பெற்றோர்கள் மாதம் ரூ 500க்கும் குறைவான கட்டணமும் செலுத்திப் படிக்க வைக்கிறார்கள்.

எனவே இந்தியாவில் ஆங்கிலக் கல்வி ஜனாயகப்படுத்தப்பட்டுவிட்டது என்றே தைரியமாகச் சொல்லாம்!

ஆங்கிலக் கல்வியை ஒரு மாதிரி ஒப்புக்கொண்டுவிட்ட மாநில அரசுகளும் அதன் மூலம் மாநிலத்துக்கும் மக்களுக்கும் பெரும் நன்மை காத்திருப்பதை உணரத் தொடங்கிவிட்டனர். தகவல் தொழில்துறை மணிக்கணக்கில் முன்னேறிக் கொண்டிருக்க, வேலை வாய்ப்புகளும் பெருகப்பெருக, ஆங்கிலம் அறிவதுதான் அங்கே பிழைக்க வழி என்பது எழுதப்படாத விதி என்றாகிவிட்டது.

இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவில்தான் மிக அதிகமாக ஆங்கிலம் பேசும் ஜனம் இருக்கப்போகிறது என்று ஒரு ஆய்வு சொல்லுகிறது. இந்தியாவில்தான் மற்றெந்த நாடுகளையும்விட, அமெரிக்கா தவிர, அதிகமான ஆங்கில நாவல்களும் இன்னபிற எழுத்துக்களும் வரத்தொடங்கிவிட்டன. இன்னும் பத்தாண்டுகளில் இந்திய ஆங்கிலம் என்றொரு வகை ஆங்கிலம் அமெரிக்க ஆங்கிலத்துக்கு நிகராகப் பேசப்படும் என்பது கணிப்பு.

ஆனால் இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான சமூகச் செயல்பாடு இருக்கிறது.

போன முறை ஆங்கிலக்கல்வி என்று வந்து கான்வெண்ட், பிரைவேட் பள்ளி என்றெல்லாம் ஆனபோது சமூகத்தில் ஒரு இடைவெளி ஏற்பட்டதை அறிவோம். வசதி படைத்த மைலப்பூர், தி நகர் குழந்தைகள் ஆங்கில மீடியம் படிக்க, வசதி குறைந்த வட சென்னைக் குழந்தைகள் தமிழ் மட்டுமே படித்ததனால், முன்னவர் குழந்தைகள் பெரிய மனுஷர்களாகவும் பின்னவர் குழந்தைகள் ஒரு பொருட்டாக மதிக்கப்படாமலும் நடந்த அவலம் தவிர்க்கப்பட வேண்டும்.

“ஓ நீ தமிழ் மீடியமா” என்று ஏளனம் செய்யப்பட்ட குழந்தைகளின் நிலைமை இனி வரக்கூடாது. சமீபத்தில் வெளிவந்த இர்ஃபான் கான் நடித்த ஹிந்தி மீடியம் படம் இந்த வித்தியாசத்தை அருமையாகச்சொன்னது. இர்ஃபான் கான் வெறுத்துப்போய் ஒரு கட்டத்தில் “இந்தியா என்றால் ஆங்கிலம். ஆங்கிலம் என்றால் இந்தியா” என்று சொல்வது சிரிப்பதற்கான விஷயம் அல்ல.

இன்னொரு விஷயம்.

ஆங்கில கற்பிப்பது தாய்மொழி கற்பிப்பதற்குத் தடையாக வந்துவிடக்கூடாது. மொழி என்பது வெறும் பேச்சு வழக்குக்கு அல்ல. அது சிந்தனைக்குமானதுதான். என்னதான் ஆங்கிலம் படித்து ஒரு நிறுவனத்திற்கு நிர்வாக இயக்குநர் ஆனாலும், நான் தமிழில்தான் சிந்திப்பேன். சில உணர்வுகள் எனக்குத் தமிழில்தான் ஏற்படும். காலைப் பனியையோ, சிரிக்கும் குழந்தையையோ, மலர்ந்து கீழே உதிரும் பவழ மல்லியையோ பார்க்கும்போது நான் ‘வாவ்’ என்று சொல்லுவதில்லை. “ட்டேயப்பா” என்று என் தாய்மொழியில்தான் வியக்கிறேன். “எண்ணிரெண்டு பதினாறு வயது” என்று சிவாஜி கணேசன் ஸ்டைலாக நடக்கும்போது “கொல்றாண்டா” என்றுதான் சப்தம் போடுகிறேன். “ஆவ்சம்” என்று சலம்புவதில்லை.

ஆங்கிலம் பேசக் கற்றுக்கொள்வது இப்போது வெகு சுலபமாகிவிட்டது. “ஹல்லோ இங்க்லிஷ்” போன்ற ஏகப்பட்ட செயலிகள் வந்துவிட்டன. அவற்றின் உதவியோடு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் கூட ஆங்கிலத்திலேயே பேசி, கற்பித்து தம் ஆங்கிலப் பாண்டித்தியத்தை வளர்த்துக்கொண்டு மாணவ மாணவியருக்கும் உதவ முடியும்.

ஆசிரியர்களின் முக்கியத்துவம் இன்று நாட்டுக்கு மிக அவசியமானது. தேசியக் கல்விக் கொள்கையும் அதை வலியுறுத்துகிறது. இதற்காகவே நாலு வருட பி.எட் தொழில்முறை ஆசிரியப் படிப்பைப் புகுத்த ஆலோசனை கூறியிருக்கிறது.

என் கவலையெல்லாம் இந்தக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் வரப்போகும் சுணக்கங்கள் பற்றித்தான். தகுதியே இல்லாத ஆசிரியர் கூட்டம் நாடெங்கும் பரவிவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. தகுதி இல்லாத ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்திய ஊழல் நாம் கேள்விப்படாதது இல்லை. இப்படிப் பணம் கொடுத்து ஆசிரியர்களானவர்கள் என்ன கல்வி கற்பிக்க முடியும்? இது எல்லா மாநிலங்களிலும் நடப்பதாகத் தெரிகிறது.

இது போன்ற முறைகேடுகள், முக்கியமாக ஆசிரியர்கள் விஷயத்தில் நடக்குமானால் எப்பேர்ப்பட்ட கல்விக் கொள்கையோ மொழிக் கொள்கையோ வகுத்தும்தான் என்ன, நிலைமை மாறப்போவதில்லை. ஆசிரியர் என்பவர் ஒரு நாட்டின் தலைமுறையையே உருவாக்கக் கூடியவர். அந்த விஷயத்தில் சமரசம் செய்வோமானால் நம்மை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

Leave a Reply