Posted on Leave a comment

சோழாந்தக சதுர்வேதி மங்கலம் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

பாண்டிய நாட்டின் ஆனைமலை அடிவாரத்தில் நால்வர், உயர் சாதிக் குதிரைகளில் அமர்ந்தபடி ஏதோ மேற்கு தேசத்துப் பாஷையில் பேசிக்கொண்டார்கள். அங்கிருக்கும் குடவரை நரசிம்மர் கோவில் பின்புறம் வித்யாசமான சங்கேத மொழி போல் எழுந்த சப்தம் கேட்டு அவர்கள் அங்கு விரைந்தனர். ஒரு நாழிகையில் அழகாபுரி கோட்டை மலையடிவாரத்தில் மேலும் சிலர் மலையாளம் கலந்த தமிழில் ஏதோ பேச, அதில் தலைவன் போன்ற ஒருவன் ஆமோதித்துச் சிலவற்றைச் சொன்னான். அவையனைத்தையும் மறைவிலிருந்து ஒரு உருவம் கண்காணித்து வந்தது. இரவு மூன்றாவது சாமம் முடியும் நேரம். காலம் 12ம் நூற்றாண்டின் இறுதி.

வழக்கம் போல் அன்றைய பொழுதும் உற்சாகமாய்ப் புலர்ந்தது. சொக்கநாதர் கோவில் சுந்தரபாண்டியன் கோபுரத்து மண்டபத்தில் தேவார, திருமறைப் பாடல்களை பாணர்கள் நைவளம், மருதம் போன்ற பண்களில் யாழிசைத்துப் பாடிக்கொண்டிருந்தார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வலிமை பொருந்திய எதிரிகளே இல்லாதபடி பெரும் செல்வச் செழிப்புடன் பாண்டியநாடு இருந்தது.

‘முத்தமிழு மனுநூலும் நான்மறை முழுவதும்,எத்தவச் சமயமும் இனிதுடன் விளங்கவும்’ என்ற மெய்க்கீர்த்தி கொண்டு, வேம்பு சூடி வீரசிங்காசனத்தில் வீற்றிந்திருந்து அரசாண்டு கொண்டிருந்தார் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்.

அரசர் பக்கத்திலிருக்கும் பாளையங்களுக்குச் சென்றுவிட்டு அன்றுதான் மதுரை வந்திருந்தார். அரண்மனை சற்று முன்னதாகவே கூடியது. மந்திரி பிரதானிகளும் கூடினர். எந்தவொரு முக்கிய விஷயம் இருப்பதாக அப்போது வரை யாருக்கும் தெரியவில்லை. மன்னர் வந்ததும் வழக்கமான ஆலோசனைகள், சில நாட்களாக மதுரையில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் பேசப்பட்டன. நெல்லைச் சீமையிலிருக்கும் நெல்லையப்பர் கோவில் சுற்றுச்சுவர் வேலை நடந்துவந்தது. அதை அமைச்சர் சோழன் உய்ய நின்றாடுவானான விசயன் குருகுலத்தரையன் தனது கட்டுப்பாட்டில் செய்து கொண்டிருந்தார். இந்த அமைச்சரின் முன்னோர் சுந்தரபாண்டியன் காலத்தில் திருத்தங்கல் கோவிலைக் கற்கோவிலாக எடுப்பித்தார்கள்.

‘மன்னா, நெல்லையப்பர் கோவில் வேலைகள் மிக நன்றாய்ப் போகிறது. மக்கள் உவந்து திருப்பணியில் ஈடுபடுகிறார்கள். இன்னும் நான்கு திங்கள்களில் முடிந்துவிடும். தாங்கள் அப்போது விஜயம் செய்யவேண்டும்.’

‘கண்டிப்பாக அமைச்சரே! நான் அதற்கு முன்னமே நெல்லைச் சீமை வர வேண்டியிருக்கும்’ என்று மன்னர் ஒரு பீடிகையோடு சொன்னதை அமைச்சரும் உணர்ந்திருந்தார். ஆனால் அதை விவாதிக்க அது தக்க தருணமில்லை என்பதையும் அறிவார்.

