Posted on Leave a comment

பிரிவினைத் துன்பங்கள் – நேர்காணல் | தமிழில்: ஜனனி ரமேஷ்

1971ல் நாட்டு விடுதலை இயக்கத்தின் போது ஒட்டுமொத்த இனப் படுகொலைகளுக்குத் தூண்டியது உள்பட்ட வன்முறைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணை மற்றும் வழக்குகள் தொடர்பான வங்கதேசப் பன்னாட்டுக் குற்றவியல் தீர்ப்பாயத்தில் அரசு வழக்கறிஞராக இருக்கிறார் தாஸ்குப்தா. இவர் நாட்டிலுள்ள சிறுபான்மையினரை ஒருங்கிணைக்கும் மனித உரிமை இயக்கமான இந்து–பௌத்த–கிறித்துவ ஒற்றுமை அமைப்பின் பொதுச் செயலராகவும் இருக்கிறார்.

1947 பிரிவினை குறித்து ஸ்க்ரோல்.இன் இதழுக்கு ராணா தாஸ்குப்தா அளித்த பேட்டி:

பிரிவினைக்கு இரு ஆண்டுகளுக்குப் பிறகு, 1949ல் சிட்டகாங்கில் பிறந்தீர்கள். உங்கள் பெற்றோர்கள் அப்போதைய கிழக்குப் பாகிஸ்தான் மற்றும் தற்போதைய வங்க தேசத்திலேயே குடியிருக்க ஏன் முடிவெடுத்தனர்?

சூர்யா சென் தலைமையிலான புரட்சிக் குழுவில் எனது தாத்தாவின் சகோதரி ப்ரீதி லதா வடேடார் தாஸ் குப்தா உறுப்பினராக இருந்தார். 1930ல் இக்குழு சிட்டகாங்க் ஆயுதக் கிடங்கை முற்றுகையிட்டுக் கொள்ளையடித்தது. பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெறும் நோக்கில் புரட்சிக்காரர்கள் நகரிலுள்ள இரு முக்கிய ஆயுதக் கிடங்குகளை முற்றுகையிட்டுக் கொள்ளையடிக்க முயன்றனர். 1932ல் சிட்டகாங்கிலுள்ள பஹர்தலி ஐரோப்பிய க்ளப்பை ப்ரீதி லதா தலைமையிலான குழு தாக்கியது. அடுத்த மூன்று நாள்களுக்கு சிட்டகாங்குக்கும், பிரிட்டிஷ்-இந்தியாவுக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பிரிட்டிஷாரால் சுற்றி வளைக்கப்பட்ட ப்ரீதி லதா அவர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க சயனைட் அருந்தித் தற்கொலை செய்துகொண்டார்.

தேசபக்தியும் பாரம்பரியப் பெருமையும் மிக்க குடும்பத்தில் வந்த காரணத்தால் எனது தந்தையும் தாயும் தாய்நாட்டுப் பற்று காரணமாகக் கிழக்குப் பாகிஸ்தானிலேயே தங்கிவிட்டனர். ஆனால் எங்களது பெரும்பான்மை உறவினர்கள் பின்னாளில் மதப்பாகுபாடு மற்றும் மத ரீதியான துன்புறுத்தல் காரணமாகக் கிழக்குப் பாகிஸ்தானை விட்டு நீங்கி இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர்.

பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வரும் பிரிவினை தொடர்பான நினைவுகள் என்ன?

