கர்ணனை அணுகுதல்
அர்ஜுனனுடனான இறுதிப் போரின்போது, கர்ணனுடைய தேர்ச்சக்கரம் பூமியில் அமிழத் தொடங்கியதும், ‘நான் இந்தத் தேர்ச்சக்கரத்தைத் தூக்கும் வரையில் என்மீது அம்பு தொடுக்காமல் இரு என்று உன்னை தர்மத்தின் பேரால் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கர்ணன் சொன்னதும், அர்ஜுனனுடைய தேர்ச்சாரதியான கண்ணன், ‘உனக்கு இப்போதாவது தர்மத்தின் மீது நினைவு வந்ததே’ என்று சொல்லிவிட்டு, கர்ணன், பாண்டவர்களுக்குச் செய்த தீங்குகளைப் பட்டியலிட்டு ‘அப்போதெல்லாம் உன் தர்மம் எங்கே போனது’ என்று அவனை நோக்கிப் பதினோரு கேள்விகள் எழுப்பியதைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.
இவற்றில் நான்காவது கேள்வியான, காடுகளுக்குள் நாடுகடத்தப்பட்ட காலமும், {மறைந்து வாழ வேண்டிய} பதிமூன்றாவது வருடமும் கழிந்த பிறகும், பாண்டவர்களுக்கு அவர்களது அரசை நீங்கள் கொடுக்காதபோது, உனது அறம் எங்கே சென்றது?’ என்று கண்ணன் கர்ணனைப் பார்த்துக் கேட்டதன் பின்புலத்தை விவரித்தோம். இந்தக் குற்றச்சாட்டில் கர்ணனைவிட துரியோதனனுக்கே அதிகப் பொறுப்பும் நேரடித் தொடர்பும் இருந்தாலும் (‘ஊசிமுனையளவு நிலமும் தரமுடியாது’ என்று மறுத்தவன் துரியோதனன்தான் என்றாலும்) கர்ணனுக்கும் அதில் பங்கு இருந்தது என்பதை நினைவூட்டும் விதமாகத்தான் கண்ணபெருமான் அதை நினைவூட்டினான். இப்போது கண்ணனுடைய குற்றச்சாட்டுகளில் ஐந்தாவதை எடுத்துக்கொள்வோம்:
- உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களை எரித்துக் கொல்வதற்காக வாரணாவதத்தின் அரக்கு வீட்டுக்கு நீங்கள் நெருப்பிட்டீர்களே, ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அப்போது, உனது அறம் எங்கே சென்றது?
இது, நம்மில் பலருக்குக் குழப்பத்தைத் தரலாம். ஏனெனில், கர்ணன் முதன்முதலாகத் தோன்றுவது, துரோணருடைய சீடர்களுக்கு நடத்தப்பட்ட ஆட்டக்களத்தில்தான் என்று கர்ணன் திரைப்படமும், பல தொலைகாட்சித் தொடர்களும் காட்டுகின்றன. கண்ணனுடைய மேற்படிக் குற்றச்சாட்டோ அரக்குமாளிகை தொடர்பானது. இதில் கர்ணன் எப்படி சம்பந்தப்படுகிறான் என்ற கேள்வி பலருக்கும் எழுவது இயல்பே. அப்படியானால் கர்ணனை துரியோதனன் எப்போதிலிருந்து அறிந்திருந்தான், இருவரும் எப்போதிலிருந்து அறிமுகமானார்கள், நட்புப் பூண்டார்கள் என்ற விவரத்தையும் பார்க்கவேண்டும் அல்லவா? அதை முதலில் எடுத்துக்கொள்வோம்.
கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் இடையில் எப்போது நட்பு உண்டானது, அவர்கள் வாழ்வின் எந்தக் கட்டத்தில் சந்தித்தார்கள் என்ற கேள்விக்கு விடை காணவேண்டுமென்றால், யுத்தமெல்லாம் முடிந்து ஸௌப்திக பர்வத்தையும் அதையடுத்து வரும் ஸ்த்ரீ பர்வத்தையும் தாண்டி, சாந்தி பர்வத்தின் ஆரம்பக் கட்டத்துக்கு வரவேண்டும். அங்கேதான் தர்மபுத்திரர், நாரதரைப் பார்த்து, கர்ணனுடைய தேர்ச் சக்கரத்தை பூமி விழுங்கியது எப்படி — அதாவது அந்தச் சக்கரம் நிலத்தில் புதையுண்டது எப்படி — என்ன காரணத்தால் என்றெல்லாம் கேட்கும்போது அவர் சொல்லி வரும் விடையில் இந்த கர்ணன்-துரியோதனன் நட்பு தொடங்கிய காலத்தைப் பற்றிய குறிப்பு வருகிறது.
