Posted on Leave a comment

துரதிர்ஷ்டக் கப்பல்: லெபானான் வெடிவிபத்து | தமிழில்: ஜெயகுமார் ஸ்ரீனிவாசன்

தெளிவான சட்டதிட்டங்கள் அற்ற, உடனடியாக முடிவெடுக்கும் திறனும் அற்ற ஒரு அரசாங்கம். இந்த அரசின் தலைமைப் பொறுப்பும் இப்படியே. இப்படிப்பட்டவர்கள் எவ்வளவு பெரிய பேராபத்தைத் தங்கள் நாட்டுக்குக் கொண்டுவர முடியும் என்பதை உணர்த்திய துரதிருஷ்ட சம்பவமே லெபனான் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்து.

ஆகஸ்ட் 4ல் வெடி விபத்து நிகழ்ந்தது. உயிரிழப்பு – 200க்கும் மேல். படுகாயம் அடைந்தோர் – 4000க்கும் மேல். வீடுகளை இழந்தோர் – 3 லட்சத்திற்கும் அதிகமானோர். பொதுச்சொத்து இழப்பு: 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள். லெபனானின் மொத்த பொருளாதார இழப்பு: 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

இதுவரை லெபனானுக்கு உலக நாடுகளிடம் இருந்து கிடைத்திருக்கும் உதவித்தொகை – 297 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

*

பெய்ரூட் துறைமுக வெடிவிபத்தின் வரலாறு ஆறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடங்குகிறது.

ரஷ்ய நாட்டவர் ஒருவர் குத்தகைக்கு எடுத்த கப்பல் பெய்ரூட் துறைமுகத்திற்கு 2014ல் வந்து நங்கூரமிட்டது. அந்தக் கப்பலின் பயணத் திட்டத்தில் பெய்ரூட் இல்லை. திடீரென நிகழ்ந்த ஒரு ஒதுங்கல் அது.

பெய்ரூட் வந்து சேர்ந்த கப்பலுக்கு, அந்தக் கப்பல் அளவுக்குக் கடன்கள் இருந்தன. ‘ஏண்டா இந்த வேலைக்கு வந்து சேர்ந்தோம்’ என்ற எரிச்சலில் ஊழியர்கள் இருந்தார்கள். கப்பலில் இருந்து நீரை வெளியேற்ற உருவாக்கப்பட்ட ஒரு ஓட்டையும் அந்தக் கப்பலில் இருந்தது. இதைத் தவிர 2000 டன்னுக்கு மேற்பட்ட அமோனியம் நைட்ரேட் எனப்படும் வேதிப் பொருளும் இருந்தது. அமோனியம் நைட்ரேட் விவசாய உரம் உருவாக்கப் பயன்படும் ஒரு வேதிப் பொருள். இதே வேதிப் பொருள்தான் வெடிகுண்டுகள் தயாரிக்கவும் பயன்படுகிறது. இது உண்மையில் மொஸாம்பிக் என்னும் இடத்துக்குச் செல்லவேண்டிய கப்பல்.

ரோசுஸ் என்றழைக்கப்படும் அந்தக் கப்பல் மொஸாம்பிக்கிற்குப் போகவே இல்லை. அந்தக் கப்பலை ஒத்திக்கு (லீஸ்) எடுத்திருந்த ரஷ்யர், கடன் சுமை தாளாமல் அதைக் கைவிட்டுவிட, வேறு வழியின்றி பெய்ரூட் துறைமுகத்திற்கு அழையா விருந்தாளியாய் வந்து சேர்ந்தது. கப்பலில் இருந்த அமோனியம் நைட்ரேட் பெய்ரூட் துறைமுகக் கிடங்குக்கு மாற்றப்பட்டது. அங்கே அது ஆறு ஆண்டுகளாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அந்தச் சபிக்கப்பட்ட செவ்வாய்க்கிழமை வரையிலும் அது அங்கேதான் இருந்தது.

லெபனான், ரஷ்யா, உக்ரைன் நாடுகள் வழியே வந்த இந்தக் கப்பல் மற்றும் அதில் இருந்த வெடிமருந்தின் கதை சிலவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. நீதிப் போராட்டங்கள், நீளும் பொருளாதாரப் பிரச்சினைகள், தொடரும் அலட்சிய மனப்பான்மை – இவையெல்லாம் சேர்ந்து எப்படி ஒட்டுமொத்தமாக ஒரு மோசமான விபத்தை உருவாக்க முடியும் என்பதை உணர்த்தி இருக்கிறது. மத்தியக் கிழக்கின் மிக முக்கியமான இடமான பெய்ரூட்டிலேயே அது நிகழ்ந்திருக்கிறது.

