Posted on Leave a comment

ஏசு கிறிஸ்துவும் இந்துக்களும் | சீதாராம் கோயல், தமிழில்: ஜடாயு

(சீதா ராம் கோயல் எழுதிய Jesus Christ: An Atrifice for Aggression (1994) என்ற நூலின் முன்னுரை)

சுவிசேஷங்களின் படியான ஏசுவின் முதல் தரிசனம் எனக்கு 1956ல் கிட்டியது. எனது ஜெசூட் நண்பர் என்னை மதமாற்ற முயன்று, அந்த முயற்சியில் தோல்வியடைந்திருந்தார். பாட்னாவில் உள்ள மிஷன் தலைமையகத்திற்குத் திரும்பி வந்ததும், எங்களுக்கிடையில் நடந்த உரையாடல்:

அவர் கேட்டார்: ‘ஏசு ஒரு அவதார புருஷர் என்று நீ நம்புகிறாயா?’

‘ஆம், நம்புகிறேன்’, என்றேன் நான்.

‘அவதார புருஷர் பொய் கூறக் கூடுமா?’

‘கூடாது என்றுதான் கருதவேண்டும்.’

‘ஏசு தான் ஒருவரே கடவுள் என்று கூறுகிறாரென்றால்?’

‘அப்படிக் கூறியிருக்க முடியாது’.

எனது நண்பர் உடனே புதிய ஏற்பாட்டை எடுத்து சுவிசேஷங்களிலிருந்து பல பத்திகளை வாசிக்க ஆரம்பித்தார். அவற்றில் பற்பல வாக்கியங்களில் ஏசு தான் ஒருவரே கடவுள் என்பதை மட்டுமல்ல, அவரது இந்த உரிமைக்கோரலை ஏற்காதவர்கள் அனைவரும் நரகக் குழியில் எரிவார்கள் என்றும் கூறியிருந்தார். ஏசு என்பவர் அவரை உயர்த்திப் பிடிக்கும் இந்துக்கள் நம்ப வைக்கப் பட்டிருப்பது போல ‘மலைப் பிரசங்கம்’ மட்டுமல்ல என்பதை ஒருவிதமான வலிமிகுந்த வியப்புடன் புரிந்து கொண்டேன்.

ஆண்டுகள் சென்றன. ஏசுவுடன் செலவழிக்க என்னிடம் நேரமிருக்கவில்லை. 1980களில் ராம் ஸ்வரூப் ஏகஇறை மதங்களைப் பற்றிய எனது புரிதலை அறிவார்ந்ததாகச் செய்ததற்குப் பின்னர், நான் மீண்டும் ஏசுவின் பக்கம் கவனம் செலுத்தினேன். அப்போது தான் சுவிசேஷங்களை முழுமையாக வாசித்தேன். திகிலடைந்தேன் என்றே கூறவேண்டும். கிறிஸ்தவத்தின் வரலாறு ஏன் இப்படி இருக்கிறது என்பது அப்போதுதான் புலப்பட்டது. விஷத்தின் ஊற்று சுவிசேஷங்களில் காணும் ஏசுவிடத்திலேயேதான் உள்ளது என்பது புரிந்தது. தொடர்ந்து கற்றேன்.

சில வருடங்கள் முன்பு கிறிஸ்தவ மிஷநரிகளின் அச்சுறுத்தல் குறித்து ஒரு காந்திய நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர்கள் வஞ்சனையும் கபடமும் கொண்டவர்கள் என்பதில் அவர் என்னுடன் உடன்பட்டார். நாம் மிஷினரிகளை சமாளிக்க வேண்டும் என்றால் ஏசுவைப் பற்றிய முழு உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று நான் கூறினேன். அவர் நடுங்குவது தெரிந்தது. தொண்டை அடைக்க, உணர்ச்சி கலந்த குரலில், ‘ஸீதாபாயி, ஜீசஸ் கோ குச் மத் கஹியே’ (சீதா அண்ணா, ஏசுவைப் பற்றி மட்டும் எதுவும் சொல்லிவிடாதீர்கள்) என்றார். ‘நீங்கள் சுவிசேஷங்களைப் படித்திருக்கிறீர்களா’ என்று அவரிடம் கேட்டேன். அவர் எரிச்சலடைந்தார். ‘எதற்கு இந்தத் தனிப்பட்ட கேள்வி?’ என்று திருப்பியடித்தார்.

அந்தப் பேச்சை அப்போதே நிறுத்தவேண்டியதாயிற்று. ஒவ்வொரு முறையும் கருத்துப் பிடிவாதம் கொண்ட நபர்களிடம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய அவர்களது கருத்துக்கான அடிப்படை என்ன என்று நான் கேட்கும்போது, நான் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுகிறேன் என்று குற்றம் சாட்டப் படுகிறேன். ‘ஒரு கழுதையாக இருப்பதன் சாதகங்கள்’ (Advantages of Being an Ass) என்று ஒரு கட்டுரை எழுதலாமா என்று யோசிக்கிறேன்.

