Our Oriental Heritage – Will Durant
பிரதமர் இந்திரா காந்தி அறிவித்திருந்த எமெர்ஜென்ஸி காலம். பேச்சுக்கு இருந்த கட்டுப்பாடு உணவுக்கு இல்லை. எனவே சென்னை மயிலை லஸ் முனையிலுள்ள உணவகத்தில் சிற்றுண்டி அருந்த நண்பர்களோடு சென்றிருந்தேன். வட இந்திய உணவு வகை மற்றும் வேறு பல புதிய உணவு வகைகள் கிடைக்குமிடம். இதுவரை சாப்பிடாத ஏதேனும் ஒன்றை ‘டேஸ்ட்’ செய்ய வேண்டும் என்று எங்களுக்கு ஆசை.
வெள்ளை பேண்ட், ஷர்ட்; தலையில் வெண் குல்லாவுடன் ‘வெயிட்டர்’ ‘மெனு’வை நீட்ட, அதை மேலும் கீழும் படித்துவிட்டு, எங்களுக்குள் இரண்டாவது மேதாவி என நினைத்துக் கொண்டிருக்கும் என் நண்பன் ‘வெயிட்டர். ஒரு ‘வெஜிடபிள் ஸ்டீக்’ கொண்டு வாங்க’ என்றான். அது நாங்கள் எவரும் கேள்விப்படாத உணவுப்பண்டம்.
‘பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஆகும்’ என்றார் வெயிட்டர்.
‘பரவாயில்லை’ என்று வெயிட்டரை அனுப்பிவிட்டு எங்களை அர்த்தபுஷ்டியோடு நோக்கினான் நண்பன்.
‘என்னடா! நீ சாப்பிட்டுப் பாத்திருக்கியா? நல்லா இருக்குமா?’ என்று கேட்டேன்
‘யாருக்குத் தெரியும்! எல்லாரும் பிரமாதமாச் சொல்லறாங்க..சாப்பிட்டுப் பாக்கலாம்.’
அரைமணி நேரம் கழித்து வடிகூடை போன்ற ஒன்றால் மூடி ஒரு பெரிய பாத்திரத்தைக் கொண்டு வந்து வைத்தார் வெயிட்டர். பாதி வெந்தும் வேகாமலும் நீளமான மைதா ரொட்டி போல இருந்த அந்தப் புதிய பண்டத்தை எங்களால் கால் பகுதி கூடச் சாப்பிடமுடியவில்லை. துணைக்கு ஒரு தட்டில் பச்சைக் காய்கறிகள்.
‘காக்காமுட்டை’ என்ற திரைப்படத்தில் மிக ஆவலாக ‘பீட்ஸாவை’ ருசி பார்த்துப் பின் ஏமாற்றத்துடன் முகம் சுளிக்கும் அந்த இரண்டு மறக்க முடியாத ஏழைச் சிறுவர்கள் நிலையில் நாங்கள் அன்று இருந்தோம்.
எல்லோரும் பாராட்டும் விஷயம் சில நேரங்களில் நமக்கு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். இது சாப்பாட்டுக்கு மட்டுமல்ல; புத்தகங்களுக்குக் கூடத்தான் என்று அண்மையிலே தெரிந்து கொண்டேன். ‘சில’ இடங்களில் இதுவும் முகம் சுளிக்க வைத்தது. நான் குறிப்பிடுவது ‘வில் டுராண்ட் எழுதிய ‘அவர் ஓரியெண்டல் ஹெரிடேஜ்’ (Our Oriental Heritage) என்னும் நூல்.
மிகப் பிரபலமான ஆசிரியர். உலக நாகரிகங்களின் வளர்ச்சி பற்றிய நூல்களின் முக்கியமான எழுத்தாளர். அமெரிக்க வரலாற்று அறிஞர், தத்துவவாதி வில்லியம் ஜேம்ஸ் டுராண்ட் 1885ல் பிறந்தவர். 1926ல் ‘The Story of Philosophy’ என்ற நூலை வெளியிட்டார். தன் துணைவியார் ஏரியல் டுராண்ட் (Ariel Durant) – உடன் இணைந்து ‘The Story of Civilization’ என்ற மிகப் பிரபலமான நூலை எழுதியவர். இது பதினோரு தொகுதிகளைக் கொண்டது. முதல் தொகுதி 1935ல் பிரசுரிக்கப்பட்டது. பதினோராவது தொகுதி 1975ல் வெளியிடப்பட்டது அவர் மறைவுக்குப் பிறகு அவரது குறிப்புகளில் இருந்து இன்னும் இரண்டு தொகுதிகள் வெளியிடப்பட்டன. ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் 1930ல் அவர் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது ‘The Case for India’ என்ற சிறு நூலை எழுதினார்.
