
‘தமிழகத்திற்கும் தமிழ்த் தாய்க்கும் தொண்டு புரிவதென்ற நோக்கத்துடன் வெளிவந்துள்ள பல பத்திரிகைகள் இருக்கையில் ‘நானும் அத்தொண்டில் சேருவேன்’ என்று தீர்மானம் கொள்வதே அதிகத் துணிவு என்று நினைத்தல் கூடும். ஆயினும் ராமன் சேதுபந்தம் செய்யும் காலத்தில் ராமசேவையில் ஈடுபட்டு, ஒரு சிறிய கல்லை வெகுப் பிரயாசையோடு கொண்டு வந்து சேர்த்த அணிலின் பக்தியை பரமாத்மா பெரிதாகக் கொள்ளவில்லையா? அவ்வாறே தேசத்தொண்டு தமிழன்னையின் ஒவ்வொரு புதல்வனும் கைப்பற்ற வேண்டிய தர்மம் என்று கருதி, ‘பாரத மணி’ தன்னால் இயன்றதைச் செய்ய வெளிவந்திருப்பதால் தமிழ் மக்களின் பூரண ஆதரவைப் பெரும் என்று நம்புகிறோம்.’
இப்படி நம்பிக்கையோடு குறிப்பிட்டு, அக்டோபர் 2, 1938ல் ‘பாரத மணி’ இதழைத் தொடங்கியவர் காவிரிப்பூம்பட்டினம் சித்தாந்த வேங்கடரமணி எனும் கா.சி.வேங்கடரமணி.
இவர், காவிரிப்பூம்பட்டினத்தில், 1891ல், சித்தாந்த ஐயருக்கும் யோகாம்பாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை பிரிட்டிஷ் அரசாங்கத்தில் சுங்க வரி அதிகாரி. அவர் பணி நிமித்தம் பல்வேறு இடமாறுதல்களை எதிர்கொண்டதால், பல்வேறு ஊர்களில் வேங்கடரமணியின் இளமைப்பருவம் கழிந்தது. ஆரம்பக் கல்வியை திருப்போரூரில் பயின்றார். உயர்நிலைக் கல்வி மயிலாடுதுறை நேஷனல் உயர்நிலைப் பள்ளியில். பள்ளியில் படிக்கும்போதே பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் ஆகிவிட்டார். இதை நினைவுகூரும் ரமணி, ‘பள்ளிச் சிறுவனாக இருக்கும் போதே ஒரு பேச்சாளனாகவும் எழுத்தாளனாகவும் ஆனேன். வங்கப் பிரிவினையை எதிர்த்துப் பள்ளி மாணவர்கள் செய்த போராட்டத்தில் என் கன்னிப் பேச்சு நடைபெற்றது. என் முதற் கட்டுரை. மாயவரம் நகராட்சியினரின் திறமையற்ற ஊழல் நிறைந்த ஆட்சி முறையைக் கண்டித்து எழுதப்பட்டதாகும். இவையெல்லாம் 1907லும் 1908-லும் நடந்தவை’ என்கிறார்.
மாயவரம் நகரசபை ஊழல் குறித்து ‘இந்தியன் பேட்ரியட்’ பத்திரிகையில் இவர் எழுதிய கட்டுரை பலத்த சர்ச்சையைத் தோற்றுவித்தது. நகர சபையைத் சேர்ந்த அதிகாரிகள் அதை எழுதியது பள்ளியின் ஓர் ஆங்கில ஆசிரியர் என்று கருதி பள்ளிக்கு வந்து அவரை மிரட்டினர். அவரோ, ‘எனக்கு இவ்வளவு அழகாக ஆங்கிலத்தில் எழுத வராது. நான் எழுதவில்லை’ என்று கெஞ்சியும் விடவில்லை. இறுதியில் மாணவராக இருந்த வேங்கடரமணி எழுந்து உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. அது முதல் பள்ளியின் ‘ஸ்டார்’ மாணவர் ஆனார் ரமணி. பள்ளிப்படிப்பை முடித்தபின் சென்னை கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். சட்டமும் பயின்று தேர்ந்தார். அக்காலத்தின் புகழ்பெற்ற வழக்குரைஞர், சர்.சி.பி. ராமசாமி ஐயரிடம் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். சில வழக்குகளில் வாதாடினார் என்றாலும், ‘வக்கீல்’ தொழில் அவர் மனதைக் கவரவில்லை. கலை உள்ளம் கொண்டிருந்த ரமணி, வழக்குரைஞர் தொழிலை விட்டுவிட்டு எழுத்துப் பணியில் ஈடுபட ஆரம்பித்தார். ஆங்கிலப் பத்திரிகைகள் சிலவற்றிற்கு கதை, கட்டுரைகளை எழுதி அனுப்பினார். ‘லண்டன் டைம்ஸ் லிடரரி சப்ளிமெண்ட்’ இதழில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. அவர் லண்டனுக்குச் செல்வதை அவரது தாய் விரும்பவில்லை என்பதால் அந்த முயற்சியைக் கைவிட்டார்.
சிறு வயதில் தான் வாழ்ந்த இனிமையான கிராமத்து வாழ்க்கை எப்போதும் அவர் மனதில் நிரம்பியிருந்தது. தனது கிராமத்தையும், அங்கு வாழ்ந்த எளிய மனிதர்களையும் மையமாக வைத்து ஆங்கிலத்தில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். ‘தி மெட்ராஸ் மெயில்’, ‘தி ஹிந்து’, ‘திரிவேணி’ போன்ற இதழ்களில் அவை வெளியாகின. அவற்றில் சிலவற்றைத் தொகுத்து ‘Paper Boats’ என்ற தலைப்பில், 1921ல் ஒரு நூலாக வெளியிட்டார். அதுதான் வேங்கடரமணியின் முதல் நூல். அதற்கு முன்னுரை எழுதியவர் டாக்டர் அன்னிபெசன்ட். டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி, டி.டி. கிருஷ்ணமாசாரி போன்றோர் ரமணியின் எழுத்துக்கு ரசிகர்களாக இருந்தனர். அவர்கள் மட்டுமல்ல; மதன்மோகன் மாளவியா, சி.ஆர். ரெட்டி, பாபு பகவன் தாஸ் போன்றோரும் ரமணியை வியந்து பாராட்டினர்.
எழுத்தார்வம் உந்த ஆங்கிலத்தில் ஒரு நாவலை எழுதினார் ரமணி. 1927ல் வெளியான ‘Murugan the Tiller’ என்னும் அந்த நாவல் தான், ஒரு தமிழ் எழுத்தாளரால் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வெளியான முதல் ஆங்கில நாவல். (இவருக்கு முன்பே பி.ஆர். ராஜம் ஐயர் ‘True Greatness or Vasudeva Sastry’ என்ற நாவல் தொடரை 1896ல், ‘பிரபுத்த பாரதா’வில் எழுதியிருந்தாலும் அது அவரது மறைவால் சில அத்தியாயங்களோடு நின்று விட்டது. முற்றுப்பெறவில்லை) இந்திய அளவில் ஆங்கிலத்தில் நாவல் எழுதிய இரண்டாவது எழுத்தாளர் கா.சி.வேங்கடரமணி. (முதல் நாவல் எழுத்தாளர்: பங்கிம் சந்திர சட்டர்ஜி, ராஜ்மோகன்ஸ் வொய்ஃப், 1864) முல்க்ராஜ் ஆனந்த், ஆர்.கே.நாராயணன் போன்றவர்கள் வேங்கடரமணிக்குப் பின்னால்தான் எழுத வந்தனர்.
வேங்கட ரமணியின் நாவலுக்கு ஐரோப்பியர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. வில்லியம் ஆர்தர், ஃப்ரெடரிக் ஹாரிஸன், ஈ.வி. லூகாஸ், கில்பர்ட் மூர்ரே, லார்டு ஹால்டேன், ஜி.டி. காரட், ஹேமில்டன் ஃபிஃப், கேப் அர்கஸ், ஜே.ஏ. ஸ்பெண்டர் போன்ற வெளிநாட்டவர்கள் வேங்கடரமணியின் படைப்புகளை, அவரது ஆங்கிலமொழி மேதைமையை வெகுவாகப் பாராட்டினர். கடிதங்களும் எழுதினர். 1928ல், சாந்திநிகேதனுக்குச் சென்று ரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்தார் ரமணி. அது அவரது வாழ்வின் திருப்புமுனை ஆனது. ‘என்னதான் ஆங்கிலத்தில் புலமைபெற்று நீங்கள் கதைகள் எழுதினாலும், ஒருவர் தன் தாய்மொழியில் எழுதுவதுதான் முக்கியம். அது மிக அவசியமும் கூட’ என்று தாகூர் வலியுறுத்தினார். ரமணியின் உள்ளத்தில் அது ஆழப் பதிந்தது.
சென்னைக்குத் திரும்பியதும் ‘Murugan the Tiller’ நாவலை, ‘கிருஷ்ணகுமாரி’யைக் கொண்டு தமிழில் மொழிபெயர்த்தார். ‘முருகன் ஓர் உழவன்’ என்ற தலைப்பில் அது, 1928ல் வெளியானது. (கிருஷ்ணகுமாரி என்ற புனைபெயரில் அந்த நாவலை மொழியாக்கம் செய்தவர் அக்காலத்தின் பிரபல எழுத்தாளரான கி.சாவித்திரி அம்மாள். அக்காலத்தின் பிரபல நீதிபதியும், சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரியை நிறுவியருமான ஜஸ்டிஸ் வி.கிருஷ்ணசாமி ஐயரின் மகள் இவர். – கிருஷ்ணசாமியின் குமாரி = கிருஷ்ணகுமாரி – சென்னை மயிலையில் உள்ள சாவித்திரி அம்மாள் ஓரியன்டல் பள்ளி இவரது நினைவில் உருவானதுதான்).
காந்தியக் கொள்கைகளைக் கொண்டிருந்த இந்த நாவலுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. கிராமத்திலேயே பிறந்து, கிராமத்திலேயே வாழும் மனிதர்கள் பிழைப்பிற்காகவும் சமூகச் சூழல் காரணமாகவும் நகர வாழ்க்கைக்கு மாறும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, வாழ்க்கைச் சிக்கல்களை அந்த நாவல் பேசியது. மண்ணின் மணத்தையும் விவசாயிகள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் சிக்கல்களையும், நண்பர்களே ஒருவருக்கொருவர் பகையாய்ப் போகும் சூழலையும் நாவல் காட்சிப் படுத்தியிருந்தது. தஞ்சை மண்ணின் கிராம வாழ்க்கையையும் பண்பாட்டையும் மிக அழகாக இதில் சித்திரித்து இருந்தார் ரமணி.
