Posted on Leave a comment

சாதனம் நான்கு: வேதாந்த விசாரத்திற்கான அடிப்படைத் தகுதிகள் – ஜடாயு

அன்பாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் கோபப்படவும் கூடாது என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. கணவன்-மனைவி, பெற்றோர்-குழந்தைகள், நண்பர்கள், மேலாளர்-பணியாளர், ஆசிரியர்-மாணவர், தலைவர்-தொண்டர் என எல்லா விதமான உறவு முறைகளிலும் இந்த எதிர்பார்ப்புதான்.

ஆனால் உலக விவகாரத்தைப் பொருத்தவரையில் இது சாத்தியமே இல்லை. இவை இரண்டுமே பற்றினால் விளைபவை என்பதால் ஒன்றில்லாமல் மற்றொன்றிற்கு இருப்பே இல்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் நமது இந்து ஞான நூல்கள் காம க்ரோதம், ராக த்வேஷம் என்று இவற்றை எப்போதும் இரட்டையாகவே கூறுகின்றன. இங்கு காமம் என்பது பாலியல் ஈர்ப்பை மட்டுமல்ல, எல்லாவிதமான உலகியல் ஆசைகளையும் விருப்பங்களையும் பற்றுகளையும் குறிக்கிறது. குரோதம் என்பது அதே போல கோபம், அசூயை, பொறாமை, வன்மம் ஆகிய எல்லாவிதமான துவேஷ உணர்வுகளையும் குறிக்கிறது.

‘மனிதன் எதனால் தூண்டப்பட்டு பாவம் செய்கிறான், இச்சையில்லாத போதும் வலியக் கொண்டு போய்த் தள்ளப் பட்டது போல?’ என்று கீதையில் அர்ஜுனன் கேட்கிறான். பகவான் சொல்கிறான் – ‘காமம்தான், குரோதம்தான். எல்லாவற்றையும் தின்று தீர்த்து விடும். ரஜோகுணம் இவற்றின் பிறப்பிடம். இவைகளே உன் பகைவர்கள் என்று அறிவாய். தீயை புகை சூழ்வது போன்றும், கண்ணாடியில் அழுக்குப் படிவது போன்றும், கருவை (embryo) கருப்பை (womb) மூடியுள்ளது போன்றும் காமமும், குரோதமும் மனித அகத்தை மூடியுள்ளன (கீதை 3.36-38).’

இந்த உவமைகளின் நுட்பம் ஆழ்ந்து சிந்திக்கத் தகுந்தது. புகை, தீயுடனேயே இயற்கையாகக் கூடிப் பிறப்பது. அழுக்கு வெளியிலிருந்து கண்ணாடியில் வந்து ஒட்டுவது. கருப்பை கர்ப்பம் தானாகவே தன்னைச் சுற்றி உருவாக்கிக் கொள்வது. மனித அகத்தில் காம, குரோதங்களும் இதே போல மூன்று அடுக்குகளாகப் படிகின்றன. தீயை ஊதி சுடர்விட்டு எரியச் செய்தாலே, புகை மறையும். துடைத்தால் கண்ணாடியில் அழுக்குப் போகும். கருப்பையில் கரு நகரமுடியாது மூடப் பட்டிருக்கும் – அது வளர்ந்தபின்புதான் வெளியேவர முடியும்.

கீதை மேலும் கூறுகிறது – ‘மனிதன் புலன்களுக்கான விஷயங்களைக் கருதும்போது அவற்றில் பற்றுதலுண்டாகிறது. பற்றுதலால் காமம் உண்டாகிறது. காமத்தால் சினம் பிறக்கிறது’ (2.62). எனவே, கோபமில்லாத அன்பு என்பது முயல் கொம்பு போல உலகில் காணக்கிடைக்காத ஒரு பொருள் என்பதே நமது ரிஷிகளும் ஞானிகளும் கண்டுரைத்த உண்மை. சத்வ குணத்தை வளர்த்துக் கொள்ள விழைபவர்கள் கூடியவரை கோபத்தைக் கட்டுக்குள் வைக்க முயற்சி செய்வார்கள். அப்படி முயல்கையில், பற்றையும் விருப்பங்களையும் அன்பையும் கூட அதே ரீதியில் கட்டுக்குள் வைக்காமல் கோபத்தை மட்டும் தனியாக அடக்குவது கடினம் என்ற அதிர்ச்சிகரமான உண்மை புலப்படும்.

அத்தகைய புரிதல்களே சிறிது சிறிதாக விவேகம் (நிலையானவற்றையும் நிலையில்லாதவற்றையும் பிரித்தறியும் அறிவு), வைராக்கியம் (பற்றை விடுதல்) ஆகிய இரண்டு சாதனங்களாக ஆகின்றன.

*

அழியும் உலகில் கிடைத்தற்கரிய காமங்கள் எவையெவை
அக்காமங்கள் அனைத்தையும்
விரும்பியபடி வேண்டிடுக
இப்பேரழகிகள் ரதங்கள் வாத்தியங்கள்
மானுடர்களால் நினைத்தற்கும் அரியவை
உனக்கு வழங்கினேன்
இவற்றில் மகிழ்ந்து களித்திடுக
நசிகேதா
மரணத்தைப் பற்றிக் கேட்க வேண்டாம்.

