The Invasion That Never Was – Michel Danino
‘டேய்! பார்த்தியா?’
எங்கள் வகுப்பறைக்குள் முகுந்தனைச் சுற்றி ஒரே தலைகள். நான் எட்டிப் பார்த்தேன். அவன் கையில் கொஞ்சம் வளைந்து நீளமாக இருக்கும் இரும்புத் துண்டு.
‘என்னடா இது?’
‘இது நேத்தி எங்க வீட்டு மாடியில நான் படிச்சிண்டு இருந்த போது, மேல போன ஏரோப்ளேன்லேந்து விழுந்தது.. இதோ பாரு.!’
‘அடேடே அப்படியா’ என்று அனைவரும் கையில் வாங்கிப் பார்த்து அதிசயித்திருந்தோம். ஆசிரியர் வந்தவுடன் இந்த அதிசயத்தைச் சொல்ல, அவர் வாங்கிப் பார்த்துவிட்டு அது உடைந்து போன எலெக்ட்ரிக் கம்பத்தின் ஒரு பகுதி எனத் தெளிவு செய்தார்.
முகுந்தன் அசரவில்லை. மறுநாள் ‘இதுதான் டைனசாரஸின் வால் முடி’ என ஒன்றைக் காட்டினான். ‘டைனசார்களுக்கு உடலில் முடியே கிடையாது என்று சயின்ஸ் பாடத்தில் படித்தோமே’ என்றபோது, ‘அந்த புக் தப்புடா’ என்று அதிராமல் சொல்லிவிட்டு நடையைக் கட்டினான்.
அவனைப் புளுகு மூட்டை முகுந்தன் என்றே கேலி செய்வோம். ‘நீ ஏதாவது கதை எழுதப் போடா.. கற்பனை கரை புரண்டு ஓடறது’ என்று ஓர் ஆசிரியர் அங்கதமாக வாழ்த்தியது இன்னும் நினைவில் உள்ளது.
The Invasion That Never Was – என்ற தலைப்பில் Michel Danino எழுதிய நூலைப் படிக்கையில்தான் ‘புளுகு மூட்டை முகுந்தன்’ நினைவு வந்தது. புகழ்பெற்ற பல மேலைநாட்டு அறிஞர்களும், வரலாற்றுப் பேராசிரியர்களும், முகுந்தனை விட மோசமாகப் புளுகி இருக்கிறார்கள் என்று புரியவந்தது.
முகுந்தனைப் போல நண்பர்கள் உங்கள் பள்ளியிலும் இருந்திருக்கலாம். அவையெல்லாம் ‘தன்னைப் பெரிய ஆளாகக்’ காட்டிக்கொள்ளும் சிறுபிள்ளைத்தனங்கள். ஆனால் வரலாற்றுப் பொய்கள் மிக மோசமான பாதிப்புகளை உலக அளவில் ஏற்படுத்தும் என்று இந்நூலைப் படிக்கும் போது உணர்வீர்கள். இந்நூலில் குறிப்பிடப்படும் வரலாற்றுப் பொய்களும் ஏமாற்று ஆய்வுகளும், யாரோ சிலரின் தவறுகளால் ஏற்பட்டவை அல்ல. அரசியல் இலாபங்களுக்காகவும், மதமாற்றம் செய்யப் புறப்பட்ட மதவாதிகளின் வெறித்தனமான பேராசைக்காகவும், இப்பொய்கள் திட்டமிட்டே உருவாக்கப்பட்டன; பரப்பப்பட்டன.
இரண்டாம் உலகப் போரின் கொடுங்கோலனாக அறியப்பட்டு, பல லட்சம் யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லரை உருவாக்கியது இந்தப் பொய்; ஐரோப்பிய நாடுகளிடையே ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்திப் பிளவு காணச் செய்தது இந்தப் பொய்; இந்தியா எனும் தங்கச் சுரங்கத்தைத் தொடர்ந்து அடிமைப் படுத்தவும், வெற்றிகொள்ளவும், வெட்கமின்றிச் சுரண்டவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குக் கிடைத்த வலுவான ஆயுதம் இந்தப் பொய்;
இந்திய ஒருமைப்பாட்டைக் குலைக்க உதவியது இந்தப் பொய்; மத, இனப் பிரிவினைகளை உண்டாக்கி திராவிட அரசியல் செய்யத் துணை நின்றது இந்தப் பொய்; தமிழகத்தை இன்றளவும் திராவிட மாயையிலே சிக்க வைத்துக் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் அஸ்திவாரம் இந்தப் பொய்; இந்துக் கோவில்களைக் கொள்ளையடிக்க உதவியது இந்தப் பொய்; இந்திய கலாசாரத்திற்கு எதிரான பிரசாரங்களை ஊக்குவித்தது இந்தப் பொய்;
தமிழகத்தில் கடவுளர் அவமதிப்பு; பிராமண சமூகத்தை இழிவு செய்தல் ஆகிய கொடுமைகள் நடக்க அடிப்படைக் காரணம் இந்தப் பொய்; தென் மாநிலங்களில் இந்தி எதிர்ப்பை உருவாக்கிக் கொழுந்து விட்டெரியச் செய்தது இந்தப் பொய்.
