
வடக்கே போகும் தேசம் என்றவுடன் ஏதோ நான் தனித்தமிழ் அன்பனாக மாறி சீரிய திராவிடச்சிந்தனையின் பாதிப்பில் ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்னும் நைந்து போன வசனம் பேசுவதாக நினைக்க வேண்டாம். நான் சொல்லும் வடக்கே என்பது இரு பரிமாணப் பரப்பில் உயருவதைக் குறிக்கும் சொல்லாடலான ‘Going north’ என்பதுதான்!
நான் மட்டுமில்லை. முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சி. ரங்கராஜனும் அப்படித்தான் சொல்லியிருக்கிறார்.
‘இந்த பட்ஜெட் இரண்டு விஷயங்களை முன்னெடுக்க வேண்டும் என நான் எதிர்பார்த்தேன். ஒன்று, பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுவது. இரண்டு, அதற்கான சுமுகமான சூழலை ஏற்படுத்துவது. இரண்டிலுமே இந்த பட்ஜெட் பெரும்பாலும் வெற்றி பெற்றிருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்!’
பட்ஜெட் 2021 கொடுக்கும் எல்லா சங்கேதங்களும், இந்தியா வளர்ச்சிப் பாதையை நோக்கிப் பீடு நடை போடப் போகும் அத்தனை சாத்தியக் கூறுகளையும் காட்டுவதாகவே நான் நினைக்கிறேன். நான் மட்டுமில்லை, நாட்டின் மிகப்பெரும் தொழிலதிபர்களும் பொருளாதார வல்லுநர்களும் பட்ஜெட் பற்றிச் சொன்ன கருத்துக்களும் அதையேதான் பிரதிபலிக்கின்றன.
தீபக் பாரிக் (சேர்மன், ஹெச் டி எஃப் ஸி) ‘இந்த பட்ஜெட் மூன்று தளங்களில் நீண்ட கால இந்திய மேன்மைக்குச் சான்றாகிறது. முதலில் புதிய வரிகள் எதுவும் இல்லை. இரண்டு, இந்தியா அடிப்படையாக வளர வேண்டும் என்னும் தீர்மானம் தொனிக்கிறது. மூன்று, அடிப்படைக் கட்டமைப்புக்காகக் கணிசமான நிதி ஒதுக்கப்பட்டு வெகு நாட்களாக தூங்கிக் கிடக்கும் சீர்திருத்தங்களை முன்னெடுத்திருக்கிறது’ என்று சிலாகிக்கிறார்.
குமார மங்கலம் பிர்லா ‘இந்த பட்ஜெட்டில் இருக்கும் நம்பர்களை விடுங்கள். இதன் மூலம் அரசு தன்னுடைய சீரிய நோக்கமான வளர்ச்சி என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறது. சம்பிரதாய பட்ஜெட் வழக்கங்களிலிருந்து துணிவுடன் விலகி சீர்திருத்தங்களைக் கையில் எடுத்திருக்கிறது’ என்கிறார்.
‘இவர்களெல்லாம் கார்ப்பரேட்டுகள்! என் அடுத்த வீட்டுத் தமிழனுக்கும் சேற்றில் கை வைக்கும் விவசாயிக்கும் இதில் ஒன்றுமில்லை’ என்று அலங்கார அடுக்கு மொழியில் பட்ஜெட்டை விமர்சிப்பவர்களை நாம் புன்னகைத்தவாறே கடந்து போய்விடலாம்.
மேலும் இந்தக் கட்டுரையில் பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் என்றெல்லாம் எல்லாச் செய்தித் தாள்களிலும் வந்துவிட்டதையே திரும்பச் சொல்லப் போவதில்லை. முக்கியமான சில ‘பறவைப்பார்வை’ எண்ணிக்கைகளைப் படமாகக் கொடுத்திருக்கிறேன். மற்றபடி இந்த பட்ஜெட்டினால் இந்தியாவுக்கு ஏற்படப்போகும் தாக்கங்கள் – சாதக பாதக தாக்கங்களைத்தான் பேசப் போகிறேன்.
