Posted on Leave a comment

மாற்று யதார்த்தம் | ராம் ஸ்ரீதர்

Alternte Reality

ஆங்கிலப் புத்தகங்கள் / டிவி தொடர்கள் / திரைப்படங்கள், பரீட்சார்த்தம் என்ற பெயரில் விதவிதமாக, மிக விநோதமாகச் சிந்திக்கின்றன. நடந்து முடிந்த ஒரு வரலாற்று உண்மையை மாற்றி, அதற்குப் பதில் ‘இப்படி நடந்திருந்தால் (What If?)’ என்று வித்தியாசமாகச் சிந்திப்பதுதான் Alternate Reality எனப்படும் மாற்று யதார்த்தம். இந்தியாவில் நடந்த ஒரு நிகழ்வை வைத்து, மாற்று யதார்த்தம் ஒன்றை யோசிக்கலாமா?

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன், நேதாஜி சுபாஷ் சந்திர போஸும் காங்கிரஸில்தான் இருந்தார். ஆனால், ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவோம் என்று அவர் சொன்னது காந்திக்குப் பிடிக்கவில்லை.

காந்தி மட்டுமல்ல, நேரு மற்றும் அவரைச் சார்ந்த கூட்டத்துக்கும் பிடிக்கவில்லை. எனவே, காந்திக்குப் பெரிய அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டு, சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸிலிருந்து விலக்கப்பட்டார். நேருவுக்கு இருந்த ஒரே தடையும் நீங்கியது. நாடு சுதந்திரம் அடைந்தவுடன், நேரு ஜோராக முடிசூட்டிக்கொண்டார்.

இது என்ன அரசாட்சியா? முடிசூட்டிக்கொண்டாரா என்று ஆச்சரியப்பட்டு சில கேட்கலாம்.

ஆம், அப்படித்தானே நடந்தது? நேருவுக்குப் பிறகு, அவர் மகள் இந்திரா; அதற்குப் பிறகு அவர் மகன் ராஜீவ். இப்போது அதற்குப் பிறகு அவர் மகன் ராகுலைப் பிரமதராக்கிவிட, முண்டா தட்டிக்கொண்டு அலைகிறார்களே?

இதைப் பற்றி நான் மேற்கொண்டு பேச விரும்பவில்லை.

இப்போது, மாற்று யதார்த்தம் பற்றிய விஷயத்துக்கு வருவோம்.

நேதாஜி, ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவோம் என்று சொன்னதை காந்தி ஒப்புக்கொள்ளாவிடினும், நேரு அவரை சம்மதிக்க வைக்கிறார். நேதாஜி, ஏற்கனவே ஹிட்லரிடம் பேசிய படி, ஜெர்மானியப்படைகள் இந்தியாவுக்கு ஆதரவு தர சம்மதிக்கின்றன. ஆங்கிலேயத் தலைமை யோசிக்கி்றது.

ராபர்ட் கிளைவ், சென்னை கோட்டையில் (St. George Forte) ஜூன், 1744 ஆண்டு காலடி எடுத்து வைத்ததில் ஆரம்பித்து, கிட்டத்தட்ட 203 ஆண்டுகள் நம்மை ஆண்டு, எவ்வளவு செல்வங்களைச் சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டி, படிப்பு தருகிறோம், சாலைகள் அமைக்கிறோம், ரயில்வேயைக் கொண்டுவருகிறோம் என்றெல்லாம் பலப்பல கலர் போர்வைகளை நம் தலையில் போர்த்தி, கண்களை மறைத்து, சிந்திக்கும் திறனை மழுங்கடித்து, கோடிக்கணக்கான மக்களை, அவர்களின் அறியாமை, கல்வியின்மை, வறுமை போன்ற பல காரணங்களைப் பயன்படுத்தி, கிறித்துவ மதத்திற்கு மதமாற்றம் செய்து, அதில் பெரும் வெற்றி பெற்றார்கள்.

போதும், தேவையான அளவு இந்தியாவைச் சுரண்டிவிட்டோம்; இப்போது, ஜெர்மானியப் படையின் உதவியோடு, போருக்கு ஆயத்தமாகும் நேதாஜியைப் பகைத்துக்கொள்ள வேண்டாம். விட்டுக்கொடுத்துப் போய்விடுவோம்.

ஆங்கிலேய அரசு விலகுகிறது.

நேதாஜி சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், நேரு முதல் ஜனாதிபதி ஆகிறார்கள். இதற்கு அப்புறம் இந்திய நிலைமை எப்படி மாறியிருக்கும்? இதுதான் மாற்று யதார்த்தம்.

