Posted on Leave a comment

விவசாயிகள் போராட்டம் – வழி மாறியதா வெள்ளாடு? | ஜெயராமன் ரகுநாதன்

பிஜேபி அரசு கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களின்போது கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. விவசாயத்துறை மாறுதல்களும் அதை முன்னெடுக்கும் மூன்று வேளாண் சட்டங்களும் அவற்றில் முக்கியமானவை.

அயோத்தியில் ராமர் கோவில், முத்தலாக், காஷ்மீரில் 370 சட்ட வாபஸ் போல விவசாயத்துறைச் சீர்திருத்தங்களும் கையில் எடுக்கப்பட்டு மூன்று சட்டங்களும் இயற்றப்பட்டு, முறையாக, கவனிக்க, முறையாகப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டன. ஆனால் அவற்றின் செயல்பாட்டை உச்சநீதி மன்றம் இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைத்திருக்கிறதே என்ற கேள்விக்கான பதிலாக ஒரு புன்னகையைச் சிந்தலாம்!

சட்டம் இயற்றுவதற்கு முன்னர் எங்களைக் கலந்தாலோசிக்கவில்லை என எதிர்க்கும் விவசாயச் சங்கங்களும் ‘இந்தச் சட்டத் சீர்திருத்தங்கள் இருபது வருடங்களாகப் பேசப்பட்டு வந்தவையே தவிர வேறில்லை’ என அரசும் அறிவிப்பது ஜனாயக அரசியல் என நாம் அவற்றைத் தாண்டிச் செல்வோம்.

அப்படி என்னதான் இந்த வேளாண் சட்டங்கள் சொல்கின்றன, அதில் என்ன சங்கடங்கள் இந்த விவசாயிகளுக்கு இருக்கின்றன என்பதைச் சுருக்கமாகக் கவனிக்கலாம்.

வேளாண் சட்டங்கள் சொல்வது என்ன?

இந்தச் சட்டங்கள், நாட்டின் மொத்த வேளாண் துறையில் 86% இருக்கக்கூடிய சிறுகுறு விவசாயிகளை மனதில் கொண்டு இயற்றப்பட்டவை. ஏனென்றால் அவர்கள்தான், பெரிய வியாபாரிகளிடமும் இடைத்தரகர்களிடமும் தம் விளைபொருட்களுக்கான உரிய விலையை வாதிட்டுப் பெற்றுக்கொள்ளும் சக்தியோ அல்லது உற்பத்தியைப் பெருக்கக்கூடிய தொழில்நுட்பத்தைப் புகுத்துவதற்கான பொருளாதார வசதி வாய்ப்புக்களோ இல்லாதவர்கள்.

வேளாண் சந்தையைப் பொருத்தவரையில் எந்த விவசாயியும் தன் விளைபொருட்களை ஏபிஎம்ஸியை (Agriculture Product Marketing Center) தாண்டி எவருக்கு வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளும் உரிமையைத் தருகிறது இந்தச் சட்டம்.

நீங்களும் நானும் கூட விவசாயியின் தோட்டத்திற்குப் போய் அவரின் விளைபொருளை வாங்க முடியும். இதனால் இடைத்தரகர்களுக்கும் அரசுக்கும் தரும் கமிஷன் மிச்சமாவதோடு மண்டிக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. (இதுதானே போராட்டத்தின் ஆணி வேர் என்பது புலப்படுகிறதா?) இதனால் விவசாயி தன் பொருளுக்கு நல்ல விலையைப் பெறமுடியும். கூடவே போக்குவரத்துச் செலவும் இல்லாமல் போகும்.

ஒப்பந்த வேளாண் (contract farming) சட்டம் சிறுகுறு விவசாயிக்கு இன்னும் வலு சேர்க்கும். முன்பே ஒப்பந்தம் போட்டுக்கொண்டு விவசாயி தன் நிலத்தில் பயிர் செய்து, அறுவடை சமயத்தில் சந்தை விலை என்னவாக இருந்தாலும் ஒப்பந்த விலைக்கே தன் விளைபொருளை விற்கலாம். இது, சந்தை மாறுதல்கள் சிறுகுறு விவசாயிகளைத் தாக்காமல் நிர்ணயிக்கப்பட்ட விலையைப் பெற்றுத் தரக்கூடிய முறை.

