Radhakrishnan Reader – an Anthology, Bharathiya Vidhya Bhavan.
‘சார்! உங்களையெல்லாம் நாங்கள் ஆசிரியர் தினம் அன்று நிச்சயமாய் நினைத்துக் கொள்வோம்.’
கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்களுக்கான பிரிவுபசார விழாவில் எங்கள் வகுப்பு லீடர் கேசவன் மேற்கண்டவாறு எல்லோர் சார்பிலும் உறுதியளித்தான். கரவொலி எழுந்து அடங்கியது. கல்லூரி முதல்வர் புன்னகைத்ததைப் பார்த்த பிறகு, பிற ஆசிரியர்களும் இலேசாகச் சிரிப்பைக் காட்டினர்.
நான் எழுந்து கேட்டேன் ‘ சார்! நீங்கள் எல்லாம் எங்களை எந்த தினத்தில் நினைத்துக் கொள்வீர்கள்?’
என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஆசிரியர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இதற்கு பதில், தான் சொல்லவேண்டிய அவசியமில்லை என்பது போல் முதல்வர் பிற் ஆசிரியர்களை நோக்கினார். ஒரு சின்ன மௌன இடைவேளைக்குப் பின் நாங்கள் எல்லோரும் மதிக்கும் சங்கரன் சார் எழுந்தார்.
‘அதே தினத்தில்தான் நாங்களும் உங்களை நினைப்போம்’ என்றார்.
‘அதெப்படி சார்? அது ஆசிரியர் தினம்தானே!’ என்று குறுக்கிட்டேன்.
‘மாணவர் இல்லாமல் ஏது ஆசிரியர்?’ என்றார். அரங்கமே அதிர்ந்தது.
இப்போது இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்ததற்குக் காரணம் சர்வபள்ளி எஸ். இராதாகிருஷ்ணன் எழுத்துகளின் ஒரு தொகுப்பு (Radhakrishnan Reader – an Anthology). என்ற நூல் கையில் கிடைத்தது. அவர் பிறந்த நாளைத்தானே ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம். இந்நூலை பாரதிய வித்யா பவன் வெளியிட்டுள்ளது. 86 ஆண்டுகள் வாழ்ந்து, நாட்டுப் பணியிலும், ஆசிரியப் பணியிலும், இந்தியத் தத்துவங்களை மேலை நாட்டினர் அறிய வகை செய்த இலக்கியப் பணியிலும் தன்னையே கொடுத்த ஒருவரின் எழுத்துகளைத் தொகுத்து வெளியிடுவது அத்தனை எளிதல்ல.
‘60,000 பக்கங்களுக்கு மேல் எழுதியுள்ள இராதாகிருஷ்ணன் கருத்துகளை 600 பக்கங்கள் கொண்ட தொகுப்பில் அளிப்பது எவ்வளவு கடினம்’ என பாரதிய வித்யா பவனின் நிறுவனர் கே.எம்.முன்ஷி தனது பதிப்புரையில் எழுதுகிறார். பொருளடக்கத்தைப் பார்த்தாலே இக்கூற்றின் பொருள் புரிந்துவிடும்.
சுயசரிதைக் குறிப்புகள், இந்தியத் தத்துவச் சிந்தனைகள், சமயங்களின் தேவை, இந்துமதம், சமண மதம், புத்தமதம், சீக்கிய மதம், நம்பிக்கைகளின் இணக்கம், கல்வி, இந்தியச் சுதந்திர வரலாறு தொடர்பான சிந்தனைகள், காந்தியும் நேருவும், அனுபவக் குறிப்புகள் எனத் தொடரும் தலைப்புகள் ஒவ்வொன்றினுள்ளும் பல துணைத்தலைப்புகள். ஒரு சிலவற்றையேனும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் 1888 செப்டம்பர் 5ம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி கிராமத்தில், தெலுங்கு நியோகி என்ற பிராமணப்பிரிவில் சர்வபள்ளி வீராசாமிக்கும், சீதம்மாவுக்கும் மகனாகப் பிறந்தார்.
தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இராதாகிருஷ்ணன், தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். ஓர் ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்ததால், அவரது கல்வியை உதவித்தொகை மூலமாகவே தொடர்ந்தார். தனது ஆரம்பக் கல்வியைத் திருவள்ளூரிலுள்ள ‘கௌடி’ பள்ளியிலும், பின்னர் திருப்பதியிலுள்ள ‘லூத்தரன் மிஷன் உயர் பள்ளியிலும்’ படித்தார். வேலூரிலுள்ள ஊரிஸ் கல்லூரியில் சேர்ந்த பின், சென்னையிலுள்ள கிறிஸ்துவர் கல்லூரிக்கு மாறினார். தத்துவத்தை முதல் பாடமாகத் தேர்ந்தெடுத்த அவர், அதில் இளங்கலை (பி.ஏ) மற்றும் முதுகலைப் பட்டமும் (எம்.ஏ) பெற்றார்.
தத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுத்ததற்கு அவர் சொன்ன காரணம் மிகச் சுவையானது.
‘நான் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பதினேழு வயது இளம் மாணவனாகச் சேர்ந்த போது, தேர்ந்தெடுப்பதற்கு கணிதம், இயற்பியல், உயிரியல், தத்துவம், வரலாறு ஆகிய ஐந்து துறைகள் இருந்தன. எந்தத் துறையில் சேர்வது என சிந்தித்துக் கொண்டிருந்த போது எனது உறவினர் ஒருவருடைய மகன் அவ்வாண்டுப் பட்டப்படிப்பை முடித்துவிட்டுச் செல்கையில் அவன் படித்த இரண்டு தத்துவப் புத்தகங்களை என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றான். (G.F. Stout;s Manual of Philosophy; J.Welton’s Logic and J.S.Mackenzie’s Manual of Ethics –Two volumes). அவைதான் என் எதிர்கால ஆர்வத்திற்கு வழிகாட்டியவை. இது ஏதோ தற்செயலாக நிகழ்ந்தது போலத் தெரிந்தாலும், இவ்வுலகம் ஆன்ம உணர்வின் உயிர்ப்பினால் இயங்குவது என உணர்ந்தால், இங்கு எதுவும் தற்செயலாக நிகழ்வதில்லை என்று புரியவரும்.’
முதுகலைப் பட்டம் பெற்ற பின் 1909ல் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகப் பணியேற்றார். கல்லூரியில், அவர் இந்துமத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத் கீதை, பிரம்மசூத்ரா மற்றும் சங்கரா, ராமானுஜர், மத்வர் போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அவர் புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று நம் நாட்டில் அறிமுகப்படுத்தினார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே படித்தவர் என்ற பெருமையுடைய சர்வபள்ளி இராதாக்ருஷ்ணனைப் பல நாடுகள் கவர்ந்து இழுத்தன. தத்துவமேதையான அவர், இந்தியா பற்றிய ஆர்வம் அந்நிய மண்ணில் வேரூன்றக் காரணமாக இருந்தார்.
1918ல் மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவ பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். 1921ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். 1923ல் அவரது ‘இந்தியத் தத்துவம்’ நூல் வெளியிடப்பட்டது. இந்நூல் பாரம்பரியத் தத்துவ இலக்கியத்தின் ஒரு தலைசிறந்த படைப்பாகும்.
இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில் தனது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தினார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் (Academic Language) உதவியுடன் மொழிபெயர்த்தால் மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இந்தியத் தத்துவத்தை உலக வரைபடத்தில் ஏற்றிய ஒரு தத்துவஞானி என்று அவரைக் கூறலாம்.
1931ம் ஆண்டு ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939ம் ஆண்டு பெனாரஸ் இந்துமதப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியன.
