Posted on 1 Comment

சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு

அத்துவாக்களும் அடுத்த பந்தியும்

வியாபார ரீதியில் ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்த அச்சகத்தை ரமணி வேறு ஒருவருக்கு விற்று விட்டான். விளைவு, நமக்கு வேலையில்லை.

வேறு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், இடையில் விட்டுப்போயிருந்த தத்துவப் படிப்பைத் தொடங்கினேன். ரொம்பகாலமாக யோசித்துக் கொண்டிருந்த விஷயம் ஒன்று, காளியை வர்ணிக்கின்ற பாரதியார் பாடல் – மஹாகாளியின் புகழ். அதில் “அத்துவாக்களெனும் கால்களாறு உடையதெனக் கண்டு” என்று எழுதி இருப்பார். அதைப் படித்தபோது அத்துவாக்கள் என்றால் என்ன என்ற கேள்வியை ஒரு சாக்தரிடம் கேட்டேன். அவர் “வர்ண, பத, மந்த்ர, கலா, தத்வ, புவனம் ஆகிய உபாசனா மார்க்கங்கள்” என்று சொன்னார். எனக்குத் தலை சுற்றியது. சலிப்படைந்து சாக்தர் வழியாகப் புரிந்து கொள்ளும் முயற்சியைக் கைவிட்டேன்.

அடுத்தது கவிஞர்கள். இந்த மாதிரி விஷயங்களில் கவிஞர்கள் எவ்வளவு ஆழங்கால் பட்டவர்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். இறுதியாக பாரதி அன்பர்கள். இதில் பலருக்கு நான் பாரதியை ஏதோ தவறான பிரயோகத்திற்குப் பயன்படுத்தப் போகிறேன் என்கிற சந்தேகம் வந்து விட்டது. பாரதி அன்பர்களோடு உரையாடியதும் ஒரு முட்டுச்சந்தாக முடிந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு கல்யாண வீட்டில் பந்தியில் எனக்கும் ரவிக்கும் (ஷோபனா ரவி) பக்கத்து பக்கத்து இலை. ரவி தத்துவ எம்.ஏ. படித்தவன் என்பதால் ரவியிடம் கேட்டேன். ரவி விளக்கம் சொல்ல, அத்துவாக்களைத் தொட்டுக் கொண்டு பாரதியைப் பற்றிப் பேச ஆரம்பிக்க, நான் மீண்டும் மீண்டும் அவனை அத்துவாக்களுடன் ஒட்ட வைக்க முயற்சி செய்ய, அவன் மீண்டும் மீண்டும் பாரதியைப் பற்றிப் பேச, கொஞ்ச நேரத்திற்குப் பிறகுதான் எங்களுக்குப் புறச்சூழ்நிலை புரிந்தது. எல்லோரும் எழுந்து போய் விட்டார்கள். அடுத்த பந்திக்கு நாங்கள் இடைஞ்சலாக இருக்கிறோம் என்று புரிந்து விட்டது. அத்துவாக்களின் காரணமாக அன்றைய சாப்பாட்டை ருசிக்க முடியாமல் போனது. இருந்தாலும் பாரதியை புதிய கோணத்தில் ருசிக்க ஆரம்பித்தேன்.

சில சமயங்களில் ஷோபனாவோடு சென்னைத் தொலைக்காட்சி நிலையத்திற்கும் போவதுண்டு. அங்கே செய்தியாளர்களுக்கான அறையில் அனந்த பத்மநாபன், வைய்யாதுரை, சு.சமுத்திரம், புகைப்படக்காரர் பழனி ஆகியோரோடு நட்பு தொடர்ந்தது. இதில் சில சமயங்களில் டாக்டர் A.நித்தியானந்தம் கலந்து கொள்வார்.

டாக்டரின் நிறம் கருப்பு, ஆனால் அதைக் கவனிக்க முடியாதபடி முகத்தில் முழுப் புன்னகை, ஓட்டப் பந்தயக்காரர்களுக்கு உரிய உடல்வாகு, அன்றாடம் சஃபாரி உடை, நடையில் கொஞ்சம் நளினம். கர்நாடகாவைச் சேர்ந்த கோலாரில் வளர்ந்தவர் என்பதால் பேச்சில் அங்கங்கே அந்த மண்வாசனை இருக்கும்.

