வீட்டுக்கு முன்னால் பந்தல் போடப்பட்டிருந்தது. ஆனால் வீடு மிகவும் பெரியதாக இருந்ததால் பந்தலின் பெரிய அமைப்பு அவ்வளவாகப் பார்ப்பவரின் கண்ணில் தென்படவில்லை என்று ராமபத்திரன் நினைத்தார். பந்தலின் அடியில் தரையை ஜமுக்காளங்களினால் மூடியிருந்தார்கள். இருபது முப்பது நாற்காலிகள் போடப்பட்டிருந்தாலும் எல்லாவற்றிலும் ஆள்கள் உட்கார்ந்திருந்தார்கள். கரை வேட்டி அல்லது கரைத் துண்டு அல்லது இரண்டுமே என்று எல்லோரும் அணிந்திருந்தார்கள். ‘தன்னைத் தவிர’ என்று அவர் எண்ணினார். மனதுக்குள் சிறு நாணம் ஏற்பட்டது.
கட்சி ஆள்களாக இருப்பார்கள் என நினைத்துக்கொண்டார். எல்லா முகங்களிலும் அனுபவத்தின் தழும்புகளைக் காலம் ஏற்றிவிட்டிருந்தது. தலைவரைப் பார்க்க வந்து காத்திருப்போர்களுடன் ராமபத்திரனையும் அந்தச் செயலாளர் இளைஞன் உட்கார வைத்திருந்தான்.
வீட்டு முகப்பில் நின்றிருந்த அவனை அவர் வந்தவுடன் பார்த்த போது ‘தெரியாமல் இங்கு நுழைந்து விட்டாரோ ?’ என்று அவன் முகத்தில் சந்தேகம் நிழலாடிற்று.
அவர் அவனிடம் “நான் அழகரசனைப் பாக்க வந்திருக்கேன்” என்றார்.
தலைவர் என்று கூறாதது மட்டுமல்ல, தலைவர் பெயரைச் சொல்லும் போது கூட ஐயா என்று அடைமொழி சேர்க்காமல் கேட்கும் இந்த மனிதன் யார் என்று செயலாளர் இளைஞனும் பக்கத்தில் நின்றிருந்த ஐந்தாறு பேர்களும் சற்றுக் கோபத்துடன் அவரைப் பார்த்தார்கள்.
ராமபத்திரன் சுதாரித்து “சாரி, அழகரசன் சார்தான் இன்னிக்கி வந்து பாக்கச் சொல்லி எனக்கு லெட்டர் போட்டிருந்தார்” என்று அவர் கடிதத்தை அவனிடம் கொடுத்தார். அதைப் படித்து விட்டு அவன் எந்த வித உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் “என்ன விசயமா தலைவரை நீங்க பாக்கணும்?” என்று கேட்டான்.
“அவர் வரச் சொன்னார்னு வந்திருக்கேன்” என்றார்.
பயந்து கூனி குறுகி இறைஞ்சி வரும் குரல்களைக் கேட்டுப் பழகி இருந்த செவிகளுக்கு அவருடைய பதில் இனிமையைத் தரவில்லை. அவன் அவருடைய கடிதத்தை வாங்கி வைத்துக் கொண்டு உட்கார வேண்டிய இடத்தைக் காட்டினான்.
அவர் இரண்டு மாதங்கள் முன்புதான் தில்லியை ஒரேயடியாக விட்டு விட்டு சென்னையில் இருக்கும் மகனுடன் வாழ வந்தார். அவரது கல்லூரிப் படிப்பு முடித்தவுடன் தந்தையின் உத்தியோக மாற்றல் காரணமாகக் குடும்பமே தில்லிக்கு நகர்ந்தது. பல பத்தாண்டுகள் தில்லியில் வாழ்க்கையைக் கழித்து விட்டு சென்னை வந்தார். சென்ற மாதம்தான் அழகரசனின் வாழ்க்கை வரலாறை ஒரு பத்திரிகையில் படித்து வியப்படைந்தார். அழகரசன் புதிய பெயர் சூட்டிக் கொண்ட விபரத்தையும் அதில் குறிப்பிட்டிருந்ததை வைத்து அவன் தனது பால்ய சிநேகிதனான ஒண்டிவீரு என்று தெரிந்து கொண்டார். அதன் பிறகு அவருடைய பையன் கூகிளில் தேடி அழகரசன் இருக்குமிடத்தைச் சொன்னான். அவர் அழகரசனுக்குத் தன்னை அறிமுகப்படுத்தி ஒரு கடிதம் எழுதினார். ஒரு வாரம் கழித்து அவருக்குப் பதில் வந்தது. தற்போது வடஇந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் திரும்பி வந்ததும் சந்திக்கலாம் என்றும் தேதி நேரம் குறிப்பிட்டு எழுதப்பட்டிருந்தது.