கப்பலின் முன்னாள் கேப்டன், எழுபது வயதான போரிஸ் ப்ரோகோஷெவ், ரஷ்யர், இந்த வெடி விபத்துக் குறித்துக் கேட்டபோது தொலைபேசியில் சொன்ன வார்த்தகள் இவை: “நான் அதிர்ந்து போய்விட்டேன்.” 2013ல் அமோனியம் நைட்ரேட் தன் பயணத்தைத் துவங்கிய பெய்ரூட்டுக்கு அருகே இருக்கும் சொச்சி என்னும் ஊருக்குப் பக்கத்தில் உள்ள ப்ளாக் ஸீ ரிசார்ட் என்ற நகரத்தில் இருந்து அவர் பேசினார்.

பொதுமக்களின் கோபம்

2750 டன் அளவுக்கு அமோனியம் நைட்ரேட் கிடங்கில் இருக்கிறது; அதனால் ஏற்படப்போகும் பின்விளைவுகளை அறிந்திருந்தும் அதைக் குறித்து எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்காத அதிகாரிகளின் மீது லெபனான் மக்களின் கோபம் திரும்பியது.

சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் லெபனானைச் சேர்ந்த வழக்கறிஞர் சலீன் ஆவுன் திரட்டிய தகவல் இது: லெபனான் துறைமுக உயர் அதிகாரிகள் 2014 முதல் 2017 வரையிலான காலகட்டங்களில், அமோனியம் நைட்ரேட்டை எப்படிப் பாதுகாப்பாய் வெளியேற்றுவது என்பது குறித்து அறிவுறுத்த வேண்டி, லெபனான் நீதிமன்றங்களுக்கு குறைந்தது ஆறு முறை கடிதங்கள் எழுதினார்கள்.

ஷபீக் மரெய் எனும் பெய்ரூட் துறைமுகத்தின் சுங்க வரி இயக்குநர், “இது போன்ற ஒரு சூழ்நிலையில் இந்த வேதிப் பொருளை துறைமுகத்தில் வைத்திருப்பது மிகவும் அபாயகரமானது. எனவே, இந்த வேதிப் பொருளை மீண்டும் ஏற்றுமதி செய்யவேண்டும் என்ற எங்கள் பலநாள் கோரிக்கையை உடனே செயல்படுத்துமாறு மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்” என்று மே 2016ல் கடிதம் எழுதி இருக்கிறார்.

இவர் இந்தப் பிரச்சினைக்குப் பல பரிந்துரைகளையும் வழங்கி இருக்கிறார். அமோனியம் நைட்ரேட்டை லெபனானிய ராணுவத்துக்கு நன்கொடையாய் வழங்குவது அல்லது லெபனானிய வெடிமருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு விற்பனை செய்வது. மரெய் இதே போன்ற இன்னொரு கடிதத்தை ஓராண்டுக்குள் மீண்டும் எழுதினார். நீதிமன்றம் எந்த விதமான பதிலையும் சொல்லவில்லை என்று புலனாகிறது.

இத்தனை இழப்புகளுக்கும் காரணமான லெபனானிய நீதிமன்றங்கள் இதைக் குறித்து என்ன கருத்து சொல்ல விரும்புகிறது எனப் பத்திரிக்கையாளர்கள் கேட்க விரும்பியபோது நீதிமன்றத்தைத் தொடர்பு கொள்ள இயலவில்லை என்கின்றனர்.

ரோசுஸ் எனும் சிக்கலில் சிக்கிய கப்பல்

 

மால்டோவா நாட்டு கொடியினை கொண்ட இந்த கப்பல் நவம்பர் 2013ல் பெய்ரூட் துறைமுகத்தை வந்தடைந்தது. இரு மாதங்களுக்குப் பிறகு ஜார்ஜியா நாட்டின் பாடுமி துறைமுகத்திற்கு செல்கிறது. சைப்ரஸில் வாழும் இகொர் க்ரெசுஸ்கின் என்ற ரஷ்ய நாட்டை செர்ந்த வியாபாரியால் லீசுக்கு எடுக்கப்படுகிறது.

கப்பலின் கேப்டனான ப்ரோகோஷெவ், சம்பளம் தரப்படாததால் அதிலிருந்து விலகிக் கொண்டு, துருக்கியிலிந்த கப்பலின் கேப்டனாகச் சேர்கிறார்,

கப்பலை லீசுக்கு எடுத்த க்ரெசுஸ்கினுக்கு 1 மில்லியன் டாலர் தரப்பட்டு அடர் அமோனியம் நைட்ரேட்டை மொசாம்பிக் நாட்டின் பெய்ரா என்ற துறைமுகத்திற்குக் கொண்டு செல்லும் பணி வழங்கப்படுகிறது.

