Posted on Leave a comment

இங்கே விடியல்கள் அமைதியானவை | அருண் பிரபு

ரஷ்ய கிராமம் ஒன்றில் தொடங்குகிறது கதை. மகா தேசப்பற்றுப் போர் என்று சோவியத் பெயர் சூட்டிய இரண்டாம் உலகப் போரில் எல்லைக் கிராமம் ஒன்றில் நிகழ்ந்த சம்பவமே இப்படம்.

கிராமத்தில் சில ராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு என்ன ஆனாலும் மூன்லைட் (காய்ச்சி இறக்கிய லோக்கல் வோட்கா) வேண்டும். குடிப்பதற்கான சண்டையில் சில வீரர்களை இடம் மாற்றிவிடுகிறார்கள். பிறரை விசாரணைக்கு அனுப்பிவிடுகிறார்கள். விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளை இயக்க ஐந்து பெண்களை அனுப்பி வைக்கிறார்கள். அவர்கள் போர் அனுபவம் எள்ளளவும் அற்றவர்கள். சர்ஜண்ட் ஃபெடோர் வோஸ்கோவ் என்பவனைத் தலைவனாக்குகிறார்கள். இங்கே எவனும் வரமாட்டான், சும்மா துப்பாக்கிகளைத் துடைத்துக் கொண்டு இருங்கள் என்று உத்தரவு. ஆனால் அந்த கிராமம் மிக முக்கியமான கேந்திரம். செங்கடலுக்குச் செல்லும் ஒரு கால்வாயை அந்தக் கிராமத்தின் வழியே சுலபமாக அடையலாம். கடல் வழித் தாக்குதல் நடத்த ஏதுவான கேந்திரம் அது. சுற்றிலும் பெரிய படையே இருக்கும் போது இங்கே எவன் எப்படி வருவான் என்ற அலட்சியம் ரஷ்யர்களுக்கு.

ஜெர்மானியர்கள் வேறு விதமாக யோசித்து ரகசியமாக இரவில் பாராசூட் மூலமாக ஒரு சிறு குழுவை இறக்குகிறார்கள். வருபவர்கள் போர், உளவு, நாசவேலை என்று பழகிப் பழம் தின்று கொட்டை போட்ட அனுபவஸ்தர்கள். எதிர்த்து நிற்பது ஐந்து பயிற்சிப் பள்ளிப் பெண்களும் ஒரு பீரங்கிப்படையில் இருந்த சார்ஜண்டும். இந்தப் பெண்கள் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் ஒரு சோகக் கதை உள்ளது. சில பெண்கள் பண்ணை வீட்டுப் பெண்கள். அவர்களது குடும்பங்கள் பிரிக்கப்பட்டு குலாக்குகள் என்று சைபீரியச் சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்தப் பெண் ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டு ராணுவத்துக்கு அனுப்பப்பட்டாள். இன்னொரு பெண் தன் குழந்தையை அம்மாவிடம் விட்டுவிட்டு ராணுவத்தில் வேலை செய்கிறாள். அவளுடைய கணவன் ராணுவ உயரதிகாரியாக இருந்தவன். இவர்கள் முகாமில் இருந்த போது, ஜெர்மானிய டாங்கிகள் தாக்கியதில் முகாமே அழிந்து போனது. இவளையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு கணவன் ஜெர்மானியரை எதிர்கொண்டு இறக்கிறான். சார்ஜண்ட் வோஸ்கோவ் ஒரு போரில் தலையில் காயம் பட்டு ஆஸ்பத்திரியில் இருந்து பிழைக்க வாய்ப்பில்லை என்று கைவிடப்பட்டவன். பிழைத்த பிறகு மீண்டும் ராணுவத்தில் சேர்ந்துள்ளான். சிப்பாயாக இருந்தவன் சார்ஜண்ட் ஆகியிருக்கிறான்.

ஒரு நாள் எதிரி விமானம் பறக்கிறது. இந்தப் பெண்கள் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டபடி விமானம் எதிரியுடையது என்று உறுதி செய்கிறார்கள். விமானத்தைச் சுடுகிறார்கள். விமானத்திலிருந்து திருப்பிச் சுடுவதில் அருகில் உள்ள குடிசைகள் சேதமடைகின்றன. வோஸ்கோவ் ஓடியே வருகிறான். அதற்குள் விமானத்தைச் சுட்டு வீழ்த்திவிடுகிறார்கள். ஆனால் பாராசூட் ஒன்று பறக்கிறது. அதையும் சுடுகிறார்கள். அது கீழே விழுவதைப் பார்த்துத் திருப்திப்படுகிறார்கள். உயரதிகாரிகள் விசாரணைக்கு வருகிறார்கள். என்ன விமானம் என்ன பாராசூட் என்று கேட்டுவிட்டு, விமானம் சுடப்பட்டதில் உயிர் தப்பிக்கக் குதித்திருப்பான்கள், அதெல்லாம் பெரிய விஷயமில்லை என்பது போலப் போய்விடுகிறார்கள்.

அங்கே ஃபின்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி இருக்கிறாள். அவள் ஃபின்லாந்து ராணுவ அதிகாரியின் மகள். ரஷ்ய அதிகாரி ஒருவர் ஆசைப்பட்டு அவளை அழைத்து வந்துவிடுகிறார். பின்னர் சோவியத் ராணுவமா சைபீரியச் சிறையா என்ற போது ராணுவத்தில் எடுபிடியாகச் சேர்கிறாள் அந்த ஃபின்லாந்துப் பெண். இன்னொரு எஸ்தோனியப் பெண்ணை அவள் ஊரில் வைத்துக் குடும்பம் உறவு என்று அனைவரையும் கொன்றுவிடுகிறது ரஷ்யப்படை. அந்தப் பெண்ணும் சைபீரியாவா ராணுவமா என்றபோது ராணுவத்துக்கு எடுபிடியாக வருகிறாள். ஆனால் உலகப் போர் (மகா தேசப்பற்றுப் போர்) இவர்களை ஆயுதம் ஏந்த வைக்கிறது. இவர்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் காட்டுக்குள் ரோந்து போகிறார்கள். அங்கே ஜெர்மானிய ராணுவக்குழு யாரையோ சத்தமில்லாமல் கொன்று போட்டுவிட்டுப் போகிறது. ஊருக்குள் ஓடிவந்து விஷயத்தை சார்ஜண்டிடம் சொல்கிறாள் அந்த எஸ்தோனியப் பெண். வோஸ்கோவ் உடனடியாக தலைமையகத்துக்கு ஃபோன் போட்டு விவரம் சொல்லி உதவி கேட்கிறான். உதவி வரும் வரை சமாளி என்று உத்தரவு வருகிறது. அதன் பொருள் உதவி வரத் தாமதமாகும், அதுவரை எப்படியாவது இடத்தை விட்டுவிடாமல் பிடியில் வை என்பதே என்கிறான் வோஸ்கோவ்.

துப்பாக்கி சுடுவதில் ஓரளவு தேர்ச்சி உள்ள ஐந்து பெண்களைக் கூட்டிக்கொண்டு அந்த ஜெர்மானியர்களைத் தேடிப் போகிறான் வோஸ்கோவ். தங்களுக்கு உதவி வந்து சேரவேண்டும் என்றால் அங்கே கிராமத்தைத் தாண்டிச் செல்லும் ரயில்வே பாதையைப் பாதுகாக்கவேண்டும் என்று அந்தப் பெண்களுக்குப் புரியவைக்கிறான் வோஸ்கோவ். சோவியத்துகளுக்கு மட்டுமல்ல, மற்ற நேச நாடுகளுக்கும் இது மிக் முக்கிய போக்குவரத்துக் கேந்திரமாக இருக்கிற தடம். அந்த கிராமத்தில் உள்ள ஏரியை ஜெர்மானியர் கண்டுபிடிக்க முடியாது என்று ஃபின்னிஷ் ஆட்களிடம் இருந்து புரிந்து கொள்கிறான். ஜெர்மானியரின் மேப்பில் சரியானபடி இது குறிக்கப்பட்டிருக்காது என்றும், அவர்கள் ஒரு வரம்பில் இருந்து இன்னொரு வரம்பிற்கு வருவதற்குள் அவர்களைத் தடுக்கவோ குழப்பவோ ஏதாவது செய்தாக வேண்டும் என்கிறான். பயிற்சி என்ற பெயரில் ஏரிக்குக் குறுக்கும் நெடுக்குமாகப் போய்வருகிறார்கள். ஏரியின் ஒவ்வொரு பகுதிக்கு ஒவ்வொருவர் என கண்காணிப்புக்கு இருக்கிறார்கள்.

ஒவ்வொரு கண்காணிப்பு இடமாகச் சென்று பார்க்கிறான் வோஸ்கோவ். அங்கே பெண்கள் தலைசீவிக் கொண்டும், அலங்காரம் சரிபார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். குளிரில் நடுங்கும் ஒரு பெண்ணுக்குக் கொஞ்சம் மூன்லைட் கொடுத்துவிட்டு விழிப்புடன் இருக்கச் சொல்கிறான். ஏரியின் மறுபக்கம் 16 ஜெர்மானிய அழிவுப்படை ஆட்கள் வருகிறார்கள். இவர்கள் ஜெர்மானியரைப் பற்றித் தகவல் சேகரித்து அனுப்பத் திட்டமிடுகிறார்கள். ஆனால் ஒரு பெண் ஏரியைக் கடக்கும் போது ஜெர்மானியரால் கொல்லப்படுகிறாள். பழிவாங்க வோஸ்கோவ் போய் இரண்டு ஜெர்மானியர்களைக் கொல்கிறான். மூன்றாமவன் வோஸ்கோவைக் கொல்ல கத்தியை எடுத்தபோது ஃபின்லாந்து (சோவியத்) வீராங்கனை ஒருத்தி ஜெர்மானியனைக் கொல்கிறாள். அங்கிருந்து தப்பி, இறந்தவள் உடலை மீட்டு வந்து அடக்கம் செய்கிறார்கள். தனியங்கித் துப்பாக்கிகளுடன் வரும் ஜெர்மானியர்களைச் சமாளிக்க தாங்கள் கொன்ற மூவரின் துப்பாக்கிகள் மேகசின்களைத் தூக்கி வருகிறார்கள். மீதமுள்ள 13 ஜெர்மானியர்கள் இவர்களைத் தாக்க வரும் போது துப்பாக்கிச்சூடு அதுவும் தானியங்கித் துப்பாக்கிகள் ரஷ்யப் படையில் இருந்து தாக்குவது கண்டு ஜெர்மானியர்கள் திகைக்கிறார்கள். ஒரு ஜெர்மானியன் கொல்லப்படுகிறான். அவனைத் தூக்கிக்கொண்டு பின்வாங்குகிறார்கள்.

தாக்குதலில் பயந்து போன ஒரு பெண்ணைத் தன்னுடன் வரச்சொல்கிறான் வோஸ்கோவ். அடுத்தக்கட்டத் தாக்குதலில் ஜெர்மானியர் சுடத் தொடங்கியதும் இவள் பயந்து அலறுகிறாள். இவளைக் கொன்றுவிடுகிறார்கள் ஜெர்மானியர்கள். அங்கே இரு ஜெர்மானிய வீரர்களைக் கொன்றுவிட்டு ஓடுகிறான் வோஸ்கோவ். 11 பேர் துரத்தித் துரத்திச் சுடுகிறார்கள். கையில் குண்டடி பட்டு ஏரியில் குதித்து நீந்துகிறான். ஜெர்மானியர் பின்வாங்குகின்றனர். மறுகரை ஏறி சோர்ந்து படுத்துவிடுகிறான் வோஸ்கோவ். ஏரிக்குள்ளே ஜெர்மானியர்கள் முதலில் கொன்ற பெண்ணின் கோட்டு ஒரு மூங்கில் குச்சியில் தெரிகிறது. அதைப் பார்த்துவிட்டு திரும்பிப்படுத்து குண்டுபட்ட காயத்தில் மண்ணை அப்பிக்கொள்கிறான் வோஸ்கோவ்.

ஏரிக்கு அருகே சிறு பாறையில் அருவி போலத் தண்ணீர் விழுகிறது. ஜெர்மானியக் குழுவின் தலைவன் அங்கே தண்ணீர் பிடிக்கிறான். மறைந்திருந்து தாக்கும் வோஸ்கோவ் அவனைக் கொல்கிறான். அருவிக்கு அருகே சோர்வாக அமர்ந்திருக்கும் வோஸ்கோவ் உயிருடன் இருக்கும் மற்ற இரு பெண்களின் குரலைக்கேட்டு எழுந்து வருகிறான். அவர்கள் சார்ஜண்டை ஜெர்மானியர்கள் கொன்றுவிட்டார்கள் என்று கத்தியபடி வருகிறார்கள். வோஸ்கோவைப் பார்த்தவுடன் கட்டிப்பிடித்து அழுகிறார்கள். கைப்புண்ணுக்கு மருந்து போட்டுக் கொண்டு மீண்டும் வேட்டைக்கு என்று சொல்லிக் கிளம்பிவிடுகிறார்கள்.

மீதமிருக்கும் ஜெர்மானியர்களைக் குறிவைத்துச் சுட்டு ஒவ்வொருவராகக் கொல்கிறார்கள். ஜெர்மானியர் எறிந்த கைக்குண்டு வெடித்து ஒரு பெண் நினைவு தப்பிக் கிடக்கிறாள். வோஸ்கோவ் அவளைக் கண்விழிக்கச் செய்ய முயல்கிறான். முடியவில்லை. மீதமிருக்கும் மற்றொரு பெண் ஜெர்மானியர்களை வேறு பக்கம் திசை திருப்பிவிட்டு ஓடுகிறாள். எஞ்சிய ஜெர்மானியர்கள் 6 பேர் அவளைத் துரத்துகின்றனர். அவள் 2 பேரைக் கொல்கிறாள். அவளை ஜெர்மானியர் சுட்டுக் கொன்றுவிடுகின்றனர். இங்கே குண்டு வெடித்து நினைவிழந்த பெண் வயிறு கிழிபட்டுக் கிடக்கிறாள். நினைவு திரும்பினாலும் பிழைப்பது கடினம். நான்கு ஜெர்மானியர்களில் ஒருவனை வோச்கோவ் சுட்டுவிடுகிறான். மீதமுள்ள மூவர் காயம்பட்டு ஒரு குகை போன்ற இடத்தில் ஒளிந்திருக்கிறார்கள். அங்கேயே அவர்களை சட்டையைக் கழட்ட வைத்துக் கைது செய்து அழைத்துப் போகிறான் வோஸ்கோவ். வழியில் சோவியத் ராணுவத்தின் உதவிப்படை வருகிறது. அவர்கள் வந்ததும் மயங்கி விழுகிறான் வோஸ்கோவ்.

அவனை மீட்கிறது ராணுவம். அவனுக்கு சிகிச்சைக்குப் பிறகு சார்ஜண்ட் மேஜர் என்று பதவி உயர்வு தரப்படுகிறது. பெண்களுக்கான ராணுவத்தின் சிறப்புப் பணி அவனுக்குத் தரப்படுகிறது. ஆனால் ரஷ்யர்கள் அல்லாத வேறு நாட்டவர்கள் என்பதால் அந்த 5 பெண்கள் பற்றிய குறிப்பே சோவியத் ராணுவத்தில் இல்லை.

வோஸ்கோவின் சொந்த நாட்குறிப்பில் இருந்தும் அவரிடம் பேசியும் பலர் திரட்டிய சம்பவங்களே இந்தக் கதையின் அடிப்படை. கதையின் போக்கில் சோவியத் ராணுவம் புரட்சி என்ற பெயரில் குடும்பங்களைப் பிரித்து சைபீரியாவுக்கு அனுப்பியதும், இரண்டாம் உலகப் போரை மகா தேசபக்த யுத்தம் என்று பெயரிட்டு அந்தக் குடும்பங்களில் இருந்தே ஆண், பெண்களை ராணுவத்துக்கு எடுத்ததும், அவர்களது உயிர்த்தியாகங்கள் கூட மதிக்கப்படாது போனதும் நினைவுறுத்தப்படுகிறது. சிறு பிள்ளைகளைக் குடும்பத்திலிருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து சோவியத் ராணுவப் பள்ளிக்கு அனுப்பி அவர்களைப் போருக்குப் பயன்படுத்தப் பயிற்றுவித்ததும் பதிவு செய்யப்படுகிறது.

2016ல் வெளியான இந்தப்படம் 2 கோடி ரூபிள்கள் செலவில் எடுக்கப்பட்டது. உலகெங்கிலும் 45லட்சம் அமெரிக்க டாலர்கள் வசூலானது என்று ரியல் டக்கோட்டா ஸ்டார்மீடியா என்ற இந்தப் படத்தைத் தயாரித்த நிறுவனம் சொல்கிறது. ரஷ்ய கலாசார அமைச்சகம் சில எதிர்ப்புகள் / கண்டனங்கள் தெரிவித்ததால் விருதுகள் பரிந்துரைக்கப்படவில்லை.

Leave a Reply