ஓர் உணவகத்திற்கு நீங்கள் செல்கிறீர்கள். நீங்கள்தான் வாழை இலை, உணவு தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் குடிக்க நீர் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும் என்கிறார் உரிமையாளர். நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள். பின்னர் நீங்களே சமைக்க வேண்டும் என்கிறார். நீங்கள் சமைக்கவும் செய்கிறீர்கள். அங்கு உணவு உண்ண உங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நீங்கள் வெளியேறும் நேரம் உணவக உரிமையாளர் உணவிற்கான தொகையைப் பெற்றுக் கொள்கிறார்.
கேட்க நியாயமற்றது போல் தோன்றும் மேற்கூறிய நிகழ்ச்சிதான் அரசுப்பணியாளர் தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகளில் நடக்கின்றன. தேர்வுகள் நியாயமாகவும், முறையாகவும் நடத்தப்பட வேண்டியதுதான்.ஆனால் அதற்கான பொறுப்பைத் தேர்வு எழுதுபவர்கள் தலையில் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள இயலாது.
2019ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் நிகழ்ந்த முறைகேடுகள் பூதாகரமாக வெளிப்பட்டது. அதனாலேயே 2020ல் வெளியிடப்பட்ட Group 1 தேர்வுக்கான அறிவிக்கையிலேயே கெடுபிடிகள் அதிகமிருந்தன. பிறந்த மாவட்டத்தைத் தவிர வேறு மாவட்டத்தில் தேர்வு மையம் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படவில்லை. கொரோனா பிரச்சினையால் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுப் பின்னர் 3 ஜனவரி 2021 தேர்வுத் தேதியாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் போதிய முன்னறிப்பின்றி தேர்வுக்கு ஆதார் கட்டாயமென அறிவிக்கப்பட்டது. புதியதாக ஆப்ஷனில் ஆப்ஷன் E என்று ஒன்று தரப்பட்டது. விடை தெரியாத பட்சத்தில் அதைத் தெரிவு செய்யும்படிச் சொல்லப்பட்டது. தேர்வு எழுதுபவர்கள் எந்த வினாவிற்காவது விடையளிக்காமற் விடும் பட்சத்தில் விடைத்தாள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. மேலும் விடையளித்த கேள்விகளின் எண்ணிக்கை மற்றும் தரப்பட்ட பதில்களின் எண்ணிக்கை இடையே வேறுபாடு இருப்பின், தேர்வு எழுதியவர் பெற்ற மொத்த மதிப்பெண்ணில் ஐந்து மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருந்தது.
தேர்வில் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காகக் கொண்டுவரப்பட்டது எனச் சொல்லப்பட்ட இந்த வழிமுறைகளானவை குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்காக ஊர் மக்கள் அனைவரையும் காவல்நிலையத்தில் முன்பே அடைத்து வைக்கும் மேதாவித்தனத்துக்கு ஒப்பானது. இதில் உச்சகட்டம் என்னவென்றால் தேர்வுக்கான நுழைவுச் சீட்டில் தேர்வெழுதுபவரின் கையொப்பம் மட்டுமல்ல, அறைக் கண்காணிப்பாளர்கள் கையொப்பமும் முறையில்லா இடத்தில் எழுதப்பட்டிருந்தாலும் விடைத்தாள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அறைக் கண்காணிப்பாளர் செய்யும் பிழைக்கெல்லாம் தேர்வு எழுதுபவர்கள் எப்படிப் பொறுப்பேற்க முடியும்?
அப்படி என்றால் தேர்வு எழுதுபவர்களுக்குப் பொறுப்பு வேண்டா எனக் கேட்டால், அப்படி சொல்லவில்லை. ஆனால் எல்லாப் பொறுப்புகளும், பிழைகளுக்கான விலையும் தேர்வு எழுதுபவர்கள் தலையில் மட்டுமே சுமத்தப்படுகின்றன என்பதுதான் பிரச்சினை. யோசித்துப் பார்க்கையில் தேர்வாணையங்கள் துறக்கும் அதன் பொறுப்புகள் பின்வருமாறு.
உடைமைகளுக்குப் பொறுப்புத் துறப்பு
தேர்வு எழுதுபவர்கள் கொண்டு வரும் உடைமைகளுக்கான பொறுப்பைத் தவிர்ப்பதிலிருந்து துவங்குகிறது ஆணையத்தின் பொறுப்புத் துறப்பு. வழக்கமாகத் தேர்வெழுதுபவர்கள் தங்கள் சுய பாதுகாப்பின் பேரில் தங்கள் உடைமைகளைத் தேர்வு வளாகத்தினுள் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர். இம்முறை அதற்கே அனுமதி தரப்படவில்லை. அவ்வாறு தங்கள் உடைமைகளைத் தேர்வு வளாகத்தினுள் வைக்கவே அங்கிருந்த காவலர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டியதாயிருந்தது. நாட்டு மக்களின் உயிர், உடைமை, நல்வாழ்வு ஆகியவற்றிற்கான பொறுப்பை ஏற்கக் கூடிய IAS, IPS போன்ற பதவிகளுக்கான தேர்வுக்கு வருபவர்களின் உடைமைகளுக்குக் கூட தேர்வாணையங்கள் பொறுப்பேற்காமலிருப்பது அதன் மேன்மைக்கு உகந்ததல்ல. தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கை முன்கூட்டியே தெரியுமாதலால் அதற்கேற்ப டோக்கன் சிஸ்டத்தை செயற்படுத்தி உடைமைகளுக்குப் பாதுகாப்பு தர வேண்டும். அத்தோடு கழிவறை, குடிநீர் போன்ற வசதிகளையும் முறையாக ஏற்படுத்தித் தர வேண்டும்.
காலத்திற்குப் பொறுப்புத் துறப்பு
தேர்வுக்கு உரிய நேரத்தில் வராதவர்களை அனுமதிக்காமலிருப்பது சரியானது. நேர ஒழுங்கு என்பது அவசியம். அந்த நேர ஒழுங்கு தேர்வாணையங்களுக்கும் இருக்க வேண்டும். தேர்வு ஆரம்பிக்கும் நேரம் போலவே தேர்வு முடியும் நேரமும் தரப்பட்டு அந்த நேரத்திற்குள் தேர்வு நடத்தி முடிக்கப்பட வேண்டும். ஆனால் நடைமுறையிலோ அதிகாரிகளின் பிழையால் தேர்வுத்தாள் வழங்கப்படுதலில் தாமதம், இன்ன பிற பிழைகளால் ஏற்படும் தாமதங்களுக்கான விலையைத் தேர்வு எழுதுபவர்கள்தான் தருகிறார்கள். இது நேரத் திருட்டிற்கு சமம். ஆதலால் தேர்வு நேரங்கள் முறையாக வகுக்கப்பட்ட வேண்டும். தேவையற்ற நேர விரயம் தவிர்க்கப்பட வேண்டும்.
வினாத்தாளுக்கே பொறுப்புத் துறப்பு
இம்முறை TNPSC Group 1 தேர்வுத்தாள் குறித்த சர்ச்சையை ஒதுக்கி வைத்துவிட்டால், பொதுவாகவே கேள்விகளை மொழிபெயர்ப்பு செய்வதில் பிழை ஏற்பட்டால் ஆங்கில மொழிக் கேள்விதான் எடுத்துக் கொள்ளப்படும், தேர்வு எழுதுபவர் தேர்வு மொழியாக ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்காத போதிலும். மொழிபெயர்ப்பு மட்டுமில்லாமல் வினாவே தவறாக இருந்தாலும், அதற்கு மதிப்பெண் பெற தேர்வு எழுதுபவர்கள் போராடிக் கொண்டிருக்கையில் அடுத்தத் தேர்வும் தவறான கேள்விகளுடன் இருக்கும். காரணம் மிக எளிமையானது. இந்தப் பிழைகளுக்குக் காரணமானவர்கள்மீது எவ்வித துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை, அதை யாரும் பொருட்படுத்துவதுமில்லை. ஆனால் விண்ணப்பிக்கும்போது சிறு பிழை நேர்ந்தாலும் தேர்வர் விண்ணப்பமே ரத்தாகி விடக்கூடும்.
இவ்வாறு எதற்குமே தேர்வாணையங்கள் பொறுப்பேற்காமல் இருக்கும்போது, வேலை வேண்டுமானால் இதையெல்லாம் செய்துதானே ஆக வேண்டும் என சிலர் வாதிடக் கூடும். அது குமாஸ்தாக்களை மட்டுமே உருவாக்கும் எனக் கிண்டலடிக்கப்படும் மெக்காலே கல்விமுறை, சோசியலிச அரசாங்கம், அதை ஆதரிக்கும் அறியாமை மக்கள் ஆகியகிவற்றின் தோல்வி. கல்விமுறை சார்ந்து முன்னெடுப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை வரவேற்கப்பட வேண்டும். ஆனால் தேர்வுகள் குறித்த பிரச்சினையே தனி. இத்தேர்வுகள் நிரப்பப்பட வேண்டுமே என்கிற நிறுவன பணியாளர் பதவிகள் அல்ல, மாறாக மக்கள் நலன் ஏற்கவிருக்கும் சமூகப் பொறுப்புகள். நமது அரசியல் சாசனம் நிர்வாகத் துறையை சட்டத் துறையின் கீழ் நடக்குமாறு செய்கிறது. அதேசமயத்தில், நிர்வாகத் துறையை சட்டத் துறையே தேர்ந்தெடுத்தால் அதிகார துஷ்பிரயோகத்துக்கு வழிவகுக்குமென்பதாலே அச்செயலை செய்ய தேர்வாணையங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. ஆனால் தேர்வாணையங்களோ தன்னிச்சையான அமைப்பு என்பதிலிருந்து தரகர் என்ற அளவு மாறிவிட்டதாகவே தோன்றுகிறது.
லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம், பொறுப்பற்றதன்மை ஆகியவற்றைக் கடந்து வருபவர்களால் எப்படி மக்களுக்கான சேவகனாக இருக்க முடியும்? ‘அதிகாரி’யாகத்தான் இருக்கமுடியும். பொது நுழைவுத் தேர்வு என்பது நல்ல திட்டம்தான், ஆனால் பொருளாதாரம் சார்ந்த முன்னெடுப்பே ஒழிய சமூக நலம் சார்ந்ததல்ல. ஆகவே, அரசுப் பணியாளர் தேர்வாணையங்களுக்கு அதிகாரங்களையும், வரம்புகளையும், பொறுப்புகளையும் வரையறுக்கவேண்டிய நேரமிது.