இன்னொரு சட்டமானது பருப்பு, தானிய வகைகள், எண்ணெய் விதைகள் மற்றும் சமையல் எண்ணெய், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற பொருட்கள் ‘அத்தியாவசியமான’ என்னும் பட்டியலில் இருந்து நீக்கப்படுவது பற்றியது. இதனால், இந்தப் பொருட்கள் சம்மந்தப்பட்ட வேளாண்மையில் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் வரக்கூடும்.

விவசாயியின் பயம்

சில விவசாயிகள் குழு, முக்கியமாக பஞ்சாப் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், இந்த வேளாண் சட்டங்களால் ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ (minimum support price) வழக்கொழிந்து போய்விடும் அன்று அச்சப்படுகிறார்கள். அதோடு தனியார் நிறுவனங்கள் வேளாண் துறைக்குள் புகுந்து விவசாயிகளைத் தம் நிதி பலத்தால் கட்டுப்படுத்தி விலையைக் குறைத்து விவசாயிகளைத் தவிக்க விட்டுவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள்.

மேலும் இப்போதைய மண்டி முறை ஒழிக்கப்பட்டால் எஜண்ட்டுகளும் (Arthiyas) இந்தத் துறையிலிருந்து விலகி விடுவார்கள் என்று யோசிக்கிறார்கள். இந்த ஏஜண்டுகள்தான் விவசாயிகளுக்கு அவ்வப்போது கஷ்ட நேரங்களில் கடன் தந்து உதவுபவர்கள் என்பதால், அந்த சௌகரியங்கள் போய்விடுமே என்று நினைக்கிறார்கள்.

தங்களது வாழ்வாதாரமே இந்த இடைத்தரகு கமிஷனில் அடங்கியிருப்பதால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்த ஏஜெண்ட்டுகளும் போராடுகிறார்கள்.

விவசாயிகளின் கோரிக்கைகள்

விவசாயிகள் ஒரேடியாக மூன்று சட்டங்களையும் அரசு திரும்பப் பெறவேண்டும் என்பதையே பிடிவாதமாகச் சொல்லுகின்றனர். பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று அரசு முன்வந்தாலும் விவசாயிகள் வாபஸ் என்பதிலேயே நிற்பது அவர்களது உண்மைத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

இது நாள் வரையில் இல்லாத வகையில் ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’யை சட்டத்தின் மூலம் நிர்ணயிக்க வேண்டும் என்றும் கேட்கின்றனர். இவை மட்டுமில்லாமல் மின்சார மாறுதல் சட்டத்தையும், களை எரிப்பு சார்ந்த மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டத்தையுமே திரும்பப் பெறச் சொல்லுகின்றனர்.

பதினோரு முறை அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் எதற்கும் ஒப்புக் கொள்ளாமல் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும் என்று உச்ச நீதி மன்றத்திலேயே பிடிவாதம் பிடிக்கும் விவசாயிகளின் போக்கு மிகுந்த அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. உச்ச நீதி மன்றம் தலையிட்டு நால்வர் குழுவை அமைத்து பிரச்சினைக்குத் தீர்வு காணச் சொன்னபோதும் அந்தக் குழுவையே நிராகரித்துவிட்டு வாபஸ்தான் ஒரே வழி என்று பிடிவாதம் பிடிக்கின்றனர்.

அரசின் நிலைப்பாடு

இந்த மூன்று வேளாண் சட்டங்களையுமே வேளாண் துறையில் மிக முக்கிய சீர்திருத்தங்களாகச் செயல்படுத்த அரசு முனைப்போடு இருக்கிறது. இது பிஜேபியின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றும் கூட.