நிலையற்றவை வீழ்பவை இவை
அந்தகனே
புலன்களின் ஒளியனைத்தையும் தேய்த்தழிப்பவை
மேலும் வாழ்வோ மிகவும் குறுகியது
ரதங்கள் உன்னிடமே இருக்கட்டும்
ஆடல்பாடல் உன்னிடமே இருக்கட்டும்.

(கட உபநிஷதம் 1.25-26)

வேதாந்த மரபில் முழுமையான விடுதலை வேட்கை (மோட்சம் அல்லது முக்தி) என்பதன் சுடர்மிகும் ஆதர்சமாக நசிகேதன் என்ற இந்தச் சிறுவன் இருக்கிறான். அதனால்தான் மரண தேவனே அவனது ஞான குருவாக வந்தமைகிறான். ‘அபி ஸர்வம் ஜீவிதம் அல்பமேவ’ (மேலும் வாழ்வோ மிகவும் குறுகியது) என்ற வாசகத்தை உச்சரிக்கும் அந்த இளம் உதடுகளைக் கற்பனை செய்து பாருங்கள். என்ன ஒரு மகத்தான கதை, மகத்தான உரையாடல். சவரக்கத்தியின் நுனிபோல ஜ்வலிக்கும் இந்த ஞானத்தேடலே வேதாந்த தத்துவத்தின் அடித்தளம். அதன் பிரமிட்டும் தத்துவ அமைப்பும், சிக்கலான நேர்த்தியான நுட்பமான அறிதல்களும் கட்டமைக்கப் பட்டுள்ளது இந்த ஒரு தேவையை முன்வைத்துத்தான்.

நீர்த் தொகுதிகள் வந்து விழுந்து
மேன்மேலும் நிரப்புதற்குரியதாகியும்
அசையாது நிலைகொண்டிருக்கும் கடல் போல,
காமங்கள் எவனுள் வந்து விழுகின்றனவோ
அவனே சாந்தியடைகிறான்
காமங்களைக் காமுறுபவன் அதனை அடையான்.

(கீதை 2.70)

வேதாந்த விசாரத்திற்குள் நுழைவதற்கான அடிப்படைத் தகுதிகளாக ‘ஸாதன சதுஷ்ட்யம்’ (சாதனம் நான்கு) எனப்படும் நான்கு விதமான பண்புகள், மனப்பாங்குகள், இயல்புகள் கூறப்பட்டுள்ளன. ஆத்ம குணங்கள் என்றும் இவற்றைக் கூறுவது வழக்கம்.

1) விவேகம் – நிலையானதையும் நிலையற்றதையும் பிரித்துணரும் அறிவு

2) வைராக்கியம் – பற்றறுத்தல்

3) ஶமாதி ஷட்ஸம்பத் எனப்படும் ஆறு செல்வங்கள்: ஶமம் (அமைதி), த³மம் (புலனடக்கம்), திதிக்ஷா (ஞானத்தேடலில் பொறுமையுடன் கூடிய விடாமுயற்சி), உபரதி (உலக வியவகார நுகர்ச்சிகளை நிறுத்தல்), ஶ்ரத்³தா⁴ (சிரத்தை, அதாவது சாஸ்திரத்தின் மீதும் குருவின் மீதும் கொள்ளும் உறுதியான நம்பிக்கை) ஸமாதா⁴னம் (மனதை மெய்ப்பொருளில் ஒருநிலைப்படுத்துதல்)

4) முமுக்ஷுத்வம் – சம்சாரச் சுழலிலிருந்து விடுதலை பெறும் வேட்கை.

ஆதி சங்கரர் தமது உரைகளிலும் விவேக சூடாமணி உள்ளிட்ட பல நூல்களிலும் இந்த அடிப்படைத் தகுதிகளைக் குறித்து விரிவாக வலியுத்திக் கூறுகிறார். இந்த ஆத்ம குணங்களின் மொத்த உருவமாக நசிகேதன் இருக்கிறான் என்பதை கட உபநிஷதத்தைக் கற்பவர்கள் உணர முடியும். சிறந்த கலைகளான ஆடல்பாடல்களை நசிகேதன் நிராகரிக்கிறானே என்ற கேள்வி எழும். அடிப்படையில் புலன் நுகர்ச்சிக்காவே அமைந்த ஆடல்பாடல்களே இங்கு நிராகரிக்கப் படுகிறது. ஆனால், புராணங்களிலும் பக்தி மரபுகளிலும் இதே இசையும் நடனமும் பக்தி வெளிப்பாட்டின் ஒரு பகுதியாக, மேற்கண்ட ஆத்ம குணங்களை வளர்த்துக் கொள்வதற்கான கருவிகளாக ஏற்றம் பெறுகின்றன. கலையின் உன்னதமாக்கம் என்பது இதுதான். இந்துமதத்தைத் தவிர வேறெங்கும் இவ்வளவு ஆழமாகவும், விரிவாகவும் இந்தக் கூறு வளர்த்தெடுக்கப் படவில்லை என்று கூறலாம்.

கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் ஆகிய ஆபிகாமிய மதங்கள் தங்களது கருத்தாக்கத்தில் ஏழு வானங்களுக்கும் அப்பால் இருக்கும் சொர்க்கம், 72 கன்னியர்கள் கிளர்ச்சி தரும் சுவனம் என்றெல்லாம் உச்சபட்சமாகக் கற்பனை செய்யும் ‘சொர்க்க லோக’ சமாசாரங்கள் இங்கு உபநிஷதத்தில் வரும் பாலகனால் காக்கைக் கழிவு போல (காகவிஷ்டமிவ) இடது கையால் நிராகரிக்கப் படுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். வேதாந்தம் கூறும் விடுதலை என்ற மகத்தான இமயம் போன்ற இலட்சியத்தின் முன் சாதாரண மதங்கள் கூறும் சொர்க்கம் முதலானவை மண்கட்டிகள் போன்று தென்படுகின்றன என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

*

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு.

திருக்குறளில் நீத்தார் பெருமை அதிகாரத்தின் முதற்குறள் இது. இக்குறளுக்கான உரையில் மேற்கூறிய நான்கு அடிப்படைத் தகுதிகள் பற்றிய விவரணத்தை அழகுற அமைத்திருக்கிறார் உரையாசிரியரான பரிமேலழகர்.

// பரி. உரை: ஒழுக்கத்து நீத்தார் பெருமை – தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை; விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு – விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு. //

வாழ்க்கையில் தனது ஸ்வதர்மத்தைக் கடைப்பிடித்து நின்று துறவறத்தை மேற்கொள்வாரது பெருமையை உயர்ந்ததாக நூல்கள் கூறும்.

// அறியாமை நீங்க, நித்த அநித்தங்களது வேறுபாட்டு உணர்வும், அழிதன் மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும், பிறவித் துன்பங்களும் தோன்றும்; அவை தோன்ற வீட்டின் கண் ஆசை உண்டாம்; அஃது உண்டாகப் பிறவிக்குக் காரணம் ஆகிய ‘பயன்இல்’ முயற்சிகள் எல்லாம் நீங்கி வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாம் //

1) நித்த அநித்தங்களது வேறுபாட்டு உணர்வு – நித்ய அநித்ய வஸ்து விவேகம். நிலையானதையும் நிலையற்றதையும் பிரித்துணரும் அறிவு.

2) அழிதன் மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும் பிறவித்துன்பங்களும் – இஹ-அமுத்ர-அர்த்த- பல-போக-விராகம். அதாவது வைராக்கியம்.

3) வீட்டின் கண் ஆசை – முமுக்ஷுத்வம். பிறவிச் சுழலிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்னும் வேட்கை.

4) வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி: மேலே கூறப்பட்ட ஶமாதி ஷட்ஸம்பத் எனப்படும் ஆறு செல்வங்கள்.

பரிமேலழகரின் காலம் பொயு. 13ம் நூற்றாண்டு. தமிழ்நாட்டில் வேதாந்தக் கருத்துக்கள் ஆழமாக நிலைபெற்றுவிட்ட காலகட்டம் இது என்பதனால், அவற்றைத் தமது திருக்குறள் உரையில் அவர் எடுத்தாள்வதில் வியப்பேதும் இல்லை. மேலே பரிமேலழகர் குறிப்பது ‘ஸாதன சதுஷ்டயம்’ என்ற விஷயத்தைத்தான் என்பது என்பதை இக்கட்டுரையாசிரியர் தானாக வலிந்து கூறவில்லை. இது முதுபெரும் தமிழறிஞர் கி.வா.ஜகன்னாதன் தொகுத்தளித்துள்ள புகழ்பெற்ற திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு நூலிலேயே அடிக்குறிப்பாக உள்ளது (பக். 21-22).

கைவல்ய நவநீதம் என்ற புகழ்பெற்ற பிற்கால தமிழ் வேதாந்த நூல் ‘சாதனம் இந்நான்கே’ என்று ஒரே பாடலில் இதனைத் தெளிவாக எடுத்துரைக்கிறது:

நித்திய அநித்தியங்கள்
நிண்ணயம் தெரி விவேகம்
மத்திய இகபரங்கள்
வரு போகங்களில் நிராசை
சத்தியம் உரைக்க வேண்டும்
சமாதி என்றாறு கூட்டம்
முத்தியை விரும்புமிச்சை
மொழிவர் சாதனம் இந்நான்கே.

[நிண்ணயம் – நிர்ணயம்; மத்திய – நடுவான; இகபரங்கள் – இம்மை மறுமை; நிராசை – பற்றின்மை; சமாதி என்றாறு கூட்டம் – ஶமம் முதலான ஆறு செல்வங்கள்]

Leave a Reply