ஐம்பத்தைந்து வருஷங்களுக்கு முன்பு ஒண்டிவீருவுடன் பழக்கம் ஏற்பட்டிருந்த நாள்கள் அவரது நினைவுக்கு வந்தன. கடைசியாக அவனைப் பார்த்தது அவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்ற தினத்தில்தான்.
*
அன்று காலை ராமபத்திரன் வீட்டை விட்டுக் கிளம்பும் போதே அவன் அப்பா “ஒரே கலாட்டாவா இருக்கும் போல இருக்கேடா? அவசியம் போகத்தான் வேணுமா?’ என்று கேட்டார்.
“நான் போய்ப் பாக்கறேன். இன்னும் ஃபைனல் எக்ஸாமுக்கு மூணு மாசம்தான் இருக்கு. ஒரே எக்ஸ்பிரஸ் வேகத்திலே பாடம் நடத்த வேண்டியிருக்கேன்னு புரஃபஸர்லாம் அழுதிண்டிருக்கா. காலேஜ்லே கிளாஸ் ஒண்ணும் நடக்கலேன்னா நான் திரும்பி வந்துடுவேன். நீங்க கவலைப்பட வேண்டாம்” என்றான் ராமபத்திரன்.
அப்பாவின் கவலைக்குக் காரணம் இருந்தது. அரசல்புரசலாக எங்கும் பேச்சு கேட்டுக் கொண்டிருந்தது. சாதாரண ஜனங்களின் பேச்சில் பத்திரிகைகளில் பொதுவாகப் பகிரப்படும் அரசியல் விஷயங்கள் இப்போது கல்லூரியில் மாணவர்கள் இடையேயும் வழக்கத்துக்கு விரோதமாகப் புழங்கிக் கொண்டிருந்தது. ஆனால் கல்லூரியில் அதிகம் சப்தம் எழுப்பாமல் ஒரு மாதிரி முணுமுணுப்பாகப் பேச்செல்லாம் வெளிப்படுவதே அவற்றின் தீவிரத் தன்மையைப் பெருக்கிக் காட்டிற்று என்று ராமபத்திரன் நினைத்தான்.
அவன் வீட்டிலிருந்து சைக்கிளை உருட்டிக் கொண்டு பஸ் ஸ்டாப் அருகே வந்தான். அங்கிருந்த கடையில் ஒரு அசோகாவை வாங்கிப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டான். அப்போது ஸ்டாப்பில் வந்து ஒரு பஸ் நின்றது. “கல்லறைக்குப் போக வேண்டியவங்கள்லாம் இறங்குங்க!” என்று பஸ் உள்ளிருந்து கண்டக்டர் சத்தம் போடும் குரல் கேட்டது. பஸ்ஸிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த ஒரு பெரியவர் “கல்லறை ஸ்டாப்புன்னுதான் சொல்லும்லே. இயேசு அழச்சிட்டு போறதுக்கு மின்னே நீயே டிக்கட் குடுக்கேன்னு சொல்லுதியே!” என்றார். பஸ்ஸின் உள்ளே இருந்தவர்களும், வெளியே ஸ்டாப்பில் நின்றவர்களும் சிரித்தார்கள். ராமபத்திரனும் சிரித்தபடி சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
போகும் போது உலகம் வழக்கம் போல நடமாடுவது போலத்தான் இருந்தது. டி.வி.எஸ்.பஸ்களில் கூட்டம் நிரம்பியிருந்தது என்றாலும் ஃபுட்போர்டில் மனிதக் கால்கள் எதுவும் தெரியாத ஒழுங்கு இருந்தது. ரயில் வரப் போகிறதென்று மீனாட்சி மில் ரயில்வே கேட்டு சார்த்தியிருந்தான். ராமபத்திரன் அங்கு நின்றிருந்த பல சைக்கிள்களுடன் சேர்ந்து நின்றான். ஒரு சைக்கிளின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் ‘தமிழ்நாடு’ படித்துக் கொண்டிருந்தார்.
வழக்கத்துக்கு விரோதமாக கூட்ஸ் வண்டி சீக்கிரம் வந்து விட்டது. அது கேட்டைக் கடந்து சென்றதும் திறந்து விடப்பட்ட வெளியில் வாகனங்கள் விரைய ஆரம்பித்தன.