இப்போது அந்தத் தடையைத் தாண்டி விட்டேன். எனது காந்திய நண்பர் இதை எப்படி எடுத்துக்கொள்வார் என்று தெரியவில்லை.

முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் நடந்துகொள்ளும் விதத்தைப் பற்றியதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தி வந்த இந்துக்கள், அத்தகைய நடத்தையை அவர்களிடம் உருவாக்கும் சமய நம்பிக்கைக் கட்டுமானங்கள் (belief system) மீது எந்தக் கவனமும் செலுத்தவில்லை என்பதே உண்மை. இது குறித்துப் பல வருடங்களாக யோசித்திருக்கிறேன். நாம் கிறிஸ்தவ மதமாற்ற மிஷநரிகளை ஆட்சேபிக்கிறோம், ஆனால் கிறிஸ்தவத்தைக் குறித்தும் அதன் கடவுளான ஏசுவைக் குறித்துப் பேச மறுக்கிறோம். நாம் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஆட்சேபிக்கிறோம், ஆனால் இஸ்லாம் குறித்தும் அதன் இறைத்தூதர் குறித்தும் எதையும் பார்க்கக் கூட மறுக்கிறோம். இந்துக்களின் இந்தப் பழக்கம் சிறிதும் அறிவுக்கும் தர்க்கத்துக்கும் பொருந்தக் கூடியதாக இல்லை.

சொல்லப் போனால், நாம் இதைவிட ஒருபடி மேலே செல்கிறோம். நாம் கிறிஸ்தவ மிஷனரிகளிடம் அவர்கள் செய்துகொண்டிருப்பதைச் செய்யவேண்டாம் என்று ஏசுவின் பெயரால் கோரிக்கை விடுக்கிறோம். நாம் இஸ்லாமியர்களிடம் அவர்கள் செய்துகொண்டிருப்பதைச் செய்யவேண்டாம் என்று முகமதுவின் பெயரால் கோரிக்கை விடுக்கிறோம். இந்த செயல்முறையில், நாம் ஒரு ‘உண்மையான’ ஏசுவையும், ‘உண்மையான’ கிறிஸ்தவத்தையும் கண்டுபிடித்திருக்கிறோம். அதே போல, ஒரு ‘உண்மையான’ முகமதுவையும் ஒரு ‘உண்மையான’ இஸ்லாத்தையும் கூட உருவாக்கிவிட்டிருக்கிறோம். மஷினரிகளும் முல்லாக்களும் நமது கண்டுபிடிப்புகளைப் பார்த்து சிரிக்கிறார்கள். சிரித்துக் கொண்டே நமது அறிவுப்பலவீனத்தை அவர்களுக்கேற்ற வகையில் பயன்படுத்திக் கொண்டு தங்கள் காரியங்களைத் தொடர்ந்து வழக்கம் போல் செய்துகொண்டிருக்கிறார்கள். இத்தனை காலமாக ‘வகுப்புவாத’ பிரச்சினைகளை நாம் ஏன் தீர்க்க முடியவில்லை என்றால் இதுதான் காரணம். நமது சொந்த மக்களான இந்தியக் கிறிஸ்தவர்களும் இந்திய முஸ்லிம்களும் ஏன் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்தின் வசியத்திற்கு ஆட்பட்ட பிறகு நம்மிடமிருந்து முற்றிலும் அன்னியப் பட்டுப் போகவேண்டும் என்பதை அறிந்துகொள்வதற்கு நாம் எந்த முயற்சியும் செய்யவில்லை.

தங்களைத் துன்புறுத்தும் ஒரு சக்திவாய்ந்த கொடுமைக்காரனை மென்மைப் படுத்துவதற்கு வேறு எந்த வழியும் தெரியாதபோது, பலவீனர்கள் அவனது நாயகர்களையும் அவனது மதத்தையும் புகழ்வதற்கான அவசியம் ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய இரண்டு மதங்களின் விஷயத்திலும் இத்தகைய நெருக்கடி நிலையை இந்துக்கள் அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் அதேவிதமான மனநிலை அப்படியே தொடரவேண்டும் என்பதற்கு ஒரு அவசியமுமில்லை. ‘ஆபத்துக்கால தர்மம்’ என்ற நடைமுறையை ‘என்றென்றைக்குமான (சனாதன) தர்மம்’ என்பதாக மாற்றும் தவறை இந்துக்கள் ஒருபோதும் செய்யக் கூடாது.