சிறிது நேரத்தில் அவை கலைந்தது. அரசர் மற்றவர்களைச் சந்திக்கும் நேரம். அமைச்சரும் மன்னரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போதொரு காவலோன், கச்சி மூதூரிலிருந்து சிலர் வந்திருப்பதாகவும், மன்னரைக் காணக் காத்திருப்பதாகவும் சொன்னான். அரசர் அனுமதிக்குப் பின் அவர்கள் அவைக்கு வந்தனர். கோபாலன், மாறவர்மன் வீரபாண்டியன் கொடுத்தனுப்பிய ஓலையோடு வந்திருந்தார். அவரோடு சிலரும் இருந்தனர். அதில் ஒரு இளைஞன் மட்டும் ஆஜானுபாகுவாக வசீகர தோற்றத்தோடு இருந்தான்.

மன்னர் ஓலையைப் படித்ததும் கோபாலன், ‘அரசே, இவர்கள் பாரசீகத்திலிருந்து வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் இங்கு வந்து போன மார்கோ போலோ என்ற பிரயாணியின் ஊரைச் சேர்ந்தவர்கள். அவர் நம் பாண்டிய மண்டலத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு மிகுந்த பிரமிப்போடு இவர்களுக்குச் சொல்லியிருக்கிறார். இவர்களும் போலோ போல் பிரயாணம் செய்து ஏடுபடுத்துபவர்கள். இப்போது நம் நாட்டிலுள்ள பழைய கலாச்சாரங்களைக் காண இங்கே வந்திருக்கிறார்கள். தங்கள் உத்தரவின்பேரில் நடக்க காஞ்சியின் வீரபாண்டியன் இங்கு அனுப்பிவைத்தார்.’

‘நன்று கோபாலா. வீரபாண்டியன் விரிவாக எழுதியிருக்கிறான். நாம் உரியதைச் செய்வோம். இவர்களுக்கு நம் மொழி தெரியாதே?’ என்றார் அரசர்.

‘ஆம். இவர்கள் தில்லி சுல்தான் மூலம் வாசாப் என்பவரையும் அழைத்து வந்துள்ளனர். அவரும் ஒரு பிரயாணி, பன்மொழி தெரிந்தவர்’ என்றார் கோபாலன். தில்லி சுல்தான் என்றதும் கோபத்தால் அமைச்சர் முகம் சற்று மாறியது. அரசரும் அதைக் கவனித்தார்.

‘நல்லது. நம் நாட்டைப் பற்றி அயல் தேசத்தார் கண்டு எழுதுவது ஒருவகையில் நமக்கும் பெருமைதான். உலகிலேயே சிறந்த கலாச்சாரம் இங்குதான் இருக்கிறது. வேதமும், வேதாந்தமும், சாத்திரங்களும் அதைப் பின்பற்றி எளிமையான நம் வாழ்க்கை முறையும் இங்கு மட்டும்தான் கிடைக்கும்’ என்ற அரசர் மேலும் தொடர்ந்தார்.

‘அமைச்சரே, இவர்களுக்கு பாகனூர் கூற்றத்தில் இருக்கும் சோழாந்தக சதுர்வேதி மங்கலத்தில் தங்க ஏற்பாடு செய்யுங்கள். அங்குதான் இப்போது கோவில் திருப்பணி நடக்கிறது. இவர்கள் நம் சிற்பக்கலை பற்றி ஆய்ந்து எழுதட்டும். அங்கு இருக்கும் வேதம் படித்தவர்கள், வெகுஜனங்கள் என அனைவரிடமும் உரையாடவிடுங்கள்.’

அமைச்சர் சற்றே தயக்கத்துடன், ‘மன்னா, விதேச மக்கள். கொஞ்சம் யோசனையாய் இருக்கிறது. கடந்த சில நாட்களாய் நடக்கும் விஷயம் தங்கள் அறியாததில்லை.’

‘ஆம் அமைச்சரே, அறிவேன். இவர்கள், காஞ்சியிலிருந்து நிர்வாகம் செய்யும் வீரபாண்டியன் அனுப்பியவர்கள். கொஞ்சம் மதுரைக்கருகிலேயே இருக்கட்டும். கோபாலா, நீரும் இவர்களோடு சோழாந்தகத்தில் இருந்துவாரும்’ என்றார் அரசர். அரசரின் சொற்கேட்டு அனைவரும் சென்றனர்.