பட்ஜெட் வெளி வந்த சில நாட்களுக்கு டலால் ஸ்ட்ரீட் என்னும் ஸ்டாக் மார்க்கெட் ஓஹோவெனக் கொண்டாடியிருக்கிறது. நாட்டுப் பொருளாதாரத்தின் நிலையைச் சொல்வதில் இது ஒரு முக்கியமான குறியீடு. கொரோனாவின் இரண்டாவது வருடத்தில் இந்த பட்ஜெட் இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய அளவுகோல்களைத் தொட்டிருக்கிறது. இன்னொரு சிறப்பம்சம் நீண்டகாலப் பொருளாதார முன்னேற்றத்திற்கான விதைகளையும் விதைத்திருக்கிறது. கொள்கை அளவில் அரசுப் பொருளாதாரத்தின் மேம்பாட்டிற்குச் செய்ய வேண்டியதை அறிவித்திருப்பதோடு அதற்கான அஸ்திவாரத்தையும் போட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்.
மூன்று விஷயங்களைக் கவனியுங்கள் – முறைசாரா தொழிலாளர்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பு, நிதித்துறையைப் பலப்படுத்தும் அம்சம், அடிப்படைக் கட்டமைப்புக்கான ஒதுக்கீடு – இவை மூன்றுமே அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் எப்படி வளர்ச்சி அடையவேண்டும் என்ற நோக்கத்தைத் தெளிவுபடுத்துவது மட்டுமன்றி, அதற்கேற்ற செயல்பாட்டையும் தெளிவுபடுத்துகிற பட்ஜெட்டாக இருக்கிறது. பட்ஜெட்டில் வருமான வரியைத் தொடவே இல்லை என்பது, கோவிட் வரி வந்துவிடும் என்னும் பயத்தை போக்கியதோடு அன்றி, ஒரு பாஸிட்டிவ் மனநிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மறைமுகத்தாக்கமாக சாதாரணர்களின் கையில் அதிகப் பணப்புழக்கம் ஏற்பட்டு, மக்களின் வாங்கும் சக்தி பலப்பட்டு, கொரோனா ஓய்ந்து போகும் நிலையில் டிமாண்ட் அதிகரித்து பொருளாதாரத்திற்கு நன்மை செய்யும் என்பது உறுதி.
கோவிட் தாக்கத்திற்கு முன்பான சில வருடங்களில் கூட உலகப் பொருளாதாரமும் இந்தியப் பொருளாதாரமும் சுருங்குவதின் சாயல்களைக் காண்பித்ததை மறக்க முடியாது. கொரோனா தாக்குதலால் இன்னும் பாதிப்புகள் ஏற்பட, பொருளாதாரம் பின்னோக்கி நகர ஆரம்பித்தது. அந்தக் காலகட்டத்தில் ஏற்றுமதியும் குறைந்து போக, இந்தியாவில் நடந்த முதலீடுகளும் குறைந்தன.
இந்த கொரோனா, பொருளாதாரத்திற்கு மூன்று வித அதிர்ச்சிகளை உண்டாக்கியது. நாட்டின் செல்வச்செழிப்புக்கான அதிர்ச்சி, தேவைக்கான அதிர்ச்சி மற்றும் உற்பத்திக்கான அதிர்ச்சி. (Wealth Shock, Demand Shock and Suppky shock). இந்த மாதிரியான பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு (recession) வரும் இந்த பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளை இந்த பட்ஜெட் முழுமையாக நிறைவு செய்திருப்பதாகத்தான் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
சம்பிரதாயமாக எல்லோரும் பட்ஜெட்டின் போது நிதிப் பற்றாக்குறையை எப்படிக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையும் கவலையும் கொள்வார்கள். உலக நிதித்துறை ரேட்டிங் எஜன்ஸிக்கள் நிதிப்பற்றாக்குறை சதவீதத்தை முக்கியமாகக் கொண்டு இந்தியாவை முதலீட்டுப் பாதுகாப்பு இல்லாத நாடு என்று சொல்லக்கூடும். ஆனால் இந்தியப் பொருளாதாரத்தின் இன்றைய நிலைமையை மனதில் கொண்டு நமது நிதி அமைச்சர் மிகச்சரியாக நிதிப் பற்றாக்குறையைப் பற்றி அதிகம் கவலை கொள்ளாமல் செலவினங்களுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார். ஏனென்றால் செலவு செய்யும்போதுதான் தேவையும் உற்பத்தியும் பெருகி வளர்ச்சி உண்டாகின்றது. அதே சமயம் நிதிப் பற்றாக்குறை இந்த நிதி ஆண்டில் 9.8% ஆனாலும் வரும் சில நிதி ஆண்டுகளில் கட்டுப்படுத்தப்பட்டு 4.8%க்கு குறைக்கப்பட்டு விடும் என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறார். இந்தக்கால கட்டத்தில் இந்த அணுகுமுறைதான் மிகச்சரியானது என்று திட்டவட்டமாகச் சொல்லலாம். இதன் மூலம் வேலை வாய்ப்புகள் பெருகி, வருமானத்திற்கு வழி ஏற்பட்டு, தடுமாறிக்கொண்டிருந்த பொருளாதாரம் கணிசமாக முன்னேற பட்ஜெட் உதவும் என்பதில் சந்தேகமில்லை. எனவே வெளி நாட்டு ரேட்டிங் பற்றிப் பயப்படாமல் நமது தேவைக்கேற்ப பட்ஜெட்டைக் கொடுத்திருக்கிறார் நிதியமைச்சர்.
வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க முற்படும் இந்த யுக்தி இந்தியாவின் எதிர்பார்ப்புக்கு முழுவதும் அனுகூலமாக மாறும். அதே நேரத்தில் செலவு என்பது ஒரு குறிக்கோளுடன் இயங்கவும் பட்ஜெட் வழி செய்திருப்பது பாராட்டுக்குரியது. அதாவது கிட்டத்தட்ட ரூ 2.5 லட்சம் கோடிகள் அடிப்படைக் கட்டமைப்புக்கான செலவினங்களாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இது நிச்சயம் எதிர்கால வளர்ச்சிக்கான முதல் அடித்தளமாகும். அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% – நிதி ஆண்டு 2005க்குப் பிறகு மிக அதிகம் இந்த பட்ஜெட்டில்தான்.
ரோடு, மெட்ரோ, ரயிவே மற்றும் நகரக் கட்டமைப்புக்கள் மீது இந்த பட்ஜெட் காட்டியிருக்கும் முனைப்பு அவற்றை நம்பி இருக்கும் 250 தொழில்களுக்கும் நன்மை சேர்க்கும். இந்த முனைப்பினால் கட்டுமானத் தொழிலில் உண்டாகும் பரபரப்பும் செயலாக்கமும், அதில் ஈடுபட்டிருக்கும் ஐந்து கோடி மக்களுக்குப் பல நன்மைகளைக் கொண்டு சேர்க்கும். 13 தொழில் துறைகளில் உற்பத்தி சார்ந்த ஊக்க போனஸ் அறிவிப்பானது உள்நாட்டு உற்பத்திப் பெருக்கத்துக்கும் வேலை வாய்ப்புக்கும் வழி வகுக்கும். வாராக் கடன்களை வைத்துக்கொண்டு விழிபிதுங்கும் வங்கிகளுக்கு உதவியாக அரசு ஏற்படுத்தப்போகும் சொத்து மறு கட்டமைப்பு நிறுவனம் (Asset Reconstruction Company) மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு தொழில் நிறுவனங்களின் நிதி உதவிக்காக ஏற்படுத்தப் போகும் வளர்ச்சி நிதி நிறுவனம் (Development Financial Institution) ஆகிய இரண்டும் இந்தியப் பொருளாதாரத்துக்கு பெரும் ஊக்கமளிக்கும்.
சுகாதாரம் மற்றும் நல் வாழ்வுக்கான ரூ 2.23 லட்சம் கோடி, கோவிட் தடுப்பூசிக்கான ஒதுக்கீடு, அதே போல ஜல் ஜீவன் திட்டத்துக்கான ரூ 50,000 கோடி (நகர்ப்புற நீர் சுத்தத்திற்கான) ஒதுக்கீடும் சென்ற வருட ஒதுக்கீட்டை விட பன்மடங்கு அதிகமானவை, வரவேற்கத்தக்கவையும் கூட. முக்கியமாக, சுகாதார ஒதுக்கீடு, கோவிட்டையும் தாண்டி நாட்டின் பொது நல வாழ்வுக்கான அஸ்திவாரமாக அமையக்கூடும்.
அரசு அறிவித்திருக்கும் தனியார் மயமாக்குதல், முக்கியமாக பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து பங்குகளைத் தனியாருக்குக் கொடுப்பது (disinvestment) என்பது ஒரு தைரியமான முடிவு. இதற்கு எதிர்ப்பு வரும் என்பது தெரிந்தும் அரசு இதை அறிவித்திருப்பது அவர்களின் வளர்ச்சி முனைப்பைக் காட்டுகிறது.
வரும் அடுத்த பத்தாண்டுகள் இந்தியாவுக்கு முக்கியமான காலகட்டம். கொரோனாவிலிருந்து விடுபட்டு வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டிய கட்டம். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்பத்தைப் பெருமளவில் பயன்படுத்தி, வேலை தேடி மாதாமாதம் வெளி வரும் பத்து லட்சம் இளைய சமுதாயத்திற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டால்தான் நமது பாரதத்தின் வாழ்க்கைத் தரம் கணிசமாக உயரும்.
முறை சாரா தொழிலாளர்கள் இந்தியாவின் வேலை வாய்ப்புகளில் 80% இருக்க, அவர்களைக் கணக்கில் கொண்டு போடப்பட்டிருக்கும் இந்த பட்ஜெட், அவர்களது உற்பத்தித் திறனையும் வருவாய்த் திறனையும் நிச்சயம் அதிகரிக்கச் செய்யும். இந்த விஷயத்தில் இந்தியா தொழில்நுட்பத்தை மிகச் சாமர்த்தியமாகப் பயன்படுத்த வேண்டும். இது நாள் வரை பழகி வந்த வேலை முறைகளை மாற்றி அமைக்கச் சிந்திக்க வேண்டும். Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு இன்று வெவ்வேறு விதமாகப் பரவி வருகிறது. அதைச் சரியானபடி பயன்படுத்திக்கொண்டு நாட்டின் ஒருமித்த தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை உயர்த்துவதற்கான வழி முறைகளைக் கையாள வேண்டும்.
திறன் மேம்பாட்டுக்கான (skill development) பயிற்சி முறைகள் புதுமையாக்கப்பட வேண்டும். இந்த பட்ஜெட், திறன் மேம்பாட்டுக்கென தனி முக்கியத்துவம் கொடுத்திருப்பதும் வரவேற்கத்தக்கது.
இந்த பட்ஜெட்டை, நாம் இந்தியாவில் இன்று எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை வெளிப்படையாகப் பறைசாற்றும் ஆவணமாகத்தான் நான் பார்க்கிறேன். கொரோனாவிலிருந்து மீண்டு வரும் நாம் 2030க்குள் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார தேசமாக உயர்ந்தாக வேண்டும். உலகமே இன்று ஒரு அதி முக்கிய வரலாற்றுப் புள்ளியில் (inflection point) இருக்கிறது. நிலவியல் அரசியல் புயல்கள், எங்கும் எதிலும் இணையம் என்னும் தொழில்புரட்சி, அச்சுறுத்தும் காலநிலை மாறுபாடுகள் என்று நாம் சவால்களை எதிர்கொள்ளும் காலகட்டத்தில், கொரோனா வேறு வந்து உலகை ஆட்டிவைத்துவிட்டது. இந்தச் சவால்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான கொள்கை முடிவுகளை இந்த பட்ஜெட் அறிவித்திருக்கிறது. நாடு ஏதோ ஓரிரு வருடங்கள் முன்னேற்றம் காண்பித்தால் போதாது. தொடர் முன்னேற்றம் (Sustainable) என்பது அவசியம்.
பட்ஜெட்டில் சொல்லிய அளவு அரசாங்கம் செலவழிக்கப் போகிறது என்பதால் நிச்சயம் பணப்புழக்கம் அதிகரிக்கும். அதனால் பண வீக்கம் இன்றைய 4 -4.5%லிருந்து மேலும் உயருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு அச்சம் நிலவுகிறது. பண வீக்கம் என்பது வெறுக்கப்பட வேண்டிய ஒன்றில்லை. சொல்லப்போனால் 7-8% வரையிலான பண வீக்கம் பொருளாதாரத்தை செலுத்தக் கூடியதே. அது 10%க்கு மேல் போனால்தான் கவலை கொள்ள வேண்டும். ஆகவே சுமாரான பண வீக்க உயர்வு என்பதும் நல்லதே!
ஒரு சாதாரண இந்தியப் பிரஜைக்கு இந்த பட்ஜெட்டில் என்ன இருக்கிறது?
எழுபத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களின் மொத்த வருமானம் பென்ஷன் மற்றும் வட்டி மட்டும் கொண்டதாக இருந்தால் அவர்கள் வருமான வரி ரிடர்ன் தாக்கல் செய்ய வேண்டியதில்லை.
ப்ராவிடெண்ட் ஃபண்டில் டெபாஸிட் செய்த தொகை ஒரு வருடத்தில் ரூ 2,50,000க்குமேல் போகுமானால் அதன் மீதான வட்டி வருமானத்துக்கு வரிச்சலுகை கிடைக்காது.
மேலும் சில வருமான வரி அலுவலகப் பரிமாற்றங்களையும் ஆன்லைன் மூலமே (நேரில் சந்திப்பு இல்லாமல்) நடத்துவதற்கான மாற்றத்தையும் இந்த பட்ஜெட் கொண்டு வந்துள்ளது.
வரிகளைக் குறைப்பதும் சலுகைகள் அளிப்பது மட்டுமே அன்றி இவையெல்லாமும் சாதாரணப் பிரஜைக்கு நன்மை செய்பவையே.
இந்த பட்ஜெட் தேர்தலுக்குத் தயாராகும் மாநிலங்களுக்கு அதிக சலுகை கொடுத்திருக்கிறதே என்று விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். இதற்கு முந்தைய அரசாங்கங்கள் தேர்தலை மனதில் கொண்டு எதுவுமே செய்ததில்லையா? தேர்தல் சார்ந்த ஜனாயகத்தில் இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை. நல்ல விஷயங்கள் எப்படி நடந்தால் என்ன என்பதே என் நிலைப்பாடு.
சமீப காலமாக, அதுவும் மத்தியில் பிஜேபி பதவிக்கு வந்ததிலிருந்து எந்த நல்ல முயற்சிக்கும் முட்டுக்கட்டை போடுவது என்பது எதிர்க்கட்சிகள் மற்றும் பிஜேபி வெறுப்பாளர்களுக்குப் பிரதான வேலையாய் இருப்பது கவலைக்குரியது. இந்த மத்திய அரசு முன்னெடுத்திருக்கும் சீர்திருத்தங்கள் எவையும் புதியன அல்ல. அவர்களின் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள்தாம். அவற்றைத்தான் ஒவ்வொன்றாய் முனைப்போடு எடுத்துச் செயல்படுத்துகிறார்கள். ஆனால் ஒவ்வொரு சீர்திருத்தத்தின் போதும் நாட்டில் போராட்டத்தைத் தூண்டி விட்டு சகலருக்கும் இடையூறு விளைவிப்பதைப் பார்க்கிறோம். யூனியன்கள் நிச்சயம் இந்தத் தனியார் மயமாக்குதலை எதிர்க்கப் போகின்றன. பல வருடங்களுக்கு முன்பு வங்கிகளில் கம்ப்யூட்டர் கொண்டு வந்தபோதும் இவை எதிர்த்தன. இன்று அந்த எதிர்ப்பு எத்தனை சிறுபிள்ளைத்தனமானது என்பது வெளிப்படை. அதே போல மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த தனியார் மயமாக்குதல்தான் இன்றைய இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். ஆனால் அவருமே சார்ந்த கட்சியின் அழுத்தங்களினால் இன்றைய அரசின் சீர்திருத்தச் சட்டங்களை எதிர்ப்பது வருத்தமான விஷயம்.
நமது நாட்டில் இன்னமும் நாட்டுக்கெதிரான சக்திகள் துரோக வேலை செய்து வருவதை மறுக்க முடியாது. பணமதிப்பிழக்கம், ஜிஎஸ்டி, ஆர்டிக்கிள் 370 விலக்கு, குடியுரிமைச் சட்ட திருத்தம், இதோ இப்போது நடக்கும் வேளாண் சட்ட எதிர்ப்பு எல்லாவற்றிலும் அரசின் செயல்பாடுகளில் ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள் ஏற்படுத்தப்பட்டன. இந்தச் சூழலில் மத்திய அரசாங்கம் அச்சப்பட்டு ஏனோதானோவென்று சர்ச்சைகள் இல்லாத அம்சங்களோடுதான் இந்த வருட பட்ஜெட் வெளி வரும் எனப் பயந்தபோது நமது நிதி அமைச்சர் அது பற்றியெல்லாம் கவலையின்றி மிகத்துணிவாக வளர்ச்சிக்கான பட்ஜெட்டைக் கொண்டு வந்திருப்பது ஒருசேர எல்லோராலும் பாராட்டப்படுகிறது.
கூர்மையாக இந்த பட்ஜெட்டை அலசினால் ஐந்து உட்கருத்துக்கள் வெளிப்படும்:
- நிதி விரிவாக்கம் (Fiscal Expansion)
- கட்டுமான விரிவாக்கம் (Infrastructure expansion)
- வெளி உலக விமர்சனத்துக்கு அஞ்சாமை (Wary of Foreign Rating Agencies)
- தனியார் மயமாக்குதல் (Privatization)
- சுகாதாரப் பராமரிப்பு (Healthcare Spending)
இந்தத் தூண்களின் மேல் கட்டமைக்கப்பட்ட திட்டங்கள் அபாரமானவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் திட்டங்கள் செயலாற்றப்பட வேண்டும் என்பது திட்டம் இடுவதை விட முக்கியமானது. எனவே இன்றைய சூழலில் மேலே சொன்னமாதிரி பல தீய சக்திகள் இந்த பட்ஜெட்டின் செயலாக்கத்திலும் மூக்கை நுழைத்துப் பலவிதமான தடைகளை ஏற்படுத்த முற்படும். அடுத்த போராட்டம் தனியார் மயமாக்குதலை எதிர்த்து இருக்கும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
இதையெல்லாம், உறுதியான கொள்கைப்பிடிப்பும் அபார தைரியமும் கொண்ட நமது பிரதமரும் அவரது கட்சியும் நிச்சயம் வெற்றிகரமாக எதிர்கொள்ளும். ஆனால் அதிகாரிகள் மையத்தில் இந்தத் திட்டங்களைச் செயலாற்றுவதில் மெத்தனமோ அல்லது பண மதிப்பிழப்பின்போது நடந்தது போல முறையற்ற சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தால் கறுப்பு ஆடுகளை சரியான முறையில் கண்டுபிடித்துக் களையெடுக்க வேண்டும்.
அபார பட்ஜெட்டின் மூலம் தொலைநோக்குள்ள நீண்ட காலப் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுத்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டுக்குரியவரே! இந்த பட்ஜெட்டின் திட்டங்களைச் செயலாக்க வேண்டும் என்பது நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும். நிதி அமைச்சரும் மற்ற மேலதிகாரிகளும் செயலாக்கத்தில் சுணக்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அந்தத் தலைநகர மலைமந்திர் முருகனை வேண்டிக்கொள்கிறேன்.
ஆதாரங்கள்:
- The Times of India, dated 2nd February 2021
- The Hindu dated 2d February 2021
- https://economictimes.indiatimes.com/news/economy/policy/budget-2021-fm-breaks-taboos-puts-economy-on-turbo-charge/articleshow/80639536.cms?fbclid=IwAR2IhrRzjywHb6Z10xl5sJvWD8HbHIsEzMO3ZJdSmpW5S2Z-QhczZCRKc7w
- https://timesofindia.indiatimes.com/business/india-business/budget
- The Times of India dated 5 February 2021 – A Budget for Growth by N. Chandrasekaran