‘இந்தச் சட்டங்களின் மூலம் விவசாயி, அரசின் ஏபிஎம்சி-யை விட்டு வெளியேறவும், தேசத்தில் எங்கு நல்ல விலை கிடைக்கிறதோ அங்கு தம் விளைபொருட்களை விற்கவும் இயலும் என்பது மிகப்பெரிய சீர்திருத்தம்’ என்பது அரசின் நிலைப்பாடு.

போராட்டமும் அதன் கோர முகமும்

கடந்த அறுபத்தைந்து நாட்களாக டெல்லியில் கூடி விவசாயிகள் நடத்தும் போராட்டம், நாட்டின், ஏன் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு முயன்றது. பல கட்டப் பேச்சு வார்த்தைகள் நடத்தியது. விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளில் பிடிவாதமாக நின்றது.

விவசாயிகளின் இந்த அதீதப் பிடிவாதம், இந்தப் போராட்டத்தின் தார்மீகத்தையும் உண்மைத்தன்மையையும் கேள்விக்குரியதாக்கியது. இது விவசாயிகள் என்னும் பெயரில் நடத்தப்படும் பினாமி போராட்டமோ என்னும் சந்தகம் எழும் வகையிலே போராட்டம் திசை மாறத் தொடங்கியது.

குடியரசு தினத்தன்று டெல்லியில் அரங்கேறிய வன்முறையும் செங்கோட்டை முற்றுகையும், தேச விரோத சக்திகள் ஊடுருவி விட்டதோ என்னும் சந்தேகத்தை மெய்ப்பிக்கும் விதமாகவே இருக்கிறது.

வேளாண் சட்டங்களினால் ஏற்படும் நன்மை தீமைகளை உணர்ந்து அவற்றின் பாதிப்புகளை முழுமையாகப் புரிந்துகொள்ளும் முன்பே, போராட்டம் நடத்துவதை எதிர்க்கட்சிகள் வழக்கமாகக் கொண்டுள்ளன. விவசாயம் முக்கியத்துவம் பெற்ற மாநிலங்களான, தெலுங்கானா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்கள், ஏன் தமிழ்நாட்டில்கூடப் பெரும்பாலானோர் வேளாண் சட்டங்களை ஆதரித்துள்ளனர். இதனால், தங்களின் விளைபொருட்களை, எங்கு வேண்டுமானாலும் விற்க முடியும்; நல்ல விலை பெற முடியும் என அந்த அந்த மாநிலங்களின் பெரும்பாலான விவசாயிகள் நம்புகின்றனர். அதேபோல, பல பொருளாதார நிபுணர்கள் இந்த வேளாண் சட்டங்களை வரவேற்றுள்ளனர்.

ஆனால், பஞ்சாப் மாநில விவசாயிகள்தான் இந்தச் சட்டங்களைத் தீவிரமாக எதிர்க்கின்றனர். இதற்கு காங்கிரஸ் உட்பட்ட, பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகளின் துாண்டுதலும் காரணம் என்பதை மறுக்க முடியாது. பஞ்சாப்பில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸும் டெல்லியில் பாஜகவின் எதிரிக்கட்சியான ஆம் ஆத்மி கட்சியும் சேர்ந்துதான் இந்தப் போராட்டத்தைத் தூண்டிவிடுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

‘விவசாயிகள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும், தங்களின் விளைபொருட்களைக் கொண்டுசென்று, நல்ல விலைக்கு விற்று ஆதாயம் பெற வழி இருக்க வேண்டும். எனவே, தடையில்லாத சந்தைகளை உருவாக்க வேண்டியது அவசியம்’ என காங்கிரஸ் தங்களது ஆட்சிக்காலத்தின் போது தெரிவித்தது. இதே சட்டங்களை தாமும் அமல்படுத்தப்போவதாக தம் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகச் சொல்லிவிட்டு, இப்போது அதே காங்கிரஸ் நேர் எதிர் நிலை எடுத்துப் போராட்டத்தைத் தூண்டுகிறது. இது சரியான சந்தர்ப்பவாதச் செயலன்றி வேறென்ன?

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு என்ன செய்ய நினைத்ததோ, அதையே தற்போது, மோடி அரசு செய்துள்ளது. இருந்தும், அதை ஏற்க மறுத்து, விவசாயிகளைத் துாண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றன காங்கிரஸ் மற்றும் சில எதிர்க்கட்சிகள்.

இடைத்தரகர்கள் தலையீடு இன்றி, பொருட்களை நியாயமான விலைக்கு விவசாயிகள் விற்பதற்காகவே புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அத்துடன், குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவதும் தொடரும் என மத்திய அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டும், அதை ஏற்காமல் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று பிடிவாதமாகப் போராட்டத்தைத் தொடர்வது எல்லோருக்குமே கசப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது..

இந்தச் சமயத்தில் நாம் கொஞ்சம் பின்னோக்கிப் போய் காங்கிரஸ் அரசு தொண்ணூறுகளில் செய்த சீர்திருத்தங்கள் பற்றி ஒரு வார்த்தை பேசலாம்.

அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவ், பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். அந்தச் சீர்திருத்தங்களினால், தனியார் மயமாக்கப்படுதல் முன்னெடுக்கப்பட்டது. அந்தச் சமயத்தில், கடுமையான எதிர்வினைகள் எழுந்தபோதும் படிப்படியாக சீர்திருத்தங்களின் பலனைப் பெற்றதும், நாட்டில் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டதும், தாராளமயமாக்கமும் சுதந்திரமான சந்தைகளும் எவ்வளவு அவசியம் என்பதை நாட்டு மக்கள் உணர்ந்தனர். மன்மோகன் சிங்தான் அப்போது நிதி அமைச்சராக இருந்து சீர்திருத்தங்களுக்குச் செயல் வடிவம் கொடுத்தவர். ஆனால் அவரே இன்று காங்கிரஸில் உட்கார்ந்து கொண்டு சூழ்நிலைக் கைதியாக வாய் பேசாமல் இருப்பது சோகமே!

இந்த வேளாண் சட்டங்கள் நாட்டின் வேளாண் துறையை ஊக்குவித்து விவசாயிகளின் நேரடி முன்னேற்றத்திற்குத் தூண்டுகோலாய் அமையும் என்பதை உண்மையான விவசாயிகள் உணர வேண்டும். இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம், இந்தச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் ஒரு ஆரோக்கியமான போட்டி உருவாகும். அதோடு இன்று இந்தியா சில பொருட்களுக்காக அயல் நாடுகளைச் சார்ந்திருப்பதும் குறையும். எனவே தூண்டும் சக்திகளின் நோக்கம் நேர்மையாக இல்லாதபோது, சட்டங்களினால் உண்டாகவிருக்கும் பலன் என்ன என்பது முழுமையாகத் தெரிவதற்கு முன்னரே, அதை எதிர்த்து வாபஸ் பெற வைப்பது ஆரோக்கியமானது அல்ல.

இதனிடையில், குடியரசு தினத்தன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள் இந்தியாவின் பேராண்மைக்கே சவால் விடுவதாக அமைந்துவிட்டது வருத்தமான விஷயம். உலகமே ஆர்வத்துடன் பார்க்கும் நமது குடியரசு தின அணிவகுப்பை அவமதித்து, வரம்பு மீறிய ஒரு கும்பல், டிராக்டர்களை டெல்லிக்குள் அத்து மீறி ஓட்டி வந்தும், ஆயுதங்களோடு ஊர்வலத்தில் கலந்துகொண்டும், போலீஸார் எழுப்பிய தடைகளை உடைத்தும், கார் பஸ் முதலிய தனி மற்றும் பொதுச்சொத்தைச் சேதப்படுத்தியும் அராஜகங்கள் செய்தது.

விவசாயிக் குழுத் தலைவர்களே அதிர்ச்சியடைந்து இந்த வன்முறைக்கும் தங்களின் குழுக்களுக்கும் சம்மந்தம் இல்லையென்று புலம்புவதைக் கேட்கும்போது, ஒன்று தேச விரோதச் சக்திகள் இதில் புகுந்து அமளி செய்துவிட்டன அல்லது விவசாயத் தலைவர்களுக்கு தங்களின் தொண்டர்கள் மேல் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. எப்படி இருந்தாலும் செங்கோட்டையில் நிகழ்ந்த அராஜகத்துக்குப் பொறுப்பேற்கும் அவல நிலைக்கு போராட்டக்காரரகள் தள்ளப்பட்டு விட்டனர். போராடும் விவசாயிகள், குள்ள நரிகளின் பேச்சினால் வழி தவறிய வெள்ளாடுகளாய் நிற்கிறார்கள். பொது மக்களின் எரிச்சலையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

டிராக்டர் போராட்டத்திற்கு அதுவும் குடியரசு தினத்தன்றே அனுமதி அளித்தது புத்திசாலித்தனம் அல்ல என்று சிலர் கூறுவது சரிதான். உச்ச நீதி மன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள், வன்முறை எழும் என்னும் சந்தேகத்தை எழுப்பிய போது சில நீதிபதிகள் அதை ஏற்காமல் போனது துரதிர்ஷ்டமே.

‘வன்முறை நிகழாது, குடியரசு தின நிகழ்ச்சிகளுக்கு எந்தப் பாதிப்பும் இராது. ஏனென்றால் ஊர்வலம் வெளி ரிங் ரோடில்தான் நடக்கப்போகிறது’ என்று பதிலளித்த விவசாயிகளின் வக்கீலான பிரசாந்த் பூஷன் இப்போது நடந்த வன்முறைக்கும் ஏற்பட்ட நஷ்டத்துக்கும் இந்தியாவின் தலைக்குனிவுக்கும் பொறுப்பேற்பாரா?

‘டெல்லி வன்முறைக்கு அதிமுகவும் ஒரு காரணம்’ என்று பேசும் ஸ்டாலினின் நகைச்சுவை சிரித்துவிட்டுக் கடந்து போய்விடக்கூடிய அளவே மரியாதையைப் பெறுகிறது.

இந்த வன்முறைச் சம்பவங்களால் போராடும் விவசாயிகளின் நேர்மை நிச்சயம் கேள்விக்குரியதாகிவிட்டது. நீண்டுகொண்டே போன போராட்டத்தினால் குழுமியிருந்த விவசாயிகள் வெறுப்படைந்து அயர்ச்சியுடன் கட்டுக்கடங்காமல் போய்விட்டார்களா? நடுவில் நிஷான் சாஹிப் என்னும் சீக்கிய மதக் கொடி எப்படி வந்தது? இந்தப் போராட்டங்களுக்குப் பொருளாதார உதவியைச் செய்தவர்கள் யார்? ஏகப்பட்ட கேள்விகள் எழுகின்றன.

‘எண்பதுக்கும் மேற்பட்ட போலீஸாருக்குப் பலத்த காயம். ஒரே ஒரு விவசாயி கொல்லப்பட்டிருக்கிறார். குதிரை மீது வந்த சிலர் போலீஸார் மீது கையில் கத்திகளுடன் வந்து சாலையில் உள்ள தடைகளைத் தகர்த்துத் தாக்கியிருக்கிறார்கள்!’ இது டெல்லி போலீசாரின் கருத்து.

‘கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் அமைதியான முறையில் போராடவில்லையா? இந்த வன்முறை போலீசாரால்தான் ஏற்பட்டது. அரசாங்கம் விவசாயிகளின் உணர்வுகளோடு விளையாடுகிறது!’ இது விவசாயிகள் சங்கத் தலைவர் விக்ரம் சிங்கின் பேச்சு.

உண்மை இரண்டுக்கும் இடையில் எப்போதும்போல ஒளிந்துகொண்டிருக்கலாம்.

ஆனால் கண் கூடாக நாம் பார்த்த உண்மை, இந்திய தேசத்துக்கே மானக்கேடாக, செங்கோட்டையின் மீதேறி தேசியக்கொடிக்கு சமாக விவசாயிகள் கொடியைப்பறக்க விட்ட நிகழ்ச்சி, அதுவும் நமது குடியரசு தினத்தன்று நடந்த இந்த இழிசெயலை ஒரு போதும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது.

ஆகவே மத்திய அரசு வன்முறையாளர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். குடியுரிமைச் சட்டப் போராட்டத்தின்போதே பார்த்தோம். அதிலிருந்து கற்ற பாடம் என்ன? தேசத்தைப் பிளக்க அந்நிய சக்திகளும் அவற்றிற்குத் துணை போகும் உள்ளூர்த் துரோகிகளும் அடையாளம் காணப்பட்டுக் களையெடுக்கப்பட வேண்டும்.

ஏதோ ஒரு அனாமதேயக் கவிஞன் சொன்னான், ‘என்னை அழிக்க வரும் எதிரியைப் பார்த்தேன். நெருங்கினபோதுதான் புரிந்தது, அவன் வெளியில் இருந்து வரவில்லை. என்னுள்ளிருந்தே வருகிறான் என்று. விழித்துக்கொண்டுவிட்டேன் என் கனவிலிருந்து!’

மத்திய அரசும் விழித்துக்கொண்டு போராட்டங்கள் வன்முறைக்களமாக மாற்றப்படும் அவலத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில் மட்டுமின்றி, தற்போதைய ஆட்சிக் காலத்திலும், மக்களின் நன்மைக்காக, பல சமூக, பொருளாதாரத் திட்டங்களை அமல்படுத்தியுள்ள மோடி அரசு, விவசாயிகளை மட்டும் தவிக்க விட்டுவிடுமா என்ன? பயிர்க் காப்பீடு, குறைந்த வட்டியில் விவசாயக் கடன், உர மானியம் என விவசாயிகளுக்கு ஆதரவாகப் பல நடவடிக்கைகள் மத்திய அரசால் எடுக்கப்பட்டு, அதன் பலனை விவசாயிகள் தற்போது பெற்று வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இதை உணர வேண்டும்.

காங்கிரஸின் சந்தர்ப்பவாத அரசியல், ஆம் ஆத்மி கட்சியின் காலிஸ்தான் இயக்கத் தொடர்பு, பஞ்சாப் இடைத்தரகர்களின் வருமான இழப்பு பயம் என்று பல சூழ்ச்சிக் கோட்பாட்டுக் காரணங்கள் இருப்பதை உணர்ந்தாலும் நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.

இரண்டாயிரமாண்டுக்குப் பிறகான முதல் பத்து வருடங்களுக்கு இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி அடுத்த சில வருடங்களில் வேகம் குறைந்து போய், எதிர்பார்த்த அளவுக்கு வேலை வாய்ப்பும் விலைவாசிக் கட்டுப்பாடும் நிகழாத அயற்சியில் மக்கள் இருக்கிறார்கள் என்பது நிதர்சனம். கூடவே. கொரோனாவால் நாடு தழுவிய பதட்டமும் இழப்பும் எதிர்காலம் பற்றிய பயமும் இருக்கிறது. இந்தச் சோதனையான காலகட்ட மக்களின் விரக்தியான போக்கும் கூட, இது போன்ற போராட்டங்களுக்கும், ஏன் வன்முறைக்கும் கூட விதையாக இருக்கக்கூடும். தேசிய அரசு இதை நன்கு புரிந்துகொண்டு, நாட்டு மக்களின் மன நிலைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் வேலைவாய்ப்புப் பெருக்கம், வருமானப் பெருக்கம், பொருளாதார வளர்ச்சி, விலைவாசிக் கட்டுப்பாடு போன்ற நன்மைகள் உண்டாகும்படி திட்டங்கள் தீட்டிச் செயல்பட வேண்டும்.

இந்த வருட பட்ஜெட் அதற்கு ஒரு ஆரம்ப அனுகூலச் சுருதியாக இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply