Posted on Leave a comment

சி.வி.ராமன் (1888-1970) | பா.சந்திரசேகரன்

இருபதாம் நூற்றாண்டில் உலக அறிஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட மாபெரும் அறிவியல் அறிஞர் சந்திரசேகர வெங்கட ராமன் (சி.வி.ராமன்). அவர் இறந்து இந்த ஆண்டோடு ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. சுதந்திர இந்தியாவின் பொருளாதார மற்றும் அறிவியல் வளர்ச்சியில் ராமனின் எண்ணமும் ராஜகோபாலாச்சாரியின் எண்ணமும் ஒன்றாக இருந்தது என்பதை வெகுசிலரே அறிவர்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1954ம் ஆண்டு இருவருக்கும் ஒரே நேரத்தில் இந்தியாவின் மிக உயரிய விருதான முதல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இருவரும் அவர்கள் எடுத்துக்கொண்ட துறையில் தேசிய அளவில் புகழ்பெற்ற தலைவர்களாகவும் மற்றும் உலகளவில் மிகச்சிறந்த சிந்தனையாளராகவும் விளங்கினார்கள். ராமன் அவர்களுக்கு உலகம் முழுவதும், இந்தியாவிலும், நூற்றுக்கணக்கான விருதுகளும் மற்றும் கவுரவ முனைவர் பட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சி.வி.ராமனின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாள், பொதுமக்கள் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. ராமனின் முக்கிய அறிவியல் கண்டுபிடிப்பான ‘ராமன் விளைவு’ கோட்பாட்டை அறிவித்த நாளான பிப்ரவரி 28ம் தேதியை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் 1986 முதல் தேசிய அறிவியல் தினமாகக் கடைப்பிடிக்கிறது என்பதுதான் அதற்குக் காரணம்.

அடிப்படை அறிவியல் சிந்தனையை மாணவர்களிடையே வளர்ப்பதுதான் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என்று திடமாக நம்பினார் ராமன். ஒவ்வொரு ஆண்டும் அரசு கடைப்பிடிக்கும் தேசிய அறிவியல் தினம் மூலம் அவரின் இந்த நீண்டநாள் கனவு முழுமையாக நிறைவேறியதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அறிவியல் வளர்ச்சி நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கு உகந்ததாக இருக்கவேண்டும் என்று எண்ணினார் ராமன். அவர் தனது வாழ்நாள் முழுவதையும் அடிப்படை அறிவியல் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்தார். இவரது சிந்தனைகளை நாட்டின் பொருளாதார மற்றும் அறிவியல் கொள்கைகளில் இந்திய அரசு பல பத்தாண்டுகள் கண்டுகொள்ளவில்லை.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அவர் உருவாக்க நினைத்த அறிவியல் வளர்ச்சி என்பதே வேறு என்பதை இன்றும் பலர் ஏற்க மறுக்கிறார்கள். ராமன் அவர்கள் தாராள சந்தைப் பொருளாதாரத்தை 1950களிலேயே ஆதரித்துப் பேசியிருக்கிறார். கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் பெரும்பாலும் ராமனின் பொருளாதாரச் சிந்தனைகளைப் புறம் தள்ளினார்கள்.

முற்போக்கான ஜனநாயகம் நாட்டுக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு தனிமனித சுதந்திரமும் முக்கியம் என்று எண்ணினார் ராமன். அவர் 1952ம் ஆண்டு சுதந்திரத் தினத்தன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தனது கட்டுரையில் கூறினார், ‘சோவியத் நாட்டின் அதிகாரக் குவியலை மைப்படுத்தி தனிமனித சுதந்திரத்தையும், தனியார் நிறுவனங்களையும் அரசு முடக்க நினைப்பது நம் நாட்டுக்கு அழிவுதான். தனிமனித சுதந்திரம் இல்லாமல் ஜனநாயகம் திளைக்காது. அது ஒரு பொய்க்காட்சியாகத்தான் இருக்கும்.’

