Posted on Leave a comment

லும்பன் பக்கங்கள் – பகுதி 1 | அரவிந்தன் நீலகண்டன்

எல்லா நல்ல காரியங்களையும் பிள்ளையார் பெயர் சொல்லி ஆரம்பிக்க வேண்டுமென்பார்கள். எனவே புதிதாக ஆரம்பிக்கிற இந்த ‘லும்பன் பக்கங்கள்’ தொடரையும் அவர் விஷயத்திலிருந்து ஆரம்பிப்பதில் தவறில்லை.

சின்ன வயதில் படித்த ஒரு விஷயம் விநாயகர் அகவல். மரபாளர்கள் ஔவையார் அருளியது என்பார்கள். ஆராய்ச்சியாளர்கள் எதையும் சொல்லிவிட்டுப் போகட்டும். மிக அற்புதமான ஒரு விஷயத்தை ஒரு பெண் துறவி கவி எழுதியதாக சொல்ல ஒரு மரபில் தேவை இருந்திருக்கிறது என்பதே பெரிய விஷயம்தானே. அதிலே ‘அமுதநிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையும் கூறி’ என்று வரும்.

இரண்டாம் வகுப்பில் விநாயகர் அகவலை மனனம் செய்தாயிற்று. நான்காவது வகுப்பில் ஐயம் எழுந்தது. ஆதித்தன் இயக்கமும் என்று சொல்லுகிறாரே ஔவையார். ஆனால் சூரியன் பூமியைச் சுற்றவில்லையே.

இந்த மாதிரி சந்தேகங்களை வழக்கம் போல அப்பாவிடம் கேட்டேன். அப்பா சொன்னார். நாம் வாழுகிற பூமியிலிருந்து சூரியன் சந்திரனை விட பல லட்சம் மைல்கல்கள் தூரமாக உள்ளது. சூரியனோடு ஒப்பிட்டால் சந்திரன் ரொம்ப ரொம்ப சின்னது. ஆனால் அவை அமைந்திருக்கிற விதத்திலே இரண்டும் நமக்கு ஒரே வடிவ அளவில் தெரிகின்றன. நமக்கு மூளை இரண்டு பாகமாக உள்ளது. இருதன்மைகள் இணைந்த கலவை. எனவே நம் முன்னோர்கள் சூரிய சந்திரரை நம் உள்ளே இருக்கிற விஷயங்களுக்கு symbols ஆக்கினார்கள்.

ஏதோ ஒருவிதமாக அப்போது புரிந்தது. முழுமையாகப் புரிந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் ஏதோ புரிந்தது.

பின்னர் பதின்ம வயதில் இட பிங்கலை நாடிகள் குறித்தும் அவற்றுக்குச் சூரிய சந்திர இணைப்புகள் குறித்தும் படித்த போது, ஒன்று தோன்றியது,

நாம் பூமியில் பரிணமித்த உயிரினங்கள். இந்த பூமிக்கு ஒரு சூரியன் ஒரு துணைக்கோள். சூரியனிலிருந்து பூமியின் தூரம் சூரியனின் விட்டம் போல 108 தடவைகள். சந்திரனிலிருந்து பூமியின் தூரம் சந்திரனை போல 108 தடவைகள். இதன் விளைவாக சந்திர சூரியர் ஒரு universal symbolism ஆக நம் எல்லாப் படிமங்களிலும் வருகின்றன. நம் மரபில் 108 என்பது புனிதமான எண்ணாக இருப்பதற்குப் பின்னால் இந்த வானவியல் சுவாரசியம் இருப்பதாகப் பேராசிரியர் சுபாஷ் கக் சுட்டும் ஒரு கட்டுரையை அதன் பின்னால் படிக்க நேர்ந்தது.

சரி எனக்கு தோன்றிய எண்ணம் இதுதான்.

இதுவே நாம் மூன்று சந்திரன்களும் இரண்டு சூரியன்களும் கொண்ட ஒரு கிரகத்தில் பரிணமித்திருந்தால் நம்முடைய ஆன்மிக யோக மரபின் படிமங்கள் எப்படி இருந்திருக்கும்? அல்லது அப்படி பரிணமித்த அறிவுடைய வேற்றுலக உயிரினத்தின் ஆன்மிகக் குறியீடுகளை நாம் சந்திக்க நேர்ந்தால் எப்படி இருக்கும்? இதன் அடிப்படையில் ஒரு அறிவியல் புதினம் எழுதும் எண்ணம் கூட ஒரு பதின்மக் கனவாக இருந்து பின்னர் நடந்து சென்ற இருண்ட பாதைகளிலும் மாறிய வழிகளிலும் கரைந்து கனவாக மட்டுமே இருந்து பிறகு மறந்துவிட்ட நினைவுகளில் ஒன்றாகப் போய்விட்டது.

