Posted on Leave a comment

ரஷ்ய உளவாளிகள் | அருண் பிரபு

Black March – Unofficial Assignment – Russian Detectives

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியும் செக்கோஸ்லோவாகியாவும் சரணடைந்தாலும் சிறு சிறு எதிர்ப்புக் குழுக்கள் சோவியத் படைகளை எதிர்க்கின்றன. ஆயுதப் போராட்டமாக இது உருவெடுக்க ரஷ்ய உளவுப்படை ஒன்று உள்ளே வருகிறது. எங்களை எதிர்க்கிறார்கள் என்றால் நாங்கள் வருகிறோம் என்று அமெரிக்காவோ பிரிட்டனோ வரும், வந்தால் தன் கை தாழும் என்று எண்ணும் ஸ்டாலின் உளவுப்படைகளை அனுப்பி இந்த எதிர்ப்பாளர்களை ‘கவனிக்க’ உத்தரவிடுகிறார். ஸ்டாலினுக்கு நெருக்கமான கர்னல் ஒருவரிடம் இந்த வேலை ஒப்படைக்கப்படுகிறது.

களத்தில் இருக்கும் படையினர் ‘பெரிய ஆபீசர் வருவார் என்று பார்த்தால் கர்னல் வருகிறார், ஆனால் அவர் ஸ்டாலினிடம் நேரடியாகப் பேசக்கூடிய செல்வாக்குள்ளவராம்’ என்று பேசியபடி தேடுதல் வேட்டை நடத்துகிறார்கள். போராளிகளைப் பிடித்துவரவோ அல்லது கொன்றுவிடவோ உத்தரவு இவர்களுக்கு. போராளிகளை SS படைத் தலைவர்கள் வழி நடத்துகின்றனர் என்று கண்டு பிடிக்கின்றனர். எச்சரிக்கையுடன் அணுக உத்தரவு வருகிறது. ஒரு வீட்டைக் கண்டுபிடிக்கிறார்கள். அங்கே எதிரிகள் இருக்கலாம் என்று சந்தேகம். வீட்டுக்குள் இருப்பவர்கள் சுடுகிறார்கள். பதிலுக்கு சுடாமல் ஒரு குழு பதுங்கிச் செல்கிறது. மற்றொரு குழு தயாராக நிற்க, அருகே போனதும் தயாராக இருக்கும் குழு சுடுகிறது. பதுங்கிய குழு அருகே போய் கையெறி குண்டுகளை வீசி வீட்டை நிர்மூலமாக்குகிறார்கள். அங்கேயே நெருப்பு மூட்டிக் குளிர்காய்கிறார்கள். காயமடைந்தவர்களை ஒரு வண்டியில் அனுப்புகிறார்கள். மற்றவர்கள் வேறொரு வண்டியில் போகிறார்கள். காயமடைந்தவர்கள் வண்டி தாமதமாகியும் வராது போகவே தேடுகிறார்கள். ஒரு இடத்தில் வண்டி எரிந்து கிடக்கிறது. காயமடைந்தவர்களும் காவலுக்கு வந்தவர்களும் இறந்து கிடக்கிறார்கள். இதற்குப் பழி தீர்க்க போராளிகளைத் தேடுகிறார்கள். ஓரிடத்தில் அவர்களைக் கண்டு சண்டை போடுகிறார்கள். ரஷ்யப் படையில் ரேடியோ ஆப்பரேட்டராக வரும் இளைஞன் இறக்கிறான். போராளிகளில் பலர் கொல்லப்பட்டு ஒருவன் பிடிபடுகிறான். ஹிட்லர் இருந்த போதே படையை விட்டு ஓடி வந்ததாகவும் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சொல்கிறான்.

ரஷ்யப் படைத் தலைவன் துப்பாக்கியை எடுத்ததும் போராளிகள் பற்றி பல விவரங்களைச் சொல்கிறான். தேடுதல் வேட்டை தொடர்கிறது. ஜெர்மானியனைக் கைதியாகக் கொண்டு போகிறார்கள். இரவில் அவன் ரஷ்யர்களைக் கொல்லப் பார்க்கிறான். அவனை காவலுக்கு நிற்கும் ஒரு வீரன் கொல்கிறான். 15 ஜெர்மன்/செக் போராளிகள் கடந்து போகிறார்கள் என்று கண்டுகொண்டு பின் தொடர்கிறார்கள். ஏரிக்கரையில் அவர்கள் பதுங்கி அடுத்த தாக்குதல் நடத்த இருப்பதை அறிகிறார்கள் ரஷ்யர்கள். மேலிடத்தில் இருந்து உதவி வருமா என்றால் வராது. ஸ்டாலினின் நெருக்கமிக்க கர்னல் ஊருக்குள் உட்கார்ந்து ஓட்கா குடித்தபடி உத்தரவுகளைப் போடுகிறார். பிணங்களை எண்ணிப் புதைக்க உத்தரவிடுகிறார். உண்டு உறங்கிக் குடித்துக் களித்து யூனிஃபார்ம் மட்டும் போட்டபடி வலம் வருகிறார்.