பொதுவாகவே ராமன் அவர்களுக்கு இயற்கையின் மேல் அதீத ஈர்ப்பு சிறுவயது முதலே உண்டு. அதுவும் வண்ணங்கள் என்றால் அளவுகடந்த ஈர்ப்பு இருந்தது. நோபல் பரிசு பெறுவதற்கு முன்பாகவே தனது பல்வேறு ஆக்கபூர்வமான ஆய்வு மூலம் ராமன் இயற்பியல் துறையில் உலக புகழ்பெற்ற அறிவியல் ஆய்வாளராக அறியப்பட்டவர். 1968ம் ஆண்டு ஒரு கட்டுரையில் அவர் கூறினார், ‘கண்களைத் திறந்து, காதுகளையும் விசாலமாக வைத்து இயற்கையை உற்றுநோக்கி நேசித்தால் அறிவியல் சிந்தனைகள் தானாக வளரும்.’ இதை நம் பள்ளிகள் செய்வதில்லை.

ராமன் தனது 42வது வயதில் 1930ம் ஆண்டு ‘ராமன் விளைவுக் கோட்பாட்டுக்காக’ நோபல் பரிசு பெற்றார். அன்றைய காலகட்டத்தில் ஆசியக் கண்டத்திலேயே இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்றவர் ராமன் ஒருவரே. நோபல் பரிசு அறிவிப்புக்கு ஆறு மாதத்துக்கு முன்னதாகவே நார்வே நாட்டுக்குக் கப்பல் மூலம் சென்றார் ராமன். தனது அறிவியல் கண்டுபிடிப்பில் அவ்வளவு ஆழமான நம்பிக்கை வைத்திருந்தார் அவர்.

பிரிங்ஷ்எய்ம் மற்றும் ரோசன் என்ற ஜெர்மன் நாட்டு அறிவியல் ஆய்வாளர்கள்தான் முதன் முதலில் ராமனின் அறிவியல் கண்டுபிடிப்பை ‘ராமன் விளைவு கோட்பாடு’ என்று கூறினார்கள். இந்தக் கண்டுபிடிப்புக்காக ராமன் செலவு செய்தது ரூ.200 முதல் ரூ.500 வரைதான் என்கிறார்கள் அறிவியல் ஆய்வாளர்கள். ஆனால் அந்தக் காலகட்டத்தில் இந்தத் தொகை ஒரு பெரும் தொகைதான். ஆனால் ராமன் நோபல் பரிசு பெற்றதை ஒரு பகுதியினர் ஏற்க மறுத்தனர், அவர்கள்தான் கல்கத்தா-அல்கஹாபாத் அறிவியல் அமைப்பைச் சார்ந்தவர்கள்.

சி.வி.ராமன் நவம்பர் 7, 1888ம் ஆண்டு திருச்சிராப்பள்ளியில் திருவானைக்காவலில் பிறந்தார். அவர் கூடப்பிறந்தவர்கள் மொத்தம் எட்டு பேர். அவரின் தந்தை இரா.சந்திரசேகர் ஐயர், தாயார் பார்வதி அம்மையாருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். தந்தை கணக்கு மற்றும் இயற்பியல் ஆசிரியர். ராமனின் தந்தை பணி மாறுதல் பெற்று விசாகப்பட்டினத்தில் கல்லூரியில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ராமன் தனது பள்ளிப்படிப்பை விசாகப்பட்டினத்தில் பயின்று தேர்ச்சி பெற்றார்.

பிறகு 1904ம் ஆண்டு மெட்ராஸ் மாநிலக் கல்லூரியில் தன்னுடைய B.A இயற்பியல் பட்டப்படிப்பை சிறப்புத் தகுதியுடன் தேர்ச்சிபெற்று M.A இயற்பியல் பட்டப்படிப்பை அதே கல்லூரியில் முடித்தார். ராமன் 1907ம் ஆண்டு M.A இயற்பியல் முதுகலை பட்டப்படிப்புத் தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1907ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசின் நிதித்துறைத் தேர்வு எழுதி அதில் முதலிடம் பெற்றார். அதே ஆண்டு ஜூன் மாதத்தில் கல்கத்தாவில் உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலராகப் பணியாற்றினார்.