இந்திய நாட்டின் வறுமை நிலையைக் கண்டு மனம் நொந்து, இந்தியா சுதந்திரம் பெற்றால்தான் நல்ல நிலையை அடைய முடியும் என்று இந்திய விடுதலைக்குக் குரல் கொடுத்தவர். பெண்ணடிமைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். மதங்கள் மூலம்தான் மக்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கமுடியும் என்று சொன்னவர். இஸ்லாமியர் படையெடுப்பினால் இந்தியா எத்தகைய அழிவுகளையும் துன்பங்களையும் கொடுமைகளையும் சந்தித்தது என்று விளக்கமாக எழுதியவர். இந்த பின்னணியை நம்பித்தான் இந்நூலைப் படிக்க ஆரம்பித்தேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள். பல களிப்பு; சில சுளிப்பு.
முதலில் களிப்பு
ஆசிரியர் வில் டுராண்ட் ‘ஸ்டோரி ஆஃப் சிவிலைசேஷன்’ நூலின் முதல் தொகுதியான ‘அவர் ஓரியெண்டல் ஹெரிடேஜ்’ நூலை 1927ல் தொடங்கி 1932ல் முடித்தார். உலக நாகரிக வரலாற்றைப் பலரும் எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும்படி எழுதினார். ‘நமது சிறுவர் சிறுமியர் தங்கள் முன்னோர்களின் பரந்த நாகரிகத்தையும் மரபுகளையும் அவற்றில் பொதிந்துள்ள சுவையான செய்திகளையும் அறிந்துகொள்ள இந்நூல் உதவும் என்று நம்புகிறேன்’ எனத் தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
எகிப்திய நாகரிகத்திலிருந்து தொடங்கி, கீழை நாடுகளான இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வரலாற்றை எழுதியுள்ளார். அலெக்ஸாண்டர் காலம் முதல் தற்காலம் வரை இது பேசுகிறது. சுமேரியா, எகிப்து, பாபிலோனியா, அஸ்ஸிரியா, ஜுடியா, பெர்ஷியா போன்ற பண்டைய நாடுகளைப் பற்றிய செய்திகள் சுவையானவை.
குடும்ப வாழ்க்கை, திருமணம், சொத்துரிமை, தனிமனித அல்லது சமுதாய ஒழுக்க விதிகள், மொழியாக்கம், கலைகள், சமயம் போன்ற நாகரிகத்தின் பல கூறுகள் எவ்வாறு உருவாயின என்பதைப் பற்றி மிக விரிவாகவும் ஆழமாகவும் எழுதியுள்ளார். நம்ப முடியாத சில காட்டுமிராண்டித்தனமான பழக்கங்களைப் பற்றியும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
கிரேக்கர்கள், இறந்துபோன தங்கள் மூதாதையர்களையே கடவுளர்களாக வழிபட்டவர்கள். அவர்களுக்கு ஏதேனும் செய்தி அனுப்ப வேண்டுமென்றால், தங்கள் அடிமைகளில் ஒருவனிடம் அக்கடிதத்தைப் படித்துக் காட்டிவிட்டு அவனது தலையை வெட்டிவிடுவார்களாம். இறந்து போகும் அவன் மேலுலகம் சென்று இவர்கள் எழுதிய செய்தியைத் தெரிவிப்பான் என நம்பிக்கை. கடிதத்தில் ஏதேனும் பின்குறிப்பு எழுத மறந்திருந்தால் அதையும் இன்னொரு அடிமையிடம் படித்துக்காட்டி, அவன் தலையையும் வெட்டிவிடுவார்களாம்.
தங்கள் தேவைகள் நிறைவேறாவிட்டால் என்ன நடக்கும் எனத் தெரிவிக்க, முன்பின் அறியாத பல பொதுமக்களைக் கொன்று குவிக்கும் பயங்கரவாதிகள், என்ன விதத்தில் அக்காட்டுமிராண்டிகளை விட நாகரிகத்தில் வளர்ச்சி உற்றிருக்கிறார்கள் என்று என் மனம் எண்ணியது.
