Stalin’s Enslavement of Rural Russia
கிராமப்புற ரஷ்யாவை ஸ்டாலின் எப்படி அடிமைப்படுத்தினார் என்பதன் விளக்கமே இந்தப் படம்.
1921ல் மிகப்பெரும் பஞ்சம் தலைவிரித்தாடியது. காரணம் ராணுவம் விவசாயிகளின் விளைபொருட்களை கேள்வி பதில் ஏதுமின்றி மொத்தமாக எடுத்துச் சென்றது. லெனின் தனது போர் கம்யூனிசம் என்ற கொள்கை மூலம் ஜார் மன்னரை வீழ்த்தியதோடு மக்களை முழுவதுமாகத் தன் பக்கம் திருப்ப ரேஷன் முறையை ஏற்படுத்தி அரைப் பட்டினி போட்டார். போல்ஷெவிக் படையினருடன் வோல்கா நதிக்கரையில் முகாமிட்டிருந்த ஜோசஃப் ஸ்டாலின் என்பவரிடம் உணவு வழங்கல் பொறுப்பு அளிக்கப்பட்டது. அதுவரை தேவைக்கு கடைகளில் வாங்கியும் வீட்டில் சமைத்தும் தொழிற்சாலை உணவகங்களில் உண்டும் வந்த மக்கள் அடையாள அட்டை காட்டி அரசு அளிக்கும் அளவான உணவைப் பெற அறிவுறுத்தப்பட்டார்கள். அதிகம் உணவு கேட்டவர்களின் பூர்ஷவா மனப்பான்மை மாறவேண்டும் என்று தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். உணவில் தரம், சுவை என்று பேசினாலும் பூர்ஷ்வா என்று முகாமுக்கு அனுப்பினார்கள் அரசாங்கத்தார்.
ஸ்டாலின் வந்ததும் அனைவருக்கும் வயிறார உணவு என்றார். அவருக்கு உணவுப் பொருட்கள் விஷயத்தில் விளைச்சல் முதல் உண்பது வரை சர்வாதிகாரம் தரப்பட்டது. கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளிடம் பேசி விளைச்சலை மொத்தமாக அரசு எடுத்துக் கொள்ளும். உங்கள் தேவைக்கு உங்களுக்கு உணவு வந்து சேரும் என்று பேசினார். விளைந்தது மொத்தமும் ராணுவத்தால் கொண்டு போகப்பட்டது. ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருந்த ராணுவப் பிரிவுகளுக்கு தேவைக்கு அதிகமான உணவு தரப்பட்டது. வடக்கே இருக்கும் கிராமங்கள், ராணுவப் படைப்பிரிவுகளுக்கு உணவு போகவேண்டும் என்று லெனின் கொடுத்த உத்தரவுகளை சிரமேற்கொண்டு தேவைக்கு மிகவும் குறைவாக அனுப்பி நிறைவேற்றினார் ஸ்டாலின்.
6,000 பேர் கொண்ட ராணுவப் படைப்பிரிவுக்கு 20,000 பேருக்குத் தேவையான உணவு தரப்பட்டது. இது தவிர அரசியல் அலுவலர்கள் என்ற காமிசார்கள் படைக்கு உணவு தரப்பட்டது. ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் 1,800 விவசாயிகள் போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் அவை குறித்துச் செய்திகள் பெரிய அளவில் வரவில்லை. அவை பூர்ஷ்வாக்களின் எதிர்வினை என்று அடக்கப்பட்டன. போராடியவர்கள் கம்யூனிசப் படிப்புப் படித்து நடத்தையில் முன்னேற்றம் காண தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். ஆண்டன் ஒஸ்யெனெயெவ் எனும் வரலாற்றாளர் ஸ்டாலினின் சைபீரியச் சிறையில் சில ஆண்டுகள் தண்டனை அனுபவித்தவர். இவரது தந்தை ஒரு விவசாயப் போராட்டத்தில் முக்கியப் பங்கெடுத்தார் என்பதால் அவரை அடக்கி வைக்க மகனைச் சிறை வைத்தார் ஸ்டாலின்.