ராமன் நிதித்துறையில் பணியாற்றினாலும் அவரின் கவனம் முழுவதும் அறிவியலில் ஆய்வுகள் செய்வதிலேயே இருந்தது. 1907ம் ஆண்டு முதல் 1917ம் ஆண்டு வரை பத்தாண்டுகளாக தினமும் காலை பணிக்குச் செல்லும் முன் மற்றும் மாலை பணியில் இருந்து வீடு திரும்பிய பிறகு அவர் மேற்கொண்ட அறிவியல் ஆராய்ச்சியின் மூலம் 30 கட்டுரைகளை, உலக அளவில் அறிவியல் துறையில் முதன்மையாக விளங்கும் நேச்சர் போன்ற இதழ்களில் பிரசுரித்துள்ளார். ராமனின் இந்த அறிவியல் ஆர்வம் கடைசிக்காலம் வரை குறையவேயில்லை.

ராமன் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும்போதே, 18 வயதில் அவரின் முதல் ஆய்வுக் கட்டுரை 1907ம் ஆண்டு நவம்பர் மாத Philosophical Magazine என்ற இதழில் பிரசுரிக்கப்பட்டது. அரசு துறையில் பணியாற்றியபோது, ஒரு நாள் வீடு திரும்பும்போது ற்றி அறிந்துகொண்டார். பிறகு கொல்கத்தாவில் மருத்துவர் மகேந்திரலால் சர்க்காரால் (1833-1904) நிறுவப்பட்ட ‘இந்தியன் அசோசியேஷன் ஆஃப் கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ்’ (IACS) என்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைத்து பல்வேறு அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொண்டார். 1919ல் IACS-யின் செயலாளராகப் பணியாற்றினார்.

ரங்கோன், நாக்பூர் போன்ற நகரங்களில் பணியிடம் மாறுதல் பெற்றார். இதன் மூலம் அவரின் அறிவியல் ஆய்வு பணி சிறிது தாமதமானது. ராமன் 1917ம் ஆண்டு தனது நிதித்துறைப் பணியை விட்டு விலகி கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த முதல் சார் தாரக்நாத் பாலித்தில் இயற்பியல் பேராசிரியராக பணியில் சேர்ந்து 15 ஆண்டுகள் அறிவியல் ஆய்வை மேற்கொண்டு அடிப்படை அறிவியல் சிந்தனை மற்றும் ஆர்வத்தை மாணவர்களிடையே அயராது ஊக்குவித்தார். 1924ம் ஆண்டு லண்டனிலுள்ள இராயல் சொசைட்டியின் ஃபெல்லோசிப் பேராசிரியர் ராமனுக்கு வழங்கப்பட்டது.

பிறகு ராமன் 1933ம் ஆண்டு முதல் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் முதல் இந்திய இயக்குநராகவும் இயற்பியல் பேராசிரியராகவும் 15 ஆண்டுகள் பணியாற்றினார்.

பிறகு இந்திய அறிவியல் கழகத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு தன்னுடைய பெயரில் ராமன் ஆராய்ச்சி நிறுவனம் என்ற நிறுவனத்தை 1948ம் ஆண்டு தொடங்கினார். அதற்கு முன்பு ராமன் அவர்கள் சென்னையில் மைலாப்பூரில் தனக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று உருவாக்க முயன்றார். ஆனால் பிரதமர் நேருவின் தடையால் அந்த முயற்சி நின்றுபோனது.

‘விஞ்ஞான ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் மத்திய அரசின் அணுகுமுறை’ மற்றும் நேருவின் கொள்கையை ராமன் நிராகரித்தார். மேலும் ‘காளான்களைப் போல பெருகிய சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வகங்களை விவரிக்க அவர் ‘நேரு-பட்நகர் விளைவு’ என்ற சொற்றொடரை உருவாக்கினார், பெரும் தொகைகளை செலவழித்தாலும் அவை சிறிதளவே சாதிக்கும் என்று கணித்துள்ளார்’ (ஷான் காஷ்யப், 2018).

இந்தியாவில் உலகளாவிய ஆழ்ந்த தொலைநோக்கு கொண்ட அறிவியல் சிந்தனையை வளர்ப்பதைத் தனது முக்கியக் குறிக்கோளாக வைத்திருந்தார் ராமன். மாணவர்களிடையே மற்றும் அறிவியல் ஆய்வாளர்களிடையே முற்போக்கான ஆக்கப்பூர்வமான அறிவியல் அறிவை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார். பல்நோக்கு அறிவியல் ஆய்வை மேற்கொள்ள பல்வேறு நிறுவனங்களை நிறுவி தலைமை தாங்கினார்.