அந்நாவலைத் தொடர்ந்து தமிழில் சிறுகதைகளை எழுத முற்பட்டார். வேங்கடரமணியின் நண்பரும் ஹிந்து பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தவருமான ரகுநாதன் அக்கதைகளைச் செம்மைப்படுத்தி உதவினார். தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால், ரகுநாதனின் உதவியுடன் ‘தமிழ் உலகு’ என்ற இதழை 1922ல் ஆரம்பித்தார் வேங்கடரமணி. ஆனால், பொருளாதாரச் சிக்கல்களால் அந்த இதழ் 1924ல் நின்று போனது. இந்நிலையில் ‘சுதேசமித்திரன்’ இதழில் எழுதும் வாய்ப்பு அவருக்கு வந்தது. அதில் அவர் தொடராக எழுதியதுதான், முதல் தேசிய இயக்கம் சார்ந்த தமிழ் நாவலாகக் கருதப்படும் ‘தேசபக்தன் கந்தன்’. இதன் முதல் அத்தியாயம், டிசம்பர், 1931 இதழில் தொடங்கியது. ஜூன் 1932ல் இதழோடு முற்றுப்பெற்றது. ஆகஸ்ட் 1932ல், வேங்கடரமணியின் சொந்தப் பிரசுர நிலையமான ‘ஸ்வேதாரண்ய ஆசிரம புத்தக சாலை’ மூலம் இந்நாவல் புத்தகமாக வெளியானது.
இந்நாவலின் முன்னுரையில் ரமணி, ‘தமிழின் முன்னேற்றங் கருதித் தேனீப்போலுழைத்துவரும் என் நண்பர்களான ஸ்ரீமான்கள் P.N.அப்புஸ்வாமி, T.K.சிதம்பரநாத முதலியார், C.R.ஸ்ரீநிவாஸன், R.கிருஷ்ணமூர்த்தி (‘கல்கி’, ஆனந்தவிகடன்) முதலிய சிலர் என்னைத் தூண்டி ஊக்கியதனால் நான் முதன் முதலாக இத் ’தேசபக்தன் கந்தன்’ கதையைத் தமிழில் எழுதலானேன். ஆங்கிலமாகிய வெல்லப்பாகின் சுவையிலேயே நெடுநாளாக ஆழ்ந்து களித்து வரும் எனக்குத் தாய்மொழியாகிய கொம்புத்தேனின் சுவையருமை இப்பொழுதுதான் புலப்படலாயிற்று’ என்கிறார். பாரத சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட பெயர் தெரியாத வீரர்களுக்கு இந்த நாவலைச் சமர்ப்பணம் செய்திருந்தார் ரமணி. இது பின்னர் வேங்கடரமணியாலேயே மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலத்திலும் வெளியானது.
பாரத மணி
தமிழில் நல்ல இலக்கியங்களைப் படைக்க வேண்டும். கிராமப்புற முன்னேற்றம் சார்ந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், ஆரம்பிக்கப்பட்ட இதழ் ‘பாரதமணி. ‘உழவுக்கும் தொழிலுக்கு வந்தனை செய்வோம்’ என்ற பாரதியின் வாக்கை முகப்பில் கொண்டு, முதல் இதழ் வெளியானது. காரணம், வேங்கடரமணி ஒரு காந்தி பக்தர். இதழை டாக்டர் சர்வபள்ளி எஸ்.ராதாகிருஷ்ணன், உ.வே.சாமிநாதையர், ரா.ராகவையங்கார், எஸ்.சத்தியமூர்த்தி, டி.எஸ்.எஸ்.ராஜன், சுத்தானந்த பாரதி உள்ளிட்ட பல சான்றோர்கள், மேதைகள் வாழ்த்தி வரவேற்றனர். மொத்த பக்கங்கள்: 24. விலை தனிப்பிரதி 1 அணா. வருஷ சந்தா உள்நாடு – 4 ரூபாய்; வெளிநாடு – 6 ரூபாய். (தபால் செலவு உள்பட.)
இது அக்காலத்தில் அதிகமான தொகைதான். காரணம், 1 கிராம தங்கத்தின் விலை அப்போது மூன்று ரூபாய்தான். பாரத மணி வார இதழாகத்தான் ஆரம்பத்தில் வெளிவந்தது. பின்னர் 1940, டிசம்பரில் விலை குறைக்கப்பட்டு, வருஷ சந்தா உள்நாடு – 3 ரூபாய்; வெளிநாடு – 5 ரூபாய் என்று மாற்றம் செய்யப்பட்டது. பக்கங்களும் இரு மடங்கிற்கு மேல் அதிகமாகியின (56 பக்கங்கள்). காரணம், அது வரை வார இதழாக வெளிவந்தது, பொருளாதாரச் சூழல்களால் மாத இதழாக மாற்றம் செய்யப்பட்டதனால்தான்.
இதழின் சிறப்பம்சங்கள்
முதல் இதழில் சிறுகதை எழுதியிருக்கிறார் எஸ்.வி.வி. கட்டுரைகளை வ.ரா., கு.ப. ராஜகோபாலன், வே.நாராயணன், பெ.நா.அப்புசாமி, சிட்டி உள்ளிட்டோர் எழுதியுள்ளனர். சுத்தானந்த பாரதி, கொத்தமங்கலம் சுப்புவின் கவிதைகள் வெளியாகியுள்ளன. இதழின் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு கு.ப.ரா. மிகவும் உழைத்திருக்கிறார். இதழின் செம்மையாக்கத்திற்கு உதவியிருக்கிறார். சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல பணிகளில் அவர் ஈடுபட்டிருக்கிறார். அடுத்தடுத்த இதழ்களில் ரஸிகன் (என்.ரகுநாதன்), ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, குமுதினி, சேது அம்மாள், ஜயலக்ஷ்மி சீனிவாசன், குகப்ரியை, வஸந்தன் உள்ளிட்ட பலர் கதைகள் எழுதியுள்ளனர்.
ரா.ஸ்ரீ.தேசிகன், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, பி.ஸ்ரீ. ஆச்சார்யா, வரகவி அ.சுப்பிரமணிய பாரதி, கி.சந்திரசேகரன், மஞ்சேரி எஸ். ஈஸ்வரன், வே.ராகவன், கம்பதாஸன், ஆர். குஞ்சிதபாதம், தி.நா.சுப்பிரமணியம், வே.நாராயணன், ய.மகாலிங்க சாஸ்திரி, ராவ்சாகிப் கே.சுப்பிரமணியம், எம்.எஸ். சுப்பிரமணியம், விஜயராகவாச்சாரியார், ராகவையங்கார், பஞ்சாபகேசய்யர், சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கட்டுரைகளை எழுதியுள்ளனர். ஏ.எம் ரஷீத் (ஏ.மொஹம்மது ரஷீத்) என்பவரது சிறுகதைகளும் அவ்வப்போது வெளியாகியிருக்கின்றன.
சிறுவர்களுக்கான பகுதியும் இடம் பெற்றுள்ளது. பெ.நா. அப்புஸ்வாமி உள்ளிட்டோர் சிறார் சிறுகதைகளை எழுதியுள்ளனர். அப்புஸ்வாமி எழுதிய சில அழகான மரபுக்கவிதைகளும் வெளியாகியிருக்கின்றன. ‘சிட்டை’ என்ற தலைப்பில் பிற மாநிலங்களில், நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த செய்திகள் வெளியாகியிருக்கின்றன. வெளிநாட்டவர் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. ‘புத்தக மதிப்புரைகள்’, ‘வரப்பெற்றோம்’ பகுதி மூலம் அக்காலத்திலும், விதம் விதமான தலைப்புகளில் நிறைய புத்தகங்கள் வெளியாகி வந்திருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. காலச்சகரம், காதம்பரி, தேச சேவை, ஹிதபாஷினி, திரை உலகம், தேவாங்க மகாஜோதி, குக வேளார் என்றெல்லாம் பல பத்திரிகைகள் வெளியாகி வந்தமையை அறிய முடிகிறது.
கிராமப்புற வாழ்வை மிகவும் விரும்பியவர் வேங்கடரமணி. கிராமப்புற வாழ்க்கையை மேம்படுத்த விழைந்தவர். அதற்காக கிராம முன்னேற்றம் சார்ந்து இதழ் தோறும் பல கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். ‘என கனவு’ என்ற தலைப்பில் தன் சுயசரிதையை, இளம் வயது முதலான வாழ்க்கை அனுபவங்களை வெகு சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். ‘போகிற போக்கில்’ என்ற தலைப்பில் தன் சிந்தனைகளை, ஆர்வங்களை, தனக்கேற்பட்ட அனுபவங்களைத் தொடராக எழுதியிருக்கிறார். அப்படிப்பட்ட கட்டுரை ஒன்றில் ‘நமது நாட்டில் தலைசிறந்தவர்கள் எல்லோரும் கடைந்த மோரில் மிதக்கும் வெண்ணெய் போல், ஆங்கிலத்திலேயே மூழ்கி மிதந்து இன்றும் நிற்கிறார்கள். அவர்களைத் தாய் பாஷையில் ஈடுபடும் படிச் செய்வதுதான் ‘பாரத மணி’யின் முக்கிய நோக்கம். ஆங்கிலத்தில் பிரஸித்தியும் தேட்டையும் அடைந்த சுமார் 15 நண்பர்களை முதன் முதலில் தமிழில் எழுதும்படியாகச் செய்து, அவர்கள் கட்டுரைகள் ‘பாரத மணி’யில் வெளி வந்திருக்கின்றன’ என்கிறார்.
கிராம மேம்பாட்டிற்காகவே திருக்கடையூரில் ‘மார்க்கண்டேயா’ என்ற ஆசிரமத்தைத் தோற்றுவித்து நடத்தியதை அறிந்துகொள்ள முடிகிறது. அது போலவே சென்னையில் ‘ஸ்வேதாரண்ய ஆசிரமம்’ என்பதை நிறுவிய அவர், பாரத மணியில், ‘ஸ்வேதாரண்ய ஆசிரம பால பாடம்’ என்ற தலைப்பில் தொடர்ந்து படங்களுடன் கூடிய கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தனது ‘ஸ்வேதாரண்ய ஆசிரம புத்தக சாலை’ மூலம் தனது நூல்களை அச்சிட்டு வெளியிடுவது மட்டுமில்லாமல், கல்கியின் ‘கணையாழியின் கனவு’, ‘தியாக பூமி’, குகப்ரியையின் ‘சந்திரிகா’, வ.வே.சு. ஐயரின் ‘மங்கையர்க்கரசியின் காதல்’, புதுமைப்பித்தனின் ‘புதுமைப்பித்தன் கதைகள்’, கு,ப.ரா.வின் ‘கனகாம்பரம் முதலிய கதைகள்’ போன்ற நூல்களையும் விற்பனை செய்திருக்கிறார்.
1942ல், ஜப்பான் சென்னையில் குண்டுகளைப் பொழிந்த சமயத்தில் பலரும் சென்னை மாநகரை விட்டு வெளியேறினர். வேங்கடரமணியும் சில காலம் இதழை மயிலாடுதுறையில் இருந்து நடத்தியிருக்கிறார்.
இதழின் சில சுவாரஸ்யங்கள்
இதழ்களில் ஆங்காங்கே நகைச்சுவைத் துணுக்குகளும், படங்களுடன் வெளியாகியுள்ளன. சான்றாக, ஒன்றிரண்டு.
புத்திசாலி!
மகன்:- அப்பா, எனக்கொருதரம் பட்டம் வாங்கிக்கொடு!
தந்தை:- நீ தம்பட்டம் அடித்தால் வீடு கிடுகிடுத்துப் போய்விடும். என்னால் வேலை செய்ய முடியாது.
மகன்:- இல்லையப்பா! நீ வேலை செய்யும்போது அடித்தால் தானே உனக்குத் தொந்தரவா யிருக்கும்? நீ தூங்கும் பொழுது அடிக்கிறேன்!
*
நல்ல யோசனை!
தந்தை: – அடே ராமு, உனக்கு எத்தனை தடவை சொல்வது கோவிந்தனோடு சேரவேண்டாமென்று? அவன் கெட்ட பையன்! தெரிந்ததா? இனிமேல் அவனோடு சேராதே!
ராமு:- சரி! அப்பா! கோவிந்தன் கெட்ட பையன்! அவனோடு நான் சேரவில்லை. நான் நல்ல பையன் தானே? அவன் என்னோடு சேரட்டும்!
*
இன்றைக்கு ஒருவர் ஏதாவது பேசினால், எழுதினால், அதில் உள்ள வார்த்தைகளை, வரிகளை வைத்துக் கொண்டு, எதிர் கேள்விக் கேட்டுக் கிண்டல் செய்வதை அன்றைக்கே செய்திருக்கிறார்கள். சான்றுக்கு, இரண்டு.
‘புராணக் கதைகளில் எனக்கு பக்தி உண்டு’ – பி.சம்பந்த முதலியார் பிரசங்கம்.
நமது புராணப் படங்களைப் பார்த்த பிறகு கூடவா?
*
‘சாந்தா ஆப்தே சினிமாவை விட்டுவிட்டு சங்கீத மேடைக்குப் போகப் போகிறார்’ – செய்தி
ஏன்? தமிழ்நாட்டுக்கு சமீபத்தில் விஜயம் செய்தாரே, அப்போது ஏதாவது தமிழ் படத்தைப் பார்க்க நேர்ந்ததோ?
*
அக்காலத்தில் சில தமிழ் இதழ்களில் புத்தக விமர்சனங்கள் எப்படி வெளியாகும் என்பதைக் காட்டும் ஒரு (கிண்டல்) விமர்சனம்:
‘மேற்படி புஸ்தகத்தை அச்சிட்டவர் மிகவும் படித்தவர். ஏராளமான பொருட் செலவினாலும், உழைப்பினாலும் வெளிவந்த புஸ்தகம் இது. நல்ல காகிதத்தில் அழகிய படங்களுடன் திகழ்கிறது. கையில் வைத்துக் கொள்ளுவதற்கு மிகவும் சிறந்த பூஷணமாக இருக்கிறதென்பதை யாரும் மறுக்க முடியாது…’
*
‘துர்க்கேச நந்தினி’ நாவல் மொழிபெயர்ப்பு குறித்த விமர்சனத்திலிருந்து… (மொழி பெயர்த்தவர் வேங்கடரமணியின் நண்பர் கு.ப.ரா.)
‘துர்க்கேச நந்தினி’யில், ‘கதை’ இருக்கிறது. ஆனால், கதாபாத்திரங்கள் அதிகமாக இல்லை. ‘காதல்’ இருக்கிறது. சம்பவங்கள் இருக்கின்றன. வேகம் இருக்கிறது, வளர்ச்சி இல்லை. நவீனங்களுக்கு வேண்டிய, பரபரப்பு, ஆச்சரியம், முதலியவைகளைத் தரும் திருப்புமுனைகள் குறைவாக இருந்தாலும், மொத்தத்தில் ‘கதை’ உருப்படியானதாயிருக்கிறது. படிப்பதற்கு சுவாரஸ்மாயுமிருக்கிறது.’
*
‘தமிழர் யார்’ என்ற நாரண. துரைக்கண்ணன் நூலின் விமர்சனம்
‘தமிழர் யார்? – (ஆசிரியர்: நாரண துரைக்கண்ணன் பிரசுரகர்த்தர்: சக்தி பிரசுராலயம், மைலாப்பூர், சென்னை. விலை அணா 4)
ஆரியர் – திராவிடர் பிரச்னையைத் தூண்டி விடும் வகுப்புவாதிகளுக்கு இப்புத்தகம் தக்க பதில் அளிக்கிறது. தென்னாட்டுப் பிராமணர்கள் ஆரியர்கள் என்று சில புத்திசாலிகள் சொல்கிறார்களல்லவா? அந்தக் கூற்றை சரித்திர பூர்வமாக ஆசிரியர் ஆராய்கிறார். ஸர் ஜான் மார்ஷல் முதல் ‘என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா’ வரையில் சகல நூல்களிலிருந்தும் மேற்கோள்களை எடுத்து ஆராய்ந்து தமிழ்நாட்டில் ஆரியர் யார் தமிழர் யார் என்று ஓர் தீர்மானமான முடிவுக்கு வருவது எவ்வளவு அசாத்தியமானது என்பதை உணர்த்துகிறார்.