1946ல் வெளியான கேபினட் மிஷன் அறிக்கையில் (பிரிட்டிஷ் அரசிடமிருந்து இந்தியத் தலைமைக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவது தொடர்பாக) பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கை சாத்தியமற்றது என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முஸ்லிம் லீக் 1946 ஆகஸ்ட் 16ல் நேரடி நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கவே கிரேட் கல்கத்தா படுகொலைகள் அரங்கேறின. பின்னர் நவகாளிக்கும் சிட்டகாங்குக்கும் வன்முறை பரவியது. ஹோமியோபதி மருத்துவரான பிரதிர் தாஸ்குப்தாவின் இளைய சகோதரர் மற்றும் முன்னணி புரட்சிக்காரருமான ரணதீர் தாஸ்குப்தா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். மற்றொரு புரட்சிக்காரரான லால்மோகன் சென் சிட்டகாங்கில் கொல்லப்பட்டார். இந்துக்களின் வீடுகள், கோயில்கள், வணிக இடங்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டதுடன், நூற்றுக் கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

மகாத்மா காந்தி நவகாளிக்கு வருகை தந்த பின்னர் இயல்பு நிலை மெல்லத் திரும்பியது. நவகாளி மற்றும் சிட்டகாங்கில் அவரது துணிச்சலான செயல் இன்னும் நினைவு கூரப்படுகிறதா?

இந்தப் பிராந்தியத்தில் அவரது பங்களிப்பை யாரும் நினைவில் கொள்ளவில்லை. இந்துக்கள் கூட ஞாபகம் வைக்கவில்லை. இதற்குக் காரணம் அக்கால வரலாறு தேசம் முழுமைக்கும் கற்றுத் தரப்படவில்லை. நவகாளியில் காந்தியின் பங்களிப்பு மறந்து போன வரலாற்று எச்சம். ஆனால் வங்கதேசம் மக்கள் அவரை இன்னும் போற்றுகின்றனர்.

கிழக்குப் பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் உருவாக்கத்தினால் வங்க இந்துக்களுக்கு என்ன பயன்?

வங்க இந்துக்கள் ஐக்கிய இந்தியாவுக்காகப் போராடினார்களே தவிர பாகிஸ்தானுக்காக அல்ல. 1947ல் உருவான பாகிஸ்தான் உளவியல் ரீதியாக அவர்களுக்குத் தோல்வியாகும். பாகிஸ்தான் தோன்றிய பிறகு, 1947 தொடங்கி 1971ல் வங்கதேசம் என்னும் நாடு பிறக்கும் வரை, அதன் தலைவர்கள் இன அழிப்பில் ஈடுபட்டனர்.

நீங்கள் சிட்டகாங்கில் படித்தீர்கள். எனவே இன அழிப்பு அங்கு நீடித்த நிலையில் நீங்கள் அதற்குச் சாட்சியாக இருந்திருப்பீர்கள் அல்லவா?

பாகிஸ்தான் அரசு ‘எதிரி சொத்துச் சட்டத்தை’ அமல்படுத்திச் சிறுபான்மை இன மக்களின் சொத்தையும், வீட்டையும் அபகரித்துக் கொண்டது. பறிமுதல் செய்த சொத்துக்கள் முஸ்லிம்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டன. அரசியலின் ஆயுதமாக வகுப்புவாதம் விளங்கியது. பாகிஸ்தானில் நடைபெற்றது இரு கட்சிகளும் மோதிக் கொள்ளும் வன்முறை அல்ல. கிழக்குப் பாகிஸ்தானில் இருப்பது ஒரேயொரு கட்சிதான் – அரசு ஆதரவு பெற்றது – மக்களைக் கொள்ளை அடித்துக் கொன்று வெளியேற்றியது. பாகிஸ்தானை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்காகவே இதைச் செய்தனர். மற்றொரு நோக்கம் கிழக்குப் பாகிஸ்தானில் உள்ள வங்க இந்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.

1947 புள்ளி விவரங்களின்படி, மொத்த மக்கள்தொகையில் சிறுபான்மையினர் 29.7%. ஆனால் 1971ல் இது 20% ஆகக் குறைந்தது. அதாவது பிரிவினை அரசியல் 1947ஐத் தாண்டிப் பல ஆண்டுகள் நிலவியது. துணைக் கண்டத்தில் வேறெங்கும் இதுபோல் நிகழவில்லை.

இன அழிப்பு குறித்த உங்கள் அனுபவம் என்ன?

நான் 1949ல் பிறந்தேன். வன்முறையாளர்களிடமிருந்து என் பாட்டிதான் என்னைக் காப்பாற்றினாள் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் ஏற்கெனவே சொன்னதுபோல் இன அழிப்பு என்பது அரசின் கொள்கை. கிராமப் பகுதிகளில் வசிக்கும் வங்க இந்துக்களின் சொத்துக்களைப் பாகிஸ்தானிய அரசு பறிமுதல் செய்தது. அரசுப் பணிகளில் சேர அவர்களுக்கு அனுமதி இல்லை. வங்கதேச இந்துக்கள் இந்திய அரசின் உளவாளி போல் நடத்தப்பட்டனர். வங்கதேசம் பாகிஸ்தானாக இருந்த போது, இந்துக்கள் சுதந்திரமாக மதப் பிரசங்கம் செய்யவோ பின்பற்றவோ அனுமதிக்கப்படவில்லை.

உங்கள் குடும்பம் இவற்றில் ஏதேனும் ஒன்றினால் பாதிக்கப்பட்டதா?

1965ல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரின் போது என் தந்தை கைது செய்யப்பட்டார். தேயிலை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் அப்பா வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் இந்து என்பதால் அவரை இந்திய உளவாளி என்று சந்தேகித்துக் கைது செய்தனர். நான் அப்போது சிட்டகாங்க் அரசுக் கல்லூரி மாணவன்.

வகுப்பு மாணவர்கள் உங்களுடன் எவ்வாறு பழகி கலந்துரையாடினார்கள்?

எனது பள்ளி மாணவர்கள் இரு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். ஒரு பிரிவு எங்களை வெறுத்தது. இந்தியாவின் உளவாளிகள் என்று எண்ணினர். மற்றொரு பிரிவுக்கு வகுப்புவாத அரசியலில் நம்பிக்கை கிடையாது. முற்போக்குச் சிந்தனையாளர்கள்.

உங்களுக்கு இஸ்லாமிய நண்பர்கள் உண்டா?

கண்டிப்பாக உண்டு. இன்னும் சொல்லப் போனால் எனது நண்பர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். இவர்கள் இடதுசாரி அல்லது வங்க மொழிவாரி தேசியத்தை ஆதரித்த மாணவர்கள். இரு-தேசியம் மற்றும் மத தேசியக் கொள்கைகளில் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒரு குழுவும் இருந்தது. இன்னொரு குழு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, வலுப்பெற்று, மொழிவாரி தேசியத்தை ஆதரித்துப் பாகிஸ்தானை எதிர்த்தார்கள்.

எனவே பாகிஸ்தான் உருவான அடுத்த சில ஆண்டுகளில் வங்க மொழிவாரி தேசிய சிந்தனை உருப்பெற்றது. 1948ல் பாகிஸ்தான் உருது மொழியை ஆட்சி மொழியாக அறிவித்தது. இது மக்களிடையே நிலவிய அமைதியைக் குலைத்து 1952 பிப்ரவரி 21ல் மொழிப்போருக்கு வழிவகுத்தது. இதை முன்னெடுத்துச் சென்றவர்கள் வங்க மொழியை ஆட்சி மொழியாக வேண்டுமென விரும்பினர். பிப்ரவரி 21ல் மொழிப் போராட்ட வீரர்களைப் பாகிஸ்தான் ராணுவம் கொன்றது. இது வங்கதேசியத்துக்குப் புதிய பரிமாணத்தைத் தந்து, பாகிஸ்தான் ஃபீல்ட் மார்ஷலும் ஜனாதிபதியுமான அயூப் கானுக்கு எதிராகக் கிளம்பியது.