லெனின் தனது பொருளாதாரத் திட்டத்தை மாற்றியமைத்தார். 70% விளைச்சலை விவசாயிகள் வைத்துக் கொண்டு சந்தையில் விற்கலாம் என்றார். விவசாயிகள் வயல்களுக்குத் திரும்பினர். பல தலைவர்கள் இந்தத் திட்டத்தை எதிர்த்தனர். இது கம்யூனிசம் அல்ல என்று கூறினர். ஆனால் ஸ்டாலின் லெனினை முற்றும் ஆதரித்தார். எதிர்ப்பவர்களிடம் ராணுவத்தை எதிர்த்து நிற்க வேண்டியதிருக்கும் என்றார். கட்சிப் பொதுச் செயலாளர் பதவி ஸ்டாலினுக்கு லெனினால் வழங்கப்பட்டது.
அடுத்த இரண்டாண்டுகள் விளைச்சல் சிறப்பாக இருந்தது. பொருளாதாரம் எல்லா வகையிலும் வளர்ந்தது. ரொட்டி, மாமிசம், இனிப்பு வகைகள் என்று கடைகளில் வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. விவசாயத்துக்கான நவீன உபகரணங்கள் கிராமங்களை நோக்கி அனுப்பப்பட்டன. எந்திரங்கள் மூலமாக விவசாயம் என்ற முறைக்கு விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டனர். ஜெர்மனியில் இருந்தும் ஃப்ரான்ஸில் இருந்தும் கால்நடைகள் வந்திறங்கின. விவசாயிகள் அமோக விளைச்சலில் மகிழ்ந்தனர். இது போல முன்னெப்போதும் இருந்ததில்லை எனும் அளவில் வசதியில் திளைத்தனர்.
லெனின் இறந்து போனார். அவரது கொள்கை குறித்த கட்சியினரின் கருத்து வேறுபாடுகளை ஸ்டாலின் பயன்படுத்திக் கொண்டார். விவசாயிகளின் வசதி பூர்ஷ்வாத்தனம் என்று கட்சி பிரசாரம் செய்தது. வசதி வாய்ப்புகள் பெற்ற விவசாயிகள் கொண்டாட்டம் கேளிக்கை என்று ஈடுபடுவது ஒழுக்கக் கேடு என்று போதிக்கப்பட்டது. உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரான உழைப்பை அவமதிக்கும் செயல் என்று சொல்லப்பட்டது. அக்டோபர் 25, 1925ல் ஸ்டாலின் கட்சியின் உள்வட்டக் குழு ஒன்றில் பேசும் போது இந்தப் புதுப்பணக்காரர்கள் ஒழிக்கப்படவேண்டும்; இந்த வாழ்க்கை முறையை எதிர்த்துப் போராட்டம் தொடரும்; போல்ஷெவிக்குகள் விழித்துக் கொள்ளாவிட்டால் மீண்டும் புதுவடிவில் வர்க்க பேதம் தலைவிரித்தாடும் என்றார் ஸ்டாலின்.
கட்சியில் சிலர் நம் வருமானத்துக்கான அடிப்படை விவசாயம், அதை எப்படி எதிர்ப்பது என்று கேட்டனர். ஆனால் விவசாயிகளுக்கு இது குறித்துச் செய்தி செல்லவில்லை. உபரி விளைச்சலை எடுத்துக் கொண்டு சந்தைக்கு வந்து ஜெர்மனி, ஃப்ரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கொடுத்தனர் விவசாயிகள். இந்த ஏற்றுமதி வருமானத்தை வைத்துத்தான் தொழில்மயமாக்கலுக்கு வேண்டிய உபகரணங்கள் வாங்கப்பட்டன. நினைவு தெரிந்த நாள் முதல் ரஷ்யா பொருளாதாரத்தில் நிமிர்ந்தது. கம்யூனிஸத்தின் வளர்ச்சி என்று இது போற்றப்பட்டது. ஸ்டாலின் வரியை உயர்த்தினார். விவசாயிகள் விளைபொருட்களை விற்க மறுத்தனர். ஸ்டாலின் நாடு தழுவிய சுற்றுப் பயணம் போனார். விவசாயிகள் மக்களின் எதிரிகள் என்றார். லட்சக்கணக்கானோர் பட்டினி கிடக்கும் போது விளைச்சலைத் தரமறுக்கும் இவர்கள் குற்றவாளிகள் என்றார்.