இது என் மனதில் பல வருடங்களாக இருக்கும் ஒரு கதைக்கரு. இது போன்ற நாவல் எழுதினால் என்ன ஆகுமோ என்ற யோசனையிலேயே இந்த எண்ணத்தைக் கிடப்பில் போட்டுள்ளேன்.

இது போன்ற மாற்று யதார்த்தத்துடன், இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி வெற்றிபெற்றிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற கற்பனையில் தோன்றிய பல நாவல்கள், அவற்றைத் தழுவி எடுத்த திரைப்படங்கள் / தொலைக்காட்சித் தொடர்கள் உள்ளன.

இவை எல்லாமே பிரமாதம் என்று சொல்ல மாட்டேன். மிக நன்றாக இருக்கும் சிலவற்றை மட்டும் கீழே தந்துள்ளேன்:

The Man in the High Castle by Philip K. Dick

ஆங்கில அறிவியல் புனைவுகளின் மிகப் புகழ்பெற்ற எழுத்தாளர் பிலிப் கே டிக். இவரும் தன் பங்குக்கு மாற்று யதார்த்தம் – கொண்ட ஒரு நாவலை எழுதினார்.

இதில் இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகள் படை, ஹிட்லரின் நாஸிப் படையினரால் தோற்கடிக்கப்பட்டு, நியூ யார்க் நகரைத் தங்கள் தலைநகராக மாற்றிக் கொள்கிறார்கள். ஜப்பானியப் படைகள் இதே வேலையைச் செய்து கலிஃபோர்னியா மாநிலத்தைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்கிறார்கள்.

*

Empire of Lies by Raymond Khoury

மற்றொரு பிரபல எழுத்தாளர் ரேமண்ட் கூரி எழுதியுள்ள எம்பயர் ஆஃப் லைஸ் என்ற நாவலும் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஸிகள் (Nazi) ஹிட்லரின் தலைமையின் கீழ் பெரும் வெற்றி பெறுகிறார்கள். ஐரோப்பா முழுவதுமே ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்கிற கதையைச் சற்று வேறு கோணத்திலிருந்து சொல்கிறது.

*

SS – GB by Len Deighton

நவம்பர் 1941: இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் பிப்ரவரி 19 அன்று முடிவடைந்து, பிரிட்டன் நாஸி ஜெர்மனியிடம் சரணடைகிறது. ஜெர்மனியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு பதிலாக ஒரு கைப்பாவை பிரதமர் நியமிக்கப்படுகிறார். ஆறாம் ஜார்ஜ் மன்னர் லண்டன் கோபுரத்தில் சிறை வைக்கப்படுகிறார். யூதர்கள் சுற்றி வளைக்கப்பட்டு ‘வென்லாக் எட்ஜில் உள்ள மோசமான சித்திரவதை முகாமுக்கு’ அனுப்பப்படுகின்றனர். லண்டனில் ஊரடங்கு உத்தரவு அமலில் வருகிறது.

ஆக்கிரமிக்கப்பட்ட மண்டலம் முழுவதும் ரேஷன் கடுமையாக உள்ளது. ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் வீரர்கள் POW (போர்க் கைதிகள்) முகாம்களில் அல்லது கட்டாயத் தொழிலாளர்கள் முகாம்களில் ஆங்காங்கே அடைத்து வைக்கப்பட்டுக் கொடுமையான முறையில், கடுமையான வேலைகளைச் செய்ய கட்டாயப் படுத்தப்படுகிறார்கள்.

எல்லா இடங்களிலும், முந்தைய குளிர்காலத்தின் போரில் சரிசெய்யப்படாத போர் சேதத்தின் அறிகுறிகள் உள்ளன. குண்டுகள் விழுந்த பள்ளங்கள் மற்றும் குவிந்த இடிபாடுகள் ஆகியவை மஞ்சள் நாடாக்களால் மட்டுமே குறிக்கப்படுகின்றன. நாஸி படைகளின் கொடூரக் கொலைகளின் அடையாளங்கள் அனைத்து இடங்களிலும் தெரிகின்றன.

*

Fatherland by Robert Harris

பிரபல எழுத்தாளர் ராபர்ட் ஹாரிஸ் எழுதிய ஃபாதர்லேண்ட் என்ற நாவலும் கிட்டத்தட்ட மேற்குறிப்பிட்ட SS – GB நாவல் போலவே ஜெர்மானிய அரசின் கீழ் இருக்கும் ஐரோப்பா பற்றியதுதான்.