மொசாம்பிக் வெடிமருந்து கம்பெனிக்காக அமோனியம் நைட்ரேட்டை மொசாம்பிக் வங்கி வாங்குகிறது. கப்பலின் கேப்டனான க்ரெசுஸ்கின் தரப்பின்படி சூயஸ் கால்வாயை கடப்பதற்கான கட்டணத்தைக்கூட வழங்க இயலா அளவு நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது இந்தக் கப்பல். அதனால் கப்பல் பெய்ரூட் துறைமுகத்திற்கு அனுப்பப்படுகிறது. கூடுதலாக கார்கோ ஏதும் கிடைக்குமானால் அதனால் கொஞ்சம் காசும் கிடைக்குமே என்ற எண்ணம். பெய்ரூட்டில் பெருமளது பொருள்கள் ஏற்றிச் செல்லப்பட காத்திருந்தன. ஆனால், துரதிருஷ்டவசமாக அவை கப்பலில் ஏற்றுமளவுக்கு இல்லாமல் மிகப்பெரியதாயும், 40 ஆண்டுகள் பழமையானதாகவும் இருந்தன. இதன் நடுவில் பெய்ரூட் துறைமுக அதிகாரிகள் அந்த கப்பல் கடலில் பயணிக்க தகுதியற்றதாய் இருப்பதைக் கண்டறிவதுடன், இதுவரை கப்பலைத் துறைமுகத்தில் நிறுத்தியதற்கான கட்டணத்தை வழங்கவில்லை என்பதையும் காரணம் காட்டி, கப்பலைக் கையகப்படுத்துகின்றனர். இதனால் கப்பல் குழு க்ரெசுஸ்கினை எரிபொருள், உணவு மற்றும் இதர அத்தியாவசியத் தேவைகளுக்கான பணத்திற்காகத் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டார். அதாவது அவர் லீசுக்கு எடுத்த கப்பலைக் கைகழுவிவிட்டார்.

கப்பலில் வேலை செய்த அறுவர் கப்பலைவிட்டு விலகி தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிவிடுகின்றனர். லெபனானிய துறைமுக அதிகாரிகள் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கப்பலின் கேப்டனையும் இதர கப்பலின் வேலையாட்களையும் கப்பலிலேயே தங்கி இருக்கும்படி வற்புறுத்தி, இருக்கும்படியும் செய்கின்றனர். அவர்களைக் கப்பலில் இருந்து வெளியே வரவும் தடை விதிக்கின்றனர். இதனால் கப்பல் குழுவிற்கு உணவு மற்றும் இதர அத்தியாவசிய தேவைகள்கூட கிடைக்கவில்லை என அவர்களின் சட்ட உதவியாளர் சொல்லி இருக்கிறார்.

ப்ரோகோஷெவ் என்ற கப்பலின் கேப்டன், ‘துறைமுக அதிகாரிகள் பசியால் வாடும் எங்கள் மீது பரிதாபம் கொண்டு உணவு அளித்தனர். ஆனால், அவர்கள் கப்பலில் உள்ள அதிபயங்கரமான வேதியல் பொருள் குறித்து எந்தக் கவலையும் கொள்ளவில்லை. அவர்களுக்கு இருந்த கவலையெல்லாம்  கப்பலைத் துறைமுகத்தில் நிறுத்தியதற்கான பணம் மட்டுமே.’

கப்பல் ஊழியர்களின் பரிதாப நிலை உக்ரெய்னிலும், கேப்டனின் நாடான ரஷ்யாவிலும் எதிரொலித்தது. அவர்கள் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாகச் செய்தி வெளியானது. அவர்களைக் காப்பாற்ற, சம்பந்தப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுத்தபோது, ரஷ்யநாட்டுத் தூதரக அதிகாரிகள் ‘ரஷ்ய அதிபர் வ்ளாடிமிர் புதின் தனது சிறப்புப் படையை அனுப்பி மீட்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா?’ எனத் திமிராகப் பதில் வந்தது என்பதை கேப்டன் நினைவுகூர்கிறார்.

சூழலின் அழுத்தம் தாளாமல் தங்களுக்காக வாதாட சட்டவல்லுநர்களை அமர்த்த, கப்பலின் எரிபொருளை விற்று அமர்த்துகிறார், கப்பலின் கேப்டன். அவர் அமர்த்திய சட்ட வல்லுநர்களும் கப்பலில் இருக்கும் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளினால் கப்பல் வெடிக்கும் அல்லது மூழ்கும்  அபாயத்தை எடுத்துச் சொன்னோம் எனப் பதிவு செய்கின்றனர்.

லெபனானிய நீதிபதி ஒருவர், கப்பலின் ஊழியர்கள் குழுவை மனிதாபிமான அடிப்படையில் 2014ல் விடுவிக்கிறார். தலைமறைவாய் இருந்த கப்பலை ஒத்திக்கு எடுத்த க்ரேசுஸ்கின், கப்பல் ஊழியர்கள் உக்ரெய்ன் திரும்பிச் செல்ல தரப்படவேண்டிய கட்டணங்களைத் தருகிறார். சபிக்கப்பட்ட செவ்வாய்க்கிழமை சம்பம் குறித்து கருத்துக் கேட்க அவர் கிடைக்கவில்லை.

பயங்கரமான சரக்கு

கப்பல் ஊழியர்கள் வெளியேறியதும் லெபனானிய துறைமுக அதிகாரிகள் கப்பலின் பொறுப்பை எடுக்கின்றனர். கப்பலில் இருந்த அமோனியம் நைட்ரேட் ஹேங்கர் 12 என்றழைக்கப்படும் துறைமுகத்தின் கிட்டங்கிற்கு மாற்றப்படுகிறது.

அமோனியம் நைட்ரேட் ஏதேனும் எரிபொருளுடன் சேர்கையில் சக்திவாய்ந்த வெடிபொருளாய் உருமாறும். இது கட்டுமானத் துறையிலும், சுரங்கத் தொழிலிலும் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, இவை பயங்கரவாத இயக்கங்களால், பெரிய சேதங்களை ஏற்படுத்த உதவும் வெடிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. 1995ல் நடந்த ஒக்லஹோமா நகர தாக்குதலில் பயங்கரவாதி திமோத்தி மெக்வீயாஉம் ஐ எஸ் (தாயேஷ்) பயங்கரவாத இயக்கத்தாலும் பயன்படுத்தப்பட்டது.

அமெரிக்காவில் அமோனியம் நைட்ரேட் விற்பனை கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில், அமோனியம் நைட்ரேட் இதர பொருட்களுடன் சேர்த்து வெடிமருந்தாகப் பயன்படுத்த முடியாத வகையில் மாற்றி விற்கப்பட வேண்டும் என வரையறை செய்துள்ளது.

பெய்ரூட் துறைமுகத்தின் பொதுமேலாளர் ஹஸன் கொரேய்தெம் கொடுத்த பேட்டியில், ‘இந்த பிரச்சினைக்குரிய மற்றும் பாதுகாப்பற்ற வேதிப்பொருளைத் துறைமுகத்திலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் எனப் பாதுகாப்பு அதிகாரிகள் கொடுத்த பல வேண்டுகோள்கள் லெபனானிய நீதிமன்றங்களால் கண்டுகொள்ளப்படவேயில்லை’ என்கிறார். மேலும், ‘இந்த வேதிப்பொருள் விரைவில் ஏலத்திற்கு விடப்படும் எனச் சொல்லப்பட்டது. ஆனால், அவர்கள் சொன்ன ஏலம் இறுதி வரையில் நடக்கவேயில்லை. நீதித்துறை இந்த விஷயத்தில் செயல்படவேயில்லை’ என குற்றம் சாட்டுகிறார்.

17ஆண்டுகளாக பெய்ரூட் துறைமுகத்தின் தலைவராய் இருந்த கொராய்தெம் இந்த வெடிவிபத்தைக் கேள்விப்பட்டதும் ‘இது வான்வெளி தாக்குதாலாய் இருக்கும் என்றே நம்பினேன்’ என்கிறார். ‘முதலில் நடந்த வெடி விபத்து எப்படி தொடங்கி இருக்கக் கூடும் என்பதை யூகிக்க முடியவில்லை. அதைத் தொடர்பு மிகப் பெரிய வெடி விபத்தும் நிகழ்ந்துவிட்டது’ எனச் சொல்லி இருக்கிறார். ‘இது ஒருவருக்கொருவர் குறைகூறும் நேரமல்ல, இது ஒரு தேசிய அழிவு’ என்கிறார்.

லெபனானிய மக்களில் பெரும்பான்மையினர் அப்படி நினைக்கவில்லை. இந்தப் பேரழிவு ஆளும் வர்க்கத்தின், அரசு இயந்திரத்தின், நீதித்துறையின் மிக மோசமான நிர்வாகம் மற்றும் மெத்தனத்தைக் காட்டுகிறது என்கின்றனர். இவர்களின் கையாலாகாத்தனமே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும் காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.

கப்பலை ஒத்திக்கு எடுத்த ப்ரோகோஷெவ், ‘நான் இன்னும் எனது ஊழியர்களுக்கு சம்பளமாக 60,000 டாலர்கள் தரவேண்டும், ஆனால், லெபனானிய அதிகாரிகள் கப்பலைப் பிடித்து வைத்தும், அமோனியம் நைட்ரேட்டைத் துறைமுகத்தில் சேமித்து வைத்தும் இந்தப் பேரழிவுக்குக் காரணமாகிவிட்டார்கள். கப்பலின் கேப்டனும் ஒரு காரணம். அமோனியம் நைட்ரேட்டைத் துறைமுகத்தில் சேமித்ததற்கு பதிலாக லெபனானிய விவசாய நிலங்களில் வீசியிருந்தால் மிகப்பெரிய வெடிவிபத்திற்குப் பதிலாக நல்ல விளைச்சலை லெபனான் பார்த்திருக்கும்’ எனச் சொல்லி இருக்கிறார்.

ரோசுஸ் கப்பல் 2015 அல்லது 2016ல் கப்பலில் ஏற்பட்ட ஓட்டை காரணமாய் நீரில் மூழ்கிவிட்டதாக நண்பர்கள் மூலம் ப்ரோகோஷெவுக்கு தெரிய வந்துள்ளது. அவரது ஆச்சரியம் ‘என்னவெனில் கப்பல் மூழ்கிவிட்டது என நினைத்துக்கொண்டிருந்தேன், வெடிவிபத்தைக் கேள்விப்படவும்தான் அவ்வளவு சீக்கிரம் அது மூழ்கவில்லை எனத் தெரிகிறது.’ (இருந்து பல உயிர்களை பலி வாங்கிவிட்டுத்தான் மூழ்கி இருக்கிறது என்பது உள்ளுறைச் செய்தி)

*

லெபனானின் பொருளாதாரம் இந்த வெடிவிபத்திற்கு முன்னரே மோசமான நிலையில்தான் இருந்தது. உள்நாட்டுக் கலவரங்களும், இஸ்லாமியப் பயங்கரவாதக் கும்பல்களின் அட்டூழியங்களும், வலுவான அரசாங்கமின்மையும்   பொருளாதாரத்தைச் சீர் குலைத்திருக்கிறது. நாட்டின் பாதுகாப்பு அதுவும் தலைநகரின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி நிற்கிறது. இந்தக் குண்டுவெடிப்பின் இன்னொரு சோதனையான விஷயம், தலைநகருக்குக் குடிநீரைத் தரும் இரு ஆலைகளும், மின்சார உற்பத்தி நிலையம் ஒன்றும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதுதான். சேமிப்பில் இருந்த தானியக் கிடங்கும் நாசமானதில் பொதுமக்களுக்கான உணவுப்பொருள் வழங்கலிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது ஏற்கெனவே கோபத்தில் இருக்கும் மக்களைக் கொதிநிலைக்குத் தள்ளும்.

சவுதி அரசாங்கம் இந்த வெடிவிபத்தை நாசவேலையாகக் கருதி விசாரணை செய்யவும் சொல்லி இருக்கிறது. சவுதியின் சந்தேகம் ஹிஸ்புல்லாவாக இருக்கலாம் என்பதே.

சவுதி அரசாங்கம் உள்ளிட்ட இதர உலக நாடுகள் அனைத்தும் லெபனானின் பொருளாதாரத்தைக் காப்பாற்றவும், இழப்பிலிருந்து மீட்கவும் உதவுவதாகச் சொல்லி முதற்கட்ட தவணையாகச் சில மில்லியன்களையும் கொடுத்துள்ளன. ஆனால், அடுத்தடுத்து வரவேண்டிய நிதிகள் எல்லாம், லெபனானுக்கு உதவப்போகும் நாடுகள் விதிக்கும் வழிகாட்டுதலின்படியே இருக்கும். ஆனால், ஊழல்மிக்க, வலிமையான தலைவரற்ற, பல இனக்குழுக்களின் சண்டையில் சிக்கித் தவிக்கும் லெபனானுக்கு, கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

இந்த அரசியல் குழப்பங்களிலிருந்தும், நிதி நெருக்கடியில் இருந்தும், பயங்கரவாதப் பாதிப்பிலிருந்தும் விரைவில் லெபனான் விடுபடவேண்டும் என்பதே உலகத்தின் எதிர்பார்ப்பு.

Leave a Reply