Posted on Leave a comment

நேருவின் வரலாற்றுத் தவறு | கோலாகல ஸ்ரீநிவாஸ்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2020 செப்டம்பர் 26ம் தேதி சனிக்கிழமை நடைபெற்ற 75வது ஐநா பொதுச் சபையில், காணொளி வாயிலாக, முன்பே பதிவுசெய்யப்பட்ட 22 நிமிட ஹிந்தி உரையை நிகழ்த்தினார். அதில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்களை வலியுறுத்தினார். அவர் பேசிய விவரம் வருமாறு:

“ஐ.நா. உருவான 1945ம் ஆண்டு இருந்ததைப் போல தற்போது உலகம் இல்லை. பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளது. அத்தகைய மாற்றங்களுக்கு ஏற்ப ஐ.நா.விலும் மாற்றம் வேண்டும். மாற்றங்களைப் புகுத்தவில்லை எனில், பெரும் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்.

உலக மக்கள்தொகையில் 18 சதவீதத்தைக் கொண்டுள்ள உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடு இந்தியா. இந்தியாவில் ஏற்படும் மாற்றங்கள் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அவ்வாறான சூழலில், ஐ.நா.வின் முடிவெடுக்கும் கட்டமைப்பில் இணைவதற்கு இந்தியா இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்?”

இந்தியா வலிமையாக இருந்தபோது, உலகிற்கு அச்சுறுத்தலாக இருந்ததில்லை, இந்தியா பலவீனமாக இருந்தபோது, உலகிற்கு சுமையாகவும் இருந்ததில்லை. இவ்வாறு மோடி குறிப்பிட்டார்.

இந்தியாவின் தகுதிகள்

பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கான அனைத்துத் தகுதிகளும் இந்தியாவுக்கு உள்ளன.

* உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு

* உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது பெரிய நாடு.

* உலகின் நான்காவது மிகப் பெரிய ராணுவத்தைக் கொண்டிருக்கும் நாடு

* ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதார நாடு.

* ஐநாவின் அமைதி காக்கும் படைக்கு உலகிலேயே அதிக அளவில் வீர்ர்களைத் தந்து உதவிய நாடு.

* அணு ஆயுத வல்லமை கொண்ட – அதேநேரத்தில் பொறுப்பான நாடு.

இவ்வளவு தகுதிகள் இருந்தும் ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இந்தியா போராடிக்கொண்டிருக்கிறது.

ஐம்பதுகளில் வந்த வாய்ப்பு

உண்மையைச் சொல்வதென்றால், 1950 மற்றும் 1955ம் ஆண்டுகளிலேயே ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பனர் ஆகும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்தது. தங்கத் தட்டில் வைத்துக் கொடுக்கப்பட்டது போன்ற அந்த வாய்ப்பை இந்தியாவின் முதல் பிரதமரான நேரு நிராகரித்தார்.

அமெரிக்கா வழங்கிய வாய்ப்பு

1950களில் ஐநாவில் நிரந்தர உறுப்பினராகும் வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா முன்வந்த தகவல், விஜயலக்ஷ்மி பண்டிட் – நேரு கடிதப் போக்குவரத்திலிருந்து தெரிகிறது.

நேருவின் சகோதரியும் அமெரிக்காவுக்கான அன்றைய இந்தியத் தூதருமான விஜயலக்ஷ்மி பண்டிட், பிரதமர் நேருவுக்கு எழுதிய 1950 ஆகஸ்ட் 24ம் தேதியிட்ட கடிதத்தில், “ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் பொறுப்பிலிருந்து சீனக் குடியரசை அகற்றிவிட்டு, இந்தியாவை அமர்த்துவது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை சிந்தித்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.

விஜயலக்ஷ்மி பண்டிட்டுக்கு நேரு எழுதிய 1950 ஆகஸ்ட் 30 தேதியிட்ட பதில் கடிதத்தில், “நம்மைப் பொருத்தவரை இந்த முயற்சியை ஆதரிக்கப் போவதில்லை. இந்த வாய்ப்பை ஏற்பது எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தவறானதாகும். இது சீனாவை அவமானப்படுத்தியது போலாகும். இதனால், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே விரிசல் ஏற்படும்” என்று குறிப்பிட்டார்.