*


சீதாராம் கோயல்

Jesus Christ: An Atrifice for Aggression என்ற இந்த முக்கியமான நூல் ஏசு கிறிஸ்து என்னும் கருத்தாக்கம் ஒரு ஆக்கிரமிப்புக் கருவி அன்றி வேறில்லை என்பதை முன்வைக்கிறது. வரலாற்றுச் சான்றுகள் காட்டும் ஏசு, புனைவுகள் மற்றும் கற்பனைகளின் மூலம் கட்டி எழுப்பட்டுள்ள ஏசு, சுவிசேஷங்களின் மூலம் விசுவாசத்திற்குரியவராக முன்னிறுத்தப் படும் ஏசு என்று மூன்று கோணங்களில் ஏசுவைப் பற்றிய ஆதாரபூர்வமான ஆய்வுகளையும், நவீன காலகட்டத்தில் மேற்குலகில் கிறிஸ்தவத்தின் அடித்தளம் முழுமையாக வீழ்ந்து நொறுங்குவதையும் 120 பக்கங்களே கொண்ட இந்த சிறிய நூலில் கச்சிதமாக விவரிக்கிறார் கோயல். Jesus is Junk என்று தலைப்பிடப் பட்டுள்ள இறுதி அத்தியாயத்தைத் தொடர்ந்து, சில மேற்கத்திய அறிஞர்களுடன் அவர் நடத்திய கடித உரையாடல்களும் உள்ளன. இந்த நூலை இணையத்தில் இங்கு வாசிக்கலாம் – http://bit.ly/jc-srgoel

சீதாராம் கோயல் (1921-2003) சுதந்திர இந்தியாவின் ஒரு முக்கியமான வரலாற்று அறிஞர் மற்றும் சமூக சிந்தனையாளர். 1940களில் தீவிர கம்யூனிச ஆதரளவாக இருந்து 50களில் சோவியத் அரசின் கோரங்கள் பற்றி அறிந்து, அதைத் துறந்து இந்து தர்மம், இந்திய தேசியம் என்ற தன் வேர்களுக்குத் திரும்பினார். இந்து சமுதாய, அரசியல் பிரச்சினைகள், கம்யூனிசத்தின் கொடூரங்கள், கிறிஸ்தவ மதப் பரவல் மற்றும் மிஷினரிகள், கிறிஸ்தவ மத அடிப்படைகளைத் தகர்க்கும் மேற்கத்திய அறிவியக்கம், இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பின் வரலாறு மற்றும் அதில் இழையோடும் ஜிகாத் வன்முறைக் கோட்பாடு, இவற்றைப் பற்றிய ஆழமான ஆய்வுகள், வரலாற்று உண்மைகளை வெளிக் கொணரும் பல முக்கிய நூல்களை அவர் எழுதியும், தொகுத்தளித்தும் உள்ளார். ஆற்றொழுக்குப் போன்று, அதே சமயம் கூர்மை தெறிக்கும் ஆங்கிலத்தில் 35க்கும் மேற்பட்ட நூல்களையும், குறிப்பிடத்தக்க ஹிந்தி மொழியாக்கங்களையும், பத்திரிகைக் கட்டுரைகளையும் அவர் படைத்திருக்கிறார். கோயலின் இஸ்லாம் தொடர்பான சில வரலாற்று ஆய்வு நூல்களைத் தடைசெய்யுமாறு அராஜக கோரிக்கைகள் எழுந்தன. இரண்டு நூல்கள் குறுகிய காலத்திற்கு தடை செய்யப் பட்டு, பின்னர் நீதிமன்றக் குறுக்கீட்டால் தடை விலக்கப் பட்டது. நேருவின் அரசியல் கொள்கைகள், எமர்ஜென்சி, போலி மதச்சார்பின்மை இவை பற்றிய மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சீதாராம் கோயல், மறைந்த அரசியல் தலைவர்களான ஜெயப்ரகாஷ் நாராயண், கே.ஆர்.மல்கானி மற்றும் காந்தியவாதி தரம்பால் ஆகியாரின் நெருங்கிய நண்பரும், உடன் பணியாற்றியவரும் கூட. மறைந்த தத்துவ சிந்தனையாளர் ராம் ஸ்வரூப் தொடங்கிய வாய்ஸ் ஆஃப் இந்தியா என்னும் இலாப நோக்கற்ற பதிப்பகத்தைத் தன் இறுதி நாள் வரை நடத்தி வந்த இந்த கர்மயோகி இன்று இந்து எழுச்சி பற்றிய விமர்சனங்களுக்காக அதிகம் கவனிக்கப்படும் கொய்ன்ராட் எல்ஸ்ட், டாக்டர் டேவிட் ஃப்ராலி, அருண் ஷோரி, சுபாஷ் கக் போன்றவர்களுக்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும், பதிப்பாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply