Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் 33 | சுப்பு

பராசக்தியைப் பார்க்கவில்லை

டாக்டர் நித்தியானந்தத்தின் சந்திப்பு என்னுடைய வாழ்க்கைப் பாதையை மாற்றியமைத்தது என்று சொன்னேன் அல்லவா. அதற்கு முன்பாக நடந்த இன்னொரு விஷயமும் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியது.

சென்னை பெசன்ட் நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோயிலின் வெளிப்புறத்தில் ஒருநாள் மதியம் உட்கார்ந்து இருந்தேன்.அப்போது நாராயணன் என்னை அணுகினான். அவனை முரட்டு ஆசாமி என்றும் அவ்வப்போது கோயிலில் தகராறு செய்வான் என்கிற மாதிரியும் நான் தெரிந்து வைத்திருந்தேன். அதனுடைய விபரங்கள் எனக்குத் தெரியாது, தெரிந்து கொள்வதில் எனக்கு விருப்பமில்லை.

‘சார் என் கூட வாங்க’ என்று அழைத்தான் நாராயணன்.

எங்கே என்று நான் கேட்பதற்கு அவன் வாய்ப்பே தரவில்லை.

‘உள்ளே கோயில் கமிட்டி மீட்டிங் நடக்குது, நான் போய் சில விஷயங்களைக் கேட்கப்போகிறேன், எனக்கு ஒழுங்காகப் பதில் சொல்ல மாட்டார்கள், எதைக் கேட்டாலும் நான் சண்டை போடுகிறேன் என்று சொல்லித் துரத்தி விடுவார்கள். நீங்க ஒண்ணு செய்ய வேண்டாம், சும்மா சாட்சிக்கு நின்னா போதும்’ என்றான் அவன்.

எனக்கு அப்போது இருந்த மனநிலையில் இதெல்லாம் வேண்டாம் என்று தோன்றியது.

என்ன கோயில், என்ன நிர்வாகம் என்று ஒன்றும் புரியாத நிலையில் நாம் இதில் தலையிடுவது தப்பு என்றிருந்தேன். நாராயணன் விடுவதாக இல்லை. என்னை வலுக்கட்டாயமாக இழுத்துப்போனான்.

அங்கே சந்நிதியில் நாலைந்துபேர் தரையில் அமர்ந்து காரசாரமாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

நாராயணன் குரலை உயர்த்தி ‘அம்பாளுடைய..’ என்று சொல்லி முடிக்கவில்லை. ஒரு முதியவர் எழுந்து ‘நாராயணா, வெளியே போ. இது கமிட்டி மீட்டிங். இங்கே நீ வரப்படாது. நீ எலக்டட் மெம்பர் இல்லை’ என்று நாராயணனிடம் ஆவேசமாகப் பேசினார்.

அடுத்து நான் பேசிய சில வார்த்தைகள் என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை மாற்றிவிட்டது.

‘சார், அவருக்கு பதில் சொல்லுங்களேன். ஏன் சத்தம் போடுறீங்க..’ என்றேன் நான்.

முதியவருடைய ஆவேசம் அதிகமாகிவிட்டது.

‘நீ யார்? நீ முதலில் வெளியே போ.. என்ன கோயிலில் வந்து ரௌடித்தனம் பண்ணுறீங்களா?’ என்று கேட்டார். அவர் உடல் ஆடிய ஆட்டத்தையும், மூச்சிரைத்ததையும் பார்க்க எப்போது வேண்டுமானாலும் அவர் கீழே விழுந்துவிடுவார் போலத் தோன்றியது. நாராயணனைப் பேசவிடாமல் தடுத்து அழைத்துக்கொண்டு வெளியே வந்தேன். அடுத்து நான் பேசிய வார்த்தைகளுக்கும் நான் பொறுப்பில்லை.

‘நாராயணா, நீ போ. இனிமேல் நான் பாத்துக்கறேன்.’

நாராயணனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ மந்திரத்தில் கட்டுப்பட்டவன் போல நான் சொன்னதற்குக் கட்டுப்பட்டான்.

கோயிலுக்குப் பக்கத்தில்தான் கௌரி சங்கர் வீடு. அவனைச் சந்தித்து கோயில் பற்றிய விவரங்களைக் கேட்டேன்.

திருவான்மியூர் கடற்கரையில் புதைந்திருந்த சுயம்பு லிங்கம்தான் ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர். காஞ்சி மஹா ஸ்வாமிகளின் யோசனைப்படி அதைத் தேடி கண்டுபிடித்து இந்தக் கோயில் கட்டப்பட்டதாகவும் லால்குடி அருகே உள்ள அய்யர்மலையில் குடியிருக்கும் ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் பெயர் இவருக்கு சூட்டப்பட்டதாகவும் சிற்பியால் வடிவமைக்கப்பட்ட அம்பாள் ஸ்ரீ அராளகேசி என்று கௌரி சொன்னான். ‘கோயில் கட்டப்படாத ஆரம்ப நாட்களில் நான்தான் இந்த சிவனுக்கு பூஜை செய்தேன்.’ பிறகு ஏதோ ஆசாரம் சொல்லி நீக்கிவிட்டார்கள். ஏராளமான பக்தர்களின் கூட்டு முயற்சியால் நடத்தப்படும் இந்தக் கோயிலில் பல கோஷ்டிகள் இருக்கின்றன. இன்கம்டாக்ஸ் சுப்ரமண்ய ஐயர் என்பவர் முக்கியமான எதிர்க்கட்சி. ஆளும் கட்சியிலும் ஒற்றுமை கிடையாது. அன்றாடம் சச்சரவுகள்தான். மேற்கொண்டு விபரம் வேண்டுமானால் சுப்ரமணிய ஐயரைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்றான்.

அவர் வீட்டுக்குப் போனேன்.

அவர் எந்தக் கட்சியோ அவருடைய கட்சியில் என்ன நியாயமோ எதுவும் எனக்குப் புரியாத நிலையில் அவர் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தார். இந்த விவகாரத்தில் என்னை உள்ளே சேர்த்துப் புது பிரச்சினைகளை உண்டாக்கிவிடக்கூடாது என்பது அவர் நினைப்பு. அவர் எனக்குப் பிடிகொடுக்கவில்லை. நான்கு நாட்கள் காலையிலும் மாலையிலும் அவர் வீட்டுக்கு நடையாய் நடந்தேன்.

ஒரு கட்டத்தில் என்னைச் சேர்த்துக்கொள்வதாய் முடிவெடுத்தாலும் தன்னுடைய ஆசாரத்தைக் கைவிடவில்லை. மொட்டைமாடி வெய்யிலில் என்னை உட்காரவைத்து அவர் நிழலில் உட்கார்ந்து கொண்டார். கோயில் நிர்வாகம் பற்றிய சட்ட திட்டங்களை ஒவ்வொன்றாகச் சொல்லுவார். நாலு நாள் அவர் வீட்டுக்கு அலைந்தது, நாலு நாள் மொட்டை மாடி வெய்யில் என்பதாகக் குருகுல வாசம். இதைத் தொடர்ந்து கோயில் நிர்வாகத்தில் நுழைவது எப்படி என்று தெரிந்துகொண்ட நான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். மூன்று மாத காலத்தில் கோயில் தேர்தல், அதன் விளைவாக நிர்வாகத்தில் என்னுடைய கை ஓங்கியது. அது முதல் என்னுடைய பங்களிப்பு தொடர்கிறது.