முதல்வர்களுக்கு எழுதிய கடிதம்

மேலும், 1955 ஆகஸ்ட் 2-ம் தேதி மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில் நேரு கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

“ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அதிகாரபூர்வமற்ற முறையில் அமெரிக்கா வாய்ப்பு வழங்கியது. ஐநாவில் சீனா ஓர் உறுப்பினராக அங்கம் வகிக்கலாம்: ஆனால், பாதுகாப்பு கவுன்சிலில் அந்த நாட்டுக்கு இடம் கிடையாது. அந்த இடத்தில் சீனாவுக்கு பதில் இந்தியா இடம்பெற வேண்டும் என அமெரிக்கா விரும்பியது. இதனை நாம் ஏற்கவில்லை. காரணம், சீனாவுடன் நமக்கு பிரச்சினை ஏற்படும். மேலும், சீனாவைப் போன்ற உன்னதமான நாடு பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெறாமல் போவது நியாயமற்றது. எனவே, இதனை ஏற்க முடியாது என்பதை அமெரிக்காவுக்குத் தெளிவுபடுத்தினோம். ஒருபடி மேலே போய், இந்த சூழ்நிலையில் பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெறுவதில் இந்தியாவுக்கு அதீத ஆர்வம் இல்லை என்பதையும் தெரிவித்தோம். முதலில் சீனாவுக்கு உரிய இடம் தருவது பற்றி பரிசீலிக்கட்டும். இந்தியா விவகாரத்தை தனியாகப் பார்த்துக் கொள்ளலாம்”. (ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிடி பிரஸ் வெளியிட்டுள்ள ‘Mr. Nehru’s Letters to the Chief ministers’ – Volume 4 (1947-1964) புத்தகம். பக்கம் 237).

(குறிப்பு: “Great country like China என்று நேரு எழுதியிருப்பதை  ‘சீனாவைப் போன்ற உன்னதமான நாடு என மொழிபெயர்த்திருக்கிறேன்.)

நேருவின் முரண்பாடு

இந்த அளவுக்கு அமெரிக்கா கொடுத்த வாய்ப்பு பற்றி விரிவாக முதல்வர்களுக்குக் கடிதம் எழுதிய நேரு, அடுத்த ஒரு மாதத்தில் நாடாளுமன்றத்தில் முரண்பட்டுப் பேசினார்.

1955 செப். 27ம் தேதி, ஜேஎன் பரேக் எனும் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது, “ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்த உறுப்பினர் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க அதிகாரபூர்வமாகவோ அதிகாரபூர்வமற்ற முறையிலோ எவரும் முன்வரவில்லை” என்று கூறினார்.

ரஷியா வழங்கிய வாய்ப்பு

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர நாடாக ஆக்குவதற்கு ரஷியாவும் முன்வந்தது. அதையும் நேரு நிராகரித்தார்.

சர்வபள்ளி கோபால் கூறியது

வரலாற்று அறிஞரான சர்வபள்ளி கோபால் (இந்தியாவின் 2வது குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் புதல்வர்) 1979ல் வெளியிட்ட Jawaharlal Nehru: A Biography என்ற நூல் வரிசையின் இரண்டாவது தொகுதியில், “ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆறாவது நிரந்தர உறுப்பினராக இந்தியாவைக் கொண்டு வர ரஷியா முன்வந்தும், அதனை நிராகரித்தார் நேரு. மாறாக, சீனாவுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நுரானி எழுதிய புத்தகம்

அரசமைப்புச் சட்ட நிபுணரான ஏஜி நுரானி, 2002ல் வெளியிட்ட ஜவஹர்லால் நேருவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் (Selected Works of Jawaharlal Nehru) என்ற புத்தக வரிசையில், இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி தருவதற்கு ரஷியா முன்வந்ததையும் அதை நேரு நிராகரித்ததையும் ஆதாரபூர்வமாக முன்வைக்கிறார்.

