Posted on Leave a comment

லும்பன் பக்கங்கள் – 3 | அரவிந்தன் நீலகண்டன்

நம்முடைய பாடப் புத்தகங்கள் குறித்து அடிக்கடி சர்ச்சைகள் எழுகின்றன. அண்மையில் எழுந்த சர்ச்சை மொகலாய மன்னர்கள் தாங்கள் இடித்த ஹிந்துக் கோவில்களை மீண்டும் சீரமைத்தார்கள் என்பது. இதற்கு ஆதாரங்கள் உண்டா எனத் தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட போது ‘இல்லை’ என என்.சி.ஈ.ஆர்.டி நிறுவனம் பதிலளித்துள்ளது.

கல்விக்கும் ஆராய்ச்சிக்குமான தேசிய மையம்தான் NCERT. அதன் இலச்சினையை பார்த்திருக்கிறீர்களா? அதில் ஈஸாவாஸ்ய உபநிடதத்திலிருந்து எடுக்கப்பட்ட தொடர் இருக்கும். – ‘வித்யயாம்ருதமச்னுதே’: வித்யயா அமிருதம் அச்னுதே. இதன் பொருள் என்ன? ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகளின் ‘சகலகலாவல்லி மாலை’யில் வரும் சொற்றொடர் இந்த உபநிடத வார்த்தைகளின் பொருளை அப்படியே அளிக்கிறது: ‘சிதையாமை நல்கும் கல்வி’

இப்படி உயர்ந்த எண்ணத்தை இலச்சினையில் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு.

ஆனால் இன்று நாம் காண்பது என்ன?

நாம் காண்பது நோயின் முதிர்ந்த அறிகுறி. நோய் அல்ல. ஔரங்கசீப் கோவில்கள் இடித்ததைப் பாடத்தில் உடனடியாக சேர்ப்பதென்பது எல்லோருக்கும் தோன்றுகிற விஷயம். பாஜக ஆட்சியில் பாடநூல்களை மாற்ற வேண்டுமென்கிற குரல் பொதுவாக இந்துத்துவர்களிடம் எழும். ஆனால் அது தொடர்ந்து வரும் காய்ச்சலுக்கு பாரசெட்டமால் சாப்பிடுவது போல. தொடர்ந்து காய்ச்சல் வந்தால் பிரச்சினை வேறெதுவோ. அதற்கு மீண்டும் மீண்டும் பாராசெட்டமால் சாப்பிடுவது நல்லதல்ல. அது உடனடியாக குணமாவதைப் போல ஒரு பிரமையைத் தந்தாலும். நாளைக்கு மயினோ-வாத்ரா பரம்பரை ஆட்சியோ அல்லது ராஜஸ்தானில் வந்தது போல ஒரு காங்கிரஸ் ஆட்சியோ வந்தால் மீண்டும் மாறும்.

இதன் விளைவுகள் என்னவென்றால் வெளியிலிருந்து பார்க்கும் ஒருவருக்கு, பொதுவாகப் பெற்றோருக்கும் ஏன் மாணவர்களுக்கும் கூட, கோவிலை இடித்தார்கள் என்பது ஒரு தரப்பு என்றும் கோவில்களைச் சீரமைத்தார்கள் என்பது மற்றொரு தரப்பு என்றும் ஆகிவிடும். பாரத வரலாற்றையும் பாரம்பரியத்தையும் குறித்துப் பொதுவான பெருமித நம்பிக்கை சீர்குலைந்துவிடும். எனவே இதில் இறுதி வெற்றி இடதுசாரிகளுக்குத்தான். அவர்கள் நோக்கமே பாரத பெருமித உணர்வின்றி மழுங்கடிப்பதுதானே.

எனில் தீர்வுதான் என்ன?

திருக்குறள்-948 தான் தீர்வு.

நம் வரலாற்று பாடநூல்களின் அடிப்படை சட்டகம் ஜவகர்லால் நேருவின் ‘Discovery of India’ இல் இருந்து பெறப்பட்டது. அந்நூலைக் குறித்து ரத்தினச் சுருக்கமாக வாழ்க்கை வரலாற்றாசிரியரான தனஞ்ஜய் கீர் ஒருவிஷயம் சொல்வார்.

இங்கிலாந்தில் புகழ்பெற்ற டிரபால்கர் சதுக்கம் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நெப்போலானிய கடற்போர்களில் பிரிட்டானியா அடைந்த மகத்தான வெற்றியின் நினைவாக எழுப்பப்பட்டவை அங்கிருக்கும் பெருமித சிற்பங்கள். தனஞ்ஜய் கீர் எழுதுகிறார்:

‘டிரபால்கர் சதுக்கம் குறித்து ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ஒரு பிரிட்டிஷ் வரலாற்று நூல் எழுதப்படுவதை நாம் கற்பனை கூட செய்யமுடியாது. ஆனால் சித்தூரின் பெயர் கூட குறிப்பிடப்படாமல் ஒரு வரலாற்று நூல் இந்தியா குறித்து எழுதப்பட்டுள்ளது. அதன் பெயர் ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’.

நேருவுக்கு கவர்ச்சிகரமான ஆங்கில எழுத்து நடை இருந்தது. அவருக்குப் பெரிய இடங்களில் விசிறிகள் இருந்தார்கள். ஆனால் அவருக்கு இந்திய வரலாறு குறித்தோ, பாரதத் தத்துவங்கள் தரிசனங்கள் குறித்தோ எவ்வித சரியான அறிவும் கிடையாது. ஆழமான சிந்தனை இல்லாமல் தன்னை அறிவுஜீவியாகக் காட்ட விரும்பும் எவருக்கும் இருப்பது போலவே நேருவுக்கும் மார்க்ஸியத்தின் மீது பெரும் மயக்கம் இருந்தது.

முகமது கஜினி குறித்து நேரு எழுதியிருப்பதைப் படிக்கும் எவருக்கும் அந்த பெருங்கொலை-கொள்ளைக்காரன் மீது ஒருவிதப் பரிவும் மரியாதையும் ஏற்படக் கூடும். ‘அவனுக்கு சோமநாத புரத்தினை சூறையாடியதில் எவ்வித மத நோக்கமும் இல்லை. அவன் அவனது சக மதத்தினருடன் கூடப் போரிட்டிருக்கிறான். அவனிடம் திலக் என்கிற பெயர் கொண்ட ஒரு இந்தியத் தளபதியின் தலைமையில் இந்திய வீரர்களைக் கொண்ட அணி கூட இருந்தது. அவன் இங்கிருந்து கொண்டுசென்ற செல்வங்களைக் கொண்டு ஒரு தலைநகரை உருவாக்க விரும்பினான். அதற்காக இங்கிருந்து கட்டடக் கலைஞர்களைக் கொண்டு சென்றான்.’ இத்யாதி இத்யாதி.

இவற்றுக்கெல்லாம் சீதாராம் கோயல் போன்ற வரலாற்றறிஞர்கள் தெளிவான தீர்க்கமான பதில்களைக் கொடுத்துள்ளார்கள்.

விஷயம் அதுவல்ல.

முகமது கஜினியின் சோமநாதபுரம் படையெடுப்பை எதிர்த்துக் கோவிலைக் காப்பாற்ற 25,000 இந்துக்கள், தாங்கள் நிச்சயமாகக் கொல்லப்படுவோம் எனத் தெரிந்தும் பலிதானிகள் ஆனார்கள். முகமது கஜினியின் நோக்கம் மதம் சார்ந்ததாகவோ அல்லது அரசியல் சார்ந்ததாகவோ அல்லது பொருள் மேலான பேராசையோ எதுவாகவும் இருக்கட்டும், ஆனால் இந்த 25,000 இந்துக்களின் பலிதானம் வரலாற்றில் முக்கியமானது. இவர்கள் குறித்தல்லவா வரும் சந்ததிகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்?

அதைத்தான் நம் பாடநூல்கள் சொல்லாமல் விடுகின்றன. முகமது கஜினி செய்தது அந்த நாட்களில் எல்லா ராஜாக்களும் செய்யக் கூடியதுதான் என்பதுதான் நம் பாடநூல்களின் தொனி. அதற்குk காரணம் மதமல்ல என்று திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது. மிகவும் சமத்காரமாக ராஜேந்திர சோழன் பிற நாடுகளின் மீது படையெடுத்துச் செல்லவில்லையா, ராஜராஜ சோழன் செய்யவில்லையா என்று கேட்கும் தொனியுடன் இன்றைக்கும் பாடநூல்கள் எழுதப்படுகின்றன.

ராஜேந்திர சோழன் கன்னடப் பிரதேசங்களுக்குப் படையெடுத்துச் சென்றான். ராஜராஜ சோழன் இலங்கை மீது படையெடுத்துச் சென்றான். புலிகேசி காஞ்சி மீது படையெடுத்தான். நரசிம்ம வர்மபல்லவன் வாதாபி மீது படையெடுத்துச் சென்று புலிகேசியைத் தோற்கடித்தான். ஆனால் இந்தப் படையெடுப்புகளில் எங்காவது பெண்கள் கூட்டம் கூட்டமாக, சோழர்கள் வந்துவிட்டார்களே என்று தீக்குளிக்கவில்லை. கோவிலில் அல்லது சமணப்பள்ளிகளில் கூட்டம் கூட்டமாக அந்த வழிபாட்டு தலங்களைப் பாதுகாக்க அங்குள்ள அர்ச்சகர்கள் பொதுமக்கள் தம்மைத் தாமே எதிரிகளின் வாட்களுக்குப் பலியாக்கிவிடவில்லை.