*

ஆர்வத்தின் காரணமாக டாக்டரோடு தொடர்புகொண்டு அவரை அன்றாடம் சந்திக்க ஆரம்பித்த நான், நாளடைவில் டாக்டரின் உலகத்தில் ஒரு பகுதியாகப் பொருந்திவிட்டேன். அன்றாடம் காலையில் திருவொற்றியூருக்கு, அதன்பிறகு டாக்டரோடு அவர் போகும் இடத்துக்கு, இரவு தங்கசாலை கிளினிக் என்பதாகவே சில மாதங்கள் நகர்ந்தன. ஒவ்வொரு நாளும் டாக்டரிடம் இருந்து பல புதிய செய்திகள் புறப்பட்டன.

என்னோடு இருந்த வரை டாக்டர் புத்தகங்கள் படித்து நான் பார்த்ததில்லை. ஆனால் ஆன்மிகம் தொடர்பான பல புத்தகங்களைப் படித்திருக்கிறார் என்பதையும், அவருக்கென்று தனியான ஒரு பாதை இருக்கிறது என்பதையும் போகப்போகப் புரிந்துகொண்டேன்.

கேரளாவைச் சேர்ந்த சிவானந்த பரமஹம்ஸர் எழுதிய சித்த வேதம் எனும் புத்தகத்தைப் பற்றி டாக்டர் பேசினார்.

சுவாமி சிவானந்த பரமஹம்சர் கேரளாவில் வடகரை என்ற ஊரைச் சேர்ந்தவர் (08/12/1879 – 21/06/1949). சிவானந்தர் சிறுவயதிலேயே உடற்பயிற்சியில் ஆர்வம் உடையவராகவும், ஆன்மிகத் தேடலையே வாழ்வின் நோக்கமாகவும் கொண்டிருந்தார். ஹிமாலய யாத்திரையை மேற்கொண்டார், பிறகு கேரளா திரும்பி இல்வாழ்கையில் ஈடுபட்டார். காவல்துறையில் பணிபுரிந்தார், அந்தக் காலகட்டத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் ஆன்மிகத் தேடலைத் தீவிரமாக்கியது.

அவரது இளம் மனைவி இறந்துவிட்டார். மனைவியின் உடலையே பார்த்துகொண்டிருந்த சிவானந்தருக்குள் பல கேள்விகள் எழுந்தன. உயிர் என்பது என்ன, அது எப்படி உடலை விட்டுப் போகிறது, அது போகாமல் தடுக்க முடியுமா என்பன முதலான கேள்விகள்.

மனைவியின் சடங்குகள் முடிந்த பிறகு, அவர் காட்டுப்பகுதியில் கடும் தவம்
செய்தார். ஆனால் ஒன்றும் கிட்டவில்லை. இனி வாழ்வது வீண் என்று முடிவெடுத்து, மரக்கிளையில் தூக்குப் போட்டுக் கொண்டார். அவருடைய உடலின் பாரம் தாங்காமல் கயிறு அறுந்துபோக, அவர் கீழே விழுந்துவிட்டார். சுறுக்குக்கயிறு கழுத்தை இறுக்கியதன் விளைவாக, உள்ளே பிராணசக்தி தானாக இயங்க ஆரம்பித்தது. அந்த நிலையில் அவர் உணர்ந்தார்.

நமது மூச்சுக்காற்று, உடலுக்கு உள்ளே வெளியே என்று போய்க்கொண்டு இருக்கிறது. இதனை மடைமாற்றி, வெளியே போகாமல் உடலுக்கு உள்ளேயே மேலே கீழே என்று இயக்க வேண்டும். இந்தப் பயிற்சியின் பெயர் ‘கதாகதம்’. ‘கதம்’ என்றால் மேலே செல்வது, ஆகதம் என்றால் கீழே இறங்குவது. கதாகதத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிறப்பு-இறப்பு எனும் சங்கிலித் தொடரில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது சிவானந்தரின் அநுபூதி.