அரசு அளித்த பதவிகள் அவருக்குப் பல பெருமைகளைத் தேடித்தந்தது. டாக்டர் இராதாகிருஷ்ணன் 1949ம் ஆண்டில் சோவியத் யூனியன் தூதராக நியமிக்கப்பட்டார். இது சோவியத் யூனியனுடன் ஒரு வலுவான உறவு அடித்தளம் அமைக்க உதவியது.
பயங்கரமான கொடுங்கோலனாகவும், யாரும் அருகே நின்று பேசுதற்கே அச்சப்படும் தலைவனாகவும் இருந்த சோவியத் அதிபர் ஸ்டாலினை கிரெம்ளின் மாளிகையில் இந்தியத் தூதர் என்ற முறையில் சந்தித்துப் பேசியபோது, ஸ்டாலினின் தலையை அன்போடு தடவிக் கொடுத்துப் பேசினார். அதே போல சைனாவின் அதிபர் மாசேதுங்கைச் சந்தித்த போது அவரது கன்னத்தை நட்போடு தட்டிப் பேசினார். அந்தக் கால செய்தித்தாள்கள் இதைப் பெட்டிச் செய்தியாக்கி வியந்தன. இதில் ஒரு விந்தையுமில்லை. அவர் முதலில் மனிதரை நேசிக்கும் ஒரு தத்துவ ஞானி; பிறகுதான் அரசுத் தூதர், அதிகாரம், பதவி ஆகியவை.
1952ல் இந்தியாவின் முதல் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954ல் இந்திய அரசு அவருக்கு ‘பாரத ரத்னா’ விருதினை வழங்கி கௌரவித்தது. 1962ல் இந்திய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிறித்துவப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்ததால்தான் இந்தியத் தத்துவத்தில் இத்தனை ஆர்வம் ஏற்பட்டது என்று எழுதிவிட்டுக் காரணமும் சொல்கிறார்
.’The Challenge of Christian critics impelled me to make a study of Hinduism and find out what is living and what is dead in it.’
இன்றைய சூழலிலும் இதுபோன்ற எண்ணப் போக்கு இருப்பதைக் காண்கிறோம். சர்வபள்ளி இராதாகிருஷ்ணனைப் போல் இன்னும் பலர் செயல்பட வேண்டும்.
இந்து மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் அம்மதத்தின் கருத்துச் செல்வங்களுக்குக் காவலாளிகள் அல்ல; அவர்கள் அந்த தீப ஒளியைத் தூக்கிக் கொண்டு ஓடும் வீரர்கள். மரபு, உண்மை ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள குழப்பநிலைதான் இன்றைய இந்து மதத்தின் பலவீனம்.
‘God does not say ‘I am Tradition’ but he says ‘I am Truth’. Truth is greater than its greatest teachers.’
இதைத்தான் நானும் நினைக்கிறேன். உண்மையை உபதேசம் செய்யும் ஆசிரியர்களைவிடவும் உண்மை பெரிதுதானே! புத்தர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி, இதற்குச் சான்று பகரும்.
புத்தபகவான் ஒரு கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டு இருந்தார். பலர் கூடியிருந்தார்கள். ‘மாலை வந்துவிட்டது ‘The Sun is set‘ என்று சொன்னார்.
இதைக் கேட்டு முன் வரிசையில் அமர்ந்திருந்த அவரது சீடர்கள் மாலை நேர சந்தி ஜபங்கள் செய்ய எழுந்து சென்றனர். அடுத்த வரிசையில் அமர்ந்திருந்த குடும்பத்தலைவி, வீட்டுக்குச் செல்ல வேண்டிய நேரம் இது, கணவருக்கும் குழந்தைகளுக்கும் உணவு தயாரிக்க வேண்டும் எனக் கிளம்பிவிட்டாள். கடைசி வரிசையில் அமர்ந்திருந்த ஒரு திருடன், ‘சரி! நமது வேலைக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது’ என இருளில் மறைந்தான்.
புத்தபகவான் சொன்ன ஒற்றைச் சொற்றொடர்க்கு அவரவர் இஷ்டப்படி பொருள் புரிந்து கொண்டனர். சாதாரண வாக்கியத்திற்கே இந்த நிலை என்றால், தத்துவங்களை விளக்கும் மகாவாக்கியங்களை எத்தனை நபர்கள் சரியாகப் புரிந்து கொண்டிருப்பார்கள்? எனவேதான் தத்துவ ஞானி இராதாகிருஷ்ணன் போன்றோர் நமது மதம் சார்ந்த உண்மைகளைச் சரியாகக் கண்டறிந்து, பலரும் புரிந்து கொள்ள எளிமையாக்கித் தந்துள்ளனர்.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் போது ஹிப்பர்ட் சொற்பொழிவுகள் (Hibbert Lectures) என்ற தொடரை மாணவரிடையே ஆற்றுகிறார். ‘வாழ்க்கை பற்றி ஓர் இலட்சியப் பார்வை’ (An Idealist View of Life) எனும் தலைப்பில் வெவ்வேறு மதங்கள் பற்றியும், தத்துவ வெளிப்பாடுகளில் உள்ள பிரச்சினைகளையும் பற்றியும் பேசுகிறார்.
‘கடவுள் உலகைப் படைத்தார் என்று சொல்வது அறியாமை. கடவுள் தொடர்ந்து உலகைப் படைத்துக் கொண்டுள்ளார்’ (God created the world is an understatement He is creating now and for all the time) என விளக்குவார்.
இன்றைய அறிவியல் வளர்ச்சி ஒருபுறம் வசதிகளை மேம்படுத்தினாலும், மனிதம் என்ற உணர்வும், உறவுகளின் மேன்மையும் அழிந்து கொண்டு இருக்கின்றன என அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆம்! தொலைவுகள் நெருங்கிவிட்டன. ஆனால் மனித இதயங்கள் சுருங்கிவிட்டன. ஆன்மிக அறியாமை இருக்கும்வரை, புற வளர்ச்சிகளால் கேடுகள்தாம் உண்டாகும். இதனை உலக அளவிலே ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர் இராதாகிருஷ்ணன்.
‘Physical efficiency and intellectual alertness are dangerous if spiritual illiteracy prevails.’
தத்துவம் (Philosophy) என்பதற்கான அழகான விளக்கத்தை அளிக்கிறார். இதுவரை வாழ்க்கையை விளக்குவதற்கு உதவிய தத்துவம் இனிவரும் நாட்களில் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ள உதவும் என்கிறார்.
‘Philosophy had hitherto been concerned with interpreting life, but the time had come for it to change life. Philosophy is committed to a creative task’.
நமது இந்துமதத் தத்துவம் எவ்வாறு மனிதனைச் சுயமாக சிந்திக்க வைக்கிறது என்பதற்கு பகவத் கீதையிலிருந்து மேற்கோள் காட்டுவார். (Krishna advises Arjuna to think for himself)
உலகம் அனைத்திற்கும் இந்தியாவின் ஞானம் தேவை என்பதை அழுத்தமாக வெளிநாடுகளில் உரைத்தவர் இராதாகிருஷ்ணன்.
‘Today Indian wisdom is essential not only for the revival of the Indian Nation but also for the re-education of the human race.’
இரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி பற்றி ராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரை அவர்கள் இருவரையும் நட்பில் இணைத்தது. 1940ல் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் தாகூருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்த போது அந்த விழா சாந்திநிகேதனில் நடந்தது. அப்போது மிக அழகான சொற்களில் இராதாகிருஷ்ணன் தாகூரை வருணித்தார் ‘Magic of his poetry and the music of his voice.’
எல்லா மதங்களின் உண்மையையும் தொகுத்துத் தருவதில் வல்லவர் இராதாகிருஷ்ணன். ‘பிற மனிதனை நேசி, அன்புசெய்’ என்று அனைத்து மதங்களுமே சொல்கின்றன ஆனால் ஆன்மிகப் பயிற்சியும் முயற்சியும் இல்லையென்றால், அன்பை வளர்த்துக் கொள்ளவும், விரிவு செய்து கொள்ளவும் மானுடரால் இயலாது என்கிறார்.