ரஷியாவின் அன்றைய பிரதமர் நிகோலாய் புல்கானினுக்கும் (Nikolai Bulganin) நேருவுக்கும் இடையே நடந்த கருத்துப் பரிமாற்றத்தை அந்தப் புத்தகம் அப்படியே தருகிறது.

புல்கானின்: சர்வதேச நிலவரம், பதற்றத்தைக் குறைப்பது ஆகியன குறி்த்து நாங்கள் விவாதித்தோம். அப்போது, ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஆறாவது நிரந்தர உறுப்பினராக இந்தியாவை ஆக்க வேண்டும் என்கிற ஆலோசனையை முன்வைத்தோம்.

நேரு: சீனக் குடியரசின் இடத்தில் இந்தியாவை வைக்க வேண்டும் என்று அமெரிக்காவில் சிலர் ஆலோசனை கூறி வருவது புல்கானினுக்குத் தெரிந்திருக்கலாம். இது எங்களுக்கும் சீனாவுக்கும் இடையே பிரச்சினையை உருவாக்கும். நாங்கள் இதை முழுமையாக எதிர்க்கிறோம். நிரந்தர உறுப்பினராக இந்தியா அனுமதிக்கப்பட வேண்டும் என்றால், ஐ.நா. சாசனம் திருத்தி அமைக்கப்பட வேண்டும். அது பற்றி புல்கானின் என்ன சொல்கிறார்? நிரந்தர உறுப்பினராக மக்கள் சீனக் குடியரசை அனுமதிக்கும் கேள்விக்கு விடை காணும் வரை சாசன திருத்தத்தை மேற்கொள்ள இயலாது. எங்கள் கருத்துப்படி, இதனை செய்வதற்கு இது பொருத்தமான நேரமல்ல.

அதாவது, “In our opinion this does not seem to be an appropriate time for it” என்றார் நேரு.

அமெரிக்க – ரஷிய அணுகு முறை வேறுபாடு

சீனக் குடியரசை எடுத்துவிட்டு இந்தியாவை அந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு. சீனக் குடியரசை அகற்றாமல், இந்தியாவையும் உள்ளே கொண்டுவர வேண்டும் என்பது ரஷியாவின் நிலைப்பாடு.

சீனக் குடியரசு (Republic of China) என்பது தைவானைக் குறிக்கும் அதிகாரபூர்வச் சொல்லாகும். மக்கள் சீனக் குடியரசு (People’s Republic of China) என்றால்தான் கம்யூனிஸ்ட் சீனாவைக் குறிக்கும். ஐம்பதுகளில் தைவான்தான் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக இடம்பெற்றிருந்தது. இதை நினைவில் கொள்ள வேண்டும். தைவானை அகற்றிவிட்டு எங்களைத்தான் நிரந்தர உறுப்பினராக்க வேண்டுமென்று ஐம்பதுகளில் கம்யூனிஸ்ட் சீனா போராடி வந்தது.

அப்போது, தைவானும் வேண்டாம் – கம்யூனிஸ்ட் சீனாவும் வேண்டாம் – இந்தியா வரட்டும் என்று அமெரிக்கா நினைத்தது. ரஷியாவோ, தைவான் இருந்துவிட்டுப் போகட்டும் – இந்தியா கூடுதலாக இடம் பெறட்டும் என்று கருதியது. மொத்தத்தில், இந்த இரண்டு வல்லரசுகளும் கம்யூனிஸ்ட் சீனா நிரந்தர உறுப்பினராக வருவதை விரும்பவில்லை. ஆனால், நேரு விரும்பினார். அதுதான் ஆச்சரியம்!

சசிதரூர் எழுதிய புத்தகம்

நேருவைப் பற்றி சசிதரூர். எழுதிய ‘நேரு – இந்தியாவின் கண்டுபிடிப்பு (Nehru: The Invention of India)’ புத்தகம் 2004ல் வெளியானது. புத்தக வெளியீட்டைத் தொடர்ந்து 2004 ஜனவரி 10ம் தேதி தி ஹிந்துவுக்கு வழங்கிய பேட்டியில், “1953வாக்கில் ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா முன்வந்தபோது அதனை நிராகரித்தார் நேரு. மாறாக, அந்த வாய்ப்பை சீனாவுக்கு வழங்குமாறு அவர் வலியுறுத்தினார்” என்று குறிப்பிட்டார்.