படையினர் ஆயுதம், ஆள் என்று என்ன கேட்டாலும் ‘இது ரகசிய ஆபரேஷன், வேலைகளைச் செய்யுங்கள்’ என்று மனப்பாடம் செய்தது போன்ற பதிலைச் சொல்கிறார். களத்தில் மேலும் இரு ரஷ்ய வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். கர்னல் வெளி உலகுக்குத் தெரியக்கூடாது என்று ரகசியம் காக்கிறார். மேலிடத்திலிருந்தும் உதவி வரவில்லை. உதவி கேட்டு கர்னல் தகவல் சொல்லவில்லை. போராளிகளோ படை என்ற அமைப்பு இல்லாவிட்டாலும் சரியான ஒருங்கிணைவுடன் செயல்படுகிறார்கள் என்று ரஷ்யப்படையினர் சொல்கிறார்கள். கர்னல் அதைக் காதிலே போட்டுக் கொள்ளாமல் போகிறார். மீறிப் பேசினால் சைபீரியச் சிறைவாசம் என்ற அச்சுறுத்தல். போராளிகளுக்கு ஒரு ஜெர்மானிய பிரிகேடியர் தலைமை தாங்கி களத்தில் நின்று வழி நடத்துகிறார். சைபீரியா போய்ச் சாவதற்கு இங்கே சாகலாம், குடும்பமாவது பிழைக்கும் என்று சொன்னபடி போகிறார்கள் படையினர். போராளிகள் பதுங்கிப் பதுங்கி ரஷ்ய வீரர்கள் பலரைக் கொல்கிறார்கள். கர்னல் ஊருக்குள்ளே பெரிய வீடு ஒன்றில் அமர்ந்தபடி ரேடியோ செய்தி வராததால் மேலிடத்துக்குத் தகவல் சொல்கிறார். சிறு படை வந்தால் போதும், சமாளிப்பது சுலபம் என்கிறார்.

12 பேர் கொண்ட உளவுப்படையில் 4 பேர் மட்டுமே எஞ்சுகிறார்கள். அவர்கள் போராட்டத்துக்கு புதிய உத்தி வகுக்கிறார்கள். ஆனால் அவர்கள் உறங்கும் போது போராளிகள் இருவரைச் சுட்டுக் கொல்கிறார்கள். மற்ற இருவர் பதுங்கித் தப்பிக்கிறார்கள். போராளிகளைத் தொடர்ந்து ஓசையின்றிப் போய் அவர்கள் 22 பேர் உறங்கும் இடத்தில் சேர்கிறார்கள். நள்ளிரவில் குகைக்குள்ளே நுழைந்து காவலுக்கு இருப்பவனைச் சங்கறுத்துக் கொல்கிறார்கள். மீதமுள்ளவர்களைச் சுடுகிறார்கள். அவர்களது பிரிகேடியர் தப்பிக்கிறார். பின்வழியே குகைக்குள் நுழைந்து ஒருவனைச் சுடுகிறார். மற்றவன் அவரை அடித்துப் போட்டு அவரது துப்பாக்கியாலேயே நெற்றிப் பொட்டில் சுட்டுவிட்டு தன் தோழனைத் தூக்கிச் செல்கிறான்.

விடிகிறது. பிழைத்திருக்கும் ஒருவன் மட்டும் அமர்ந்திருக்கிறான். அங்கே ரஷ்யப்படைகள் வரும் அறிகுறிகள் தெரிகின்றன. பிழைத்திருக்கும் உளவுப்படைக்காரனின் பெயர்கூடக் கேட்காமல் கர்னலின் ஆள் என்று அடையாளம் சொல்கிறார்கள். என்னடா என்று பார்த்தால் கர்னலின் வழிகாட்டுதலில் தாக்குதல்கள் நடந்ததாக அறிக்கை போயிருக்கிறது. கர்னல் கௌரவிக்கப்படுகிறார். இறந்தவர்கள் பட்டியல் ரகசியமாக வைக்கப்படுகிறது. வாழ்க்கை ஓடுகிறது. அணிவகுப்பு தொடர்கிறது என்று பாடியபடி விடியலில் பெரும் படையாக மலைப் பகுதியில் இறங்கிச் செல்கிறார்கள் ரஷ்யர்கள். போர் நின்று விட்டது, ஆனால் முடிவடையவில்லை, நமக்காக உயிர்நீத்த வீரர்களை நினைவு கூர்வோம் என்ற வாசகங்களுடன் படம் முடிகிறது.

இந்தப் படத்துக்கு விருதுகள் எதுவும் கிடைத்ததாகத் தகவல் இல்லை. ரஷ்ய மொழியில் ரஷ்யத் தகவல் தொடர்புத் துறை வெளியிட்ட படம். 2000ல் வெளிவந்தது. ரோமேனியா, செக் குடியரசு, பழைய சோவியத் நாடுகளில் ஓடியிருந்தாலும் உலக அளவில் பேசப்படவில்லை. ரஷ்யர்களிடையே எதிரும் புதிருமான கருத்துகள் வந்தன. பலரும் ராணுவம் என்றால் அப்படித்தான்; பெயர், பட்டம் பதவி எல்லாம் வேண்டும் என்றால் ராணுவத்துக்கு ஏன் வரவேண்டும் என்றும், வேறு பலர் ஸ்டாலின் காலத்தில் உண்மை வீரர்கள், தியாகிகள் ஓரங்கட்டப்பட்டார்கள்; இன்று வந்த மாதிரி படம் சோவியத் காலத்தில் வந்திருக்குமா என்று கேட்கிறார்கள். பல வகைகளில் கீழ் மட்டத்து ஆட்கள் உயர்மட்டத்தில் உள்ள ஆட்களுக்குக் கூஜா தூக்கி பலரும் சமத்துவ கம்யூனிச சோவியத் யூனியனில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

Leave a Reply