உக்ரேனில் ஒரு கிராமத்தை நாசிப்படை ஆக்கிரமிக்கிறது. குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு போய் கிருமிநாசினி அறைக்குள் அடைத்துச் சோதனைகள் செய்து வெளியே எடுக்கிறார்கள். நோயுள்ள குழந்தைகள் கொல்லப்படுவர் என்கிறார்கள். ஜெர்மனியின் சோதனைச் சாலைகளுக்குச் சில குழந்தைகள் அனுப்பப்படுகிறார்கள். எலிகள் சீக்குப் பிடித்துச் சாகின்றன, நல்ல எலிகளாகப் பார் என்று ஜெர்மன் அதிகாரி தன் படைக்கு உத்தரவு போடுகிறார்.
முகாமில் இருந்து இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை தப்பிவிடுகிறது. இது தெரிந்தால் ஜெர்மானியர் தங்களைக் கொன்று விடுவார்கள் என்று மருத்துவர்கள் பதறுகிறார்கள். முகாம் இருக்கும் ஊருக்குள் சில ராணுவப் பயிற்சி பெற்றவர்கள் ஜெர்மானியர்களை எதிர்க்கிறார்கள். சிறு சிறு ஆயுதக் குழுக்களாகப் பிரிந்து ஜெர்மானியர்களை வாய்ப்புக் கிடைக்கும்போது கொல்கிறார்கள். ஆயுதக்குழுக்களின் முகாமில் மருந்துகள் உணவு எல்லாம் போதிய அளவு இல்லை. ஜெர்மானியர்களிடம் கொள்ளையடிக்க வேண்டும் என்கிறார்கள். சோவியத்காரர்களிடம் பேசலாம் என்று ஒருவர் சொல்ல ‘4 மாதங்கள் ஜெர்மனி கைப்பற்றிய இடத்தில் இருந்திருக்கிறோம். போராடியதெல்லாம் தெரியாது. உளவாளி என்று சுட்டுப் போடுவார்கள் சோவியத்காரர்கள்’ என்கிறார் வயதான போராளி ஒருவர்.
போலந்து ஆட்களில் சிலர் ஜெர்மனிய முகாமில் கூலிகளாகக் காவல் வேலை செய்கிறார்கள். அவர்களில் ஒருவன் அங்குள்ள உள்ளூர் மருத்துவரிடம் பேசி நச்சுக் காய்ச்சலுக்கு மருந்து கேட்கிறான். ஆனால் மருந்து கொண்டு வரும் டாக்டர் உள்ளூர் போலீசிடம் மாட்டிக் கொள்கிறார். உள்ளூர் போலீசார் உக்ரேனியர்கள். சோவியத் கம்யூனிஸ்டுகள். ஆனால் ஜெர்மனி ஊரைப் பிடித்துக் கொண்டதால் ஜெர்மனிக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். போலீசார் ஜெர்மானிய ராணுவத்திடம் மாட்டிக் கொண்ட கோபத்தில் டாக்டரைச் சுட்டுக் கொல்கிறார்கள். ஆனால் தப்பிய குழந்தை காட்டில் ஒரு ஓநாயிடம் மாட்டிக்கொண்டு மரத்தில் ஏறி இருக்கிறது. போலந்துக் காவல்காரன் (டாக்டரிடம் மருந்து கேட்ட ஆள்) குழந்தையைக் காப்பாற்றிவிடுகிறான். போலீசிடம் கொடுக்காமல் மறைக்கிறான். குழந்தையின் மற்றொரு சகோதரனை போலீஸ் விசரிக்கிறேன் என்று உணவும் தண்ணீரும் தராமல் ‘அண்ணன் எங்கே சொல்’ என்று கேட்டுச் சித்திரவதை செய்கிறது. குழந்தை ஆப்பிள் கேட்கிறது. அண்ணன் எங்கே என்று சொல்லாவிட்டால் ஆப்பிள் இல்லை என்று அதை பார்க்க வைத்துத் தின்கிறார்கள்.
குழந்தையை உள்ளூர்ப் பெரிய மனிதரின் மகளிடம் சேர்க்கிறான். அவள் குழந்தையை இரவோடு இரவாக பக்கத்து ஊரில் தன் அத்தையிடம் கொண்டு சேர்க்க முடிவு செய்கிறாள். விடியலில் தொடங்கி போலீஸ் ஊர் முழுக்கக் குழந்தையைத் தேடுகிறது. ஊரைத் தாண்டி சதுப்பு நிலத்தில் போலீஸ் தேடுகிறபோது அங்கே பெரிய மனிதரின் மகளும் அவளது தங்கையும் போலீசில் மாட்டிக் கொள்கிறார்கள். போலீஸ் அவர்களைச் சித்திரவதை செய்கிறது. தங்கை தப்பி ஓட அவளைச் சுடுகிறார்கள். போலந்துக்காரன் ‘சிறு பிள்ளையைக் கொன்ற மிருகங்களே’ என்று கோபப்பட்டு மற்ற போலீஸாரைச் சுட்டுக் கொல்கிறான். மூத்த மகள் தப்பி வீட்டுக்குப் போகிறாள். பெரியவர் அவளை அத்தை வீட்டுக்கே அனுப்பிவிட்டு காவல்நிலையம் போகிறார். இளைய மகளைக் கேட்க, ‘ஆந்த்ரே என்கிற போலந்துக்காரன் சுட்டுவிட்டான். காட்டில் ஒளிந்திருப்பான். போய்க் கேள்’ என்கிறார்கள் போலீசார்.
அவர் அழுதபடியே உடலைத் தூக்கிச் செல்கிறார். மூத்த மகளை உள்ளூர் போலீஸ் ஜெர்மன் ராணுவத்திடம் ஒப்படைக்கிறது. அவளை வதைமுகாமுக்கு அனுப்புகின்றனர். இதனிடையே ஆந்த்ரே போராளிக் கூட்டத்திடம் போய்ச் சேருகிறான். அங்கே அவனை அடித்து, ஏன் வந்தான் என்று கேட்கிறார்கள். தலைவரிடம் கொண்டு சென்றதும் ஆந்த்ரே சில தகவல்களைச் சொல்லிவிட்டு போலீஸாரைச் சுட்டதைச் சொல்கிறான். உணர்ச்சிவசப்பட்டு, ஒரு உள்ளிருந்த உளவாளியை இழந்துவிட்டோம் என்கிறார் அவர். ஆந்த்ரே போலீஸில் இருக்கும் போராளி. போராட்டக்குழுக்களுக்கு உளவு சொல்கிறான். இப்போது அவன் போலீஸைச் சுட்டுவிட்டதால் அவனால் உளவுக்குப் போக முடியாது. அவனை தாக்குதல் வேலைக்கு அனுப்புகிறார்கள். அங்கே முகாம் டாக்டருடன் வரும் ஜெர்மன் படைவீரனைக் கொன்று டாக்டரைக் கைப்பற்றுகிறார்கள். அவரிடம் உள்ள கோப்புகளில் குழந்தைகளின் பட்டியல் அடையாள அட்டைகள் உள்ளன. முன்பு பார்த்த இரட்டையர்கள் போராளித் தலைவனின் குழந்தைகள். தலைவன் டாக்டரைத் தாக்கி பிள்ளைகளை என்ன செய்தாய் என்று அடிக்கிறான்.
தப்பித்த குழந்தையை உள்ளூரில் ஒரு பெண்மணி ரகசியமாகப் பாதுகாக்கிறாள். ஜெர்மன் படை தப்பிய குழந்தையை ஊர் முழுக்கத் தேடுகிறது. போர் வீரர்கள் அந்த வீட்டுக்கு ஓட்கா வாங்க வருகிறார்கள். அப்போது குழந்தை அங்கு இருப்பதை அறிகிறார்கள். போலீஸ் நிலையம் போய் படைகளோடு வருகிறார்கள். ஆனால் அந்தப் பெண்மணி அங்கே இல்லை. குழந்தையும் இல்லை. தப்பிவிடுகிறார்கள்.
டாக்டர் போராளி முகாமில் அடி வாங்கி உண்மை சொல்கிறார். குழந்தைகளின் ரத்தத்தை எடுத்து சோதித்து அவர்களை ஜெர்மனிக்கு அனுப்பத் திட்டம் என்கிறார். போராளிகள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தாக்குகிறார்கள். உணவைத் திருடிச் செல்கிறார்கள். ஒரு போராளிக்குக் காயம் ஏற்படுகிறது. மருந்துகளையும் திருடி வருகிறார்கள்.
ஆந்த்ரே தன் காதலியைத் தேடி ஊருக்குள் போகிறான். ஊர்ப் பெரிய மனிதரும் அவருடைய உதவிக்கு இருக்கும் பையனும் ஆந்த்ரேவைப் பிடித்துக் கட்டிவைக்கிறார்கள். போலீஸ் நிலையத்தில் ஜெர்மன் அதிகாரி வந்து ஆந்த்ரேவின் நடவடிக்கைக்காக உள்ளூர் போலீஸ் தலைவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு வேறொருவனைத் தலைவனாக்குகிறார்கள். அவன் சோவியத் போலீஸில் பயின்று பதக்கம் பெற்றவன். ஆனால் ஹிட்லர் படத்துக்கு முத்தமிட்டு நன்றியுள்ளவன் என்று ஜெர்மனி ராணுவத்திடம் காட்டுகிறான். சோவியத் சித்திரவதை முறைகளைக் கையாண்டு ஊர் மக்களைக் கொடுமைப்படுத்துகிறான். ஊர் தலைவரிடம், ‘உன் மகள் ஜெர்மனிக்குச் செல்வது எதற்கு தெரியுமா? பகலில் ராணுவ முகாமில் சமையல் வேலைக்கும், இரவில் ஜெர்மன் ராணுவ அதிகாரிகளுக்கு… ஹி ஹி ஹி’ என்று சிரிக்கிறான்.
பெரியவர் சொத்து முழுவதையும் தருகிறேன், மகளை மீட்டுத்தா என்று கெஞ்சுகிறார். அவனோ ஜெர்மனிக்குப் போக இருக்கும் அவர் மகளை மீட்டுத் தருவதாகவும் அவளைத் தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படியும் கேட்கிறான். ஆந்த்ரே மீதுள்ள கோபத்தில் அவர் ஒப்புக் கொள்கிறார். திருமணத்தை ஊர்ப்பெரியவர் என்ற முறையில் அவரே நடத்தி வைக்கிறார். ஆனால் அங்கே ஜெர்மன் அதிகாரி ஒருவர் வருகிறார். அவரை வரவேற்று போலீஸ் தலைவன் உள்ளூர் மக்களிடம் தன் செல்வாக்கைப் பறைசாற்றிக் கொள்கிறான். ஆனால் மக்கள் ரசிக்கவில்லை.
திருமணத்தன்று மாலை ஆந்த்ரே தப்பி வந்து கல்யாண வீட்டுக்குத் தீ வைத்து மணமகளைக் கடத்திப் போகிறான். துரத்தி வரும் ஒரு போலீஸ்காரன் மணமகளிடம் அவளது தங்கையைக் கொன்றது புதிய போலீஸ் தலைவன் என்கிறான். அவனும் போராளிகளிடம் சேர்ந்து கொள்ள விழைகிறான். அப்போது பெரியவரின் மகள் வீட்டில் வைத்து போலீஸ் தலைவன் ஜெர்மன் அதிகாரிக்கு தன்னை விருந்தாக்கத் திட்டமிட்டதையும் அதிகாரியைத் தாக்கிவிட்டு அவள் தப்பிக்க முயன்றதையும் அங்கே வந்த ஆந்த்ரே தன்னைக் காப்பாற்றியதையும் கூறுகிறாள்.
போலீஸ் தலைவனை ஊரார் ஆண்மகனா என்று ஏகடியம் செய்ய அவன் குடித்துவிட்டு ஜெர்மன் அதிகாரியைச் சுட்டுவிடுகிறான். அவனும் காட்டுப்பகுதிக்குத் தப்புகிறான். மறுநாள் ஜெர்மன் ராணுவம் ஊருக்கு வருகிறது. மொத்த ஊரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கிறார்கள். ஊர்ப் பெரிய மனிதர் தன் உதவியாளனிடம் பணம், நகை இவற்றைக் கொடுத்து மகளிடம் சேர்க்கச் சொல்லிவிட்டு போலீஸ் அலுவலகம் போகிறார்.
அங்கே ஜெர்மன் ராணுவத்தினர் அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கிறார்கள். உள்ளூர் போலீஸ்காரன் ஒருவன் அவரைத் தூக்கிலிடுகிறான். பொதுமக்கள் அவனிடம், உன் தந்தை போன்றவரைக் கொல்கிறாயே என்று திட்டுகிறார்கள். ஆனால் அவன் கண்டு கொள்ளாமல் தூக்கில் போடுகிறான்.
காட்டில் அவரது மகள் தகவல் தெரிந்து அழுகிறாள். ஊருக்குள் போலீஸார் மக்களை அடித்து விரட்டி காணாமல் போன குழந்தையைத் தேடச் சொல்கிறார்கள். ஆனால் குழந்தையுடன் தப்பிய பெண்மணி பக்கத்து ஊரில் தெரிந்தவர் வீட்டில் வைத்துப் பிள்ளையைப் பாதுக்காக்கிறாள். குழந்தைக்கு ஜுரம் என்று மருந்து வாங்க வரும் போது போராளித் தலைவர் பார்த்துக் கேட்கிறார். குழந்தை பத்திரமாக இருப்பதைச் சொல்கிறாள்.