அரசர், அமைச்சரை நோக்கி, ‘இவர்களை இரகசியமாய்க் கவனித்து வரவும். இவர்கள் வந்த காரியம் நல்லபடியாய் முடியட்டும்’ என்று புன்னகைத்தார். அமைச்சரும் உரிய ஏற்பாடுகளைச் செய்யலானார்.

மறுநாள் அவர்கள் அனைவரும் சோழாந்தகம் அடைந்தனர். சோழாந்தகம் மதுரையிலிருந்து மூன்று காத தூரத்தில் வைகையின் கரையில் அமைந்த ஊர். அவர்களுக்கு அங்கு தனியாக ஒரு விருந்தினர் மாளிகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு நாட்கள் கழித்து கோபாலன் அவர்களைச் சில இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.

செல்லும் இடங்களிலெல்லாம் அவர்கள் சிலவற்றைக் குறித்துக் கொண்டிருந்தனர். அன்று வைகையில் நீராடிய போது கோபாலன், சுந்தரராஜ கனபாடிகளைச் சந்தித்தான். அவர்கள் இருவரும் காஞ்சியில் பயின்றவர்கள். கனபாடிகள் அங்குதான் இருக்கிறார் என்பது கோபாலனுக்குத் தெரியாது. கோபாலன் அங்கு வந்த விஷயம் பற்றிச் சொன்னார். மறுநாள், அந்த பிரயாணிகளோடு கனபாடிகள் வீட்டிற்குச் சென்றார்.

கனபாடிகள் அப்போதுதான் கோவில் முடித்துவிட்டு தனியாக ஆகாரம் செய்து கொண்டிருந்தார். கோபாலன் முற்றத்தில் கை, கால்களைச் சுத்தம் செய்து கொண்டு வருவதைப் பார்த்து பிரயாணிகளும் அவ்வாறே செய்தனர்.

கனபாடிகள் சிறிது நேரம் பேசிவிட்டு சிறிது நேரத்தில் கோவில் நோக்கிப் புறப்பட்டனர்.

‘சுந்தரா, இந்த ஊர், நம் கலாச்சாரம் பற்றியெல்லாம் இவர்களுக்குச் சொல்ல வேண்டும்’ என்றார் கோபாலன்

‘கண்டிப்பாக. மனு சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது – ஏதத் தேச ப்ரஸூதஸ்ய ஸகாஸாதக்ர ஜன்மந:  ஸம்ஸம் சரித்ரம் க்ஷிக்ஷேரண்: ப்ருதிவ்யாம் சர்வ மானவ: அதாவது, பூமியில் இருக்கும் அனைவரும் பாரத தேசத்தைப் பார்த்து கலாச்சாரத்தைக் கற்க வேண்டும். இங்கு வர இயலாவிட்டாலும் இங்குள்ள ஒருவரை வைத்துக்கொண்டு இவற்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். அவர் சொன்னது எவ்வளவு நிதர்சனம். விதேசத்திலிருந்து நம் கலாச்சாரம் பற்றித் தெரிந்துகொள்ள இங்கு வந்துள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சியே’ என்ற கனபாடிகள் தொடர்ந்தார்.

‘இந்த ஊர் தனிப் பெருமை வாய்ந்தது. இதன் வரலாற்றைச் சொன்னாலே நம் கலாச்சாரம், மரபு, பாண்டியர்களின் படை, வீரம் பற்றிச் சொல்லிவிடலாம். முன்னூறு ஆண்டுகளுக்கு முன் இராசசிம்மன் பாண்டியர் புதல்வர் வீரபாண்டியன் இந்த மண்டலத்தைச் சீரும் செம்மையுமாய் ஆட்சி செய்து கொண்டிருந்தார். சோழர்கள் கொஞ்சம் வலிமை பெறத் தொடங்கினர். முதலாம் பராந்தகச் சோழன் மகன் கண்டராதித்த சோழன் ஆட்சியில் இருந்தான். அவன் வடக்கே பல்லவர்களை வென்று காஞ்சிக்கருகில் சில பகுதிகளைக் கைப்பற்றினான். வெற்றியின் பொருட்டு, தன் புதல்வன் மதுராந்தகச் சோழன் பேரில் ஜெயம்கொண்ட சோழமண்டலத்து களத்தூர் கோட்டத்தில் ‘மதுராந்தக சதுர்வேதி மங்கலம்’ என்ற ஊரை நிர்மாணித்தான். அங்கொரு அழகிய இராமர் கோவிலையும் கட்டுவித்தான்.’