பின்னும், தற்காலத் தமிழருக்கும் பழங்காலத் தமிழருக்கும் உள்ள வித்தியாசத்தை ஆசிரியர் கூறுகிறார். தற்போது உள்ள தமிழர்கள் ‘ஆதியில் வந்த தமிழர், தமிழர் முன் வந்த நாகர், பின் வந்த துரானியர், ஆரியர் முதலிய பல பிரிவினரும் கலந்த கூட்டத்தார் ஆவர்’ என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். ‘ஆகவே நாங்கள் தான் அசல் தமிழர்; எங்கள் தேகங்களில் ஓடுவதுதான் அசல் தமிழ் இரத்தம் என்று ஒருவரும் உரிமை கொண்டாடிக் கொள்ள முடியாது’ என்று முடிவு கட்டுகிறார்.
பிறகு, புத்தகாசிரியர் பல பிராம்மணப் பெரியார்கள் தமிழுக்குச் செய்த தொண்டை நினைப்பூட்டி, ‘இவர்களை தமிழர்களல்லவென்று கூறுவது சிறிதாயினும் நியாயமா?’ என்று கேட்கிறார். மிக்க ஆராய்ச்சியுடன் கூடிய இப் புத்தகத்தை ராஜீய விஷயங்களுக்காக மட்டுமின்றி, பொது அறிவுக்காக எல்லோரும் படிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறோம்.
*
அக்காலத்தின் புகழ்பெற்ற படங்களுள் ஒன்று பக்த துகாராம். இப்படம் 1938ல் வெளியானது. பிரபல கர்நாடக சங்கீத வித்வான் முசிரி சுப்பிரமணிய ஐயர் கதாநாயகனாக நடித்த ஒரே படம். (அதுவும் மீசையுடன்) அப்பட விமரசனத்திலிருந்து…
‘இந்தப் படத்தை எல்லோரும் அவசியமாய் ‘கேட்க’ வேண்டும். முன்னால் உட்கார்ந்திருப்பவரின் தலையோ, தொப்பியோ படத்தை மறைத்து விட்டால் சண்டை பிடிக்க வேண்டிய அவசியமில்லை. காமெடியன் சாரங்கபாணியின் சீன்களை மாத்திரம் அவசியம் பார்க்கவேண்டும். முசிரி, பாலசரஸ்வதி இருவரின் அற்புதமான பாட்டுகளைக் கேட்க எத்தனை தடவை வேண்டுமானாலும் போகலாம். துகாராம் கதையைத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் நல்ல புத்தகத்தில் படித்துக் கொள்வது நல்லது.
படப் பதிவின் பொறுப்பாளிகள் இன்னும் கொஞ்சம் சிரத்தை காட்டியிருந்தால் எவ்வளவோ அற்புதமாய் செய்திருக்கலாம். கூட்ஸ் வண்டி மாதிரி நகரும் இப்படத்தை முசிரியின் பாட்டுதான் காப்பாற்றுகிறது. சினிமாப் படம் என்பது வரிசையாக ஒட்டவைத்த குரூப் போட்டோக்கள் அல்ல என்பதை நம் தமிழ்ப் பட டைரக்டர்கள் எப்பொழுது உணர்வார்களோ தெரியவில்லை. ரொம்பவும் சிறிய விஷயமான காட்சித் தொடர்புகளில் கூட மோசமான தவறுகள் இருக்கின்றன. ஒரே சீனில் பாலசரஸ்வதியின் சட்டை சீட்டியிலிருந்து சில்க்காக மாறும் அற்புதம் பாண்டுரங்கனின் திருவிளையாடலோ என்று சந்தேகிக்கும்படியாக இருக்கிறது. ‘பிளேபாக்’ கையாளப்பட்ட இடங்களில் வெற்றி இல்லை.’
*
1939ல் வெளியான ‘மாயா மச்சீந்திரா’ என்ற திரைப்பட விமர்சனத்தில் வரும் வரிகள்:
‘இந்தப் படம் நன்றாயிருக்கிறது; ஆக்ஷேபணையில்லை. ஆனால் ஒரே ஒரு விஷயத்தைமட்டும் படத்தைப் பிடித்தவருக்குக் கூற விரும்புகிறேன்: ‘ஐயா! எல்லோரையும் போல ஆபாஸ விஷயங்களை அடிக்கடி படத்தில் நுழைத்தால்தான் ஜனங்கள் ரஸிப்பார்கள் என்று எண்ணவேண்டாம். கண்யமான ஹாஸ்யத்தை உண்டாக்க அடுத்த படத்தில் நீங்களாவது முயலுங்களேன்.’ – (வே. சு.ரா.)
*
பத்திரிகை ஆசிரியரைக் கிண்டல் செய்யும் ஒரு துணுக்கு.
எமன்:- இவன் யார்?
கிங்கரன்:- இவன் தான் ஒரு பத்திரிகாசிரியர். தன்னிடத்தில் வந்த கட்டுரைகளை எல்லாம் ‘நன்றாக இல்லை நன்றாக இல்லை’ என்று சொல்லி, பல இளம் எழுத்தாளர்களை நாசமாக்கி விட்டான்.
எமன்:- அப்படியா?
கிங்கரன்:- ஆமாம், பிரபோ!
