Posted on Leave a comment

கேடில் விழுச்செல்வம் கல்வி | கோ.எ. பச்சையப்பன்

(புதிய கல்விக்கொள்கை வரமா சாபமா – நூலை முன்வைத்து)

(விலை ரூ 175, கிழக்கு பதிப்பகம்)

1834ம் ஆண்டு வெள்ளையரின் விதேசிகளின் ஆட்சி பாரதத்தில் வேர்பிடிக்கத் தொடங்கிய தருணம்! குடும்பத் தொழில் நொடித்துப் போனதால் ஏற்பட்ட பொருளிழப்பை ஈடுகட்ட ‘சூரியன் அஸ்தமிக்காத’ இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வந்தார் ஒருவர். தகிக்கும் வெயிலிலிருந்து தற்காலிகமாகத் தப்பிக்க ஆங்கிலேயர்கள் அப்போது(ம்) கோடைவாசஸ்தலமாகக் கருதிய ஊட்டிக்குச் சென்னையிலிருந்து பயணமானார். நான்கு ‘கூலிகள்’ டோலி கட்டி பதினோரு நாட்கள் மேற்படி கனவானைச் சுமந்துகொண்டு ஊட்டிக்குக் கொண்டு சேர்த்தனர். தமக்கு முன்னரே அங்கே தங்கியிருந்த வில்லியம் பெண்டிங் உள்ளிட்ட நால்வருடன் இணைந்துகொண்ட அந்த ‘போலிப் பயணி’ வடிவமைத்ததுதான் ‘இந்தியத் தண்டனைச் சட்டம்’.

சட்டவடிவம் உருவாகும்போதே தமது ஆட்சிக்குத் தேவையான ‘குமாஸ்தாக்களை’ உருவாக்க அம்மனிதர் இந்தியாவிற்காக அன்றி தமது மாட்சிமை தங்கிய மகாராணி ஆட்சி நிலைகொள்ள கல்விக் கொள்கைகையும் உருவாக்கினார்.

நான்கு இந்தியர்களால் 11 நாள்கள் 400 கி.மீ. சுமந்து செல்லப்பட்ட அம்மனிதர்தான் ‘மெக்காலே’! தண்டனைச் சட்ட உருவாக்கத்தில் பங்காற்றியவர் தயாரித்து அளித்ததுதான் கல்விக்கொள்கை என்பது பல புரிதல்களை அளிக்கக்கூடும்.

பிறப்பால் இந்தியராகவும், சிந்தனையால் ஆங்கிலேயராகவும் வாழ்ந்த / வாழும் நூலாசிரியர்கள் ‘புனைந்த’ வரலாறுகள், வெள்ளையர்கள்தாம் நம்மைக் கல்விக்கு ஆற்றுப்படுத்தினர் என்ற சித்திரத்தை அளிக்கின்றன.

ஆனால், வாதாபியை தகனம் செய்ததன் மூலம் சிவகாமியின் சபதத்தை நிறைவேற்றிய மாமல்லன் (எ) நரசிம்மவர்மப் பல்லவன் ஆண்ட கி.பி. 640ம் ஆண்டிலேயே காஞ்சிபுரத்தின் கல்விச் செல்வத்தை நுகர, சீனப்பயணி யுவான்சுவாங் வந்தார்.

‘நகரேஷு காஞ்சி’ என காஞ்சியை விதந்தோதியவர் வடமொழிப் புலவர் ‘சாகுந்தலம் புகழ்’ காளிதாஸர்! பாரதம் முழுவதும் நம் தமிழ்நாடு கல்வியால், கலையால் புகழ்பெற்றிருந்தது.

வடஇந்தியாவில் சுமார் 10,000 மாணவர்கள் தங்கிப்படித்த பழமையான நாளந்தாப் பல்கலை பற்றி யுவான்சுவாங், இட்சிங் போன்றோரால் 7ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குறிப்புகள் இப்போதும் கிடைக்கின்றன. ஆப்கனிலிருந்து வந்த முஸ்லிம் வெறியன் ‘பக்தியார் கில்கி’ என்பவனால் நாளந்தா தீக்கிரையாக்கப்பட்டது நமது தீயூழ்!

பாரதம் கல்வி, கலைகளில் சிறந்து இருந்தமையாலேயே காலந்தோறும் நம் தேசத்தில் உருவான ஆளுமைகள் கல்வி குறித்த தம் சிந்தனைகளை நமக்குத் தந்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். மகான் அரவிந்தர், பாரதியார், சுவாமி விவேகானந்தர், கவிஞர் தாகூர், கிட்டு கிருஷ்ணமூர்த்தி மற்றும் காந்தி போன்றோரின் கல்விச் சிந்தனைகள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியவை.

காலந்தோறும் மாறிவரும் நவீன உலகத்தை நமது தலைமுறை எதிர்கொள்ளவும், சவால்களை வெற்றிகொள்ளவும் கல்வியில் தேவைப்படும் மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசால் தேசியக் கல்விக்கொள்கை வெளியிடப்பட்டது.

அமேஸானில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தால்கூட பிரதமர் மோடிதான் காரணம் என ‘கயாஸ் தியரிப்படி’ முடிவெடுத்து எதிர்க்கும் போராளிகள் வழக்கம்போல் புதிய கல்விக்கொள்கையை இந்துத்துவ, பாசிஸ, பார்ப்பனிய திணிப்பு என, கொள்கைவரைவின் முகப்பைக்கூடப் பாராமல் கொந்தளித்தனர். இவற்றுக்குப் பதிலாகத் தர்க்கபூர்வமான விவாதங்களுடனும், ஆக்கப்பூர்வமான மறுப்புகளுடனும் தொகுக்கப்பட்ட நுல்தான் ‘புதிய கல்விக் கொள்ளை 2020. வரமா? சாபமா?’ எழுதியவர் (உரையாற்றியவர்) ஊடகவியலாளராக அறியப்பட்டவரும், பல ஆளுமைகளைத் தனது வினாக்களால் திணற அடித்தவருமான ரங்கராஜ் பாண்டே.

தமிழகத்தில் 37,000 அரசுப்பள்ளிகள் உள்ளன. அவற்றுள் 1531 பள்ளிகளில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் பயில்கின்றனர்! மாறாக மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ. தனியார்ப் பள்ளிகளில் பெருகிவரும் மாணவர் எண்ணிக்கையை ஒப்பிட்டு – அரசுப்பள்ளிகளில், புதிய கல்விக்கொள்கை ஏற்படுத்த வல்ல ஆக்கப்பூர்வமான மாற்றங்களை எடுத்துரைக்கிறார்.

புதிய கல்விக்கொள்கை அளிக்கும் மும்மொழி வேண்டாம் எனப் போராடும் தமிழக ‘ஸோ கால்ட்’ போராளிக் கட்சியினர் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் தனியார்ப் பள்ளிகளின் பட்டியலை நூலில் 164, 165, 166, 167 பக்கங்களில் தருகிறார். ‘நாக்கு வியாபாரிகள்’ இன்றுவரை தாம் நடத்தும் பள்ளிகளில் இந்தி, சம்ஸ்கிருதம் போன்றன போதிக்கப்படுவதைப் பற்றி வாய் திறக்கவில்லை.

மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியானது 1976ல் மத்திய அரசின் பட்டியலுக்குக் கொண்டுவரப்பட்டது. கொண்டு சென்றது ‘அன்னை இந்திரா’ தலைமையிலான காங்கிரஸ்! அப்போது அதனைப் பற்றிக் கேள்வி எழுப்பாது இருந்தவர்கள் ‘மலர்க மாநில சுயாட்சி’ என திண்டு திண்டாக நூல்களை எழுதித்தள்ளிய தி.மு.கழகத்தினர். கட்சத் தீவைத் தாரை வார்த்தவர்கள் கல்வியைப் பற்றிக் கவனம் செலுத்துவர் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஹிந்தி வேண்டாம் என்று போராடும் தமிழகத்தில்தான் ‘தமிழில் படிக்கவோ, தேர்வு எழுதவோ மாட்டோம்’ என நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதும், வாணியம்பாடி சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் உருதுவை கட்டய மொழிப்பாடமாக்குவேன் என்று வாக்குறுதி அளிப்பதும் நடக்கிறது என்பதை விளக்கும் பாண்டே, கல்விக் கொள்கை எதிர்க்கப்படுவது வறட்டு அரசியல் காரணங்களுக்காகவே என்பதை விளக்குகிறார்.

பாண்டே முன்வைக்கும் பல கேள்விகளில் மிக முக்கியமானதாக நான் கருதுவன:

‘கழகங்கள் அவ்வப்போது தமக்குள் ஆட்சியைப் பரிமாறிக் கொள்ளும் புதுச்சேரியில் நவோதயா பள்ளிகள் இருக்கும்போது, தமிழகத்தில் இல்லாதிருப்பது ஏன்?

