கபில்தேவின் கப்
மார்க்ஸிஸ்ட் தோழர்கள் நடத்தும் உரையாடல் மற்றும் எழுத்தில் அதிகமாகப் புழங்கும் ஒரு வார்த்தை – வர்க்க உணர்வு. தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் பாட்டாளிகளிடம்தான் புரட்சிக்கு அவசியமான வர்க்க உணர்வு இருக்கும் என்றும், அவர்கள் முன்னெடுத்துச் செல்வதுதான் ஒரிஜினல் புரட்சி என்றும், கார்ல் மார்க்ஸ் எழுதினார். நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் அது நடக்கவில்லை. தோழர்களே அந்தப் பாடத்தைத் திருத்தித் திருத்தி எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும் இந்த வார்த்தை நிலைத்துவிட்டது.
பல வருடங்களாக மீனவர்களோடு தொடர்ந்து பழகியதில், அவர்களுடைய வர்க்க உணர்வு என்னோடு கலந்துவிட்டது. எதையும் தரை வழியாகப் பார்ப்பதை விட்டுவிட்டுக் கடல் வழியாகப் பார்ப்பது என்பது இதன் முக்கியமான கூறு. ஒவ்வொரு நாளும் மீன்பிடித் தொழிலுக்கு உகந்ததா என்பதுதான் அவர்களுக்குக் காலைநேரத் தலைப்புச் செய்தி. மற்றவை எல்லாம் அப்புறம்தான்.
மீன்பிடித் தொழிலை அடுத்து, அச்சுத் தொழிலுக்கு வந்தேன். மையோடும், காகிதங்களோடும், மைபூசிய மனிதர்களோடும், இரவுபகலாக உறவாடியதில் கொஞ்ச காலத்துக்கு அச்சுத் தொழிலாளியின் வர்க்க உணர்வு என்னோடு இழுசிக்கொண்டது. எத்தனை எழுத்து, எவ்வளவு இடைவெளி, எத்தனை படிகள் என்பவை முக்கியமான விவரங்கள்.
அச்சுத் தொழிலாளி என்பவரது வாழ்க்கை, வறுமைக் கோட்டுக்குக் கொஞ்சம் மேலே இருக்கும் என்று சொல்லிக் கொள்ளலாம். இரவு பகல் தூங்காமல் கண் விழித்து, ஓவர்டைம் செய்து, கட்டிங் மிஷினில் கைவிரல்களை இழந்தவர்களும் உண்டு. வர்க்கம் கடந்து, பிரதேசம் கடந்து, இந்தியர்களை, குறிப்பாக ஏழைகளை அதிகமாகக் கவரும் மோகினி ஒன்று உண்டு – சாராயம். அது இவர்களையும் தாக்கி இருக்கிறது என்பதை அறிந்துகொண்டேன்.
என்னுடைய அடுத்த ஜீவனம் துணிக்கடைத் தொழிலாளியாக. பொருளாதார ரீதியாக அடுக்கி வைத்தால், மேலே மீனவர், அடுத்து அச்சுத் தொழிலாளி, பிறகு துணிக்கடைத் தொழிலாளி. துணிக்கடைத் தொழிலாளிக்கு வேலை நேரம் அதிகம், வேறு சம்பாதியத்துக்கு வழி கிடையாது. கந்துவட்டிக்குக் கடன் வாங்கும் பழக்கத்தைத் தவறாமல் செய்வார்கள். இவர்களுடைய சம்பாஷணை பெரும்பாலும் பழைய வட்டிக்காரனிடம் தப்பிப்பது எப்படி, புதிய வட்டிக்காரனைக் கண்டுபிடிப்பது எப்படி என்கிற தலைப்பிலேயே இருக்கும்.
தாம்பரம் துணிக்கடையில் சக தொழிலாளி ஒருவர் கூறிய ஒரு விஷயம் என்னை யோசிக்க வைத்தது. ‘துணிக்கடைக்காரன் பொணத்தை சொந்தக் காசில் எடுக்க முடியாது. அக்கம்பக்கத்தில் இருக்கரவங்க உதவி செஞ்சு எடுக்கறதுதான் வழக்கம்’ என்றார் அவர். எனக்கு இது இட்சிணியின் குரலாகப் பட்டது. வேறு வேலை தேடத் துவங்கினேன்.