ஏறக்குறைய மூன்று பத்தாண்டுகளுக்குப் பின்னர் 2020ல் ஜோ மர்ச்சண்ட் (Jo Marchant) என்கிற அறிவியல் எழுத்தாளர் எழுதிய ‘Human Cosmos’ என்ற நூலை படித்த போது இந்த பழைய நினைவு மீண்டெழுந்தது.

மானுடத்தை மானுடமாக வரையறை செய்யும் முக்கியப் புலங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அது சமயமாக, புராணக் கதையாடல்களாக, தத்துவமாக, இறையியலாக, இலக்கியமாக, மனமாக, நம் பிரக்ஞையாக என்று எதுவாகவும் இருக்கட்டும், அதில் பிரபஞ்ச விண்வெளியின், அவ்வெளியில் துலங்கும் சூரிய சந்திரர்களின், கோள்களின் தாக்கம் எந்த அளவு அடிப்படையாக உள்ளது என்பதைப் பேசுகிறது இந்த நூல்.

நம், அதாவது மானுடப் பண்பாடுகளின், புராணங்களில் மிகப் பழமையாக இருக்கும் ஒரு நிகழ்ச்சி – மானை வேட்டையாடும் இறைவன். இதன் காலம் இன்றைக்கு 15,000 ஆண்டுகளுக்கு முன் என்கிறார் இந்நூல் ஆசிரியர். இந்த புராணக்கதை பல பண்பாடுகளில் ஏதோ ஒருவிதத்தில் இருக்கிறது என்கிறார். ஒரு மிருகத்தை வேட்டையாடும் தெய்வம். அந்த மிருகம் நட்சத்திரமாகிறது அல்லது அந்த இறைவனை நட்சத்திரங்களில் காண்கிறார்கள். இப்படி. 15,000 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய ஆசியப் பகுதிகளில் உருவாகி உலகெங்கும் இப்புராணக் கதை பரவி ஏதோ ஒருவிதத்தில் உள்ளது. இதை ஆராய்ச்சி செய்தவர் ஜூலியன் தெ’ஹே (Julien d’Huy: உச்சரிப்பு குறித்து உத்தரவாதமில்லை).

எப்படி மரபணுக்களின் தொடக்கப் பரவல்களை மரபணுவியலாளர்கள் கண்டடைகிறார்களோ அதே போல புராணவிய அடிப்படைக் கூறுகளை ஆராய்கிறார் ஜூலியன். அதன் அடிப்படையில் இவர் இம்முடிவுக்கு வருகிறார்.

ஆனால் இதில் எந்த இடத்திலும் பிரஜாபதியை நோக்கி ருத்ரன் அம்பெய்யும் புராண சம்பவம் குறிப்பிடப்படவில்லை. இவ்வளவுக்கும் இந்து மரபில் மட்டுமே இந்த புராண நிகழ்ச்சி அதன் முழு பரிணாமச் செழுமையுடன் வாழ்கிறது. ‘ஓரையன் (Orion) விண்மீன் தொகுப்பு குறித்த பால கங்காதர திலகரின் நூலும், ஸ்டெல்லா க்ராம்ரிஸ்ச் எழுதிய ‘The Presence of Siva’ இவை இரண்டுமே வானவியல் நிகழ்ச்சியுடன் பிரஜாபதி-மான் மீது ருத்ரன் அம்பு எய்யும் வேத-புராண சம்பவத்தை பேசுகின்றன.

ஜோ மர்ச்சண்டின் நூல் முழுக்கவே ஒரு பாகனீயப் புரிதலுடன் செல்கிறது. ஏக-தெய்வ வழிபாட்டை வலியுறுத்தும் மதங்களிலும் வானியல் தாக்கம் உள்ளது என்பதைச் சொல்லுகிறார் மர்ச்சண்ட். ஆனால் அந்த மதங்களின் இறையியல் எப்படி இயற்கையுடனான உறவுப் பிணைப்பை அறுத்துவிட்டது அல்லது பலவீனப்படுத்திவிட்டது என்பதையும் விளக்குகிறார். நியூட்டானிய அறிவியலின் உளவியல் தாக்கமும் அதற்கு ஏற்ப இயற்கையிலிருந்து நம்மை அன்னியப்படுத்தியதைக் கூறுகிறார்.

ஆனால் உலகளாவிய வீச்சுடன் எழுதப்பட்ட இந்த நூலில் இந்தியா குறித்தும் ஹிந்து தர்மம் குறித்தும் எதுவும் இல்லை என்பது நம்மை சிந்திக்க வைக்க வேண்டும். கவலைப்பட வைக்க வேண்டும்.