இரண்டாம் உலகப் போரின் விளைவுகளை நேரில் சந்தித்த அனுபவத்தில் பேசும் இராதாகிருஷ்ணன் கூற்று எவ்வளவு நுட்பமானது.
‘Peace is not the mere absence of war; it is the development of a strong fellow-being, an honest appreciation of other people’s ideas and values.’
ஒற்றைக் கருவிலிருந்துதான் மொத்த மனித குலமும் உருவானது. பிறகு அது பலவாகப் பிரிந்துவிட்டது. தற்போது அது மறுபடியும் தன்னைத்தானே சீரமைத்துக் கொண்டு இணைய வேண்டிய தருணம் வந்துவிட்டது, அதற்கு உலகளாவிய ஒன்றுபட்ட சிந்தனையைத் தத்துவவாதிகள் தர வேண்டும் எனக் கூறும் இராதாகிருஷ்ணனின் எழுத்தில் அவரது மனிதநேயப் பார்வை நம் உள்ளங்களை நெகிழ வைக்கின்றது.
சில புதிய தகவல்களை இந்தப் பழைய நூலில் படித்துத் தெரிந்து கொண்டேன், பொதுவாகச் சமணத் துறவிகள் (Jains) தாங்கள் போகுமிடமெங்கும் பூச்சிகள் இல்லாமல் துடைப்பத்தால் சுத்தம் செய்து கொண்டும், விளக்கு வைத்தால் பூச்சிகள் வருமென்று மாலையிலேயே உணவை முடித்துக் கொண்டும், வாயைத் துணியால் கட்டிக் கொண்டும் வாழ்க்கை நடத்துபவர்கள். ஆனால் அஹிம்ஸை பற்றி அதிகம் பேசக் கூடிய சமணமதம் ‘தற்கொலை’ செய்து கொள்வதை அனுமதிக்கிறது. புத்தமதம் அனுமதிப்பதில்லை.
இது பற்றி மகாபாரதம் சொல்லும் கருத்து நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றது. உலகத்தில் நமது கண்களுக்குத் தெரியாத பல பூச்சிகள் இருக்கின்றன. நமது இமைகள் அசையும் போது இவற்றின் உடல்கள் நொறுங்கி உடையும். எனவே எவ்வுயிரையும் கொல்லாமல் இருப்பது இயற்கையில் சாத்தியமல்ல. மேலும் பாகவத புராணம் ‘Life is the life of Life’ என்கிறது. இவை போன்ற பல சுவையான தகவல்கள் மூலம் அடிப்படைத் தத்துவங்களை விளக்குகிறார் இராதாகிருஷ்ணன்.
சீக்கியமதம் பற்றி எழுதும் போது குருமார்களை அம்மதம் எத்துணை மதிக்கின்றது என்பதை விளக்குகிறார். எவ்வாறு இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு குருநானக் பாடுபட்டார் என்று விவரிக்கிறார். இரு மதத்தினரும் அவரை குருவாகவே பார்த்தார்களாம்.
‘Guru Nanak shah Fakir: Hindu ka Guru, Mussalman ka Pir’ என்பது வழக்குச் சொல்லாம்.
உள்ளூர்க் கல்வியில் வாழ்க்கையைத் தொடங்கியவர் உலகத்தின் கருத்தியலைச் சீரமைக்க முடியும் என்பதற்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் சிறந்த உதாரணம்.
இவ்வாறு பல செய்திகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். பொதுவாக ஒரு நூலிலிருந்து சில சிறந்த மேற்கோள்களைக் காட்டலாம். இது வித்தியாசமான நூல். தலைப்பைத் தவிர்த்து மொத்த நூலையுமே மேற்கோளாகக் காட்ட இயலும்.