இத்தனைக்கும் காரணம் ஒரே ஒரு பொய்யா என்று ஆச்சரியப்பட வேண்டாம் அதுதான் உண்மை. அந்தப் ‘பொய்’ நடை பெறாத ஒரு படையெடுப்பைப் பற்றியது. இந்தச் சிந்தனைகளை என்னுள் எழுப்பிய நூல் ‘The invasion That Never Was’.
இந்த நூலை எழுதியவர் பேராசிரியர் மைகேல் டானினோ. ஜூன் 4ம் நாள் 1956ல் பிரான்ஸ் நாட்டில் பிறந்தவர். மிகச் சிறந்த வரலாற்று அறிஞர். இந்தியாவிலுள்ள ஐ.ஐ.டி காந்திநகர் கல்வி நிறுவனத்தில் வருகைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்திய வரலாற்று ஆய்வு மையத்தின் உறுப்பினராக இருந்து வருகிறார். இலக்கியம், கல்வி ஆகிய துறைகளில் சிறந்த சேவை செய்து வருவதற்காக 2017ல் பத்ம ஸ்ரீ விருது பெற்றவர். புதுச்சேரி ஆரோவில் வளாகத்தில் இரண்டாண்டுகள் இருந்து மகான் அரவிந்தரின் படைப்புகளை ஆழ்ந்து கற்றவர். இருபது ஆண்டுகள் நீலகிரியில் வாசம் செய்தவர் 2003லிருந்து இந்தியக் குடியுரிமை பெற்று கோவையில் வசித்து வருகின்றார்.
இவர் எழுதிய இன்னொரு முக்கியமான நூல் ‘தி லாஸ்ட் ரிவர் – ஆன் தி ட்ரெயில் ஆஃப் சரஸ்வதி (The Lost River: On The Trail of the Sarasvati,). இது வேத காலத்தில் இருந்து பிறகு காணாமல் போய்க் கண்டுபிடிக்கப்பட்ட நதி. ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நதி.
ரிஷி மூலம் நதி மூலம் பார்க்க முடியாது என்பது முதுமொழி. ஆனால் ‘பொய்’ மூலம் பார்த்தால்தான், சில வரலாற்றுப் பிழைகள் தெளிவாகப் புரியவரும். இச்செய்திகளையெல்லாம் இந்நூல் பதிவு செய்கின்றது.
பதினெட்டாம் நூற்றாண்டு வரை மேலை நாடுகள் இந்தியாவை மிகுந்த மரியாதையோடும் ஆர்வத்தோடும் பார்த்து வந்தன எனச் சொல்லும் ஆசிரியர் அதற்கான தரவுகளையும் தருகிறார்
மௌரியர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் மெகஸ்தனிஸ் என்ற கிரேக்க யாத்ரீகர் பாடலிபுத்திர நகருக்கு வருகை தருகிறார். தான் கண்டதைப் பதிவு செய்கிறார்.
‘All Indians are free an d none of them is a slave.. Indians never invade other peoples, nor do other peoples invade India…They respect alike virtue and truth.’
பழங்கால, கிரேக்க, சீன, அரேபிய, பெர்சிய எழுத்துக்கள் எல்லாம், இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘இந்தியர்கள் உண்மை நீதி இரண்டுக்கும் முதலிடம் கொடுப்பவர்கள்’ என்றுதான் குறிப்பிட்டுள்ளன.
‘We have shown how much we surpass the Indians in courage and wickedness, and how inferior to them we are in wisdom. I am convinced that everything has come down to us from the banks of the Ganges, astronomy, astrology, metempsychosis, etc;’
என்று மாபெரும் பிரெஞ்ச் சிந்தனையாளர் வால்டைர் கூறியதை ஆசிரியர் மேற்கோள் காட்டுகிறார்.