சுவாமி சசிவானந்தர் தன்னுடைய அநுபூதியை அறிவிப்பாக மாற்றினார். வெகுஜனங்களுக்கு கதாகதத்தை உபதேசிக்கத் தொடங்கினார். இந்த சமயத்தில் ஆதி சங்கரர் பயன்படுத்திய யோக தண்டம், பாத ரக்ஷைகள் சிருங்கேரி மடத்தில் இருந்ததாகவும் சுவாமி சிவானந்தர் சிருங்கேரிக்குச் சென்று சங்கராச்சார்யார் ஸ்ரீ நரசிம்ம பாரதியைச் சந்தித்து அவற்றைப் பெற்றுக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

சிவானந்தரின் உபதேச முறைகள் புரட்சிகரமாக இருந்தன. நூற்றுக்கணக்கானவர்களை அவர் சித்தவித்தை அப்பியாசிகளாக மாற்றினார்.

ஒருமுறை, சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் சிவானந்தர் இருந்திருக்கிறார், அப்போது ஒரு ஏழை அவரை அணுகி தனக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார். விசில் ஊதி ரயில் புறப்படத் தயாராகிவிட்டது, அந்த நிலையில் அவருக்கு அவசரமாக உபதேசம் செய்துவிட்டு சிவானந்தர் ஓடிப்போய் ரயிலில் ஏறிக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

சாதி அமைப்புகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை விரும்பாத சிவானந்தர், சமபந்தி போஜனத்துக்காக சங்கம் அமைத்திருக்கிறார் (1921). தாழ்த்தப்பட்ட மக்கள் குளத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக அவர்களை அணி திரட்டி சாத்வீகமாகப் போராட்டம் நடத்தி இருக்கிறார். சமுதாயத்தின் உயர்நிலையில் இருக்கும் மகாராஜாக்கள் முதல் படிப்பறிவற்ற ஏழைகள் வரை ஆண் – பெண் பேதமின்றி, சாதி – மத பேதமின்றி அவர் சித்தவித்தையில் ஈடுபடுத்தினார். தன்னுடைய சீடர்களுக்காக கேரளாவின் வடகரையிலும் தமிழ்நாட்டில் சேலம் அருகில் உள்ள ஆத்தூரிலும் ஆசிரமங்களை ஏற்படுத்தினார்.

இறுதியில் பழநியில் ஜீவ சமாதி அடைந்தார்.

இப்படி பல செய்திகளைச் சொல்லி, என்னை சித்தர் உலகத்தில் சிறிது நேரமும் இந்தப் பித்தர் உலகத்தில் சிறிது நேரமும் இருக்கும்படி மயக்க நிலையில் வைத்திருந்தார் டாக்டர்.

திருவொற்றியூரில் டாக்டருடைய அறையில் மதிய உணவை முடித்துவிட்டுப் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது டாக்டர் எழுந்தார், நடந்தார் கடற்கரையை நோக்கி. நானும் பின்தொடர்ந்தேன்.

இந்தமுறை அவர் பட்டினத்தார் சமாதிக்குப் போகவில்லை. கடலைத் தொட்டிருக்கும் இடம், அங்கே ஒரு சிறிய கோவிலுக்குள் நுழைந்தார். நானும்.

கோவில் என்றால் மொத்தமும் ஒரே அறைதான். நடுவில் சிவலிங்கம், லிங்கத்துக்கு அருகில் தேவியின் உருவச்சிலை. அந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு காவி வேட்டியோடும் சட்டை போடாத தொப்பையோடும் ஒருவன் இருந்தான். டாக்டரைப் பார்த்ததில் அவனுக்கு ஏகப்பட்ட குஷி. ஏன் இத்தனை நாள் வரவில்லை என்று அவரிடம் உரிமையோடு கோபித்துக் கொண்டான். அவனது பாஷை சுத்த லோக்கலாக இருந்தது. இந்த மாதிரி ஆட்களோடு டாக்டர் உறவாடி நான் பார்த்தது அதுதான் முதல்முறை. பேசிக்கொண்டே இருந்த டாக்டர், ஒரு தலையணையை எடுத்து லிங்கத்தின் பீடத்தில் சாய்த்து, அதன்மீது தலைவைத்துப் படுத்துக்கொண்டார். அழுக்குத் தலையணையை சிவலிங்கத்தின் மீது வைத்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்ததது.