ராமபத்திரன் கல்லூரியை நெருங்கும் போது மாணவர்கள் கூட்டம் வாசலை அடைத்துக் கொண்டு கும்பல் கும்பலாக நிற்பதைப் பார்த்தான். போலீஸ் தலைகளும். சற்றுத் தொலைவில் இரு போலீஸ் வண்டிகள் அங்கு நின்றிருந்தன. அவன் சைக்கிளிலிருந்து இறங்கித் தள்ளிக் கொண்டு வாசலருகே சென்றான். மெதுவாக நகர்ந்து வழி விட்டார்கள். “சீக்கிரம் வண்டிய உள்ள வச்சிட்டு வா” என்று ஆறுமுகத்தின் குரல் கேட்டது. அவன் வகுப்பில் படிக்கிறான். நெருங்கிய தோழன் ராமபத்திரன் காலேஜின் உள்ளே புகுந்தான். திரும்பிக் கூடப் பார்க்க முடியாமல் அவன் நகர நகர அந்த இடைவெளி இடத்தைக் கூட்டம் அடைத்துக் கொண்டது. அடர்ந்த மரங்களுக்கிடையே கல்லூரி இருந்தது. அவன் அலுவலக வளாகத்தின் இடது புறம் சென்ற பாதையின் உள்ளே சைக்கிளைத் தள்ளிக் கொண்டு சென்றான்.
ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு வெளியே வந்த போது சில மாணவர்கள் கல்லூரி வாசலை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார்கள். ராமபத்திரனைப் பார்த்தவர்கள் “சீக்கிரம் வா” என்று கத்திக் கொண்டே ஓடினார்கள். அவனும் அவர்களுடன் சேர்ந்து ஓடினான். வாசலை நெருங்கும் போது பெருத்த குரலோசையுடன் ”இந்தி ஒழிக!” என்றும் “ஹிந்தி ஹிந்தி டெளன் டெளன்!” என்றும் கோஷங்கள் காற்றைக் கிழித்துக் கொண்டு வந்தன.
மாணவர்களில் பலர் கறுப்பிலும் சிவப்பிலும் கோஷங்கள் எழுதப்பட்ட தட்டிகளையும் கம்புகளையும் ஏந்தி இருந்தனர். உணர்ச்சிகளால் கட்டப்பட்ட முகங்களும் உடல் மொழிகளும் கண்ணுக்கெட்டிய வரை தெரிந்த கூட்டத்தில் மின்னிக் கொண்டிருந்தன.
மாணவர்கள் கடல் அலைகளைப் போல முன்னால் மிதந்து சென்றனர். வழியில் அவர்களுடன் பொதுஜனங்களில் பலரும் சேர்ந்து கொண்டதை ராமபத்திரன் கவனித்தான். மேலே செல்லச் செல்ல குரல்களின் வலிமை மிகுந்து கொண்டே வந்தது. “இந்தி அரக்கியை ஒழிப்போம்”, “ஹிந்தி நெவர். இங்கிலிஷ் எவர்”, “பக்தவத்சலம் குரங்கு, பதவியை விட்டு இறங்கு!” என்று புதுப் புது கோஷங்களாகக் கிளம்பி வந்து கொண்டேயிருந்தன.
திலகர் திடலில் நடைபெறப் போகிற கூட்டத்துக்கு மாணவர்கள் அணிவகுத்துச் சென்றார்கள். திண்டுக்கல் ரோடைக் கடக்கையில் ராமபத்திரன் தன் வலது தோளில் ஒரு கை விழுவதை உணர்ந்து திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்.
ஆறுமுகம். கூட்டத்தின் முன் வரிசையில் சென்று கொண்டிருந்த அவன் எங்கே இங்கே வந்தான் என்று ராமபத்திரன் ஆச்சரியத்துடன் நினைத்தான்.
ஆறுமுகம் தன் உதட்டில் கை வைத்து ராமபத்திரனைப் ‘பேச வேண்டாம்’ என்று எச்சரித்து விட்டு அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மெதுவாக வலது பக்கம் நகர்ந்தான்.இருவரும் சாலையின் வலது கோடியை நோக்கி ஊர்ந்து சென்றார்கள். பின்னால் வந்தவர்களை முன்னால் செல்ல அனுமதித்தபடியே ஆறுமுகம் வலது பக்க ஓரத்தை அடைந்தான். சில நிமிஷங்கள் கூட்டத்தோடு மெல்ல நடந்து ஆறுமுகம் கூட்டத்திலிருந்து விலகினான். ராமபத்திரன் அவனைத் தொடர்ந்து சென்று அவனருகில் நின்று கொண்டான். சில நிமிஷங்களில் கூட்டம் மேலேறிச் செல்ல அவர்கள் தெரு ஓரத்தில் நின்றார்கள்.
“வா, நாம வீட்டுக்குப் போவோம்” என்றான் ஆறுமுகம்.
ராமபத்திரன் ஒன்றும் புரியாமல் விழித்தான்.
“பெரிய கலாட்டா வரும் போல இருக்கு” என்றான் ஆறுமுகம்.
“என்னது?” என்று கேட்டபடி ராமபத்திரன் ஆறுமுகத்துடன் சேர்ந்து நடந்தான்.
