Posted on Leave a comment

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1879-1972) | பா.சந்திரசேகரன்

இன்றைய தமிழகத்தில் மட்டுமில்லாமல், இந்தியாவில் மற்ற பகுதியிலும் சரி, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என்ற மாமனிதர், ஒரு தமிழர், பல்துறை அறிஞர், நம் நாட்டிற்கு அளித்த பங்களிப்பைப் பற்றி இன்றைய தலைமுறைக்கு பெரும்பாலும் தெரியாது. ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டது என்பது துரதிர்ஷ்டம். ராஜாஜி மறைந்து 48 ஆண்டுகள் ஆகின்றன. ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு, அவரின் எண்ணற்ற தமிழ் மற்றும் ஆங்கிலப் படைப்புகள் மறைக்கப்பட்டது, எதோ தனி நபருக்கு மட்டும் ஏற்பட்ட இழப்பல்ல, வருங்கால சந்ததியினருக்கும் மற்றும் நம் தேசத்துக்கும்தான்.

சர்வதேச அளவில் மிகச்சிறந்த அரசியல் சாசன, சமூக சீர்திருத்தச் சிந்தனையாளர், அறிவுஜீவி மற்றும் பொருளாதார சிந்தனையாளராக போற்றப்பட்டவர் ராஜாஜி. ஆனால் ராஜாஜிக்கு தமிழகத்தில் போதிய மரியாதையும் மதிப்பும் அளிக்கப்படவில்லை. மூச்சுக்கு முப்பது தடவை மூதறிஞர் என்று அரசியல் ஆதாயத்துக்கு மட்டும் அவரை பட்டப்பேர் வைத்து அழைப்பது என்பது தவிர்க்க முடியாமல் போய்விட்டது சில அரசியல் கட்சிகளுக்கு.

நமது நாட்டின் மிக உயரிய தேசிய குடிமையியல் விருதான முதல் பாரத ரத்னா விருது ராஜாஜிக்கும் மற்றும் அறிவியலில் நோபல் பரிசு பெற்ற சி.வி.ராமணனுக்கும் 1954ம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால் இரண்டுபேரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவர்கள் பொது வாழ்க்கையிலோ அல்லது தனிப்பட்டமுறையிலோ எங்கும் பயன்படுத்தியதில்லை. ராஜாஜிக்கும் ராமனுக்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழங்கள் கௌரவ முனைவர் பட்டம் வழங்கின. ஆனால் அவர்கள் அதையெல்லாம் ஒரு பெரிய விஷயமாகக் கருதவில்லை. ஏனென்றால் அவர்களின் நோக்கம் இந்த விருதுகளையெல்லாம் பெறுவது அல்ல. இரண்டுபேருமே ஜவாகர்லால் நேருவின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார கொள்கையை எதிர்த்தார்கள்.

தன்னலமற்ற தேசத் தொண்டு, தெய்வீகப் பற்று, பொது வாழ்க்கையில் பின்பற்றிய நேர்மை, தூய்மை, தேசியச் சிந்தனை, அறிவியல் பூர்வமான ஆலோசனைகள், ஆக்கபூர்வமாக வெளிப்படுத்திய முற்போக்கான சிந்தனைகள் என்று ஏராளமான விஷயங்களில் ராஜாஜியின் வாழ்க்கை விசாலமானது. எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் எல்லாத் தரப்பு மக்களுக்குமாகச் செயலாற்றியவர் ராஜாஜி. அவரின் நிர்வாகத் திறமையை உலக அறிஞர்கள் போற்றியுள்ளார்கள்.

ராஜாஜி தேர்ந்த வழக்கறிஞர், சுதந்திரப் போராட்டத் தலைவர், அரசியல்வாதி, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். சமய, இதிகாச, தத்துவ எழுத்தில் ஒரு புதிய பாணியைப் படைத்து எல்லா வடிவங்களிலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் 50க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார் ராஜாஜி.

1946ம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். சுதந்திரத்துக்கு முன்பு சென்னை மாகாண முதலமைச்சராக 1937 முதல் 1939 வரை பதவி வகித்தார், விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக (1948 முதல் 1950 வரை) பதவி வகித்தார். 1952 முதல் 1954 வரை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர். 1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுநராகவும், 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். ஆனால் ராஜாஜியை, அரசியலாகட்டும், இலக்கியத் துறையாகட்டும் தமிழக அறிஞர்களாகட்டும், எந்த ஒரு இயக்கமும் போற்றுவதில்லை. இன்றைய இளைய தலைமுறைக்கு அவரின் கொள்கைகள், கருத்துக்கள் மிகவும் அவசியம் என்பதைப் புரிந்து, அதனைக் கொண்டுசேர்க்க ஒருவருமில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்தப் போக்கு நாட்டுக்கு நல்லதல்ல.

இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிடும் ‘நவபாரத் சிற்பிகள்’ என்ற தொகுப்பில், ராஜாஜி பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் 2002ம் ஆண்டுதான் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. அதாவது ராஜாஜி அவர்கள் இறந்து முப்பது வருடங்களுக்குப் பிறகு ஆர்.கே.மூர்த்தி என்பவரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகத்தை தமிழாக்கம் செய்தவர் எஸ்.கணேசன் என்பவர். இவ்வளவு தாமதம் ஏன்? ராஜாஜி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் முப்பது ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டது என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

ராஜாஜி இரண்டு முறை சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த போது பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். அதில் மூன்று மிக முக்கியமானவை: மதுவிலக்கு, புதிய கல்விக் கொள்கை மற்றும் அனைவருக்கும் ஆலய வழிபாடு. சமுதாயத்திற்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்ப, நடைமுறை சார்ந்த செயல்முறைக் கல்வித் திட்டம்தான் ராஜாஜி கொண்டுவந்த கல்விக் கொள்கை. அந்த கல்விக் கொள்கையைப் பாமர மக்களிடையே பொய்யான கருத்தைப் புகுத்தித் திசைதிருப்பிவிட்டார்கள் சில தேச விரோதிகள்.

நாட்டின் கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்த ராஜாஜி எப்படி பிறகு ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படலாம் என்றும் வினவுகிறார்கள் சிலர். அன்றைக்கு மட்டும் ராஜாஜி தமிழகத்தின் முதல்வராக வரவில்லை என்றால் கம்யூனிசம் என்ற தேச விரோத தீய சக்தி தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்குவகித்து மாநிலத்தை குழிதோண்டிப் புதைத்திருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

பூரண மதுவிலக்குக்கு ஆதரவாக ‘விமோசனம்’ என்ற ஒரு தனி இதழையே நிறுவி நடத்தியவர் ராஜாஜி. அவர் இறப்பதற்கு முன்பு அன்றைய காலகட்டத்தில் அவரால் ஆட்சிக்கு வந்த கட்சியின் முதல்வரை நேரில் பார்த்து பூரண மதுவிலக்குக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர் ராஜாஜி. இன்றைய தமிழக மது எதிர்ப்புப் போராளிகள் அவரை மறந்துவிட்டார்கள். இன்றைய தலைவர்களின் கருத்துக்கும் அவர்களின் நிஜவாழ்க்கை நடத்தைக்கும் எந்த வித்தியாசமில்லாமல் போய்விட்டது. ஆனால் ராஜாஜி அப்படி இருக்கவில்லை.

ராஜாஜி கொண்டுவந்த புதிய கல்வித்திட்டம் இன்று மேலை நாடுகளில் பரவலாகச் செயல்முறைப்படுத்தப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் சுயதிறன் வளர்ப்பு என்பற்றை மிக முக்கியக் குறிக்கோளாக அனைத்து மேலைநாடுகளும் பின்பற்றிவருகினறன. அதைத்தான் ராஜாஜி என்றே கல்வித்திட்டத்தில் கொண்டுவந்தார். ஆனால் என்னவென்று தெரியாமலேயே அதை வேண்டுமென்றே திரித்துப் பொய்ப்பிரச்சாரம் செய்தார்கள். சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கை, ராஜாஜி எடுத்துரைத்ததுபோல பல்வேறு அம்சங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ராஜாஜியின் கல்விக் கொள்கையைப் படிக்காமலேயே இன்றும் சிலர் ‘குலக் கல்வித் திட்டம்’ என்று திட்டமிட்டே மக்களிடம் பொய்ப்பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.

ராஜாஜி சொன்ன குலக்கல்விக்கும் இன்றைய தொழில் கல்விக்கும் என்ன தொடா்பு என்று வினவுகிறார் தேர்ந்த அரசியல் தலைவர் கே.பி. இராமலிங்கம். அவர் மேலும் கூறுகிறார்:

‘அடிப்படைக் கலைகள், கைவினைப் பயிற்சிகள், விளையாட்டு, உடல்திறன், மொழி, இலக்கியம், பண்பாடு, சமூக மதிப்பீடுகள் ஆகியவற்றுடன் அறிவியலும் கணிதமும் கற்றுக் கொடுக்கப்பட்டு, மாணவா்களை அனைத்துத் துறைகளிலும் தகுதி பெற்றவா்களாக வளா்த்தெடுக்க வேண்டும் என்று இந்த புதிய கல்விக் கொள்கை தீா்மானித்திருக்கிறது. கல்வி என்பது மாணவா்களுக்குப் பயனளிப்பதோடு அவா்களின் ஆளுமையைச் செதுக்கக் கூடியதாகவும் அவா்களை அறவிழுமியங்களைக் கடைப்பிடிப்பவா்களாகவும், அறிவுபூா்வமாக சிந்திப்பவா்களாகவும், அதே நேரத்தில் வேலை வாய்ப்புகளைப் பெறக்கூடிய தகுதி பெற்றவா்களாகவும் உருவாக்க வேண்டும் என்பதே இந்தப் புதிய கல்விக் கொள்கையின் லட்சியம்.’

இதைத்தான் ராஜாஜியும் அன்றே யோசித்தார்.

‘சுயஒழுக்கம், கட்டுப்பாடுதான் மனிதனின் பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடு. அதுவே அவனது கலாசாரம், அந்த கலாசாரமே சமூகத்தின் அச்சாணி. அந்த அச்சாணியே மனித இனத்துக்கு அனைத்து வகையிலும் அமைதி வழியில் வளர்ச்சியை ஏற்படுத்திக்கொடுக்கும்’ என்பது ராஜாஜியின் எண்ணம்.

1939ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் பிரதம மந்திரியான ராஜாஜி, ஆதி திராவிட மக்களின் ஆலயப் பிரவேசத்திற்குச் சட்டம் பிறப்பித்தார் என்பதை இன்று தமிழக அரசியல் கட்சிகள் வெளிப்படையாகத் தெரிவிக்க மறுக்கின்றனர்.

ராஜாஜி நேரடியாக கம்யூனிசத்தை எதிர்த்தவர். கம்யூனிச சித்தாந்தத்தால் நமது நாட்டுக்கு எல்லாவிதத்திலும் அழிவுதான் ஏற்படும் என்பதை தீர்க்கமாக வெளிப்படுத்தியவர். ராஜாஜி மற்றும் ஜவாஹர்லால் நேருவுக்கும் இடையே கொள்கை ரீதியாகப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவின. நம் நாட்டுக்கு எந்தக் கொள்கை உகந்தது என்பதில் நேரு பல வகையில் தவறிவிட்டார். அதை ராஜாஜி சுட்டிக்காட்டத் தவறவில்லை. ராஜாஜி ஒரு தீர்க்கதரிசி என்பதை நம் கடந்த எழுபது ஆண்டு வரலாறு பிரிதிபலிக்கிறது. இன்று நாடு முழுவதும் அமுலுக்கு வந்துள்ள வரி விதிப்பு முறையை அன்று ராஜாஜி முதன்முதலில் அமுலுக்குக் கொண்டு வந்தார்!

நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ராஜாஜி ‘சுதந்திராக் கட்சி’யை நிறுவுவதற்கு முன்பு ‘இந்திய தேசிய சனநாயக காங்கிரசு’ (1957–1959) என்ற கட்சியை நடத்தி வந்தார் என்பது பலபேருக்குத் தெரியாது. ராஜாஜி இந்திய பாரம்பரியமிக்க, தாராளமயத்தைக் கொள்கையாகக் கொண்ட சுதந்திராக் கட்சியை நிறுவி 1962, 1967 மற்றும் 1972 பொதுத் தேர்தல்களில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தினார். நாடாளுமன்றத்திலும் சுதந்திராக் கட்சி 45 இடங்களைப் பிடித்து முதன்மை எதிர்க்கட்சியாக விளங்கியது.

சென்னையை தமிழகத்துக்குக் காத்துக் கொடுத்தவர் ராஜாஜி. அதேபோல் கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைத்துக் கொடுத்தவரும் இவரே.

ஆரம்பகட்ட சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் பாலகங்காதர திலகரின் குழுவில் செயல்பட்டவர் ராஜாஜி. அப்போது மகாத்மா காந்திஜி இந்தியாவிற்கு முழுவதுமாகத் திரும்பி இருக்கவில்லை. சுதந்திரப் போராட்டக் காலம்தொட்டு, தன் இறுதி நாள் வரை ராஜாஜி நாட்டுக்காக யோசித்தார், எழுதினார், செயல்பட்டார்.

ராஜாஜி தமது எழுத்தாற்றலால் ஆங்கில இலக்கியத்திற்குச் சிறப்பாகப் பங்களித்துள்ளார். தமிழிலும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை எழுதி உள்ளார்.

நாட்டின் நிதிச்சுமையைக் கருதி அன்றே ராஜாஜி எடுத்துரைத்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முழக்கத்தை இன்றைய பாரதப் பிரதமர் திடமாக நம்புகிறார். இதுபோல் ராஜாஜி எண்ணற்ற, தேச நலன் சார்ந்த பல கருத்துக்களை அன்றே எடுத்துரைத்துள்ளார். காலத்தின் முன்னோடி ராஜாஜி. ராஜாஜியின் கருத்துகளை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லவேண்டியது நமது தலையாய கடமை.

Leave a Reply