இந்தியப் பண்பாடு பற்றியும் அதன் மேன்மையான பழமை பற்றியும் அளவிட முடியாத இயற்கை வளங்கள் செல்வங்கள் பற்றியும் பல மேலைநாட்டு அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து இங்கே நுழைந்த அன்னியர்கள் இவற்றை எல்லாம் கொள்ளை அடித்துக் கொண்டு சென்றனர்.
ஆங்குவில் டுப்பான் (Anquetil – Duperron) என்ற பிரெஞ்சு நாட்டு அறிஞர் 1778ல் இக்கொள்ளை பற்றி எழுதியுள்ளார். ‘இருநூறு ஆண்டுகளாக நடக்கும் இச்சுரண்டல்களைப் பற்றிச் சொல்ல நான் ஒருவனேனும் உள்ளேன் என்று அறிந்து கொள்ளுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
போர்ச்சுகீசியர்கள் தொடங்கி பல முஸ்லீம் படையெடுப்புகளால் நிலைகுலைந்து போயிருந்த இந்தியாவை, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மறைமுகமாக, சூழ்ச்சியினாலும் தந்திரத்தாலும் சதிகளாலும் வெற்றி கொள்ளத் திட்டமிட்டனர். அதன் முக்கியமான தொடக்கம்தான் வரலாற்றைத் திருத்திப் பொய்களால் அதை மாற்றி எழுதியது ஆகும்.
பதினெட்டாம் நூற்றாண்டு மேலை அறிஞர்கள் இந்தியாவில் காட்டிய அக்கறையை, இந்தியாவின் பண்பாட்டு மொழியான சமஸ்கிருதத்திலும் காட்டினார்கள். வில்லியம் ஜோன்ஸ் (William Jones) என்னும் மொழி வல்லுநர், கிரேக்க லத்தீன் மொழிகளோடு சம்ஸ்கிருதம் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது என்றும், இவை மூன்றும் ஒரே மூலத்திலிருந்து பிறந்தவையாக இருக்கும் என்றும் தன்னுடைய ஆய்வுகளின் அடிப்படையில் எழுதினார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு மேலை நாட்டு அறிஞர்களால், குறிப்பாக பிரிட்டிஷ், ஜெர்மானிய நாட்டைச் சேர்ந்தவர்களால், ஆய்வுகளின் அடிப்படையில் இந்தியா பெற்றுவரும் புகழையும், பெருமையையும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இது இப்படியே போனால் ஐரோப்பிய மொழிகளும் நாகரீகமும் ஆசியாவிலிருந்தே வந்தன என்ற வாதங்களும் வந்துவிடும் என்று பயந்தார்கள். இந்தியாவை அடிமை கொள்ள நினைத்த பிரிட்டிஷ் ஆட்சிக்கும் இது ஏற்புடையதாயில்லை.
வரலாற்று ஆய்வுகளிலும். மொழி ஆராய்ச்சியிலும் அரசியல் கலக்கத் தொடங்கியது. அரசியல் சார்பான முடிவுகளுக்கு ஏற்றவாறு ஆராய்ச்சி முடிவுகள் திருத்தப்பட்டன. ஒருபுறம் பிட்ரிடிஷ் அரசாங்கத்தின் நாடுபிடி மோகம் (Colonization); இன்னொரு புறம் உலகத்தையே கிறித்துவ மதத்தால் பரிபாலிக்க விரும்பிய மதமாற்றிகளின் (Missionaries) வெறி. இந்த இரண்டும் சேர்ந்து, வேதங்களை மொழிபெயர்த்த மேதை மாக்ஸ் முல்லர் உள்ளத்தையே மாசுறச் செய்துவிட்டது.
‘வேதங்கள்தாம் இந்தியாவின் ஆணிவேர்; அவற்றைத்தான் நான் மொழிபெயர்த்துள்ளேன். கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக அவை என்ன செய்ததுள்ளன என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்; அதன் மூலமாகவே அவ்வேர்களைக் கெல்லி எறிய முடியும்’ என்று தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் மாக்ஸ் முல்லர் குறிப்பிடுகிறார்.
மாக்ஸ் முல்லர் மொழிபெயர்த்த ரிக் வேதத்தில் (RIG Veda) வரும் ‘தாஸா’ ‘தாஸ்யூக்கள்’ என்ற கருநிற மக்களை ‘திராவிடர்’ என்றும் அவர்களோடு போரிட்டு அவர்களை வென்று வடக்கிலிருந்து தெற்குக்குத் துரத்தியவர்கள் ‘ஆரியர்கள்’ என்றும் குறிப்பிட்டு வந்த ஐரோப்பிய ஆய்வுகள், ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து (Central Asia) வந்தவர்கள் என்றும் சொன்னது.