ஒருவேளை படையெடுப்பின் போது ஒரு வழிபாட்டுத் தலம் சேதமடைந்திருந்தால் அல்லது பொதுமக்கள் கஷ்டமடைந்திருந்தால் அது அரசனின் பெரும்புகழாக மெய்கீர்த்தியில் சேர்க்கப்படவில்லை. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடந்திருக்கும் பட்சத்தில் அது அரசனுக்கு எதிராக அவனது அரசியல் எதிரிகளால் ஒரு இழுக்காகவே பிரசாரம் செய்யப்பட்டது. ‘சிவ பாத சேகரனாகிய நான் அனுராதாபுரத்தில் பௌத்த விகாரங்களை இடித்தேன். இப்படி சைவ மேன்மையை நிலைநாட்டினேன்’ என ஒரு சோழக் கல்வெட்டைக் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.

ஆனால் முகமது கஜினியின் கதை என்ன? பிற மத மக்களைப் படுகொலை செய்வதையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களை சூறையாடுவதையும் ஒரு சாதனையாகப் போற்றும் ஒரு மனநிலையையும் சமூகச் சூழ்நிலையையும் உருவாக்கியது எது?

இந்த கேள்விகளுக்குளெல்லாம் கூடப் போக வேண்டாம்.

ஆனால், இந்திய மக்கள் தப்ங்கள் கோவில்களைப் பாதுகாக்க, தங்கள் ஆன்மிகப் பண்பாட்டுக் கேந்திரங்களை பாதுகாக்க பெருமளவில் உயிர்த்தியாகம் செய்தார்கள் என்பது இந்தியக் குழந்தைகளுக்கு, அடுத்தடுத்த தலைமுறையினருக்குத் தெரிவிப்பது பாரத வரலாற்றினை எழுதுகிறவர்களின் கடமை. NCERTயும் சரி அதன் பின்னால் மூளையாகச் செயல்படும் வரலாற்றாசிரியர்களும் சரி, அதைத் தெரியவிடாமல் செய்கிறார்கள்.

ஏன் என்பது கேள்வி.

நவீன இந்தியாவின் பல மனமாசுகளைப் போலவே இந்தத் தீமைக்குமான வேரை நேருவின் அலங்கார ஆங்கில வார்த்தை ஜாலங்களுக்குள் ஒளிந்திருக்கும் அவலமான மேம்போக்கு மோகங்களிலும் அரைகுறைத்தன புரிதலிலும்தான் காணவேண்டும்.

ஹிந்து தரிசனங்கள், கோவில்கள், கலைகள் என எவற்றின் மீதும் நேருவுக்கு ஆழமான புரிதலும் கிடையாது. அவருக்கு புத்தரிடம் பெரும் ஈடுபாடு ஏற்பட்டதற்கு காரணமே.. கிராமத்துக் கதைகளில் ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்’ என ஒரு ஆளுமை வரும். அவருக்கும் ஊர் மக்களுக்கும் எதுவும் தெரியாது ஆனால் ஏகாம்பரமோ எல்லாம் தெரிந்தது போலக் காட்டிக் கொள்வதில் வல்லவர். அவர் தன் இஷ்டத்துக்கு எதாவது சொல்வார். ஊர் மக்களும் இவரல்லவோ மனிதருள் மாணிக்கம் எனப் பாராட்டிச் சென்றனர்.

நேரு ஒரு எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்.

குளிர்ந்து இறுகிய இறைச்சியை வெட்ட போராடிக் கொண்டிருந்த நேருவிடம் உரையாடியதை எழுத்தில் பதிவு செய்திருக்கிறார் ராஜா ராவ். இங்கு நேரு மிகவும் அறிவின்மைக்கே உரிய தன்னம்பிக்கையுடன் பௌத்த தத்துவமாக மிகவும் முற்போக்கு என கருதி ஒரு தத்துவ நிலைபாட்டை முன்வைக்கிறார்.

ராஜாராவ்: ‘எனவே கடவுள் கணிதத்தன்மையர்’

நேரு: ‘ம்ம்ம் நல்லது… இருக்கலாம்… அதை குறித்து ஏன் கவலைப்பட வேண்டும்… எதுவானாலும் மனிதன் வெறுமனே ஒரு …

ராஜாராவ்: வெறுமனே ஒரு?

நேரு: உயிரியல் விளைவு மட்டும் அல்ல

ராஜராவ்: பதினெண் தத்துவங்களின் சேர்க்கை

நேரு: ஆம் பௌத்தம் மிக அருகில் வருகிறது. அனைத்தையும் இணைக்கும் அனைத்தையும் இருப்பிலிருத்தும் ஒன்று இருக்க வேண்டும்.

ராஜாராவ்: ஆனால் அது வேதாந்தம். புத்தரைப் பொருத்தவரையில் தெரியும் விஷயங்களுக்கு பின்னால் ஏதுமில்லை அது சூனியம்.

(Rao, Raja. The Meaning of India (p. 67). Penguin Random House India)

நேருவின் தத்துவ ஞானத் தரம் இதுதான். ஆனால் அவரால் அனைத்தையும் அவரது மேம்போக்கான அரைகுறை பார்வையுடன் மதிப்பிட முடிந்தது. அதை அலங்கார ஜால வார்த்தைகளில் காட்ட முடிந்தது. அதை உலகின் முன்னணி பதிப்பகங்கள் மூலமும் பின்னர் சுதந்திர இந்தியாவின் அரசு இயந்திரம் மூலமும் சந்தைப்படுத்த முடிந்தது.

அவருக்கு தென்னிந்திய கோவில்களின் சிற்பச் செழுமை அசௌகரியத்தை ஏற்படுத்தியது. அனுராத புர பௌத்த விகாரங்கள் அதனினும் மேம்பட்டுத் தெரிந்தன. வடஇந்தியாவோ தென்னிந்தியாவோ கோவில்களின் சிற்பச் செழுமையென்பது அவருக்குக் கீழ்மையானதாகவே தெரிந்தது. ஒப்பீட்டளவில் மொகலாய கட்டடக் கலைகள் சிறப்பானவை. இவற்றையெல்லாம் ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியாவில்’ வாசிக்கலாம்.

ஹிட்லரின் மெய்ன் காம்ப் நாஸி ஜெர்மனியின் சமுதாய உறவுகளுக்கு எப்படியோ, ஏங்கல்ஸின் ‘டயலடிக்ஸ் ஆஃப் நேச்சர்’ சோவியத் யூனியனின் அறிவியல் கல்விக்கு எப்படியோ, மாவோவின் ‘சிறிய சிவப்பு புத்தகம்’ எப்படி சீனக் கோட்பாட்டு மூளைசலவைக்கு எப்படியோ அப்படித்தான் நேருவின் டிஸ்கவரி ஆஃப் இந்தியா இந்திய வரலாற்றுக் கல்விக்கு ஒரு கழுத்து நெறிப்பானாக வந்து சேர்ந்தது.

எனவே பக்தி இலக்கியம் என்றால் அதில் ஆன்ம உள்ளீடு குறித்து எதுவும் பேசப்பட மாட்டாது. அதன் சமூக சூழல்களும் தாக்கங்களும் மட்டுமே கற்பிக்கப்படும். கோவில்கள் குறித்து சமூக அடுக்குநிலைகளும் நிலம்-சொத்து குறித்த விஷயங்களுமே கற்பிக்கப்படும். கோவில்கள் இன்ன ராஜாவால் தன் ஆட்சியினை ஸ்திரப்படுத்த தன்னைப் பெரியவனாகக் காட்ட கட்டப்பட்டது. உதாரணமாக ராஜராஜசோழன் தன்னை பிரகதீஸ்வருடன் இணைத்து இணையாக பார்க்க வேண்டுமென தஞ்சை பெரியகோவிலை கட்டினான் என்கிறது NCERT பாடநூல்.

தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்துக்கும் வழிநெறிகள் NCERT-ஆல் வழங்கப்படுகின்றன.

சிறிது நினைவுப்படுத்தி பாருங்கள்:

  • வேதங்களில் காணப்படும் கருத்துகள் உபநிடத மகா வாக்கியங்கள்.
  • புத்தரின் போதனைகள்
  • மகாவீரரின் போதனைகள்
  • ஏசுவின் வாழ்க்கையும் போதனைகளும்
  • முகமதுவின் வாழ்க்கையும் இஸ்லாமின் போதனைகளும்

மேலே உள்ள ஐந்து தலைப்புகளில் எந்தத் தலைப்பை நாம் வரலாற்றுப் பாடநூல்களில் படித்ததே இல்லை?

ஏன் என்பதற்கான காரணம் என்ன?

அதன் காரணம் நேருவிய வைரஸ். இன்றையத் தேவை, கடந்த எழுபதாண்டுகளாக இந்திய வரலாற்றுப் பார்வையையே நசியச் செய்த இந்த வைரஸுக்கான எதிர்ப்பு மருந்து.

– இந்துத்துவ லும்பன்

Leave a Reply