‘ஓ மஹா பாஹுவான பாரதனே! நீ சொல்லுகிறது சரிதான். கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் யுத்தத்தில் ஜயிக்க முடியாதது ஒன்றும் இராது. ஓ அரசனே! ஆனால், தேவ ரஹஸ்யமான இதனை உனக்குச் சொல்லுகிறேன். ஓ புஜபலமுள்ளவனே! முன்பு இஃது எப்படி நடந்தது என்பதைத் தெரிந்துகொள். ஓ பிரபுவே! க்ஷத்திரிய ஜாதியானது ஆயுதங்களால் பரிசுத்தியடைந்து எவ்விதம் ஸ்வர்க்கத்தையடையுமென்று ஆலோசித்து அந்தக் காரணத்திற்காகக் கன்னிகையாகிய குந்தியினிடத்தினில், வைரத்தை உண்டுபண்ணத்தக்க கர்ப்பமானது உண்டுபண்ணப்பட்டது. அந்தக் கர்ப்பத்தில் உண்டான குழந்தையானவன் பராக்ரமத்துடன் கூடியவனாகவும் ஸாரதிக்குப் பிள்ளையாகவும் ஆனான். ஆங்கிரஸ குலத்தவருள் சிறந்தவரும் உன்னுடைய குருவுமான துரோணரிடத்தில் தனுர்வேதத்தை அப்யாஸம் செய்தான். ஓ ராஜஸ்ரேஷ்டனே! அவன் பீமஸேனனுடைய பலத்தையும் அர்ஜுனனுடைய அஸ்திர சாமர்த்தியத்தையும் உன்னுடைய புத்தியையும் அப்படியே நகுலஸஹதேவர்களுடைய விநயத்தையும் காண்டீவமென்னும் வில்லையுடைய அர்ஜுனனுக்கு இளமைப் பருவத்திலேயே கிருஷ்ணனோடு உண்டான ஸ்நேஹத்தையும் பிரஜைகளுடைய அன்புடைமையையும் சிந்தித்து, மிகவும் தாபமடைந்தான். அவன் ஸ்வபாவத்தாலும் தேவர்களின் ஸங்கல்பத்தாலும் உங்களோடு எப்போதும் பகையுள்ளவனாகிய அரசனான துரியோதனனோடு இளமையில் ஸ்நேஹத்தை அடைந்தான். (ஸ்ரீ மஹாபாரத பர்வங்கள், தொகுதி ஏழு, சாந்தி பர்வம், அத்தியாயம் 2, பக்கம் 6)
அதாவது, கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் இடையில் மிகச் சிறிய வயதிலேயே நட்பு ஏற்பட்டது. கர்ணனுக்கு தர்மபுத்திரனுடைய அறிவையும் பீமனுடைய வலிமையையும், அர்ஜுனனுக்கும் கிருஷ்ணனுக்கும் இளமைப் பருவத்திலேயே உண்டான நட்பையும் அவனுடைய அஸ்திரப் பயிற்சியையும், நகுல சகதேவர்களுக்கு இருந்த வினயத்தையும் பார்த்துப் பொறாமை ஏற்பட்டது. அவனுக்கு இயற்கையிலேயே அமைந்திருந்த குணங்களாலும் தேவர்களுடைய நிச்சயத்தாலும் துரியோதனனுடன் நட்பு ஏற்பட்டது என்பது மேற்படிப் பகுதியால் விளங்குகிறது.