மாக்ஸ் முல்லர் முதலானவர்கள் இதையே ‘இண்டோ ஜெர்மன்’ இனமாக மாற்றியதன் விளைவுதான், இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் ‘நாங்கள்தான் ஆரிய இனம்’ என்று பிரகடனப்படுத்திக் கொண்டு, பல இலட்சம் யூதர்களைக் கொன்று குவித்த கொடுமைக்கு அடிப்படையாக விளங்கிய ‘ஆரிய மாயை’.
தன் இறுதிக் காலத்தில் தான் ஏற்கெனவே செய்த ஆய்வுகளின் பிழையான முடிவுகளை மாகஸ் முல்லர் திருத்திக் கொண்டார். ஆரிய திராவிட இனம் என்பதே பிழையான கருத்து என்று சொன்னார். இந்துச் சமவெளி மற்றும் ஹாரப்பன் நாகரீகங்களுக்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முந்தையது வேதங்கள்; அதற்கும் மிகப் பழைமையானது சம்ஸ்கிருத மொழி என்று தனது சுயசரிதையிலே குறிப்பிடுகின்றார். ஆனால் இவையெதுவும் அக்கால ஆய்வாளர்களின் கவனத்தைக் கவரவில்லை. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு உகந்ததான ‘ஆரியப் படையெடுப்பு’ ஒரு வரலாற்று அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டது.
கற்பனையான இந்த ‘ஆரியப் படையெடுப்பும் திராவிட இனம் பற்றிய குறிப்பும்’ ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட காலத்தில் செல்வாக்குப் பெற்று விளங்கின. அது எவ்வாறு ஆங்கில ஆட்சியின் ‘பிரித்தாளும் சூழ்ச்சிக்கு’ உதவியது என்பதையும், இதே கற்பனை, தமிழ்நாட்டில் உருவான ஜஸ்டிஸ் கட்சிக்கும், திராவிட மாயையினைப் பரப்பிய ஈ.வெ. ராமசாமி நாயக்கர், சி.என். அண்ணாதுரை போன்றோருக்கும் எவ்வாறு உதவியது என்பதையும் இந்நூல் மிக அழகாக எடுத்துரைக்கிறது.
இந்நூல் எடுத்துரைக்கும் முதன்மையான செய்திகள்:
* ஆரியப் படையெடுப்பு (Aryan Invasion) வெறும் கற்பனை என்பதை நூறு ஆண்டுகளுக்கு முன்பே பல வரலாற்று ஆய்வுகள் நிரூபித்துவிட்டன.
* ரிக் வேதத்தில் உரைக்கப்படும் தாஸ்யூக்களுக்கும், திராவிட மொழி பேசும் மக்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை.
* திராவிட மொழிகள் பேசுவோரெல்லாம் திராவிடர்கள் என மொழியையும் இனங்களையும் ஒன்றுபடுத்திப் பார்த்ததில் (Linguistic meaning to a geographical term) எந்த உண்மையும் இல்லை.
* இந்தியாவில் ஆரிய – திராவிடப் பிரிவு இருந்ததற்கான எந்த ஆதாரமும், வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கவில்லை.
* ஆரியப் படையெடுப்பைப் பற்றி எந்தப் பழந்தமிழ் இலக்கியத்திலும் குறிப்புகள் கிடையாது. தென்னிந்தியாவுக்குத் தெற்கே பலநூறு ஆண்டுகளுக்கு முன்னே கடல் கொண்டு சென்ற ‘குமரிக் கண்டம்’தான் தங்கள் மூலம் என்று தமிழ் இலக்கியம் பேசுகிறது.
* மறைந்து போன் சரஸ்வதி நதி நாகரீகம், மொகெஞ்சதாரோ-ஹாரப்பன் நாகரீகம் ஆகியவை தொடர்பான பல செய்திகள், ஆரியப் படையெடுப்பு என்ற ஒன்று நடவாததை ஆய்வுச் சான்றுகளோடு தெரிவிக்கின்றது.
மகான் அரவிந்தர் ‘Indians should not be haunted by the unfortunate misconstruction of the Veda which European scholarship has imposed on the modern mind’ என்று எழுதுகிறார்.
