Posted on Leave a comment

மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 9) | ஹரி கிருஷ்ணன்

கர்ணனை அணுகுதல்

கர்ணனைக் குறித்த ஒரு பொதுவான ஆய்வாக நாம் பதிலளித்துக்கொண்டிருக்கும் மூன்றாம் தவணை இது.

நவம்பர் 2020 இதழில் கும்பகோணம் பதிப்பில், போரின் இறுதிக்கட்டத்தில் ‘பூமியால் விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கும் என் தேர்ச் சக்கரத்தைத் தூக்கி நிறுத்த எனக்கு அவகாசம் கொடு அர்ஜுனா! தர்மத்தின் பேரால் உன்னைக் கேட்கிறேன்’ என்று சொன்ன கர்ணனுக்கு கண்ணன் சொன்ன பதிலின் முழு வடிவத்தை, கும்பகோணம் பதிப்பிலிருந்து எடுத்துத் தந்திருந்தோம். சென்ற இதழில் சொல்லியிருந்தபடி, இப்போது கிஸாரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பை, அருள்செல்வப் பேரரசன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருப்பதை எடுத்துப் பார்ப்போம். கிருஷ்ணனுடைய இந்தப் பேச்சைப் பகுதிபகுதியாகப் பிரித்து, எண் கொடுத்து, ஒவ்வொன்றையும் அது நடந்த காலத்தில் கர்ணனுடைய செயலாகவும் பங்காகவும் வியாச மூலம் சொல்பவனவற்றைப் பட்டியலிட்டு, கண்ணனுடைய பேச்சுக்கு அகச்சான்றுகளைத் தேடுவோம். கிமோ கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பை அருள்செல்வப் பேரரசன் தமிழில் மொழிபெயர்த்திருப்பது இது:

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தேரில் நின்றிருந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, அந்தக் கர்ணனிடம், “ஓ! ராதையின் மகனே {கர்ணா}, நீ அறத்தை நினைவு கூர்வது நற்பேறாலேயே. கீழ்த்தரமானவர்கள் {நீசர்கள்}, தாங்கள் துன்பத்தில் மூழ்கும்போது, தங்கள் தேவைக்கு (அறத்தைப்) பழிப்பதும், தாங்கள் செய்யும் தீச்செயல்களின் போது பழிக்காததும் பொதுவாகக் காணப்படுகிறது.

