Posted on Leave a comment

பாஜக வடகிழக்கை வென்ற வரலாறு புத்தகத்தின் முன்னுரை | எஸ்.ஜி. சூர்யா

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புவரை பா.ஜ.க எப்போதுமே வடகிழக்கு மாநிலங்களில் கால் ஊன்றவே முடியாது என்றுதான் அனைவரும் எண்ணினர். ஏன், வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.கவினால் கூட தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கால் ஊன்ற முடிந்ததே தவிர, வடகிழக்கு மாநிலங்களில் நுழையக்கூட முடியவில்லை.

ஆனால், 2014ம் ஆண்டு மோதி தலைமையிலான மத்திய அரசு அமைந்ததும், மோதியின் நெடுங்கால நண்பர் அமித் ஷா பா.ஜ.கவின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் ஏதோ மற்ற கட்சிகளில் நடப்பது போன்ற சிபாரிசு நியமனம் அல்ல; 2014 மக்களவைத் தேர்தலில் தேசியப் பொதுச்செயலாளரான அமித் ஷாவிற்கு உத்தரப் பிரதேச மாநிலப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. அந்தப் பொறுப்பில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 71 இடத்தை பா.ஜ.கவிற்கும், 2 இடத்தை கூட்டணிக் கட்சிக்கும் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் கிடைத்த மாபெரும் வெற்றியால் மத்தியில் பா.ஜ.க தனித்தே 282 இடங்களைப் பெற்று பெரும்பான்மை ஆட்சியை அமைக்க முடிந்தது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கட்சி தனித்துப் பெரும்பான்மை பெற்றது இத்தேர்தலில்தான். அதற்குப் பிரதிபலனாக அமித் ஷா தேசியத் தலைவர் ஆக்கப்பட்டார்.

தேசியத் தலைவர் ஆனதும் மற்ற தலைவர்களைப் போலச் செயல்படாமல், வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சி அமைய வேண்டும் என, அனைத்து அரசியல் சாணக்கியத்தனங்களையும் அமித் ஷா கையில் எடுத்தார். ‘வெல் அல்லது வெல்பவர்களை உள்ளிழு’ என்ற பாணியில் சென்ற அமித் ஷாவின் அரசியலில் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் பா.ஜ.க கொடி பறக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அந்த எண்ணத்தை பூர்த்தி செய்யும் பொருட்டு 2015ம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தின் காங்கிரஸ் ஆட்சியின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹேமாந்தா பிஷ்வா ஷர்மா ராகுல் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பா.ஜ.கவில் இணைந்து அஸ்ஸாமில் 2016ம் ஆண்டுத் தேர்தலில் கடுமையாகப் பணியாற்றி பா.ஜ.கவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார். வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.கவை ஆட்சியில் அமர்த்தும் பொறுப்பு பா.ஜ.க பொதுச் செயலாளர்களில் ஒருவரான ராம் மாதவ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர் ஜம்மு காஷ்மீரில் முதல் பா.ஜ.க கூட்டணி அரசாங்கத்தை அப்போதுதான் வெற்றிகரமாக அமைத்திருந்தார்.

முதலில் அஸ்ஸாம், பிறகு மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மேகாலயா மற்றும் மிசோரம் என வடகிழக்கில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தற்போது பா.ஜ.க அல்லது பா.ஜ.க கூட்டணியின் ஆட்சிதான். இந்த மாபெரும் இலக்கை அடைய நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டன. இந்த இலக்கை அடைவதற்கு பா.ஜ.க சார்பில் கடுமையான களப்பணிகள் செய்யப்பட்டன. நுண்ணரசியலில் தேர்ந்த அரசியல் கட்சியாக பா.ஜ.க உருவெடுத்துது.

அதிலும் குறிப்பாக இடதுசாரிகள் 20 ஆண்டு காலம் தொடர்ந்து ஆட்சி செய்து வந்த திரிபுரா மாநிலத்தில் தற்போது பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது மட்டுமின்றி அசைக்க முடியாத முதன்மைக் கட்சியாகவும் உருவெடுத்துள்ளது. இந்த நிலையை அடைய பா.ஜ.க எனும் இயக்கமும், அதன் தொண்டர்களும் பல தியாகங்களைச் செய்ய நேர்ந்தது. இந்தத் தியாகங்களில் உயிர்த் தியாகங்களும் அடங்கும்.

2018ம் ஆண்டு திரிபுராவில் அமைந்த பா.ஜ.க ஆட்சி என்பது, இடதுசாரி சித்தாந்தத்தால் சின்னாபின்னமான ஒரு மாநிலமும் அதன் மக்களும் ஒரே தேர்தலில் தேசியக் கட்சியான பா.ஜ.கவுக்கு எப்படி மாறினார்கள் என அறிந்துக்கொள்ளும் ஒரு interesting case study என்றே சொல்லலாம். காங்கிரஸ் கட்சியினரை உள்ளிழுத்து ஆட்சி அமைத்து விட்டனர் எனப் பரவலாக பா.ஜ.கவின் உழைப்பு கொச்சைப்படுத்தப்பட்டாலும் காங்கிரஸில் அவர்கள் இருந்த வரை ஏன் திரிபுராவில் அவர்களால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்ற முக்கியமான கேள்வி ஒன்று எழுகிறது.

கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சி செய்தால் ஒரு மாநிலம் எப்படி சுடுகாடாகி, வளர்ச்சி என்பது கிஞ்சித்தும் இன்றி, தொழிற்சாலைகள் எல்லாம் யூனியன் என்ற பெயரில் மூடப்பட்டு, மக்கள் பசியால் நொந்துபோவார்கள் என்பதற்கு திரிபுரா மாநிலம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. மாணிக் சர்க்கார் ஒரு நல்ல தலைவர், சிறந்த முதல்வர், திறமையான நிர்வாகி, எளிமையானவர் என்ற பிம்பத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் பல காலமாக ஊடகங்கள் மூலம் கட்டமைத்து நம்மை ஏமாற்றி வந்துள்ளனர் என்று திரிபுராவுக்குள் சென்று பார்த்தால்தான் தெரிகிறது. உச்சபட்ச காட்டாட்சி ஆட்சி செய்து, ஊழலில் திளைத்து, தன் கட்சி சாராத சொந்த மக்களைக் கொன்று குவித்து ஒரு சர்வாதிகார ஆட்சியை நிறுவி நடத்தி வந்துள்ளார் மாணிக் சர்க்கார், இவை அனைத்துமே வெகுஜன மக்கள் பார்வையில் இருந்து இடதுசாரி ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.

2011 – 2014 பூனாவில் பயின்ற போது எனது ரூம் மேட்டாகவும் உற்ற நண்பனாகவும் இருந்த சாந்த் ரக்‌ஷித் மனு ஷர்மா எனும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த நண்பன் அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகர் பகுதியைச் சேர்ந்தவன் என்பதால் வடகிழக்கு அரசியலைக் கல்லூரி நாட்களில் தினந்தோறும் பேசுவது வாடிக்கையானது. 2016ம் ஆண்டு தமிழகத் தேர்தலில் பா.ஜ.க கட்சியின் சார்பில் Digital Campaigns பொறுப்பாளாராக நான் நியமிக்கப்பட்ட போது, அதே நேரத்தில் அஸ்ஸாமில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலுக்கான சமூக ஊடகப் பணியினை எனது நண்பர்களான ரஜத் சேத்தி மற்றும் சுபரஷ்ட்ரா ஆகியோர் ராம் மாதவ் அவர்களின் வழிகாட்டுதலில் முன்னெடுத்தனர். அப்போது, அவர்களுடன் இணைந்து சில விஷயங்களில் பணியாற்றிய போது சுனில் தியோதார் அவர்களின் அறிமுகம் கிட்டியது. அவர் அப்போது திரிபுராவில் பா.ஜ.க ஆட்சியைக் கொண்டு வரப் பாடுபட்டு வந்தார். பின்னாட்களில் அவருடனும் எனது டெல்லி நண்பர்களுடனும் வடகிழக்கு அரசியல் குறித்துப் பல மணி நேரங்கள் பேசி அவர்களின் அரசியல் களத்தைத் தெரிந்துகொள்ள பல் நாள்களைச் செலவிட்டுள்ளேன். அதன் பயனாகவே இந்தப் புத்தகம் உருவாகியுள்ளது.

மும்பையில் உள்ள தினேஷ் காஞ்சி எனும் பேராசிரியர் எழுதிய ‘Manik Sarkar: Real And The Virtual – The Gory Face of Anarchy’ நூல் திரிபுராவின் கடந்த கால வரலாற்றையும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடுங்கோல் ஆட்சியையும் மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தி உள்ளது. திரிபுரா குறித்து என் புத்தகத்தில் இருக்கும் பகுதிகளில் பெரும்பாலானவை இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. அவரின் புத்தகத்தில் உள்ள தகவல்களைப் பயன்படுத்த அனுமதியளித்த பேராசிரியர் தினேஷ் காஞ்சி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அஸ்ஸாம் குறித்த பகுதியில் வரும் விஷயங்களில் சில, எனது நண்பர்களான ரஜத் சேத்தி மற்றும் சுபரஷ்ட்ரா ஆகியோர் தங்கள் அஸ்ஸாம் தேர்தல் அனுபவங்களைக் குறித்து எழுதிய ‘The Last Battle of Saraighat: The Story of the BJP’s Rise in the North-east’ என்ற நூலில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இந்தப் புத்தகங்கள் மட்டுமின்றி, பல தேசிய, வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த செய்தித்தாள் கட்டுரைகள் மற்றும் இணையப் பகிரல்களும் இந்தப் புத்தகத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. 2018 மார்ச் மாதம் அஸ்ஸாம், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு ஒரு சிறிய பயணம் மேற்கொண்ட அனுபவமும் இந்த நூலுக்குப் பெரும் துணையாக அமைந்தது.

இந்த நூல் எழுதுவதற்கு முக்கியக் காரணம், தமிழகத்தில் காலூன்ற முயற்சி செய்யும் பா.ஜ.கவிற்கு வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க அடைந்த வெற்றிகளின் சாதுர்யங்களும் திட்டமிடல்களும் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்பதே.

திரிபுராவைப் பற்றி மட்டுமே எழுத வேண்டும் என்று நினைத்திருந்த போது கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி “அனைத்து வடகிழக்கு மாநிலங்களைப் பற்றியும் எழுதினால் அது தமிழில் மிகப்பெரிய நூலாக அமையுமல்லவா?” என்று அறிவுறுத்தியதன் பேரில், கிட்டத்தட்ட 8 மாதங்களாகத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு இந்த நூல் தயாராகியுள்ளது.

இந்த நூலுக்கு முகவுரையை அளித்து உற்சாகப்படுத்திய மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் புத்தகம் வெளி வருவதற்குப் பல வகையில் உதவியாக இருந்த கனகலட்சுமி, ஹரன் பிரசன்னா, BR மகாதேவன், ராமசுப்பையா மற்றும் பலருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

எனது ஒரு தாத்தா தமிழக பா.ஜ.க முன்னோடி தலைவராகவும் மற்றொரு தாத்தா ஹிந்து மகாசபையின் தலைவராகவும் பேச்சாளர்களாகவும் இருந்து வந்துள்ளதால் அரசியல் ஆர்வம் எனக்கு மிகச்சிறிய வயதில் இருந்தே ஊட்டப்பட்டது. எனது பதிமூன்று வயது முதல் தமிழகத்தில் பா.ஜ.கவிற்கு ஆதரவாகக் களம் கண்டு வருகிறேன். 2012 முதல் 2019 வரை கிட்டத்தட்ட 12 மாநிலங்களில் பா.ஜ.கவிற்காகத் தேர்தல் பணியைச் செய்து வந்துள்ளேன், 2012 குஜராத் சட்டமன்றத் தேர்தலிலும், 2014 பாராளமன்றத் தேர்தலிலும் இன்றைய பாரதப் பிரதமர் நரேந்திர மோதி மேற்பார்வை செய்து வந்த குழுவில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். அந்தக் காலக்கட்டத்தில் எனது வயது 21 முதல் 24 வரை என்பது குறிப்பிடத்தக்கது.

எனது 16 வருட அரசியல் அனுபவம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி அமைத்த விதம் ஆகிய இரண்டையும் தமிழகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். தமிழகத்தில் பா.ஜ.க பிரதானக் கட்சியாக உருவெடுப்பது அவ்வளவு கடினமான காரியமாக இருக்கப் போவதில்லை என்பது என் கணிப்பு; தமிழகத்தில் ஒரு இயக்கத்திற்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என்றால் அந்த இயக்கம் பாரதிய ஜனதா கட்சி மட்டும்தான் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. நேரம் வந்தால் அனைத்தும் சாத்தியமாகும் என்பது எனது அசாதாரண நம்பிக்கை.

கடந்த 2019 டிசம்பர் மாதம் தமிழக பா.ஜ.க பூத் நிர்வாகிகளுடன் காணொளி மூலம் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோதி திரிபுரா மாநிலத்தைப் போன்று தமிழகத்திலும் பா.ஜ.க ஆட்சிக்கு வர வேண்டும் எனக் கட்சி நிர்வாகிகளை உற்சாகமூட்டினார். இந்த நிகழ்வில் தென் சென்னை நிர்வாகிகளிடம் கலந்துரையாடிய பாரதப் பிரதமர் மோதி, பா.ஜ.கவினர் கடும் முயற்சியால் திரிபுரா மாநிலத்தில் ஆட்சிக்கு வந்ததாகவும், அதே போன்ற வெற்றியை தமிழகத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

திரிபுராவில் வெற்றி எப்படிச் சாத்தியமானது? வடகிழக்கை எப்படி வென்றது பா.ஜ.க? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம். அந்தப் பாடங்கள் ஒவ்வொரு பா.ஜ.க தொண்டனுக்கும் மிகப்பெரிய உந்துதலாக இருக்கும்.

இந்தப் புத்தகம் ஏப்ரல் 2019ம் ஆண்டே எழுதி முடிக்கப்பட்டு விட்டதால் அக்கால அரசியல் சூழ்நிலைகளை மனதில் கொண்டே இப்புத்தகத்தை வாசகர்கள் வாசிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

– SG சூர்யா
09.10.2020

(பா.ஜ.க. வடகிழக்கை வென்ற வரலாறு, SG சூர்யா, தடம் பதிப்பகம், 300 ரூ.)

Leave a Reply