*

தமிழக பாஜகவின் இளம் தலைவர்களில் எஸ்.ஜி.சூர்யா ஒருவர். வழக்கறிஞர். இவர் எழுதியுள்ள புத்தகம் ‘பாஜக வடகிழக்கை வென்ற வரலாறு’. அருமையான புத்தகம். வடகிழக்கு மாநிலங்களில் இன்று பாஜக அபரிமிதமாக வளர்ந்துள்ளது. இது வெளியில் தெரியும் விஷயம். ஆனால் அதற்குப் பின்னால் ஆயிரக்கணக்கான காரிய கர்த்தர்களின் அளப்பரிய தியாகங்கள் உள்ளன. கடும் உழைப்பு உள்ளது. தெளிவான திட்டமிடலும், அதைச் செயல்படுத்தும் அருமையான கட்டமைப்பும் உள்ளன. எல்லாவற்றையும் விட மேலாக ஜனநாயக அமைப்பு உள்ளது. சங்க அமைப்புகள் அரசியலைக் குறித்து எவ்விதக் கவலையும் இல்லாமல் செயல்படுகின்றன. மக்களுக்காக உழைக்கின்றன. இந்த உழைப்பின் பலனும் ஒரு அரசியல் அறுவடையை அளிக்கிறது என்றாலும் இந்த உழைப்பு அரசியலை அடிப்படையாகக் கொண்டதில்லை. மத்திய அமைச்சர் அணிந்துரை மட்டுமல்லாமல் மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீனிவாஸும் அண்ணாமலை ஐபிஎஸ்ஸும் (ஓய்வு) இந்த நூலுக்கு முகவுரைகள் அளித்திருக்கிறார்கள்.

திரிபுராவில் பாஜக எத்தகைய எதிர்ப்பை எதிர்கொண்டு வெற்றி அடைந்தது என்பதை ஒவ்வொரு வலம் வாசகரும் கட்டாயம் படிக்க வேண்டும். நிறுவன ஊடகங்களால் கட்டியெழுப்பட்ட பிம்பமான மானிக் சர்க்காரின் கம்யூனிஸ்ட் கட்சிக் குண்டர்கள்; பாஜக காரியகர்த்தரான சான்மோகன் திரிபுரா அடித்தே கொல்லப்பட்ட கொடுமை; அதை அப்படியே மூடிய கம்யூனிஸ்ட் அரசின் இதயமற்ற அரக்கத்தனம்; அதை ஜனநாயக ரீதியில் வலுவாக எதிர்கொண்டு மக்கள் மன்றத்திடம் கொண்டு சென்ற பாஜகவின் வீரியம் – இவை அனைத்தையும் உணர்ச்சிபூர்வமாக கொண்டு வருகிறார் சூர்யா.

கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். இப்புத்தகத்தின் அட்டைப்படத்தில் இருக்கும் பாரத மாதா ஓவியம் மிகவும் அற்புதமாக உள்ளது. சூர்யாவுக்கும் தடம் பதிப்பகத்துக்கும் வாழ்த்துக்கள்.

*

பொதுவாக மேற்கத்திய காமிக்ஸுகளுக்கும் இந்த லும்பனுக்குமான உறவு ஒருவித விருப்பு-வெறுப்பு உறவு. கலை நேர்த்தியில் அவை சிறப்பானவை. ஆனால் அவை முன்வைக்கும் சித்திரங்களில் இருக்கும் காலனீயம் கசப்பானது. அருமையான ஓவியங்களுடன் விறுவிறுப்பான கதையோட்டத்துடன் மிகவும் நுண்ணிய விஷமாக மேற்கத்திய மேலாதிக்கம் வாசகர் உள்ளே இறங்கும். உதாரணமாக 70களில் 80களில் மிகவும் பிரபலமாக இருந்த வேதாளன் காமிக்ஸ்களை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று பிரபலமாக இருக்கும் டெக்ஸ் வில்லரை எடுத்துக் கொள்ளுங்கள். இவை எல்லாவற்றிலும் இதைப் பார்க்க முடியும்.

ஆனால் இப்போதெல்லாம் காமிக்ஸ்களில் ஒரு மெல்லிய மாற்றம் வருவதைக் காண முடிகிறது. எல்லாவற்றிலும் அல்ல. ஒரு சிலவற்றில். அப்படி ஒன்று போனமாதம் முத்து காமிக்ஸ் – சன்ஷைன் லைப்ரரி வெளியீடு: ‘நேற்றைய நகரம்.’

