Posted on Leave a comment

உறையூர் சுருட்டும் சர்ச்சிலும் | ராம் ஸ்ரீதர்

சில நாட்கள் முன்பு மக்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி சுமார் 75 ஆண்டுகள் முன்பு நடந்த ஒரு சம்பவத்தை விவரித்தார்.

60களில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க தமிழகத்தில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த நேரத்தில் அந்தக் குழுவின் தலைவர் ‘டாப் சீக்ரெட்’ என்று எழுதப்பட்ட உறை ஒன்றைப் பெற்றார்.

அவர் உறையைத் திறந்தபோது, கடிதம் எழுதிய நபர் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருவதாகவும் நேர்மையாக வேலை செய்வதாகவும் ஒரு விண்ணப்பம் எழுதி இருப்பதைக் கண்டார். ஆனால் அவரது சம்பளம் ஒருபோதும் அதிகரிக்கப்படவில்லை.

சர்ச்சிலின் சுருட்டு

அவரது விண்ணப்பத்தைப் படித்த பிறகு, தலைவர் அவருக்கு ஒரு கடிதம் எழுதி, அவரது பெயர் மற்றும் நிலை குறித்து விசாரித்தார்.

அந்த நபர் சி.சி.ஏ (C C A) பதவியில் மாநில அரசின் தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் பணிபுரிவதாக எழுதினார்.

குழுவின் தலைவர் சி.சி.ஏ பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. இந்த நிலைப்பாடு குறித்து மேலும் விவரங்களை நாடினார்.

அந்த நபர் தான் அரசாங்க சத்தியப் பிரமாணத்துக்குக் கட்டுப்பட்டவர் என்றும் அப்போதைக்கு அதை வெளிப்படுத்தும் நிலையில் இல்லை என்றும் கூறினார். எவ்வாறாயினும், 1975க்குப் பிறகுதான் அதைப் பற்றி பேச முடியும் என்று அவர் கூறினார்.

தலைவர் மீண்டும் அவருக்குக் கடிதம் எழுதினார், 1975க்குப் பிறகு அவரது அவல நிலையைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறினார்.

இந்த விஷயம் கையை விட்டு வெளியேறுவதை உணர்ந்த அந்த முகம் தெரியாத நபர், சி.சி.ஏ என்றால் Churchill Cigar Assistant (சர்ச்சிலின் சுருட்டு உதவியாளர்) என்று தலைவருக்கு தன்னுடைய வேலையின் நிலையை விவரித்தார்.

வின்ஸ்டன் சர்ச்சில் சிறந்த உறையூர் (திருச்சி) சுருட்டுகள் மற்றும் (Pol Roger champagne) போல் ரோஜர் ஷாம்பெயின் ஆகியவற்றின் மீது அளவு கடந்த காதல் கொண்டிருந்தார்.

சுருட்டுகளை வழங்குவதற்கான ஏற்பாடு 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் தொடர்ந்தது.

இந்த உதவியாளரின் பணி, மிகச்சிறந்த உறையூர் (திருச்சி) சுருட்டுகளைப் பாதுகாப்பாக நல்ல முறையில், சர்ச்சிலின் அரசாங்க (லண்டன்) இருப்பிடமான 10 டௌனிங் தெருவுக்குச் சென்று அடைவதை உறுதி செய்வதாகும்.

1945 தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் சர்ச்சிலுக்கு சி.சி.ஏ தொடர்ந்து சுருட்டு வழங்கியது.

இந்தியா சுதந்திரமானவுடன் இந்த ஏற்பாடு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தொடர்ந்தது, பதவி நீடித்தது.

இந்த சுவாரஸ்யமான சம்பவத்தை விவரிப்பதன் பின்னணியில் உள்ள விஷயம் என்னவென்றால், மாற்றங்கள் செய்யவேண்டிய போது செய்யப்படாவிட்டால், இந்த மாதிரி காலாவதியான மோசமான சட்டங்கள் மேலோங்கியே நிற்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

இதில் பிரதமர் விவரிக்காத ஒரு வேதனையான உண்மை என்னவென்றால், 2011ல் மதுஸ்ரீ முகர்ஜி என்பவர் எழுதிய ‘Churchill’s Secret War’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இந்தியா மீது சர்ச்சில் கொண்டிருந்த அலட்சியப் போக்கால், 1943 – 44 வருட காலத்தில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர், குறிப்பாக கல்கத்தா மற்றும் அதைச் சுற்றியிருந்த ஊர்களில், பஞ்சத்தால் / பட்டினியால் கொடூரமாக உயிரிழந்தனர்.

இந்தியர்களுக்கு சர்ச்சில் உதவி செய்ய மறுத்துவிட்டது மட்டுமல்லாமல், மற்றவர்கள் அவ்வாறு செய்வதைத் தடுத்தார். ‘இந்தியர்கள் ‘எலிகளைப் போல வதவதவென்று மக்கட்தொகை பெருக்கம் செய்து கொண்டு வளர்கிறார்கள்’ என்று மோசமாக இந்தியாவைப் பற்றி கருத்து தெரிவித்தார்.

இத்தகைய வெள்ளைக்காரர்களுக்குப் பல நூறு ஆண்டுகள் அடிமையாக இருந்த அடிமைப் புத்தி நமக்கும், நம் அரசாங்கத்திற்கும் போகவில்லை என்பதால், அப்போது மட்டுமல்ல, அதற்குப் பிறகும் பல ஆண்டுகளுக்கு, மிகச் சிறந்த உறையூர் சுருட்டுகளைத் தேர்ந்தெடுத்து அந்த சர்ச்சிலுக்கு அனுப்புவது தொடர்ந்தது.

இந்தியாவுக்கு (குறிப்பாக, கல்கத்தாவுக்கு) பர்மாவிலிருந்து அரிசி அனுப்ப ஏற்பாடு செய்ய விரும்புவதாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தெரிவித்ததைக் கிடப்பில் போட்டது, அப்போது இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு.

வெளிநாடுகளைச் சேர்ந்த (குறிப்பாக, இங்கிலாந்தைச் சேர்ந்த) சில தொண்டு நிறுவனங்கள் உதவி தர முன்வந்தபோது, அப்போது சர்ச்சிலின் ஆலோசகராக இருந்த அலெக்ஸ்சாண்டர் லிண்டெர்மான் என்பவர் ‘இந்த உதவிகள் தேவையில்லை. ஏனென்றால், நன்றாகச் சாப்பிடாமலேயே எலிகளைப் போல பல்கிப் பெருகும் இந்தியர்கள், சரியான உணவு கிடைத்தால் இன்னும் பெருகிவிடுவார்கள். எனவே இதைத் தவிர்க்க வேண்டும்’ என யூதர்களைத் திட்டம் போட்டுப் பட்டினி கிடைக்க வைத்து சாகடித்த ஹிட்லர் பாணியில் பேசினார் என்பதும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போரின் உண்மையான ஹீரோ, தர்மத்தின் குரல் என்பவை எல்லாம் சர்ச்சில் என்ற இந்தத் தீய மனிதரைச் சுற்றி எழுப்பப்பட்ட பொய் பிம்பங்கள் என்பது இந்தப் பதைபதைக்கவைக்கும் புத்தகத்தைப் படிப்போருக்குத் தெரிய வரும்.

Leave a Reply