‘சுந்தரா, நானும் இவற்றில் சிலதைக் கேட்டிருக்கிறேன்.’

‘சோழன் அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை கோபாலா. பல்லவர்கள் போல் பாண்டியரையும் நினைத்துவிட்டான். ஒரு படையோடு பாண்டிய ராஜ்ஜியம் மீது படையெடுத்து வரத்தொடங்கிவிட்டான். வீர பாண்டியன் ஏற்கனவே வலுவிழந்திருந்த பாண்டியநாட்டின் சில பகுதிகளை சோழ நாட்டிடமிருந்து மீட்டு ஆட்சி புரிந்துவந்திருந்தார். நம் அரசருக்கு கண்டராதித்தர் படையெடுப்பு மேலும் ஆத்திரம் உண்டாக்கியது. நடுநாட்டில் ஒரு போர் நடந்தது. கண்டராதித்தர் வீழ்த்தப்பட்டான். வீரபாண்டியன், ‘சோழன் தலை கொண்ட கோவீரபாண்டியன்’ என்று பெயர் பெற்று வீற்றிருந்தான்’ என்றார் சுந்தரராஜ கனபாடிகள்.

‘ஓ!.. இந்த வரலாறெல்லாம் எனக்குத் தெரியாதே. அதற்கும் இந்த ஊருக்கும் ஏதாவது?’ என்றார் கோபாலன்

‘ஆம். அந்த வெற்றிக்குப் பின் பாண்டியன் இந்த ஊரை ஸ்தாபிதம் செய்தார். நான்கு வேதம் கற்ற ஷண்ணவதி என்ற கணக்கில் தொன்னூற்றாறு அந்தணர்களைக் குடியேற்றம் செய்து, ‘சோழாந்தக சதுர்வேதி மங்கலம்’ என்று உருவாக்கி, மதுராந்தக சதுர்வேதி மங்கலதில் உள்ளது போல் இங்கும் ஸ்ரீ இராம பிரானுக்கு திருக்கோவில் கட்டினார். இதற்கு ஜனகபுரி என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதன்பின் வீரபாண்டியனை, சுந்தரச் சோழனின் மூத்த புதல்வன் ஆதித்த கரிகாலனும், கொடும்பாளூர் பூதிவிக்கிரமகேசரியும் கொன்றுவிட்டனர். பின்னர் பல ஆண்டுகள் சோழனின் கீழே இருந்தது பாண்டியதேசம். சுந்தரபாண்டியர் வந்த பிறகுதான் பாண்டியநாடு புதுப்பொலிவோடு சோழர்களையும் அடக்கியது’ என்று கனபாடிகள் சொல்லிமுடிக்கும் போது கோவிலும் வந்தது. ஜனகபுரி என்பதால் அங்கு ஜனக நாராயண பெருமாள் கோவில் கம்பீரமாய் இருந்தது. புதிதாக சில கட்டுமான வேலைகள் நடந்துவந்தன. சிற்பிகளின் கல்லுளி சப்தம் கேட்டது. வாசாப் அனைத்தையும் கவனித்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான்.

மறுபுறம் மதுரையில், மன்னர் அமைச்சருடன் தனியே நெல்லைச் சீமை பற்றி ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார் அப்போது ஒற்றன் மூலம் ஓலை ஒன்று வந்தது. அதில் சேரன் நெல்லைச் சீமையை தாக்க இருப்பதாகவும், மதுரையில் சில சேர ஒற்றர்கள் வந்திருப்பவதாவும் இருந்தது. மன்னர் அதை அமைச்சரிடம் தந்து ‘எதிர்பார்த்த செய்திதான். நம் படை முதலமைச்சர் ஆரிய சக்கரவர்த்தியை உடனடியாக வரச்சொல்லும். சேரனுக்குத் தகுந்த பாடம் கற்ப்பிக்க வேண்டும்’ என்றார்.