ரோஜர் என்கிற சாகஸ வீரர் தன் நண்பர்களைத் தேடி தென்னமெரிக்க கானகத்தில் வரும் போது அங்குள்ள கொரில்லாக்களிடமிருந்து மெர்செடஸ் என்கிற பெண்ணைக் காப்பாற்றுகிறான். அவள் லாகண்டன் என்கிற பூர்விக சமுதாயத்தைச் சார்ந்தவள்.

அவர்களிடையேயான உரையாடலில் ஆங்காங்கே வரும் சில வசனங்களைப் பாருங்கள்:

ரோஜர்: மெர்செடஸ் என்னும் பெயர் லாகண்டன் பெயர் மாதிரித் தெரியவில்லையே?! ஸ்பானிஷ் பெயர் மாதிரியல்லவா இருக்கிறது.

மெர்செடஸ்: நான் சான் பாஸ்கல் மிஷனரியில் வளர்க்கப்பட்டவள். என் பத்து வயதிற்கு பின்தான் சொந்தக் குடும்பத்தினருடன் சேர்ந்தேன்.

ரோ: கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவளா?

மெ: லாகண்டன் மக்கள் மாயன் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். எங்கள் தெய்வங்கள் இந்த மரம் செடி கொடிகளிலும், ஓடும் நதிகளிலும்தான் இருக்கிறார்கள். நம்மைக் கடந்து செல்லும் தென்றலிலும் வீசும் புயலிலும் நிறைந்திருக்கிறார்கள்.

இதற்கு சில பக்கங்களுக்குப் பிறகு…

மெ: விக்ரஹங்களைக் கண்டெடுப்பதற்காகவும் தெய்வ வழிபாட்டிற்காகவும் நாங்கள் இந்த இடத்திற்கு வருவதுண்டு. எங்கள் முன்னோர்கள்கூட எதிரிகளிடமிருந்து தப்பிக்க இந்த இடத்தினை அடிக்கடி பயன்படுத்தியுள்ளார்கள்.

ரோ: எதிரிகளா?

மெ: லாகண்டன்ஸ் மக்களுக்கு எப்பொழுதுமே எதிரிகள் அதிகம்! மாயன்கள் வாழ்ந்த காலத்தில் ஸ்பானிஷ்காரர்கள்! அதன் பின்பாக புதையல் தேடி வருபவர்கள். இப்பொழுது இந்த கொரில்லாக்கள் என்று எங்கள் எதிரிகளுக்குப் பஞ்சமிருந்ததில்லை ஒருபோதும்!

ரோ: ஒரு கிறிஸ்தவ மிஷனில் படித்து வளர்ந்த உனக்கும் புராதன கடவுளர்கள் மீது நம்பிக்கையுள்ளதா?

மெ: ஏன் நம்பக்கூடாது?! கதிரவனின் ஒளிக்கற்றையில், காற்றில், நதியில் காடுகளில் தெய்வங்கள் உறைந்திருக்கிறார்கள்! எனக்கு அந்த நம்பிக்கை நிறைய இருக்கிறது! நீங்கள் கூட நம்பலாமே!

இதை வாசிக்கும் இடத்தில் இந்துத்துவ லும்பனுக்கு

ஆலமுங் கடம்பும் நல்யாற்று நடுவும்
கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும்
அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்
எவ்வயி னோயும் நீயே

என்கிற பரிபாடல் வரிகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்த பரிபாடல் வரிகளில்

அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்
எவ்வயி னோயும் நீயே

என்கிற சங்க புலவரின் இதயமும் ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி என்ற ரிக்வேத ரிஷியின் அதே இதயகதியுடன் துடிப்பதையும் உணராமலிருக்க முடியவில்லை.

சாகஸங்கள் முடிந்து ரோஜரும் அவன் தோழியும் மெர்சடஸை பாரிஸுக்கும் லண்டனுக்கும் அழைத்துச் செல்கிறார்கள். பின்னர் அவள் இடிபாடுகளாக மறைவிடமாக இருக்கும் அவளது மாயம் நகருக்குத் திரும்புகிறாள் அப்போது அவள் சொல்கிறாள்:

“எல்லா இடங்களும் அருமையாக இருந்தன. ஆனால் பண்டைய தெய்வங்கள் உறைந்திருக்கும் எங்கள் மாயன் நகரம்தான் அனைத்திலும் அழகு!”

இந்துத்துவம் என்பது உலகளாவிய இயற்கை மதங்கள் அனைத்துக்குமான இறுதிப் பாதுகாப்பு அரண் மட்டுமல்ல. அவற்றின் உள்ளே ஊடாடும் இணைப்புப் பாலமும் கூட.

லும்பன் பக்கங்கள் தொடரும்.

– இந்துத்துவ லும்பன்

Leave a Reply