“நான் முன்னாலே போயிட்டிருந்தேன்லே. என் கூட பக்கத்திலே நம்ம காலேஜ் யூனியன் லீடர் சோணமுத்து பேசிட்டே வந்தான்.. காங்கிரஸ்காரங்க ரொம்ப வெறுப்புல இருக்காங்க. வடக்கு மாசி வீதி காங்கிரஸ் ஆபீஸ் கிட்டே காங்கிரஸ்காரங்க கூட்டம் ரொம்ப ஜாஸ்தியா இருக்குன்னும் அவங்க இந்த ஊர்வலத்தை எப்படியாவது கலைச்சிர்ரதா இருக்காங்கன்னும் சொன்னான். அப்ப பக்கத்தில வந்துட்டிருந்த ஜகதீசன் ‘கலாட்டான்னா? அடிதடியா?’ன்னு கேட்டான். உடனே சோணமுத்து ‘ஆமா. ஆனா நாங்களும் தயாராதானே வந்திருக்கோம்’னு சொல்லி சட்டையைத் தூக்கிக் காமிச்சான். பளபளன்னு வீச்சரிவாளு. அவன் பக்கத்தில இருந்த பி.எஸ்.சி. பசங்க ரெண்டு பேரும் அவங்ககிட்ட இருந்த கத்தியக் காமிச்சாங்க. தெரிஞ்சே போயி ஏன் கலாட்டால மாட்டிக்கணும்னுதான் திரும்ப வந்திட்டேன்” என்றான் ஆறுமுகம்.
அப்போது அவர்களுக்குப் பின்னால் பெரும் ஆரவாரம் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். தலை தெறிக்க ஆட்கள் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து விட்டு ஆறுமுகம் “ராமு, ஓடு, ஓடு” என்று கத்திக் கொண்டே ஓட ஆரம்பித்தான். இப்போது அவர்களுக்கு முன்னாலும் ஆட்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
ராமபத்திரன் ஆறுமுகத்தைத் தேடியபடியே ஓடினான். தூரத்தில் அவன் சுப்பிரமணியபுரம் குருகுலம் பள்ளிக்குப் பக்கத்தில் இருந்த சந்தில் திரும்புவதைப் பார்த்தான். ராமபத்திரன் முதலில் தானும் அவனைப் பின்பற்றலாம் என்று நினைத்தான். அப்போது சைக்கிளின் நினைவு வந்தது. அதை எடுத்துக் கொண்டு காலேஜின் பின் பக்கம் சென்று போடி ரயில்வே லைனை ஒட்டிய பாதையில் யார் குறுக்கீடும் இன்றி வீட்டுக்கு ஓடி விடலாம் என்று தோன்றியது. அவன் காலேஜ் விளையாட்டு மைதானத்தை அடைந்து மேற்கு ஓரமாக ஓடிய சிறு பாதையில் வேகமாக ஓடினான். ஒரு கட்டத்தில் யாரும் பின்னால் ஓடிவரும் சத்தம் கேட்கவில்லை. அவன் திரும்பி ஒரு முறை பார்த்து விட்டு நடக்க ஆரம்பித்தான்.
சைக்கிளை எடுத்துக் கொண்டு மாணவர் விடுதிகள் இருந்த பக்கம் போனான். வழியில் ஒரு பூச்சி கூட நடமாடவில்லை. அப்பாவும் அம்மாவும் கவலைப்படுவதற்கு முன்பே வீட்டை அடைந்து விட வேண்டும் என்று தோன்றியது. அவன் கல்லூரியின் எல்லைச் சுவரை நெருங்கினான். அங்கு வெளியூரிலிருந்து ரயிலில் வரும் மாணவர்களும் நைட் ஷோ பார்க்கச் செல்லும் விடுதி மாணவர்களும் கல்லூரிக்குள் வந்து போக ஓர் ஒற்றையடிப் பாதை செய்து வைத்திருந்தார்கள். அதை நெருங்கும் போது அவன் பார்வை வலது பக்கம் கட்டப்பட்டுக் கொண்டிருந்த கட்டடத்தின் மேல் சென்றது. திடீரென்று அவன் பார்வை ஓரிடத்தில் நிலை குத்தி நின்றது. யாரோ ஒருவன் செங்கல்களும் மணல் குமிப்புகளும் பரந்திருந்த தரையில் விழுந்து கிடந்தான். ராமபத்திரன் அதிர்ச்சியுற்று சைக்கிள் ஸ்டான்டைப் போட்டு விட்டு அந்த இடத்தை நோக்கி விரைந்து யார் என்று பார்த்தான்.
ஒண்டிவீரு. ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் அவன் வகுப்பு மாணவன்.
ராமபத்திரன் சுற்றும் முற்றும் திரும்பி நோக்கினான். முன்னைப் போலவே கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரையில் மனித நடமாட்டத்தையே காணோம். மர இலைகள் காற்றிலாடும் சத்தமும், தூரத்தில் எங்கோ ஒரு மெஷின் தடதடக்கும் ஓசையும் கேட்டன. ஒண்டிவீருவின் உடலில் எறும்பு வரிசை ஒன்று நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. ராமபத்திரன் பதறிப் போய் இரு விரல்களால் அந்த வரிசையைக் கலைத்தான். எறும்புகள் சிதறி ஓடி மறைந்தன. ஒண்டிவீருவின் நெஞ்சு மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.
ராமபத்திரன் அந்தக் கட்டட வாசல் அருகே சென்றான். உள்ளே ஒரு பெரிய தகர டிரம்மைச் சுற்றி நீர் வடிந்து கிடந்தது. டிரம்மில் ஒரு தகரக் குவளை மிதந்து கொண்டிருந்தது. அவன் நீரைச் சேந்திக் கொண்டு ஒண்டிவீரு படுத்திருந்த இடத்தை, குவளையிலிருந்த நீரை எடுத்துச் சற்றுப் பலமாக ஒண்டிவீருவின் முகத்தில் அடித்தான். இன்னொரு முறை அதையே திரும்பச் செய்தான். இப்போது படுத்திருந்தவனின் முகத்திலும், உடலிலும் அசைவு ஏற்பட்டது. ஒண்டிவீரு கண்ணைத் திறந்து பார்த்து மலங்க மலங்க விழித்தான். அவன் பார்வை ராமபத்திரன் மீது நின்றது. மெல்லிய முனகலாகத் “தண்ணீ, தண்ணீ” என்றான். ராமபத்திரன் குவளையை எடுத்து அவன் வாயில் சாய்த்தான். அவன் மெதுவாக நீரைப் பருகினான்.
ஐந்து நிமிடங்கள் சென்றன. ஒண்டிவீரு எழுந்திருக்க முயன்று முடியாமல் படுத்து விட்டான். “வலி கொல்லுது” என்று கையால் வலது காலைக் காட்டினான். ராமபத்திரன் பார்த்த போது கால்சட்டை கிழிந்திருந்தது. ஒண்டிவீரு அணிந்திருந்த கால்சட்டையில் ரத்தக்கறை காணப்பட்டது.கிழிந்த இடத்தில் ரத்தம் உறைந்திருந்தது. அதை ராமபத்திரன் தொட்ட போது விரல் தோலுக்குள் சர்ரென்று இறங்கி ரத்தம் கசிய ஆரம்பித்தது. ஒண்டிவீரு “ஐயோ!” என்று கத்தினான்.ராமபத்திரன் கர்சீப்பை எடுத்து ரத்தம் கசியும் இடத்தில் வைத்து அழுத்திக் கொண்டான்.
“வெட்டிட்டாங்க” என்றான் ஒண்டிவீரு.
ராமபத்திரன் திடுக்கிட்டான். “என்னது?”
ஒண்டிவீரு பேசாமலிருந்தான்.
“யாரு? யாரு வெட்டினாங்க? எதுக்கு வெட்டினாங்க? நீ எங்கே போனே?” என்று கேட்டான் ராமபத்திரன்.
ஒண்டிவீரு பதிலளிக்காமல் கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தான். ஆனால் வலியினால் அவன் முகம் நெளிந்தது.
“இதப் பாரு. நீ பதில் ஒண்ணும் சொல்லாட்டா, நானும் கிளம்பிப் போயிட்டே இருப்பேன்” என்றான் ராமபத்திரன்.
“திடீர் நகர்ல கலாட்டால மாட்டிகிட்டேன்” என்றான்
“என்ன ஆச்சு? யாரு வெட்டினாங்க?” என்று கேட்டான் ராமபத்திரன்.
“எங்காளு வீட்டில.”
ராமபத்திரனுக்கு ஒண்டிவீருவின் லீலைகள் பற்றித் தெரியும். அவர்கள் வகுப்பில் அவன் பலருக்கு டான் ஜுவான் ! படிப்பைத் தவிர அவன்
எல்லா விஷயத்திலும் சூரன். மாணவர் சங்கத் தேர்தலுக்கு நிற்க மாட்டான். ஆனால் அவன் கேன்வாஸ் செய்பவன்தான் வெற்றி பெறுவான். சேர்ந்தாற் போல் நாலைந்து நாட்கள் அவன் வகுப்புக்கு வந்தால் ஆறாம் நாள் மதுரை மாநகரத்தை மூழ்கடிக்கும் மழை வந்து விடும்.
“சரி, வா போகலாம்” என்றான் ராமபத்திரன்.
“என்னாலே நிக்க முடியும்னே தோணலே.”
ராமபத்திரன் சைக்கிளை நிறுத்தியிருந்த இடத்திற்குச் சென்று அதை எடுத்துக் கொண்டு வந்து ஒண்டிவீருவின் அருகில் நிறுத்தினான். “நீ கேரியரிலே உக்காந்துக்கோ” என்றான்.
பிறகு அவன் ஒண்டிவீருவை பிரம்மப் பிரயத்தனம் செய்து நிற்க வைத்தான். ஒண்டிவீருவின் பின் பக்கம் சென்று ராமபத்திரன் தன் இரு கைகளையும் அவனது தோள்களுக்கு அடியில் கொடுத்து சைக்கிளில் ஏற்றினான். ஒண்டிவீரு கிண்டனாயிருந்ததால், அவனது உடல் கனத்தை மிகுந்த சிரமத்துடன்தான் ராமபத்திரனால் தாங்கிக் கொண்டு ஏற்ற முடிந்தது.
“என்ன ஒரு ஆள் மூஞ்சி கூடக் காணோம்?” என்று ஒண்டிவீரு கேட்டான்.
ராமபத்திரன் இந்தி எதிர்ப்புப் போராட்டக் கூட்டத்தில் சென்றதையும் வழியில் ஏற்பட்ட கலவரத்தையும் சொன்னான். “ஒவ்வொருத்தனும், கத்தி கபடான்னு போருக்குப் போகற மாதிரி வெறி பிடிச்சு அலையறாங்கன்னு கேள்விப்பட்டு திரும்ப ஓடி வந்திட்டேன்” என்றான். தொடர்ந்து ”மெயின் ரோடுலே இப்ப நாம போக முடியாது. திடீர்நகர் வழியாதான் போயி பஸ்டாண்டைத் தாண்டி மேல வெளி வீதில இருக்கற கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்குப் போகணும். இன்னிக்கி நடக்கற கலாட்டால பிரைவேட் டாக்டர்லாம் கிடைக்க மாட்டாங்க” என்றான்.
“ஐயோ, திடீர் நகரா? அவுங்க கண்ணுல பட்டேன்னா செத்தேன்” என்றான் ஒண்டிவீரு.
“ரிஸ்க் எடுத்துதான் போகணும். வா. போகலாம்” என்று அவனுக்கு அணைப்பாகத் தனது வலது தோளைக் கொடுத்தபடி ராமபத்திரன் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு சென்றான். தள்ளுவதற்கு மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது. பற்களைக் கடித்துக் கொண்டு வலியைப் பொறுத்த வண்ணம் ஒண்டிவீரு சைக்கிள் சீட்டின் மீது முகத்தை வைத்துக் கொண்டு வருவதை ராமபத்திரன் பார்த்தான்.
கல்லூரியின் பின் கேட்டு வழியே நகரத்துக்குள் செல்ல உபயோகிக்கப்படும் திடீர் நகர்க் குப்பத்தில் நுழைந்து ராமபத்திரன் சென்றான். ஆண்டாண்டு காலமாக ஏழைகள் குடியிருக்கும் சொர்க்கம் என்று திடீர் நகர்க் கந்தல் குடிசைகளும் அழுக்கும் தெரிவித்தன. அவர்கள் இருவரையும் குடிசைகளின் வாசலில் உட்கார்ந்திருந்த பெண்கள் வியப்புடன் பார்த்தார்கள். இருபுறக் குடிசைகளுக்கு நடுவே கால் வைத்துச் செல்ல முடியாத பாதையும், அதில் அலையும் குழந்தைகளும், ஓடும் சாக்கடைகளும் இருந்தன. மூச்சைப் பிடித்தபடி ராமபத்திரன் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு போனான்.
எதிர்பார்த்தாற் போல மேல வெளி வீதி மெயின் ரோடு ஒரு களேபரமாக இருந்தது. கடைகளை மூடிக் கொண்டிருந்தார்கள். சாலையில் போலீஸ் வேன்களும் கார்களும் சுற்றின. ஜனங்கள் வேக வேகமாக நடந்தும் ஓடிக்கொண்டும் இருந்தார்கள். தங்களைப் பார்த்து யாரும் நிறுத்தி விடக் கூடாதே என்ற கவலையுடன் ராமபத்திரன் சைக்கிளை சற்று வேகமாகத் தள்ளிக் கொண்டு போனான். அதை உணர்ந்தது போல வலியைப் பொறுத்துக் கொண்டு சீட்டிலிருந்து தலையைத் தூக்கி சற்று நிமிர்ந்தபடி உட்கார்ந்து கொண்டு வந்தான் ஒண்டிவீரு.
ரீகல் தியேட்டர் வாசலிலிருந்து பெரும்பாலான வயதானவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். பகலில் லைப்ரரியாகவும் மாலையில் சினிமா தியேட்டராகவும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடம் அது. லைப்ரரியை மூடிக் கொண்டிருக்கிறார்கள் போலும். அப்போது அங்கிருந்து ஒரு லாம்பரட்டா ஸ்கூட்டர் வெளியே வந்தது. ராமபத்திரன் அருகில் வந்து நின்றது. தன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது யாரென்று பார்த்தான். மருந்துக் கடை பகவான். அவர்கள் குடும்பத்துக்கு இரண்டு தலைமுறையாக மருந்து சப்ளை செய்யும் கடையின் சொந்தக்காரன்.
“எங்கப்பாவை காலேல லைப்ரரிக்குக் கொண்டு வந்து விட்டேன். கலாட்டாவா இருக்கேன்னு இப்ப வந்தா, அவர் யாரோ சிநேகிதர் கார்ல போயிட்டாராம். என்னடா ராமா நீ எப்படி இங்க ? இப்பிடி முக்கி முனகிட்டு எங்க போறே?” என்று கேட்டபடி பகவான் ஒண்டிவீருவைப் பார்த்தான்.
ராமபத்திரன் ஒண்டிவீருவின் காலில் அடிபட்டிருப்பதைச் சொல்லிக் காயத்தைக் காண்பித்தான். “இந்த ரோடில இருக்கிற கவர்மெண்ட் கிளினிக்குக்குதான் போறேன் “ என்றான்.
“அங்கே நீ இவனைக் காமிச்சு ட்ரீட்மெண்ட் வாங்கறதுக்குள்ள, காலை வெட்டுற லெவலுக்கு காயம் மோசமாயிடும்.” என்றான் பகவான்.
ராமபத்திரன் திகைத்தான்.
“நா ஒண்ணு செய்யறேன். உன் பிரெண்டை ஸ்கூட்டர்ல வச்சு எர்ஸ்கினுக்கு கூட்டிட்டு போறேன். அங்கே எல்லாரும் நமக்குத் தெரிஞ்சவங்கதானே? நீ இப்ப வீட்டுக்குப் போயிட்டு சாயந்திரம் ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பாரு” என்றான். இருவருமாகச் சேர்ந்து ஒண்டிவீருவை சைக்கிளிலிருந்து இறக்கி ஸ்கூட்டரின் பின் சீட்டில் உட்கார வைத்தார்கள். பிறகு பகவானும் ஒண்டிவீருவும் அவனுக்குக் கையசைத்து விட்டுச் சென்றார்கள்.
அன்று மாலை பகவான் ராமபத்திரனிடம் வந்து அவனது நண்பனை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டதாகவும் அவனது உடல் நலம் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும் சொன்னான். மறுநாள் குடியரசு தினத்தன்றும் அதற்கடுத்த சில நாள்களும் அவனால் வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியவில்லை. நகரம் கொந்தளிப்பான நிலைமையில் உள்ளதென்று வானொலியில் அடிக்கடி சொன்னார்கள்.
ஒரு வாரம் கழித்து காலேஜ் திறந்து ராமபத்திரன் சென்றபோது வகுப்பில் ஒண்டிவீருவைக் காணவில்லை. மாலையில் அவனது அறை நண்பனைச் சந்தித்த போது அவன் தனக்கும் அவனைப் பற்றி ஒன்றும் தெரியாது என்றான். ஆண்டு இறுதித் தேர்வுக்கும் ஒண்டிவீரு வரவில்லை. அதற்கடுத்த சில மாதங்களில் ராமபத்திரன் தில்லிவாசியாகி விட்டான்.
*
அங்கிருந்த கூட்டத்தில் சிறிய சலசலப்பு ஏற்பட்டது. “தலீவர், தலீவர்” என்று முணுமுப்புகள் எழுந்தன. அப்போது வாசலில் அந்த மனிதர் வந்து நின்றார்.கரை போட்ட வெள்ளை வேஷ்டி, வெள்ளைச் சட்டை, தோளில் மஞ்சள் துண்டு என்று நின்ற கம்பீர உருவத்தை ராமபத்திரன் பார்த்தார்.
அவரது பக்கத்தில் நின்ற செயலர் இளைஞனிடம் “டேய் முத்து, எங்கடா அவரு?’ என்று கணீர்க்குரலில் கேட்டார்.
முத்து பாய்ந்து வந்து “ஐயா வாங்க, வாங்க “ என்று ராமபத்திரனைக் கூட்டிக் கொண்டு போனான். அவன் கையில் லேசான நடுக்கம் இருந்தது.
ராமபத்திரனைப் பார்த்து அழகரசன் புன்னகை செய்து அருகில் வந்து கட்டிக் கொண்டார். மற்றவர்கள் அவர்களைப் பார்த்த பார்வையில் மரியாதை நிரம்பி வழிந்தது. இந்த எதிர்பாராத வரவேற்பைக் கண்டு ராமபத்திரனுக்குக் கொஞ்சம் கூச்சம் ஏற்பட்டது.
“நல்லா இருக்கியா ராமு?” என்று கேட்டபடி அழகரசன் ராமபத்திரனுக்கு முன்னால் சென்றார். அவருக்கும் முன்னால் அந்த இளைஞன் வேகமாகச் சென்று அழகரசனின் அறை வாசலைத் திறந்து கொண்டு நின்றான்.