நாகரிக வளர்ச்சிக்கு மிக அடிப்படையானது மொழி. மொழி வளராத காலங்களில் சைகை மூலம்தான் மனிதர்கள் பேசிக் கொண்டனர். வட அமெரிக்கப் பழங்குடியினரில் பல பிரிவுகள் உண்டாம்; அவர்களுக்குள் மணம் நிகழ்வது உண்டு. ஒருவர் சைகை மொழி இன்னொருவருக்குத் தெரியாது. பழங்குடியின மக்கள் ஆய்வில் சிறந்த பேராசிரியர் லெவிஸ் ஹென்றி மார்கன் (Lewis Henry Morgan) ‘இந்த இனத்தைச் சார்ந்த, எனக்குத் தெரிந்த ஒரு தம்பதி முதல் மூன்று வருடங்கள் வரை சைகை மொழியில்தான் ‘பேசிக்’ கொண்டனர்’ எனச் சொன்னதைக் குறிப்பிடும் ஆசிரியர், உலகின் முதல் மொழி சைகைதான் என ஆதாரங்களோடு எழுதியுள்ளார்.
சைகைக்குப் பிறகு மொழி, நிகழ்வின் ஒலி சார்ந்த சொற்களை உருவாக்கிக் கொண்டது. Roar, Groan, Murmur, Giggle, Hiss, Cackle போன்ற சொற்களை உதாரணம் காட்டுகிறார் ஆசிரியர். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக அவர் காட்டுவது பிரேஸில் மொழியில் தும்மலைக் குறிக்கும் சொல் ‘ஹச்சூ’ (Haitschu) என்பதாகும். உலக மொழிகள் அனைத்தும் சைகையிலிருந்தே பிறந்தவை என்பதும், அவற்றுள் பிற மொழிக் கலப்பில்லாத மொழி எதுவும் இல்லை என்றும் இந்நூல் குறிப்பிடுகின்றது. ‘தூய தமிழ்’ வேண்டும் என்றும் வடமொழிக் கலப்பை அகற்றுவோம் என்றும் சாடிச் சாடித் தமிழ்ப்படுத்தும் அறிவாளிகளை எண்ணி ஒருசில வினாடிகள் கவலைப்பட்டேன். மனிதர்களிடையே கலப்பு இருக்கும்போது, மொழியில் எப்படிக் கலப்பு இல்லாதிருக்கும் என்ற புத்திசாலித்தனமான கேள்வியை இவர்களிடம் கேட்காமல் இருப்பதே புத்திசாலித்தனம் என்று புரிந்து கொண்டேன்.
பாபிலோனியா பற்றி எழுதுகையில் அந்நாட்டில் வண்டிகளை இழுக்க, கழுதைகளையே பயன்படுத்தினார்கள் எனக் குறிப்பிடுகிறார் ஆசிரியர். முதன்முதலில் மத்திய ஆசியாவிலிருந்து குதிரைகள் தருவிக்கப்பட்ட போது அவற்றை ‘கிழக்கிலிருந்து வந்த கழுதைகள்’ (The Ass from the East) என்றே அழைத்தார்களாம். சில நேரங்களில் கழுதையிலிருந்து குதிரைக்கு மாறுவது நாகரிகம் இல்லை; இரண்டையும் பயன்படுத்துவதே நாகரிக வளர்ச்சி என்று புரிகிறது. தென்னாட்டு அரிஸ்டாடில், தென்னாட்டு நெப்போலியன், சேகுவரா என்றெல்லாம் பெயர் சூட்டுவதில் உள்ள சிக்கல்களை, இந்நூலைப் படித்தபின் சம்பந்தப்பட்டவர்கள் மறுபரிசீலனை செய்யக்கூடும்.
நாகரிக வளர்ச்சியில் எண்கள் மற்றும் கூட்டல் கழித்தல்கள் எவ்வாறு அமைந்தன என்று இந்நூல் சுவையாகக் குறிப்பிடுகிறது. பல பண்டை நாகரிகங்களில் ‘ஒன்று இரண்டுக்கு’ மேல் எண்ணத் தெரியாதாம். தாஸ்மானியர்கள் (Tasmanians) ‘ஒன்று, இரண்டு, பல’ (One,Two, Many) என எண்ணுவார்களாம். நியூ ஹோலண்டர்கள் (The New Hollanders) மொழியில் ‘ஒன்று. இரண்டு’ தவிர மூன்று நான்குக்கெல்லாம் சொற்கள் கிடையாது. மூன்றுக்கு ‘ஒன்று இரண்டு’ என்றும் நான்குக்கு ‘இரண்டு இரண்டு’ என்றும் குறிப்பிடுவார்களாம்.
தமரா (Damara Tribe) என்ற பழங்குடியினர் இரண்டு ஆடுகளை நான்கு குச்சிகளுக்கு விற்கமாட்டார்கள்; கணக்கு தெரியாது. ஒரு ஆட்டுக்கு இரண்டு குச்சிகள் என இரண்டு தடவைகளில் விற்பார்களாம்.
கை விரல்கள் பத்து. அதை வைத்தே எண்ணத் தொடங்கியதால்தான் தசம முறை (Decimal system) எண்ணிக்கை வந்ததாம். அதன் அடுத்த நிலை பன்னிரண்டு (Dozen etc,) ஐந்தைத் தவிர முதல் ஆறு எண்களால் பன்னிரண்டு வகுபடும் என்பதால் இம்முறை (Duodecimal system) ஐரோப்பியாவில் பிரபலமானது. இவ்வாறு வளர்ந்த கணிதத் துறையில் பல உச்சங்களைத் தொட்ட நாடு இந்தியா என்பதையும் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
அரேபிய எண்கள் (Arabic Numerals) என்று ஆங்கிலேயரால் குறிப்பிடப்படும் முறை உண்மையில் இந்தியாவின் கண்டுபிடிப்பு. அசோகர் காலத்துக் கல்வெட்டுக்களிலேயே (256 B.C.) இவை காணப்படுகின்றன. அதாவது அரேபிய அல்லது சிரிய இலக்கியங்கள் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகள் முன்னமேயே இந்தியா தசம எண்களைக் கண்டுபிடித்துவிட்டிருக்கிறது. ஆரியபட்டா, பிரம்மகுப்தா போன்ற கணித மேதைகளுக்கு இம்முறை ஏற்கெனவே தெரிந்திருந்தது. பூஜ்யத்தைக் கண்டுபிடித்தவர்களும் இந்தியர்களே.
முதன்முதலாக தங்கத்தை பூமியிலிருந்து வெட்டி எடுத்து பயன்படுத்தியவர்கள் இந்தியர்கள்; மருத்துவத் துறையில் முதன்முதலில் அறுவை சிகிச்சை செய்ததும்; முதன்முதலில் தடுப்பூசி போடுதலை (Vaccination) ஆரம்பித்ததும் சுஷ்ருதா என்பது போன்ற இந்தியாவைப் பற்றிய பல தகவல்களை இந்நூலில் படிக்கும்போது, மனம் பெருமிதம் கொள்கின்றது.
இந்தியச் செல்வங்களைக் கொள்ளையடித்ததில் மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்று இந்நூலைப் படிப்போர் எளிதில் உணர்ந்து கொள்ளலாம். இந்த ஐந்நூறு ஆண்டுக்கால வரலாற்றில் மொகலாயர்களின் பட்டவர்த்தனமான, மன்னிக்க முடியாத வன்முறைச் செயல்களும், ஆங்கிலேயர்களின் பதுங்குப் புலிப் பாய்ச்சல்களும், ஒதுங்கு குள்ளநரித்தனங்களும் மேலோங்கி நின்றதைப் படிக்கும் தேசநல விரும்பிகள் நிச்சயம் ரத்தக் கண்ணீர் வடிப்பர். அப்படி எல்லாம் ஓர் உணர்ச்சியே வரவில்லை என்பவர்களைப் பற்றிக் கருத்துச் சொல்ல எனக்கு நேரமில்லை.
இவ்வளவு நீண்ட வரலாற்றை எழுதும் போதும், சில மாறுபட்ட கருத்துகளை அருகருகே சொல்லிச் செல்லும் ஆசிரியர் பாணி வரவேற்கத்தக்கது. உதாரணத்திற்கு ஒன்றைக் குறிப்பிடுவேன். இந்திய மக்களைப் பற்றி யார் என்ன சொல்லியுள்ளார்கள் என்பது ரசிக்கத்தக்கது.
ஆங்கில எழுத்தாளர் ஆர்.டபிள்யூ. ப்ரேஸர் (R.W.Frazer) ‘இந்துக்கள் மிக சாதுவானவர்கள் என உலகம் ஒத்துக்கொண்டுள்ளது. அவர்கள் மென்மையானவர்கள், உணர்ச்சிவசப்பட்டவர்கள், கற்பனைத் திறன் மிக்கவர்கள். எனவேதான் அவர்கள் அரசர்களாகவும் ஆள்பவர்களாகவும் இருப்பதைவிட சிறந்த கலைஞர்களாகவும், கவிஞர்களாகவும் இருக்கின்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளார். (‘By Universal admission the Hindus are gentle to the point of timidity. The Hindus are sensitive, emotional, temperamental, and imaginative; therefore they are better Artists and poets than rulers and executives.)
யுவான் சுவான் (Yuvan Chwang) ‘இந்துக்கள் ஏமாற்ற மாட்டார்கள்; ஒப்புக்கொண்ட கடமையிலிருந்து தவற மாட்டார்கள்’ (‘Hindus do not practice deceit and they keep their sworn obligations’) என்றும், பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத் தலைவர் கைர் ஹார்டி (Keir Hardie) ‘இந்துக்களின் நேர்மை அனைவரும் அறிந்ததே’ (‘Their (Hindu’s) honesty is proverbial’) என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் மெக்காலே (Macaulay) ‘இந்துக்கள் தந்திரவாதிகள்; ஏமாற்றுக்காரர்கள்’ (‘Hindus are wily and deceitful’) என்று சொல்லியுள்ளார். ‘பொய் உரைப்பது இந்துக்களின் தேசிய குணம்’ (‘Lying has been called the National vice of the Hindus’) என்று வெஸ்டர்மார்க் (Westermarck) என்ற உளவியல் அறிஞர் குறிப்பிட்டுள்ளார். பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் வன்முறைகளில் ஈடுபட்டிருந்த ஒரு குழு பற்றிய குறிப்பிலிருந்துதான் ‘தக்ஸ்’ (THUGS) என்ற ஆங்கிலச் சொல் உருவானதாம்!
‘சதி’ என்ற உடன்கட்டை ஏறும் பழக்கம் இந்தியாவில் தோன்றியது என வாயகலப் பேசுவோர் உள்ளனர். ஆனால் இப்பழக்கம் மனு நீதியிலோ, வேதங்களிலோ குறிப்பிடப்படவில்லை என்று ஆசிரியர் அருமையாக எடுத்துக் காட்டியுள்ளார்.
கொல்லாமையை மிக முழுமையாகக் கடைப்பிடித்த ஜைனர்கள், பூச்சிகள் வந்து தீபத்தில் விழுந்து இறந்து விடும் என்று இரவில் விளக்குக் கூட ஏற்றமாட்டார்களாம். ஆனால் உணவருந்தாமல் தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளும் தற்கொலையை அனுமதிக்கிறது ஜைன மதம். என்ன முரண்பாடு!
உதவி கேட்டுக் கடிதம் எழுதிய தனது ஆசிரியருக்கு, சர்வாதிகாரி ஒளரங்கசீப் எழுதிய பதில்கடிதம் போன்ற ஒன்றை உலக வரலாற்றிலேயே வேறெங்கும் காணமுடியாது. ‘நீங்கள் கற்றுத் தந்த பயனற்ற கல்விக்கு உங்களை நாடு கடத்தியிருக்க வேண்டும் அல்லது கொன்றிருக்க வேண்டும். உயிர்ப்பிச்சை தருகிறேன். இனி மறுபடியும் ஏதும் கேட்காதீர்’ என்பது அவனுடைய நீண்ட பதிலின் முக்கியப் பகுதி. மொகலாய மன்னர்களின் பண்பு நலங்களைப் பல இடங்களில் தோலுரித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.
இவ்வாறு உலக வரலாற்றுப் பதிவுகளில் உள்ள பல முரண்களை, அங்கங்கே சுவையாகச் சுட்டிக்காட்டிச் செல்கிறார் ஆசிரியர்.
இனி சுளிப்பு
சம்ஸ்கிருத இலக்கிய மொழி, நாட்டு வாழ்க்கையில் இருந்து பிரிக்கப்பட்டிருந்தது; வேதத்தின் எளிமையை இழந்து, சமஸ்கிருதம் ஒரு செயற்கை ராட்ஷசக் குடல்புழுவாக இலக்கியங்களை அரிக்க ஆரம்பித்தது என சம்ஸ்கிருத மொழி பற்றி எழுதியுள்ளார்.ஆசிரியர். (‘The literary language Sanskrit was divorced from contact with the life of the Nation. Sanskrit has lost the virile simplicity of the Vedic hymns, and became an artificial monster whose ‘sesquipedalia verba’ crawled like monstrous tapeworm across the page.’)
அத்வைதத்தைப் பரப்பிய சங்கரர், ‘சாங்கியர்களையும்’ ‘புத்தரையும்’ ஏற்கவில்லை; ஆனால் பலதெய்வ வழிபாட்டை மட்டும் மன்னித்து ஏற்றுக் கொண்டார் என, சங்கரரின் அத்வைதக் கொள்கையின் அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் எழுதியுள்ளார் ஆசிரியர். (Sankara could pardon the polytheism of the people but not atheism of ‘Sankhya’ or the agnosticism of Buddha’) மேலும் ஜெர்மானியத் தத்துவவாதி இமானுவேல் காண்ட் (Immanuel Kant) கூறும் கடவுட் கொள்கையும், சங்கரரது கொள்கையும் சில இடங்களில் ஒத்திருப்பதை ஒப்பிட்டு ‘This pre-plagiarist of Kant’ என ஆதி சங்கரரைக் நூலாசிரியர் குறிப்பிடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அன்பையும் கருணையையும் போதித்த புத்தரை ‘Elsewhere Buddha introduced elements into his teaching strangely anticipatory of Christ’ என்று எழுதியுள்ளதும் ஏற்புடையது அல்ல.
வேத காலத்தில் வர்ணம் எனச் சொல்லப்பட்டது, வேதம் மருவிய காலத்தில் ‘ஜாதி’ என ஆனது என்றும்; இப்பிரிவினருள் அதிகம் பயனடைந்ததும் வலிமை பெற்றதும் பிராமணர்கள் என்றும்; பிரசாரம் செய்து, மனு தர்மத்தை பிராமண தர்மமாகத் திரித்து எழுதிய கிறிஸ்துவ மத போதகர்களின் பொய்க் கருத்துகளை விவரமறியாமல் பல இடங்களில் அப்படியே பிரதி எடுத்து எழுதியுள்ளார் ஆசிரியர். இதைப் பண்டை நாகரிக ஆய்வுகள் எனச் சொல்வது கண்டனத்துக்குரியது.
நமது இதிஹாச புராணங்களைப் பற்றிய இவரது பார்வை சில இடங்களில் பெரிய ஏமாற்றத்தை அளிக்கின்றது.
‘Rama and Sita are too good to be true’ என்று ராமாயணத்தில் நம்பகத்தன்மை இல்லை என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.
போரிட மறுக்கும் அருச்சுனனுக்கு, குருக்ஷேத்திரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையை உபதேசம் செய்வதை, ‘ஒரு மனிதன் மிக உயர்ந்த அறம் சார்ந்த கருத்தில் நிற்க, கடவுளாக இருப்பவர் போரிடலாம்; கொலைகளும் செய்யலாம் என்று சொல்கிறார். ஆன்மா அழியாது. இதெல்லாம் மாயை என்று ஏதேதோ நம்ப முடியாத கருத்தை சொல்கிறார் என்பது நமக்குச் சிறிது அதிர்ச்சி அளிக்கின்றது’ என்கிறார் ஆசிரியர். கீதை உபதேசத்தை இந்தக் கோணத்தில் எழுதியவர் சொற்களை எதிர்த்து இன்னும் யாரும் எதுவும் கேட்கவில்லை என்றாலும் நான் என் எதிர்ப்பை இங்கே பதிவு செய்கிறேன். (‘We are a little shocked to find the man taking what might seem to be the higher moral stand, while the god argues for war and slaughter on the shifty ground that life is unkillable and individuality unreal.’- Will Durant)
ஷத்ரிய அரச வம்ச வீர தீரச் செயல்களையும், போர்களையும் பற்றிச் சொல்ல வந்த மகாபாரதக் காவியத்தில் மனு தர்மம், யோக முறை பற்றிய விளக்கம், ஒழுக்க நெறிகள், மோட்சம் ஆகியவை பற்றிய செய்திகளை பிராமணர்கள் புகுத்திவிட்டார்கள் என்று தமிழக பெரியாரிஸ்டுகள் போலப் பேசியுள்ளார் ஆசிரியர். (‘What was evidently a Kshatriyan enthronement of action, heroism and war becomes in the hands of the Brahmans, a vehicle for teaching the people the laws of Manu, the principles of yoga,the precepts of morality and the beauty of Nirvana’).
நமது இதிஹாசங்களே ஒழுக்கத்தையும், அறம் பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை வலியுறுத்தவும்தான் எழுதப்பட்டவை என்று நம்மிடம் ஒரு வார்த்தை கேட்டிருந்தால் சொல்லியிருப்போம்.
ஆங்கிலப் புலமை மிக்க நமது இந்திய மேதைகள் யாரும் இந்நூலைக் குறை சொன்னதாகத் தெரியவில்லை என்றாலும், உலக அளவிலே இந்த நூலைப் பலர் விமர்சித்துள்ளனர்.
‘பிழையான கருத்துகள் மலிந்து கிடப்பது இந்நூலிலுள்ள முக்கியக் குறைபாடு; மூல நூல்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளாமல், இரண்டாம் நிலைத் தரவுகளையே பயன்படுத்தி உள்ளார்; அறிவு சார்ந்த நூலாக இது அமையவில்லை’ என்கிறார் ஜே. எச். பிளம்ப். (‘Shortcomings of his works—high quantity of factual inaccuracies, reliance on secondary sources, and failure to keep up on contemporary scholarship—all of which are inevitable problems of a study of this scope aimed at a general audience. This falls short of scholarship.’ J,H,Plumb: W.Leonard Grant; and John Day.)
‘இரண்டாம் நிலைத் தரவுகள் அன்றி, தவறான தரவுகளையும் பயன்படுத்தி உள்ளார். உதாரணமாக மொழி ஆய்வுகளைப் பற்றி எழுதுவதற்கு, கட்டடக்கலை நிபுணர் எழுதிய நூலைச் சான்று காட்டப் பயன்படுத்துகிறார்’ எனக் குற்றம் சுமத்துகிறார் ஸ்டேன்லி மெல்லான். (‘For Oriental Heritage he (the Author) not only referred secondary sources but wrong sources. He has referred an archeological engineer as authority on languages and hieroglyphics.’ – Stanely Mellon).
‘பிரபலமடைய வேண்டுமென்றால் அறிவாண்மையைத் தியாகம் செய்ய வேண்டும்; அதற்கான விலையையும் கொடுத்தாக வேண்டும்; பலரோடு பகிர்வதற்கு உண்மைகளை மாற்றவேண்டும் அதைத்தான் இந்நூலாசிரியர் செய்துள்ளார்’ என்ற விமர்சனத்தை முன்வைக்கிறார் பேராசிரியர் கிராஃப்டன் கெல்லி. (‘Every man has to make peace with certain tradeoffs to sacrifice scholarship for popularization; to change the truth in order to share it.’ – Croften Kelly).
இவை போன்ற குறைகளைப் பலர் சுட்டிக் காட்டக் கூடும் என்ற உணர்வாலோ என்னமோ ஆசிரியர் தனது முன்னுரையில் சீன வரலாற்று ஆசிரியரான தாய்துங் (Tai Tung) வரிகளை மேற்கோள் காட்டுகிறார். ‘Were I to await perfection, my book would never be finished’.
மிக எளிதாகப் பிரபலமடைந்து நிறைய விற்பனையாகும் ஆசிரியர்கள் எந்த சூத்திரத்தைப் பின்பற்றுகிறார்கள் என்பது ஓரளவு புரிந்துவிட்டது. புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர்கள் இந்தியாவைப் பற்றி எழுதிய வரலாற்று நூல்களை எல்லாம் மறுபடி படித்துச் சரி பார்க்க வேண்டும் என்ற நினைப்பை இந்நூல் மூலம் பாரதவாசிகள் பெறக்கூடும்.