மாலையே மந்திராலோசனை கூடியது. ‘மதிதுங்கன் தனி நின்று வென்ற பெருமாளாகிய’ ஆரிய சக்கரவர்த்தி சேது கூற்றத்திலிருந்து வந்திருந்தார். ஆரிய சக்கரவர்த்தி தனியாகச் சென்று ஈழத்தில் போர் நடத்தி வென்று அங்கிருந்து புத்தரின் பற்களை எடுத்துவந்து ஈழ அரசனைச் சரணடையச் செய்தவர். மன்னர் வந்தவுடன் ஆலோசனை துவங்கியது. சேரனை எதிர்க்க அமைச்சரும், ஆரிய சக்கரவர்த்தியும் நெல்லை நோக்கிக் கிளம்பினர். அங்கங்கிருந்த நாடுநகரத்தார் மூலம் படை திரட்டப்பட்டது. சேரன் எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டது.

அங்கு சோழாந்தகத்தில், பிரயாணிகள் கோவில் திருப்பணியில் இருக்கும் கற் சிற்பிகள் கலைப் பணியை நேரில் கண்டு நிறைய செய்திகள் சேகரித்தனர். அங்கிருந்த சாமான்ய மக்களிடத்திலும் பேசிப் பல அனுபவங்களைப் பெற்றனர். வாசாப் மற்றும் சிலரும் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர். அந்த வலிமையான இளைஞன் மட்டும் வேறேதோ தகவல் சேகரிப்பது போல் தனியாய் ஏடுபடுத்தினான். இவர்களைக் கண்காணிக்கும் அமைச்சரின் ஆட்கள் தகுந்த நேரத்தில் செய்திகளை அனுப்பிவைத்தனர்.

பாளையங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட படைகளைக் கொண்டு ஆரிய சக்கரவர்த்தி பொதிகை மலை வழியில் சேரனே எதிர்பார்க்காவண்ணம் தாக்குதல் நடத்தினார். மேலும் சில படைகளை திருவாங்கூர் எல்லைக்கு அனுப்பிவைத்தார். சேரனுடன் கடும் போர் மூண்டது. பாண்டியத் தளபதி நினைத்தது போல் எளிதாய் போர் முடியவில்லை. திடீரென்று ஒருநாள் குலசேகரப் பாண்டியன் போர்க்களத்திற்கு வந்துவிட்டார். படைகளுக்கு மேலும் உற்சாகம் வந்தது. கொல்லம் நகரை தலைமையிடமாய்க் கொண்டு சேரலாதன் இருந்தான். பாண்டியனின் நேரடிப் போர் சேரனைப் பின்வாங்க வைத்தது. சேரனும் சரணடைந்தான். பெரும் வெற்றி பெற்று சில நாட்களில் பாண்டியனும் அரண்மனை திரும்பினார். ஏற்கெனவே சோழர்களை அடக்கி, இப்போது சேரனையும் அடக்கியதால் பெரிய வெற்றி விழா, விஜயாபிஷேகம் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதற்கு இரு தினங்களுக்கு முன் பாரசீகத்திலிருந்து வந்த பிரயாணிகளை அமைச்சர் மூலம் அழைத்தார் மன்னர். மதுரை வசந்த மண்டபத்தில் அந்த சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. அந்த வலிமை வாய்ந்த இளைஞனும், மற்றையனைவரும் வந்திருந்தனர். அவர்கள் தாங்கள் எடுத்த குறிப்புகளை மன்னரிடம் விவரித்துக் கொண்டிருந்தனர். அந்த இளைஞன் மட்டும் எதுவும் பேசாமல் இருக்க, ‘பாரசீக நாட்டு இளவரசரே, என்ன மௌனம்?’ என்றவுடன், அமைச்சர் உட்பட அனைவரும் அந்த இளைஞனை நோக்கினார்.

‘மன்னா, என்ன இது விபரீதம்? பாரசீக நாட்டு இளவரசரா? ஒன்றும் விளங்கவில்லை. இது என்ன புது சூழ்ச்சி?’ அமைச்சர் அடுக்கிக்கொண்டே போனார்.

‘ஆம் அமைச்சரே. இவர்கள் மதுரை வந்த முதல் நாளே நான் ஆனைமலை அடிவாரத்தில் பார்த்தேன். அப்போதே சந்தேகம் வந்தது. பின்னர் சிலரை அழகாபுரி கோட்டை அருகில் பார்த்தேன். அவர்கள் மலையாளம் கலந்து பேசினர். இவர்களுக்கும் அவர்களோடு தொடர்பிருக்கலாம் என்று கருதி மதுரைக்கருகிலேயே இருக்க வைத்தேன். இரகசியமாய்க் கண்காணிக்கவும் சொன்னேன். அதற்குள் சேரன் திட்டம் தெரிந்துவிட்டது. இப்போது இவர்கள் நோக்கம் என்ன என்பதை இவர்களே சொல்லவேண்டும்.’

அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்க, அதுவரை அமைதியாய் இருந்த இளைஞன் பேசத் தொடங்கினான்.

‘பாண்டிய மன்னா, முதலில் எங்களை மன்னிக்கவும். சுந்தர பாண்டியனைப் போல் உங்கள் மதி நுட்பம் வியக்க வைக்கிறது. நான் பிரயாணியாய் இங்கு வரவில்லை. உங்கள் தேசத்தை, கலாச்சாரத்தை ஒருவகையில் கண்காணிக்கவே வந்தோம்’ என்றான் அந்த இளைஞன்.

‘என்ன? கண்காணிக்கவா?’ என்றார் ஆரிய சக்கரவர்த்தி.

‘ஆம். சில மாதங்களுக்கு முன் மார்கோ போலோ இமயமலைக்கு வடக்கே இருக்கும் தேசத்திலிருந்து புறப்பட்டுப் பல தேசங்களுக்குப் பிரயாணப்பட்டார். அவருடன் பாரசீக இளவரசியும் இன்னும் பலரும் வந்தனர். கடல் மார்க்கமாக பாண்டிய நாட்டை அடைந்து, இங்கு நடக்கும் ஆட்சி முறை, மக்கள் வாழ்க்கை முறை, தொன்றுதொட்டு வழங்கிவரும் கலாச்சாரம் என்பன பற்றி நேரில் கண்டு அதை ஏடுபடுத்தினார். கடினமான இந்த நீண்ட பயணத்தின் முடிவில் சிலரே உயிரோடு இருந்தனர். அவர் இளவரசியை எங்கள் நாட்டில் விட்டுவிட்டு ரோமாபுரி சென்றுவிட்டார். அங்கு உள்நாட்டுக் கலகங்களால் சிறையில் உள்ளார் என்று கேள்விப்பட்டோம். அதற்குள் எங்கள் நாட்டில் ஒருவித தொற்றுவியாதி வந்து மக்கள் சிரமப்பட்டனர். எங்கள் அரசாங்க வைத்தியர்கள் முயன்றும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பெரும் ப்ரயத்தனப்பட்டு கட்டுப்படுத்திவிட்டனர். அப்போது இளவரசி சொன்னதுதான் ஆச்சரியத்தைத் தந்தது. பாண்டிய மண்டலத்தில் உள்ள மக்கள் எந்த வியாதியும் அணுகாமல், நீண்ட ஆயுளோடு இருந்ததாகச் சொன்னார். இங்கு ஏதாவது விஷேச மருந்துகள் இருக்கும் என்று நினைத்து அதை நேரில் காணவே ஒரு பிரயாணியாய் இங்கு வந்தேன். ஆனால்..’

‘ஆனால் என்ன?’ என வினவினார் அரசர்.

‘ஆனால், அப்படி எந்த மருத்துவமும் இங்கு பயன்படுத்த அவசியம் இல்லாமல் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை முறையிலேயே நல்லவற்றைப் பின்பற்றுவதால், எந்த வியாதியும் அணுகாமல் இருக்கிறார்கள் என்பதை இந்த சில வாரங்களில் அறிந்துகொண்டேன்’ என்றான் பாரசீக இளைஞன்.

‘நல்லது. அப்படி என்ன அறிந்து கொண்டீர்?’ அமைச்சர் கேட்டார்.