அதோடு இன்னொன்றையும் சசிதரூர் குறிப்பிட்டார். நேரு காலத்தில் இந்தியாவுக்கென வெளியுறவுக் கொள்கை இருக்கவில்லை. சரியாகச் சொல்வதென்றால், “நேருவுக்கென வெளியுறவுக் கொள்கை இருந்தது” என்றார். (Tharoor said that in Nehru’s time, India had no foreign policy and it was correct to say “Nehru had a foreign policy”.)

ஆன்டன் ஹார்டர் ஆய்வுக் கட்டுரை

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு வந்த வாய்ப்புகளை நேரு எப்படியெல்லாம் தட்டிக் கழித்தார் என்பது பற்றி மிக முக்கியமான ஆய்வுக் கட்டுரையை அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள Woodrow Wilson International Center for Scholars (or) Wilson Center தன்னுடைய இணையத்தளமான wilsoncenter.org-யில் 2015 மார்ச் 11ம் தேதி வெளியிட்டது.

‘Not at the Cost of China: New Evidence Regarding US Proposals to Nehru for Joining the United Nations Security Council’ என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரையை எழுதியவர் ஆன்டன் ஹார்டர் (Anton Harder). இவர், London School of Economicsல் உள்ள சர்வதேச வரலாற்றுத் துறையின் ஆய்வாளர். ‘1949 முதல் 1962 வரையிலான இந்திய – சீன உறவுகள்’ என்கிற தலைப்பில் ஆய்வு செய்தவர்.

இவரது ஆய்வுக் கட்டுரையில் அமெரிக்கா தந்த வாய்ப்பையும் அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் நேரு கோட்டைவிட்டதையும் விரிவாக அலசியிருக்கிறார். இக்கட்டுரை இணையத்தளத்தில் இன்றும் காணக் கிடைக்கிறது. அதைப் படித்துப் பார்க்கும்போது, வரலாற்றுச் சிறப்பு மிக்க வாய்ப்பினை நேரு எப்படியெல்லாம் வீணடித்தார் என்பதை வேதனையுடன் உணர முடிகிறது.

நேரு மறுத்ததற்கு காரணம் என்ன?

  1. சர்வதேச ராஜதந்திர விஷயங்களில் சாதுர்யமாக நடந்து கொள்வதற்குப் பதில் சரியாக நடந்து கொள்வது என்பதையே நேரு நடைமுறைப்படுத்தினார்.

தைவான் என்கிற சீனக் குடியரசின் இடத்தில் மக்கள் சீனக் குடியரசே அமர்த்தப்பட வேண்டும்: அதுவே நியாயமானது. அது அவர்களுக்குரிய இடம் என்று நேரு கருதினார்.

அதனால்தான், மக்கள் சீனக் குடியரசை 1950லேயே இந்தியா அங்கீகரித்தது: அமெரிக்கா, 1979ல்தான் அங்கீகரித்தது.

  1. அமெரிக்க முயற்சிகளை ஏற்று நிரந்தர உறுப்பினராக இந்தியா சம்மதித்தால், ரஷியாவைப் பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்: ரஷியா சொன்னதைக் கேட்டு ஆறாவது உறுப்பினரானால், அமெரிக்காவைப் பகைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்: இரண்டு நாடுகளும் சொல்வதைக் கேட்டு நிரந்தர உறுப்பினரானால், சீனாவைப் பகைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இதிலிருந்து விடுபட நிரந்தர உறுப்பினர் ஆகாமல் இருப்பதே உத்தமம் என நேரு கருதினார்.

– மொத்தத்தில் சீனாவை விலையாக கொடுத்து நிரந்தர உறுப்பினராக இந்தியா விரும்பவில்லை. At the cost of China, அதை செய்ய இந்தியா விரும்பவில்லை.

– சுருக்கமாக சொன்னால். நேருவின் அணுகுமுறை இதுதான்: தைவான் என்கிற சீனக் குடியரசுக்குப் பதில் மக்கள் சீனக் குடியரசு வரட்டும். ஐநா சாசனம் திருத்தப்பட்டு – அதன் மூலம் ஆறாவது நாடாக இந்தியா வந்தால் போதும்.