சுவாமி விவேகானந்தர் இது பற்றிக் கூறுவதை ஆசிரியர் எடுத்துரைக்கிறார்:
‘And what your European pundits say about the Aryans swooping down from some foreign land snatching away the land of the aborigines and settling in India, by exterminating them, is all pure nonsense foolish talk.’
‘And the more you go on fighting and quarrelling about trivialities such as ‘Dravidian’ and ‘Aryan’ and the question of Brahmins and non-Brahmins and all that, the further you are from that accumulation of energy and power which is going to make the future India’
இன்னும் ஆரிய – திராவிட, பிராமண – பிராமணரல்லாத எனும் பிரிவினைகள் பேசுபவர்கள் நாட்டிற்குக் கேடு விளைவிப்பவர்கள் என்பது சுவாமிஜியின் கூற்றிலிருந்து தெளிவாக விளங்கும்.
திராவிடக் கூடாரம் ஒப்புக்கொள்ளும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் தெளிவான சிந்தனையை இந்நூல் எடுத்துக் காட்டியுள்ளது.
‘The theory of Aryan invasion is an invention. The theory is a perversion of scientific investigation.’ Says Dr. B.R. Ambedhkar and his conclusions are:-
1.The Vedas do not know any such race as the Aryan race.
2.There is no evidence in the Vedas of any invasion of India by the Aryan race and its having conquered the Dasas and Dasyus supposed to be the natives of India.
3.There is no evidence to show that the distinction between Aryans, Dasas, and Dasyus was a racial distinction.
4.The Vedas do not support the contention that the Aryans were different in Colour from Dasas and Dasyus.
அம்பேத்கரை ஏற்றுக் கொள்வோர் அவர் சொன்ன இக்கருத்தை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வாசகர் ஊகத்துக்கே விட்டுவிட்டார் ஆசிரியர். (மேலும் இது பற்றி அறிய விரும்புவோர், சுப்பு எழுதியுள்ள ‘திராவிட மாயை’ நூலைப் படிக்கவும்.)
வரலாற்றுப் பேராசிரியரும், ஹாரப்பா – சிந்து புதைபொருள் ஆய்வில் ஈடுபட்டவருமான ஜே.எம். கேனோயர் (J.M.Kenoyer) கூற்றுப்படி அதன் காலம் 1900B.C. அதற்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது வேத காலம் (Vedic period) என்றால் ஆரியப் படையெடுப்பு என்பதே நகைப்புக்கு இடமாகிவிட்டதே என நூலாசிரியர் குறிப்பிடுவது சரியான வாதம்.
இந்தியா பாகிஸ்தான் இடையே ஓடும் காகர்-ஹர்கா நதிதான் (Ghaggar-Harka river) வேத கால சரஸ்வதி நதி என்று இன்றைய தொல்லியல் வரலாற்று அறிஞர்கள் உறுதிசெய்துள்ளார்கள். வேதகால மக்கள் சரஸ்வதி நதிக்கரையில்தான் வாழ்ந்தவர்கள் என்று இந்த ஆய்வு பல சான்றுகள் மூலம் எடுத்துக்காட்டியுள்ளது (மேலும் அறிய The Sarasvati Civilization – A paradigm shift in ancient Indian history – Major General Dr. G.D.Bakshi – என்ற நூலைப் படிக்கவும்)
இந்நூல் 1996ல் வெளிவந்த உடனேயே மூவாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. இரண்டாம் பதிப்பு ஐயாயிரம் விற்றன. இளைய தலைமுறைக்கு நம் உண்மையான வரலாறு தெரிய வேண்டுமென்று ‘பள்ளிப் பதிப்பும்’ (School edition) வெளிவந்துள்ளது.
இதுவரை குறிப்பிட்ட செய்திகளைத் தவிர இன்னும் பல ஆவணங்களையும், சான்றுகளையும், மேற்கோள்களையும் மிகச் சிறப்பாக நூலாசிரியர் காட்டியுள்ளார்.
உண்மையான இந்திய வரலாற்றைத் தகுந்த சான்றுகளோடும், ஆவணங்களோடும் எடுத்துக் காட்டும் இவை போன்ற நூல்கள் எத்தனை வந்தாலும், படித்துப் பார்க்காமல் ‘பிரிவினை வாதம்’ பேசும் தேசத் துரோகிகளை என்ன செய்யலாம் என்ற எண்ணம் இந்நூலைப் படித்த பிறகு தோன்றுகிறது. அதற்கு விடை சொல்லும் நூல்களும் வரக்கூடும்.