Posted on 1 Comment

மகாபாரதம் கேள்வி பதில் – 10 | ஹரிகிருஷ்ணன்

செப்டம்பர் 2020 இதழில் கர்ணனைக் குறித்து ஆசிரியர் குழு எழுப்பியிருந்த சில கேள்விகளுக்கு விடைகூறும் முகமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறோம்.

அர்ஜுனனுக்குக்கும் கர்ணனுக்கும் நடக்கும் இறுதிப் போரின்போது, கர்ணனுடைய தேர்ச்சக்கரம் பூமிக்குள் அமிழத் தொடங்கியதும், ‘அர்ஜுனா! நான் இந்தத் தேர்ச் சக்கரத்தைத் தூக்கி நிறுத்தும் வரையில் என்மீது நீ அம்பு தொடுக்காமல் காத்திருக்க வேண்டும் என்று தர்மத்தின் பேரால் கேட்கிறேன்’ என்று கர்ணன் சொன்னதையும், ‘கர்ணா! இந்த நேரத்திலாவது உனக்கு தர்மத்தின் நினைப்பு வந்ததே! இதற்கு முன்னால், இன்னின்ன சமயங்களில் நீங்கள் பாண்டவர்களுக்கு எதிரான செயல்களைச் செய்துகொண்டிருந்த சமயத்தில் உனக்கு இந்த தர்மத்தின் நினைவு எங்கே போனது’ என்று அவனைக் கேள்விக் கணைகளால் துளைக்கும் கண்ண பெருமான், கர்ணனுக்கும் துரியோதனாதியருக்கும் தர்மத்தின் நினைப்பு எழாமல் பேன இடங்களைச் சுட்டி, அவன் மீது அடுக்கிய குற்றச்சாட்டுகளைக் கும்பகோணம் பதிப்பின்படியும், கிஸாரி மோஹன் கங்கூலியின் மொழிபெயர்ப்பின்படியும்; அவருடைய ஆங்கில மொழிபெயர்ப்பை அருள்செல்வப் பேரரசன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருப்பதையும் எடுத்து வைத்து, கண்ணபெருமான் கர்ணன் மீது இவ்வாறு சுமத்தும் குற்றச்சாட்டுகளின் எண்ணக்கை மொத்தம் பதினொன்று என்பதைப் பார்த்தோம்.

குற்றம்சாட்டுவது கண்ணனேயானாலும், அவர் சொல்லும் ஒவ்வொரு குற்றச்சாட்டும் வியாச மூலத்தில் எந்த இடத்தில் இடம்பெறுகிறது, இதில் கர்ணன் எவ்வாறு இடம்பெறுகிறான் என்பதையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மிகமிக ஆரம்பக்கட்டத்தில் நடந்த செயலான பீமனுக்கு பிரமாணகோடி (Pramanakoti) என்ற இடத்தில் விஷம் கொடுத்த ‘விஷமோதகம்’ என்ற சம்பவத்தில் கர்ணனுடைய பங்கைச் சென்ற இதழில் பார்த்தோம். இது கர்ணன் மீது கண்ணன் வைக்கும் மூன்றாவது குற்றச்சாட்டு. இதையடுத்து, கண்ணன் நான்காவது குற்றச்சாட்டாக இதைச் சொல்கிறான்: ‘காடுகளுக்குள் நாடுகடத்தப்பட்ட காலமும், {மறைந்து வாழ வேண்டிய} பதிமூன்றாவது வருடமும் கழிந்த பிறகும், பாண்டவர்களுக்கு அவர்களது அரசை நீங்கள் கொடுக்காதபோது, உனது அறம் எங்கே சென்றது?’

இந்தக் கேள்விக்கு ஆதாரம் தேட, நாம் மிகவும் பின்னோக்கிச் செல்லவேண்டியிருக்கும். பாண்டவர்களிடத்திலிருந்து சூதில் அரசைப் பறித்து, அவர்களை அடிமைகளாக்கி, சபையில் பாஞ்சாலியின் துகிலை உரித்து அவளை அவமானப்படுத்திய பிறகு, (தருமபுத்திரர் நீங்கலாக) பாண்டவர்கள் நால்வரும் (தென்னிந்தியப் பதிப்பான கும்பகோணம் பதிப்பின்படி) பாஞ்சாலியும் ‘போரில் இன்னார், இன்னாரைக் கொல்வர்’ என்று சபதம் செய்கின்றனர். (வட இந்தியப் பதிப்புகளில் பாஞ்சாலி சபதம் என்றொன்றே இல்லை. தென்னிந்தியப் பதிப்பான கும்பகோணம் பதிப்பிலேயேகூட பாஞ்சாலி செய்யும் சபதத்தில், பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் வருவதைப் போல்,

‘பாவி துச்சாதனன் செந்நீர்;  அந்தப்

பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்,

மேவி இரண்டும் கலந்து  குழல்

மீதினிற் பூசி நறுநெய் குளித்தே

சீவிக் குழல்முடிப்பேன்,  இது

செய்யுமுன் னேமுடி யேன்’என் றுரைத்தாள்

என்ற பயங்கரமான சபதம் இல்லை. மறுமுறையும் சொல்கிறேன். பாஞ்சாலி, சபதம் செய்யும் தென்னிந்தியப் பதிப்பில்கூட பாஞ்சாலி, ‘துரியோதனன், துச்சாதனன் ஆகியோருடைய ரத்தத்தை என் கூந்தலில் பூசிக் குளித்த பிறகே என் குழலை முடிப்பேன்; அதுவரையில் முடிய மாட்டேன்’ என்ற சபதம் இல்லை, இல்லை, இல்லை. பட்டநாராயணர் என்கிற வங்காளிக் கவிஞர் (பொது யுகம் 800) இயற்றிய வேணி ஸம்ஹாரம் என்ற ஸமஸ்கிருத நாடகத்திலிருந்து பெற்ற கருத்தை பாரதி சற்றே மாற்றி மேற்படி சபதமாக்கியிருக்கிறான். இதை பாரதியின் பாஞ்சாலி சபதத்துக்கு நான் எழுதிய உரையில் (கிழக்கு பதிப்பக வெளியீடு) மூல ஆதாரங்களுடன் சொல்லியிருக்கிறேன். அது ஒருபுறமிருக்கட்டும். நம்முடைய கதைக்கு வருவோம்.

இவர்கள் இப்படிச் சபதம் செய்ததும் திருதராஷ்டிரனுக்கு பயம் வந்துவிடுகிறது. பாண்டவர்களை அடிமைத் தளையிலிருந்து விடுவித்து, அவர்களுடைய நாட்டைத் திருப்பிக்கொடுத்து அனுப்பிவிடுகிறான். இப்போது துரியோதனாதியருக்கு பயம் வந்துவிடுகிறது. ‘இவ்வளவு அவமானப்படுத்தியபிறகு அவர்களை அடிமைகள் இல்லை என்று அறிவித்து, நாட்டையும் திருப்பிக்கொடுத்துவிட்டால், ஒரு கணத்தில் நம் அனைவரையும் கொன்றுவிடுவார்கள் என்று திருதராஷ்டிரனுக்கு எடுத்துச் சொல்லி, ‘அனுத்யூதம்’ எனப்படும் மறுசூதை ஆடுகிறார்கள்.

இந்த மறுசூதில்தான், ‘யார் தோற்றாலும் அவர்கள் மான்தோல் உடுத்தி, பன்னிரண்டு வருடம் வனவாசமும், ஒரு வருடம் யாராலும் அடையாளம் கண்டுபிடிக்கமுடியாத வகையில் அக்ஞாத வாசமும் மேற்கொள்ள வேண்டும். இந்த ஓராண்டுக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் மீண்டும் பன்னிரண்டாண்டு வனவாசமும், ஓராண்டு incognito எனப்படும் அக்ஞாத வாசமும் மேற்கொள்ள வேண்டும். இந்தக் காலத்தை வெற்றிகரமாக முடித்தால் நாட்டைத் திரும்பபப் பெறலாம்’ என்று பந்தயம் வைத்து ஆடுகிறார்கள்.

பாண்டவர்கள் இந்தப் பதின்மூன்று வருட காலத்தையும் வெற்றிகரமாக முடிக்கிறார்கள். அக்ஞாத வாசத்தை விராடனுடைய நகரத்தில் முடிக்கிறார்கள் என்பது நாமறிந்த ஒன்றே. அங்கேதான் கீசக வதம் நடக்கிறது. கீசகனையே ஒருவனால் கொல்ல முடிந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கீசகனுடைய 106 தம்பியரையும் கொன்றிருக்கிறார்கள். அப்படியானால், பீமன் இங்கேதான் இருக்கிறான்; பாண்டவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள் என்று முடிவுகட்டி, விராட நகரத்தின்மீது கோஹரண யுத்தத்தை மேற்கொள்கிறார்கள். கோஹரணம் என்றால் ‘ஆநிரை கவர்தல்’ என்று பொருள். அங்கே ப்ருஹன்னளை என்ற பெயரில் நபும்சகனாக இருந்த அர்ஜுனனுக்குத் தேரோட்டி, விராடனின் மகனான உத்தரகுமாரன்—பூமிஞ்ஜயன் என்றும் பெயர்—கௌரவர்களை வென்றதாகச் சொல்லி நகரம் திரும்புகிறார்கள். அங்கே விராடனுடைய மகள் உத்தரகுமாரியை அர்ஜுனனுக்கு மணமுடித்துத் தருவதாகச் சொல்கிறார்கள். ‘என்னதான் இருந்தாலும் இவள் என்னிடம் நடனம் பயின்றவள். என் மாணவி. ஆகவே நான் இவளை மணமுடிக்க முடியாது. என் மகன் அபிமன்யுவுக்கு இவளைத் தாருங்கள்’ என்று யுதிஷ்டிரர் உள்ளிட்ட பாண்டவர்கள் சொல்கிறார்கள்.

விராட நகரில் இவ்வாறு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, ஒரு நபும்சகனிடம் தோற்றோட நேர்ந்தாலும், ‘இதுததான் அர்ஜுனன் என்பதை ஓடிப்போகும்போதுதான் கர்ணன் உள்ளிட்ட கௌரவர்கள் உணர்கிறார்கள். ‘ஓராண்டு அக்ஞாத வாசம் முடிவதற்கு முன்னதாகவே நாம் அர்ஜுனனை அடையாளம் கண்டுவிட்டோம். எனவே பாண்டவர்கள் இப்போது மீண்டும் பன்னிரண்டாண்டு வனவாசமும் ஓராண்டு அக்ஞாத வாசமும் மேற்கொள்ள வேண்டியதுதான்’ என்று தீர்மானிக்கிறார்கள். ‘நீங்கள் மீண்டும் வனவாசமும் அக்ஞாதவாசமும் மேற்கொள்ள வேண்டும்’ என்று துரியோதனன் யுதிஷ்டிரருக்குத் தூதனுப்புகிறான். (நான் மிகநீண்ட சம்பவக் கோவையை, அவசியமான பகுதிகளை மட்டும் தேர்ந்து சுருக்கமாகத் தந்திருக்கிறேன்.) ‘நீங்கள் மீண்டும் வனவாசமும் அக்ஞாதவாசமும் போகவேண்டும்’ என்று மன்னர் துரியோதனன் சொல்லியிருக்கிறார்’ என்று அந்தத் தூதர்கள் சொல்லவும், ‘இந்தக் கேள்விக்கு, ஆசார்ய துரோணர், பிதாமஹர் பீஷ்மர் போன்றோர் பதில் சொல்லட்டும்’ என்று தருமபுத்திரன் சொல்லிவிடுகிறான்.

துரியோதனனின் கணக்குப்படி — இந்தக் கணிதமேதை ராமனுஜம் எப்போது சரியான கணக்கைப் போட்டிருக்கிறது! — ஓராண்டுக் கால அக்ஞாதவாசம் முடிவதற்கு முன்னாலேயே அர்ஜுனனைப் போரில் கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால், அக்ஞாதவாசம் முடிந்து அடுத்தநாள்தான் கோஹரண யுத்தம் தொடங்குகிறது என்பதற்கு, வியாசர் நட்சத்திரம், திதி போன்ற எல்லா விவரங்களையும் தருகிறார். ‘துரோணர், பீஷ்மர் போன்றோர் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லட்டும்’ என்று தருமபுத்திரன் சொன்னதற்கு, துரோணர், இந்தக் கேள்விக்கு முறையான பதிலைச் சொல்லக்கூடியவர் பீஷ்மரே’ என்று ஒதுங்கிக்கொள்கிறார். பீஷ்மர் இதற்கான விடையைச் சொல்கிறார்.

அவர் சொன்ன விடையைப் பார்ப்பதற்கு முன்னால் ஒரு வார்த்தை. அவர் சொன்ன இந்த விடையை நாம் புரிந்துகொள்வதற்காக ஒரு எளிய உதாரணத்தை முதலில் சொல்லிவிடுகிறேன். ஒரு கைதிக்கு ஒரு நீதிபதி பத்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற கணக்குப்படி, பத்தாண்டுகளுக்கு 3650 நாட்கள் ஆகின்றன. ஆனால் நான்காண்டுகளுக்கு ஒருமுறை லீப் ஆண்டு வருவதால், அந்த ஆண்டு மட்டும் 366 நாட்கள் ஆகின்றன. இந்தப் பத்தாண்டுகளில் குறைந்தது இரண்டு லீப் ஆண்டு வரும். ஒருவேளை தண்டனைக் காலத்தின் ஆரம்பமே லீப் ஆண்டாக இருந்துவிட்டால், மூன்று முறையும் இப்படி வரக்கூடும். ஆக, 3650 நாட்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட கைதி, இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூடுதலாக சிறைத் தண்டனையை அனுபவிக்கிறான். (புதிய சட்டச் சிக்கல்களை உருவாக்க விரும்பவில்லை. பாண்டவர்கள் எப்படி கூடுதலாகவே வன-அக்ஞாத வாசங்களை அனுபவித்திருக்கிறார்கள் என்பதை விளக்குவதற்காகவே இதைச் சொன்னேன்.)

தென்னிந்தியாவில்—குறிப்பாகத் தமிழகத்தில்—நம் காலக் கணக்கு சூரியனைப் பின்பற்றுகிறது. இதற்கு சௌரமான மாசம் என்று பெயர். ஆனால் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வடமாநிலங்களில் காலக் கணக்கு சந்திரனைப் பின்பற்றுகிறது. இதைச் சந்திரமான மாசம் என்பார்கள். காலக் கணக்கு சந்திரனைப் பின்பற்றினால், அது மாதத்துக்கு முப்பது நாளாக இருக்காது; மாறாக 27 அல்லது 28 நாட்களாக இருக்கும். இதன் காரணமாக சந்திரமான மாசத்தைப் பின்பற்றுவோருக்கு ஒரு ஆண்டுக்கு 365 நாட்களுக்கு பதிலாக, 360 நாட்கள் மட்டும்தான் இருக்கும். இந்த வித்தியாசம், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ‘அதிக மாசம்’ என்று கணக்கிடப்பட்டு, சமன் செய்யப்படும். இதை மனத்தில்கொண்டு, கங்கைமைந்தரான பீஷ்மர் சொல்லும் இந்த விடையைப் படியுங்கள்:

பீஷ்மர் சொன்னார், ‘கலைகள் {1.6 நிமிடம்}, காஷ்டைகள் {3.2 விநாடிகள்}, முகூர்த்தங்கள் {48 நிமிடங்கள்}, நாட்கள் {30 முகூர்த்தங்கள்}, அரைத்திங்கள்கள் {15 நாட்கள்} [1], மாதங்கள் {30 நாட்கள்}, நட்சத்திரக்கூட்டங்கள், கோள்கள், பருவகாலங்கள் {ருதுக்கள்} {இரண்டு மாதங்கள்}, ஆண்டுகள் {360 நாட்கள் [கவனிக்க: 365 நாட்கள் அல்ல]} ஆகிய பிரிவுகளைக் கொண்டு காலச்சக்கரம் [2] சுழன்று வருகிறது. அதில் வரும் கூடுதல் பகுதிகள் {காலாதிக்யம்} மற்றும் வானத்தின் கோள்களில் ஏற்படும் மாறுதல்கள் ஆகியவற்றின் விளைவாக, ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் இரண்டு மாதங்கள் கூடுகின்றன. இவ்வழியில் கணக்கிட்டால் பதிமூன்று வருடங்களுக்கு ஐந்து மாதங்களும் பனிரெண்டு நாட்களும் அதிகமாக வரும் எனத் தெரிகிறது. எனவே, பாண்டுவின் மகன்கள் வாக்குறுதி அளித்ததுபோல, அந்தக் காலம் அவர்களால் சரியாகவே நிறைவு செய்யப்பட்டுள்ளது. {அந்தக் குறிப்பிட்ட காலம் நேற்றே முடிந்துவிட்டது}.

S., Arul Selva Perarasan; செ., அருட்செல்வப்பேரரசன். விராட பர்வம்: Virata Parva (முழுமஹாபாரதம் Book 4) (Tamil Edition). Kindle Edition.

(கிஸாரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பை, அருட்செல்வப் பேரரசன் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்தது. விராட பர்வம், 52ம் அத்தியாயம்.)

அருட்செல்வப் பேரரசன் அவர்கள் மேலும் விளக்கமாக, பின் வருவதைத் தருகிறார்:

[1] பக்ஷங்கள் = அமாவாசைக்குப் பிந்தைய சுக்லபக்ஷம், பவுர்ணமிக்குப் பிந்தைய கிருஷ்ணபக்ஷம் ஆகிய இரண்டு அரைமாதங்களும். அதாவது, சொக்கு ஒளிப்பக்கம் (bright fortnight), கருத்த ஒளிப்பக்கம் (dark fortnight) என்ற நிலவின் இருவகையான ஒளிப் பக்கம்.[2] பழங்காலத்தில், பாரதத்தில் நேரம் கணிக்கப்பட்ட முறையை அறிய http://en.wikipedia.org/wiki/Hindu_units_of_time என்ற வலைப்பக்கத்திற்கும் செல்லவும்.

S., Arul Selva Perarasan; செ., அருட்செல்வப்பேரரசன். விராட பர்வம்: Virata Parva (முழுமஹாபாரதம் Book 4) (Tamil Edition). Kindle Edition.

தலை சுற்றுகிறதா? கர்நாடகா, ஆந்திரா, வட மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு இது பழக்கமான ஒன்றுதான். துரியோதனனுடைய விடையையும் பிறவற்றையும் அடுத்தமுறை தொடர்வோம்.

1 thought on “மகாபாரதம் கேள்வி பதில் – 10 | ஹரிகிருஷ்ணன்

  1. சூரியமானம், சந்திரமானம் குறித்து ஆசிரியர் கூறியுள்ளது நான் இதுவரை அறிந்துள்ள தகவலுக்கு மாறாக உள்ளது. பாரதத்தில் இருப்பவர்கள் பயன்படுத்துவது சூரியமானமோ, சந்திரமானமோ அல்ல. மாறாக சூரிய சந்திரமானம். சந்திர மாதத்தில் வளர்பிறை அரை திங்கள் 15 நாட்கள் தேய்பிறை அரை திங்கள் 15 நாட்கள் என மொத்தம் 30 நாட்கள். ஆனால் சந்திர மானத்தில் ஒரு நாள் என்பது சூரிய மானத்தின் ஒரு நாளில் சுமார் 23.45 மணிக்கு சமம் என்பதால் ஒரு சந்திரமான மாதமானது சூரியமான மாதத்தில் 27 அல்லது 28 நாட்களுக்கு சமமாக இருக்கும். 28×12 = 354 நாட்கள். சந்திர ஆண்டானது சூரிய ஆண்டில்12 நாட்கள் குறைவாகஇருக்கும். அப்படி இருக்கையில் எவ்வாறு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கிட்டு சமன் செய்ய முடியும்.அதனால்தான் சந்திரமானத்தை பின்பற்றும் விழாக்கள் ஆன ரமலான்,பக்ரீத் போன்றவை கிரிகோரியன் நாட்காட்டியில் வெவ்வேறு மாதங்களில் இடம்பெற காரணமாகிறது. ஆனால் தெலுங்கு கர்நாடகா ஆகிய மாநிலங்களில் புத்தாண்டு ஆனது மார்ச் 15 முதல் ஏப்ரல் 15 குள்ளேயே வந்துவிடும்.ஆகையால் குறிப்பிட்ட காலத்திற்கு அதீத மாதம் என்று ஒன்று கணக்கிடப்பட்டு சமம் செய்யப்படுவது உண்மையினை எடுத்துக் கொண்டாலும், அம்மாதத்திற்கு பெயர் என்று ஒன்று இருக்க வேண்டும்.அது மட்டுமல்ல நடப்பு ஆண்டான சார்வரி வரும் ஆண்டான பிலவ ஆகியவையெல்லாம் சூரியஆண்டின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன அப்படி இருக்கும் போது சந்திர ஆண்டு ஒன்று இருந்தால்தான் ஆசிரியர் கூறிய கணித விளக்கத்திற்கு பொருந்தும். நான் தேடிய வரையில் அப்படி ஒரு தகவல் எனக்கு கிட்டவில்லை ஆதலால் ஆசிரியர் எங்கிருந்து இந்த அனுமானத்தை எடுத்தாண்டார் என்பதனை தயவு கூர்ந்து விளக்க வேண்டும்

Leave a Reply