“ஏண்டா இவரை வந்த உடனேயே உள்ளே கூட்டிட்டு வரலே?” என்றவர்,
ராமபத்திரனைப் பார்த்து “இந்த வெளக்குமாறு என் தங்கச்சி மகன்” என்றார். முத்துவிடம், “இவரில்லாட்டா ஒன் மாமன் நொண்டியாப் போயிருப்பான் . இந்த மாதிரி வீடு வெளிச்சம் எல்லாம் உனக்கும் கெடச்சிருக்காது, தெரியுமாடா? சரி, உள்ள போயி சாப்பிடறதுக்கும், குடிக்கிறதுக்கும் எடுத்திட்டு வா” என்று சொல்லி விட்டு ராமபத்திரனைக் கூட்டிக் கொண்டு தனது அறைக்குள் நுழைந்தார்.
அறையில் ஏசியின் குளுமை நிறைந்திருந்தது. இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள். தரை முழுதும் கம்பள விரிப்பு, விலை உயர்ந்த இருக்கைகள், அழகிய திரைச் சீலைகள், அழகரசனின் இருக்கைக்குப் பின்னால் கட்சியின் பெருந் தலைவர் முகம் தெரியும் படம் ஆகியவை ராமபத்திரனின் பார்வையில் பட்டன. அழகரசனின் கழுத்திலும், கைகளிலும் தங்கம் பளீரிட்டது. அரசியல் அனுபவம் ஒரு காலத்தில் கொத்தாகக் கிடந்த தலைமுடியைச் சாப்பிட்டு விட்டது போல வழுக்கை மின்னிற்று. ஆனால் ஆகிருதி மட்டும் அதே கிண்டன் உடம்பாகத்தான் பொலிந்தது.
“நாம பாத்து அம்பது வருஷம் இருக்குமா?” என்று கேட்டார் அழகரசன்.
“சரியா அம்பத்தஞ்சு வருஷம்” என்று ராமபத்திரன் சிரித்தார்.
“ஆனா, மொகமும், ஒடம்பும் உன் வயசுக்கு சவால் விட்டுகிட்டு இருக்கற மாதிரி இல்லே கட்டுமஸ்தா நீ இருக்கே?” என்று சிரித்தார் அழகரசன்.
“நீயும் லைஃபிலே இவ்வளவு சக்ஸஸ்ஃபுலா இருக்கறதைப் பாத்து எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீ பாட்டுக்கு கடைசி வருஷப் பரீட்சை கூடக் கொடுக்காமப் போயிட்டியேன்னு நான் ரொம்ப நாள் நினைச்சிட்டிருந்தேன். படிச்சு வர்ற கௌரவமும் அந்தஸ்தும்தான் உன்னைத் தேடி வந்திருச்சே !” என்றார் ராமபத்திரன்.
அப்போது அழகரசன் மேஜை மீதிருந்த கைபேசி ஒலித்தது. அவர் ராமபத்திரனிடம் ‘ஒரு நிமிஷம்’ என்று சைகை காட்டி விட்டுப் பேச ஆரம்பித்தார்.
“எப்பண்ணே ஊர்லேந்து வந்தீங்க? சவுக்கியம்தானே?”
“…”
ஆமா. நான் வந்து பாக்கறதா சொல்லியிருந்தேன். இன்னிக்கி என்னோட பழைய தோஸ்த் ஒருத்தர் வந்திருக்காரு.நான் மதுரைலே காலேஜில படிக்கிறப்போ இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடந்து அதிலே எனக்கு அடிபட்டப்போ இந்த ஃபிரெண்டுதான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு ஓடினாரு. ரொம்ப நல்ல மனுஷன். அன்னிக்கி கலாட்டால ஒரு காங்கிரஸ்காரன் அவன் கையிலே வச்சிருந்த வெட்டரிவாளை எடுத்து என்னோட காலைச் சேத்து வெட்டினான் பாருங்க. கொத கொதன்னு ரத்தம் பீச்சி அடிச்சி, நான் மயக்கமாயி கீழே விழுந்துட்டேன். அப்ப இவருதான் அவ்வளவு கலாட்டாலையும் தைரியமா என்னை ஒரு சைக்கிள் பின்னாலே வச்சு ஆஸ்பத்திரில கொண்டு போய் அட்மிட் பண்ணி… அதுக்கப்புறம் வெவரம் தெரிஞ்சு மதுரையோட கட்சிச் சொத்து ஆஸ்பத்திரிக்கு வந்து என்னையும் இன்னும் ரெண்டு அடிபட்ட தோழர்களையும் பாத்தாரு. தமிழுக்காக நான் வாங்கின அடி அது.”
அழகரசன் குரலில் வழிந்த உணர்ச்சியும் உண்மையையும் ராமபத்திரன் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.