Posted on Leave a comment

லும்பன் பக்கங்கள் – 4 | அரவிந்தன் நீலகண்டன்

மறைக்கப்படும் உண்மைகள்

பிப்ரவரி 2021 இல் ‘தாஸ்குப்தா ரிவ்யூ’ என்கிற முக்கியமான அறிக்கையை இங்கிலாந்து அரசு வெளியிட்டது. பயோடைவர்ஸிட்டி என்கிற உயிரினப்பன்மையின் பொருளாதார முக்கியத்துவம் குறித்த மிகவும் விவரங்கள் நிறைந்த அறிக்கை.

610 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை ‘https://assets.publishing.service.gov.uk/’ என்கிற இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் 369ம் பக்கத்தில் ஒரு அடிக்குறிப்பு. 2016ல் பீட்டர் அலெக்ஸாண்டர் என்கிற அறிவியலாளரும் அவரது அணியும் ஆராய்ந்து எட்டிய ஒரு ஆராய்ச்சி முடிவை அது சொல்கிறது.

விவசாயம், கால்நடைப் பராமரிப்பு என்பதெல்லாம் உணவு உற்பத்திக்காக. இந்தச் செயல்பாடுகள் எல்லாம் கட்டாயமாக நிலத்தைப் பயன்படுத்தியாக வேண்டும். இதன் அடிப்படையில் ஒரு தரக்குறியீடு (indicator) உருவாக்கப்படுகிறது. அதன் பெயர் HALF – அதாவது Human Appropriation of Land for Food – உணவு உற்பத்திக்காக மனிதர்களால் கைக்கொள்ளப்படும் நிலம். ஒவ்வொரு பண்பாட்டின் உணவுப் பழக்க முறையை உலகம் முழுவதும் ஏற்றெடுத்தால் எவ்வளவு நிலம் தேவைப்படும் எனக் கணக்கிடுகிறார்கள்.

வடஅமெரிக்க உணவுப் பழக்க முறை மாட்டிறைச்சியும் பர்க்கரும் பீட்ஸாவும் கொக்ககோலாவுமென ஒருபுறம். மற்றொரு புறமோ புலால் உணவைக் கட்டுப்படுத்தி அங்காங்கே கிடைக்கும் காய்கறிகள் ஆகியவற்றையே முதன்மையாகக் கொண்ட பாரத உணவு பழக்க முறை. அமெரிக்க உணவு முறை உலகம் முழுவதும் பரவினால் உணவுக்காக இன்று நாம் கை கொண்டிருக்கும் நிலத்தைக் காட்டிலும் 178 சதவிகிதம் அதிக நிலத்தை நாம் கையகப்படுத்த வேண்டும். ஆனால் பாரதிய உணவு முறையை உலகம் முழுவதும் கை கொண்டதென்றால் இன்றைக்கு நாம் உணவு உற்பத்திக்கு உலகம் முழுவதும் பயன்படுத்தும் நிலத்திற்கும் குறைவாக 55 சதவிகிதமே தேவைப்படும்.

சிறிது யோசித்துப்பாருங்கள்.

இந்த ஆராய்ச்சி முடிவு வந்தது 2016ல். அப்போதுதான் நம் ஊர் முற்போக்குகள் மாட்டிறைச்சி பிரியாணி திருவிழாக்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். மிக நுண்ணிய விதத்தில் அமெரிக்க உணவுக் கலாசாரத்தை பாரதத்தில் திணிக்கும் முயற்சி இது. எப்படி நீருக்கு விலை இல்லை என்பதை இல்லாமல் ஆக்கி பாட்டில் நீரைப் பரவ வைத்தார்களோ அதே போல. இன்னும் சொன்னால் பாரத மக்களனைவரையும் மாட்டிறைச்சிக்குப் பழக்க, பாட்டில் நீருக்குப் பழக்கியதைவிட அதிக அழுத்தம் தேவை. எனவே மாட்டிறைச்சி சாப்பிடுவதுதான் முற்போக்கு என்கிற ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள். ஆனால் அதே வேளையில் அறிவியல் ஆராய்ச்சி, சுற்றுப்புற சூழலியலுக்கு முக்கியத்துவம் கொண்ட ஆராய்ச்சி, பாரத உணவு முறை உலகை நில நெருக்கடியிலிருந்து காப்பாற்றும் தீர்வை தன்னுள் கொண்டிருக்கிறது என்பதை சொல்லுகிறது.

இதை இங்கே ஒரு ஊடகமும் பேசவில்லை என்பதுதான் வேதனை. ஆச்சரியமல்ல வேதனை.

மற்றொரு விஷயத்தையும் சொல்ல வேண்டியிருக்கிறது.

1970களின் தொடக்கம். அப்போதெல்லாம் ஹிப்பிகள் பலர் ஞானம் தேடி இந்தியாவுக்கு வந்தபடி இருந்த காலம். அதில் ஒருவர் லாரி பிரில்லியண்டும் அவரது மனைவியும். லாரி மருத்துவ படிப்பை முடித்த புத்தம் புது மாணவர். ஆனால் அவருக்கு அப்போதிருந்த அமெரிக்க சூழலின் கொந்தளிப்பு இந்தியாவுக்குத் தள்ளியிருந்தது.

இந்தியாவில் அவர் மருத்துவராக வரவில்லை. ஹிப்பியாக வந்திருந்தார்.

லாரி பிரில்லியண்ட் யூத மதத்தினர். அவருக்கு இந்துப் பண்பாட்டை பொருத்தவரை மனத்தடைகள் இருந்தன. விக்கிரக வழிபாடு, குருவின் காலில் வீழ்வது என. எனவே எந்த குருவையும் அவர் சந்தேகத்துடன்தான் பார்த்து வந்தார். ஆனால் அவரது மனைவி நீம்கரோலி பாபாவின் சிஷ்யை ஆகிவிட்டார். பிரில்லியண்டுக்கோ ஐயப்பாடு. நீம் கரோலி பாபாவை விட்டு கிளம்புவதென்று முடிவு செய்தார். இது நமக்குச் சரிபட்டு வராது. இதனை முந்தைய நாள் ஏரிக்கரையில் நின்றபடி முடிவு செய்கிறார் லாரி பிரில்லியண்ட், அதே நேரம் அவர் இறைவனிடம் கேட்கிறார், ‘எனக்கொரு வழியைக் காட்டு’.

மறுநாள் நீம் கரோலி பாபாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்ப பிரில்லியண்ட் காத்திருக்கிறார்.

பிறகு நடந்தது ஏதோ இந்திய பக்தித் திரைப்படத்தில் உள்ள நிகழ்ச்சியை ஒத்தது.

நீம் கரோலி பாபா ஹனுமான் பக்தர். அவர் இன்னும் வரவில்லை. அவர் அமரும் இடத்திற்கு முன்னால் பூக்களாலும் பழங்களாலும் ஸ்ரீ ராம் எனும் நாமத்தை உருவாக்கி வைத்திருந்தனர் பக்தர்கள். அதில் ஒரு பழம் கீழே விழுந்துவிடவே நாமம் முழுமையடையாமல் தோன்றியது லாரி பிரில்லியண்டுக்கு.

கீழே விழுந்திருந்த அந்தப் பழத்தை எடுத்து வைத்து ராம நாமத்தை பூர்த்தி செய்ய போனார் லாரி. அதே நேரத்தில் அங்கே தோன்றினார் பாபா. லாரியின் கையின் மீது பதிந்தது பாபாவின் பாதம். லாரியிடம் கேட்டார் பாபா, ‘நேற்று ஏரிக்கரையில் நீ இறைவனுடன் பேசிக்கொண்டிருந்தாயா?’ லாரிக்குச் சிலிர்த்தது. ‘ஆண்டவனிடம் ஏதாவது ஒரு குறிப்பைக் காட்ட கேட்டாயா?’

தன் ஆழ்மனத்தை ஊடுருவிப் பார்க்கும் இறைவனின் பார்வையாக இருந்தது பாபாவின் பார்வை. லாரி பிரில்லியண்ட் இந்தியாவில் தங்கிவிட்டார். டாக்டர் அமெரிக்கா என்று அவரை அழைப்பார் பாபா.

அப்போது இந்தியாவில் பெரியம்மைக்கு எதிராக தடுப்பூசிப் போர் நடந்து கொண்டிருந்தது. பெரியம்மை நோய்ப் போராட்டத்தில் ஒரு வீரராகக் கலந்து கொள் என்று சிஷ்யனுக்கு ஆணையிட்டார் குரு.

டாக்டர் தொழிலையெல்லாம் மருத்துவப் படிப்பையெல்லாம் கை கழுவி ஹிப்பியாக இருந்த லாரி பிரில்லியண்ட் பாபாவின் ஆணையால் உலக சுகாதார குழுவின் பெரியம்மை எதிர்ப்புப் போரில் இணைந்தார். கடும் உழைப்பு. 1973ல் பாபா சமாதியானார். ஆனால் களத்தில் போராடிய பிரில்லியண்ட் பாபாவின் அருளைக் கண்கூடாகக் கண்டார். தம்மை வழிநடத்துவதாக உணர்ந்தார்.

பிரில்லியண்ட்டை பெரியம்மைக்கு எதிரான போரில் செல்ல பாபா வழிநடத்திய போது அவருக்கு அளித்த பெயர் சுப்ரமணியன்.

இது ஆழ்ந்த பொருளுடையது. மகாபாரதத்தில் சுப்ரமணியக் கடவுள் குழந்தைகளுக்கான நோய்களைத் தீர்ப்பவன். குழந்தைகளைப் பீடிக்கும் நோய்களுக்கு முருகனான சுப்ரமணியனையே வணங்குவர். இப்போரில் வெற்றி பெறுவாய் என சொன்ன பாபா இதையும் சொன்னார். இந்நோய்க்கு எதிரான இறுதி வெற்றிக்குப் பின்னர் தமிழ்நாட்டில் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் புண்ணிய தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும்.

பாரத பெரும் நிலபரப்பில் பெரியம்மை நோய்க்கு ஆளான கடைசி சிறுமி ரஹீமா பானு. அப்பெண்மணி குணப்படுத்தப்பட்ட போது பெரியம்மை என்பதே இப்பூமியில் கடந்த கால நோயாகிவிட்டது. நீ இந்த பெரும் தொற்றை வென்று அதனை விரட்டுவாய், நிர்மூலமாக்குவாய் என்று பாபா சொல்லியிருந்தது சத்தியமாயிற்று. பாபாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தமிழ்நாட்டின் அறுபடை வீடுகளுக்கும் தீர்த்தயாத்திரை செய்தனர் பிரில்லியண்ட்-கிரிஜா தம்பதியினர்.

இவற்றையெல்லாம் ஒரு சுயசரிதை நூலாக்கியிருக்கிறார் லாரி பிரில்லியண்ட். இன்று அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து உலகில் தடுக்கப்பட முடிந்த குருட்டுத்தன்மையை எதிர்த்து உலகளாவிய ஒருங்கிணைந்த சேவை அமைப்பொன்றை நடத்துகிறார். அதற்கு பெயரே சேவா என்பதுதான்.

இந்த சுயசரிதை நூலும் 2016ல்தான் வெளிவந்தது.

ஆனால் அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தவில்லை. மேற்கிலும் இங்கும்.

அதேசமயம் இதே நூல் இந்தியப் பண்பாட்டை இகழ்ந்து மேற்கத்திய மதிப்பீடுகளைப் புகழ்ந்து இந்தியாவில் பெரியம்மையை எதிர்த்துப் போராடிய ஒரு கிறிஸ்தவ மிஷினரியைக் குறித்ததாக இருக்கும் பட்சத்தில் லாரி பிரில்லியண்ட் ஒவ்வொரு இலக்கிய விழாவுக்கும் அழைக்கப்பட்டிருப்பார். இந்தியாவின் அனைத்து மொழி பதிப்பகங்களாலும் மொழி பெயர்க்கப்பட்டிருப்பார், கொண்டாடியிருப்பார்கள்.

லாரி பிரில்லியண்ட் தாம் இந்நூலை எழுதியிருந்தாலும் பெரியம்மைக்கு எதிராகக் களத்தில் இறங்கி போராடிய, பெரும் தியாக உணர்வும் அர்ப்பணிப்பும் கொண்ட பல்லாயிரக்கணக்கான களப்பணியாளர்களுள் ஒருவராகவே தன்னை முன்னுறுத்துகிறார். இந்தப் பல்லாயிரம் பணியாளர்கள் இந்திய டாக்டர்கள் செவிலியர் இவர்களெல்லாம் வீர நாயகர்கள். ஆனால் இவர்களெல்லாம் மதிக்கப்படுவதில்லை என்பதில் அவருக்கு மன வருத்தம் உள்ளது.

சிந்தித்துப்பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

காலனிய ஆதிக்கத்தின், நவீனத்துவத்தின் பிரதிநிதிகளை வைத்து அவர்கள் கிராமங்களுக்குள் வருவதைக் குறித்து, வன அலுவலர், போஸ்ட் மேன், பள்ளி ஆசிரியர் எனப் பல இலக்கியப் படைப்புகள் வந்துள்ளன. ஆனால் பெரியம்மையைப் போராடிய களப்பணியாளர்கள் குறித்து ஒரு படைப்பேனும் வந்துள்ளதா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

ஏன் இந்த நூலே கூட புறக்கணிக்கத்தான் பட்டுள்ளது.

ஆனால் பாரதப் பண்பாட்டின் அழகு இதுதான். அது அமைதியாக இயங்குகிறது. ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. என்னை பார், என் கருணா விநோதத்தைப் பார், என் மதத்தில் சேரு என்று தம்பட்டம் அடிப்பதில்லை. மாறாக அதைப் போல மானுட முன்னேற்றத்தை சாத்தியமாக்கிய பிறிதொரு பண்பாடு இல்லை என்றே சொல்லிவிடலாம்.

இதுதான் இந்தப் பண்பாட்டின் பெரும் சிறப்பு. சில சமயங்களில் அந்த வெளிச்சொல்லா தன்மை பலவீனமோ என்று கூட நமக்கு தோன்றும்.

– இந்துத்துவ லும்பன்

Leave a Reply