‘மொழிவாரி மாநிலங்களின் உருவாக்கத்தின்போது அனைத்து மாநிலங்களிற்கான மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தி இருக்க வேண்டும் என நிறுவியவர் டாக்டர் அம்பேத்கர். தன் தாய்மொழியான மராத்தியை வெகுவாக நேசித்த அத்தலைவர் தேசத்தின் இணைப்பிற்காக முன்மொழிந்த இந்தியைத் திணித்தால் எதிர்க்கலாம். விரும்பிக் கற்கும் வாய்ப்பை தமிழகம் நிராகரிப்பது ஏன்?’

இரண்டிற்கும் ஒரே பதில்தான் – அரசியல்!

நமது இன்றையப் பாடத்திட்டத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சி பற்றி விரிவாக உள்ளது. நானூறு வருடங்களின் ரத்த சரித்திரத்தை மழுப்பி, ‘தேனாறும் பாலாறும் ஓடியதாக’ திரித்து எழுதப்பட்ட ஔரங்கசீப், அலாவுதீன் கில்ஜி போன்ற ‘மகாத்மாக்கள்’ பற்றியும் வரலாறு உண்டு. ஆனால் ப்ருத்விராஜ் சௌகான், வீரசிவாஜி, புருஷோத்தமன் பற்றிய முழு (உண்மையான) வரலாறுகள் இல்லாதது ஏன் என்ற கேள்வியை பாண்டே தொடுக்கிறார்.

புத்தகத்தை விட்டு விலகி சற்று நமது தமிழ்நாட்டுக் கல்வித்துறை மாண்புகளை ஒன்றிரண்டு உதாரணங்கள் வழியே பார்ப்போம். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆறாம்வகுப்பு மாணவர்கள் பயின்ற தமிழ்ப்பாடநூலில் ‘உ.வெ. சாமிநாதர்’ என்ற பாடம் இடம்பெற்றிருந்தது கவனியுங்கள். – உ.வே.சா.தான் உ.வெ.சா என அச்சடிக்கப்பட்டிருந்தார்.

தமிழகத்தில் பட்டிதொட்டிகள் எல்லாம் கால்தேய நடந்து, பிழைகளற்ற தமிழ் இலக்கண இலக்கிய நூல்களை அகழ்ந்தெடுத்துப் பதிப்பித்தவரின் பெயரைக் ‘கெடுத்த’ பெருமை நமக்குண்டு. மனோன்மணீயம் சுந்தரனாரை, மனோன் ‘மணியம்’ என அச்சிட்டு, ‘கிராம நிர்வாக அலுவலர்’ எனத் தற்போது அழைக்கப்படும் மணியக்காராக்கியிருந்தனர் நமது பாடநூல் கழகத்தார். இப்பிழைகளூடேதான் நமது மாணவர்கள் பாடம் கற்றனர். தமிழ் மீதும் நமது கல்வி மீதும் நமது சமுதாயத்திற்கான அக்கறைதான் எவ்வளவு மேலோட்டமானது!

‘யுனெஸ்கோ விருது’ வாங்கிய ‘பெரியார்’ ஈ.வெ.ரா.வின் பெருமையை ஒன்பதாம் வகுப்பில் போதிக்கும் நமது கல்வித்துறையின் ‘வரலாற்று அறிவு’ மெய்சிலிர்க்கச் செய்கிறது.

‘இந்தியாவின் நெப்போலியன்’ என வின்சென்ட் என்ற வரலாற்று ஆசிரியரால் சமுத்திரகுப்தன் அழைக்கப்பட்டதைப் பெருமையுடன் நமது பாடப்புத்தகங்கள் அச்சிடுகின்றன. டி.என்.பி.எஸ்.சி.யால் தவறாமல் கேட்கப்படும் வினாக்களுள் ஒன்று இது. கி.பி. 340களில் ஒரு பொற்கால அரசை வழங்கிய ஒரு மாமன்னனான சமுத்திரகுப்தனை, செயின்ட் ஹெலினா தீவில் ஒரு அனாதையைப் போன்று சிறையில் செத்துப்போன, காலத்தால் பல நூற்றாண்டுகள் பிந்தைய அரசன் நெப்போலியன் பெயரால் புகழ்வது குறித்து விதேசி வின்சென்டிற்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமலிருக்கலாம், நமக்குமா?

பழைய சிபிஎஸ்ஸி பாடப்புத்தகத்தில் வரும் கருத்தான அவுரங்கசிப்பும், அலாவுதீன் கில்ஜியும் இந்துக் கோயில்களை சீரமைத்தனர் என்பதற்கு, தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஆதாரம் கேட்டால், அரசு கைவிரிக்கிறது. ஆக, பாடப் புத்தக ஆசிரியர்கள் நாம் தமிழர் ‘சீமானுக்கு’ சற்றும் சளைக்காத ‘உண்மை விளம்பிகள்’ என்பது புலனாகின்றது.

மேற்கூறப்பட்டவற்றின் பின்னணியில் நமது பாடத்திட்டம், கற்பிக்கும் முறைகள், கைக்கொள்ள வேண்டிய நவீன தொழில்நுட்பங்கள் பற்றி 2017 முதல் ஆராய்ந்த (உண்மையான) அறிஞர்கள் குழுவே புதிய கல்விக்கொள்கையை வரையறுத்தது. இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில், மக்களாட்சி தத்துவம் பின்பற்றப்படும் நாட்டில் வழங்கப்பட வேண்டிய சகல உரிமைகளையும் அரசு வழங்கியது. புதிய கல்விக்கொள்கை வடிவமைப்பில் ஆலோசனை கூற மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. லட்சக்கணக்கான ஆலோசனைகள் மின்னஞ்சல்கள் வழியே இந்தியா முழுவதும் இருந்து சென்றன. எத்தனை தமிழக அரசியல் தலைவர்கள் அப்போது ஆலோசனை வழங்கினர் (அப்படி வழங்குமளவு விவரம் தெரிந்தவர்கள் என்றே நம்புவோம்!) என்பது கேள்விக்குறி.

அரசியல்வாதிகள் அடுத்த தலைமுறை குறித்துச் சிந்திப்பவர்கள் என நம்ப எந்த முகாந்திரமும் இல்லை. தமிழகத்தில் அடுத்த தலைமுறையின் நன்மை குறித்துச் சிந்தித்து முடிவெடுக்கும் அரசியல்வாதி பதவியை பலிதர வேண்டி இருக்கும். சான்று – ராஜாஜி. அரசியல்வாதிகளை விடுங்கள், எத்தனைக் கல்வியாளர்கள் ஆசிரியர்கள் மின்னஞ்சல் செய்திருப்பர் எனக் கருதுகிறீர்கள்? மத்தியக் கல்வி அமைச்சரின் பெயரையாவது அறிந்திருப்பார்களா என்பது ஐயமே!

ரங்கராஜ் பாண்டே நீட் குறித்து முன்வைக்கும் தொடக்க நிலைக் கேள்விக்குக் கூட, அதன் எதிர்ப்பாளர்களால் பதில் தர இயலவில்லை. கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சி நிலவும் கேரளாவில், காங்கிரஸ் அரசு நடத்தும் மாநிலங்களில் ‘நீட்’ தேர்வை, தொடர்புடைய கட்சிகள் எதிர்க்கவில்லை. எந்தப் போராட்டமும் நடத்தவில்லை. ஆனால், தமிழகத்தில் எதிர்ப்பது ஏன் என பாண்டே கேட்கிறார். பதில் வரப்போவதே இல்லை – அது அனைவருக்கும் தெரிந்த பதில்தானே!

விடுதலை இந்தியாவை ஏறக்குறைய 50 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் பேரியக்கம் ஒரே வினாவிற்கு பதில் தரவேண்டும். உலகின் முன்னணி 200 பல்கலைகளுள் இந்தியப் பல்கலை ஒன்றுகூட இல்லை! ஏன்? இதனை மாற்ற கல்வியாளர்கள் முயன்றால் அது பாசிஸம்!

பாண்டேவின் இந்நூலின் சாராம்சத்தை அவரின் மொழியிலேயே இப்படியாகப் புரிந்துகொள்ளலாம். புதிய கல்விக்கொள்கை சுமார் 480 பக்கங்கள் கொண்டது. 13 மொழிகளில் (அரசால்) மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி உள்ளது. நடிகர்கள், அரசியல்வாதிகள் உட்பட, ஒரு துறையில் பிரபலமாக இருப்பதாலேயே மற்றபிற துறைகளைப் பற்றி கருத்து கூறும் தகுதி வந்துவிடாது. எனவே, கல்வி குறித்த விவாதங்களை நிபுணர்களிடம் விடுங்கள்!

(பி.கு) மெக்காலேவைச் சுமந்து சென்று சபிக்கப்பட்ட அந்த நான்கு இந்தியர்கள் ஸ்தூல வடிவிலான அவர் உருவத்தை வெறும் 11 நாட்களில் இறக்கிவைத்துவிட்டனர். ஆனால் விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகளாயினும் சமகால இந்தியர்களில் பலர் மெக்காலேவைச் சிந்தனை வடிவில் சுமக்கிறார்கள் என்பது அவலமே! ஒரு தலைமுறையே மாற்றம் பெறவேண்டும். அதைத்தான் புதிய கல்விக்கொள்கை 2020 செய்யப்போகிறது.

Leave a Reply