டாக்டர் தமிழக அரசுப் பணியில் உள்ள மருத்துவர். திருவொற்றியூர் நகராட்சியில் அவருக்கு வேலை. ஸ்போர்ட்ஸ் மெடிஸின் துறையில் திறமையுள்ள அவரை சென்னைத் தொலைக்காட்சி நிலையம் அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ளும். செய்தியாளர் அறையில் ஷோபனா அறிமுகப்படுத்தி வைக்க, நானும் ரமணனும் டாக்டரைச் சந்தித்தோம். அந்தச் சந்திப்பு என் வாழ்க்கையின் சில பக்கங்களைப் புரட்டிப் போடும் என்பதை நான் அப்போது அறியவில்லை.

எல்லோரும் நண்பர்களாகப் பழகிக் கொண்டிருந்த சூழலில் டாக்டருக்கு மட்டும் கொஞ்சம் அதிகமான மரியாதை கொடுத்தார்கள். அவர்கள் அனைவரும் அவரை குருபீடத்தில் வைத்திருந்தார்கள் என்பது போகப்போக எனக்குப் புலப்பட்டது. பல்லாண்டுகளாக எனக்குள் ஒளித்து வைத்திருந்த ஒரு தேவைக்கு டாக்டர் பயன்படுவாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. ஷோபனாவிடம் கேட்டேன். “உனக்கு என்ன வேண்டும்” என்றாள் அவள். “பராசக்தியைப் பார்க்கவேண்டும்” என்றேன் நான். “டாக்டரிடம் கேட்டுப் பாரேன்” என்பது அவளுடைய பதில்.

டாக்டரைத் தனியாக சந்திப்பதுதான் நல்லது என்ற எண்ணத்தில் மறுநாள் திருவொற்றியூருக்குப் போய்விட்டேன். திருவொற்றியூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஒதுக்குப்புறமாக இருந்தது டாக்டருக்கான இடம். பிரசவத்திற்கு ஏழைகள் கூட அரசு மருத்துவமனையை நாடுவதில்லை என்பதால் அந்த இடத்தில் டாக்டருக்கு வேலை குறைவு. பெரும்பாலும் நானும் டாக்டரும் தனித்திருப்போம். காலையில் நான் போனவுடன் டீ, பிஸ்கட் வந்துவிடும். மதியம் ஒரு சத்துணவு, மாலையில் டீ, வடை அல்லது சமோசா. மூன்று மணிக்கு மேல் புறப்பட்டு சென்னைத் தொலைக்காட்சி.

டாக்டருடைய வாகனம் ஜாவா என்கிற மோட்டார் பைக். ஜாவா தயாரிக்க ஆரம்பித்தபோது செய்த முதல் வண்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன். எப்போது எது கழண்டு விழுமோ என்கிற ஸ்திதியில் இருக்கும். ஆனால் அவருக்கு மட்டும் சொன்ன பேச்சைக் கேட்கும். முதல் உதையிலேயே ஸ்டார்ட் ஆகிவிடும். தொலைக்காட்சி நிலையத்திற்கு வந்து உரையாடலை முடித்துக் கொண்டு ஆறு மணிக்கு மேல் டாக்டர் புறப்படுவார் ஜாவாவில். பின்னால் நான். அடுத்த ஸ்டாப் தங்கசாலையில் இருக்கும் டாக்டருடைய கிளினிக்.

இரவு ஒன்பது மணி வரை டாக்டர் கிளினிக்கில் இருப்பார். அங்கேயும் கூட்டமிருக்காது. சமூகத்தின் அடிநிலையிலுள்ள ஜனங்கள், அவர்களுக்கு ஊசி போட்டு, மருந்து கொடுத்து ஒரு பழைய நோட்டுப் புத்தகத்தில் கணக்கெழுதி வரவு வைத்துக் கொள்வார். இதற்கிடையில் விளக்கு வைத்தவுடன் சாப்பிட வேண்டும் என்ற சாங்கியம் வேறு. கடையில் இருந்து இட்லி, எனக்காகக் கெட்டி சட்னி, சாம்பார் வந்துவிடும். டாக்டர் தயவில் என்னுடைய அந்தவேளைப் பிரச்சினையும் தீர்ந்து விடும்.

ஒன்பது மணிக்கு கிளினிக்கை மூடிவிட்டு என்னை ஜாவாவில் ஏற்றிக் கொண்டுவந்து தங்கசாலைத் தெருவில் உள்ள பஸ்-ஸ்டாப் நோக்கிச் செலுத்துவார். வண்டி போகும் வேகத்தில் நான் அலறுவேன். “டாக்டர், கஷ்டப்படாதீங்க, எப்படியும் அடையாறுக்கு கடைசி பஸ் போயிருக்கும். என்னை ஆட்டோ ஸ்டாண்டில் இறக்கிவிட்டு ஐம்பது ரூபாய் கொடுத்து விடுங்கள்” என்பேன். நான் சொல்வதை அவர் கவனித்ததாகவே காட்டிக் கொள்ளமாட்டார். ஓடுகிற பஸ்ஸை மடக்கி, குறுக்கே பைக்கை நிறுத்துவார். ஐந்து ரூபாய் கொடுத்து “ஓடிப்போய் ஏறிக் கொள்” என்பார். பஸ்காரன் மெட்ராஸ் பாஷையில் திட்டிக் கொண்டிருப்பான். நான் “இவ்வளவு ரிஸ்க் எடுக்காதீங்க டாக்டர், உங்களுக்கிருக்கிற ஒரே சிஷ்யனை இழந்துவிட்டால் அப்புறம் என்ன செய்வீங்க” என்று சொல்லிவிட்டு பஸ்ஸில் ஏறிக்கொள்வேன்.

மறுநாள் காலையில் திருவொற்றியூர். முன்பு குறிப்பிட்டது போலவே இந்த நாளும் இருக்கும். சில சமயங்களில் எந்த அறிவிப்பும் இல்லாமல் டாக்டர் எழுந்து நடப்பார். கூடவே நானும். திருவொற்றியூர் நெடுஞ்சாலையைக் கடந்து கடற்கரை நோக்கி நடை. கடற்கரையில் இருக்கிற பட்டினத்தார் சமாதியில் அது முடியும். சமாதியின் பின்புறமுள்ள மரத்து நிழலில் செங்கல்லைத் தலைக்கு வைத்துக் கொண்டு டாக்டர் படுத்துக் கொள்வார்.

பட்டினத்தார் சமாதியாக இருந்தாலும், திருவொற்றியூர் அறையாக இருந்தாலும், தங்கசாலையில் இருந்தாலும், ஒரு நாளைக்கு நான்கு முறையாவது ஒரே கேள்வியை அவரை நோக்கி வீசிக் கொண்டிருப்பேன். கேள்வி என்று சொல்லமுடியாது. கோரிக்கை என்று சொல்லலாம்.

அது “டாக்டர், பராசக்தியைப் பார்க்கணும்”.

இந்தப் பயணங்களும், டாக்டரோடு அன்றாடம் பல மணிநேரம் கழிக்கின்ற அணுக்கமான வாய்ப்பும், சில மாதங்கள் தொடர்ந்தன. டாக்டர் ஒவ்வொரு நாளும் எனக்கு புதியவராகத் தெரிந்தார். காசு, பணம், சொத்து என்ற விஷயங்கள் இவரைத் தொடவே இல்லை என்பது ஆரம்ப நாட்களிலேயே எனக்குத் தெளிவாகி விட்டது. டாக்டர்களுக்குரிய மேதாவித்தனமும் அவரிடம் இல்லை. எல்லோரிடமும் சமபாவத்தோடு பழகினார். பேசப்பேச, பழகப்பழக ஒரு உண்மைப் பொருளைத் தேடி டாக்டர் பல வருடங்களாக அலைந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன். அவ்வப்போது அந்த சித்தர் உலகத்தின் காட்சிகள் சிலவற்றை எனக்கும் காட்டினார். எங்களுடைய உறவின் தொடர்பில் அவருடைய ஆற்றல் மெல்லமெல்ல வெளிப்பட்டது.