*

The Plot Against America by Philip K Roth

பிலிப் ரோத் இதே பெயரில் 2004ம் ஆண்டு எழுதிய நாவலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர், 2020ல் வெளியாகி, முதல் சீஸன் தற்போது முடிந்துள்ளது.

1940ம் ஆண்டு யு.எஸ். ஜனாதிபதித் தேர்தலில் சார்லஸ் லிண்ட்பெர்க்கால், ஃபிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் தோற்கடிக்கப்பட்ட ஒரு மாற்று வரலாற்றில் கதாபாத்திரங்கள் வாழ்கின்றன. இந்த சார்லஸ் லிண்ட்பெர்க் என்பவர் ஒரு புகழ்பெற்ற அமெரிக்க விமானப் படைவீரர். 1927ல் (அவருக்கு வயது அப்போது 25!) நியூ யார்க் நகரிலிருந்து பாரீஸ் நகருக்கு, சுமார் 5800 கிமீ, தன்னந்தனியாக, அவரே வடிவமைத்த, ஒரே ஒரு எஞ்சின் கொண்ட விமானத்தில், எங்குமே நிற்காமல் பயணம் செய்து (அந்தக் காலத்தில், அப்படி ஒரு சிறிய விமானத்தில்) சாதனை புரிந்தார்.

*

The Muslim Prince – by Roger Ley

1997 இல் பாரிஸ் கார் விபத்தில் இளவரசி டயானா இறந்திருக்காவிட்டால்? விபத்து எதுவும் இல்லாதிருந்தால்? டயானா அவருடைய காதலர் டோடி ஃபயீத்தை மணந்து, இஸ்லாத்திற்கு மாறினார் என்றால்? இந்த மாற்று யதார்த்தப் பின்னணியில் இளவரசர் வில்லியம் அரியணையில் ஏறுகிறார். அவரது தாயார் இளவரசி டயானா ஒரு முஸ்லீம் ராணி தாயாக ராயல் குடும்பத்தில் இணைகிறார்.

இதற்கிடையில், டயானாவின் பேரன் ஜேம்ஸ், அரியணைக்கு அடுத்த உரிமையாளர். இவர் ஒரு சௌதி அரேபிய இளவரசியைக் காதலிக்க, அவரோ, ஜேம்ஸ் இஸ்லாமிற்கு மாறி, இங்கிலாந்தின் முதல் முஸ்லீம் மன்னராக வேண்டும் என்று விரும்புகிறார். இந்தப் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான த்ரில்லர். இன்னும் சில வருடங்களில் நம் உலகம் முழுவதுமே இஸ்லாம் மதத்தினர் கையில் போய்விடும் என்ற சில்லிடும் உண்மையை உணர்த்தும் நாவல்.

*

ஆங்கில நாவல்களில் இந்த alternative reality யையே முக்கியக் கருவாகக் கொண்டு ராபர்ட் கன்வாய் போன்ற சில எழுத்தாளர்கள் 10க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார்கள்.

*

Inglourious Basterds by Quentin Tarantino (2009) :

மாற்று யதார்த்தத்தை வைத்துக்கொண்டு பல திரைப்படங்களும் வந்துள்ளன. அதில், நான் பார்த்த, எனக்குப் பிடித்த படம் ஹாலிவுட்டின் அதிரடி இயக்குநர் Quentin Tarantino இயக்கிய The Inglorious Basterds என்ற படம். திரைப்படத்தின் கதை மாற்று யதார்த்தம் என்பதை படத்தின் பெயரில் உள்ள Bastards என்பதை Basterds என்று தவறாகக் குறிப்பிட்டதிலேயே சுட்டிக் காட்டுகிறார் இயக்குநர். 1944-ம் வருடம், ஃபிரான்ஸ் தலைநகரான பாரீஸ் நகரில் சில அமெரிக்க – யூத இளைஞர்கள் திட்டம் போட்டு, ஒரு திரைப்படம் பார்க்க வரும் ஹிட்லரைப் போட்டுத் தள்ளுகிறார்கள். மிக வித்தியாசமான காட்சிகளும், திரைக்கதையும் கொண்ட இந்தத் திரைப்படம் மிக விறுவிறுப்பாக நகரும்.

இங்கு, நம் இந்தியாவில், பல்வேறு அரசியல் காரணங்களால் இது போன்ற படங்களை எடுத்து யாரும் வெளியிட முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.

Leave a Reply