எமன்:– பல இளம் எழுத்தாளர்களை நசுக்கி அவர்களைக் கெடுத்ததனால் இவனைச் சுத்த பிண்ட மண்டலத்தில் கொண்டு போய்த் தள்ளு. கர்ண கடூரமானதும், படிக்கத் தகாததும் சுத்த மோசமானதுமான பல கட்டுரைகளை அவன் திருத்தி தினம் என்னிடம் அனுப்ப வேண்டும். ஊம்! இழுத்துக்கொண்டு போ!
*
கேலி, கிண்டல் தான் என்றில்லை முக்கியமான விஷயங்களையும் விவாதித்திருக்கிறார் வேங்கடரமணி. தனது சமூகப் பொற்றுப்புகளை, அக்கறையை எழுத்தில் காட்டியிருக்கிறார். ஜின்னா மற்றும் ஈ.வெ.ரா.வின் செயல்பாடுகள் குறித்து அவர் சொல்லியிருப்பது இது:
‘வடக்கே ஜின்னாவும், தெற்கே ஈ.வே. ராமசாமி நாயக்கரும் இந்தியாவைச் சின்னாபின்னம் பண்ணக் கிளம்பி விட்டாரெனத் தோன்றுகிறது. காஞ்சியில் நடந்த ‘தனித் திராவிட நாட்டு’க் கூட்டத்தில் ஈ.வே.ரா. தமிழ்நாட்டுத் தமிழர்களெல்லோரும், தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரிப்பதற்குப் பின்வாங்குகிறார்களே யென்று ஓலமிடுகிறார். தமிழர்களுக்கு இன்னும் அவர்களுடைய நிலைமையை அறிய முடியவில்லையே யென்றும், ஜஸ்டிஸ்க் கட்சியில் இருப்பவர்களெல்லோரும் தீவிரமாக உழைத்தால் எங்கு வேலை போய்விடுமோ என்று பயப்படுகிறார்களென்றும், தமிழ்நாட்டுப் பிரிவுக்கு ஜின்னா சாகேப்கூட உதவி செய்கிறேனென்று கூறியிருக்கிறாரென்றும் கூறி விட்டு, நெற்றி வியர்வையைத் துடைத்து விட்டு, ஐஸ் போட்ட இளநீர்ப் பானம் சாப்பிட்டாரெனச் செய்தி கூறுகிறது.’
*
நாடு விடுதலையான பிறகு வெளி வந்த இதழில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார் மணி.
‘எனக்கு, பதினைந்தாம் தேதி காலையில் புன்சிரிப்புக் கூட வரவில்லை. உலகம் முழுவதும் ஒரு பெரிய பொய், புரட்டு, பித்தலாட்டமாய்த் தோன்றிற்று. நமது நாட்டுக்கு உண்மையில் சுயராஜ்யம் கிடைத்த தினமாக எனக்குத் தோன்ற வில்லை. தேன் எடுக்கப் போய்த் தேனீ கொட்டி, கடுப்புத் தான் மிச்சம் போல் உணர்ச்சி. சர்க்கார், விடுமுறை நாள் கூலி கொடுத்தும், பிள்ளைகளுக்குப் பெப்பர்மெண்ட் கொடுத்தும், நேரு டில்லியிலிருந்து முழங்கியும், திருவாவடுதுறை ஆதீனம் நேருவுக்குத் தங்கச் செங்கோல் செலுத்தியும் என் மனசில் குதூகலம் பிறக்கவில்லை. நானும் அரசியல் துறையில் முப்பது வருஷம் என் தலைவர்கள் போல் வாயால் கதறிச் சொல்நயத்தால் சேவை செய்தவன்!
காங்கிரஸின் கோழைத்தனத்திற்குச் சீமந்த புத்திரன் பாக்கிஸ்தானே! ஜீன்னா சாகிப்பின் வளர்ச்சிக்கும் அதுவே முக்கிய காரணம். நியாயத்தில் வேர் ஊன்றாத அரசியல், ஆற்றங்கரை ஓரத்தில் வளரும் மரம்போல் தாற்காலிகமாய்ச் செழிக்கும்: அழிவும் நிச்சயம். கேட்டதைக் கொடுத்துப் பழக்கும் செல்லப் பிள்ளையின் துன்பத்தை அனுபவிக்காத தாய் தந்தை யார்? அப்படியே அரசியல் துறையில் முஸ்லிம்களைச் செல்லப்பிள்ளையாய்க் காங்கிரஸ் பழக்கினதின் பலனை நாம் எல்லோரும் இன்று நன்றாக அனுபவிக்கிறோம்.’
மதக் கலவரங்களால் மக்கள் மடிய நேரிட்ட சம்பவங்கள் அவரை மிகவும் பாதித்தன. நாட்டுப் பிரிவினை அவரைக் கவலைக்கு உள்ளாக்கியதன் வெளிப்பாடே மேற்கண்ட சோக வரிகள்.
*
காஷ்மீர் பிரச்சினை குறித்து 1948 இதழில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்,
‘மௌண்ட்பேட்டன் பிரபுவின் புத்திமதிக்கு இணங்கி பண்டிட் ஜ்வஹர்லால் நேரு காஷ்மீர் ப்ரச்னையை ஐக்கியநாடு சங்கத்திற்குக் கொண்டுபோனதே ஒரு வெகுளி வழி. ஏமாற்றம். உலகப் போக்கின் மனோபாவத்தை அறியாமல் செய்த காரியம். இனி என்ன செய்கிறது? சிக்கல் பெருகித் தான் வரும். காஷ்மீரைக் கைவிடாமல் நாமும் காரியத்தை நடத்த வேண்டியதுதான். காஷ்மீரைக் கைவிட்டு விட்டால், நாம் இந்தியாவைக் கோடி கோடி ரூபாய் ராணுவத்தில் செலவு செய்தாலும் பாதுகாக்க முடியாது.’
என்ன ஒரு தீர்க்கதரிசனம்!!
*
காங்கிரஸின் நடத்தை குறித்து மனம் வருந்தி ஓரிடத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார், ரமணி.
‘காங்கிரஸ் அதிகாரத்துக்கு வந்ததிலிருந்து அதைப் பின்பற்றுவதாகச் சொல்லும் அநேகர் அநீதியான துறைகளில் இறங்கி, காங்கிரஸின் மூலக் கொள்கைகளான ஸத்தியம், அஹிம்ஸை இதுகளுக்கு முற்றிலும் மாறாய் நடந்து கொள்ளுகிறார்கள்’ என்று மகாத்மா காந்தி அடிக்கடி ‘ஹரிஜன்’ பத்திரிகையில் கொஞ்ச காலமாய் எழுதிவருவது எல்லோருக்கும் தெரிந்ததே.’
ரமணியின் வருத்தத்திற்குக் காரணம் அவர் ஒரு காங்கிரஸ்காரர். காந்தி பக்தரும் கூட. ஆனால், நாடு விடுதலைக்குப் பின் நடந்ததோ காந்தியக் கொள்கைகளுக்கு முரணாக இருக்கிறது என்று அவர் மனம் புழுங்கியதன் விளைவுதான் மேற்கண்ட வரிகள்.
ஆன்மிகத்தைப் பொருத்தவரையில், காஞ்சி மகா பெரியவரின் பக்தர் வேங்கடரமணி. தனது சேவைப் பணிகளுக்காக பெரியவரின் கைகளில் இருந்து பதக்கம் ஒன்றைப் பரிசாகப் பெற்றவர். காஞ்சி மகாப் பெரியவரை, பால் பிரண்டன் சந்திக்கக் காரணமாக அமைந்தவர் வேங்கடரமணிதான். பிரண்டனை காஞ்சி முனிவரிடம் அழைத்துச் சென்றதும் இவரே! பகவான் ரமண மகரிஷியின் தரிசனம் பிரண்டனுக்குக் கிடைக்கக் காரணமானவரும் இவர்தான்.
ரமணி சிறந்த சொற்பொழிவாளரும் கூட. வட இந்தியாவின் பல நகரங்களுக்குச் சென்று கிராமப்புற வளர்ச்சி, இந்திய அரசியல், ஆங்கில இலக்கியம் முதலியவற்றைக் குறித்துச் சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறார். பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்களாக, ராதாகிருஷ்ணன், ராமசாமி ஐயர் போன்றோர் பணியாற்றிய காலத்தில் அங்கு சென்று மாணவர்களிடையே உரையாற்றியிருக்கிறார்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமல்லாது வேங்கடரமணியின் படைப்புகள் தெலுங்கு, ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருதத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருக்கின்றன. அன்னிபெசன்ட்டின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய ‘ஜடாதரன் முதலிய கதைகள்’ சிறப்பானவை. ‘On the Sand Dunes’, (மணல் மேடுகள் மீது), ‘A day with Sambu’ (சாம்புவுடன் ஒருநாள்), The Next Rung (அடுத்த நிலை), The Indian Village (நமது இந்தியா வாழ்க்கை) போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த படைப்புகளாகும். ‘Highways of Astrology’ என்ற ஜோதிட ஆய்வு நூலைப் பதிப்பித்திருக்கிறார். இவரது நாவல்கள் பேசப்பட்ட அளவு ஏனோ இவரது சிறுகதைகள், கட்டுரைகள் அதிகம் பேசப்படவில்லை.
பாரத மணி இதழை வேங்கடரமணி பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களுடன்தான் நடத்தி வந்தார். அது குறித்து அவ்வப்போது ‘போகிற போக்கில்’ பகுதியில் எழுதியுமிருக்கிறார். ‘உதவி என்று கை கொடுப்பவர் எவரும் இல்லை. பணமும் கிடையாது. தன்னைத்தானே வளர்த்துக் கொள்ளும்படியான நிலையில் ‘பாரத மணி’யை என்னால் வெற்றிகரமாக நடத்திச் செல்ல முடியவில்லை. மார்க்கண்டேய ஆசிரமத்தின் நிலை இன்னும் மோசம்’ என்கிறார்.
நாளடைவில் பாரத மணி 50 இதழ்களோடு நின்று விட்டது. பொருளாதாரப் பிரச்சினைதான் காரணம். அதன் பின் ஆள்வார் சமஸ்தான அரசரால் அழைக்கப்பட்ட வேங்கடரமணி, அங்கு இரண்டு ஆண்டுகள் அவருக்கு ஆலோசகராகப் பணியாற்றினர். கிராமப் புற வளர்ச்சியை முன்னிறுத்தி பல நற்பணிகளை மேற்கொண்டார். ஆனால், காச நோயால் பாதிக்கப்பட்ட அவர், அதற்குச் சரியான மருந்துகளோ, சிகிச்சைகளோ வளராத காலம் என்பதால், நோய் முற்றி பிப்ரவரி, 1952ல் காலமானார்.
தமிழ் இலக்கிய உலகில் ‘தென்னாட்டுத் தாகூர்’ என்று போற்றப்பட்ட வேங்கடரமணி, இதழியல் மற்றும் இலக்கியத் துறையில் நம்மவர்கள் மறக்கக் கூடாத முன்னோடி.