குறிப்பாக 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார் ராமன். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தை (Indian Science Academy) உருவாக்கி பின்னர் அதன் தலைவராகவும் பணியாற்றினார். அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முனைப்புடன் செயலாற்றினார். அறிவியல் கழகம் (Current Science Association) என்னும் கழகத்தை உருவாக்கி அதன் தலைவராகவும் பணி புரிந்து, அக்கழகத்தின் வழி புகழ்பெற்ற கரன்ட் சயன்ஸ் (Current Science) என்னும் ஒர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார்.

1928ம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று இந்திய இயற்பியல் ஆய்விதழைத் தொடங்கி (Indian Journal of Physics) தனது கூட்டு ஆய்வுக்கண்டுபிடிப்புகளின் முடிவுகளை வெளியிட்டார். இந்தப் புதிய அறிவியல் ஒளி விளைவுதான் ராமனுக்கு நோபல் பரிசு பெறவும் தன் பெயரால் ஒரு அறிவியல் விளைவு பெயர் பெறவும் வழி வகுத்தது. ராமன் தனது ஆராய்ச்சிக் கட்டுரையை இந்திய ஆய்விதழில் வெளியிட்டு உலகமுழுவதும் பெரும் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டிலேயே அறிவியல் ஆய்வுக் கருவிகளை உருவாக்கும் திறனை வளர்க்க அயராது உழைத்தார் ராமன். ஆனால் சுதந்திர இந்தியாவில் ஆட்சியாளர்கள் அடிப்படை அறிவியல் ஆய்வுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. இதை வெளிப்படையாகவே ராமன் கூறியுள்ளார். ஆட்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்காக வல்லுநர்கள் கூறும் கருத்தை ஏற்கவில்லை என்பதை ராமன் ஆழமாகத் தனது எழுத்துக்கள் மூலம் பதிவு செய்துள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பொருளாதார மற்றும் அறிவியல் வளர்ச்சிக் கொள்கைகளை ராமன் எதிர்த்தார். பிரதமர் நேரு அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிய அறிவியல் ஆலோசகர்கள் சிலர், நாட்டின் நலனை கருத்தில்கொண்டு அடிப்படை அறிவியலை வளர்க்கப் பாடுபடவில்லை என்பது ராமனின் திடமான கருத்து.

முன்னாள் பிரதமர் இந்திரா, ராமன் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு மத்திய அரசின் நிதி வழங்க ஏற்பாடு செய்ய எண்ணினார். ஆனால் ராமன் அதை மறுத்தார், ஏனென்றால், அதிகாரக் குவியலை மையமாகக் கொண்டு செயல்படும் மத்திய அரசு, நிதி வழங்கியபிறகு, ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக ரீதியாகவும் செயல்முறைகளிலும் தேவையற்ற தலையீட்டைத் திணிக்கும் என்று எண்ணினார். இதை அவரிடமே கூறவும் செய்தார்.

ஏன் இந்தியக் கல்வி நிறுவனங்கள் சர்வதேச அளவில் இடம்பெறுவதில்லை என்பதை அன்றே ராமன் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார். கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு முழு தன்னாட்சி இருந்தால்தான் ஆக்கப்பூர்வமான செயல்களை மேற்கொண்டு சர்வதேச அளவில் முதன்மையாக விளங்க முடியும் என்பது ராமனின் கருத்து.

ராமனின் பல அறிவியல் படைப்புகள் என்றென்றும் பொதுமக்களுக்குப் பயன்படும்படி உதவிவருகிறது என்பதை வெகுசிலரே அறிவர். தனது கடைசி மூச்சு வரை ஆக்கப்பூர்வமான அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார் ராமன். ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக கடைசி நாள் வரை பணியாற்றி, நவம்பர் 21, 1970ல் தனது 82வது வயதில் மறைந்தார். ராமனின் அறிவியல் மற்றும் பொதுக் கொள்கை சிந்தனைகளை வரும் சந்ததியினருக்குக் கொண்டுசேர்ப்பது நமது தலையாய கடமை.

Leave a Reply