பல வருடங்களாக எந்தப்பெண்ணைப் பார்த்தாலும் பாதங்களை நோக்கி

“ந அஹம் ஜானாமி கேயூரே
ந அஹம் ஜானாமி குண்டலே
நூபுரேது அபி ஜானாமி
நித்யம் பாதாரவந்தனாத்”

என்கிற வால்மீகியின் வரிகளை மனதுக்குள் சொல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். டாக்டருக்கு எப்படியோ அது தெரிந்து விட்டது. அலுவலக வேலையாக டாக்டரின் அறைக்குள் ஒரு நர்ஸ் வந்தார். நான் அவரது பாதங்களைப் பார்த்தேன். டாக்டர் என்னைப் பார்த்து “கீழே பார்க்காதே, புத்தி கீழே போய்விடும். மேலே பார்” என்றார். கீழே பார்ப்பது, மேலே பார்ப்பதெல்லாம் ஒருபுறம் இருக்க நம்முடைய வழிபாட்டு ரகசியத்தை இவர் கண்டுபிடித்து விட்டாரே என்பதில் எனக்கு ஆச்சரியம்.

டாக்டருக்குப் பலவகையான நண்பர்கள் உண்டு. அதில் யாரோ ஒருவன் முந்நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு இரண்டு சினிமா டிக்கெட்டுகளைக் கொடுத்துவிட்டான். நானும் டாக்டரும் சினிமாவைப் பார்ப்பதற்காக அண்ணாசாலையில் உள்ள பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ் திரையரங்குக்குப் போனோம். போனபிறகுதான் தெரிந்தது, அது போலந்து நாட்டுப் படம் என்று. இந்த மத்தியான வேளையில் போலந்து மொழித் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு எதற்கடா இத்தனைபேர் வந்திருக்கிறான் என்ற கேள்விக்கு சீக்கிரமே விடை கிடைத்தது. இந்த மாதிரி திரைப்பட கிளப்புகளில் வெளியிடப்படும் படங்களுக்கு தணிக்கை கிடையாதாம், கதை என்ற பெயரில் ஏதோ ஒன்றை வைத்துவிட்டு அங்கங்கே ஆபாசம்.

நான் டாக்டருடைய காதில் கிசுகிசுத்தேன். “டாக்டர் முந்நூறு பேர் வந்திருக்கான் ஆபாசத்தைப் பார்க்கிறதுக்கு. நாடு ரொம்ப கெட்டுப்போச்சு” என்றேன். டாக்டரும் என்னிடம் கிசுகிசுத்தார். “ரொம்ப பேசாதே, மேலேயிருந்து எண்றவன் நம்மையும் சேர்த்துதான் எண்ணுவான்” என்றார்.

டாக்டரோடு நெருக்கமாக இருந்த இந்த காலகட்டத்தில் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய ஒரு விஷயமும் தொடர்ந்து இருந்தது. அடையார் வீட்டில் அண்ணன் ஏகாம்பரத்தின் மகள் ராஜலட்சுமி, பள்ளிக்குச் செல்லும் சிறுமியாகவும் எனக்கு செல்லமாகவும் இருந்தாள். அவள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டாள். உடம்பும் மெலிந்து இருந்தது. தலைமுடியும் உதிர்ந்து கொண்டே இருந்தது. யாரோ ஒருவன் இதெல்லாம் புற்று நோயின் அறிகுறி என்று சொல்லிவிட்டான். எனக்கு அதற்கான மருத்துவப் பரிசோதனையை செய்து பார்த்து விடவேண்டும் என்கிற பதட்டம். ஏகாம்பரத்திடம் மெதுவாக சொல்லிப்பார்த்தேன். அந்த யோசனை அவனுக்குப் பிடிக்கவில்லை. ராஜி ஒருவேளை நோயால் பாதிக்கப்பட்டிருப்பாளோ, இதை யாரும் கவனிக்காமல் இருக்கிறார்களே என்கிற கவலை என்னைப் பிடித்துக் கொண்டது.

ஒருநாள் இது பெரிய அளவிலே என்னுள்ளே குடைந்து கொண்டிருந்தது. இரவு மணி ஒன்பது முப்பது இருக்கும். படுக்கை எல்லாம் போட்டுவிட்டு வாசற்கதவைப் பூட்டப் போனேன். கதவிற்கப்பால் டாக்டர் நின்று கொண்டிருந்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன டாக்டர்” என்றேன். “குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னு கூப்பிட்டாயே” என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்துவிட்டார். ஆனால், ராஜி உடல்நிலை பற்றி அவரிடம் நான் பேசவே இல்லை என்பதுதான் உண்மை. ராஜியைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு ஒரு டெஸ்ட் செய்யவேண்டும் என்று எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். மறுநாள் டெஸ்ட் ரிசல்ட் வந்தபோது எல்லாம் நார்மலாக இருந்தது. புற்றுநோயும் இல்லை, ஒரு புடலங்காயும் இல்லை, எல்லாம் என்னுடைய பிரமைதான்.