40 குழந்தைகளை போலீஸ் மறைத்து வைத்திருக்கும் இடத்தை ஊர்ப் பெரியவரின் உதவியாளன் கண்டுபிடித்துப் போராளிகளிடம் சொல்கிறான். அவர்கள் ராணுவ மருத்துவ முகாமை முற்றுகையிட்டுக் குழந்தைகளைக் காப்பாற்ற முயல்கிறார்கள். ஜெர்மனிக்கு அனுப்பினால் பணம் என்று சொல்லியிருப்பதால் உள்ளூர் போலீஸ்காரர்கள் போராளிகளைத் தாக்குகிறார்கள். ஜெர்மானியர்களிடம் நம்மூர்ப் பிள்ளைகளைப் பிடித்துக் கொடுப்பீர்களா என்று கேட்கிறார்கள் போராளிகள். அப்போது உக்ரேனியப் பிள்ளைகள் போனால் போகட்டும் என்கிறான் ஒரு ரஷ்யப் போலீஸ்.
பிள்ளைகளைக் கொல்வதாகத் துப்பாக்கி முனையில் வைத்து போராளிகளை மிரட்ட குழந்தைகள் பயந்து அழுகின்றன, ஜெர்மன் ராணுவம் வேறிடத்தில் இருந்து உதவிக்கு வருவதற்குள் பிள்ளைகளைக் காக்க வேண்டும் என்று வயதான ஒரு போராளி கத்தியை எடுத்துக் கொண்டு முன்னேறுகிறார், அவரைச் சுடுகிறார்கள் போலீசார். அவர் துப்பாக்கி எடுத்து குழந்தையை துப்பாக்கி முனையில் வைத்திருக்கும் போலீஸ்காரனைச் சுட்டுவிட்டுச் சாகிறார். மற்றவர்களை அடித்துப் போட்டுவிட்டுப் பிள்ளைகளை மீட்கிறார்கள் போராளிகள்.
காட்டுக்குள் இவர்கள் பிள்ளைகளுடன் தப்பி போராளி முகாமுக்கு வர அங்கே பிள்ளைகளுக்கு மருத்துவம் பார்க்கிறார்கள். ஆந்த்ரே காதலியைத் தேடிப் போகிறான். அங்கே அந்தப் போலீஸ் தலைவன் அவளைப் பார்த்து பக்கத்து ஊருக்குப் போய் அங்கிருந்து வேறேதாவது இடத்தில் வேறு பெயர் மாற்றிக் கொண்டு வாழலாம் என்று சொல்கிறான். ஒன்று ஜெர்மன் ராணுவம் அல்லது சோவியத் ராணுவம் ஏதாவது ஒன்றிடம் சிக்கிப் போராளிகள் இறந்துவிடுவார்கள். தான் சோவியத் உளவுப்படையில் சேர்ந்து கொண்டு விரைவில் உயர்பதவிக்கு வரமுடியும் என்றும் சொல்கிறான். போராளிகளைக் கணக்குத் தீர்ப்பதாகச் சவால் விடுகிறான். அங்கே வரும் ஆந்த்ரே கணக்குத் தீர்க்க என்று சொல்லி அவனைச் சுட்டுக் கொல்கிறான். தன் காதலியை அணைத்துக் கொண்டு, விரைவில் போர் முடியும்; நாம் வெல்வோம் என்கிறான். அவளோ வெற்றி தோல்வி பெரிதில்லை போரில் இழப்புதான் அதிகம் என்கிறாள்.
முகாமுக்கு வந்து குழந்தைகளுடன் சேர்ந்து கொள்வதாகப் படம் முடிகிறது.
ஜெர்மனிக்காரர்கள் மட்டுமல்ல, சோவியத் போலீஸும் கொடூரத்தில் சளைத்தவர்களில்லை என்பதும், இரக்கமின்றி உள்ளூர் மக்களையே அடிமைகளாக்கி நடத்துவதில் சோவியத் போலீஸார் ஜெர்மானியர்களை விடவும் ஒரு படி அதிகம் என்றும் படத்தின் செய்தி இழையோடுகிறது.
உக்ரேனிய அரசின் உதவியோடு எடுக்கப்பட்ட இந்தப் படம் 2012ல் வெளிவந்தது. பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் ரஷ்ய அரசால் தடை கோரப்பட்ட படம். ரஷ்யர்களைக் கொடுமைக்காரர்களாகக் காட்டுகிறது என்று காரணம் சொல்லப்பட்டது. ஆனால் படத்தின் இயக்குநர் ததியானாவோ எழுத்துப் பூர்வ ஆதாரங்களின் அடிப்படையிலேயே படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார். 2013ல் Gold Panda விருது பெற்றது இந்தப் படம். சிகாகோ சர்வதேசத் திரைப்பட விழாவில் தொலைக்காட்சித் திரைப்படம் என்ற பிரிவில் சிறந்த திரைப்பட விருது பெற்றது.