Posted on Leave a comment

லும்பன் பக்கங்கள் – 2 | அரவிந்தன் நீலகண்டன்

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் எழுதிய ‘என் சரித்திரம்’ மிகவும் புகழ்பெற்ற நூல். அதைப் போலவே முக்கியமான மற்றொரு நூல் அவர் எழுதிய அவரது குருநாதரின் வாழ்க்கை வரலாறு. ‘திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’.

பொதுவாக ஒருவரது பிறந்த நாளை இன்றைய சுயசரிதங்களில் தேதி-மாதம்-ஆண்டு என்று சொல்லிவிட்டுப் போய்விடுவோம். கிரிகோரிய காலண்டர்படி. அது நம் பழக்கமாக ஆகிவிட்டது. ஆனால் ‘வரலாற்றுணர்வு இல்லாத’ சம்பிரதாய இந்து முறைப்படி உ.வே.சாமிநாதையர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் பிறந்த தேதியை இப்படி எழுதுகிறார்:

‘பவ வருஷம், பங்குனிமாதம். 26-ம் தேதி, குருவாரம், அபரபட்சம் துவாதசி, நாழிகை முப்பதெட்டரையே யரைக்கால், சதயம் நாறபத்திரண்டரையே யரைக்காலுக்கு மேல் பூரட்டாத் நக்ஷத்திரம், சுபநாம யோகம் ஐந்தரையேயரைக்கால், கவுலவகரணம் ஆறரையே அரைக்கால், சேக்ஷத்தியாச்சியம் அரையே அரைக்கால், அகஸ்முப்பதே கால்: இந்தச் சுபதினத்தில் இராத்திரி இருபதே முக்கால் நாழிகை அளவில் மகர லக்கினத்தில் ஜனனம். குரு மகாதசை ஜனன காலத்தில் நின்றது 13 வருஷம், 11 மாதம், 7 நாள்.’

இப்படி பிறந்த நாளை முழு ஜாதகமாகவே எழுதிவிடுகிற சாமிநாதையர் இதற்கான பின்குறிப்பில் எழுதுகிறார்:

‘இந்த ஜாதகம் பிள்ளையவர்கள் தந்தையாராலேயே குறித்து வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பிரதி பிள்ளையவர்கள் குமாரராகிய சிதம்பரம் பிள்ளையிடமிருந்து கிடைத்தது.’

இது இந்து பாரம்பரிய வரலாற்று ஆவணப்படுத்தல் முறை. சர்வ நிச்சயமாக மேற்கத்திய பிறந்த தேதியை மட்டும் சொல்லும் ஒற்றைவரித்தன வரலாற்றுத்தரவை விட மேம்பட்டது. ஆனால் நாம் இதை மூடநம்பிக்கை என்று இழந்துவிட்டு இதற்கும் கீழ்ப்பட்ட ஒரு முறையை போற்றி நம்மை வரலாற்றுணர்வு இல்லாதவர்கள் என சொல்லிப் புளகாங்கிதம் அடைகிறோம்.

இதோ இப்போது ஆங்கில ஆண்டு 2021 நாட்காட்டிகளைப் பாருங்கள். உலகமெங்கும் உள்ள நாட்காட்டிகள். தமிழ்நாட்டில் ராணிமுத்து முருகன் பட நாட்காட்டி மிகவும் பிரபலம். அதில் ஒரு நாளுக்கான தாளை எடுத்துப் பாருங்கள். அதில் இருக்கும் விவரங்களைப் பாருங்கள். அந்த நாளைக் குறித்து அந்த அளவிற்கான செய்திகள், லக்னம், திதி, நல்ல நேரம், எம கண்டம், ஊர் திருவிழாக்கள் இத்யாதி இத்யாதி கொண்ட பொதுஜன புழக்கம் கொண்ட மற்றொரு நாட்காட்டி இன்னொரு பண்பாட்டில் இருக்கிறதா என பாருங்கள்!

ஹிந்துப் பண்பாடு தன்னளவில் தானாக முன்னெடுக்கப்படும் போது எத்தனை தன்னியல்பு செழிப்புடன் தளைக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு ராணிமுத்து நாட்காட்டி.