நவம்பர் இறுதியில், ராயப்பேட்டையில் புதிய வேலை. நெஸ்கேஃப் என்று பரவலாக அறியப்படும் food specialities எனும் காபி பவுடர் விற்கும் பன்னாட்டு நிறுவனத்தின் விநியோகஸ்தர் அலுவலகம் ராயப்பேட்டையில் இருந்தது. அங்கே எனக்கு விற்பபையாளர் வேலை. அதை முன்னிட்டு அடையார் பெரியம்மா வீட்டில் ஜாகை.
காலை எட்டு மணிக்கு சைக்கிளில் பயணத்தைத் துவங்க வேண்டும் – மேற்கு எல்லை ஆலந்தூர், கிழக்கு எல்லை நீலாங்கரை. ஒவ்வொரு டீக்கடையாக, ஹோட்டலாக, ஹாஸ்ட்டலாகப், பார்த்து, காபி பவுடரை விற்றுவிட்டு, மதியம் மூன்று மணிக்கு ராயப்பேட்டை அலுவலகம். அங்கே ஐந்து மணிவரை.
புது கம்பெனியில் எழிலரசன் அறிமுகம் – பச்சையப்பன் கல்லுரியில் இருந்து அப்போதுதான் வெளிவந்திருக்கிறார். முதல் சத்திப்பிலேயே என்னைக் கவர்ந்த விஷயம் எழிலுடைய மோட்டார் பைக்கில் அவருடன் அன்றாடம் பயணம் செய்து வரும் புறா. ஆபிஸ் வந்தவுடன் ‘வந்துவிட்டேன்’ என்று கடிதம் எழுதி அதை சிறிய அலுமினியக் குழாயில் வைத்து, புறாவின் காலில் கட்டி வியாசர்பாடியில் உள்ள வீட்டுக்கு அனுப்பி விடுவார். சில சமயங்களில் இந்த மாதிரி செய்திகள் புறா மூலமாக பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கும் போனது என்பதைப் பிற்காலத்தில் தெரிந்து கொண்டேன்.
எழிலுக்கும் என்னைப் போலவே அமானுஷ்யமான விஷயங்களில் ஆர்வமிருந்தது. அடிக்கடி ‘நடக்கப்போவதைத் தெரிந்துகொள்ள முடியுமா, அப்படிப்பட்ட ஆற்றல் உடையவர்கள் யாராவது இருக்கிறார்களா, நீங்க சந்தித்து இருக்கிறீர்களா’ என்று என்னைத் துளைத்துக் கொண்டே இருப்பார். இது ரொம்ப தொடக்க காலம் என்பதால் டாக்டரைப் பற்றிய விஷயங்களையும் என்னுடைய ஆன்மிக அனுபவங்களையும் அவரிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. இருந்தாலும் அலுவலகத்தைப் பொருத்தவரை எழிலரசன் எனக்கு அறிவிக்கப்படாத சிஷ்யன்.
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கு எங்கள் கம்பெனிதான் காபி சப்ளை. காபி என்றால் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் காபி வீதம் ஐந்து நாள் ஏகபோகத் திருவிழா. நான் அடுப்படி மேஸ்திரி. காலில் ஷூ, சாக்ஸ் சட்டையை பேன்ட்டுக்குள் விட்டுக்கொண்டு அண்டா அண்டாவாகக் கொதிக்கும் பாத்திரங்களுக்கு அருகே காலை முதல் மாலை வரை வேகாத வெயிலில் நிற்பதுதான் என் வேலை.
நீரைக் கொதிக்க வைத்து அதில் கண்டன்ஸ்டு மில்க் டப்பாவைக் கவிழ்த்துக் கொட்டுவார்கள். அதுதான் பால். பால் ஒரு சரியான கொதிநிலைக்கு வந்தவுடன் அதன் தலைமேல் காபி பவுடரும் கொட்டப்படும். காபி தயாராகி கொதித்துக் கொண்டிருக்கும்போதே வாளியில் மொண்டு எடுத்து மைதானத்துக்குள் அனுப்ப வேண்டும்.
ஆட்டம் ஐந்து மணிக்கு எல்லாம் முடிந்தவுடன் ஓய்வெடுக்க முடியாது. முப்பதாயிரம் ரூபாய்க்கு ஒரு ரூபாய் நாணயங்களாக வந்து சேரும். அதை மூட்டை கட்டி அண்ணா நகர் குடோனில் சேர்க்க வேண்டும். வீட்டுக்குப் போகும்போது மணி இரவு ஒன்பது ஆகி விடும். மறுநாள் காலை ஆறு மணிக்கு ஆஜராக வேண்டும். காபிக் கறைபட்ட சட்டையைத் தோய்ப்பதற்குள் வீட்டார்களுக்கு சலிப்பு ஏற்படும். ஆனால் நான் அசரவில்லை. மேலதிகாரிகள் என்னை இந்தப் பணிக்கு ஒதுக்கியதற்கு ஒரு காரணம் உண்டு. எந்த விக்கெட் விழுந்தாலும், யார் சென்சுரி போட்டாலும் என் இடத்தை விட்டு நகர்ந்து மைதானத்துக்குள் எட்டிப் பார்க்க மாட்டேன் என்பதுதான் அந்தக் காரணம்.
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ஐந்து நாள் டெஸ்ட் மேட்ச் (1986). அந்த மேட்ச் வரலாற்றுப் புகழ் பெற்றது. அதாவது மேட்ச் டை ஆனது. டை என்றால் இரண்டு தரப்பினருக்கும் சமமான ரன் எண்ணிக்கை. அந்த மேட்ச் முடிவில் எனக்கு இன்னொரு பொறுப்பும் வந்து சேர்ந்தது. எங்கள் கம்பெனி சார்பாக மேன் ஆப் தி மேட்ச் அவார்ட் கொடுப்பது வழக்கம். அந்த நிகழ்ச்சியின் பொறுப்பும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. இருவருக்கு அவார்ட். ஒருவர் டீன் ஜோன்ஸ். இன்னொருவர் கபில்தேவ்.
கபில்தேவுக்கு கப்பைக் கொடுத்தாகி விட்டது. அவர் அதைத் தூக்கி காமராவுக்கும் அங்கிருந்தவர்களுக்கும் காண்பித்து விட்டு நகர்ந்து விட்டார். இன்னோரு கப்பை கிரிக்கெட் சங்கத் தலைவரிடம் கொடுத்து அவர் அதை டீன் ஜோன்ஸிடம் கொடுக்க வேண்டும். ஆனால் முடியவில்லை. கப்பை எடுத்து வந்த ஊழியர் அவசரத்தில் கீழ போட்டு, மிதித்து நசுங்கி கப் உடைந்து மேல்பகுதி தனியாக கீழ் பகுதி தனியாக கழன்று விட்டது.
நம் அலுவலகத்தில் நான்தான் ஆபத்பாந்தவன் என்ற முறையில் ‘சுப்பு, சுப்பு’ என்று கத்துகின்றனர். தூர்தர்ஷன் காமிராககாரருக்குப் பின்பக்கம் போய் ‘கொஞ்சம் லேட் பண்ணுங்க’ என்று சொல்லிவிட்டு கபில்தேவை நோக்கி ஓடி அவரை வழி மறைத்தேன். ‘சார், இந்த கப்பை கொடுங்க’ என்றேன். அவருக்கு அதிர்ச்சி. எதற்கு என்று கேட்டார். ‘டீன் ஜோன்ஸுக்குத் தரவேண்டிய கப்பை உடைத்து விட்டார்கள். நீங்கள் இதைக் கொடுத்தால் காமிராவில் காட்டி விடுவோம். பிறகு உங்களுக்கு இதே கப்பை கொடுத்து விடுகிறேன்’ என்றேன். அவர் ‘நான் சோளா ஹோட்டலில் தங்கி இருக்கிறேன். என் அறை எண் தெரியுமா?’ என்று கேட்டார். ‘சார் அதுக்கெல்லாம் நேரம் இல்லை. எப்படியவது நாளை காலை கண்டுபிடித்துத் தருகிறேன்’ என்று பொய் சொல்லிவிட்டு கப்பைப் பிடுங்கிக் கொண்டு வந்து விட்டேன். அப்புறம் என்ன? கப் கைமாறி டீன் ஜோன்சுக்குச் சென்று உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்குக் காட்டப்பட்டது.
மறுநாள் நெஸ்கேப் அலுவலகத்தில் என் புகழ் உச்சத்தைத் தொட்டது. என் அலுவலக மேலாளர் ‘உனக்கு எவ்வளவு பணம் வேணா கேட்டு வாங்கிக்கோ. இதுதான் நேரம்’ என்று சொன்னார். பணம் வேண்டாம் என்று மறுத்து விட்டேன். அறையை விட்டு வெளியே வந்ததும் நண்பர்கள் மொய்த்துக் கொண்டார்கள். ‘எங்களுக்குத் தெரியாது. திரும்ப உள்ளே போய் மூவாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு வா. முக்கியமான ஒரு செலவு இருக்கிறது’ என்று நண்பர்கள் உள்ளே தள்ளினார்கள். நான் மீண்டும் உள்ளே போய் ‘சார் ஒரு மூவாயிரம் ரூபாய் வேண்டும்’ என்றேன். அவர் வெளியில் நடக்கும் கூத்தைப் பார்த்து விட்டார். ‘எப்படியும் அடுத்த ரவுண்டில் வருவீங்க என்று தெரியும்’ என்று சொல்லி கேஷ் கவுண்டரில் வாங்கிக் கொள்ள சொன்னார். பெற்றுக் கொண்டேன். அன்று மாலை, நண்பர்கள் தாக சாந்தி செய்து கொண்டார்கள் – நான் இல்லை.
விஷயம் இதோடு முடியவில்லை. அவார்ட் கொடுக்கும் நிகழ்சசி தூர்தர்ஷன் வழியாக ஒளிபரப்பப்பட்டதே ஒழிய அந்த அவசரத்தில் நாங்கள் நியமித்து இருந்த புகைப்படக்காரர் அதை படமெடுக்கத் தவறி விட்டார். அதாவது டீன் ஜோன்ஸ்க்கும் கபில் தேவுக்கும் நாங்கள் பரிசளித்த காட்சி இடம் பெறவில்லை. மீண்டும் சுப்பு அழைக்கப் பட்டார்.
என்ன பிரச்னை என்றால் பொதுவாக அங்கு வரும் புகைப்படக்காரர்கள் மேட்ச் முடிந்தவுடன் வெளியேறி விடுவார்கள். அன்றைய மேட்சை பல கோணங்களில் புகைப்படம் எடுத்து பத்திரிகைக்கு கொடுத்துக் காசாக்க வேண்டியதுதான் அவர்களுக்கு முக்கியம். கம்பெனிகாரர்கள் நடத்துகிற நிகழ்ச்சிகளுக்கு இவர்கள் இருப்பதில்லை. பத்திரிக்கைகாரர்களும் அதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. என்ன செய்வது!
தூர்தர்ஷன் புகைப்படக்காரர் பழனி எனக்கு நெருங்கிய நண்பர். அவரிடம் பேசினேன். அவரும் இந்த நிகழ்ச்சியைப் படம் எடுக்கவில்லை. ஆனால் அவர் ஒரு யோசனை சொன்னார். ‘திருவல்லிக்கேணியில் போட்டோ ஸ்டூடியோ வைத்து இருப்பவர்கள் வழக்கமாக அங்கே வருவார்கள். காமராவுடன் தயாராக இருப்பார்கள். உள்ளூர் ரசிகர்கள் மேட்ச் முடிந்ததும் எப்படியாவது முண்டியடித்து கபில்தேவ், காவஸ்கர் அருகே நின்று போட்டோ எடுக்க சொல்வார்கள். அந்தப் படங்கள் இருக்க வாய்ப்புண்டு. தேடிப் பாருங்கள்’ என்று சொன்னார்.
திருவல்லிக்கேணி போட்டோ ஸ்டூடியோக்கள் நோக்கிப் படையெடுத்தேன். எனக்குள் இருந்த உஷார் தன்மை காரணமாக என்னுடைய தேவை என்ன என்பதைக் கடைக்காரரிடம் சொல்லவில்லை. குறிப்பிட்ட படத்தைக் கேட்டால் விலை அதிகம் கேட்பார்கள் அல்லவா! மூன்றாவது கடையில் எனக்குத் தேவையான படம் கிடைத்து விட்டது. இருந்தாலும் அந்தப் படத்தை மட்டும் எடுக்காமல் வேறு நான்கு படங்களையும் எடுத்துக் கொண்டேன். நான்கும் சேர்த்து நூறு ரூபாய் விலை. பேரம் பேசி எண்பது ரூபாய்க்கு முடித்து விட்டேன்.
ஆபிசில் போட்டோ ஒப்படைக்கப்பட்டது. நண்பர்கள் வற்புறுத்தியதின் பேரில் செலவு ஆயிரம் ரூபாய் என்று சொல்லப்பட்டது.
*
அடையாறு வீடு, ராயப்பேட்டை அலுவலகம் என்று மாறி மாறிப் போய்க் கொண்டிருந்த போது ஒவ்வொரு முறை மந்தைவெளியைக் கடக்கும் போதும் ஒரு சபலம் ஏற்படும். ரவி, ஷோபனாவைப் பார்த்தால் என்ன, டாக்டரை சந்தித்தால் என்ன என்பது போன்ற யோசனைகள். ஒருநாள் என்னை அறியாமல் அங்கே போய் விட்டேன். எனக்காகக் காத்திருந்தது போல் டாக்டர் என்னை அழைத்தார். ஷோபனாவுக்கு மகிழ்ச்சி.
இடைப்பட்ட காலத்தில் டாக்டரைச் சுற்றி ஒரு வட்டம் உருவாகி இருந்தது. பெரும்பாலும் தூர்தர்ஷன் ஊழியர்கள் – அனந்த பத்மனாபன், பழனி மற்றும் சு.சமுத்திரம். சு.சமுத்திரத்தைப் பொருத்தவரை வெளி உலகிற்கு அவர் ஒரு முற்போக்குவாதி, தீவிர தமிழ்ப் பற்றாளர், பிராமண எதிர்ப்பும் உண்டு. ஆனால் அதெல்லாம் வெளி உலகுக்குத்தான். டாக்டரிடம் அவர் மந்திர உபதேசம் பெற்றிருந்தார்.
மந்தைவெளி வீட்டில் வாராவாரம் ஒரு மாஸ் பிரேயர் நடக்கும். மழை இல்லாத நேரங்களில் மொட்டை மாடியில். மழை இருந்தால் வீட்டிற்குள். ஒருநாள் மாலை, பிரேயர் ஆரம்பிக்கும் முன்பு நானும் டாக்டரும் மொட்டை மாடியில் தனியாக இருந்தோம். ஈஸி சேரில் டாக்டர். அவருக்குப் பக்கத்தில் தரையில் நான். வானத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே டாக்டர் ‘மழை வருமா?’ என்று என்னிடம் கேட்டார். நம்முடைய கடற்கரை வாழ்க்கையை கவனத்தில் கொண்டு ‘கட்டாயம் வரும்’ என்றேன். டாக்டர் புன்னகைத்தார்.
மற்றவர்கள் வந்துவிட மொட்டை மாடியில் மாஸ் பிரேயர் ஆரம்பித்து விட்டது. டாக்டருக்கு அருகே சிலை போல நான். பாடுகிற சப்தம் நன்றாக என் காதில் விழுந்தது. கண் விழித்துப் பார்த்தால் வானத்தை யாரோ துடைத்து அலம்பி விட்டிருந்தனர். கருமேகங்களைக் காணவில்லை. நான் கேட்காமலேயே அவர் சொன்னார் ‘when you can drive away the thoughts, why bother about the clouds.’ உண்மைதான். வானத்தில் ஒன்றுமில்லை. மனதில் கூட.
மாஸ் பிரேயர் தொடர்ந்து கொண்டிருந்தது. கண்மூடி இருந்த நான் வளர்ந்து கொண்டே இருந்தேன். மொட்டை மாடியைக் கடந்து மந்தைவெளித் தெருவைக் கடந்து மயிலாப்பூரைக் கடந்து சென்னைக்கு மேலே ஒரு பெரிய உருவமாக நான். எனக்குள்ளே வீதீகளும் வாகனங்களும் தியானத்தில் இருக்கும் நானும். இவ்வளவு பெரிய விஸ்தாரமான உருவத்தைச் சுமந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள். வாகனங்கள். கட்டடங்கள் எல்லாவற்றையும் கொண்டு செல்வது அசௌகர்யமாக இருந்தது.
இந்த நிலை ஒருநாள் நீடித்தது. அதைத் தொடர்ந்து புருவ மத்தியில் ஒரு புடைப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட உள்ளே ஒரு சுவிட்ச் போல. எப்போது நமக்கு வேண்டுமோ அப்போது ஆன் செய்து கொள்ளலாம். எப்போது வேண்டாமோ அப்போது அணைத்து விடலாம். எண்ணப் பலகையில் எழுதும் அதிகாரம் என்னுடைய கைக்கு வந்து விட்டது. எழுதாமலிருக்கும் அதிகாரமும் என்னிடமே. அடுத்த நாள் டாக்டரைப் பார்த்தேன். இதைப் பற்றிச் சொன்னேன். அவர் சொன்னது, ‘இது நேற்றைய நிகழ்ச்சி அல்ல. பல ஜென்மங்களில் நடந்த முயற்சி’ என்றார்.
தொடரும்…