  1. நீ, சுயோதனன், துச்சாசனன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர், ஒற்றையாடையில் இருந்த திரௌபதியைச் சபைக்கு மத்தியில் கொண்டு வரச் செய்தீர்கள். ஓ! கர்ணா, அச்சந்தர்ப்பத்தில் உனது அறம் வெளிப்படவில்லை.
  2. பகடையில் திறன்பெற்ற சகுனி, அஃதை {பகடையை} அறியாத குந்தியின் மகனான யுதிஷ்டிரரை சபையில் வெற்றிக் கொண்ட போது, இந்த உனது அறம் {தர்மம்} எங்கே சென்றது?
  3. உன் ஆலோசனைப்படி செயல்பட்ட குரு மன்னன் (துரியோதனன்), பாம்புகள் மற்றும் நஞ்சூட்டப்பட்ட உணவு ஆகியவற்றின் உதவியால் பீமரைப் பீடித்தபோது, உனது அறம் எங்கே சென்றது?
  4. காடுகளுக்குள் நாடுகடத்தப்பட்ட காலமும், {மறைந்து வாழ வேண்டிய} பதிமூன்றாவது வருடமும் கழிந்த பிறகும், பாண்டவர்களுக்கு அவர்களது அரசை நீங்கள் கொடுக்காதபோது, உனது அறம் எங்கே சென்றது?
  5. உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களை எரித்துக் கொல்வதற்காக வாரணாவதத்தின் அரக்கு வீட்டுக்கு நீங்கள் நெருப்பிட்டீர்களே, ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அப்போது, உனது அறம் எங்கே சென்றது?
  6. மாதவிடாயின் காரணமாகக் குறைந்த உடையில் இருந்தவளும், துச்சாசனனின் விருப்பப்படிக் கீழ்ப்படிந்திருந்தவளுமான கிருஷ்ணை {திரௌபதி} சபைக்கு மத்தியில் நின்றிருந்தபோது அவளைக் கண்டு சிரித்தாயே, ஓ! கர்ணா, அப்போது இந்த உனது அறம் எங்கே சென்றது?
  7. பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் அத்துமீறி, அப்பாவியான கிருஷ்ணை {திரௌபதி} இழுக்கப்பட்டபோது, நீ தலையிடவில்லையே. ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அப்போது உனது அறம் எங்கே சென்றது?
  8. யானையின் நடை கொண்ட பெண்மணியாக மதிக்கப்பட்ட இளவரசி திரௌபதியிடம் நீ பேசியபோது, “ஓ! கிருஷ்ணையே, பாண்டவர்கள் தொலைந்தனர். அழிவில்லா நரகில் அவர்கள் மூழ்கிவிட்டனர். நீ வேறொரு கணவனைத் தேர்ந்தெடுப்பாயாக” என்றாயே. ஓ! கர்ணா, அப்போது உனது அறம் எங்கே சென்றது?
  9. அரசின் மீது பேராசை கொண்டும், காந்தாரர்களின் ஆட்சியாளனை {சகுனியை} நம்பியும் (பகடையாட) பாண்டவர்களை நீங்கள் அழைத்தீர்களே. அப்போது உனது அறம் எங்கே சென்றது?
  10. வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர், சிறுவனான அபிமன்யுவைப் போரில் சூழ்ந்துகொண்டு, அவனைக் கொன்ற போது, உனது அறம் எங்கே சென்றது?
  11. இப்போது நீ இருப்புக்கு அழைக்கும் இந்த அறம், அந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் எங்குமில்லையெனில், இப்போது அவ்வார்த்தையைச் சொல்லி உன் {வாயின்} மேலண்ணத்தை உலர்த்துவதால் யாது பயன்? (“what is the use then of parching thy palate now, by uttering that word?”—கிஸாரி மோஹன் கங்கூலி; “எல்லா விதத்தினாலும் வீணே வாய் வறட்சியை உண்டு பண்ணுகிற பேச்சினால் என்ன பயன்?” கும்பகோணம் பதிப்பு) ஓ! சூதா {கர்ணா}, நீயோ இப்போது அறத்தின் நடைமுறைகளைக் குறித்துப் பேசுகிறாய், ஆனாலும் நீ உயிரோடு தப்ப மாட்டாய். புஷ்கரனால் வீழ்த்தப்பட்ட நளன், மீண்டும் தன் ஆற்றலால் அரசை மீட்டதைப் போல, ஆசையிலிருந்து விடுபட்ட பாண்டவர்களும், தங்கள் கரங்களின் ஆற்றலாலும், தங்கள் நண்பர்கள் அனைவரின் உதவியாலும் தங்கள் அரசை மீட்பார்கள் தங்கள் பலமிக்க எதிரிகளைக் கொன்ற பிறகு, சோமகர்களுடன் சேர்ந்து தங்கள் அரசை அவர்கள் மீட்பார்கள். அறத்தால் எப்போதும் காக்கப்படும் இந்த மனிதர்களில் சிங்கங்களின் (பாண்டு மகன்களின்) கைகளால் தார்தராஷ்டிரர்கள் அழிவை அடைவார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.”

S., Arul Selva Perarasan; செ., அருட்செல்வப்பேரரசன். கர்ண பர்வம்: Karna Parva (முழுமஹாபாரதம் Book 8) (Tamil Edition). Kindle Edition.

கிருஷ்ணன், கர்ணன் மீது பதினோரு குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறான். இவை வெறும் பேச்சல்ல; உண்மையிலேயே நடந்தவைதான் என்பதைச் சரிபார்க்க இப்போது ஒவ்வொரு குற்றச்சாட்டையும் அந்தந்தக் காலகட்டத்துக்குச் சென்று, அந்தந்தக் குறிப்பிட்ட இடங்களில் மூலபாரதம் இங்கெல்லாம் கர்ணனின் பங்கு இருந்தது என்று சொல்கின்றதா என்று பார்ப்போம்.

கண்ணன் சொல்லும் முதலிரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் தேவையில்லை. பாஞ்சாலி ஒற்றையாடையில் இருந்தபோது சபைக்கு இழுத்து வரப்பட்டதையும், கர்ணனுடைய தூண்டுதலால் துச்சாதனன் அவளுடைய துகிலை உரிந்ததையும் சான்றுகளோடு சொல்லியிருக்கிறோம். இந்தக் குற்றச்சாட்டுகளின் விரிவில் அந்தச் சான்றுகளை மீண்டும் எடுத்து வைப்போம்.

இது கண்ணனுடைய மூன்றாவது குற்றச்சாட்டு:

உன் ஆலோசனைப்படி செயல்பட்ட குரு மன்னன் (துரியோதனன்), பாம்புகள் மற்றும் நஞ்சூட்டப்பட்ட உணவு ஆகியவற்றின் உதவியால் பீமரைப் பீடித்தபோது, உனது அறம் எங்கே சென்றது?