மேற்படி நபருடைய பெயர் என்னவென்று தெரியவில்லை. ஆனால் டாக்டரும் அவனும் அன்யோன்யமாக உரையாடிக்கொண்டார்கள். இதற்குள் டீ வந்தது. சுவாமி இருக்கும் அறையில் டீக்குடித்து நமக்குப் பழக்கமில்லை. ஆனால் அவனோ டீயைக் குடித்துவிட்டு, எச்சில் டம்ப்ளரை பராசக்தியின் அருகிலேயே வைத்துவிட்டான். இந்தச் சூழ்நிலை எனக்கு அசௌகரியமாகவும், அசாதாரணமாகவும் இருந்தது.

மேற்படி நபர் விடாமல் பேசிக்கொண்டே இருந்தான். அவ்வப்போது டாக்டருடைய சில குறுக்கீடுகள். என்னை அறிமுகப்படுத்தும் விதமாக டாக்டர் சொன்னார். ‘இவனுக்குப் பராசக்தியைப் பாக்கணுமாம்’. சொல்லிக்கொண்டே அவருடைய கையால் அந்த அம்பாள் விக்ரகத்தைத் தடவினார். என்னைப் பார்த்து மெல்லிய குரலில் ‘சுப்பு இங்க பார்!’ என்றார்.

தலையை உயர்த்தி, கண்ணைத் திறந்து பராசக்தியைப் பார்க்க முயன்றேன், முடியவில்லை. ஏதோ ஒரு மாமாயச்சுழலில் நான் இழுத்துச் செல்லப்பட்டேன். நானும் என் முன்னிருக்கும் அந்த உருவச்சிலையும் சேர்ந்து சுற்றினோம். சுழலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க டாக்டரும், லிங்கமும், அவனும், தேவியும் எல்லாம் கரைந்து போயின. என் மொத்த உடலும் தலைக்குள் திணிக்கப்பட்டு, அந்தத் தலையும் சுழலின் மையப்புள்ளியில் சிக்கிக்கொண்டு மூச்சுத் திணறியது.

டாக்டர், ‘சுப்பு கண்ணைத் திறந்து பார்!’ என்றார். எப்படிப் பார்ப்பது, யார் பார்ப்பது, நானே கரைந்துபோகும் நிலையில் இருக்கும்போது கண்ணைத் திறப்பது எப்படி?

மீண்டும் டாக்டர் ‘கண்ணைத் திறந்து பார்!’ என்றார். அவர் படுத்துக்கொண்டுதான் பேசினார். இருந்தாலும், அவரது குரல்மட்டும் தனியாக என் காதருகில் கேட்டது. ‘பராசக்தியைப் பாக்கணும்னு சொன்னியே பார்!’ என்றார். என்னால் முடியவில்லை.

அப்போது அவன் பேசினான். டாக்டருடைய குரல் சன்னமாக ஒலித்தது என்றால், இவன் குரல் ஆக்ரோஷமாக இருந்தது. ‘இவன்லாம் பாக்க மாட்டான் டாக்டர்! இவனப்போய் கூட்டிட்டு வந்தீங்களே. பராசக்தி என்ன தே…ளா கண்டவன்லாம் பாக்க’ என்றான்.

எனக்கு அவனை அங்கேயே அடித்துவிட வேண்டும் போல் இருந்தது. டாக்டர் அவனை சமாதானப்படுத்திவிட்டு, என்னிடம் ‘சுப்பு கொஞ்சம் வெளியே வேணா இருந்துட்டு வா. அப்புறம் பார்க்கலாம்’ என்றார்.

