பிரதமர் இந்திரா படுகொலை
திருவொற்றியூர் கடற்கரைக் கோவிலில் டாக்டர் நித்யானந்தம் ஏற்படுத்திய அனுபவத்தின் தாக்கம் என்னுள் ஆழமாகப் பதிந்துவிட்டது. நான் எவ்வளவு முயன்றாலும் அது என்னைவிட்டு அகலவில்லை. என்னுடைய உளநிலையில் டாக்டர் தனக்கென்று ஒரு உள்ஒதுக்கீடு செய்து கொண்டு விட்டார். எதைச் செய்தாலும் எங்கே சென்றாலும் என்னால் அவரை அகற்ற முடியவில்லை.
டாக்டருடைய ஆகர்ஷணம் என்பது விரிவாகி நான் அதன் பிடிக்குள் இருக்கும் ஒரு சூட்சுமப் பொருளைப் போல உணர்ந்தேன். அதிலிருந்து என்னை மீட்டு எடுப்பதற்காக நான் செய்த முயற்சிகளுக்கு எந்தப் பலனும் இல்லை. படித்தாலும், பயணம் செய்தாலும், ஸ்நேகித்தாலும், சினிமாவிற்குப் போனாலும் டாக்டரின் இருப்பு தப்பாது.
இந்தப் பிரச்சினையில் இருந்து வெளியே வருவதற்காக இரவு நேரங்களில் பெசன்ட் நகர் சிவன் கோவிலில் படுத்துக் கொள்வேன். அம்பாள் சந்நிதிக்கு நேரே என்னுடைய படுக்கை. தலையணையில் இருந்து தலையை உயர்த்திப் பார்த்தால் மூடி இருக்கும் கதவுகளில் இருக்கும் துவாரங்கள் வழியே கர்ப்பகிரகத்தின் ஒளி தெரியும். என்னோடு இருக்கும் அர்ச்சகர்கள் லலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீ ஸுக்தம் சொல்லச் சொல்ல, நான் தூங்கிப் போவேன். அந்த இடத்தில் மட்டும் டாக்டரால் எனக்குப் பிரச்சினை இல்லை. இப்படியாகச் சில மாதங்கள் கழிந்தன – பிறகு வீரியம் குறைந்தாலும் டாக்டர் தொடர்ந்து என்னுள் இருந்தார்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ரவி, ஷோபனா தொடர்பு விட்டு போயிற்று. ஒரு கட்டத்தில், இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து அடையாறு வீட்டில் இருந்து சிட்லப்பாக்கத்திற்குக் குடி பெயர்ந்தேன். அங்கே நைனா, அம்மா, என்னுடைய தம்பிகள் ரவீந்திரன், ஸ்ரீனிவாசன் இருந்தனர். அவர்கள் இளையராஜாவின் ‘சின்னக்கண்ணன் அழைக்கிறான்’ காலத்திலேயே அங்கே போய் விட்டார்கள். நான் போகும்போது அவர் ‘காதலில் தீபம் ஏற்றிக்’ கொண்டிருந்தார். கிரோம்பேட்டைக்கும் தாம்பரத்திற்கும் இடையிலுள்ள கிராமாந்தரப் பகுதி சிட்லப்பாக்கம் பேரூராட்சி. நிஜத்தில் தெலுங்கு பேசும் நாயுடு ஆட்சி.
ஊரின் எல்லையில் பசுமையான வயல்கள், பாய்ந்து வரும் தண்ணீரோடு பம்பு செட்டுக் கிணறுகள். ஊருக்கும் வயலுக்கும் எல்லைக் கோடாக சாலையை மறித்துப் பெரிய புளிய மரம். புளிய மரத்து நிழலில் எங்கள் வீடு. ஒரு நாளைக்கு இரண்டு முறை பஸ் சர்வீஸ் – புறப்படும் இடம் புளியமரம். கண்டக்டர், டிரைவர் ஆகியோருக்கு நம் வீட்டில் தான் காபி டிபன் எல்லாம். நிழலில் படுத்துக் கிடக்கும் எருமை மாடுகளை அப்புறப்படுத்திவிட்டு, நைனாவைக் கேட்டுக் கொண்டுதான் பஸ்சை எடுப்பார்கள்.
அந்தக் காலத்து பிராமண இளைஞர்களில் பெரும்பாலானோர் என்ன செய்து கொண்டிருந்தார்களோ அதை ரவீந்திரன் செய்து கொண்டிருந்தான் – தொடர்ந்து சி ஏ பரீட்சை எழுதிக் கொண்டிருந்தான். போதாக் குறைக்கு கிரோம்பேட்டை வைஷ்ணவ மகளிர் கல்லூரியில் கிரிக்கெட் கோச். சில மாலை நேரங்களில் புளிய மரத்து வீடு லேடீஸ் ஹாஸ்டல் போல இருக்கும். தம்பியிடம் பயிற்சி பெற்றவர்களில் ஒருவர் இன்றைய சென்னை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் புஷ்பா சத்தியநாராயணா.
இன்னொரு தம்பி ஸ்ரீனிவாசன் சமஸ்க்ருதக்காரன். பரிவார் அமைப்பான சம்ஸ்க்ருத பாரதியில் சம்பளம் கேட்காத ஊழியன். தொலைபேசியில் கூட ‘அச்சதி, கச்சதி’ என்றுதான் பேசுவான்.
சிட்லபாக்கத்திற்கு வந்த உடனேயே தாம்பரம் முடிச்சூர் ரோட்டில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். மாதச் சம்பளம் நூறு ரூபாய். துணிக்கடையில் வேலைக்குச் சேரும் போது முதலாளி கேட்ட முக்கியமான கேள்வி, எனக்கு ‘ஆங்கிலம் தெரியுமா’ என்பதுதான். ‘தெரியாது என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால்தான் வேலைக்குச் சேர்த்துக் கொள்வார்கள்’ என்கிற ரகசியத்தை ஒருவர் ஏற்கெனவே எனக்குச் சொல்லி விட்டார். எனவே, தெரியாது என்று சொல்லிவிட்டேன். முதல் வாரத்திலேயே அதற்கும் ஆபத்து வந்து விட்டது.
தாம்பரம் கிறித்துவக் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியர் வாசுதேவன். இவர் கல்லூரிக்கு வெளியே பொதுத் தளங்களில் செயல்பட்டவர். அவசரநிலை காலத்தில் இந்திரா அரசிற்கு எதிரான சில நடவடிக்கைகளின்போது நான் அவரைச் சந்தித்துப் பேசி இருக்கிறேன். பேராசிரியர் வாசுதேவன் ஒரு நாள் துணிக்கடைக்கு வந்துவிட்டார். முதலாளியின் மகள் அவரது மாணவி என்பதால் ஏகப்பட்ட வரவேற்பு. வந்த இடத்தில் என்னைப் பார்த்தவுடன் உரையாடத் துவங்கினார், ஆங்கிலத்தில். பதிலுக்கு நானும். இதைப் பார்த்துக் கொண்டிருந்த முதலாளியின் முகம் மாறிவிட்டது.
பேராசிரியர் வெளியேறியவுடன் முதலாளி என்னை அழைத்தார். ‘இங்கிலிஷ் தெரியாது என்று சொன்னீங்களே’ என்றார்.
‘அப்படி சொன்னாத்தானே வேலை குடுப்பீங்க’ என்றேன் நான்.
சிரித்து விட்டார். அது மட்டுமல்ல. உடனடியாக எனக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. அதாவது ரூபாய் நூற்றி ஐந்து.
அது தீபாவளி சமயம் என்பதால் கடையில் கூட்டத்திற்குக் குறைவில்லை. புடைவை பகுதியில்தான் வேலை அதிகம் இருக்கும் என்பதால் எனக்கு அங்கே போஸ்டிங். ஏற்கெனவே இருவர் இருக்கும் இடத்தில் மூன்றாவதாக நான்.
புதிதாகத் துணி வாங்க வசதி இல்லாத ஏழைப் பெண்கள் கடைக்கு வருவார்கள், பொழுதுபோக்குவதற்காக. ஊழியர்கள் அவர்களை மிரட்டாத குறையாகப் பேசுவார்கள். நான் அவர்களைத் தடுத்து ‘வாங்காவிட்டால் பரவாயில்லை’ என்று சொல்லி புடைவைகளை எடுத்துக் காட்டுவேன். பெண்கள் மகிழ்ந்து போவதோடு மறுநாள் தோழியர்களையும் அழைத்து வருவார்கள்.
புடைவை எடுக்கும் போதுதான் பெண்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் ஏற்படும். தனக்கு எது தேவை என்பதை அவர்களால் சுலபமாகத் தீர்மானிக்க முடியாது. புடைவை ஓகே என்றால் தலைப்பு ஓகே ஆகாது. இரண்டும் ஓகே ஆனாலும், ரவிக்கை மேட்சிங் ஆகாது. பரோட்டா சூரி போல, முதலில் இருந்து ஆரம்பிப்பார்கள். இந்தச் சூழ்நிலையில், கடை ஊழியர்கள் எதுவும் சொல்ல மாட்டார்கள். நாம் ஏதாவது சொல்லப்போனால் பிறகு புடைவை ரிட்டர்ன் ஆனால் மாட்டிக் கொள்வோமே என்கிற பயம்தான் காரணம். நான் இதற்கெல்லாம் அசராமல் துணிந்து கருத்து சொல்வேன். புடைவை ரிட்டர்ன் ஆனதில்லை. அது மட்டுமல்ல, சில நேரங்களில், சில பெண்கள் அந்தப் புடைவையை கட்டிக் கொண்டு வந்து ‘அண்ணே, நீங்க சொன்னதுதான் சரி. இந்த மஞ்சா பார்டர் நல்லா இருக்கு பாருங்க’ என்று காண்பித்து விட்டுப் போவார்கள். ஏதோ பராசக்திகளுக்கு நமது பணிவிடை என்று நினைத்துக் கொள்வேன்.
ஊழியர்களில் ஒருவர் ஓரளவு மனநிலை பாதிக்கப்பட்டவர். அவரை ‘லூசு கண்ணன்’ என்றே அழைப்பது வழக்கமாக இருந்தது. முதலாளியின் தம்பி முறையில் ஒருவர் சில நேரங்களில் கல்லாவில் உட்காருவார். அவருக்கும் மனநிலையில் பிரச்சினை இருந்தது. ஆனால் அவரை லூசு தம்பி என்று சொல்லாமல் முதலாளி தம்பி என்றே சொல்லி வந்தார்கள். இதைப் பார்த்ததும் எனக்குள் இருந்த நீதிமான் கொடியை உயர்த்தி விட்டான். இந்த விவகாரத்தில் நான் தலையிட்டேன். ஒன்று முதலாளி, தொழிலாளி இருவரையும் லூசு என்று அழைக்க வேண்டும். அல்லது கண்ணனை கண்ணன் என்று அழைக்க வேண்டும் என்பதுதான் என் வாதம். கொஞ்சம் இழுபறிக்குப் பிறகு என்னுடைய கோரிக்கை ஏற்கப்பட்டது.
*
காலையில் தாம்பரம் (31.10.1984) துணிக் கடைக்குப் போவதற்காகப் புறப்பட்டவனை, அந்தச் செய்தி தடுத்து விட்டது. கண் முன்னே கடைகள் அடைக்கப்பட்டன. வீதியோரத்தில் பேருந்துகளை நிறுத்திப் பயணிகளை இறக்கி விட்டார்கள். எல்லோரும் பரபரப்பாகக் காணப்பட்டனர்.
பாரதப் பிரதமர் இந்திரா அவரது காவலாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதுதான் அந்தச் செய்தி. பிரதமருடைய இல்லத்தில் பணி புரிந்த மூன்று காவலர்கள்தான் கொலையாளிகள். சத்வந்த் சிங், பீந்த் சிங் மற்றும் கேஹர் சிங் ஆகிய அந்த மூவரும் சீக்கியர்கள்.
தன்னுடைய வீட்டில் ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்குப் புல்வெளி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார் இந்திரா (காலை 9:30 மணி). பிரதமருடைய வீடு சப்தார்ஜங் வீதியில் உள்ளது. இதனுடைய மற்றொரு பகுதி அக்பர் வீதியில் உள்ளது, இடையில் புல்வெளி.
அப்போது அந்த வளாகத்துக்குள்ளேயே பதுங்கி இருந்த காவலர்கள், துப்பாக்கியால் இந்திராவை நோக்கிச் சுட்டனர் – வயிற்றிலும் மார்பிலும் ஆக பதினாறு குண்டுகள் பாய்ந்தன. ரத்த வெள்ளத்தில் கிடந்த இந்திரா எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். அங்கே ஆபரேஷன் நடந்தது. டாக்டர்கள் போராடிப் பார்த்தும் பலனில்லை. பிரதமர் இறந்து விட்டதாக (பிற்பகல் 2:30 மணி) தலைமை டாக்டர் சபையா தெரிவித்தார்.
கொலை நடந்த உடனே, அங்கே இருந்த இந்திய திபெத்திய கமாண்டோ படையினர், கொலையாளி பீந்த் சிங்கை சுட்டுக் கொன்றனர். கேஹர் சிங் காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சத்வந்த் சிங் கைது செய்யப் பட்டார்.
தொடரும்…