ஸ்ரீ சாமிநாதையர் தம் நூலில் ‘பழைய கால பள்ளிக் கூடங்கள்’ என்கிற தலைப்பில் எழுதியிருப்பது முக்கியமானது. இந்த தலைப்புக்கான தேவை என்னவென்றால் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் தந்தையார் ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை அவர்களை அதவத்தூர் எனும் ஊர் மக்கள் அவர்கள் ஊரிலேயே தங்கி தம் குழந்தைகளுக்கு கணக்காயராக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். அவருக்கு ஏற்கெனவே வருடச் செலவுக்கு முப்பத்தாறு கலம் நெல் கொடுக்க ஏற்பாடும் செய்திருந்தார்கள். கணக்காயரென்றால் திண்ணைப்பள்ளிக் கூட உபாத்தியாயர். இந்த விஷயத்தைச் சொல்லும் போதுதான் தமிழ்த் தாத்தா எழுதும் போது வழக்கொழிக்கப்பட்டுவிட்ட நம் பள்ளிக் கூட முறையை விஸ்தாரமாக விவரிக்கிறார்:

‘பண்டைக்காலத்தில் தமிழ்நாட்டில் ஊர்கள் தோறும் பள்ளிக் கூடங்கள் இருந்தன. ‘திண்ணப் பள்ளிக் கூடங்கள்’ என்னும் பெயரால் அவை வழங்கப் பெறும். அங்கே தமிழ்நூல்களைப் படித்து இன்புறுவதற்குரிய அறிவு பெறுவதற்குக் கருவிகளாகிய நிகண்டு, நீதி நூல்கள், பிரபந்தங்கள் முதலியன கற்பிக்கப்பட்டன. கணிதத்துக்கு அடிப்படையான எண்சுவடி முதலியவற்றையும் கற்பித்தனர். அவற்றின் உதவியால் மிகச்சிறிய பின்னங்களையும் அமைத்துக் கணக்கிடும் ஆற்றல் மாணாக்கர்களுக்கு உண்டாகும். குடும்பத்துக்கு வேண்டிய வைத்திய முறைகளும், நாள் பார்த்தல், சாதகம் பார்த்தல் முதலிய சோதிட நூல் வழிகளும், ஆலய வழிபாட்டு முறை, குலாச்சாரங்கள் முதலியனவும், ஞாபக சக்தியை வளர்ப்பதற்குரிய பயிற்சிகளும் கற்பிக்கப்பட்டன. உபாத்தியாயர்கள் மாணவர்களுள் ஒவ்வொருவரையும் தனித்தனியே கவனித்து தக்க உணர்ச்சியடையும்படி செய்வார்கள். வாழ்க்கைக்கு இன்றியமையாத பல விஷயங்கள் அத் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்பட்டன. ஆதலின் அவற்றுக்கு ஒரு தனி சிறப்பு இருந்து வந்தது. கற்பிக்கும் உபாத்தியாயர்கள் மற்றெல்லோராலும் நன்கு மதிக்கப்பட்டனர். … அவர்கள் இன்றியமையாதவர்களாகவும் யாவரும் மகிழ்ந்து மேற்கொள்ளும் இயல்பினராகவும் இருந்து வந்தார்கள். கணக்காயர்கள் சிறந்த தமிழ் புலமையும், நற்குண நல்லொழுக்கமும் வாய்ந்தவர்களாக இருந்தமையே அத்தகைய நன்மதிப்பை அவர்கள் பெறுவதற்குக் காரணமாக இருந்தது. பண்டைக்காலத்தில் மிகச்சிறந்த தமிழ்ப் புலவர்களே கணக்காயர்களாக இருந்தனர் என்று தெரிகிறது. நக்கீரரின் தந்தையாராகிய மதுரைக் கணக்காயனார் என்பவரும் கணக்காயன் தத்தன் என்னும் சங்கப் புலவரும் அத்தகையவர்களே.’

தரம்பால் எழுதிய அழகிய மரத்துக்கு வார்த்தைச் சித்திரச் சான்று அளித்துள்ளார் தமிழ்தாத்தா சாமிநாதையர்.

திண்ணைப் பள்ளிக்கூடங்களின் ஒரு முக்கிய அம்சத்தை இங்கு கவனிக்க வேண்டும். இப்பள்ளிக் கூடங்களை நடத்தியவர்கள் குடும்பஸ்தர்கள். துறவியரல்ல. ஏன் இதைச் சொல்ல வேண்டியதிருக்கிறதென்றால் தென்னகத்தில் சமணத்துறவிகளே கல்வியாளர்களாக இருந்தார்கள் என்று ஒரு பிரசாரம் உண்டு.

இந்த பிரசாரத்துக்கு அடிப்படையாக இருப்பது ஒருவித இந்து வெறுப்புதான். அதாவது ‘சமண பௌத்த மதங்களே எல்லா தரப்பு மக்களிடமும் கல்வியை ஜனநாயகமாகக் கொண்டு சேர்த்தன. அந்த சமத்துவப் பொன்னுலகில் வைதீக சமயம் மண்ணை அள்ளி போட்டுவிட்டது’ என்பதுதான் அதன் உள்ளே ஓடுகிற வெறுப்பு நீரோட்டம். ஆனால் சங்க காலம் தொட்டே குடும்பஸ்தர்கள் கணக்காயர்களாக இருந்திருக்கிறார்கள். அதுவும் நக்கீரர் போன்ற தெளிவாக வைதீக சமயத்தைச் சார்ந்த சான்றோரின் தகப்பனாரே கணக்காயராக இருந்திருக்கிறார். இதன் மூலம், சனாதனம் இங்கு கல்வியை எல்லாத் தரப்பினருக்கும் கொண்டு போவதற்குத் தடையாக இல்லை என்பதுடன், அது கல்வி சேவையை தன் சமயக் கோட்பாடுகளைப் பரப்பும் கருவியாகப் பயன்படுத்தாமல் தன் இயற்கையான சமுதாயக் கடமையாக மாற்றியுள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இங்கு கல்வி அளிப்பது சமயப் பிரசாரம் அல்ல சமுதாய அறம் – தர்மம்.

இப்போது ஒரு கேள்வி வரலாம். இந்தத் திண்ணப் பள்ளிக்கூடத்தில் படித்ததெல்லாம் சமுதாயத்தில் உயர்ந்த அடுக்கில் இருந்தவர்களா என. ஏனென்றால் நம் மனம் அப்படித்தான் மனோவசியம் செய்யப்பட்டிருக்கிறது. ‘ஆனா அதெல்லாம் மேல்சாதிக்காரனுகளுக்குத்தானே…’

அன்றைய, அதாவது உ.வே.சாமிநாதையருக்கும் ஒரு தலைமுறை முன்னால், திரிசிரபுரத்திலும் அதனைச் சூழ்ந்த ஊர்களிலும் வாழ்ந்த பிரசித்தி பெற்ற வித்துவான்களின் பட்டியல் ஒன்றை இங்கு தமிழ்த் தாத்தா தருகிறார். அந்த பட்டியலே இன்றைய மன-மாசு சூழலால் நமக்கு எழும் கேள்விக்கு பதில் சொல்லும்:

  • உறையூர் முத்துவீர வாத்தியார்: திருசிரபுரம் வண்டிக்காரத் தெருவில் இருந்தவர். கொல்லராகிய இவர் கம்மாள வாத்தியாரென்றும் அழைக்கப்பட்டார். முத்து வீரியமென்கிற இலக்கண நூலை இவர் இயற்றியிருக்கிறார்.
  • திரிசிரபுரம் சோமசுந்தர முதலியார்: தொண்டை மண்டல வேளாளர். சைவ நூல்களில் நல்ல பயிற்சியை உடையவர்.
  • வீமநாயக்கன் பாளையம் இருளாண்டி வாத்தியார்: கால்களிரண்டும் பயனற்றவையாக இருந்தமையால் ஒரு எருதின் மீதேறி மாணாக்கருடன் செல்பவர் இவர்.
  • பாலக்கரை வீரராகவ செட்டியார்: சோடசவதானி தி, சுப்பராய செட்டியாருடைய தந்தையார்.
  • கொட்டடி ஆறுமுகம் பிள்ளை: திரிசிரபுரம் கள்ளத் தெருவில் வாழ்ந்தவர். தமிழ் இலக்கண நூல்களிலும் மருத்துவ நூல்களில் தேர்ந்தவர். பலவகையான மருந்துகளை கொட்டடியில் இருந்து மக்களுக்கு நல்கி வந்தவரென்பதால் அவர் பெயர் முன்னர் ‘கொட்டடி’ என்கிற அடைமொழி வந்தது.

ஸ்ரீ சாமிநாதையர் எழுதுகிறார்:

‘சென்னை இராசதானிக் கலாசாலையில் இருந்தவரும் குணசாகரமென்னும் நூல் முதலியவற்றை இயற்றியவருமாகிய சேக்ஷையங்கார் என்பவர் இவரிடம் பாடங் கேட்டவர். இவரும் சேக்ஷையங்காரும் ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்ள வேண்டிய செய்திகளை செய்யுட்களாகவே அஞ்சற் கடிதங்கள் மூலம் தெரிவித்துக் கொள்வது வழக்கம்; அச்செய்யுட்களில் சிலவற்றை நான் கேட்டிருக்கிறேன்.’

  • சோதிட வல்லுனரான கற்குடி மருதமுத்துப் பிள்ளை
  • திருநயம் அப்பாவையர் – திருவிளையாடற் கீர்த்தனம் முதலியவற்றை இயற்றியவர். பரம்பரையாகவே தமிழ்ப்புலமை வாய்ந்த குடும்பத்தினர்.
  • மருதநாயகம் பிள்ளை: இலக்கிய இலக்கணங்களிலும் மெய்கண்ட சாத்திரத்திலும் நல்ல பயிற்சி உடையவர். தமிழில் மெய்கண்ட சாத்திரத்தை முதன் முதலில் பதிப்பித்தவர்.

இவர்களில் எத்தனை பேர் ஐயா பிராம்மணர்கள்? எங்கே இருந்தது ‘பிராம்மண ஆதிக்கம்’?

இந்து சமுதாயத்தில் எத்தனை விசாலமாக கல்வி அறிவு மட்டுமல்ல புலமையும் பாண்டித்தியமும் சமுதாயத்தின் அனைத்துtஹ் தரப்பு அனைத்து சமுதாய மக்களிடமும் பரவியிருந்திருக்கிறது!

இது ஒரு ஊரில். ஒவ்வொரு ஊரிலும் இப்படி எல்லா சமுதாயங்களிலும் எத்தனை அறிவார்ந்த பெருமக்கள் இருந்திருப்பார்கள்! கணித வல்லுநர்கள், தமிழ்ப் புலமை வாய்ந்தவர்கள், மருத்துவ நிபுணர்கள், மூலிகை தாவர நிபுணர்கள், இலக்கண அறிஞர்கள், சமய சாத்திர அறிஞர்கள், கைவினை மேதைகள்…

ஆனால் ஆங்கிலேய ஆட்சி வந்த போது இந்த அறிவுகள் எவற்றுக்கும் மதிப்பில்லாமல் போனது அரசும் மிசினரிகளும் நடத்தும் கல்விச் சாலைகளில் படித்தவர்களுக்கே அரசுப் பதவிகள் என ஆனது, இங்கேதான் சாதி ஆதிக்கம் உருவாக ஆரம்பித்தது. ஆரிய திராவிட இனவாத விஷத்தை எளிதாகப் பரப்ப தகுந்த மனநிலை ஏற்பட்டது.

இன்றைக்கு தரம்பால் தேச பக்தர்களுக்குச் சிறந்த வரலாற்றாதரமாக இருக்கிறார். ஆனால் தரம்பாலுக்கு அப்பால் ஆராய்ச்சிகள் நகர வேண்டும்.

ஒவ்வொரு ஊரிலும் கடந்த முந்நூறு ஆண்டுகளிலிருந்து இருநூறு-நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் வரை வாழ்ந்த கணக்காயர்கள் வித்வான்கள் கண்டடையப்பட்டால் அது கொடுக்கும் சித்திரம் பேருண்மையின் வலிமை கொண்டதாக இருக்கும். இது, இன்று தமிழ் மனதைப் பீடித்திருக்கும் திராவிட காலனிய மிஷினரி மாசுகளை அகற்ற வல்லது.

மகாத்மா உள்ளுணர்ந்து தரம்பால் கண்டடைந்த அந்த அழகிய விருட்சம் ஊர் தோறும் கிளைகள் பரப்பி விழுதுகள் மண் பதித்து நல்லறிவின் நறுமண மலர்களையும் ஞான வாழ்வுக்கான அருங்கனிகளையும் அருளிய சித்திரம் அது. அச்சித்திரத்தை மக்கள் முன் வைக்க வேண்டியது தேடலுடைய ஒவ்வொரு தமிழ் ஹிந்துவுக்கும் கடமை.

Leave a Reply