இந்த நட்பே சற்று விசித்திரமானது. ஏனெனில், கர்ணன் தர்மபுத்திரனைவிட 16 வயது பெரியவன். துரியோதனனோ தருமனுக்கு ஓராண்டு இளைய பீமனைவிட ஒருநாள் சிறியவன். துரியோதனனுக்கும் கர்ணனுக்கும் இடையில் 17 வயது வித்தியாசம் இருக்கிறது. (இதையெல்லாம் எங்கேயிருந்து எடுத்தாய் என்று கேட்பீர்களானால், பத்து-பன்னிரண்டாயிரம் பக்கங்கள் உள்ள முழு மஹாபாரதத்தை ராஜாஜியின் வியாசர் விருந்து தொடங்கி பல்வேறு பதிப்புகளை சுமார் ஐம்பதாண்டுகளுக்கு மேல் திரும்பத் திரும்பப் படித்து வரும் பயிற்சியிலிருந்து என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.) இந்த வயதுக் கணக்கு விரங்களையெல்லாம் டாக்டர் கே என் எஸ் பட்நாயக் Mahabharat Chronology என்ற தலைப்பில் பாரதத்தில் சொல்லப்படும் நாள், திதி, நட்சத்திரங்களின் அடிப்படையில் தொகுத்திருக்கிறார். இது இணையத்தில் இந்த இடத்தில் கிடைக்கிறது: https://hindunet.org/hindu_history/ancient/mahabharat/mahab_patnaik.html யாரும் பார்த்துக்கொள்ளலாம்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, வனபர்வம், குண்டலாஹரண பர்வத்தில் பின்வரும் முக்கியமான வாக்கியம் வருகிறது. ‘இந்த ஸமயத்திலேயே, திருதராஷ்டிரனுக்கு நண்பனான அதிரதனென்கின்ற ஸூதன் மனைவியுடன் கங்கைக்குச் சென்றான்’ (வனபர்வம், குண்டலாஹரண பர்வம், அத்.310, பக்.1140).
அதாவது, ஹஸ்தினாபுரத்துக்குத் தன் 16வது வயதில் வந்து சேர்ந்த பாண்டவர்களுக்கு துரோணர் தனுர்வேதப் பயிற்சி அளிப்பதை அறிந்த அதிரதன் என்னும் கர்ணனுடைய வளர்ப்புத் தந்தை, திருதராஷ்டிரனுக்கு நண்பனாய் இருந்த காரணத்தால், துரோணரிடத்தில் ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக அனுப்பி வைத்தான் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். துரியோதனனைவிட 17 வயது பெரியவனான கர்ணனுக்கு, துரியோதனனிடத்தில் எப்படி நட்பு ஏற்பட்டது என்பதற்கு இது விளக்கமாக இருக்கலாம்.
மேற்படி கும்பகோணம் பதிப்பு சொல்வதை, கிஸாரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு எப்படிச் சொல்கிறது, அதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் அருட்செல்வப் பேரரசனுடைய மொழிபெயர்ப்பு எப்படிச் சொல்கிறது என்றெல்லாம் விவரிக்க முடியும்தான். ஆனாலும், சுருக்கம் கருதி இந்த இடத்தை BORIயின் ஸமஸ்கிருத மூலத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் பிபேக் தேப்ராய் இந்தப் பகுதியை ஆங்கிலத்தில் எப்படி மொழிபெயர்த்திருக்கிறார் என்பதைச் சொல்கிறேன்:
‘‘O mighty-armed one! O descendant of the Bharata lineage! It is exactly as you have said. There is nothing that could have stood against Karna and Arjuna in a battle. O king! What I am about to tell you is unknown to even the gods. O great king! O lord! Therefore, listen to what happened in earlier times, about how the kshatriyas would be cleansed by weapons and would go to heaven. To engender that dissension, he was created in a virgin womb. He was energetic as a child and came to be known as the son of a suta. He went to the best of the Angirasa lineage, your preceptor,9 to learn about the science of war.10
O Indra among kings! He thought of Bhima’s strength, Phalguna’s dexterity, your intelligence, the humility of the twins, the friendship that the wielder of Gandiva has had with Vasudeva since childhood and the devotion of the subjects and was tormented. From childhood, he formed a friendship with King Duryodhana. This is because of the enmity he always bore towards you and natural destiny. He saw that Dhananjaya was superior to everyone in learning about dhanurveda.
Debroy Bibek. The Mahabharata. Penguin Books Ltd. Kindle Edition. Volume 8.
துரோணர் தன்னுடைய மாணவர்களுக்காக அமைத்த ஆட்டக் களத்தில் பிரவேசித்த கர்ணனுக்கு துரியோதனன் அங்க தேசத்துக்கு மன்னனாக முடி சூட்டியது ஏதோ தற்செயல் நிகழ்ச்சியன்று. (இடையில் ஒன்று. துரியோதனன் கர்ணனுக்கு முடிசூட்டிய விவரத்தை நமது நாலாவது தவணையான ‘அரசன் கர்ணனும் கூட்டு அனுமதியும்’ என்ற தலைப்பில் வெளியானதையும் இங்கே சேர்த்துப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.) குந்தி அஸ்வ நதியில் குழந்தைக் கர்ணனை வைத்து மிதக்கவிட்ட பெட்டி அந்த நதி அங்கிருந்து சர்மண்வதி என்ற நதியோடு கலந்ததும், அந்த நதி யமுனையில் கலந்ததும், அங்கிருந்து நதியில் மிதந்துசென்ற அந்தப் பெட்டி கங்கையோடு கலந்ததும், அதன்பின்னர், ‘ஸூதனால் ஆளப்படுகின்ற சம்பா நதியின் ஸமீபம்’ சென்றதும் மிகமிக விவரமாகச் சொல்லப்படுகின்றன. இதையெல்லாம் வனபர்வம் குண்டலாஹரண பர்வத்தில் பார்க்கலாம்.
இப்படி சம்பா நதி பாய்ந்த, ஸூதனால் ஆளப்பட்ட நாடுதான் அங்கதேசம். அந்த நாட்டில்தான் அதிரதன் வசித்து வந்தான். அங்கிருந்துதான் கர்ணன் அஸ்தினாபுரத்துக்கு வந்து துரோணரிடத்தில் பயின்றான். அந்த அங்க தேசத்துக்குத்தான் துரியோதனன் அவனை மன்னனாக்கினான் என்ற மிக நீண்ட விவரத்தை அலசிப் பார்த்தால், ‘ஏதோ முன்பின் தெரியாத ஒருவனை ‘உன் தகப்பனார் பெயர் என்ன’ என்ற கேள்வி அவமதித்துவிட்டதால் அவனை அந்த இடத்திலேயே அரசனாக்குகிறேன் என்று துரியோதனன் செய்த காரியமன்று அது. ‘இவன் அங்க தேசத்தைச் சேர்ந்தவன்’ என்று தெரிந்தே ஆக்கிய ஒன்றுதான்.
கர்ணனைப் பற்றிய செய்திகளை ஓரளவுக்கு முடித்துவிட்டு, அரக்கு மாளிகையில் குந்தியையும் பாண்டவர்களையும் எரித்ததையும் (அல்லது எரிக்க முயன்றதையும்), கர்ணன் பிறப்பையும், அவனைக் குந்தி அஸ்வ நதியில் விடுவதற்கு முன்னால் எப்படிப்பட்ட முன்னெச்செரிக்கைகளை எடுத்துகொண்டாள்; அந்தப் பெட்டி முழுகிவிடாமல் இருக்க என்னென்னவற்றைச் செய்தாள், அதற்குள் நீர் புகுந்துவிடாமல் இருக்க எப்படி தேன் மெழுகைக் கொண்டு அதன் உட்புறங்களைப் பூசச் செய்தாள், அந்தக் குழந்தையை நீரில் விடும்போது எப்படியெல்லாம் அழுதாள், ஆசிர்வதித்தாள் என்பதெல்லாம் தெரிந்தால்தான் குந்தியைப் பற்றிப் பேசப்படும் அவதூறுகளுக்கு விளக்கம் கொடுக்க முடியும். இவற்றையெல்லாம் இதைத் தொடர்ந்து எழுதுகிறேன்.
இப்போது, பாண்டவர்களை அரக்கு மாளிகையில் எரித்ததில் கர்ணனுடைய பங்கு என்ன, கிருஷ்ணன் ஏன் அவன் மீது அப்படியொரு குற்றச்சாட்டை வைத்தான் என்னும் விவரத்துக்குத் திரும்புவோம். அதை அடுத்த இதழில் தொடர்கிறேன்.