‘பெரும்பாலும் போலோ வந்து பார்த்துச் சொன்னதுதான். பயணம் செய்த தேசங்களிலேயே இந்த தென் தேசம்தான் செல்வம் மிகுந்த அற்புதமான தேசம். உயர்ந்த இரத்தினங்களும், முத்துக்களும் பல தேசங்களுக்கும் அனுப்பப்படுகிறது. மன்னர்களும், மக்களும் தரையில் அமர்கிறார்கள். வலது கையால் மட்டுமே உணவு உட்கொள்கிறார்கள். பொதுவாக மதுபானங்கள் அருந்துவதில்லை. நீர் அருந்த ஒவ்வொருவரும் தங்களுக்கென்று பிரத்யேகக் குடுவை வைத்துள்ளனர். ஒருவர் குடுவையில் மற்றொருவர் அருந்துவதில்லை. குடுவை உதடுகளில் படாதவாறு வாய்க்குமேல் உயர்த்தி அருந்துகின்றனர். வெற்றிலை, சுண்ணாம்போடு தாம்பூலம் தவறாமல் எடுக்கிறார்கள். ஆரூடம், சகுனம் பார்த்து அதன் படியே நடக்கிறார்கள். பசுக்களை இறைவடிவமாக நினைத்து வணங்குகிறார்கள். மாட்டிறைச்சி உண்பதில்லை. வீடுகளின் தரைகளையெல்லாம் பசுஞ்சாணம் வைத்து சுத்தம் செய்கிறார்கள். குழந்தைகளும், பெரியவர்களும் நல்லெண்ணெய் கொண்டு நீராடுகிறார்கள். இருநூறு ஆண்டுகளுக்கு மேல் வாழும் யோகிகள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் காய்ந்த இலைகளில்தான் உணவு உட்கொள்கிறார்கள். மக்களிடம் இறை நம்பிக்கை நிறைய இருக்கிறது. எளிய ஆடைகள் உடுத்தும் மக்கள் காலணிகள் அணிவதில்லை. வெளியில் சென்றுவந்தால் கை கால்களை சுத்தம் செய்கிறார்கள். தினமும் குளிக்கிறார்கள். அதன் பின்பே உணவு உட்கொள்கிறார்கள். வேள்விகள் செய்ய அரசன் தனியாக நிலம், மற்றை வசதிகள் செய்கிறார். ஒருவர் உட்கொண்ட உணவை மற்றொருவர் உண்பதில்லை. நதிகளிலேயே நீராடுகிறார்கள். தங்களுக்குள் சிறிது இடைவெளிவிட்டே இருக்கிறார்கள். அரசன் திறமையாகவும் பாரபட்சம் இல்லாமலும் ஆட்சி செய்கிறார்.’ சற்றே மூச்சுவிட்டுத் தொடந்தான் இளைஞன்.

‘இப்படி பல நல்லொழுக்க விஷயங்கள் மக்கள் தங்களின் வாழ்க்கை முறையிலேயே கொண்டுள்ளனர். அதனால் எளிதாய்ப் பரவும் எந்த வியாதியும் பரவுவதில்லை.’

‘அருமை. எங்கள் நாட்டின் பெருமையை உங்களைப் போன்றவர்கள் சொல்வதில் மிகுந்த மகிழ்ச்சி. இவையனைத்தும் எங்கள் முன்னோர்கள் காலங்காலமாகப் பின்பற்றிவருபவை. அவர்கள் ஏதோ ஒரு ஆராய்ச்சியின் முடிவில்தான் இவை எல்லாம் வரையறுத்திருப்பார்கள். இந்தக் கலாச்சாரமே எங்களுக்குப் பொக்கிஷம்’ என்று கலாச்சாரப் பெருமையைச் சொன்னார் அரசர்.

உரையாடல்கள் அனைத்தையும் வாசாப் மொழிபெயர்த்துச் சொல்லிக்கொண்டிருந்தான். மேலும் சிலவற்றைப் பேசிவிட்டு அனைவரும் கலைந்தனர்.

இரண்டு நாளில் நடந்த விஜயாபிஷேகத்திற்கு பாரசீக இளவரசனாகவே வந்திருந்தான் இளைஞன். குலசேகர பாண்டியன் ‘கொல்லங் கொண்டான்’ என்ற விருது பெற்று எம்மண்டலமும் கொண்டு சிறப்பான ஆட்சி செய்துவந்தார். மக்கள் மகிழ்ச்சியோடு இருந்தனர். ஆனால் அது பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை. பாரசீக இளவரசன் தன்னாட்டிற்குச் சென்றுவிட்டான். வாசாப் தில்லி சுல்தானைச் சந்தித்து தென் தேசத்தின் செல்வச்செழிப்பைப் பற்றிக் கூறினான். அங்கு ஏற்பட்ட ஆட்சிமாற்றம், அலாவுதீன் கில்ஜியின் பார்வையைத் தென்னாட்டின் பக்கம் திருப்பியது.

Leave a Reply