ஷரீஃப் கல்வி அறிக்கை நாட்டில் உருது மொழியைத் திணித்ததாலும், குறிப்பாக ஏழைகளின் நலனைப் பாதித்ததாலும், 1962ல் அயூப் கானுக்கு எதிரான இயக்கம் தோன்றியது. ஸ்ரீநகர் ஹஸரத்பல் மசூதியிலுள்ள நபிகள் நாயகத்தின் உரோமம் 1963 டிசம்பர் 27 அன்று காணாமல் போனதாகக் கூறப்பட்டது. பாகிஸ்தான் அரசு இந்த நிகழ்வைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நூற்றுக் கணக்கில் இந்துக்களைக் கொன்று குவித்தது.

பாகிஸ்தான் அரசின் தாக்குதலை வங்க இந்துக்கள் எவ்வாறு எதிர்கொண்டனர்?

இடதுசாரி அரசியல் அல்லது வங்கதேசியத்துக்குத் துணை நின்றவர்கள் எங்களுக்கு ஆதரவளித்தனர். தாக்குதல் நடத்தியவர்களுக்கும், எங்களுக்கும் இடையே அரணாக நின்று பாதுகாத்தார்கள். பல முஸ்லிம்கள் எங்களுக்கு அடைக்கலமும் ஆதரவும் அளித்து பாகிஸ்தான் காவல்துறை மற்றும் கலகக்காரர்களிடமிருந்து காப்பாற்றினர். தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பான்மை நபர்கள் இந்தியாவிலிருந்து, குறிப்பாக பீகாரைச் சேர்ந்த வங்காளிகள் அல்லாதவர்கள். இந்துக்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் அரசு, பீகாரி முஸ்லிம்களைப் பயன்படுத்தியது. அதே தருணம் இங்கிருந்த வங்க முஸ்லிம்கள் வங்கதேசம் ஜமாத்-இ-இஸ்லாமி என்னும் வகுப்புவாத அரசியலில் நம்பிக்கை கொண்ட குழுவுடன் இணைந்து இந்துக்கள் மீது கொடுரத் தாக்குதலை அரங்கேற்றினர்.

பிரிவினை, இரு – தேசியக் கொள்கை மற்றும் தற்போதைய வன்முறை ஆகியவை வங்கதேசத்தில் இன்னும் தொடர்கின்றன என்று சொல்வது சரியாக இருக்குமா?

உண்மை. 1971ல் மதச்சார்பற்ற தேசமாக வங்கதேசம் உருவெடுத்தாலும், 1975 ஆகஸ்டில் நாட்டின் முதல் ஜனாதிபதி ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலையைத் தொடர்ந்து, அரசியல் அமைப்புச் சட்டம் மாற்றப்பட்டது. மதச்சார்பின்மை என்னும் சொல் நீக்கப்பட்டது. அந்த இடத்தில் ‘அல்லாவின் பெயரால், மிகவும் கருணையுள்ள, மிகவும் இரக்கமுள்ள’ என்று குரானில் காணப்படும் சொற்கள் சேர்க்கப்பட்டன. ராணுவ சர்வாதிகாரி தளபதி ஜியாவுர் ரஹ்மான் 1977ல் வெளியிட்ட முதல் ஜனாதிபதி பிரகடனம் மூலம் இதை உறுதிப்படுத்தினார். பின்னர் 1988 மே மாதம் 1972 அரசியல் அமைப்புச் சட்டம் 25வது பிரிவு திருத்தம் செய்யப்பட்டு வங்கதேசம் இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு வங்கதேச ஆட்சியாளர்கள் மீண்டும் இன அழிப்பை மேற்கொண்டனர்.

எனவே வங்க இந்துக்கள் இன அழிப்புத் தாக்குதலை மூன்று கட்டங்களாகச் சந்தித்தனர். முதலாவதாகப் பிரிவினையின் போதும், இரண்டாவதாகப் பாகிஸ்தான் ஆட்சியில் 1950 மற்றும் 1960களின் போதும், மூன்றாவதாக ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலையின் போதும் எதிர்கொண்டனர். ஆம். வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் இன அழிப்பை 1947 முதற்கொண்டே சந்தித்து வருகின்றனர். பிரதமர் ஷேக் ஹசீனா அரசியல் அமைப்புச் சட்டத்தில் ‘மதச் சார்பின்மை’ என்னும் சொற்களை மீண்டும் சேர்த்தாலும், ‘அல்லாவின் பெயரால், மிகவும் கருணையுள்ள, மிகவும் இரக்கமுள்ள’ என்னும் குரான் மற்றும் ‘இஸ்லாமிய நாடு’ ஆகிய வாசகங்கள் மாற்றப்படாமல் அப்படியேதான் உள்ளன. எனவே அரசியல் அமைப்புச் சட்டமே முன்னுக்குப் பின் முரணாகத்தான் இருக்கிறது. இராணுவ ஆட்சியில் பாகிஸ்தானின் இன அழிப்புக் கொள்கை தொடர்ந்து நடைபெற்றது.

இது இப்போதும் தொடர்கிறதா?

ஆமாம். 1947ல் 29.7%ஆக இருந்த சிறுபான்மையினர் மக்கள் தொகை 1970ல் 20% ஆகவும், தற்போது 10% ஆகவும் கணிசமாகக் குறைந்துள்ளது. இவர்களுள் இந்துக்களின் மக்கள் தொகை 8%-9% மட்டுமே.

அப்படியெனில் இந்துக்கள் எங்கே காணாமல் போனார்கள்?

பெரும்பான்மையோர் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். வகுப்புவாத வன்முறையின் வளர்ச்சியையும், பரவலையும், கட்டுப்படுத்தாத காரணத்தால் பிரிட்டிஷ் இந்தியப் பிரிவினை தோல்வி அடைந்துவிட்டது. 1947ல் இந்தியத் தலைவர்கள் தவறான கொள்கைகளைப் பின்பற்றிப் பிரிவினைக்கு ஒப்புக் கொண்டதால் வங்கதேசச் சிறுபான்மையினர் கடுமையான துன்பத்துக்கு உள்ளாயினர்.

வங்கதேசத்தில் மதச்சார்பின்மை வலுப்பெற்றதும், அதன் ஆதரவாளர்களே வங்கதேச விடுதலைப் போரில் தலைவர்களாக இருந்ததும் உண்மை என்றாலும், முஜிபுர் ரஹ்மான் படுகொலைத் தொடர்ந்து இக்கொள்கை திரும்பப் பெறப்பட்டு வங்கதேசம் மினி-பாகிஸ்தானாக மாறிவிட்டது. தாலிபான் மற்றும் அல்-கொய்தா ஆகியவற்றால் ஊக்கம் பெற்ற வன்முறைக் குழுக்கள் இன்று இன்னும் வலுவடைந்துள்ளன. ஷேக் ஹசீனா அரசு மதச்சார்பின்மைக்கு ஆதரவளித்து அதைச் சந்தேகத்துக்கு இடமின்றி வலுப்படுத்த முனைந்தாலும், வங்கதேசத்தை மீண்டும் முழுமையான மதச்சார்பற்ற நாடாக மாற்றும் அவரது முயற்சிக்கு வகுப்புவாத வன்முறைக் குழுக்கள் தடையாக இருக்கின்றன.

உதாரணத்துக்கு சிட்டகாங்க் மலைப் பிரதேசத்தில் வங்க முஸ்லிம்கள் சதவிகிதம் மொத்த மக்கள் தொகையில் 1% முதல் 2% வரை மட்டுமே. பெரும்பான்மையோர் பழங்குடி இன மக்களே. ஆனால் இன்றைக்குப் பழங்குடியினர் எண்ணிக்கை 49% ஆக குறைந்துள்ளது. குறிப்பாக வங்க சக்மாஸ் பழங்குடி இனத்தவர் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டு அவர்கள் வசித்த பகுதிகளில் மியான்மார் முஸ்லிம் அகதிகள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

கல்வியறிவுடன் தொழில்முறை வல்லுநர்களாகவும் இருக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு வாழ்க்கை எப்படி இருக்கிறது?

மக்கள்தொகை புள்ளிவிவரக் கணக்கெடுக்கின்படி இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் கிறித்துவர்களின் கல்வியறிவு முஸ்லிம்களை விடவும் மேம்பட்டதாக இல்லாவிட்டாலும் அவர்களுக்கு இணையாக இருக்கிறது.

கல்வியறிவு பெற்ற இந்துக்கள் எங்கே போனார்கள்:?

கடந்த ஏழு ஆண்டுகளாகத்தான் அரசுப் பணிகள் இந்துக்களுக்காகத் திறந்து விடப்பட்டுள்ளன. இதற்கு முக்கியக் காரணம் ஷேக் ஹசீனா. ஆனாலும் இன வேறுபாடு இன்னும் நிலவுகிறது. மக்கள் தொகை விகிதாசாரத்தை விடவும் பாராளுமன்றத்தில் மத சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் குறைவாகவே இருக்கிறது. இது கடந்த 70 ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது. இருந்தாலும், முதல்முறையாக, வங்கதேசம் தலைமை நீதிபதியாக சுரேந்திர குமார் என்னும் முஸ்லிம் அல்லாதவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் குறைந்த அளவில் அரசு செயலர்களும் பணியில் உள்ளனர்.

இராணுவத்தில் ஆள் சேர்ப்பு எப்படி உள்ளது?

இராணுவத்தில் ஆள் சேர்ப்பு அதிகரித்துள்ளது என்றாலும், எண்ணிக்கை இன்னும் குறைவாகவே இருக்கிறது.

வங்களா தேச விடுதலை யுத்தத்தில் போர்க் குற்றம் இழைத்தவர்கள் மீதான விசாரணை மற்றும் தண்டனை வழங்குவதில் ஈடுபட்டுள்ள பன்னாட்டுக் குற்றவியல் தீர்ப்பாயத்தில் அரசு வழக்கறிஞர்களுள் ஒருவராக நீங்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்?

நான் வழக்கறிஞன் என்பதால் அரசு வழக்கறிஞராகச் சிறப்பாகச் செயல்படுவேன் என்று அரசு கருதியிருக்கலாம். மேலும் நான் இந்து – பௌத்த – கிறித்துவ ஒற்றுமை அமைப்பின் (இந்து – பௌத்த-கிறித்துவ ஓக்கியா பரிஷத்) பொதுச் செயலர். இதன் தலைவர் விடுதலைப் போரில் பங்கேற்ற 11 செக்டார் தளபதிகளுள் ஒருவரான மேஜர் ஜெனரல் சிஆர் தத்தா (ஓய்வு) ஆவார்.

1971 போருக்கு முன்பு ஏராளமான வங்க இந்துக்கள் துன்புறுத்தப்பட்டதாலும், கொல்லப்பட்டதாலும், உங்கள் நியமனத்தின் நோக்கம் மத ரீதியான சிறுபான்மையினருக்குச் சாதகமான சமிக்ஞை அனுப்புவதுடன், பழைய காயங்களுக்கு மருந்திடுவதற்காகவும் மட்டுமே என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?

ஆம். உண்மைதான்.

போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனை அளித்தது இந்து – முஸ்லிம் உறவுக்குப் பாலமாக அமைய உதவியதா?

விசாரணை தொடர்ந்து நடைபெற்றுப் போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் மட்டுமே நாட்டின் அரசியலில் மாற்றம் நிகழும். 1975 முதல் மத அடிப்படைவாதிகளால் பலவீனமடைந்த மதச்சார்பின்மை அரசியல் வலுப்பெறும். வங்கதேசத்தில் 1971 விடுதலைக்கு ஆதரவான மற்றும் எதிரான குழுக்கள் இன்னும் உள்ளன. ஆதரவுக் குழுவில் இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் கிறித்துவர்கள் அங்கம் வகிக்கின்றனர். அவர்கள் பங்களாதேஷின் மதச் சார்பின்மை எண்ணத்தின் பிரதிநிதிகள். எதிரான குழுவில் அல் குவைதா மற்றும் தாலிபான் தீவிரவாத அமைப்புகளின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட இஸ்லாமியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

பங்களாதேஷை விட்டு வெளியேற வேண்டுமென எப்போதும் எண்ணியதுண்டா?

இல்லை. இல்லை. இல்லவேயில்லை. வங்கதேச இந்துக்கள் இடையே பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது. இந்தப் பாதுகாப்பின்மை வளர்ந்தால், வங்கதேசத்தில் சிறுபான்மையினர் இன்னும் அடுத்த இருபது ஆண்டுகளில் முற்றிலுமாக இருக்க மாட்டார்கள்.

நான் மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்டேன். 1962ல் முதல் முறையாக சில நாள்கள் சிறையில் இருந்தேன். கல்லூரி மாணவனாக இருந்த நான் அயூப் கானுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதால் சிறையில் அடைக்கப்பட்டேன்.

பிறகு 1968ல் வீட்டிலிருந்த போது கைதாகிப் பல மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தேன். கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டேன். 1970 விடுதலைப் போரில் கலந்து கொண்டேன். ராணுவ ஆட்சிக்கு எதிரான இயக்கத்தில் நான் ஈடுபட்டிருந்ததால், 1977ல் காவல் துறை என்னைக் கைது செய்ய என் வீட்டைச் சோதனையிட்டனர். ஆனால் தலைமறைவாகித் தப்பித்தேன்.

2001 – 2006 கலீதா ஜியா ஆட்சியில் தீவிரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் என் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நானொரு விடுதலைப் போராட்ட வீரன். என்னால் எப்படி வங்கதேசத்தை விட்டு வெளியேற வேண்டுமென எண்ண முடியும்?

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இது வங்கதேசம் இந்துக்களின் மீது எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது?

மதவாதம், தீவிரவாதம், தெளிவற்ற நிலை உள்ளிட்ட அனைத்துக்கும் நாங்கள் எதிரானவர்கள். மதச்சார்பின்மை ஜனநாயகத்தின் அஸ்திவாரமாக இருக்க வேண்டும். இந்தியாவில் ஜனநாயகம் ஆழமாக வேரூன்றி சட்ட விதியாக உள்ளது. ஆனால் வங்கதேசத்தில் ஜனநாயகம் இன்னும் ஆழமாக வேரூன்றவும் இல்லை, சட்ட விதியாக மாறவும் இல்லை. இந்திய முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களை மதவாத சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

கிழக்குப் பாகிஸ்தானில் வளர்ந்த கவிஞர் ரபீந்திரநாத் தாகூர், நடிகை சுசித்ரா சென் உள்ளிட்ட ஐகான்களை வங்கதேசம் மக்கள் மறந்து விட்டார்களா?

மறக்கவில்லை. நினைவில் வைத்துக் கொண்டாடி வருகின்றனர். விடுதலைப் போராட்டக்காரர்கள் மதச்சார்பின்மையுடன் விளங்கினார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ரவீந்திரநாத் தாகூர், சுசித்ரா சென், உத்தம் குமார், அமர்த்தியா சென், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணவ் முகர்ஜி மனைவி சுவ்ரா முகர்ஜி ஆகியோரின் சாதனைகள் குறித்து இங்குள்ள மக்கள் பெருமை கொள்கின்றனர் என்பதே உண்மை.

நன்றி: https://scroll.in/article/847725/interview-hindus-in-bangladesh-have-faced-ethnic-cleansing-since-1947

Leave a Reply