குலாக்குகள் என்ற அரசுக்கு எதிரான குழுக்களை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி விவசாயிகளை எதிரிகள் என்று சித்தரித்தார். ஜார் மன்னர்கள் காலத்தில் குலாக்குகள் அரசுக்கு எதிரானவர்கள் என்று அவ்வப்போது படைகள் சென்று அவர்களை அடக்கி வைக்கும். அது போல விவசாயிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் நடத்த எத்தனித்தார் ஸ்டாலின். நம் நாட்டின் தொழில் வளர்ச்சியை குலாக்குகளின் கருணை அடிப்படையில் நடத்த முடியாது என்றார். அரசு நடத்தும் விவசாயப்பண்ணைகள் நாட்டின் தேவையில் மூன்றில் ஒரு பங்கைத் தரவேண்டும் என்றார். விவசாய நிலங்களில் மூன்றில் ஒரு பங்கு அரசிடம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்றார். சிறு விவசாயிகள் முதல் பெரு நிலக்கிழார்கள் வரை மாஸ்கோவுக்கு வந்து ஸ்டாலினைச் சந்தித்தனர். அவர்களிடையே பேசிய ஸ்டாலின் ‘நீங்கள் மக்களின் எதிரிகள்’ என்றார். ‘நாங்கள் மக்கள் இல்லையா?’ என்று கேட்டனர் விவசாயிகள். ‘நீங்கள் குலாக்குகள்’ என்றது அரசு.
கிராமங்களில் கிராமசபை தண்டித்த சில குற்றவாளிகளைப் பிடித்து அவர்கள் அப்பாவிகள் என்றும் அவர்களை இந்த முதலாளிகள் தண்டித்திருக்கிறார்கள் என்றும் பத்திரிகைகள், ரேடியோ என்று பிரசாரம் நடந்தது. விவசாயத் தொழிலாளர்கள் தூண்டிவிடப்பட்டனர். வேலை செய்ய மறுத்து, அதிகக் கூலி கேட்டு விவசாயம் செய்யாது போனார்கள். அவர்களில் சிலர் காமிசார்கள் வரிசையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மற்றவர்கள் கட்சி உறுப்பினர்கள் என்ற நிலையில் போராடினர். ஊடகங்கள் கொத்த விவசாயிகளையும் குலாக்குகள் என்றது. அவர்கள் புரட்சிக்கு எதிரானவர்கள், மக்கள் விரோதிகள், ஆயுதமேந்திப் போராடி அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று எழுதப்பட்டது. விவசாயம் படுத்தது. அரசு களமிறங்கியது. காமிசார்கள் ஊர் ஊராகப் போய் விவசாயிகளின் விளைச்சல் மொத்தத்தையும் கைப்பற்றினர். ஆடுமாடுகளும் கைப்பற்றப்பட்டன. ஏழைகளாகப் பார்த்து காமிசார் படை உளவாளிகளாகச் சேர்த்துக் கொண்டது.
நிலங்களை எடுத்துக் கொண்டது. குலாக்குகள் என்று தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சைபீரியச் சிறைக்கு தொழிலாளர் முகாம் என்ற பெயரில் கம்யூனிஸம் படிக்க அனுப்பி வைக்கப்பட்டனர். வீடு, நிலம், குடும்பம் என்று வாழ்ந்தவர்கள், வீடு நிலம் இழ்ந்து குடும்பத்தையும் பிரிந்தனர். குடும்ப உறுப்பினர்கள் பிரிக்கப்பட்டு ஆளுக்கொரு திசையில் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அரசு நிலங்களை மொத்தமாக எடுத்துக் கொண்டது. அரசு விவசாயப்பண்ணையில் எப்படி வேலை செய்யவேண்டும் என்று பயிற்சி தரப்பட்டது. இதுவரை விவசாயத்தில் அனுபவம் இல்லாத காமிசார்கள் விவசாயப்பண்ணைகளுக்குப் பொறுப்பேற்றார்கள். 25,000 காமிசார்கள் மற்றும் அரசியல் அலுவலர்கள் பயிற்சி தரப்பட்டு கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் பணி துப்பாக்கி முனையில் அனைவரையும் இவர்களுக்கு அளிக்கப்பட்ட கொள்கைப் பயிற்சியைப் பயிற்றுவித்து, அடித்து வேலை வாங்கவேண்டும்.
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் மிஹைல் ஷொலெகோவ் சொல்கிறார்:
‘எங்கள் கிராமத்திற்கு அந்த 25000 பேரில் சிலர் வந்தார்கள். எல்லோரிடமும் துப்பாக்கி இருந்தது. என் தந்தையாரிடம் ஆடுமாடுகளைக் கேட்டார்கள். அவர் ஏன் என்று கேட்ட போது தேவைக்கு அதிகமாக வைத்திருக்கிறாய் என்றார்கள். அவர் ஆடுமாடுகளை விற்பதற்கில்லை என்று சொன்னார். உடனே எல்லா வசதியான விவசாயிகளும் தங்கள் நிலம், கால்நடைகள் மற்றும் விளைச்சலை கிராம சபையிடம் ஒப்படைக்க வேண்டும், இது ஸ்டாலின் உத்தரவு என்றார்கள். மறுத்தால் சைபீரியச் சிறைக்குப் போகவேண்டும். ஒப்படைத்தால் கூலி வேலை. ஒப்படைக்க மறுத்தால் சிறை. வயதான அப்பா ஒப்படைத்துவிட்டார். வீட்டைக் காலி செய்துவிட்டு அரசு தந்த வீட்டுக்குப் போகச் சொன்னார்கள்.’
ஸ்டாலின் அடுத்த தலைமுறையை குடும்பத்தில் இருந்து பிரித்து கட்சிக்கு விசுவாசமாக மாற்ற பெருமுயற்சி மேற்கொண்டார். பள்ளிப்பிள்ளைகள் முதல் கல்லூரி இளைஞர்கள் வரை அரசு, கட்சி இவற்றின் முக்கியத்துவம் கற்றுத்தரப்பட்டது. புரட்சிக்கு எதிராகப் பேசிய தந்தையைச் சிறைக்கு அனுப்பிய மகன் என்று வெளியூர்க்காரர்கள் சிலர் அறிமுகம் செய்யப்பட்டனர். அவர்கள் சாதனையாளர்கள் போலப் புகழப்பட்டனர். தந்தையைப் போலீசில் பிடித்துக் கொடுத்த 13 வயதுச் சிறுவனுக்குச் சிலை வைத்தனர். சிறு வயதுப் பிள்ளைகளுக்கு தாய் தந்தையரை விட கட்சியே பெரிது என்று இருப்பதே சிறப்பான நடத்தை என்று மனதில் பதிந்தது. கட்சி, கம்யூனிசம், புரட்சி இவற்றைப் புகழ்ந்து பாடல்கள் இயற்றி இசை அமைத்து ஊர் ஊராகப் பாடிப் பயிற்றுவிக்க ஆட்கள் அனுப்பப்பட்டனர். நாட்டுப்புறப் பாடல்கள் பாடினால் தண்டனை விதிக்கப்பட்டது.
1929ல் சில ஊர்களில் விவசாயிகள் வீடுகளை எரித்தும் கால்நடைகளைக் கொன்றும் விளைச்சலை எரித்தும் செய்துவிட்டுச் சிறை சென்றனர். குளிர் காலத்தின் உரசல் என்றார் ஸ்டாலின். வெற்றிக் களிப்பில் சில காமிசார்கள் அதீதமாக மக்களிடம் கடுமை காட்டிவிட்டார்கள், அவர்கள் மீது நடவடிக்கை வரும் என்றார். என்ன நடவடிக்கை என்று பார்த்தால் சிலருக்கு எச்சரிக்கைக் கடிதம் தரப்பட்டது. சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஸ்டாலின் நல்லவர்தான், நடுவில் சிலர் அதீதமாக ஆடுகிறார்கள் என்ற பிரசாரம் திட்டமிட்டுச் செய்யப்பட்டது. ஆனால் அதற்குள் 10 லட்சம் குடும்பங்கள் புதிய கொள்கையால் பிரிக்கப்பட்டு சைபீரியச் சிறைகளில் உணவுக்கும் உடைக்கும் பணி செய்ய அனுப்பப்பட்டிருந்தனர்.
பலர் தொழிற்சாலைகளில் வேலை செய்து பிழைக்கலாம் என்று கிராமத்தை விட்டு நகரத்துக்குக் குடி பெயர்ந்தனர். ஆனால் ஸ்டாலினின் கடுமையான உத்தரவு விவசாயிகளைத் தொழிற்சாலைகள் வேலைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்றது. அதனால் வந்தவர்கள் அரசு அலுவலகத்துக்குப் போய் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். பதிவு செய்த கிராமத்தான்கள் கூட்டமாக வேறு ஊரில் வேலை என்று சைபீரியச் சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர். கேஜிபி அதிகாரி ஒருவர் ‘பல விவசாயிகள் குடும்பத்தோடு இருக்கலாம் என்று பட்டணத்துக்குத் தொழிற்சாலை வேலைக்கு வந்தார்கள். ஆனால் அரசு உத்தரவை மீறி வந்தவர்களை எப்படி ஊக்குவிக்க முடியும்? அதனால் அவர்கள் செய்தது புரட்சிக்கு எதிரானது என்ற அடிப்படையில் அவர்களில் சிலர் உதாரணத்துக்காகத் தூக்கில் போடப்பட்டும், சுடப்பட்டும் கொல்லப்பட்டனர். பிறர் அடங்கி தொழில் முகாம்களுக்குப் போனார்கள்’ என்கிறார்.
1932ம் ஆண்டு மொத்தக் கூட்டுப் பண்ணை ஆண்டு என்று ஸ்டாலின் அறிவித்தார். அந்த ஆண்டுக்குள் 2 கோடி விவசாயிகளின் குடும்பங்கள் வெவ்வேறு ஊர்களில் கூட்டுப் பண்ணைத் தொழிலாளர்களாக ஆக்கப்பட்டனர். இதற்கு காமிசார்கள், கட்சி, ரகசிய போலீஸ், ராணுவம் என்று சகலமும் பயன்படுத்தப்பட்டன. அறிவுறுத்தல் முதல் மிரட்டல், கொலைகள் வரை நிகழ்த்தப்பட்டன. அந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக இருந்தது. ஆனால் அறுவடையில் விவசாயிகள் வேண்டுமென்றே சொதப்பினர். பயிர்கள் நாசமாயின. கோபம் கொண்ட ஸ்டாலின் விவசாயிகளைப் பட்டினி போட்டார். விதைக்கு வைத்திருந்தது உள்ளிட்ட தானியங்களை காமிசார்கள் எடுத்துச் சென்றனர். உணவு கிராமங்களில் கிடைக்கவில்லை. அரசு அனுப்பிய உணவுப் பொருட்கள் காமிசார்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் மட்டுமே என்று சொல்லப்பட்டது. குழந்தைகள், வயதானவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் பட்டினியால் இறந்தனர். மற்றவர்கள் அஞ்சி சொல்பேச்சுக் கேட்க ஒப்புக் கொண்டனர். குழந்தைகளுக்கு மட்டுமாவது உணவு தாருங்கள் என்று கெஞ்சினர். காமிசார்கள் கொடுத்ததே அளவு, சொன்னதே கணக்கு என்று ஆனது.
ஆனால் கூட்டுப்பண்ணையை விதந்தோதி பாடல்கள் பாடப்பட்டன. கூட்டுப்பண்ணைக்கு ஒத்துழைக்காது இறந்த விவசாயிகளின் வாரிசுகள் தங்களின் முன்னோரைப் பழித்தும் ஸ்டாலினின் நிர்வாகத்தைப் போற்றியும் பாட்டுப் பாடினர். அடுத்த தலைமுறை லெனின் நல்லவர், ஸ்டாலின் வல்லவர், புரட்சி ஓங்குக என்று வளர்ந்தது. பட்டினிச் சாவுகள் குறித்து வெளிநாடுகளில் செய்தி பரவ, பிரித்தானிய அரசுக்கு தங்களின் கூட்டுப் பண்ணையைப் பார்வையிட அழைப்புவிடுத்தார் ஸ்டாலின். ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, லேடி ஆஸ்பர்ன் என்று சீமான்களும் சீமாட்டிகளும் வந்து பார்த்தனர். அவர்கள் பார்த்தது ஸ்டாலின் எதைக் காட்டச் சொன்னாரோ அதை மட்டுமே. அவர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்துவிட்டுப் போனார்கள். பஞ்சத்தை அருமையாகக் கையாள்கிறது ரஷ்ய அரசு என்று அவர்கள் சொன்னார்கள்.
ஒருமுறை ஸ்டாலினின் நண்பர் ஒருவர் அவரிடம் விவசாயிகள் சாகிறார்களே ஜோசஃப் என்று கேட்ட போது நமக்கு எதிரிகள் இந்த குலாக்குகள், இவர்கள் செத்தால் தப்பில்லை என்று ஸ்டாலின் சொன்னதை அந்த நண்பர் டைரியில் குறித்து வைத்துள்ளார். ஓரிரு ஆண்டுகளுக்கு முன் விவசாயிகள் என்று இருந்த பலரும் அடுத்த வேளை சோற்றுக்கு கூப்பன் வாங்கி வரிசையில் வந்து கிடைத்ததைப் பெற்று உண்டனர். அவர்களுக்கு தினமும் சுழற்சி முறையில் வேலை தரப்பட்டது. நேரக் கட்டுப்பாடு இல்லை. காலையில் தொடங்கினால் காமிசார்கள் தேநீர் தரும் வரை வேலை. தேநீர் அருந்திய பின் உணவு தரும் வரை வேலை. மாலை இருட்டும் வரை வேலை. இருட்டியபின் கம்யூனிசப் படிப்பு. பின்பு வரிசையில் நின்று உணவு. முகாமில் விளக்கு அணைக்கப்பட்டதும் உறக்கம், விசில் ஊதியதும் விழிப்பு என்று வாழ்க்கை ஓடியது கிராமத்து மக்களுக்கு.
மாஸ்கோவில் கூட்டுப் பண்ணையின் வெற்றி கொண்டாடப்பட்டது. அதில் முன்னாள் விவசாயிகள் போர்க்கைதிகள் போலக் காட்சிக்கு நிறுத்தப்பட்டனர். விளைச்சலில் முக்கால்வாசி ஏற்றுமதிக்கும் மீதி கட்சி, ராணுவம், அரசு ஊழியர்களுக்கு உணவு என்று போனது. எஞ்சியதை மக்கள் உண்டு வாழவேண்டிய நிலை இருந்தது. இதுவே 60 ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூனிசம் வீழ்ந்து போகக் காரணமானது. அரசு ஊழியர்களும் காமிசார்களும் ஸ்டாலினைப் போற்றினர். அவர்களில் சிலர் வரலாற்று ஆசிரியர்களாக அவதாரம் எடுத்து ஸ்டாலின் ஆட்சிக்காலம் போல பொற்காலம் ரஷ்ய வரலாற்றில் இல்லை என்று பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினர். ஆனால் இந்தக் கொடுமைகளுக்கு அடிப்படை என்ன என்று பார்த்தால் வலிமையான விவசாயிகள் தன் சர்வாதிகாரத்துக்கு எதிராக இருப்பார்கள் என்று ஸ்டாலின் அஞ்சியது தான் என்கிறார் ஆண்டனோவ்.
1991ல் கம்யூனிசம் வீழும் வரை இந்த விவரங்கள் வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டதே கம்யூனிசத்தின் வெற்றி ஆகும். இரண்டாம் உலகப் போர் முடிவில் சர்ச்சிலிடம் கூட்டுப்பண்ணை விஷயத்தில் 10 லட்சம் பேர் இறந்திருப்பார்கள் என்று சொன்னார். ஆனால் இறந்து போனது 2 கோடிப்பேர். இதெல்லாம் சகஜம் என்று வர்க்கப் போராட்டத்தின் விவரங்கள் பற்றிப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தனர் காமிசார்களும் கட்சியினரும்.
அலெக்ஸாந்தர் இவான்கின் தயாரித்த இந்தப் படம் 1992ல் வெளிவந்தது. இது திரைப்படமாக ரஷ்ய அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படவில்லை. ஆகவே இயக்குநர் கார்ல் டிக்ஸன் இதை ஆவணப்படம் என்று ஐரோப்பாவில் வெளியிட்டார். இதற்கு உள்ளூரில் விருதுகள் ஏதும் கிட்டாமல் பார்த்துக் கொண்டனர் ரஷ்ய அரசு அதிகாரிகள். ரஷ்ய அரசு அனுமதி இல்லை என்பதால் இதை விருது விழாக்களுக்கு ஏற்க இயலாமல் போனது.
எல்லோருக்கும் எல்லாமும் போன்ற கவர்ச்சிகரமான சொல்லாடல்களால் வளர்ந்தாலும், பல்வேறு அமைப்பினர், பல்வேறு நாடுகளில் விதந்தோதினாலும், தன் சொந்த மக்களையே கோடிக் கணக்கில் கொன்று குவித்த ரத்த வரலாறுதான் சோவியத் கம்யூனிசம்.