நான் வெளியே எழுந்து வந்துவிட்டேன். அங்கே மீனவர்கள் வலையைப் பிரித்துச் சரிசெய்துகொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்ததில் எனக்குக் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் உள்ளே நுழைந்தேன். படுத்துக்கொண்டிருந்த டாக்டர் அருகில் அமர்ந்தேன். மேற்படி நபர் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் அவன் பாட்டுக்குப் பேசிக்கொண்டே இருந்தான், ‘கடல்ல மிதக்கணும், கட்ட போல மிதக்கணும், அப்பதான் அவளப் பாக்க முடியும். பிடிமானம் இருக்கற வர அவளப் பாக்க முடியாது. எல்லாத்தையும் அவுத்துப்போட்டு அம்மணமா நில்லு, செத்துப்போய் பொணமாயிடு, அப்போ அவளப் பாக்கலாம். நீ இருக்கும்வரை, உன்னோட சொத்து இருக்கும்வரை, உன்னோட சொந்தபந்தம் இருக்கும்வரை, அவளப் பார்க்க முடியாது. நீ என்ன வேணா பண்ணு, எப்படியானாலும் அவளப் பாக்க முடியாது! ஒன்னால ஒண்ணுமே பண்ண முடியாது!’ என்று கேலியும் கிண்டலுமாக ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டே போனான். மீண்டும் நான் பராசக்தியைப் பார்க்க முயன்றேன். இந்தமுறை சுழல் இன்னமும் அடத்தியாகவும், வேகமாகவும் இருந்தது. உடலை உருக்குலைக்கும் போராட்டத்தின் முடிவில், இது நம்மால் முடியாது என்று புரிந்துவிட்டது, இதற்கு மேல் போனால் சுப்புவுக்கு முற்றுப்புள்ளிதான் என்று தெரிந்துவிட்டது.

மேற்படி நபர் இப்போது உபதேசங்களை எல்லாம் விட்டுவிட்டு, நேரடியாகத் திட்ட ஆரம்பித்தான். அந்த சத்தத்திலும் டாக்டர் நிம்மதியாக உறங்கிக்கொண்டு இருந்தார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எழுந்து வெளியே வந்தேன். மெயின் ரோட்டுக்கு வந்து, அடையார் செல்லும் பஸ்ஸில் ஏறிக்கொண்டேன்.

அடையார் வீட்டில் முகுந்தன் இருந்தான். அவனைத் தனியே அழைத்து ‘டாக்டர் என்னை ஏதோ செய்துவிட்டார். என் அடையாளமே அழிந்துவிடும் போல இருக்கிறது’ என்றேன். நடந்ததை விவரமாகச் சொன்னேன். அவன் என்னைச் சமாதானப்படுத்தினான். படுத்தால் தூக்கம் வரவில்லை. டாக்டர் ஆரம்பித்து வைத்த சுழற்சி என்னைப் பிடித்துக்கொண்டது. அதை உதறித்தள்ள என்னால் முடியவில்லை. எப்போது பொழுது விடியும் என்று காத்திருந்தேன்.

காலையில் மந்தைவெளி ஷோபனா வீடு. ஷோபனா மகளுக்கு ஜடை பின்னிக்கொண்டு இருந்தாள். குழந்தைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பும்வரை காத்திருந்தேன். பிறகு ஷோபனாவிடம் ‘இந்த டாக்டர் சரியில்லை! அவருக்கு ஏதோ சித்து இருக்கிறது அதை என்மீது பிரயோகித்துவிட்டார்’ என்று குற்றம்சாட்டும் விதத்தில் சொன்னேன். ஷோபனா பதறவில்லை. நடந்தது முழுவதையும் விவரமாகச் சொன்னேன்.

ஷோபனா ‘நீதானே பராசக்தியப் பாக்கணும்னு கேட்ட, அவர் காட்டினார், நீ பாக்கல. இதுக்கு ஏன் குறை சொல்ற’ என்றாள். இவளிடம் பேசினால் பிரயோஜனம் இல்லை என்று நிறுத்திவிட்டு, அங்கிருந்து புறப்பட்டேன். அன்றிலிருந்து திருவொற்றியூர்ப் பயணம் நின்றுபோனது.

தொடரும்..

Leave a Reply