சென்ட்ரல் ஸ்டேஷன் அருகில் இருப்பது மூர் மார்க்கெட். அந்த மூர்மார்க்கெட்டின் முன்பகுதியில் இருக்கும் புல்வெளியில் டாக்டர் அமர்ந்திருந்தார். அருகில் நான். “டாக்டர்.. ஒரே உண்மையை சொல்வதற்கு எதற்கு இத்தனைப் புத்தகங்கள். திருவள்ளுவர் சொல்வதைத்தான் திருமூலர் சொல்கிறார். திருவாசகத்திலும் அதுதான் இருக்கிறது. திவ்யப் பிரபந்தத்திலும் அதுதான். கொஞ்சம் தாராளமனதோடு தேடிப் பார்த்தால் மற்ற மதங்களிலும் இது போன்ற விஷயங்கள் இருக்கின்றன. இதை மாறி மாறி வெவ்வேறு வகையாக எழுத வேண்டிய அவசியம் என்ன? ஜனங்களுக்கு இதனால் குழப்பம், சமூகத்தில் பிரிவுகள்தானே உண்டாகின்றன?” என்று கேட்டேன்.

மூக்கைத் துளைக்கும் நாற்றம், ஈக்கூட்டம், சந்தை இரைச்சல் நிரம்பிய அந்த இடத்தில் உபதேசம் பெற்றவன் நானாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். டாக்டர் சொன்னார் “இந்த ஜனசமூகத்தில் வாழ்ந்து கொண்டு ஒருவன் ஞானமடைவது சிரமமான காரியம். ஆகவே இதிலிருந்து விலகி, விடுபட்டு, தனியே இருக்கிறான், காட்டுக்குப் போகிறான், மலைமேல் ஏறுகிறான், குகையில் வாழ்கிறான், புலனடக்கத்தோடு பலகாலம் தபஸ் செய்து கொண்டு தன்னை வருத்திக் கொள்கிறான். பிறகு ஒருநாள் அவனுக்கு வெளிச்சம் கிடைக்கிறது. கிடைத்த வெளிச்சத்தை, அதன் பிரகாசத்தை அவன் பகிர்ந்து கொள்ள ஆளைத் தேடினால் அங்கே ஒருவரும் இல்லை. அவனுக்கும் ஜனசமூகத்திற்கும் உள்ள தொடர்பு விட்டுப் போய்விட்டது. எனவே தன்னுடைய கருத்தைக் கவிதையாக, பாடலாக, விடுகதையாக, நாட்டுப்பாடலாக எழுதி வைக்கிறான். கை மாறிப் போகக்கூடாது என்ற எண்ணத்தில் சங்கேத மொழிகளைச் சேர்த்துக் கொள்கிறான். இப்படி பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு மனிதர்கள் எழுதி வைத்ததால் நமக்குப் பலவகையான நூல்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் அவற்றில் உட்பொருள் ஒன்றுதான்” என்றார்.

“ஆக ஞானிகளுக்கும் கஷ்டமான விஷயம் சிஷ்யன் கிடைப்பதுதான். அந்த வகையில் நீங்கள் அதிர்ஷ்டசாலி. உங்களுக்கு நான் இருக்கிறேன்” என்றேன்.

வாய்விட்டுச் சிரித்துக்கொண்டே டாக்டர் என்னை ஓங்கி முதுகில் அடித்தார்.

 தொடரும்…

1 thought on “சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு

  1. அப்4யாஸாதிஃசய-ஜ்ஞாதா **ஷட3த்4வாதீத-ரூபிணீ |**

    என்ற லலிதா ஸஹஸ்ரநாமத்தின் 180ம் அடியை பாரதி மொழிபெயர்த்திருக்க வாய்ப்புண்டு. முழு லலிதா ஸஹஸ்ரநாமத்தையும் தங்கள் பயன்பாட்டுக்காக அவர் மொழிபெயர்த்துக்கொடுத்திருந்தததாக யதுகிரியம்மாள் சொல்கிறார்.

    ஷடத்வாதீத ரூபிணி என்பதுதான் ‘மூல அத்துவாக்கள் என்னும் கால்கள் ஆறு உடையதெனக் கண்டு’ என்ற அடி,

Leave a Reply