நேரு எடுத்த இநத முடிவின் விளைவால், 70 ஆண்டுகள் கடந்த பின்னும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா போராடிக் கொண்டிருக்கிறது. நேருவின் பெருந்தன்மையால் நிரந்தர உறுப்பினரான சீனா, இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் வீட்டோ அதிகாரத்தை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

இனியாவது நிரந்தர உறுப்பினராக முடியுமா?

இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ஐநா சாசனம் திருத்தப்பட வேண்டும். ஐநா பொதுச் சபையின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடனும் நிரந்தர உறுப்பு நாடுகளின் முழுமையான ஆதரவுடனும் ஐநா சாசனத்தின் 28வது அத்தியாயம் திருத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு நடந்தால், சீர்திருத்தம் ஏற்படும்.

தீர்மானத்தை நிரந்தர உறுப்பினர் நாடுகள் ஐந்தும் முழுமையாக ஆதரிக்க வேண்டும். என்பது முக்கிய முன் நிபந்தனையாகும். சீனா நம்மை எப்படி ஆதரிக்கும்? இவையெல்லாம் உடனடியாக நடக்கும் விஷயங்கள் அல்ல. என்றைக்கேனும் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவின் இன்றைய முயற்சிகள்

ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்கிற கோரிக்கையை இந்தியாவைப் போலவே ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. எனவே, அந்த நாடுகளுடன் சேர்ந்து ஜி 4 என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் கூட்டாகக் குரல் கொடுத்து வருகிறது இந்தியா.

அமெரிக்கா – பிரிட்டன் – பிரான்ஸ் ஒப்புதல்

2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநா பொதுச் சபையில் உரை நிகழ்த்த நியூயார்க் சென்றிருந்த மோடி, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அவ்வாறு பேசிய அடுத்த சில நாட்களில் – அதாவது 2015 செப். 28ம் தேதி திங்கள்கிழமை, மோடியை சந்தித்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன், பிரான்ஸ் அதிபர் ஃபிராங்கோயிஸ் ஹொலாந்தே ஆகியோர் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்குத் தங்கள் ஆதரவைத் தனித்தனியே தெரிவித்தனர். மூன்று வல்லரசு நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக ஒரே நாளில் கருத்து தெரிவித்தது இதுவே முதன்முறையாகும். இதுபற்றி அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், அந்த திங்கள்கிழமையை ‘POWER MONDAY’ என்று வர்ணித்தார். அதாவது ‘சக்திவாய்ந்த திங்கள்கிழமை’ என்றார்.

இதை தொடர்ந்துதான், 2017 செப்டம்பர் மாதம் 115வது அமெரிக்க காங்கிரஸ் இந்தியாவின் கோரிக்கை ஆதரித்து 535வது நாடாளுமன்றத் தீர்மானத்தை நிறைவேற்றியது (House Resolution 535).

ரஷியாவின் அங்கீகாரம்

2020 ஜூன் 23ம் தேதி நடைபெற்ற RIC Grouping கூட்டமைப்பின் காணொளி வாயிலாக நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தையின் போது, ‘ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் பொறுப்புக்கு இந்தியாவை ஆதரிப்பதாக’ சீனாவை வைத்துக்கொண்டு ரஷ்யா கூறியது. உடனே, எதிர்வினையாற்றிய சீனா தன் ஆட்சேபத்தை அப்போதே பதிவு செய்தது.

அமைச்சரின் பதில்

பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கிற 5 வல்லரசு நாடுகளில் 4 நாடுகள் – அதாவது, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா ஆகிய நாடுகள் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அதிகாரபூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளன என்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரன் 2020 செப். 21ம் தேதி மக்களவையில் கேள்வி ஒன்று பதில் அளிக்கையில் தெரிவித்தார்.

எனவே, இந்திய முயற்சிகள் முடிவின்றித் தொடர்கின்றன. நேரு கோட்டை விட்டதை மோடி முடித்து வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Leave a Reply