அதாவது, பிரமாணகோடி (Pramanakoti) என்னும் இடத்தில் பீமனுக்கு துரியோதனன் விஷமோதகம் எனப்படும் நஞ்சு கலந்த தின்பண்டங்களைக் கொடுத்து உண்ணச் செய்தபோது, பாண்டவர்கள் ஐவரையும் அழைத்துக்கொண்டு குந்தி ஹஸ்தினாபுரம் திரும்பிச் சில ஆண்டுகள்கூட கழிந்திருக்கவில்லை. அவ்வளவு ஆரம்பகட்டத்திலேயே பாண்டவர்களைக் கொல்வதில் கர்ணனுடைய பங்கு இருந்திருக்கிறது. துரியோதனனும் கர்ணனும் நட்புக் கொண்டது எவ்வாறு என்பதை நாரதர் சாந்தி பர்வத்தின் இரண்டாம் அத்தியாயத்தில் விளக்குகிறார். In early age he made friends with king Duryodhana, led by an accident and his own nature and the hate he bore towards you all.

இளம் வயதில் தற்செயலாக சந்தித்துக் கர்ணனும் துரியோதனனும் நட்புப் பூண்டனர். உங்கள் மீது வெறுப்புக் கொண்டது, அவனுடைய சுபாவத்திலேயே அமைந்திருந்த ஒன்று. கர்ணன் தருமபுத்திரனைவிட 16 வயது பெரியவன்; ஆகவே துரியோதனனையும் பீமனையும் விட 17 வயது பெரியவன். இந்தக் காலக் கணக்கையெல்லாம் டாக்டர் கேஎன்எஸ் பட்நாயக்கின் The Mahabharat Chronology என்ற வலைப்பக்கத்தில் (https://hindunet.org/hindu_history/ancient/mahabharat/ mahab_patnaik.html காணலாம்)

மிகச் சிறிய வயதுடைய துரியோதனனும் அவனைவிட 17 வயது பெரியவனான கர்ணனும் நட்புப் பூண்டனர். எனவே, துரோணர் அமைத்த ஆட்டக் களத்தில்தான் கர்ணன் entry ஆகிறான் என்ற மிகப்பரவலான நம்பிக்கை ஒரு myth. இப்போது, பிரமாணகோடியில் பீமனுக்கு நஞ்சூட்டப்பட்ட ஆதிபர்வ நிகழ்வுக்குத் திரும்புவோம். பிரமாணகோடியில் பீமனுக்கு நஞ்சூட்டப்பட்ட சமயத்தில் தமிழ் மொழிபெயர்ப்பான கும்பகோணம் பதிப்பு சொல்கிறது: “ராஜரே! மற்றொரு நாள் துரியோதனன் பீமஸேனனைக் கொல்லக் கருதி மந்திரியாகிய சகுனியுடன் ஆலோசனை செய்தான். இரவும் பகலும் ஓயாமல் சிந்தித்துக்கொண்டு தூங்காமலிருந்தான். இவ்வாறு துரியோதனனும், கர்ணனும் ஸுபலன் புத்திரனான சகுனியும் அனேக உபாயங்களினால் அந்தப் பாண்டவர்களைக் கொல்லக் கருதினர். வைசியப் பெண்ணின் புத்திரனாகிய யுயுத்ஸு, பாண்டவர்களின் நன்மையிலுள்ள விருப்பத்தினால் அதைப் பாண்டவர்களுக்குச் சொன்னான்.” (ஆதி பர்வம், ஸம்பவ பர்வம், அத்தியாயம் 137, பக்கம் 512), இதன் சம இடத்தை கிஸாரி மோஹன் கங்கூலி இப்படி மொழிபெயர்க்கிறார்: “When that terrible poison intended for the destruction of Bhima failed of its effect, Duryodhana. Karna and Sakuni, without giving up their wicked design had recourse to numerous other contrivances for accomplishing the death of the Pandavas. And though every one of these contrivances was fully known to the Pandavas, yet in accordance with the advice of Vidura they suppressed their indignation.

பீமனுக்கு நஞ்சூட்டப்பட்டதில் கர்ணனின் பங்கு தெள்ளத் தெளிவாக இரண்டு வேறுவேறு மொழிபெயர்ப்புகளில் சுட்டப்படுகிறது; போதாக்குறைக்கு கண்ணனும் இதைச் சொல்கிறான்.

இப்படி ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அகச்சான்றுகளைத் தேடிக் கண்டடைவோம்.

Leave a Reply